Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 591

வேணாம் அழுதுருவேன் – சீமான் வீடியோ

3

மண்டியிடும் மானம் தொலைந்து விட்ட வீரம்

முல்லைப் பெரியாறு அணைக்கு
விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புகளால் ஆபத்து
என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த
தமிழினப் பகைவரை

தொண்டை நரம்பு புடைக்க,
தோள்கள் தினவெடுக்க,
கண்கள் நெருப்பை உமிழ
வன்மையாகக் கண்டிக்கிறார் …சீமான்.

ஆமா.. … யார் அந்த தமிழினப் பகை?

மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

7

யோகா தினத்தை ஐ.நா அங்கீகரித்த மாதத்தில் பல்வேறு தினங்களும் உள்ளன, ரசிய மொழி தினம் அவற்றில் ஒன்று. ஒரு மாதத்தில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட தினங்கள் இப்படி ஐ.நா-வால் ‘கொண்டாடப்’ படுகின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தோர் இதை உலகமே கொண்டாடுவதாக பீற்றுவது விளம்பரச் செலவைப் பொறுத்தது. கூடுதலாக ஸ்வயம் சேவக அம்பிகள், ‘இந்த தினம்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவார் செத்துப்போன நாள், இதையே கொண்டாடுமாறு உலகத்தை மாற்றிவிட்டார் மோடி’ என்று பெருமையடிக்கிறார்கள். செத்ததுக்கு கொண்டாட்டம் என்றால் நாமும் கூட கொண்டாடலாம்.

ஜக்கி யோகா தினம் - சென்னை
யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள்

செல்ஃபி புகழ் மோடி தனது போட்டோ மற்றும் செல்ஃபிக்கள் இணையத்தில் கண்டபடி கிண்டலடிக்கப்படுவதால், இம்முறை பல்லாயிரம் பேரைக் கூட்டி வைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள்.

தன் ஜிப்பா பாக்கெட்டில் மட்டுமே இருக்கும் ஒரிஜினல் அக்மார்க் யோகாவை தன் வாழ்நாளுக்குள் விற்று தீர்த்துவிடும் லட்சியத்தைக் கொண்ட, யோக உலகின் ஸ்டீவ் ஜாப்ஸான தொழிலதிபர் ஜக்கி இந்த அளப்பரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்தினார்?

சரசர-வென கார்பரேட் கம்பெனிகளிடமும், இந்திய அரசிடமும் ஒப்பந்தங்களை போட்டார்; நிகழ்வுகளுக்கு திரைக்கதை எழுதினார்; வெங்கய்ய நாயுடுவை தொலைபேசியில் அழைத்தார்; மேட்டுக்குடி தன்னார்வலர்களை சேவையாற்ற தயார் செய்தார்.

தொலைக்காட்சி விருது வழங்கும் விழாக்களுக்கு சற்றும் குறைவில்லாமல் ஜூன் 21-ல் நந்தனத்தில் நடந்தேறியது உலக யோகா தினம்;  சென்னை வர்த்தக மையத்தில் காலம் காலமாக நடந்து வரும் வர்த்தகக் கண்காட்சிகளை தோற்கடிக்கும் வண்ணம் நிகழ்ந்தேறியது.

ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கி வழிபாட்டு மரபைச் சேர்ந்த சேர்ந்த மோனலிசா புன்னகைக்காரர்கள்

35,000 பேர் கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்புடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் கவுண்ட் டவுன் போல பரபரப்பை உண்டாக்கினார்கள், ஈஷா வலைத்தளத்தில்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 21-ம் தேதி விடியற்காலையில் இருந்தே கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் ஜக்கி வழிபாட்டு மரபைச் சேர்ந்த சேர்ந்த மோனலிசா புன்னகைக்காரர்கள் சேகரமாகத் தொடங்கினார்கள்.

கும்மிருட்டில் நின்றுகொண்டு வெள்ளை உடை அணிந்த ‘யோகிகள்’, நாலு வருடம் நம் பக்கத்து வீட்டில் குடியிருந்தவரைப்போல சிரித்துக்கொண்டே “நமஸ்காரம்.. நமஸ்காரம்…” என தமிழ் நாட்டில் செத்தொழிந்து போன வார்த்தைக்கு புதுத்துணி அணிவித்து பன்னீர் தெளித்தனர். தூக்கக் கலக்கத்தில் ஒய்.எம்.சி.யே வுக்கு பதிலாக கே.எம்.சி. மனநல காப்பகத்துக்கு வந்து விட்டதைப் போன்ற குழப்பம் தெளிய சில நிமிடங்கள் பிடித்தது நமக்கு.

இந்த அழுக்கே ஏறாத வெள்ளை ஜிப்பா தொண்டர்கள் கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என தமிழகத்தின் பல்வேறு நகரகங்ளிலிருந்து வந்திருந்தனர். கோலம் போடுவது, தோரணம் கட்டுவது, தார் ரோட்டில் சாணி கரைத்து தெளிப்பது, பேனர் கட்டுவது, தார்ப்பாய் விரிப்பது, தார்ப்பாயில் விழுந்த பனியை துடைத்து எடுப்பது, சி.டி விற்பது, சுத்தம் செய்வது என சுற்று வேலைகளை செய்தனர். ஆனாலும் பாருங்கள் அந்த வெள்ளுடையில் ஒரு அழுக்கு பட வேண்டுமே, சான்ஸே இல்லை.

ஜக்கி யோகா தினம் - சென்னை
மேடையின் இரு பக்கமும் பெரிய திரைகள், படப்பிடிப்பு கிரேன், ஒலி ஒளி உபகரணங்கள், ஒலிபெருக்கிகள், கச்சேரிக்கு தனிமேடை

மேடையின் இரு பக்கமும் பெரிய திரைகள், படப்பிடிப்பு கிரேன், ஒலி ஒளி உபகரணங்கள், ஒலிபெருக்கிகள், கச்சேரிக்கு தனிமேடை, மேடையில் ஜக்கிக்கு தனியாக ஏ.சி எந்திரம். மேடையின் முன்பு வி.ஐ.பி-களின் ஸ்பெஷல் பத்மாசனத்துக்கு (வேற ஒன்னுமில்லீங் உட்கார) பஞ்சு மெத்தை. மற்ற சாதாரண பொது சனத்துக்கு வி.ஐ.பி-களிடமிருந்து 20 அடி இடைவெளி விட்டு பனி நிரம்பிய தார்ப்பாய்.

அந்த கால்பந்து மைதானம் ஒரு மலிவான தொலைக்காட்சி விழாவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இருந்தது. மேடைக்குப் பின்னால் ஜக்கி ஓய்வெடுக்க கூடாரம் அடிக்கப்பட்டு ரெடிமேட் காவி பஞ்சகச்சம் அணிந்த மொட்டை துறவி கோஷ்டி பணிவிடை செய்ய, ஒரு ராஜாவைப் போல ஜக்கி தனது தங்குமிடத்தை அமைத்துக் கொண்டிருந்தார். வெளியூருக்கு வந்தே இத்தனை அதகளம் எனில் தன் கோட்டைக்குள் எப்படி இருப்பார் என சொல்லத் தேவை இல்லை.

ஐந்து மணி கும்மிருட்டிலும் உலக யோகா தின விளம்பர அட்டைகளை தலையில் கட்டியபடி இரண்டு பெண் தொண்டர்கள் அன்றைக்குச் சொல்லித்தரப்போகும் யோகா சி.டி.யை ஒவ்வொரு வரிசைக்கு முன்பும் நின்று “ஒன்லி டிவண்டி ருபீஸ்` என கூவிக் கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அந்த கருமத்தை கூட காசு வாங்கிக் கொண்டுதான் விற்க வேண்டுமென்றால் இந்த உலகில் எதுவுமே தப்பு இல்லை.

ஜக்கி யோகா தினம் - சென்னை
“ஆறு மணின்னா ஆறு மணிக்கு டான்னு வந்துடுவாரு என வெற்றிச் சிரிப்பு”

ஐந்தரை  மணியிலிருந்து ஜக்கியின் நிரந்தர வாடிக்கையாளர்களான உயர் நடுத்தர வர்க்கத்தின் காதுகளுக்கு ஃபில்ட்டர் காஃபி ஊற்ற சுதா ரகுநாதன் ஆலாபனை போட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வரத்தொடங்கிய நேரத்தில் ஜக்கி, வெங்கய்ய நாயுடுவுடன் மேடையின் கீழ் வந்தமர்ந்தார். எங்கள் பின்னால் இருந்த வெள்ளை ஜிப்பாக்காரர் கூட்டி வந்திருந்த புதிய நபரிடம், “ஆறு மணின்னா ஆறு மணிக்கு டான்னு வந்துடுவாரு” என வெற்றிச் சிரிப்பை உதிர்த்தார்.

சென்னை வெயில் ஆறரை மணிக்கே லேசாக நம்மை சுரண்டிப் பார்க்க ஜக்கியோ ஊட்டி குளிரில் இருப்பது போல வசந்த மாளிகை சால்வை ஒன்றை மேலே போர்த்திக் கொண்டு கூட்டத்தை நோக்கி வந்தார். வெள்ளை ஜிப்பா பாம்பு மோதிரக்காரர்கள் அனைவரும் பரவச நிலைக்கே சென்று கைகளைக் கூப்பி, கண்ணீர் மல்க, ஜக்கிக்கு “நமஷ்காரம்” போட்டனர். திடீரென பால் தினகரன் கூட்டத்தைப் போல ஏதேனும் பெந்தகோஸ்தே சபைக்கு மாறி வந்து விட்டோமா என சந்தேகத்தை கிளப்பியது.

வெங்கய்ய நாயுடுவை வைத்து குத்து விளக்கேற்றி (பின்னணியில் உடுக்கை ஒலியில் அதற்கொரு தீம் சாங்) ஜனகணமன இசைக்கப்பட்டு நிகழ்ச்சியை துவக்கி பின், மேடையில் ஏறி ஒரு சமஸ்கிருத பாடலைப் பாடினார் ஜக்கி. என்ன அர்த்தம் என யாருக்கும் புரியவில்லை. இருந்தாலும் எல்லா வெள்ளை ஜிப்பாக்களும் பாடலின் ரிதத்துக்கு ஏற்ப தலையை ஆட்டின.

ஜக்கி யோகா தினம் - சென்னை
‘இன்னைக்கு ஹார்லிக்ஸ் குடிச்சீங்களா?’

முதலில் மேட்டுக்குடி கனவான்களுக்கு ஆங்கிலத்தில் ஆவியை எழுப்பினார் ஜக்கி.

“யோகா ஒரு அறிவியல் கருவி. அதன் மூலம் உடல் மற்றும் மனதின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.” அதனால்தான் தனது கோர்ஸ்க்கு “இன்னர் எஞ்சினியரிங்” என பெயர் வைத்ததாக கொள்கை விளக்கம் அளித்தார். அது அப்படியே டெலி பிராண்டின் வெங்காயம் வெட்டும் கருவியின் செய்முறை விளக்கத்தை ஒத்திருந்தது.

நாட்டின் சுகாதாரத்துக்கு பல  கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் 40 சதவீதம் பேர் சர்க்கரை வியாதிக்காரர்களாகி விடுவார்கள் எனவும், இந்தியாவில்தான் உலகிலேயே ஊடச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருப்பதாகவும் ‘இன்னைக்கு ஹார்லிக்ஸ் குடிச்சீங்களா?’ பாணியில் முழங்கினார் ஜக்கி. அவரின் மண்டைக்குப் பின்னால் ஈஷா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற ஜக்கியின் சத்துமாவு மற்றும் சிறுதானிய கடையின் லோகோ ஒளிவட்டம் போல காட்சியளித்தது.

ஜக்கி விற்கும் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வக்குள்ள வர்க்கம் உண்மையிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கொண்டதல்ல, அதிக உடல் பருமனால் காரணமாக அவதியுறும் குழந்தைகளைக் கொண்ட வர்க்கம்.

ஜக்கி யோகா தினம் - சென்னை
நாங்கல்லாம் அந்த காலத்துல ஆர்.எஸ்.எஸ்ல் யோகா பண்ணுனதாலதான் இன்னைக்கு ஆகாய மார்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் ஓடியாட முடிவதாக வெங்கய்ய நாயுடு வாக்குமூலம் அளித்தார்.

விழாவைச் சிறப்பிக்க வந்த வெங்கய்யநாயுடு அடுத்து மேடை ஏறினார். என்னதான் ஜக்கி அண்ட் கோ நமஷ்க்காரம் போட்டு சமஸ்கிருத படம் காண்பித்தாலும் டிஸ்கவரிச் சேனலே தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கல்லா கட்டும் வியாபார உலக நியதியின் படி “பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்” என தமிழில் பேசத் துவங்கினார் வெங்கய்ய நாயுடு. இது அரசு விழாவாக இல்லாத போதும் ஜக்கியைப் போன்ற பெரிய்ய குருவின் வேண்டுகோளை ஏற்று வந்திருப்பதாகவும்,  நாங்கல்லாம் அந்த காலத்துல ஆர்.எஸ்.எஸ்ல் யோகா பண்ணுனதாலதான் இன்னைக்கு ஆகாய மார்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் ஓடியாட முடிவதாகவும் வாக்குமூலம் அளித்தார். “யோகா எல்லா மதத்துக்கும், மொழிக்கும், இனத்துக்கும், பொதுவானது. ஆனால், சிலர் ஃபார்வேர்டு, பேக்வேர்டு எனப்பேசிப் பேசி  சமூகத்தை ஆக்வேர்டாக (சங்கடமானதாக) மாற்றி வைத்திருப்பதாக” சொல்லி டி.ராஜேந்திரை முந்திக் காட்டினார்.

எல்.பி.ஜி – உலகமயமாக்கம் (லிபரலைசேஷன்-தாராளமயம், பிரைவடைசேஷன்-தனியார்மயம், குளோபலைசேஷன்-உலகமயம்) சமூகத்தை வேகமாக முன்னேற்றி இருக்கிறது, இருப்பினும் சில தீமைகளை செய்திருக்கிறது! அது என்ன தீமை எனில் மக்களின்  வாழ்க்கை முறை உடல் உழைப்பில்லாத அளவு எளிமையாகி பல்வேறு மன – உடல் பிரச்சனைகள் ஏற்படுகிறதாம்.

அடேயப்பா, இந்த உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையால் தான் இந்த ஆண்டு வெங்கய்ய நாயுடுவின் சொந்த ஆந்திராவில் 1400 பேருக்கு மேல் (கோடை வெயிலில்) செத்துப் போயிருக்கிறார்கள்!

ஜக்கி யோகா தினம் - சென்னை
இரண்டு அவார்டுகளுக்கு இடையே குத்துப்பாட்டு எவ்வளவு அவசியம் என்பதை டி.வி.காரர்களை விட நன்கு அறிவார் ஜக்கி

இரண்டு அவார்டுகளுக்கு இடையே குத்துப்பாட்டு எவ்வளவு அவசியம் என்பதை டி.வி.காரர்களை விட நன்கு அறிவார் ஜக்கி. எனவே பேச்சுக்கும், யோகாவுக்கும் இடையே உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு பாடலை இசைத்து பாடினார்கள். அது ஜக்கி மதத்தின் பிரபலமான குடும்பப் பாட்டாம். ஆனந்த அலை என ஏதோ சில வரிகளைப்பாடி அந்தப் பாட்டிற்கு ஆப்பிரிக்கக் கருவிகளை ஒத்த தோல் கருவிகளை வாசித்து பாதி பாட்டில் ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா, தந்தானானே தந்தானானே என கலந்துகட்டி அடித்திருந்தார்கள். ஆனால் அது உழைப்பவரின் வேர்வையில் விளைந்த பாடலைப் போலல்லாமல் திண்ணை வாழ் தொந்திகளில் வழியும் வியர்வைக்கான பாடலாக மிரட்டியது. அதைக் கேட்டு பாம்பு மோதிரம் போட்ட ஜக்கி சிஷ்யகோடிகள் ஆர்ப்பரித்தார்கள்.

