ராஜஸ்தான்: தலித் சிறுவனை மரத்தில் தொங்கவிட்டு அடித்த சாதிவெறியர்கள்

இந்தியாவிற்கு ‘சுதந்திரம்’ கிடைத்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எட்டு வயது குழந்தையை ஆதிக்கச் சாதியினரின் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், தண்ணீர் பானையை தொட்டதற்காக மரத்தில் தொங்கவிட்டு அடித்ததும் சாதியக் கொடூரத்தின் உச்சமாகும்.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்திலுள்ள பகர்புராவில், தலித் சிறுவன் பானையைத் தொட்டதற்காக, ஆதிக்கச் சாதி வெறியர்களால் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதியன்று எட்டு வயது தலித் சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த நர்னாராம் பிரஜாபத் மற்றும் தேமாராம் பிரஜாபத் ஆகிய ஆதிக்கச் சாதி வெறியர்கள், அச்சிறுவனிடம் தங்கள் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றும்படி சாதித்திமிருடன் கூறியுள்ளனர். சாதியக் கொடூரம் குறித்து ஏதும் அறியாத அக்குழந்தையும், சாதிவெறி மிருகங்களின் கழிவறையை சுத்தம் செய்துவிட்டு, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக பானையைத் தொட்டுள்ளான்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதி வெறியர்கள், அவ்விருவரில் ஒருவனது வீட்டிற்கு அச்சிறுவனை தூக்கிச்சென்று, மரத்தில் தலைகீழாகக் தொங்கவிட்டு கொடூரமாக அடித்துள்ளனர். சிறுவனின் உறவினர் தாக்குதலை கைப்பேசியில் பதிவு செய்யத் தொடங்கிய பின்னரே ஆதிக்கச் சாதி வெறியர்கள் சிறுவனை அடிப்பதை நிறுத்தியுள்ளனர். அப்போதும் சாதிவெறி தலைக்கேறிய அம்மிருகங்கள் சிறுவனின் வீட்டிற்குள் புகுந்து அவனுடைய தாய் பூரி தேவியையும் பாட்டியையும் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் இந்தியாவில், குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலித் மக்கள் மீதான சாதித் தீண்டாமையும், சாதிவெறி அராஜகமும் தாண்டவமாடுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆனால், சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல் குறித்து பகர்புரா வட்ட அதிகாரி சுக்ராம் பிஷ்னோய் கூறுகையில் “முதன்மை விசாரணையும் மருத்துவப் பரிசோதனையும் சிறுவன் தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், சிறுவன் தண்ணீர் பானையைத் தொட்டதால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு இன்னும் விசாரணையில் உள்ளது” என்று சிறுவன் மீதான தீண்டாமைக் கொடுமையை மறைத்து தனது சாதிவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார்.


படிக்க: கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்


இந்தியாவிற்கு ‘சுதந்திரம்’ கிடைத்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எட்டு வயது குழந்தையை ஆதிக்கச் சாதியினரின் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், தண்ணீர் பானையை தொட்டதற்காக மரத்தில் தொங்கவிட்டு அடித்ததும் சாதியக் கொடூரத்தின் உச்சமாகும். இதேபோல், கடந்த மார்ச் 29-ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தில் ஒரு பள்ளியில், தண்ணீர் பாட்டிலைத் தொட்டதற்காக தலித் மாணவன் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். இது, இந்திய சமூகக் கட்டமைப்பில் பார்ப்பனியம் மக்கள் மத்தியில் எத்துணை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை துலக்கமாகக் காட்டுகிறது.

மேலும், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் தலித் மக்கள் ஆதிக்க சாதியினரால் கொடூர தாக்குதலுக்கு உள்ளக்கப்படுவது; பட்டியலின, பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. அம்மாநிலங்களில் தலித் மக்களால் பாதுகாப்பாக வெளியே வர முடியாத நிலையும், ஆதிக்கச் சாதி வெறியர்கள் சுதரந்திரமாக சுற்றித்திரியும் நிலையுமே உள்ளது. பாசிச மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு இந்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க