பத்திரிகைச் செய்தி:
31-12-2025

மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்த
மாநில அமைப்புக் கமிட்டியின்
பொன்விழா ஆண்டு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

”மாநில அமைப்புக் கமிட்டி” இன்று, தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை பேருற்சாகத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதன்பொருட்டு நாட்டு மக்களுக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கும் இத்துணை ஆண்டுகள் எம்மை ஆதரித்து அரவணைத்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பாசிசத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

”மா.அ.க.”, மாநில அமைப்புக் கமிட்டி என்று புரட்சிகர. ஜனநாயக இயக்கங்களால் நன்கு அறியப்பட்ட எமது அமைப்பு 1976 டிசம்பர் 31- 1977 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நடந்த முதலாவது பிளீனத்திலிருந்து உதயமானது.

நக்சல்பாரி இயக்கத்தில் அன்று நிலவிய இடது தீவிரவாதப் போக்கில் இருந்து முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில், மக்கள் திரள் வழியில் புரட்சியை முன்னெடுக்கும் வகையில், ஒன்றுபட்ட மா-லெ கட்சியின் மேற்குப் பிராந்தியக் குழு மேற்கொண்ட போராட்டங்கள் 1974-இல் ”பிராந்தியக் குழு ஒன்றின் நகலறிக்கை”யாக முன்வைக்கப்பட்டு தொடங்கின. தொடக்கம் முதலே ஆயுதப் போராட்டங்கள் வழியாக புரட்சியை முன்னெடுப்பது என்ற இடதுசாகசப் போக்கிற்கு எதிராக, “மக்கள் திரள் வழி” மூலமாகப் புரட்சியை முன்னெடுப்பதற்கான கரு தான், அந்த ”பிராந்தியக் குழு ஒன்றின் நகலறிக்கை”.

மா-லெ புரட்சியாளர்கள் மத்தியில் மேற்குப் பிராந்தியக் குழுவின் அரசியல் சித்தாந்தப் போராட்டம் ஏற்படுத்திய நம்பிக்கையின் விளைவாக, புரட்சியாளர்கள் மேலும் ஐக்கியப்பட்டு, 1975-இல் தற்காலிக அமைப்புக் கமிட்டியாக செயல்படத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, 1976 இறுதியில், மேற்கு பிராந்தியக் குழுவின் அரசியல் பாதையை ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்ட மா-லெ கட்சியின் மாநிலக் குழுச் செயலாளர், கிழக்குப் பிராந்தியக் குழுவில் சில முழு நேர ஊழியர்களுடன் தற்காலிக அமைப்புக் கமிட்டியில் இணைந்தார். 1976 டிசம்பர் 31 – 1977 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் முதலாவது பிளீனம் நடத்தப்பட்டு, ”மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ), தமிழ்நாடு” (SOC, CPI (M-L), Tamilnadu” என்று இன்று மா-லெ இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட எமது அமைப்பு தொடங்கப்பட்டது.

இடதுசாகசத்திற்கெதிராக
மக்கள் திரள் வழியை நிலைநாட்டிய
தொடக்கக் காலம்

இந்தியப் பொதுவுடைமை இயக்கமானது, அதன் தொடக்கக் காலம் தொட்டே கடும் நெருக்கடியான போராட்டப் பாரம்பரியத்தில், பல ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகத்தால் வளர்ந்ததாகும். எனினும், அன்று தலைமையில் நிலவிய திரிபுவாதப் போக்கின் செல்வாக்கு காரணமாக, நாடாளுமன்றப் புதைகுழியில் சிக்கி புரட்சிக்கு துரோகமிழைத்து வந்தது.

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் செல்வாக்கு செலுத்தி வந்த, இந்தத் திரிபுவாதப் புகைமூட்டத்தைத் திரைகிழித்து எழுந்தது, 1967-இல் மேற்கு வங்கத்தில் வெடித்த நக்சல்பாரி உழவர்களின் பேரெழுச்சி.

அதன் தொடர்ச்சியாக, சி.பி.எம். கட்சியில் இருந்து வெளியேறிய புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து, 1968-இல் அகில இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவை (AICCCR) உருவாக்கினர். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் பிறந்த நூற்றாண்டின் தொடக்க நாளான, 1969, ஏப்ரல் 22-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) எனும் நக்சல்பாரிக் கட்சியைத் தொடங்கினர்.