பின்னர் ஜக்கி, தமிழ் நடுத்தரவர்க்கத்துக்காக தமிழில் (அது தமிழா என்ன?) கொஞ்ச நேரம் பேசினார். மனிதனின் சக்தி எல்லாம் எலும்பு மூட்டுக்களில்தான் தேங்கியுள்ளதாம். அதை இயக்காமல் விட்டால் “எஞ்சின் ஆஃப்” ஆகிவிடுமாம். இந்த அரை போதை கூட்டத்திடம் ஜக்கி அறிவியல் எனச்சொல்லி என்ன வேண்டுமானாலும் பேசலாம். இவர்களெல்லாம் சிந்திப்பதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகியிருக்கும் போல. அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜக்கி சொல்லித் தரப்போவது யோகா இல்லையாம் “உப யோகா”வாம், அதாவது யோகாவை கற்றுக் கொள்வதற்கு முதல் படியாம்.

ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கியின் சிஷ்ய கேடிகள் சிடி போட்டு விற்பனை செய்த அந்த உப யோகா என்ன என தெரிந்து கொண்டால் கொலைவெறியாகி விடுவீர்கள்.

யோகாவின் நன்மை என்ன? “நாளைக்கு வரப்போகும் எல்லா நெருக்கடிகளிலும், பொருளாதார நெருக்கடி உட்பட சிக்கிச் சீரழிந்து தெருவுக்கு வரும் போது யாரும் குடி, போதை மருந்து எனப் போய் விடாமல் இருக்கவாம்!!” ஏனெனில் யோகாவின் இந்தச் சுவை உங்களுக்கு தெரியுமாதலால் வேறு எந்த வழிக்கும் போகாமல், போராட்டம் நடத்தாமல், ஜக்கியின் ஆன்மீக போதைக்கு அடிபணிந்து விடலாம்.

இந்த உப யோகா அல்லது உலக யோகா தின சிறப்புப் பயிற்சி என்பது இனிப்பு கடைகளில் லட்டுவுக்கு கிடைக்கும் கொசுறு பூந்தி. சாஃப்ட்வேர் மொழியில் சொன்னால் ட்ரையல் வெர்ஷன். லட்டு வேண்டுமானாலும், ஒரிஜினல் சாஃப்ட்வேர் வேண்டுமானாலும் காசு, டப்பு, பைசா, மணி என எல்லா மொழியிலும் யோகா பேக்கேஜ்களுக்கு நீங்கள் பணத்தைக் கட்டியே ஆக வேண்டும். ஜக்கியின் ஆனந்த அலை பாடலின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால் நெத்திலி மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதுதான் இந்த சமூக அக்கறையின் இரகசியம்.

ஜக்கியின் சிஷ்ய கேடிகள் சி.டி போட்டு விற்பனை செய்த அந்த உப யோகா என்ன என தெரிந்து கொண்டால் கொலைவெறியாகி விடுவீர்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் கைகளை நீட்டி சோம்பல் முறிப்பது, கழுத்தை ஆட்டி நெட்டி முறிப்பது போல ஒரு முறை செய்யுங்களேன், அதே தான் ! இதை 100 பேருக்கு சொல்லிக் கொடுப்பேன்’ என சத்தியம் வேறு செய்து கொடுக்க வேண்டுமாம்.

தினமும் காலையில் உலகமே செய்யும் இதற்கு உப யோகா என பெயர் சூட்டி, சி.டி போட்டு விற்றதெல்லாம் மூட்டப் பூச்சி மிஷன் புகழ் வடிவேலு கூட யோசிக்காத உலகமகா அயோக்யத்தனம். யார் கண்டது நாளை ஜக்கி கால் கழுவது, வாய் கொப்பளிப்பது இதற்கெல்லாம் காப்பி ரைட்ஸ் வாங்கி சிடி போட்டு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த வெந்நீர் போடுவதைப் பற்றிய சமையல் வகுப்பில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், வானதி சீனிவாசன், சினிமா தயாரிப்பளர் கலைப்புலி தாணு முதலானோர்.

ஜக்கி யோகா தினம் - சென்னை
சோம்பல் முறிப்பது எப்படி? என படு சிரத்தையாக விளக்கம்

ஜக்கி, சோம்பல் முறிப்பது எப்படி? என படு சிரத்தையாக விளக்கிக் கொண்டிருக்கும் போது வெளியே ஒரு சுற்று சுற்றி வந்தோம். இரவிலிருந்து தூங்காமலிருந்த போலீசுக்காரர்கள் ஆங்காங்கே மரத்தடியில் முக்கால் தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவரிடம்,

“என்ன சார் உங்களுக்கு ஞாயிற்றுக்கெழம லீவெல்லாம் கெடையாதா?”

“என்னது லீவா? அதெல்லாம் கெடையாதுப்பா….”

“உங்களுக்குத்தான சார் மன அழுத்தம் அதிகம், நியாயமா நீங்கதான சார் யோகா பண்ணணும்?”

“நீ வேற….தம்பி நைட்டு வீட்டுக்கே போகலப்பா, சரியா தூங்கக் கூட முடியல, தொடர்ந்து பெண்டு வாங்குது. முந்தா நாளு இவனுங்க அடையாறுக்கு வந்து யோகா சொல்லிக் குடுத்தானுங்க, அதுக்கு வேற நேரம் போச்சு. நமக்கு அத செய்றதுக்கெல்லாம் எங்கப்பா நேரம்? அர மணி நேரம் நம்ம (போலீஸ்) இல்லேன்னா தான் ஊரே கலவரமாக் கெடக்கே…”

சமூகப் பிரச்சனைகளுக்கு போராடும் மக்களுக்கும் யோகா, அவர்களை  ஒடுக்கும் போலீசுக்கு ஒரு நாள் அட்வான்சாகவே யோகா என ஜக்கியின் சேவை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கிக்கு தனியாக ஏ.சி எந்திரம்.

அடுத்தடுத்து இரண்டு ஜக்கி பக்தர்களைப் பார்த்தோம், ஒருவர் விபத்தில் முதுகுத் தண்டில் அடிபட்டவராம். மருத்துவர் அவரை முழுமையாக ஓய்வெடுக்கும் படியும், இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது எனவும் சொல்லி விட்டாராம். ஆனால் ஜக்கியிடம் யோகா வகுப்பில் சேர்ந்தவுடன் எந்த வலியும் இல்லாமல் வெள்ளயங்கிரி மலையில் பல முறை மலையேற்றம் சென்றதாகவும், பைக் ஓட்டுவதிலும் சிரமமில்லை எனவும் ஒப்பித்தார்.

இன்னொருவர் குடி நோயாளியாக இருந்தாராம், “நா பெரிய்ய குடிகாரனா இருந்தேன், இப்போ ஒருமாசமா யோகா கிளாஸ் போரேன், சுத்தமா குடிக்கற பழக்கத்தயே விட்டுடேங்க” என்றார். இதுவும் அரதப்பழைய்ய “குருடர்கள் பார்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் ஆவி எழுப்புகின்ற ஏசு அழைக்கிறார்” டெக்னிக்தான்.

ஜக்கி தனக்குத்தானே வைத்திருக்கும் விளம்பர பேனர்களை பார்த்தால், அதன் வசனங்களை எழுத நூத்திப் பதினோரு பேர் கொண்ட குழு தீயாக வேலை செய்வது தெரிகிறது. ஜக்கி கம்பெனி யோகா வகுப்பு நடத்துவதன் முக்கிய நோக்கமே அதன் விற்பனையை அதிகரிப்படுத்துவதுதான். அதன் பொருட்டு திடலில் நிறைய ஸ்டால்கள் போட்டிருந்தார்கள்.

அதை பொருட்காட்சி அல்லது கடை என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். “ஜக்கி குரூப் ஆஃப் கம்பெனி”களின் பொருட்களுக்கு தனித்தனி விளம்பர பேனர்கள். உதாரணத்துக்கு ஜக்கி கம்பெனி நடத்தும் மாத இதழ் காட்டுப்பூ (காட்டை ஆக்கிரமித்து ஜக்கி ஆசிரமம் அமைத்திருப்பதால் காட்டுப்பூதான் கிடைக்கும்).

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஜபமாலை, பாம்பு மோதிரம், ருத்ராட்சக்கொட்டை என ஃபேன்சி ஸ்டோர் அய்ட்டங்கள் தான் சக்கை போடு போடுகின்றன, ருத்ராட்ச மரங்கள் சிவனின் கண்ணீரில் இருந்து முளைத்தவை என்றால் விற்பனையாகர். 500, 1000, 1500 ரேஞ்சுளில் சக்திக்குத் தக்க (எத்தனை மெகா வாட் என குறிப்பிடவில்லை) ருத்ராட்ச மாலைகள் கிடைக்கின்றன. விட்டால் ஜக்கியே சிவனுக்கு மெயில் அனுப்பி கொட்டைகளை ஆர்டர் செய்து விநியோகிப்பார் போல.

பாம்பு மோதிரம் ஜக்கியின் உப யோகா சிடி விலையான 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. இரண்டில் எதுவுமே செல்லாத பழைய பத்து பைசாவுக்குக்கூட பழைய பேப்பர்காரர் வாங்க மாட்டார்.

அடுத்து ஜக்கி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்…  குருவுக்கு எதுக்குடா லிமிடெட் கம்பெனி? எனினும் ஜக்கி வியாபாரத்தை வெளிப்படையாகவே செய்கிறார். அதன் முழக்கம் “டேஸ்ட் ஆஃப் ஈஷா – ஈஷாவின் ருசிகள்”!

அண்ணாச்சி கடையில் விற்கும் நிலக்கடலை ஈஷா கடையில் நாலு மடங்கு விலை! சத்துமாவு, தேன், சிறுதானியங்கள் என எல்லா பொருட்களும் ஆனை விலை, குதிரை விலை. ஆனாலும் ஜக்கி உருவாக்கி வைத்திருக்கும் “பிராண்ட் நேம்” நைக், ரீபோக் போல அசாத்யமானது. ஆக மொத்தம் விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து வெறும் பொட்டலம் கட்டி அநியாய விலைக்கு விற்கும் அயோக்ய வியாபாரம். இந்த வியாபாரத்துக்குத்தான் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மேல் ஜக்கி காட்டும் அக்கறை.

கருணையைக் காசாக்கும் கலையை இவ்வளவு வெளிப்படையாக அதாவது சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா போல விற்கும் தைரியம் ஜக்கி கம்பெனிக்கும், அதை வாங்கும் ஏமாளித்தனம் மல்டிபிளக்ஸ் அறிஞர்களுக்கும் மட்டுமே உண்டு.

ஆன்மீக சுற்றுலா வியாபாரம் ஒன்றையும் ஜக்கி தன் மூளையை கசக்கி உருவாக்கியிருக்கிறார், ஜக்கி. கைலாஷ் மானசரோவர்- பிரபஞ்சத்தின் ஞானப்பொக்கிஷமாம். ஜஸ்ட் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும். இமயமலை-ஞானிகளின் வசிப்பிடமாம் 41,000ரூபாய் மட்டும். அதெல்லாம் பரவாயில்லை மூக்கை பொத்திக்கொண்டு நகரை சுற்றிப்பார்க்குமளவு கங்கையுடன் சேர்ந்து நாறும் வாரணாசி-முக்திக்கான நுழைவு வாயிலாம். ஜஸ்ட் 38,000 ரூபாய் மட்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முக்தி, மோட்சம், ஞானம், பொக்கிஷம் இவையெல்லாம் நீங்கள் சில லட்சங்கள் செலவு செய்யும் தகுதி இருந்தால் தான் ஜக்கி உங்களுக்கு விளக்குவார். இல்லை எனில் குங்குமமோ, குமுதமோ படித்து அவரின் சுற்றுலா அனுபவத்தை நீங்கள் வீட்டில் காலாட்டிக் கொண்டே அனுபவிக்கலாம்.

ஜக்கியின் அடுத்த வெடி ஈஷாவின் சமூக நலத்திட்டங்கள். பெப்ஸி, கோக்க கோலா நிலத்தடி நீர் வளத்தை காப்பதாக பீலா விடுவது எவ்வளவு அயோக்யத்தனமோ அதைவிட அயோக்யத்தனம் ஜக்கி மரம் வளர்ப்பதாக, பசுமையைக் காப்பதாக அடிக்கும் கூத்து. வெள்ளையங்கிரி மலைச்சாரல் என முகவரியில் போடுமளவு மக்களின் சொத்தான மலையை ஆக்கிரமித்த மலை முழுங்கி மகாதேவன் ஜக்கிக்கு என்ன யோக்யதை இருக்கிறது சமூக நலம், மரம் வளர்ப்பு எனப் பேச?

ஜக்கி யோகா தினம் - சென்னை
சாமியார் மடத்துக்கும் பள்ளிகளையும், குழந்தைகளையும் அடகு வைத்திருக்கிறது அரசு.

கோவை, தர்மபுரி, சேலம், காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களிள் 40 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருப்பதாக பெருமையுடன் விளம்பரம் செய்திருக்கிறது ஜக்கி கம்பெனி. தத்தெடுப்பது என்பது அடிப்படை வசதிகளை செய்வது மட்டுமல்லாமல் பாடத்திட்டத்தையும்  நவீனமயமாக்குவதாம்! ஊரெங்கிலும் சாராயக்கடை திறக்கத் தெரிந்த ஜெயாவுக்கு பள்ளிக்கூடத்தை நடத்த துப்பில்லாமல் கண்ட சாமியார் மடத்துக்கும் பள்ளிகளையும், குழந்தைகளையும் அடகு வைத்திருப்பது கீழ்த்தனமான செயல் என்பது தெரியவில்லையா ?

ஜக்கி குரூப் ஆஃப் கம்பெனிஸ் தமிழ், நாட்டிலும் ஆந்திராவிலும் சொந்தமாக 9 பள்ளிகளை நடத்துகிறது. ஈஷாவின் இந்த கல்வி வியாபாரமே புரவலர்களின் காசில்தான் ஓடுகிறது. அவர்கள் எதிர் பார்க்கும் நன்கொடையெல்லாம் சாமான்யர்களால் அளிக்க முடியாதது, நகைக்கடை விளம்பரத்தைப்போல எல்லாமே ஃபிக்ஸ்ட் பிரைஸ் தான். நன்கொடை என்பது நாமே விரும்பி அளிப்பது தான் ஆனால் அதிலேயும் வழிப்பறி என்றால்?

ஒரு குழந்தையின் ஆண்டுக்கான கல்விச்செலவு வெறும் 20,000 மட்டும். நீங்கள் கல்வி உதவித்தொகை அளிக்க விரும்பினால் வெறும் 10,000 மட்டும்.

ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கி மேடைக்கு பின் புறம் தன் டெண்டுக்குள் பதுங்கி பிரஸ் மீட்

கடைகளை ஒரு சுற்று சுற்றி வந்திருந்த போது நெட்டி முறிப்பு பயிற்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது, ஜக்கி மேடைக்கு பின் புறம் தன் டெண்டுக்குள் பதுங்கி பிரஸ் மீட் அளிக்கும் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, ஆனந்த அலை ஹை டெசிபலில் ஒலிக்கத் துவங்கியது. ஆங்காங்கே குழுமியிருந்த ஜக்கியின் மதத்தினைச் சேர்ந்த வெள்ளை ஜிப்பாக்கள் கும்பல் கும்பலாக ஆடி கடைசியில் இஸ்கான் பின் குடிமிகளின் ஸ்டைலில் மைதானத்தின் மையத்தில் குழுமி சாவுக்குத்து குத்தினார்கள். அப்படியே கேமரா ஜூம் அவுட் எடுக்க ஜக்கி மடியில் கல்லாவுடன் சின்ன மீனைபோட்டு பெரிய மீனுக்கு காத்திருக்கும் காட்சியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

உலக அளவில் முதலாளித்துவம் மீளமுடியாத புதைகுழிச்சேற்றில் அமிழ்ந்துவரும் நேரத்தில், மக்களை சமூகரீதியாக சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்றி, பிரச்சனைகளுக்கு தங்களையே பொறுப்பாக்கிக்கொண்டு, போராடும் வலிமையோ, அமைப்போ அற்றவர்களாக்க மிகப்பெரிய வலை மக்களைச்சுற்றி பின்னப்பட்டு வருகிறது. அதுதான் ஜக்கியின் மிகப்பெரும் சேவை. அதனால்தான் யோக தினத்தில் பா.ஜ.க உதவியுடன் அவர் தனது கடையை இப்படி விரிக்க முடிந்திருக்கிறது.

மோடி வடிவமைத்த யோக தினத்தின் சென்னை அத்தியாயமே இப்படி என்றால் இதன் தேசிய, சர்வதேசிய அத்தியாயங்களை ஊகித்துக் கொள்ளுங்கள்!

–    வினவு செய்தியாளர்கள்

கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?

17
பயங்கரவாதி யுவராஜ்
அதே ஊர், அதே கோவில்..ஆனால் அப்போது போராடிய மக்கள் இப்போது ரசிக்கிறார்கள்!
அதே ஊர், அதே கோவில்..ஆனால் அப்போது போராடிய மக்கள் இப்போது ரசிக்கிறார்கள்!

அதே ஊர். அதே கோவில். அதே சாதி சேர்க்கை. ஆனால் இம்முறை ஊர் ‘மக்கள்’ போராடவில்லை. திருச்செங்கோட்டின் மக்களை குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தினார் என்று பெருமாள் முருகன் மீது பாய்ந்த கவுண்டர் சாதிவெறி இன்று சகுனித்தனமாக ரசித்து வருகிறது. அன்று பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை ரசிக்கிறார்கள். பயங்கரவாதி யுவராஜ் இனி அவர்கள் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கப்போகும் ஒரு ‘தியாகி’.

சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தைப் பேட்டையைச் சேர்ந்த 22 வயது கோகுல்ராஜ், தலைவேறு முண்டம் வேறாக படுகொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டிருந்த காட்சியை பார்க்காதவர் யாருமில்லை. ஆனால் ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ் தலைவெட்டிக் காட்சிகளைப் பார்த்து விட்டு காட்டுமிராண்டித்தனம் என்று அதிர்ச்சியுற்றவர்கள் எவரும் கோவைக் காட்டுமிராண்டித்தனத்தை பார்த்து அதிர்ச்சியடையவில்லை.

கொங்கு வேளாள சாதிவெறிக்கு பலியான கோகுல்ராஜ்
கொங்கு வேளாள சாதிவெறிக்கு பலியான கோகுல்ராஜ்

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டருக்கின்றனர். ஆண்கள் ஐந்து, பெண் ஒருவராக இருந்த அந்த கும்பலிடம் போலிசார் நடத்திய விசாரணையிலிருந்து கொலை எப்படி நடந்தது என்பது தெரிய வந்திருக்கிறது. வழக்கமாக குற்றச் சம்பவம் குறித்த போலீஸ் விசாரணையின் செய்திகள் எந்த அளவுக்கு உண்மை என்று சிலர் கேட்கலாம்.

பெருமாள் முருகன் பிரச்சினையில் தமிழக அரசு, ஆளும் கட்சி மற்றும் மேற்கு தமிழக அரசு அதிகாரிகள் எப்படிக் கட்டுக் கோப்புடன் கொங்கு வேளாள கவுண்டர் சாதிவெறிக்கு சலாம் அடித்து பணிபுரிந்தார்கள் என்பது அனைவரும் அறிவர். அச்சமயம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது பெண் போலீசார் சிலர் கடை கடையாகச் சென்று பெருமாள் முருகன் புத்தகங்களை விற்க கூடாது என்று ‘நாகரிகமாக’ மிரட்டியதும் வரலாறுதான்.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பார்த்தால் கோகுல் ராஜ் குறித்த கொலைச் செய்தி போலீஸ் தரப்பிலிருந்து கவுண்டர் சாதிவெறிக்கு எதிராக வெளிவருவது குதிரைக் கொம்புதான். ஆனால் தற்போதைய நிலவரப்படி கொலைகாரர்கள் குறித்த உண்மைகள் பகிரங்கமாக வெளியே வந்துவிட்டபடியால் அதை மறைப்பது போலிசுக்கு சிரமம். அதனால் இந்த செய்திகள் உண்மையாகவே வெளியே வரலாம். கூடுதலாக ஒரு குற்றம் பகிரங்கமாக வெளியே கசியும் போது அதை மறுத்துப் பேசாமல் பின்பு ஆறப் போட்டு சாட்சி இல்லை, பிறழ் சாட்சிகள் என்று யுவராஜ் காப்பாற்ப்படலாம் என்பதாலும் இந்த செய்திகள் இப்போது வெளியே வந்திருக்கலாம்.

கோகுல் ராஜ் கொலையில் கைது செய்யப்பட்டகுற்றவாளிகள்
கோகுல் ராஜ் கொலையில் கைது செய்யப்பட்டகுற்றவாளிகள்

போலீஸ் விசாரணையின் படி கைது செய்யப்பட்டவர்கள் திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் கோவிலில் கோகுல்ராஜை கடத்தி சென்று யுவராஜிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். பிறகு யுவராஜ் தலைமையில் ஒரு கும்பல் அந்த அப்பாவி தலித் இளைஞனை கொடுரமாக கொன்றிருக்கிறது. கைதானவர்கள் அனைவரும் யுவராஜின் உறவினர்கள்.

சங்ககிரி, திருச்செங்கோடு பகுதியில் பொது இடங்களில் தென்படும் காதலர்கள் அல்லது இளைவயது ஆண்-பெண்களை இக்கும்பல் தேடிச் சென்று விசாரிக்கும். அதில் கொங்கு வேளாள கவுண்டர் ஜோடிகள் இருந்தாலே இவர்கள் கோபத்துடன் எச்சரித்து பிரித்து அனுப்பி விடுவார்களாம். அதாவது கவுண்டர் என்றாலும் அங்கேயும் வர்க்கம் பார்த்துதானே காதலிக்க வேண்டும்?

பிறகு அந்த ஜோடியில் ஒருவர் கவுண்டர் மற்றொருவர் வேறு சாதி அல்லது கவுண்டர்களை விட சாதிப்படி நிலையில் கீழே இருப்பவர்கள், தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அவர்களை தாக்கி காயப்படுத்தி துரத்துவார்கள். அதிலும் ஒரு கவுண்டர் பெண் ஒரு தலித்தை காதலித்தால் அவர்களது ‘கௌரவக்’ கொலை வெறி எப்படி எகிறும் என்பதை விவரிக்கத் தேவையில்லை.

ஜூன் 23-ம் தேதி இந்த கொங்கு வேளாள சாதி வெறிக் கும்பலுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அதன்படி கோகுல்ராஜ் தனது தோழி ஸ்வாதியுடன் சென்றிருக்கிறார் என்று தெரிந்து இவர்கள் கரடியாய் குதிக்கிறார்கள். அந்த பெண்ணை எச்சரித்து பேருந்து ஏற்றி அனுப்பி விட்டு, கோகுல்ராஜை மட்டும் யுவராஜிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த கவுண்டர் மான மீட்பு போர் நடவடிக்கைகள் அனைத்தும் “தீரன் சின்னமலை பேரவை” தளபதி யுவராஜின் தலைமையிலேயே நடந்துள்ளது.

பயங்கரவாதி யுவராஜ்
கொங்கு பயங்கரவாதி யுவராஜ்

பிறகு பயங்கரவாதி யுவராஜ் இக்கும்பலுக்கு தொலைபேசி மூலம் கோகுல்ராஜை கொன்று விட்டதாகவும், தலைமறைவாக இருக்கும் படியும் கூறியிருக்கிறார். அதன் பிறகு ரயில் தண்டவாளம் அருகே உடல் கிடந்த செய்தி தெரிந்ததாகவும், யுவராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கைதான இக்கும்பல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.

ஊடக செய்திகள் படி பயங்கரவாதி யுவராஜ், சென்னையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ பாதுகாப்பில் இருப்பதாகவும், அதை அந்த எம்.எல்.ஏ மறுத்திருப்பதாகவும், அவர் விரைவில் நீதிமன்றத்தில் சரணடைய இருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் தெரியாத விசயங்கள் பல இருக்கலாம். தமிழகத்தின் செல்வாக்கான ஒரு ஆதிக்க சாதியின் பலத்தோடு ஒப்பிடும் போது யுவராஜ் இந்த கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி வெளியே வர நிறைய வாய்ப்பிருக்கிறது.

தற்போது ஒரு வீடியோவை இக்கும்பல் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. அதில் பயத்துடனும், பதட்டத்துடனும் பெண்களை நம்பி காதலிக்காதீர்கள், இல்லையென்றால் எனது முடிவுதான் உங்களுக்கு ஏற்படும்” என்று கோகுல் ராஸ் பேசுவதாக அதாவது தற்கொலைக்கு முந்தைய கடிதம் போல இந்த வீடியோ சாட்சி இருக்கிறதாம். ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்வதற்கு முன்னும் அப்படி ஒரு வீடியோ போடுவார்கள். அதிலும் கொல்லப்படும் அப்பாவிகள் தாம் தவறு இழைத்திருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்கள். பயங்கரவாதிகள் என்ற முறையில் ஐ.எஸ்-ம், ஆர்.எஸ்.எஸ்-ம், கொங்கு வேளாள சாதி வெறியர்களும் பங்காளிகள்தான்.

கொல்லப்பட்ட கோகுல்ராஜின் குடும்பம் மற்றும் ஊர் மக்கள், தலித் அமைப்புகள், ஜனநாயக சக்திகள் உறுதியாக போராடிய பிறகே போலிசு கொஞ்சம் அசைந்து கொடுத்தது. ஆரம்பத்தில் கோகுல்ராஜின்  தாயும், அந்த பெண்ணும் இச்சம்பவம் குறித்து குறிப்பான விவரங்களோடு புகார் மற்றும் தகவல் அளித்திருந்தாலும் போலிசார் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கொலை வழக்காக அவர்கள் பதிவு செய்வதற்கே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.

கொள்ளைக்கார அம்மாவுக்கு கொலைகார சாதி வெறியர்கள் ஆதரவு
கொள்ளைக்கார அம்மாவுக்கு கொலைகார சாதி வெறியர்கள் ஆதரவு

கவுண்டர் பெண்களை இழிவுபடுத்தியதாக பெருமாள் முருகனைக் கண்டித்து திருச்செங்கோட்டில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். கூலிப்படை கோஷ்டியான இந்துமக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் நடத்திய அந்த கூட்டத்தில் சாரு நிவேதிதா, அரவிந்த நீலகண்டன் போன்ற எழுத்துலக கயவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஒரு பாலியல் வறட்சி மாநிலம் என்று வருத்தப்படும் பொறுக்கி சாரு உண்மையில் தனது ‘வறட்சிக்காக’ ஒரு அப்பாவிப் பெண்ணை சாட்டில் துன்புறுத்தியது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தலித் மக்களுக்காகவும், அம்பேத்கருக்காகவும் கிளிசரின் போடாமலேயே அழும் மோசடிக்காரர் அரவிந்தன் நீலகண்டன் மற்றொரு பக்கம். பொறுக்கி சாருவும், பாசிஸ்டு அ.நீலகண்டனும் திருச்செங்கோட்டில் எதைக் கண்டித்தார்களோ அதே கண்டனத்தைத்தான் பயங்கரவாதி யுவராஜும் செய்திருக்கிறார். என்ன அவர்கள் வார்த்தைகளில் கொலை செய்தார்கள், இவர் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார்.

சாரு, அ.நீ போன்றவர்களை ‘ஜனநாயகம், கருத்துரிமை, நாகரீகம், காதல்’ போன்ற ஜென்டில்மேன் டைப் ஆட்களாக கருதும்  அறிஞர் பெருமக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இவர்களது ஆதரவுதான் அவர்களை திருச்செங்கோட்டில் சென்று பேச வைத்தது. இப்படி பேசியவர்களது ஆதரவுதான் யுவராஜை கொலை வெறியோடு அலைய வைத்திருக்கிறது. ஆகவே சாரு, அ.நீ போன்ற குற்றவாளிகளை ஆதரித்து ஏதாவது ஒரு எழுத்தோ, வார்த்தையோ, பத்தியோ, புகைப்படமோ, நேர்காணலோ, அட்டைப்படக் கட்டுரையோ செய்திருக்கும் அனைவரும் கோகுல் ராஜின் கொலையில் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்கிறோம்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞனின் தலையை துண்டித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தைக் கொன்றவர்கள் இன்று ஒரு தலித் இளைஞனின் தலையை துண்டித்திருக்கிறார்கள்.

கோகுல்ராஜின் கொலை என்பது “பறையனுக்கு கவுண்டர் பெண் கேக்குதா” என்றால், பெருமாள் முருகனது எழுத்து மரணத்திற்கு காரணம், “ கவுண்டச்சி வயித்தில் சக்கிலியன் வாரிசா” என்பதே. ஆதிக்க சாதி வெறி என்பது தலித் மக்களுக்கு மட்டுமல்ல, அந்த சாதியில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கே எதிரிதான் என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது.

பெருமாள் முருகன் பிரச்சினையின் போது ஆதிக்க சாதியில்  வாழும் பெண்களை வதைக்கும் கதைகள், நடப்பியலை விரிவாக பார்த்திருக்கிறோம். இங்கோ ஒரு இளம்பெண் தனது நண்பருடன் ஒரு கோவிலுக்கு சென்று கூட பேச முடியவில்லை. பேசியதால் அவளது நண்பன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். இது தொடரும் பட்சத்தில் கொங்கு வேளாள சாதியில் உள்ள பெண்கள் வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனைக் கைதி போல வாழ வேண்டியிருக்கும்.

கோவை ஈஸ்வரன் எனும் கொ.வே.சாதி வெறி சங்கத் தலைவர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் போது வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூப்பாடு போடுவார். அந்த சட்டம் இருந்துமே கோகுல்ராஜின் கொலையை கொலை வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு வாரம் ஆனது. அச்சட்டம் இல்லாமல் போனால் காதும் காதும் வைத்தவாறு முடிப்பதற்கு போலீசுக்கும், இவர்களுக்கும் பிரச்சினை இல்லை போலும்.

ஆங்கிலேயரை எதிர்த்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் பங்கேற்ற தீரன் சின்னமலைக்கும்,  பயங்கரவாதி யுவராஜுக்கும் என்ன சம்பந்தம்? தீரன் சின்னமலை அந்த சாதிக்கு சொந்தமானவரில்லை. உண்மையில் கோவை வட்டாரத்தில் தீரன் சின்னமலையின் நாட்டுபற்று உணரப்பட்டிருந்தால் யுவராஜ்களுக்கு அங்கே வாழ்வில்லை. ஒரு வேளை தீரன் சின்னமலை இன்று இருந்திருந்தால் யுவராஜ் என்றோ சிரச்சேதம் செய்யப்பட்டு, சாதி வெறியை கடைபிடிக்கும் மிருகங்களுக்கு எச்சரிக்கை என்று ஊர் ஊராக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும்.

பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களின் போது என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுப்பார்கள். இங்கே யுவராஜை என் கவுண்டர் செய்ய வேண்டும் என்று கோவை வட்டராத்தில் இருந்து குறிப்பாக கொங்கு வேளாள சாதி வாழ்க்கையினை மறுக்காமலும் ‘அமைதியாகவும்’ பின்பற்றும் ஒருவரிடமிருந்தும் ஏன் வரவில்லை? நாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.

இல்லையேல் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோகுல்ராஜ்கள் இங்கே எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்த மாட்டார்கள்.

கிணற்றில் மறைந்த நீர் கின்லேவில் பொங்குவது எப்படி ?

1
தண்ணீர்-வெட்டு

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் குடிநீருக்காக தவிக்கின்றன. சாரல் விழும் குற்றாலம் முதல் ஈரப்புகை கக்கும் ஒகேனக்கல் வரை சுற்றுலா கண்களுக்கு நிறையும் நீர் அதே மாவட்டத்தின் சுற்றுப்புறப் பகுதிகளின் தாகத்தை தீர்க்க அகப்படுவதில்லை. இயற்கையின் பொது உடைமையான நீர், இயற்கை விதிப்படியே பள்ளத்தை நோக்கி பாயாமல் மேடு நோக்கிப் போகும் மர்மத்தை மக்கள் சிந்திக்க இயலா வண்ணம் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள் .

ஆதி மனிதனின் வேட்டை போல காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு எந்தப்பக்கம் தண்ணீர் எடுக்கப் போவது என்பது அன்றாட வாழ்க்கையின் காட்சியாகிவிட்டது. மக்கள் தீவிரமாகப் போராடும் அடித்தள பகுதிகளுக்கு மட்டும் குழாயில் அடித்து எடுக்கும் படி சிறிது தண்ணி காட்டி விட்டு, பல பகுதிகளுக்கு இழுத்தடித்து மக்களின் கோபத்தீயை தணிக்குமளவுக்கு தண்ணீர் ஊற்றுவது என நகராட்சிகள், மாநகராட்சிகள் திட்டமிட்டுக் கொள்கின்றன.

தண்ணீர் வேட்டை
ஆதி மனிதனின் வேட்டை போல காலிக்குடங்களை தூக்கிக்கொண்டு எந்தப்பக்கம் தண்ணீர் எடுக்கப் போவது என்பது அன்றாட வாழ்க்கையின் காட்சியாகிவிட்டது.

‘இரண்டு நாளா தண்ணி இல்ல, தண்ணிவுட்டாத்தான் போவோம்” என்று முற்றுகையிடும் மக்களிடம் “நாங்க என்ன பண்றது? தண்ணியே இல்லங்க, சரியா மழையும் பெய்யல என்ன பண்றது? சரி, சரி ஏற்பாடு பண்றோம் !” என்று பருவமழையின் மீது பழியை போட்டுவிட்டு தந்திரப் பேச்சில் தப்பிக்கிறது அதிகார வர்க்கம்.

எதிர்த்து மோதி மோதி களைப்படைந்த மக்கள் மெல்ல மெல்ல எல்லா காலத்திலும் அந்தந்தப் பகுதியின் நீர் மாஃபியாக்களின் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற மாதிரி குடம் ஐந்து, ஆறு, பத்து என்ற விலையில் கூட வாங்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள். வேறு என்ன செய்வது? “இனி காசுக்குத்தான் தண்ணீர்” என்ற அரசின் அடக்குமுறை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தமாக பரப்படுகிறது.

தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா
“இனி காசுக்குத்தான் தண்ணீர்” என்ற அரசின் அடக்குமுறை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தமாக பரப்படுகிறது.

உண்மையில் தண்ணீர் இல்லையா? இல்லை யாருக்கு மட்டும் தண்ணீர் இல்லை? என்பதை சமுதாயத்தில் நிலவும் உண்மையிலிருந்து உணர்ந்தால், இது தண்ணீர் பஞ்சமல்ல, தனியார்மய கொள்ளை என்பது புரியவரும். நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர். வளர்ச்சி என்ற பெயரில் எல்லா மாவட்டங்களிலும் ஏரிகளையே ஏப்பம் விட்ட அரசும் ஆளும் வர்க்கமும், எஞ்சிய ஆற்று மணலின் ஊற்றுக் கண்ணையும் குருடாக்கிவிட்டு, தனியாருக்கு நதிகளை தாரை வார்த்து விட்டு இயற்கையின் மீதே பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன.

பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்? “செம்புலப் பெயல் நீர் போல்” அரசின் அன்புடை நெஞ்சம்தான் கலந்த தனியார் மயத்தால் வந்த துயரம் இது.

சரி, இவர்களின் கூற்றுப்படியே பருவமழைதான் காரணம் எனில், அதன் பாதிப்பு எப்போதும் ஏழைகளுக்கு மட்டுமேயாக இருப்பதன் காரணம் என்ன ?

சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு அய்ம்பது லட்சம் லிட்டர் தண்ணீரை நட்சத்திர விடுதிகள் உறிஞ்சுகிறது. பல லட்சம் ஏழை மக்களின் சமையல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவும் இந்த தண்ணீரை சந்தைப் பொருளாக்கி ஏழைகளின் கையிலிருந்து தட்டிப்பறிக்கிறது தனியார் மயம். இதற்கு ‘தண்ணி மாமாவாக’ தரகு வேலை பார்க்கிறது அதிகாரவர்க்கமும், அரசும்.

தண்ணீர் சண்டை
ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.

ஒரு குடம் தண்ணீருக்காக ஆணும், பெண்ணும் அலைக்கழிக்கப்படும் இந்த நாட்டில்தான், ஆயிரக்கணக்கான பணத்திமிலங்களின் நீச்சல் குளங்களுக்கு நெட்டித் தள்ளப்படுகிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். நாடு முழுக்க இப்படி நீச்சல் குளங்கள், கோல்ஃப் மைதானஙகள், கிரிக்கெட் மைதானங்கள், தீம் பார்க்குகள், இயற்கையின் மீதும், இந்த நாட்டின் மீதும், நன்றியில்லாத முதலாளிகள், அரசியல்வாதிகள் வீட்டு நாய் குளிப்பது என்று புழங்கப்படும் நீரின் அளவைக் கணக்கிட்டால், “தவிக்குதே தவிக்குதே!” நூலாசிரியர் பாரதிதம்பி சொல்வதுபோல, ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம். இந்த லட்சணத்தில், பிறக்கப்போகும் குழந்தையை தனது பனிக்குடத்திலேயே பாதி கழுவிக்கொள்ளும் ஏழைகளைப்பார்த்து “தண்ணீர் சிக்கனம்.. தேவை இக்கணம்” என்று தலைக்கனத்தோடு அறிவுரை சொல்கிறது அதிகாரவர்க்கம்.

தண்ணீர் காசுக்குத்தான்
தண்ணீர் ஏழைகளுக்கு இல்லை, காசுள்ளவனுக்குத்தான்.

தண்ணீர் ஏழைகளுக்கு இல்லை, காசுள்ளவனுக்குத்தான் என்ற தனியார்மய மனுநீதி அத்தோடு நிற்பதில்லை, உழைக்கும் வர்க்கத்தின் பயன்பாட்டிற்கும், இந்த நாட்டின் சுயதேவை உற்ப்பத்திக்கும்,சுய தொழிலுக்கும் கூட இனி தண்ணீர் கிடையாது. மாறாக பன்னாட்டுக் கம்பெனிகளின் – கார்ப்பரேட்டுகளின் ஏற்றுமதி சேவைக்கும், நுகர்வுமய சந்தைக்கும் என்பதும் இன்னொரு நீதியாகிவிட்டது.

சைக்கிள் கடை வைத்திருபவருக்கு பஞ்சர் பார்க்க ஒரு குடம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நாட்டில்தான், ஹூண்டாயோ, நிசானோ ஒரு கார் தயாரிக்க 3.5 லட்சம் லிட்டர் தண்ணீரை அரசு தாராளமாக கொடுக்கிறது. இதற்குப் பெயர்தான் தண்ணீர் தட்டுப்பாடா? தனியார்மய தாராளமய கட்டுப்பாடா? நம்ம ஊர் பிச்சிப்பூவுக்கு ஒரு குடம் தண்ணீர் இல்லை, பன்னாட்டு மிட்சுபிசிக்கு பல லட்சம் லிட்டர் கிடைக்கிறது என்றால், இங்கு தண்ணீர் இல்லை என்பதை நம்ப முடியுமா? உள்நாட்டு உழைக்கும் மக்களுக்கு தண்ணீர் தடை என்பதுதான் உண்மை.

அர்ஜெண்டினாவில் தண்ணீர் தனியார்மயம்
அர்ஜெண்டினாவில் தண்ணீர் தனியார்மயம்

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பனியன், ஜட்டி, தோலாடைகள் என பலவும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை விழுங்கிக்கொண்டு செல்கின்றன; நமது பாலாறும், நொய்யலாறும் சாயக்கழிவில் தோல் உரிந்து கிடக்கின்றன. வருவாய் முதலாளிகளுக்கு பல நோய் மக்களுக்கு.

வெளிநாட்டுக்காரன் அணியும் உள்ளாடைக்கு ஈரம் கசியும் அரசின் இதயம், தாய்நாட்டின் விவசாயத்தின் மீது நெருப்பை உமிழ்கிறது என்றால் இது யாருக்கான அரசு என்பது தண்ணீரிலும் தெளிவாக தெரிகிறது.

தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் அடிமைத்தனம்
தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் அடிமைத்தனம்

காலிக்குடங்களுடன் போராட்டம், சாலைமறியல், முற்றுகை என போராடும் மக்களை தந்திரமாகவும், தடியடியாகவும் ஆளும், அதிகார வர்க்கம் ஏமாற்றும் போதெல்லாம், போராடும் மக்கள் நம்பத் தயாராக இல்லை, “எங்கள் தெருவில்தான் தண்ணி இல்லை இதோ அந்த நகரில் உள்ளது, அந்த பங்களாவில் உள்ளது” என்று சிதைந்த வடிவிலான வர்க்க உண்மைகளை அடையாளம் காட்டுகிறார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த உண்மைகளை இன்னும் தெளிவாக பேசலாம், ஊரில் மக்களுக்கு தண்ணி இல்லை, ஊரில் உள்ள கடைகளில் எத்தனை லோடு வேண்டுமானாலும் பெப்சி, கோக், அக்குவாபினா முதல் அம்மா வாட்டர் வரை இருக்கிறதே அது மட்டும் எப்படி? கிணத்தில் தண்ணீர் இல்லை, கின்லேவில் இருக்கிறதே எப்படி? என்று சிந்தனையை தூர்வாரினால் அரசியல் உண்மை சுரக்கும், நமது ஊற்றுக்கண்களை அடைத்துக்கொண்டிருப்பது தனியார் மய கும்பி என்பது புரியவரும். சும்மா வாட்டரை ஒழித்துவிட்டு அம்மா வாட்டர் காசுக்கு எதற்கு என்ற நியாயமும் பிறக்கும்! இயற்கையில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நீர் சந்தையில் புட்டி, புட்டியாக காசுக்கு விற்க அடைக்கப்பட்டிருக்கிறது.

பாட்டில் வாட்டர்
ஊரில் மக்களுக்கு தண்ணி இல்லை, ஊரில் உள்ள கடைகளில் எத்தனை லோடு வேண்டுமானாலும் பெப்சி, கோக், அக்குவாபினா முதல் அம்மா வாட்டர் வரை இருக்கிறதே.

தண்ணீர் இல்லாமல் இல்லை, காசில்லாதவனுக்குத்தான் இல்லை என்ற உண்மையை உணர நமக்குத்தேவை போதி மரமில்லை, ஒரு தனியார்மய தண்ணீர் பாட்டிலே போதும், நிலம், கடல், மலை, நீர் ஆகிய அனைத்து இயற்கையையும் நம்மிடமிருந்து பறிக்கிறது தனியார் மயம்- தாராளமயம்.

“பறிமுதல்காரர்களை பறிமுதல் செய்கிறது புரட்சி” என்றார் கார்ல் மார்க்ஸ். இந்த அரமைப்பைபே பறிமுதல் செய்ய வேண்டியது என்பதுதான் நாம் நியாயமாக வந்தடைய வேண்டிய முடிவு. ஒரு வாய் தண்ணீர் தரக்கூட வக்கற்று ஆளும் தகுதியற்ற இந்த அரசமைப்பை ஒழிக்கும் சிந்தனை சுரந்தால் தானே தண்ணீர் கிடைக்கும்! ‘வறட்சியின் அரசியலை புரிந்து கொள்ளும் போது மக்களின் தாகம் தண்ணீரோடு மட்டும் தணிவதில்லைதனே!’.

–  துரை.சண்முகம்

குறிப்பு : தண்ணீர் பிரச்சனையின் நாளது உண்மைகளை மேலதிகமாக புரிந்துகொள்ள பாரதிதம்பியின் “தவிக்குதே! தவிக்குதே!” (வெளியீடு : விகடன் பிரசுரம்) நூலைப் படிக்கலாம்.

nemmeli-water-project-cartoon
படம் : ஓவியர் முகிலன்

விழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்

0

விழுப்புரத்தில் போலீஸ் ஆசியுடன் கள்ளச்சாராய விற்பனை!

விழுப்புரத்தின் நகரப் பகுதியான வி.மருதூரில் சில ஆண்டுகளாகவே போலீசின் ஆசியோடு சாராய விற்பனை நடந்து வருகிறது. இதனை தட்டிக்கேட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மீது ரௌடிகள் கொலைவெறியோடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் பத்து, ஜாக்கி சரத் குமார் இவர்களின் அம்மா முனியம்மா மற்றும் பெருமாள் நகர் பகுதியை சார்ந்த பவுல் வெங்கடேசன், இவனின் அம்மா விஜயா, மாமா அ.தி.மு.க. வார்ட் கவுன்சிலர் பெரியவர் கண்ணன், இன்னொரு மாமா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இந்த கும்பலின் வேலையே கள்ளச் சாராயம் விற்பது ரேஷன் பொருட்கள் கடத்துவதுதான். இவைதான் அவர்களின் குடும்பத்தொழிலாக இருந்து வருகிறது.

இவர்கள் அளிக்கும் மாமூல் தொகை காரணமாக காவல் துறை தரும் செல்வாக்குடன் இவர்கள் பல வருடங்களாக சாராய விற்பனையை நகரம் முழுவதும் நடத்தி வருகிறார்கள். பகுதியில் செயல்படும் பு.மா.இ.மு இதை பலமுறை கண்டித்துள்ளது. சென்ற மாதம் கூட நகர காவல் நிலையத்திற்கு புகார் அளித்தது.

இந்நிலையில் மேற்கண்ட ரௌடி கும்பலின் உறவினரான பிரபாகர் மற்றும் பாட்டில் ஆனந்த் இருவரும் 29-06-2015- திங்கள் அன்று இரவு 11 மணிக்கு வி.மருதூர், பிள்ளையார் கோயில் இறுதி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து கள்ளச்சாரயத்தை விற்றுக் கொண்டு இருந்துள்ளனர். அவ்வழியாக மலம் கழிக்கச் சென்ற மணி என்ற இளைஞனை தாக்கியுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட பிரகாஷ் என்ற நபரை ஆபாசமாகத் திட்டி சராமரியாக தாக்கியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி இளைஞர்கள் சாராய ரவுடிகளை திருப்பித் தாக்கியுள்ளனர். அடிபட்ட சாராய ரவுடிகள் அவர்களின் தலைமையான பத்து மற்றும் பவுல் வெங்கடேசன் கும்பலுக்கு தகவல் தந்துள்ளனர்.

அவர்களோடு 10 பேர் அடங்கிய கும்பல் பு.மா.இ.மு பொறுப்பில் இருக்கும் தோழர்.செல்வகுமார் வீட்டின் அருகே வந்து கலாட்டா செய்து கொண்டும் வருவோர் போவோர் எல்லோரையும் மிரட்டிக் கொண்டும் இருந்துள்ளனர். சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த தோழரின் அக்கா காஞ்சனாவை ஆபாசமாக திட்டி, தடியால் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதைக்கண்ட அவரது மகன்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், தம்பி ராஜ்குமார், உறவினர் அருள் ஆகியோர் தடுக்க முயன்றுள்ளனர். இந்த கும்பல் பெரிதாக இருந்ததாலும், கையில் இரும்புக்கம்பி, தடி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்ததாலும் காப்பாற்ற வந்தவர்களும் சேர்ந்து அடிவாங்கி ஓட ஆரம்பித்துள்ளனர். மயங்கி விழும் வரை காஞ்சனாவை தாக்கிய கும்பல் கத்திக் கொண்டே கலைந்துள்ளனர்.

அக்கம் பக்கம் இருப்பவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தூக்கி கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இன்னொரு புறம் அமைப்பு வேலையாய் வெளியூர் சென்றிருந்த தோழர். செல்வகுமார்க்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த செல்வகுமார் நகர காவல் நிலையத்திற்கு தோழர்களுடன் சென்று புகார் தர முயன்றுள்ளார். ஆனால் அதைப் பெற அங்கு யாருமில்லை. கேட்டால் “எங்களுக்கே பாதுகாப்பில்லை” என்று தோழர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.

தோழர்கள் செல்வதற்கு முன்பே தோழரின் அக்கா மகன் சதீஷ் தன் நண்பர்களோடு புகார் தரச் சென்றுள்ளார். அங்கிருந்த காவலர்கள் முன்பே ரவுடிகளில் ஒருவனான ஜாக்கி சரத்குமார் “இரண்டே நாளில் உன்னை வெட்டிக் கொல்வேன்” என மிரட்டி உள்ளான்.

“என்ன சார் உங்க முன்னாடி இப்படி பேசறான் நடவடிக்கை எடுங்க” என்றதற்கு,

“விடுங்க தம்பி. அவன் ஏதோ ஆதங்கத்துல பேசறான். இதையெல்லாம் பெருசா எடுத்துகிட்டு” என்று வெட்டுக்கிளி முருகேசன் பாணியில் வெட்கமில்லாமல் பதிலளித்துள்ளனர்.

பிறகு தோழர்கள் அந்த நடு இரவில் DSP அலுவலகம் செல்ல அங்கும்  யாருமில்லை. “வெஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளார் அங்கு சென்று புகார் தாருங்கள்” என்று மாற்றி விட்டார்கள். அதனால் வெஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளயே இருந்து கொண்டே ஏட்டுகளை வைத்தே சதீஷ் தந்த புகாரை பெற்றுக்கொண்டார்கள்.

அந்த ஸ்டேஷனில் இருந்து கூப்பிடும் தூரத்தில்தான் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு சென்று அக்கா காஞ்சனாவை பார்ப்பதற்காக தோழர்கள் சென்றுள்ளனர். அதே இடத்தில் பகுதியில் சாராயம் விற்று இளைஞர்களிடம் சண்டை போட்டு அடிவாங்கிய அந்த பொறுக்கி கும்பலும் சிகிச்சை என்ற நாடகத்திற்காக போலீஸ் வழி காட்டுதலுடன் அங்கு சேர்ந்துள்ளனர்.

நம் தோழர்கள் மருத்துவமனையில் நுழைந்ததும் அந்த அடியாள் கும்பல் சதீஷ் மற்றும் செல்வகுமார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். எஸ்.ஐ அருணாச்சலம், ஸ்பெஷல் பிரான்ச் ஜெயச்சந்திரன், ஏட்டுகள் உள்ளிட்ட ஏழு போலிசார் முன்பு தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் அங்கு உள் சிகிச்சையில் இருந்த காஞ்சனா மீதும் பத்து, பவுல் வெங்கடேசன், ஆனந்த். பிரபாகரன், ஜாக்கி சரத்குமார் உள்ளிட்ட கும்பல் மீண்டும் தாக்கியது. வெட்கங்கெட்ட போலீஸ் அதையும் வேடிக்கை தான் பர்ர்த்தனர்.

கள்ளச்சாராய பொறுக்கிகளிடம் கைநீட்டி வாங்கித்தின்று வயிறு வளர்க்கும் காக்கி சீருடை கிரிமினல்களிடம் இதுதான் நடக்கும் என்று உணர்ந்த தோழர்களே தலையிட்டு காயம் பட்டவர்களை மீட்டனர். பிறகு காயங்களுடன் அக்காவை அழைத்துக் கொண்டு இரவு ஒரு மணிக்கு எஸ்.பி அலுவலகம் சென்றனர்.

அங்கே எதையும் விசாரிக்காமலேயே நம் மீது எரிந்து விழுந்தார்கள். காரணம் கள்ளச் சாராய பணம் தான் என்பது நமக்கு புரிந்தது. மீண்டும் அந்த அயோக்கிய சிகாமணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இடமே பரிந்துரை செய்தார்கள். முடியாது என்று மறுத்த நாம் முண்டியம் பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று அக்காவை அட்மிட் செய்தோம்

இந்த சாராய வியாபாரிகளின் பெயரால் போலீசே, தோழர் செல்வகுமார், சதீஸ் உள்ளிட்ட 8 பேர் மீது கள்ளச்சாராய ரவுடிகளிடம் நன்கொடை கேட்டு மிரட்டியதாக எதிரிகள் கூட கூறத் தயங்கும் அவதூறை, பொய் வழக்கை கேவலமான முறையில் பதிவு செய்துள்ளது..

அடுத்த நாள் மீண்டும் எஸ்.பி-யைச் சந்தித்து புகார் அளிக்க சென்றோம். எஸ்.பி வரவில்லை என்று ஏ.டி.எஸ்.பி யை சந்தித்து முறையிட்டோம். அந்தம்மாவோ “நடந்தது நடந்து விட்டது, இனிமேல் இதுபோன்று நடக்காமல் நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூலாக பதில் கூறி தோழர்களை மேற்கு காவல் நிலையத்திற்கு அதே அண்ணாதுரையிடம் அனுப்பி வைத்தார்.

அங்கு சென்றால் “இன்ஸ்பெக்டர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும். நீங்கள் நகர காவல்நிலையம் சென்று விடுங்கள். ஐயா நேராக அங்கே வந்துவிடுவார்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

தோழர் செல்வகுமார் வீட்டின் மீது தாக்குதல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மீண்டும் நகர காவல் நிலையம் சென்றனர். அங்கும் இன்ஸ்பெக்டர் வரவில்லை. 3 மணி நேரம் கழித்து தான் வந்தார். அவரிடம் புகார் அளித்து விட்டு வீடு செல்வதற்குள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக போலீசால் சொல்லப்பட்ட மேற்படி அதே ரௌடி கும்பல் தோழர் செல்வகுமார் வீட்டையும், அருள் என்பவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, பொருட்களை எல்லாம் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழரின் அக்காவையும் மிரட்டியுள்ளனர்.

அருள் வீட்டின் மீது தாக்குதல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவை அனைத்தும் க்யூ பிரிவு போலீசு கார்த்தி மேற்பார்வையில் நடந்தவைகள்தான்.

இந்தப் பொறுக்கி கும்பலின் அராஜகம் பற்றி கேள்விப்பட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் உண்மை அறியும் குழு இரவே வந்து டி.எஸ்.பி-ஐ சந்தித்து புகார் தந்தனர்.

டி.எஸ்.பி-ன் விசாரணையில் பேசிய நகர காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரையோ, “வீடுகள் அடித்து உடைக்கப்பட்ட சம்பவமே நடக்கவில்லை” என்று ரவுடி கும்பலின் குரலில் பேசினார். ரவுடி கும்பலிடம் வாங்கியதாக கூறப்படும் 50,000 ரூபாய் காசுக்கு மேலேயே விசுவாசம் காட்டினர். நிர்ப்பந்தம் காரணமாக டி.எஸ்.பி-ன் உத்தரவின் பேரில் 30-06-2015 அன்று இரவே மீண்டும் அண்ணாதுரை தலைமையிலான டீம் உடைக்கப் பட்ட வீடுகளை பார்வையிட்டு ரௌடிகள் மீது PPD வழக்கு பதிந்துள்ளார்.

தொடர்ச்சியாக கள்ளச்சாராய கும்பலுக்கு ஆதரவாக போலீசு துணை நிற்பதை அம்பலப்படுத்தி சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டியுள்ளோம்.

vmp-rsyf-posterகேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் தாலியறுக்கும் பொறுக்கி கும்பலுக்கு திமிரும் தெனாவட்டும் இருக்கிறதென்றால் அதனுடன் போலீசும் கூட்டு சேர்ந்து கொண்டு பொறுக்கி தின்று கொண்டு அலைகிறதென்றால் இதை அப்படியே சகித்துக் கொள்ள முடியுமா? சட்டம் ஒழுங்கை காப்பாற்றப் போவதாகவும், மக்களை பாதுகாக்கப் போவதாகவும் கூறிக்கொண்டு திரியும் மக்கள் விரோத கட்டமைப்பு நெருக்கடிக்குள்ளாகி விட்டது என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்களின் நலனுக்காக போராடும் பு.மா.இ.மு, இந்தப் பொறுக்கி கும்பலின் அராஜகத்துக்கும், சாராய சாம்ராஜ்யத்துக்கும் முடிவு கட்டும் நாள் நெருங்கி விட்டது என்பதே உண்மை….

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு; 99650 97801

பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு

1
puthiya-kalacharam-july-2015-front puthiya-kalacharam-july-2015-back
  • குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள்.
  • ஐந்து ரூபாய் விலையுள்ள லேஸ் சிப்சையும் பத்து ரூபாய் கோக்கையும் வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது அவர்களது வயிற்றையும்,  ஆளுமை வளர்ச்சியையும் அரித்துக் கரைத்து அவர்களை வெறும் தக்கைகளாகத் துப்பி விடும்.
  • துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், அவற்றின் பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

மெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையானது நுகர் பொருள் படையெடுப்பு. தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் வழியாக சிறுவர்களின் சிந்தனையில் பதிகின்றன இந்த துரித உணவு வகைகள்.  உடலையும் உள்ளத்தையும் மெல்லக் கொல்லும் நஞ்சாக ஊடுறுவுகின்றன.

துரித உணவுகள் தோற்றுவிக்கும் உடல் பருமன், ஆரோக்கியமின்மை, நோய்வாய்ப்படல் ஆகியவை மட்டுமல்ல பிரச்சினை; இவற்றுக்கு அடிமையாகும் சிறுவர்கள், உடலுழைப்பே இல்லாமல், விளையாட்டிலும் ஆர்வமிழந்து, டிஜிட்டல் உலகில் முடங்கிக் கொள்வதுடன், கட்டுக்கடங்கா பிடிவாதத்தையும் வன்முறைப் போக்கையும் வெளிப்படுத்துகிறார்கள். பிறந்த மண், மக்கள், பண்பாடு அனைத்திலிருந்தும் அந்நியப்படுவதுடன், அவற்றை இழிவானவையாகக் கருதி வெறுத்தொதுக்கவும் செய்கிறார்கள்.

நமது மரபு சார்ந்த ஆரோக்கியமான உணவுகள், தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதால், அவற்றின் உற்பத்தி நின்று போவதுடன், விவசாயம், சிறு தொழில், குடிசைத்தொழில் ஆகியவற்றைச் சார்ந்து வாழும் கோடிக்கணக்கான மக்களும் நிராதரவாகத் தூக்கியெறியப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டிருப்பது ஒரு நாடகம். அஜினோமோட்டோவும்,  இன்னும் பல அபாயகரமான ரசாயனப் பொருட்களும் இங்கே நூற்றுக்கணக்கான உணவுகளில் கலந்து விற்கப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள், காங்கிரசு – பா.ஜ.க கட்சிகள் அனைத்தும்  பன்னாட்டு முதலாளிகளுக்கு பாய்விரிக்கும் துரோகத்தினைத்  தொடர்ந்து செய்து வருகின்றன.

இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் விதமாக இந்த வெளியீட்டில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், ஒரு விச முறிவு மருந்தாக, இதனை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  • நெஸ்லே: ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு!
  • அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
  • மேகி நூடுல்ஸ்: பிரச்சினை காரியமா? முதலாளிகளின் காரியமா?
  • தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!
  • இந்து ஞானமரபிடம் அடிபணிந்த மெக்டோனால்ட்ஸ்!
  • பீட்சா வர்க்கம் நாசாமாக்கும் உணவுச் செல்வம்!
  • சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
  • மானம் கெட்டவர்களின் பானம் பெப்சி – கோக்!
  • முட்டைக்கு தடை: குழந்தைகளை கொல்லும் பா.ஜ.க பயங்கரவாதம்
  • செயற்கை இறைச்சி சுற்றுச் சூழலை காப்பாற்றுமா?
  • ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
  • இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

மைனர் லலித் மோடியும் மாமா பா.ஜ.கவும் – 2

0

.பி.எல் முறைகேடுகள் வெளியானதையடுத்து இந்தியாவை விட்டு ’பாதுகாப்புக்’ காரணங்களுக்காக ஓடிப் போன லலித்மோடியை இந்திய புலனாய்வு அமைப்புகள் துரத்துவது போல பாசாங்கு செய்தன. அவரைக் கைது செய்து தண்டிப்பது என்பது ஒரு பிரிவு முதலாளிகளோடு முடியக்கூடிய ஒன்றல்ல. அதனால் உளவு அமைப்புகளின் உண்மையான நோக்கம் மோடி மீண்டும் இந்தியா வரக்கூடாது என்பதே.

ப. சிதம்பரம், அருண் ஜேட்லி
ப.சிதம்பரம், அருண் ஜேட்லி – லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி

இதை மோடியின் எதிர் கோஷ்டியான சீனிவாசன் – ஜேட்லி கும்பல் உத்திரவாதம் செய்து கொண்டது. ப.சிதம்பரம் தனிப்பட்ட முறையில் அருண் ஜேட்லியின் நண்பராக இருந்ததாலும், காங்கிரசு லலித் மோடியால் சசி தரூர் விவகாரத்தில் விரலைச் சுட்டுக் கொண்ட ஆத்திரத்தில் இருந்தது. இதைத்தாண்டி அரசாங்கத்தின் அத்தனை கரங்களும் லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர எல்லா முயற்சிகளையும் எடுத்து வந்தன. இதுதான் மோடி குறித்த திருடன் – போலீஸ் விளையாட்டின் போக்கு.

லலித் மோடி ஒன்றும் சாதாரண பேருந்து பிக்பாக்கெட் திருடனில்லை என்பதால், அமலாக்கத்துறை உள்ளிட்டு இந்தியாவின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை லண்டனில் இருந்தவாறே ’திறமையாக’ எதிர் கொண்டார். இந்த இழுபறி போட்டியில் ஒரு திருப்பமாக லலித் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி லலித் மோடியுடனான தனது வெளிப்படையான தொடர்புகளை மழுப்பத் துவங்கிய சமயத்தில் 2013-ம் ஆண்டு ஜெய்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாரதிய ஜனதாவின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனிடம் லலித் மோடிக்கும் கட்சிக்கும் உள்ள கள்ளத் தொடர்புகள் பற்றிய கேள்விகளுக்கு ஆத்திரத்தோடு பதிலளித்தார் –

“யார் இந்த லலித் மோடி? அவர் ஒரு தலைமறைவுக் குற்றவாளி. அவரோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை”

சுஷ்மா சுவராஜ், பன்சூரி சுவராஜ்
சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் 7 ஆண்டுகளாக லலித்மோடியின் சட்ட ஆலோசகராக செயல்பட்டுள்ளார்

சரியாக ஒருவருடம் கழித்து 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மினாளினி மோடியின் கல்லீரல் புற்று நோய் சிகிச்சைக்காக லண்டனில் இருந்து போர்ச்சுகல் நாட்டில் உள்ள சம்பாலிமோடு மருத்துவ ஆராச்சி மையத்திற்கு லலித் மோடி சென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் தான் சுஷ்மா சுவராஜின் தாயுள்ளம் விழித்துக் கொள்கிறது. லலித் மோடியின் பாஸ்போர்ட்டை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முடக்கிய முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இங்கிலாந்து அரசு அவருக்கு பயண ஆவணங்கள் எதுவும் வழங்கக் கூடாதென்றும், அப்படி வழங்கினால் அது இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்திய அரசால் விசாரணைக்காக தேடப்படும் ஒரு நபரின் பயண ஆவணங்களுக்காக இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதிய சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சுஷ்மா சுவராஜின் மனிதாபிமானம் வெட்டியாக பொங்கவில்லை.

லலித் மோடி
பாரதிய ஜனதாவே ‘தேடப்படும்’ குற்றவாளி என்று அறிவித்த ஒருவர்

சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுஷால் லலித் மோடியின் நெருங்கிய நண்பர். மைனர் முதலாளியான லலித் மோடியின் திருவிளையாடல் காரணமாக எழும் சட்டப் பிரச்சினைகளை சுமார் 22 ஆண்டுகளாக கவுஷால் தான் கவனித்து வந்தார். சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் 7 ஆண்டுகளாக லலித்மோடியின் சட்ட ஆலோசகராக செயல்பட்டுள்ளார். ராஜ்தீப் சர்தேசாயிடம் லலித் மோடி வழங்கியுள்ள பேட்டியில், இவர்கள் இருவரும் தன்னிடம் காசு வாங்காமல் இலவச சட்ட ஆலோசனை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

நட்பினடிப்படையில் ’இலவச’ சட்ட ஆலோசனை – அதுவும் யாருக்கு? பாரதிய ஜனதாவே ‘தேடப்படும்’ குற்றவாளி என்று அறிவித்த ஒருவருக்கு – வழங்கிய தந்தையும் மகளும் சாதாரணர்கள் அல்ல. தில்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளில் தலையைக் காட்ட மணிக்கு சில லட்சங்களை வாங்கும் வக்கீல்கள். இதற்கு முன் யாருக்கும் ‘நட்பின்’ அடிப்படையிலோ மனிதாபிமானத்தின் அடிப்படையிலோ இலவசமாக சட்ட சேவை செய்த வரலாறும் இல்லை.

எனவே இவர்களுக்குள் உள்ள மறைமுகமான வியாபாரத் தொடர்புகள், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இன்ன பிற விசயங்களை சம்பந்தப்பட்டவர்களே வாயைத் திறந்து சொன்னால் தான் மக்கள் அறிந்து கொள்ள முடியும். நடப்பது பாரதிய ஜனதாவின் ஆட்சி என்பதால், வழக்கு விசாரணை என்பதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றாலும், பத்திரிகைகள் துருவியதில், சுஷ்மா சுவராஜின் கணவர் கவுஷாலின் உறவினர் லண்டனில் மேற்படிப்பு படிக்க லலித்மோடி உதவி செய்துள்ள விவரம் மட்டும் கிடைத்துள்ளது.

விவகாரம் வெடித்து அம்பலமானதும் வசுந்தராவுக்கும் சுஷ்மாவுக்கும் எதிராக இருந்த உட்கட்சி கோஷ்டிகள் துவக்கத்தில் கொஞ்சம் சலம்பிப் பார்த்தனர். எனினும், கட்சித் தலைமை உறுதியாக இவர்கள் இருவரின் பக்கமே நிற்பதைக் கண்டு தற்போது வாயடைத்துக் கிடக்கின்றனர். வசுந்தராவை நேரில் சந்திக்கச் சென்ற நிதின் கட்காரி, அவருக்கு  தமது கட்சி வழங்கியுள்ள உறுதியான ஆதரவை நேரில் தெரிவிக்கவே வந்ததாகவும், பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி
ஊழலின் காவலர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி

லலித்மோடி விவகாரம் குறித்து பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ஊழல் புகார்களுக்காக பதவி விலக நாங்கள் ஒன்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இல்லை, நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியாக்கும்” என்று கொக்கரித்துள்ளார்.

ஊழல் அற்ற அரசாங்கத்தை வழங்குவதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்த ஒரு கட்சி இப்படிச் செய்வது முறையா என்று முதலாளித்துவ பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. வசுந்தரா ராஜேவுக்கும் சுஷ்மா சுவராஜுக்கும் எதிராக கட்சியில் உள்ள கோஷ்டிகள் எவையெவை, அவற்றில் யாரெல்லாம் உள்ளனர், அவர்களின் கூட்டணிப் பலாபலன்கள் என்னவென்பதைப் பீறாய்ந்து இவர்களிருவருக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும், எப்போது எடுக்கப்படும் என்று கணிப்புகளை முன்வைத்து வருகின்றன.

மொத்த விவகாரத்தின் பின்னும் உள்ள அரசியல் சீரழிவையும், ஓட்டாண்டித்தனத்தையும் மறந்து விட்டு வெறுமனே இதில் உள்ள கிசுகிசு கிச்சன் கேபினெட் அரசியல் உள்குத்தை விளையாட்டாக சுருக்கும் மானங்கெட்ட வேலையில் முதலாளித்துவ பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன.  எந்தவொரு ஊழல் முறைகேட்டு புகார்கள் மற்றும் அது வெளியாவதை ஒட்டி எழும் பரபரப்புகள்  இந்தவிதமாக பரிலீக்கப்பட்டு அவற்றின் ஆயுட்காலம் ஒரு சில நாட்களோ ஒரு சில வாரங்களோ தான் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள பாரதிய ஜனதா மேல்மட்டத் தலைவர்கள், தெனவெட்டாக பேட்டியளித்துக் கொண்டுள்ளனர்.

மோடி - அதானி
பிரதமராக வெளிநாடுகளில் அதானி குழுமத்தின் விற்பனைப் பிரதிநிதியாக மோடி.

பத்திரிகையில் எழுதும் அறிஞர் பெருமக்கள் “இவ்வளவுக்கும் தூய்மையான நிர்வாகத்தை அளிக்கப் போவதாக வாக்களித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று மிகவும் ’சிக்கலான’ கேள்வி ஒன்றை எழுப்பி தங்களது அரசியல் ‘ஆராய்ச்சிக் கட்டுரைகளை’ நிறைவு செய்கின்றனர். ந.மோடி இதற்கு எப்போதோ பதிலளித்து விட்டார். அந்த பதிலின் அர்த்தம் விளங்காதவர்கள், ந.மோடியின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் அவரை நிழலாகத் தொடரும் கவுதம் அதானியிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். தவிர லலித்மோடி ஐ.பி.எல் சர்க்கசை நடத்தி கல்லா கட்டிக் கொண்டிருந்த போது அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத குஜராத் மாநில கிரிக்கெட் வாரியத்தின் அப்போதைய தலைவரே நரேந்திர மோடி தான்.

குஜராத்தின் முதல்வராக இருந்தவரை அம்மாநிலத்தை அதானி குழுமத்தின் லாப வேட்டைக்கு திறந்து விட்டவர் நரேந்திர மோடி. தற்போது பிரதமராக வெளிநாடுகளில் அதானி குழுமத்தின் விற்பனைப் பிரதிநிதியாக செயல்பட்டு வருவது முதலாளித்துவ ஊடகங்கள் அறியாத இரகசியமல்ல. அதே போல் முகேஷ் அம்பானி சன் தொலைக்காட்சியைக் கைப்பற்ற ராஜ்நாத் சிங் தீயாக வேலை செய்து வருவதும், அதற்காகவே சன் குழுமத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழை தடுத்து வைத்திருப்பதும் தொடர்பான விவரங்கள் சமீபத்தில் தான் ஊடகங்களில் வெளியாயின.

சட்டம், நீதி, நெறிமுறைகள் என்று சகலத்தையும் கிடைமட்டமாக கிடத்தி அவற்றின் மேல் மூத்திரம் பெய்துள்ளார் லலித்மோடி. அரசாங்க மட்டத்தில் தமக்குள்ள தொடர்புகளின் பலத்தைப் பொருத்து ஒவ்வொரு முதலளித்துவ கார்ட்டல்களும் சிண்டிகேட்டுகளும் குடிமைச் சமூகத்தின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு அற மதிப்பீடுகளையும் வல்லுறவுக்கு உட்படுத்தி வருகின்றன. முதலாளிகளின் சமூகத்தின் உள்ளேயே இருக்கும் வெவ்வேறு கும்பல்களின் நலனுக்காக, அந்த கும்பல்களின் ஆதரவு பெற்ற அரசியல் தரகர்கள் நடத்தும் ஆபாசக் கூத்து தான் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலின் தராதரம் என்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கும் அரசியல்வாதிகள் முன்பெல்லாம் கொஞ்சம் வெட்க உணர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இன்றோ எந்த புகாரையும் துடைத்துப் போட்டு விட்டு எந்த கூச்ச நாச்சமும் இன்றி திமிருடன் திரிகின்றனர். திருட்டு என்றால் அது இருட்டில் தான் நடக்க வேண்டும் என்று இருந்த பழைய நியதியை பாரதிய ஜனதா உடைத்தெறிந்துள்ளது. ஓட்டுக்கட்சி அரசியலுக்கு இருந்ததாக சொல்லப்பட்ட ’புனிதம்’ இன்று திரை விலக்கி தனது பல்லைக் காட்டுகிறது. அரசின் ஒவ்வொரு துறையும் முதலாளிகளின் சிண்டிகேட்டுகளுக்கு சேவை செய்யத் தான் இருக்கிறதே ஒழிய அவற்றுக்கு மக்கள் நலனின் மயிரளவுக்கும் அக்கறை இல்லை என்பது மெய்பிக்கப்பட்டு விட்டது.

இதற்கு மேலும் ”பாரதிய ஜனதாவை நம்பி வாக்களித்த அப்பாவிகளே….” என்று கட்டுரையை நிறைவு செய்ய வேண்டிய தேவை காலாவதியாகி விட்டது. அந்த நம்பிக்கையின் மேல் நரகலைப் பூசி மொழுகி நாட்கள் பல கடந்து விட்டன. ஒருவேளை இதற்கு மேலும் அந்த அப்பாவிகள் மௌனத்தைக் கடைபிடிப்பீர்களாயின் அதன் பொருள் அப்பாவித்தனமல்ல – அயோக்கியத்தனம்!

– தமிழரசன்

முதல் பகுதி : மைனர் லலித் மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க

புனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி

0

புனேவில் இயங்கிவருகிறது, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி (FTII). இதன் தலைவர் பதவியில் தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சவுகானை மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சகம் நியமித்திருக்கிறது. யார் இந்த சவுகான்? பா.ஜ.க-வில் 20 வருடமாக இருந்திருக்கிறார், பிரபல இந்தி தொடரான மகாபாரதத்தில் ‘யுதிஷ்டிரர்’ (தருமர்) வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதைத் தாண்டி கஜேந்திர சவுஹானை யாருக்கும் தெரியாது.

FTII போராட்டம்
சவுகான் நியமனத்தைக் கண்டித்து காலவரையற்ற போராட்டமும், வகுப்பு புறக்கணிப்பும் தொடர்கின்றன

இவருடைய நியமனத்தைக் கண்டித்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12-06-2015 முதல் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டமும், வகுப்பு புறக்கணிப்பும் 20 நாட்களாக தொடர்கின்றன. மாணவர்கள் மட்டுமன்றி கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், திரைத்துறையினரும், ஏற்கனவே சேர்மன் பதவி வகித்த அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநில புனே நகரில் 1960-களில் தொடங்கப்பட்டது தான் “ இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரி (Film & Television Institue of India)’. தன்னாட்சி நிறுவனமான இது மத்திய அரசின்  செய்தி மற்றும் ஒளிபரப்பத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. உலகளவில் கொஞ்சம் பெருமை பெற்ற இந்த நிறுவனத்தில் 30 ஆசிரியர்கள் மற்றும் 400 மாணவர்கள் படிக்கின்றனர். பேரா. யு.ஆர். அனந்த மூர்த்தி, அடூர் கோபாலகிருஷ்ணன், நசிருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், ஷியாம் பெனகல் போன்றவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து வந்தவர்கள்.

புனே திரைப்படக் கல்லூரி
பேரா. யு.ஆர். அனந்த மூர்த்தி, அடூர் கோபாலகிருஷ்ணன், நசிருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், ஷியாம் பெனிகல் போன்றவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து வந்தவர்கள்.

சரி, இப்படிப்பட்ட கல்வி நிறுவனத்தில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவருக்கு என்ன வேலை? நாட்டின் கல்வி-கலை நிறுவனங்களில் பார்ப்பனியத்தை திணிக்கும் முகமாகவே பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்த நியமனத்தை செய்துள்ளது. கஜேந்திரனின் தகுதியே அதை உரக்கக் கூவுகிறது.

போராடும் மாணவர்களின் குற்றச்சாட்டுகள் இவைதான்…

1. கஜேந்திர சவுகானுக்கும் FTII-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்நாள் வரை இங்குள்ள மாணவர்களுடனோ அல்லது துறை சார்ந்த கலைஞர்களுடனோ எந்தவித தொடர்புமே இல்லாமல் இருந்து வந்தவர்.

2. இங்கு கொடுக்கப்படும் பயிற்சி முறைகளைப் பற்றி இவருக்கு எந்த விதமான அனுபவமும் இல்லை, அறிவுமில்லை; மற்றும் இங்கு நடந்த எந்த நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பெறவோ இல்லை தலைமை தாங்கியதோ இல்லை.

3. கலைத்துறையைப் பற்றி எந்தக் கண்ணோட்டமோ அல்லது கல்விமுறையோ எதுவுமே இல்லாத  இவரால் எந்தப் பங்களிப்பையும் இந்த நிறுவனத்திற்கோ அல்லது மாணவர்களுக்கோ தரமுடியாது.

