உ.பி.: ‘லவ் ஜிகாத்’ பொய்க் குற்றச்சாட்டில் மாணவர்கள் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

டந்த டிசம்பர் 27, 2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் பிரேம் நகரில் உள்ள கபே (Cafe) ஒன்றில் முதலாமாண்டு கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு அத்துமீறி நுழைந்த பஜ்ரங் தள் குண்டர் படை அவர்கள் ‘லவ் ஜிகாத்’-இல் ஈடுபட்டதாகப் பொய் குற்றஞ்சாட்டி அங்கிருந்த பணியாளர்கள், வாடிக்கையாளர்களைத் தாக்கியுள்ளது. வளாகத்தை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளது.

இத்தாக்குதலில், மாணவியின் இரண்டு இஸ்லாமிய ஆண் நண்பர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால், பஜ்ரங் தள் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரேம் நகர் போலீசு இரண்டு இஸ்லாமிய இளைஞர்களுக்கும் கடையின் ஊழியர் ஒருவருக்கும் அபராதம் விதித்து தனது காவி விசுவாசத்தைக் காட்டியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பஜ்ரங் தள் குண்டர்கள் மீது வழக்குப் பதிந்து, டிசம்பர் 29 அன்று ஐந்து பேரைக் கைது செய்துள்ளது; ஒரு சிறுவனை போலீசு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், ரிஷப் தாக்கூர் மற்றும் தீபக் பதக் கூறியதன் அடிப்படையிலேயே கபேயை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளியான ரிஷப் தாக்கூரை போலீசு கைது செய்யவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவியின் அத்தை கூறுகையில், “இந்த கலவரத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர். விரைவில் ரிஷப் தாக்குர் மற்றும் தீபக் ஆகியோரை கைது செய்ய வேண்டும்” என்று போலீசிடம் கோருவதாகத் தெரிவித்தார். மேலும், “போலீசு இந்த குண்டர்கள் மீது மிகவும் மொண்ணையான பிரிவில் வழக்குப் பதிந்துள்ளது. இவர்கள்தான் நாட்டிற்கு அவமானகரமாகவும் சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பவர்களாகவும் இருக்கின்றனர். அடுத்து என்ன நடக்கும்? சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வெளியில் வந்து இதையே மீண்டும் யாரோ ஒருவருக்குச் செய்வார்கள்? கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கட்டும்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, பாசிச பா.ஜ.க. கும்பல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் ‘லவ் ஜிகாத்’, ‘மதமாற்றம்’, ‘பசு வதை’ ஆகிய பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கப்பரிவார கும்பல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த மாதம் கிறித்தவர்களின் புனித நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது தாக்குதலை அரங்கேற்றியது சங்கப் பரிவார கும்பல். சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இந்து ரக்‌ஷா தள் அமைப்பைச் சேர்ந்த பத்து குண்டர்கள் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் மக்களிடம் வாள், கத்திகளை விநியோகித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது இந்துராஷ்டிர நோக்கத்திற்காக சிறுபான்மை, தலித், பழங்குடி மக்கள் மீது தாக்குதல் தொடுத்துவரும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படைகளைத் தடை செய்யாமல் மக்களைப் பாதுகாக்க முடியாது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க