இந்த நக்சல்பாரிக் கட்சி அதன் தொடக்கம் முதலே இடது தீவிரவாதப் பாதையை மேற்கொண்டது. அரசியல், அமைப்பு முறைகள், போராட்ட வடிவங்கள் என அனைத்திலும் அராஜகவாத இடது தீவிரவாதப் போக்குகள் செல்வாக்கு செலுத்தின. இதன் விளைவாக, வெகுவிரைலேயே கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது; எதிரிகளின் அடக்குமுறைகளால் எண்ணற்ற தோழர்கள் தியாகிகள் ஆகினர்; கட்சி பல குழுக்களாக சிதைவுற்றது. இன்னொரு பக்கம், இந்திராவின் அவசர நிலை ஆட்சியானது புரட்சியாளர்களை வேட்டையாடி வந்தது.

அதே காலகட்டத்தில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமில் நடந்து வந்த வீரமிக்க ஆயுதப் போராட்டம், சீனாவில் தோழர் மாவோ தலைமையில் நடந்த கலாச்சாரப் புரட்சி, மேலும், கம்போடியா, லாவோஸ், ஆப்கான் என பல நாடுகளில் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் எழுந்த தேசவிடுதலைப் போராட்டங்கள், வெற்றிகள் என புரட்சிப் பேரலை பல நாடுகளில் உயர்ந்து கொண்டிருந்தது.

இத்தகைய சூழலைக் கண்டு பரவசமடைந்ததாலும், நீண்டகாலமாக செல்வாக்கு செலுத்திய திரிபுவாதத்தை உடைத்துக்கொண்டு பீறிட்டு வெளியே வந்ததாலும் நக்சல்பாரிக் கட்சியில் இடது தீவிரவாதப் போக்கு ஆதிக்கம் செலுத்தியது. அன்றைய சூழலில், இடது தீவிரவாதப் பாதைக்கு எதிராகக் கருத்து சொல்பவர்கள், விவாதிக்க வேண்டுமெனக் கோருபவர்கள் துரோகிகள் என முத்திரைக் குத்தப்பட்டனர்; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எனவே, இந்தக் கடைகோடித்தனமான போக்கை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான பணியாகவே இருந்தது.

மேலும், அரசின் தேடுதல் வேட்டைகள், புரட்சியாளர்கள் போலி மோதல் கொலைகளில் கொல்லப்படுவது போன்ற அடக்குமுறைகள் தாண்டவமாடிய போது, இடது தீவிரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, பல குழுக்கள் தேர்தல் பாதைக்கு ஓடி சீரழிந்து கொண்டிருந்தன. சில குழுக்கள் இரண்டு போக்குகளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தன. இதனால், இடது தீவிரவாதப் போக்கை எதிர்த்து புரட்சிகர நிலைப்பாட்டை வலியுறுத்துவது குறித்து பல குழுக்களால் சிந்திக்கக் கூட முடியவில்லை.

கண்முன்னே போலீசின் அடக்குமுறையால் தோழர்கள் கொல்லப்படும் போது, அதற்கு எதிராக எதிர்த் தாக்குதலைத் தொடுக்கும் வழியைக் கைவிட்டு, மக்களைத் திரட்ட வேண்டும் என்ற வழிமுறையை முன்வைப்பதற்கு, அன்று அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சலை, மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை வழங்கியது. அதன் ஒளியில் மேற்குப் பிராந்தியக் குழு தோழர்கள் தங்களது போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மேற்குப் பிராந்திய குழு வழிவந்த தோழர்கள், மக்கள் திரள் வழியை முன்வைத்ததால், அன்று, ”கூட்டக் குழு”, ”குழு” ஆகிய பாதைகளில் செயல்பட்ட அமைப்புகள், தீண்டத்தகாத அமைப்பாகவே மா.அ.க.வை அணுகின; ”ஆயுதக் குழு இல்லை அதனால், நடைமுறையில் இல்லை”, ”படிப்பறைவாதிகள்”, ”நடைமுறையில் இல்லாதவர்கள்”, “நகரங்களில் அலைந்து திரிபவர்கள்” என்று பலவாறாக அவதூறுகளைச் செய்தனர்.

இந்த அவதூறுகளை எல்லாம் துச்சமெனக் கருதித் தூக்கியெறிந்துவிட்டு, மேற்குப் பிராந்தியக் குழு முன்வைத்த நகலறிக்கையின் அடிப்படையில், செயல்படத் தொடங்குவது என மா.அ.க.வின் முதலாவது பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மார்க்சிய – லெனினிய தத்துவத்தின் ஒளியில் ஒரு நாட்டின் புறநிலைமைகளை ஆய்வு செய்து, கட்சித் திட்டத்தை வகுத்தல், அதன் வழிகாட்டுதலில், போர்த்தந்திரம் – செயல்தந்திரங்களை வகுத்து முன்னேறுவதன் போக்கில்தான், புரட்சியை சாதிக்க முடியும்; இன்னும் நமது நாட்டில் மா-லெ கட்சி பல குழுக்களாக சிதைவுற்று இருக்கும் சூழலில், புரட்சிகரக் கட்சியைக் கட்டுவது இதற்கு முன்னிபந்தனையாகும். பொதுத்திசைவழி, பொது வேலைத்திட்டம் வகுத்து செயல்படுவது மக்கள் திரள் வழியை நிலைநாட்டுவதன் அடிப்படையான பணியாகும்.

பொதுவில் இத்தகைய திட்டவகைப்பட்ட-புதிய வேலைமுறையை அன்றைய அமைப்பு ஏற்றுக்கொண்டாலும் நீண்டகாலமாக பின்பற்றி வந்த அலைந்து திரியும் வேலைமுறையே செல்வாக்கு செலுத்தியது.

இரண்டு ஆண்டுகள் கழித்து, 1979 நவம்பர் புரட்சி நாளில் கூடிய, மா.அ.க.வின் இரண்டாவது பிளீனத்தில், இந்த அலைந்து திரியும் வேலைமுறையின் செல்வாக்கை முறித்துக் கொண்டு, பொதுத்திசைவழி, பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கான போராட்டமே மையமாக இருந்தது. இந்தப் பிளீனம் 8 நாட்கள் நடந்ததில் இருந்தே, இந்த அரசியல்-அமைப்பு நெருக்கடி எந்த அளவிற்கு தீவிரமாக இருந்திருக்கும் என்பதை உணர முடியும்.

வலது சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடுகளான தன்னெழுச்சிப் பொருளாதாரவாதம், அராஜகவாதம், அனுபவவாதம் ஆகியவற்றை அடையாளப்படுத்தி, அவற்றை முறியடிப்பது என இந்தப் பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது, மக்கள் திரள் வழியை மீண்டும் நிலைநாட்டுவது பெரும் போராட்டமாக இருந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிளீனத்தில்தான், இந்தியாவின் பருண்மையான நிலைமைகளை ஆய்வு செய்து, அரசியல் – கோட்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

அரசியல் – கோட்பாடுகளை வகுப்பதற்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிய போது, அன்றைய காலத்தில், மா-லெ இயக்க வரலாற்றிலேயே அதுவரை கண்டிராத, நயவஞ்சகமும் நரித்தனமும் கொண்ட, மா-லெ நிலைப்பாடுகளைக் கைவிட்டு ஓடும்போக்கு தலைதூக்கியது.

தமிழ்நாட்டின் தனிப்பெரும் புரட்சிகர அரசியல் சக்தியாக
மா.அ.க.வும் அதன் மக்கள் திரள் அமைப்புகளும்

மா-லெ அடிப்படை நிலைப்பாடுகளை கைவிட்டு ஓடும் போக்குகளை முறியடித்து, 1981 செப்டம்பரில் நடந்த மூன்றாவது பிளீனமானது, இந்தியப் புரட்சிக்கு வழிகாட்டக் கூடிய அரசியல் கோட்பாட்டு ஆவணங்களை நிறைவேற்றி, மக்கள் திரள் வழியில் மா.அ.க. முன்னேறுவதை உறுதி செய்தது.

அன்றிலிருந்து இன்றுவரை, போர்த்தந்திர – செயல்தந்திர அடிப்படையில் மக்களைத் திரட்டும் எமது மக்கள் திரள் அமைப்புகளின் மைய இயக்க நடவடிக்கைகள், ஜனநாயக சக்திகளிடம் பெரிதும் தாக்கம் புரிந்து வந்துள்ளன.

1980-களின் தொடக்கத்தில் எமது அமைப்பின் வழிகாட்டுதலில் கலாச்சார அமைப்பு, விவசாய அமைப்பு, கலாச்சார ஏடு, அரசியல் ஏடு ஆகியவை தொடங்கப்பட்டன. 1980-களின் பிற்பகுதியில் மாணவர்-இளைஞர் அமைப்பும் அதன்பிறகு தொழிலாளர் அரங்கு மற்றும் மனித உரிமை அமைப்பும் தொடங்கப்பட்டு மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மா-லெ இயக்க வரலாற்றிலேயே நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவரும் வெகுமக்கள் அரசியல் பத்திரிகையாக எமது அரசியல் ஏடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

1980-களின் தொடக்கத்திலேயே, பார்ப்பன இந்து மதவெறி பாசிசக் கும்பல் வளர்ந்து வருவதை அடையாளம் கண்டு அதற்கெதிராக தொடர்ந்து போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தது. 1992-க்குப் பின்னர், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கக் கொள்கையை, மறுகாலனியாதிக்கம் என்று சரியாக வகைப்படுத்தியது. அத்துடன், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்! என்று சரியான வரையறையை முன்வைத்தது. அந்தவகையில், மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகவும் பார்ப்பன இந்துமதவெறிக்கு எதிராகவும் எமது அமைப்புகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மைய இயக்கங்களை மேற்கொண்டு வந்தன.

அந்தக் காலகட்டத்தில், திராவிட இயக்கங்கள் பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டிருந்தன. திரிபுவாதக் கட்சிகளோ, ”பார்ப்பனியம் என்று சொல்வதே தவறு, அது இந்துக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்” என்று அஞ்சிக் கொண்டிருந்தன. அந்தச் சூழலில், அரசியல் முன்முயற்சியுடன், பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தை சரியாக அடையாளப்படுத்தியதும், அதற்கெதிராக மக்களிடம் அறைகூவல் விடுத்து, மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்ததும், மா.அ.க.வின் தலைமையிலான மக்கள் திரள் அமைப்புகள்தான்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக, கூர்மையான அரசியல் முழக்கங்களை முன்வைத்து மைய இயக்கங்களையும், மாற்று இசைவிழா – சாதி மறுப்புத் திருமணங்கள் உள்ளிட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து அரசியல் சக்திகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் எமது மக்கள் திரள் அமைப்புகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கின. ஒவ்வொரு மைய இயக்கத்தின் போதும் இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், ஆயிரக்கணக்கான சுவரெழுத்துக்கள் – சுவரொட்டிகள், மாநிலம் தழுவிய பரப்புரைகள் என அரசியலை மையப்படுத்தி தீவிரமாக மக்கள் மத்தியில் இயங்குவதற்கான முன்னோடிகளாக எமது மக்கள்திரள் அமைப்புகள் திகழ்ந்தன.

பெரியாருக்குப் பிறகு பார்ப்பனிய எதிர்ப்பு மரபு, சாதி மறுப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, தமிழ் மக்களின் மரபை உயர்த்திப் பிடிக்கும் அமைப்பு எமது அமைப்புதான் என்று திராவிட இயக்கத் தோழர்களே அங்கீகரித்துப் பேசுவது எமது அமைப்பின் அரசியல் பண்பாட்டுப் பங்களிப்புக்குக் கிடைத்த மரியாதையாகும்.

இந்தத் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டின் முற்போக்கு அரசியலில் தனிப்பெரும் சக்தியாக, எமது அமைப்பு விளங்கியது. எமது மக்கள் திரள் அமைப்புகளின் வளர்ச்சியின் விளைவாக, 2015-இல், அரசியலுக்கான தனி அரங்கு தொடங்கப்பட்டது. அதுவரை ஜனநாயக சக்திகளைக் கையாள்வதில் எம்மிடம் இருந்த சில தவறான அணுகுமுறைகளைக் களைந்து கொண்டு முன்னெடுத்த போராட்டங்கள், ஜனநாயக சக்திகளை எமது அமைப்பிடம் நெருங்கிவர செய்தன.

நவீன கலைப்புவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை
முறியடித்து முன்னேறுதல்

கூர்மையான அரசியல் முழக்கங்களை முன்வைத்து போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தாலும், மக்களை அமைப்பாக்குவதில், அணி திரட்டுவதில் எமது அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சாதிக்கவில்லை என்ற குறைபாடும் நிலவியது. இது, எமது மக்கள் திரள் வழியை மேலும் செழுமைப்படுத்தி முன்னேற வேண்டிய தேவையைக் கோரியது. ஆனால், எமது அமைப்பின் அன்றைய தலைமை, இந்தத் தேவையை உணரவில்லை.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில், எமது அமைப்பின் தலைமையில் இருந்த ஒரு சதிகாரக் கும்பல் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. வலது சந்தர்ப்பவாதத்தை மறைத்துக் கொண்டு, தனிநபர் துதிபாடி, கலைப்புவாத வழிமுறைகளை முன்வைத்தது. உட்கட்சிப் போராட்டத்தை நேர்மையாக நடத்தி, தமது வலது சந்தர்ப்பவாத அரசியலை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்து, சதி மற்றும் சீர்குலைவு வேலைகள் மூலமாக, கட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து, இச்சதிகாரக் கும்பல் எமது அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது. பிரபலம் தேடும் பிரச்சார வேலைமுறையினால், எமது அமைப்பில் தொங்குசதையாக வளர்ந்திருந்த ஒரு பிரிவு, இந்த சதிகாரக் கும்பலின் மீது ரசிக மனப்பான்மைக்கு ஆட்பட்டு கட்சியில் இருந்து வெளியேறியது.

2021 ஜனவரி 1-ஆம் தேதி நடந்த 10-வது பிளீனம், இந்தப் பிளவுக்கான காரணங்களை உளப்பூர்வமாக பரிசீலித்தது. இப்பிளீனமானது, எமது அமைப்பு பின்பற்றி வந்த மக்கள் திரள் வழியில் – அரசியல் போராட்டங்களின் வழியாக மக்களைத் திரட்டும் எமது போராட்டத்தில் வெளிப்பட்ட குறைபாடுகள் வளர்ந்து, அமைப்பு திசைவிலகல் அடைந்திருந்ததை அடையாளம் கண்டது. அதன் அடிப்படையில், எமது அமைப்பு வலது திசைவிலகல் அடைந்திருப்பதை சரியாக அடையாளப்படுத்தி, அதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க அறைகூவியது.

மக்கள் திரள் வழியை நிலைநாட்டுவதில் எமது அமைப்பின் மூன்றாவது பிளீனம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோன்று, 2020-இல் எமது அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்குக் காரணம், மக்கள் திரள் வழியை முன்னெடுத்துச் சென்றதன் போக்கில் பிரபலம் தேடும் பிரச்சார வேலைமுறையில் மூழ்கியதுதான் என்றும் அது, அமைப்பு வலது திசைவிலகல் பாதையில் பயணித்திருப்பதன் வெளிப்பாடு என்றும் அடையாளப்படுத்திய 10-வது பிளீனம் மற்றொரு திருப்புமுனையாகும்.

ஆனால், மக்கள் மத்தியில் பிரபலமான இந்த நவீன கலைப்புவாதக் கும்பல், தம்மை மா.அ.க. என்று நாமகரணம் சூட்டிக்கொண்டது; ”போலச் செய்தல்” என்ற நோயினால் பீடிக்கப்பட்ட அக்கும்பல், தாமும் நக்சல்பாரி இயக்கம் தான், மா.அ.க. தான் என்று காட்டி, தி.மு.க.வின் மறைமுக ஓட்டுவங்கியாக செயல்பட்டு வருகிறது. நீண்டகாலம் எமது அமைப்பில் இருந்ததால் இன்னும் அக்கும்பலிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய அடையாளங்களைக் காட்டிப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

10-வது பிளீனத்தின் முடிவுகளின் அடிப்படையில், எமது அமைப்பானது வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளையும், பாசிசத்தை எதிர்த்த போராட்டங்களையும் முன்னெடுக்கத் தொடங்கியது. பழைய வேலைமுறையில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து, புதிய வேலைமுறையின் அடிப்படையில், மக்கள் திரள் வழியை செழுமைப்படுத்தத் தொடங்கியது.

ஆனால், பிரபலம் தேடும் பிரச்சார வேலைமுறையில் சுகம் கண்ட, முன்னாள் செயலர் அன்பழகனும், அவரது விசுவாசிகளாக உருவாகியிருந்த ரசிகர் கூட்டமும் ஒரு கோஷ்டியாகச் சேர்ந்து கொண்டு, புதிய வேலைமுறையின் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனையடுத்து 2022 ஏப்ரலில் நடந்த உட்கட்சி விவாதத்தில், எமது அமைப்பின் வலது திசைவிலகலுக்கு அடிப்படையான, வலது சந்தர்ப்பவாத நவீன அராஜகவாத சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் இக்கும்பல்தான் என அடையாளப்படுத்தப்பட்டு, முறியடிக்கப்பட்டது.

தோற்றுப்போன தனது பழைய வேலைமுறையை மீண்டும் கட்சிக்குள் கடத்திக் கொண்டுவந்து, கட்சியை ரசிகர் கூட்டமாக மாற்றிவைத்துக் கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் மூக்கறுப்பட்டு போன, முன்னாள் செயலர் அன்பழகன் தலைமையிலான ரசிகர் கூட்டம் சதி மற்றும் சீர்குலைவு வேலைகளைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

தனிநபர் பிரச்சினைகளில் தலையிடுவது, கட்டப்பஞ்சாயத்துகளை செய்வது, அவ்வப்போது அடையாளத்திற்காக சில அரசியல் நடவடிக்கைகளை அராஜகமான முறையில் மேற்கொள்வதைத் தாண்டி வேறெதையும் செய்யவில்லை என்பதே வெளியேற்றப்பட்ட இக்கும்பலின் நடைமுறையாக உள்ளது.

இதேகாலகட்டத்தில், இரண்டு ஆண்டுகளிலேயே வேகமான வளர்ச்சியை அடைந்ததை அடுத்து, அதற்கேற்ப புதிய தலைமையை தேர்வு செய்து, அமைப்பை மறுகட்டமைக்கும் வகையில், 2023 ஜனவரி தொடக்கத்தில், 11-வது பிளீனத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

மக்கள் திரள் வழியை மேம்படுத்தி
மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்

இவ்வாறு, மக்கள் திரள் வழியில் முன்னேறும் எமது அமைப்பின் போராட்டமானது, ஐம்பதாண்டுகளில் மேலும் மேலும் செழுமையடைந்து வந்துள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் சித்தாந்தம், அரசியல், அமைப்புப் போராட்டங்கள், நடவடிக்கைகள் மூலமாக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது. தொடர்ந்து செய்து வருகிறது.

சித்தாந்தத் துறையில், மார்க்சிய-லெனினிய போர்த்தந்திர – செயல்தந்திர வழிமுறையைப் புரிந்து கொள்வதில், எமது கண்ணோட்டத்தில் நிலவிய நவீன அராஜகவாதக் கூறுகளைப் பிரித்தறிந்து அவற்றைக் களைந்துள்ளோம். இதன் விளைவாக, செயல்தந்திரத்திற்கும் குறித்த திட்டத்திற்குமான வேறுபாட்டை வரையறுத்துள்ளோம். மேலும், நமது நாட்டில் புரட்சியை முன்னெடுக்கும் பாதை, ”மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதை” என்று வகைப்படுத்தியுள்ளோம்.

இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து, தேர்தல் தொடர்பாக எமது பழைய கண்ணோட்டத்தில் நிலவிய அராஜகவாதக் கோட்பாடாகிய ”நிரந்தரத் தேர்தல் புறக்கணிப்பு” என்ற நிலைப்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தி, ”தேர்தல் ஒரு போராட்ட வடிவம்” என்பதை நிலைநாட்டியுள்ளோம். மேலும், இந்தியாவில் இன்று அரங்கேறி வரும் பாசிசத்தை, “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம்” என்று சரியாக வகைப்படுத்தியுள்ளோம். பாசிசத்தை முறியடிக்க, மாற்று அரசியல் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்தது மட்டுமில்லாமல், எமது மக்கள் திரள் அமைப்புகளின் மூலமாக, அதனைத் தொடர்ந்து செழுமைப்படுத்தியும் வந்துள்ளோம்.

