கர்நாடகாவில் கடந்த 16 மாதங்களில் மட்டும் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக ஹாவேரி மாவட்டத்தில் 128 விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலை மையமாக ஹாவேரி மாவட்டம் திகழ்வது தெரியவந்துள்ளது. மைசூரில் 73 விவசாயிகளும், தார்வாட்டில் 72 விவசாயிகளும், பெலகாவியில் 71 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விவசாயிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் நிறுத்தப்பட்டன” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், “இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. பூச்சிக் கொல்லிகளின் பற்றாக்குறை குறித்து குறிப்பிட்டிருந்தோம். பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பதாகக் கொடுத்த வாக்குறுதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. டீசல் விலையும் ஏனைய வரிகளும் அதிகமாக உள்ளன. விவசாயிகளுக்காக மாநில அரசு பல மானியங்களை வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு கூடுதல் வரிகளை விதிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
கர்நாடக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் துயரமாகும். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகமாக உள்ளது. கடன் பிரச்சினை, விலை உத்திரவாதமின்மை, இடுபொருட்கள் விலை உயர்வு, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல்தான் இந்த தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலை விகிதங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், நாடு முழுமையும் இதுதான் நிலைமை.
படிக்க: மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை
காங்கிரசு ஆட்சியில் மட்டுமல்ல, பி.ஜே.பி ஆட்சிக் காலத்திலும் இதுதான் நிலைமை. விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.
குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட அடிப்படையான வாழ்வாதார கோரிக்கைகளுக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராடிய போதும், பாசிச மோடி அரசு நயவஞ்சகமாக விவசாயிகளின் முதுகில் குத்தியது. காங்கிரசோ விவசாயிகள் போராட்டத்தைத் தனது தேர்தல் நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயன்றதே ஒழிய, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவ்வொப்பந்தம் கையெழுத்தானால் அமெரிக்காவில் உற்பத்தியாகும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளது. மேலும், இந்தியாவில் விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படுவது; விவசாய விளைப்பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு இந்திய விவசாயச் சந்தையைத் திறந்து விடுவது ஆகியவை நடந்தேறும். இதன்மூலம் விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுவது தீவிரமடையும்.
இத்தகைய கேடான நோக்கங்களின், கொள்கை முடிவுகளின் காரணமாகத்தான் இந்திய விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கொள்கை முடிவுகளில் சில அம்சங்களைத் தவிர, வேறு எந்த வேறுபாடும் இல்லாத இக்கட்சிகள் விவசாயிகள் தற்கொலையை வைத்து அரசியல் செய்வதைத் தாண்டி எதையும் செய்யத் தயாராக இல்லை.
விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு மாற்றாக விவசாயிகள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கைகளை, தீர்வுகளை முன்வைத்துப் போராடுவதன் மூலமே விவசாயிகள் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
தமிழன்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram