SIR பயங்கரவாதம்! | பதிவு 8
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளில் ஈடுபட்டுவரும் அரசு ஊழியர்கள் பணிச்சுமை தாங்க முடியாமல் தமது குடும்பத்திற்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இந்நடவடிக்கை பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் பா.ஜ.க. நூற்றுக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
எந்தவிதமான பயிற்சியோ அல்லது நடைமுறையில் எழும் சிக்கல்களுக்கு முறையான வழிக்காட்டுதலோ இல்லாமல் எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தீவிரமான பணிச்சுமையில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பிட்ட தேதிக்குள் இலக்கை அடைய வேண்டும் என மேலதிகாரிகளால் உழவு மாட்டைப் போல் விரட்டப்படுகின்றனர்.
இரவு ஒரு மணி ஆனாலும் மேலதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்து வேலை வாங்கப்படுகின்றனர். இலக்கை அடையவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தப்படுகின்றனர். இதனால், ஊழியர்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாகி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இதனால் தங்களது உறவினர்களுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
“ஸ்பெக்ட் ஃபவுண்டேஷன்” (SPECT Foundation) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, ஆறு மாநிலங்களில் குறைந்தது 33 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers – BLO) தற்கொலை மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. நாடு முழுக்க நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளே இவர்களின் மரணத்திற்குக் காரணம் என இறந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், மேற்குவங்கத்தில் குறைந்தது 40 அரசு ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர். பணியின் போது உயிரிழந்ததாக மம்தா பானர்ஜி அரசு கூறும் எண்ணிக்கை இந்த அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களின் வலிகளையும் உயிரிழந்த ஊழியர்களின் இறுதி கடிதங்களையும் இந்த அறிக்கை ஆவணப்படுத்தி உள்ளதுடன், தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தை குற்றஞ்சாட்டுகிறது.
படிக்க: உத்தரப்பிரதேசத்தில் பி.எல்.ஓ-கள் தற்கொலை: பாசிச பா.ஜ.க-வின் பச்சைப் படுகொலை!
“எஸ்.ஐ.ஆர். பணியை என்னால் இனி தொடர முடியாது. சில நாட்களாக நான் சோர்வாகவும் கவலையாகவும் உள்ளேன். உன்னையும் மகனையும் பார்த்துக்கொள். உங்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். ஆனால், தற்போது நான் முற்றிலும் உதவியற்றவனாக உணர்கிறேன். நான் விடைபெறுவதைத் தாண்டி எனக்கு வேறு வழிகள் இல்லை” என குஜராத் மாநிலத்தின் பி.எல்.ஓ. அரவிந்த் வதேரின் தற்கொலைக் கடிதம் கணமான வரிகளுடன் தெரிவிக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பி.எல்.ஓ-வான சர்வேஷ் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்த காணொளியில், “அம்மா, எனது மகள்களை கவனித்துக்கொள். என்னை மன்னித்து விடுங்கள். என்னால் முழுமையாக பணியை முடிக்க முடியவில்லை. நான் மிகப்பெரிய முடிவை எடுக்கப் போகிறேன். என்னுடைய முடிவிற்கு யாரின் மீதும் குற்றம் சுமத்தாதீர்கள். இதுகுறித்து எனது குடும்பத்திடம் யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம். நான் மிகப்பெரிய துன்பத்தில் உள்ளேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். மற்றவர்களால் வேலையை முடிக்க முடியும். என்னால் முடியாது” என்று கண்ணீர் வடித்துக் கதறியது நம்மை கலங்கச் செய்கிறது.
ஆனால், தேர்தல் ஆணையமோ அல்லது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரோ இவை எஸ்.ஐ.ஆர். பணிச்சுமையால் நிகழ்ந்த மரணங்கள் என்பதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, இறந்தவர்களுக்கு இழப்பீட்டையும் அறிவிக்கவும் இல்லை.
மேலும், வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் பணியாக எஸ்.ஐ.ஆர். சித்தரிக்கப்பட்டாலும், அது (இறந்த அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களை நீக்குவதில் கவனம் செலுத்தும்) வழக்கமான திருத்தமாக இல்லை; மாறாக, மிகவும் குறுகிய காலக்கெடுவிற்குள் வாக்காளர் பட்டியலை ஏறக்குறைய முழுமையாகப் புதுப்பிப்பதாக உள்ளது என்று “ஸ்பெக்ட் அறிக்கை” குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதே அவர்களின் மன உளைச்சலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா மற்றும் சாஹிபாபாத் ஆகிய இரண்டு மாவட்டங்களில், கடமையிலிருந்து தவறியதாகக் கூறி 81 பி.எல்.ஓ-கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் நடைமுறையில் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாகவும், இது அவர்களை மோசமான முடிவுகளை எடுக்கத் தூண்டுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“எஸ்.ஐ.ஆர். பணி, கடுமையான நிர்வாகக் குறைபாடுகளையும் நடைமுறை ஓட்டைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இது பீகாரில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. எஸ்.ஐ.ஆர். செயல்முறையானது இந்தியக் குடிமக்களின் வாக்குரிமையை பெரியளவில் பறிப்பது மட்டுமல்லாமல், பி.எல்.ஓ-களுக்கு ஒரு மரணப் பொறியாகவும் மாறி வருகிறது” என அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பீகாரில், கடந்த ஜூன் மாதத்தில் முதல்முறையாக எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த போதிலும் பாசிசத் திமிரோடு தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. எஸ்.ஐ.ஆர். மூலம் பீகாரில் பா.ஜ.க. கூட்டணி எதிர்பாராத வெற்றியை அடைந்தது.
இதிலிருந்து அனுபவம் எடுத்துக்கொண்டு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கும், 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்தி வருகிறது. தனது பாசிசத் திட்டத்திற்காக எந்தவித குற்றவுணர்வுமின்றி பாசிச பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையமும் பி.எல்.ஓ-களை படுகொலை செய்து வருகின்றன. இந்த பாசிச நடவடிக்கையை முறியடிக்க மிகப்பெரிய மக்கள் எழுச்சி தேவைப்படுகிறது என்பதையே எதார்த்தம் உணர்த்துகிறது.
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