புரட்சிப் புயல் எனும் எமது அமைப்பின் சித்தாந்த இதழைத் தொடர்ந்து கொண்டுவந்துள்ளோம். பிற மா-லெ குழுக்களின் நிலைப்பாடுகள் மீதான எமது விமர்சனங்களை சீரிய முறையில் முன்வைத்து வருகிறோம். தமிழ்நாட்டின் மார்க்சிய வாசகர்கள் அறியாத, சீன, ரசிய தோழர்களின் சித்தாந்தக் கட்டுரைகளையும் இந்திய கம்யூனிச இயக்கம் தொடர்பான முக்கியமான ஆவணங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். இன்னும் முக்கியமாக, தமிழ்நாட்டின் மா-லெ வரலாற்றிலேயே, இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றை (சுருக்கமாக) பதிவு செய்யும் முதல் இதழும் எமது சித்தாந்த இதழ்தான்.

அரசியல், அமைப்பு நடவடிக்கைகள், போராட்டங்களில், எமது அரசியல் அரங்கான மக்கள் திரள் அமைப்பை, கட்சியாக வளர்த்தெடுக்கப் போராடி வருகிறோம். அண்மைக்காலமாக எமது மக்கள் திரள் அமைப்பு மேற்கொள்ளும் பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் ஜனநாயக சக்திகளிடம் தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகின்றன.

இந்த ஐந்தாண்டுகளில் எமது அமைப்பு நடத்திய, மக்கள் திரள் மாநாடுகள், அரசியல் இயக்கங்கள், ஜனநாயக சக்திகளால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன. ஜனநாயக சக்திகள் எமது அமைப்பை நோக்கி நெருங்கிவருவதும் அதிகரித்துள்ளது. பாசிசத்திற்கு எதிராக பல கூட்டமைப்புகளில் எமது தோழர்கள் இணைந்து செயல்படுகின்றனர். இவையெல்லாம் குறுகிய காலத்தில் எமது அமைப்பு அடைந்த வெற்றிகளாகும்.

தமிழ்நாட்டில் இன்று, இளந்தோழர்களை கம்யூனிச அரசியலுக்கு ஈர்க்கும் ஒரே புரட்சிகர அமைப்பாக எமது அமைப்பு மட்டுமே விளங்குகிறது.

இந்த ஐந்தாண்டுகளில் எமது அமைப்பின் சித்தாந்த இதழ் காலாண்டிதழாக தொடர்ந்து வெளிவருவது மட்டுமின்றி, அரசியல் ஏடு மாத இதழாகவும் தொடர்ந்து வெளிவருவதும், எமது அமைப்பின் இணையதளம் தொடர்ந்து ஊக்கமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதும் அரசியல் துறைகளில் எமது அமைப்பின் முக்கியமான பங்களிப்புகளாகும். மா.அ.க.வும் எமது  இதழ்கள், இணையதளங்கள், சமூக ஊடக தளங்களும் முன்வைக்கும் நிலைப்பாடுகளை அறிவதில் தமிழ்நாட்டில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஆர்வம் செலுத்துவது இதன் வெளிப்பாடாகும். அத்துடன், ஒவ்வொரு புதிய நிலைமைகளிலும் எமது அமைப்பின் புதிய நிலைப்பாடுகளும் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எமது மக்கள் திரள் அமைப்புகள் கொண்டுவந்த வெளியீட்டை, ஜனநாயக சக்திகள் பெரிதும் வரவேற்றதுடன், அவர்கள் தாமாக முன்வைத்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றனர். அதைப்போலவே, எமது மக்கள் திரள் அரசியல் அமைப்பு வெளியிட்ட கொள்கை அறிக்கையானது, ஜனநாயக சக்திகளால் பெரிதும் வரவேற்கப்பட்டது. பாசிசத்திற்கு எதிராகப் போராடும் பல்வேறு சிந்தனைப் போக்குகளைக் கொண்ட அனைவரும் இந்தக் கொள்கை அறிக்கையை தமது கொள்கை அறிக்கையாகவே கருதியது, எமது அமைப்பின் நிலைப்பாடுகள் மக்களுக்கு நெருக்கமாக சென்றிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

நாட்டின், நமது மாநிலத்தின் ஒவ்வொரு உயிராதாமான பிரச்சினையிலும் எமது அமைப்புகள், ஊடகங்கள் தொடர்ந்து தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருவதன் மூலம், எமது அமைப்பு சீரிய முறையில் செயல்படுவதை உணர்ந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வரவேற்கின்றனர்.