4. மோடியின் நிழலுருவம் இந்த வளாகத்துக்குத் தேவையில்லை

கஜேந்திர சவுகான்
பிரபல இந்தி தொடரான மகாபாரதத்தில் ‘யுதிஷ்டிரர்’ (தருமர்) வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதைத் தாண்டி கஜேந்திர சவுஹானை யாருக்கும் தெரியாது.

போராடும் மாணவர்களின் தரப்பு மத்திய அரசின் தகவல் மற்றும் செய்தித் துறைக்கு இது குறித்து புகார் மனு அனுப்பியிருந்தும் இதுவரை அங்கிருந்து எந்த முறையான பதிலும் வரவில்லை. மாறாக போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்று சவுகானுடைய நியமனத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

FTII-ன் சேர்மன் பதவிக்கு சவுகானை விடத் தகுதியற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை இதுவரை அரசியலே பேசாத பல அறிஞர் பெருமக்கள், திரைத்துறை கலைஞர்கள் கூட சுட்டிக் காட்டுகிறார்கள்.

பா.ஜ.க-வின் அரசியல் பின்னணியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உள்ளே நுழைந்த சவுகான் தன்னுடைய தகுதியின்மை குறித்த குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்காமல் வெற்று வாய்ச்சவடாலாக “என்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்த நினைத்திருந்தால் என்னால்  நாடாளுமன்ற வேட்பாளராகக் கூட போட்டியிட்டிருக்க முடியும்; மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வாருங்கள்! நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்; மேலும் தயைகூர்ந்து எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று திமிராகவும் அதே சமயம் பம்மியும் பதிலளித்துள்ளார். கெஞ்சுவதைப் போன்று கொல்வது பாசிஸ்டுகளின் உத்தி.

முன்னதாக, மோடிக்கு சொம்படித்து ஒரு மொக்கையோ மொக்கை குறும்படம் எடுத்து பிரபலமானவர் சைலேஷ் குப்தா FTII-ல் கவுன்சில் உறுப்பினராக்கப்பட்டார். “Shapath Modi ki ”(மோடியின் சபதம்) என்ற குறும்படத்தில் மோடி டீ-பாயாக ஆரம்பித்து PM-பாயாக ஆனால் எப்படியெல்லாம் செயல்படுவார் என்பதை முன்வைத்து படத்தை எடுத்து மோடியின்  இதயத்தில் இடம்பிடித்தார் அவர்.

அந்தப் படத்தைப் பார்த்து திரைப்பட உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. ஆனால், சைலேஷ் குப்தா இப்போது திரைப்படக் கல்லூரி கவுன்சில் உறுப்பினர்.

’ஜெய் பீம் காம்ரேட்’ , ‘வார் அண்ட பீஸ்’, ‘பாம்பே அவர் சிட்டி’ ‘ இன் த நேம் ஆஃப் காட்’ போன்ற ஆவணப் படங்களை இயக்கி தயாரித்த ஆனந்த் பட்வர்தன் கூறும் போது  “இந்த நிறுவனத்தைக் காவி மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் இதைப் பார்க்க முடியும்; நாடு முழுவதையுமே காவி மயமாக்க முற்படும் போது இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சவுகான் நியமனத்தை பற்றி அம்பலப்படுத்துகிறார்.

கண்டன ஆர்ப்பாட்டம்
சவுகான் நியமனத்தைக் கண்டித்து கேரளாவில் ஆர்ப்பாட்டம்

திரைத்துறை இயக்கத்தில் இறுதியாண்டு படிக்கும் ஒரு மாணவர்  “கஜேந்திர சவுகானுக்கு அனுபவமோ, இயல்பான தலைமைத்துவமோ அல்லது தரமான படைப்புக்களோ இல்லை..மாறாக முற்றிலும் இவருடைய பதவிக்குப் பின்னால் பா.ஜ.க என்னும் அரசியல் சாயம் மட்டுமே உள்ளது” என்கிறார்.

FTII- மட்டுமல்ல, இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக பார்ப்பன வெறிபிடித்த சுதர்சன ராவ் என்ற கோமாளியை கடந்த ஆண்டு நியமனம் செய்தனர். இந்த திமிர் பிடித்த முட்டாள் வருணாசிரம தர்மம் என்பது சரியானதே என்று நியாயப்படுத்துவதுடன், ஆர்.எஸ்.எஸ்-உடன் நேரடித் தொடர்புடைய ’இதிகாஸ் சங்காலன் யோஜனா’ என்ற அமைப்பின் தலைவராக ஆந்திராவில் இருந்து செயல்பட்டு வந்தவர். மேலும் இஸ்லாமியர்கள் ஆண்ட காலம் இந்துக்களுக்கு இருண்ட காலம் என்ற பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நடிகை ஸ்மிருதி இரானியின் கல்வி மோசடி குறித்த ஒரு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதாவது ஒரே கால கட்டத்தில் பி.ஏ படித்ததாக ஒரு வேட்பு மனுவிலும், பி.காம் படித்திருப்பதாக வேறு ஒரு வேட்பு மனுவிலும் தாக்கல் செய்திருக்கிறார். ஐ.ஐ.டி-ல் APSC அமைப்பைத் தடை செய்த அமைச்சகம் இவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

சி.பி.எஸ்.ஈ பள்ளிகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவிற்கு, ஆர்.எஸ்.எஸ்-ன் வித்யாபாரதி எனும் காவி கல்வி நிறுவன கோஷ்டியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தீனா நாத் பத்ராவை நியமனம் செய்தனர். இவர் தான் “லார்ட் கணேஷ்’-க்கு அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து யானை முகத்தைப் பொருத்தியதாக ஒரு கைப்பிள்ளை காமடியை அவிழ்த்து விட்டவர். இது தொடர்பான புத்தகம் “தேஜோ மயி பாரத்” குஜராத்தில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகத் திணிக்கப்பட்டுள்ளது.

இந்தித் திரைப்பட சென்சார் போர்டில் பாஜக ஆதரவு பெற்ற பகலாஜ் நிகலானியை நியமனம் செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-ல் பின்னணி உள்ள இவரும் கஜேந்திர சவுஹான் நியமனத்தை ஆதரித்து பேசி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்காக ’Har Har Modi, Ghar Ghar Modi’

என்ற வீடியோவைத் தயாரித்துப் பிரச்சாரம் செய்தவர்தான் இந்த நிகலானி. இந்தியத் திரைத்துறையில் முற்போக்குப் படங்கள் வருவதற்கான ஒரு சில சாத்தியக்கூறுகளையும் இனி சென்சார் போர்டு தடை செய்யும் அபாயம் உள்ளது.

சவுகான் நியமனம் - கண்டன போராட்டம்
“சவுகான் திரும்பிப் போ”

கோயாபல்ஸுகள் (ஹிட்லரின் அமைச்சர்) வந்துவிட்டால் அறிவுக்கு அங்கே என்ன வேலை? கல்வி நிறுவனங்களில் பார்ப்பனியத்தை திணித்து விட்டால் மக்களை இந்துமதவெறி அரசியலுக்குள் அணிதிரட்டுவது சுலபம் என்று பார்ப்பன இந்துமதவெறியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் விளைவு அவர்கள் நினைப்பதன் எதிர் விளைவாகவே இருக்கும் என்பது நிச்சயம். இங்கே கூட பாருங்கள், பூனா திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பா.ஜ.க, மோடி கும்பலுக்கு எதிராக மாறிவிட்டனர். இந்த புதிய தலைமுறை கலைஞர்கள் நாளை படமெடுக்கும் போது அது இந்துத்துவாவின் உச்சிக் குடுமியை பிடித்து உலுக்குவது உறுதி.

இது தொடர்பான செய்திகள்

பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்

2

(புதிய கலாச்சாரம் அக்டோபர் 2003 இதழில் வெளியான கட்டுரை)

சு விவகாரம் என்பது முசுலீம் அடிப்படை வாதத்தை எதிர்க்கும் உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதிதான்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவேந்திர ஸ்வரூப்.

அமெரிக்காவையும் உள்ளிட்டு உலகமே மாட்டுக்கறியை உண்ணும் போது, முசுலீம் எதிர்ப்பில் மாட்டு விவகாரத்தை எப்படி நுழைக்க முடியும்? இந்து மதவெறியர்களின் இந்திய அனுபவம் உலக அளவிலும் மாட்டு விகாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. “இந்துக்கள் புனிதமாக வழிபடும் பசுக்களை முசுலீம்கள் வேண்டுமென்றே கொல்கிறார்கள்” என்ற இமாலயப் பொய் ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குள்தான் புனையப்பட்டிருக்கிறது.

“இந்துக்களில் ஒரு சில பிரிவினர் பசுக்களை வழிபடுவதால் அவற்றை வெட்டக் கூடாது” என்று முகலாய மன்னர்களான பாபரும், அக்பரும் ஆணையிட்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ் என்ற கிறுக்குக் கூட்டம் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்று அஞ்சி அவர்கள் அதைச் செய்யவில்லை. சாதி இந்துக்களின் நம்பிக்கைகளை மதிப்பதன் மூலம் அவர்களது ஆதரவைப் பெறுவதற்காகவே இதைச் செய்திருப்பார்கள்.

கோபூஜை
கோபூஜை செய்யும் பா.ஜ.க.வின் ராஜ்நாத் சிங் : பசு மாட்டுக் கொம்புகளின் மேல் சுழலும் பா.ஜ.கவின் அரசியல் உலகம்.

காலனிய ஆட்சியில் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உதவும் வகையில் இந்திய தேசியவாதிகள் (காங்கிரசையும், இந்து மதவெறியர்களின் மூதாதையரையும் உள்ளிட்டு) பசுவை வைத்து முசுலீம்களை எதிர்ப்பதும், பார்ப்பனீய தேசிய கருத்தியலைப் பரப்புவதும் மெல்ல மெல்ல நடந்தேறியது.

1882-ல் ஆரிய சமாஜத்தின் நிறுவனர் தயானந்த சரஸ்வதியால் பசு காக்கும் சங்கம் முதன்முறையாகத் துவங்கப்பட்டது. வட மாநிலங்களில் மகாராஜாக்கள், காங்கிரசைச் சேர்ந்த பண்ணையார்கள் ஆதரவுடன் பசு பாதுகாப்பு சமிதிகள் பரவத் துவங்கின. இதே காலத்தில் கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் முதன் முறையாகப் பசுவை வைத்து கலவரங்கள் நடந்தன. 1893-ல் ஜூலை பக்ரீத் பண்டிகையின் போது அசாம்கார் முசுலீம் மக்களை அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த இந்து மேல்சாதி வெறியர்கள் தாக்கினர்.

முசுலீம்கள் தமது உயிரையும், உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஆவணத்தில் பசுக்களைக் கொல்ல மாட்டோமெனக் கையெழுத்திடுமாறு மிரட்டப்பட்டதால 1893-ல் கோரக்பூர் ஆணையர் எம்.எல்.பெர்ரார் குறிப்பிட்டார். 1917-ல் ‘பசுக் கலவரங்கள் மிக மோசமாய் நடந்தன. பார்ப்பன, ராஜ்புத், பூமிகார் ஆகிய மேல்சாதி இந்து வெறியர்கள் 30,000 பேர் பீகாரின் ஷாபாத் மாவட்ட முசுலீம்களை வேட்டையாடினர். 1947 பிரிவினையின்போது நடந்த கலவரங்களுக்கு பசுப்பிரச்சனை காரணமல்ல என்றாலும் அதன் பின்னும் இன்று வரையிலும் ஏராளமான கலவரங்கள் இப்பிரச்சனையை வைத்து நடந்திருக்கின்றன. பசு என்றொரு விலங்கிற்காக முசுலீம் மக்கள் அஞ்சி வாழ்வது என்ற நிலையைத்தான் இந்து மதவெறியர்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர்.

பசுவதைத் தடைச்சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வலியுறுத்தி 1966-ல் நாடாளுமன்ற முற்றுகையை நிர்வாண சாமியார்கள் நடத்தினார்கள். போலீசு துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் இறக்குமளவு பெரும் கலவரமாய் நடந்தது.

இந்தக் கலவரத்தின் போது காங்கிரசின் அனைத்திந்தியத் தலைவராக இருந்த காமராசரின் வீடும் நிர்வாண சாமியார்களால் தாக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம் துலினா கிராமத்தில் உயிரோடு பசுவின் தோலை உரித்ததாக வதந்தியைப் பரப்பி, 5 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்து உயிரோடு கொளுத்தினர். இதை “மனிதனின் உயிரைவிட பசுவின் உயிர் மேலானது” என்று கூறி இந்துவெறி பாசிஸ்டுகள் நியாயப்படுத்தினர்.

இவ்வாண்டு கூட மத்தியப்பிரதேசத்தின் கான்ஞ்பசூடாவில் ஒரு பசு கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பி முஸ்லீம்களுக்கெதிராக பெரும் கலவரம் நடந்தது. சட்டமன்றத் தேர்தலில், “பசுவின் புனிதம் காப்பது யார்?” என்று காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அங்கு போட்டி நடக்கிறது. முதலமைச்சர் திக் விஜய் சிங்கோ இந்தியா முழுவதும் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டுவர பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம் எழுதினார். வாஜ்பாய் அரசும் அதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. காங்கிரஸ் தவிர ஏனைய எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பினால் மசோதாவை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டுப் பிரிவு 48-ல் பசுவதையைத் தடை செய்வது குறித்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 1958-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பொன்றில் பிரிவு 48-ன் படி தடைச்சட்டம் வேண்டுமெனக் கூறப்பட்டது. 1979 ஜனதா அரசாங்கத்தில் கூட ஒரு தனிநபர் தீர்மானம் விவாதித்து நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், எதிர்ப்பு காரணமாக சட்டமாக வரவில்லை. அதேசமயம் தற்போது 17 மாநிலங்களில் முழுமையாகவோ, பகுதியாகவோ பசுவதைத் தடைச்சட்டம் அமலில் இருக்கிறது. மாடுகளைப் பராமரிக்க முடியாமல் வெட்டியாக வேண்டுமென்ற யதார்த்த நிலை காரணமாக இச்சட்டத்தை அம்மாநிலங்களிலேயே அமல்படுத்த முடியாமலிருக்கிறது.

பா.ஜ.க பசு வதை தடைச் சட்டம்உதாரணமாக, தடைச்சட்டம் இல்லாத கேரள மாநிலத்தில் தென்னிந்திய மாடுகள் அன்றாடம் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகி விட்டது. இதனால்தான் கேரளம், மேற்கு வங்கத்தில் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டுமென்ற வினோபா பாவே வலியுறுத்தினார். 1979-ல் எம்.ஜி.ஆர் அரசு பசுக்களை வெட்டவும், இறைச்சி ஏற்றுமதிக்கும் தடை செய்து உத்தரவு போட்டது. இவ்வுத்தரவைச் சட்டமாக மாற்றுவதற்குள் அவர் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. இன்றும் மாடுகளை கேரளாவுக்குக் கொண்டு செல்லுவதை எதிர்த்து தமிழக இந்து மதவெறி அமைப்புகள் அரசு உதவியுடன் அவ்வப்போது தொல்லை செய்கின்றன.

80-களில் ஆர்.எஸ்.எஸ் உடன் இணங்கி வந்த இந்திராகாந்தி, 82-ல் அனைத்து மாநில அரசுகளும் தடைச்சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமெனக் கடிதம் எழுதினார். இவையெல்லாவற்றையும் விட தற்போது பா.ஜ.க அரசு கொண்டு வர முயலும் சட்டத்தின் விதிகள் பசுவை வைத்து மனிதனை வதைக்கும் பார்ப்பனிய இந்து மதவெறியின் கோர முகத்தைத் தோலுரிக்கிறது.