பொன்விழா ஆண்டைக் கடைபிடிப்போம்!

இதன் வளர்ச்சிப் போக்கில்தான், மா.அ.க.வின் வரலாற்றில் முதன்முறையாக, மா.அ.க தொடங்கப்பட்ட ஆண்டைப் பொன்விழா ஆண்டாகக் கடைப்பிடிக்கிறோம்.

இத்தருணத்தில், எமது அமைப்பின் மூத்த தோழரும் மா.அ.க. உறுப்பினருமான தோழர் சம்பத் இல்லாமல் இந்தப் பொன்விழா ஆண்டைக் கடைபிடிக்க நேர்ந்திருப்பது எமது கெடுவாய்ப்பாகும். இத்துடன், இத்துணை ஆண்டுகள் மா.அ.க.வின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தோழர்கள் பங்காற்றியுள்ளனர். புரட்சிகர அரசியல் வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க இயலாமல் பலர் பின்வாங்கியிருந்தாலும், எமது அமைப்பின் வளர்ச்சிக்கு அவர்களும் தங்களது உழைப்பைச் செலுத்தியுள்ளனர்.

திராவிட, தலித்திய, தமிழ்த் தேசிய, கம்யூனிச மற்றும் ஜனநாயக உணர்வுள்ள சக்திகள் பல்வேறு வகைகளில் எமது அமைப்புக்கு தங்களது பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளனர். எமது அமைப்பு நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து ஆதரவளித்துள்ளனர்.

அவர்களது அனைவரின் பங்களிப்புகளையும் இந்தப் பொன்விழா ஆண்டில் மிகுந்த தோழமையுடனும் பெருமதிப்புடனும் நினைவு கூர்கிறோம்.

இத்தோழர்கள், ஜனநாயக சக்திகள், நண்பர்கள் செலுத்திய உழைப்பு எந்த வகையிலும் வீண்போகாமல் பாதுகாப்போம்! அவர்களது, உங்களது நம்பிக்கைக்கு என்றைக்கும் பாத்திரமாக விளங்குவோம்! துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களைப் புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி வழிநடத்தி, அவர்களது விடுதலைக்கும் நாட்டின் விடுதலை முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடுவோம்! மார்க்சிய-லெனினிய – மாசேதுங் சிந்தனை எனும் சித்தாந்தப் பேரொளியை எமது இறுதி மூச்சிருக்கும் வரை உயர்த்திப் பிடிப்போம்! நாட்டைச் சூழ்ந்து வரும் பாசிசப் பேரிருளைக் கிழித்து, புரட்சியை நோக்கி நாட்டை வழிநடத்திச் செல்வோம்! – என்று இத்தருணத்தில் உங்கள் அனைவரது முன்னிலையிலும் உறுதி கூறுகிறோம்.

எமது அமைப்பின் பொன்விழா ஆண்டைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, எமது அமைப்பின் வரலாற்றுணர்வை மட்டுமல்ல, சமகால நக்சல்பாரி இயக்கத்தின் வரலாற்றுணர்வையும் எமது தோழர்களுக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும் கடத்துகிறோம். திறந்த மனதுடன் எம்மை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டு முன்னேறுவதற்கு இவ்விழா சிறந்த வடிவமாக இருக்கும் என்றுணர்கிறோம்.

அதன்பொருட்டு, எமது அமைப்பின் மீது நன்மதிப்பு கொண்ட புரட்சிகர, ஜனநாயக சக்திகளாகிய தாங்கள் அனைவரும் எமது அமைப்பின் இந்தப் பொன்விழா ஆண்டின் கொண்டாட்டத்தில் ஊக்கமாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறோம். எமது அமைப்பின் அரசியல் சித்தாந்த நிலைப்பாடுகள், வேலைமுறைகள், நடைமுறைகள் மீதான தங்களது ஊக்கமான விமர்சனங்களையும் கருத்துகளையும் எமக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துகள்!

✼ ★ ✼

(பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்)