கடந்த காலத்தில் மாடுகளை மனிதாபிமானமற்ற முறையில் வதைத்து வரும் நிலை இன்றும் தொடருவதாகக் கவலைப்படும் இம்மசோதா, இதனால் மனித-மாடு விகிதத்தில் மாடுகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது குறித்தும் கண்ணீர் வடிக்கிறது. குறிப்பாக, பசுக் கொலையைத் தடுத்து நிறுத்தவும், மாட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்யவும் மசோதா கோருகிறது. மேலும், மாநில அரசு, ஊராட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட பசுக்களைப் பராமரிக்க வேண்டுமெனவும் கோருகிறது.

அடுத்து, இந்தத் தடைச் சட்டம் பசுவுக்கு மட்டுமல்ல, காளைகளுக்கும் பொருந்தும். ஆனால், எருமைகளைக் கொல்லத் தடை இல்லை. எண்ணிக்கையில் பசுவை விடக் குறைவாக இருந்த போதும் இந்திய பால் உற்பத்தியில் பெரும்பகுதியை வழங்கும் ‘கோமாதா’ எருமைதான். எனினும் தோலின் நிறம் கருப்பு என்பதால் சட்டத்தில் ஆரிய நிறவெறி எருமைக்கு காட்டவில்லை.

இச்சட்டத்தின்படி மாடுகளைக் கொல்வது மட்டுமல்ல, காயம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது, சித்திரவதை செய்வது, தெரிந்தே கைவிடுவது, தெரிந்தே நோயுடன் வாழ விடுவது ஆகியவையும் குற்றங்களே. இதன்படி மாட்டைக் கம்பு, சவுக்கால் அடிப்பது, மாட்டைக் கவனிக்காமல் அலையவிடுவது ஆகியவையும் குற்றமாகக் கருதப்படும். இச்சட்டத்திற்கு உட்பட்டு மாடுகளை வைத்திருப்போர் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பசு வதை தடைச்சட்டம்
தடைச்சட்டம் இல்லாத கேரள மாநிலத்தில் தென்னிந்திய மாடுகள் அன்றாடம் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகி விட்டது.

சட்டத்தை மீறுவோருக்கான தண்டனை விவரங்கள் இச்சட்டத்தின் முக்கியமான பகுதியாகும். இதன்படி மாடுகளைக் கொல்பவருக்கும், கொலை செய்யத் தூண்டுபவருக்கும் 2 வருடம் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும், கொல்லப்படும் ஒவ்வொரு மாட்டுக்கும் ரூ 10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். மாட்டுக்குக் காயம் ஏற்படுத்துபவருக்கும் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வழக்கு போடவும், நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை உதவி ஆய்வாளருக்குக் குறையாத அதிகாரிகளுக்கும், அல்லது அரசு பரிந்துரை செய்யும் எந்த ஒரு நபருக்கும் அதிகாரம் உண்டு. அதாவது, அரசு அதிகாரிகள் மட்டுமல்ல; இந்து முன்னணி, “கோ ரட்சண சமிதி” போன்றவற்றைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காலிகளை அரசு பரிந்துரை செய்தால், இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கும் வழங்கப்படும்.

இவர்கள் மாடு தொடர்பாக எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நுழையவும், சோதனை செய்யவும், வண்டிகளை பரிசோதிக்கவும், மாடுகள் வெட்டுக்குப் போவதாகச் சந்தேகித்தால் அவற்றைக் கைப்பற்றவும் அதிகாரம் உண்டு. இச்சட்டத்தின்படி இவர்கள், ‘நல்லெண்ணத்துடன்’ எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து இவர்கள் மீது வழக்கோ, ஏனைய நீதித்துறை நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாது.

ஆக, இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும்போது மத மாற்றத் தடைச் சட்டம் போல பார்ப்பன இந்துமத வெறியர்கள் தங்களை எதிர்ப்பவர்களை ஏதோ ஒரு பொய் அல்லது அற்ப காரணத்தைச் சொல்லி சிறை வைக்க முடியும். மாடு – விவசாயம், பால், தொழில் என – பல்வேறு தொழில்களோடு சம்பந்தப்பட்டிருப்பதால் போலீசுக்கு மாமூல் வருவாய் பெருகும். காக்கி – காவி கூட்டணி உறுதிப்படும். முக்கியமாக, இச்சட்டத்தின்படி முழு இந்திய சமூகத்தையும் தண்டிக்க முடியும்.

பால்சுரக்க ஊசிபோடும் பால்காரர், மாட்டுக்கு வைத்தியம் பார்க்க வசதியில்லாத விவசாயி, வண்டி மாடுகளை அடிக்கும் வண்டிக்காரர், அடிமாடுகளை விற்கும் விவசாயிகள், வாங்கி விற்கும் வியாபாரிகள், வெட்டும் தொழிலாளிகள், கறிக்கடைக்காரர்கள், தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டிருப்போர் ஆகியோர் அனைவருமே கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகி விடுவார்கள்.

பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!

– பாலன்

– அக்டோபர் 2003, புதிய கலாச்சாரம்

மைனர் லலித் மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க

3

பாரதிய ஜனதா கட்சி முதலாளிகளின் கட்சி என்பதை புதிதாக கண்டு பிடித்துச் சொல்லத் தேவையில்லை. இந்துத்துவ இயக்கங்களின் மூளை பார்ப்பனியம் என்றால் அவற்றின் இதயம் பரிவார இயக்கங்களின் புரவலர்களாகிய பனியாக்கள். பனியா முதலாளிகளுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் உள்ள நேரடி உறவு பழைய விசயமென்றாலும், அது இப்போது கள்ள உறவாக சந்தி சிரிப்பது கொஞ்சம் புதிய விசயம்.

மன்மோகன் சிங் அரசின் நிலக்கரி ஊழலை “கோல்கேட்” என்று அழைத்த ஊடகங்களை தற்போதைக்குப் பிடித்தாட்டுவது ’லலித்கேட்’ எனப்படும் மோடி அரசின் ஊழல். லலித்கேட் ஊழலைப் புரிந்து கொள்ள அதன் வரலாற்றை கொஞ்சம் பார்த்து விடுவோம்.

கிரிக்கெட் பணமரம்
கிரிக்கெட்டை பணம் காய்ச்சி மரமாக மாற்றுவது என்ற முதலாளிகளின் ’ஆராய்ச்சி’.

இந்தியர்களின் கிரிக்கெட் பித்தை தூண்டி விட்டு முக்தி நிலை அடைய வைத்த அதே தொண்ணூறுகளில்தான் ‘விளையாட்டை’ உருவியெறிந்து விட்டு கிரிக்கெட்டை பணம் காய்ச்சி மரமாக மாற்றுவது எப்படியென்ற ’ஆராய்ச்சி’யும் முதலாளிகளால் துவங்கப்பட்டது.

கூடவே பிரபலமாகி வந்த தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி முதலாளிகள், விளையாட்டை நேரலையாய் ஒளிபரப்புவது மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் விளம்பர வருவாயை இனம் கண்டனர். இதில் பங்கை சுருட்ட ருப்பர்ட் முர்டாச் துவங்கி இந்திய முதலாளிகள் வரை போட்டா போட்டியில் இறங்கியிருந்தனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது பழைய மன்னர் பரம்பரையிலிருந்து அரசியல் கட்சிகளில் தலைவர்களாய் வளர்ந்தவர்கள் மற்றும் புதிய தரகு முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு உண்டு களித்திருக்கும் ரோட்டரி கிளப்பாக இருந்தது. கோடிக்கணக்கான இந்தியர்களிடம் இரசனையை திணித்து கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் இந்த வாரியம் அரசினுடையது அல்ல. போட்டிகளை நேரலையாய் ஒளிபரப்புவது உள்ளிட்டு கிரிக்கெட் விளையாட்டின் வர்த்தகத்தை கட்டுப்படுத்து வரையிலான அனைத்து நிதி நடவடிக்கைகளும் இயல்பாகவே இரகசியத் தன்மையோடும் முத்லாளிகளின் ஏக போக கூட்டமைப்புகளால் (Cartels) கட்டுப்படுத்தக் கூடியதாகவுமே இருந்தது.

ஐ.பி.எல் பணமழை
முதலாளிகளிடையே சிண்டிகேட்டுகள் – கூட்டணிகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்ககான கோடிரூபாய்கள் கருப்பிலிருந்து வெள்ளையாகவும், கொள்ளையாகவும் புரண்டது.

மேற்கண்ட பின்புலத்தில் நேரலை ஒளிபரப்பு உரிமையைக் கோரி போட்டியில் இறங்கிய ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா, அப்போட்டியில்  தோற்றுப் போகிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பாடம் புகட்ட நினைத்த சுபாஷ் சந்திரா 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் லீக் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உள்நாட்டு மட்டும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் தொழிலின் லாபத்தை தங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து ஒருவர் பறிக்க முயல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத பி.சி.சி.ஐ, பல்வேறு வழிகளில் வீரர்கள் ஐ.சி.எல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்தது. அதே நேரம், அதே வடிவத்திலான போட்டி அமைப்பாக ஐ.பி.எல்லை அறிமுகம் செய்கிறார்கள் – அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பாரதிய ஜனதாவின் அரசியல் செல்வாக்கின் பின்புலத்தில் திடீர் வளர்ச்சியை அடைந்திருந்த லலித் மோடியின் பொறுப்பில் ஐ.பி.எல் விடப்பட்டது.

ஏற்கனவே பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் இருந்த பரம்பரைப் பணக்காரர்களின் பழைய ஏக போக கூட்டமைப்பை உடைத்து தனக்கென்று புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியிருந்த லலித் மோடி, பழைய முதலைகளின் ஆத்திரப்பார்வையினூடாகவே 2008-லிருந்து 2010 வரையிலான ஐ.பி.எல் போட்டிகளை நடத்தினார். ஐ.பி.எல்லை தனது சிந்தனையின் குழந்தை (Brain Child) என்று விவரித்த லலித் மோடி, அதனை தெள்ளத் தெளிவாக கொள்ளை நடத்துவதற்கான ஒரு அரங்காக வடிவமைத்தார். கேளிக்கை நிறைந்த அவரது பிரம்மாண்டமான வாழ்க்கையிலிருந்து கிடைத்த கிரியா ஊக்கிகளின் அதை சாத்தியப்படுத்தியது என்றாலும் அது தவறில்லை.

ஐ.பி.எல் மோசடி
திருடர்களின் போட்டியே ஐ.பி.எல் திருட்டை காட்டிக் கொடுத்து விட்டது.

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு அணிகளின் உண்மையான முதலாளிகள் யார், அணிகளை வாங்கவும், வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் புரட்டப்படும் தொகையின் கணக்கு என்ன, எந்த அணியில் யார் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர் போன்ற விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டன. முதலாளிகளிடையே சிண்டிகேட்டுகள் – கூட்டணிகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்ககான கோடிரூபாய்கள் கருப்பிலிருந்து வெள்ளையாகவும், கொள்ளையாகவும் புரண்டது.

இந்தக் கொள்ளையின் குருஜி லலித் மோடி, பலருக்கும் கேமென் தீவுகள் உள்ளிட்ட வரியில்லா சொர்க்கங்களில் இருந்து மர்மமான வழிகளில் தருவிக்கப்பட்ட கருப்புப் பணத்தை ஐ.பி.எல் அணிகளில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரம் ஆரம்பத்திலேயே அம்பலமாகியது. லலித்மோடியின் திடீர் ’வளர்ச்சியைப்’ பார்த்து குமைந்து கொண்டிருந்த பழம் பெருச்சாளிகளே இந்த ஊழலை உலகறியச் செய்தனர். அதாவது திருடர்களின் போட்டியே திருட்டை காட்டிக் கொடுத்து விட்டது.

லலித் மோடி அடித்த கொள்ளையின் அளவு ரூ 1700 கோடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டு அமலாக்கத்துறை, சி.பி.ஐ என்று அரசின் பல்வேறு புலனாய்வுத் துறைகளின் விசாரணை வளையத்திற்குள் அவர் கடமைக்காக கொண்டு வரப்பட்டார். அதாவது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெளிப்படையாக நடந்த கொள்ளை என்பதாலும், பங்கு சண்டையாலுமே இந்த சட்டப்பூர்வ விசாரணை நடந்தது.

மூன்றாவது ஐ.பி.எல் சீசன் 2010 ஏப்ரல் 24-ம் தேதியன்று முடிவடைந்த சில நாட்களிலேயே லலித்மோடியின் மீதான புகார்கள் பட்டியலிடப்பட்டு ஒரு நீண்ட விளக்க கடிதம் ஒன்றை பி.சி.சி.ஐ அனுப்பியது. இதுவும் போட்டி மற்றும் வேறு வழியின்றி நடந்த ஒரு விவகாரம். இறுதியில் 2010 மே மாதம் இங்கிலாந்துக்கு ஓடிய லலித் மோடி இன்று வரை ’பாதுகாப்புக்’ காரணங்களை முன்னிட்டு இந்திய மண்ணை மிதிக்க இந்திய அரசு மற்றும் பா.ஜ.க, காங்கிரசு கட்சிகளின் அனுமதியோடு மறுத்து வருகிறார்.

மோடி குழுமங்களின் தலைவர் கே.கே மோடியின் மூத்த மகனான லலித்மோடி, முதலாளிகளின் மட்டத்தில் ஒரு மைனராக அறியப்பட்டவர். முதலாளிகளின் சமூகத்தின் ’தோல்வியுற்ற’ முதலாளியாகவும் அறியப்பட்ட லலித் மோடியை முதன் முதலாக உலகம் அறிந்து கொண்டது அவர் அமெரிக்காவில் கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட போது தான்.

லலித் மோடி - மினால் மோடி
சொத்துக்கு சேதாரம் வரக்கூடாது என்று இந்த ‘கலகத்தை’ ஏற்றுக் கொண்டனர்.

1985-ம் ஆண்டு அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவராக லலித்மோடி இருந்த போதுதான் மேற்கண்ட போதை திருவிளையாடல் காதை நடந்தேறியது. தந்தை கே.கே மோடி தனது செல்வாக்கான அமெரிக்க தொடர்புகளை வைத்து மகனை மீட்டு இந்தியா அழைத்து வந்தார்.

மோடி குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி தனது தாய் பினா மோடியின் தோழியும், தன்னை விட 10 வயது மூத்தவருமான மினாளை திருமணம் செய்து கொண்டார் லலித் மோடி. மைனர் மோடியின் மைனர் தனங்களை அனுமதித்த மோடி குடும்பம், அதிகாரப்பூர்வ மணத்திற்கு வட இந்திய பார்ப்பனிய கட்டுப்பெட்டித்தனத்தை கைவிடவில்லை. இருப்பினும் சொத்துக்கு சேதாரம் வரக்கூடாது என்று இந்த ‘கலகத்தை’ ஏற்றுக் கொண்டனர்.

என்றாலும் லலித் மோடி துவங்கிய தொழில்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தன. அப்போது தோல்வியடைந்த மைனராக இருந்த லலித் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. ஒரு முதலையின் சோகம் இன்னொரு முதலைக்குத்தான் தெரியும்.

2003-ம் ஆண்டு ராஜஸ்தானில் பதவிக்கு வந்த பாரதிய ஜனதாவின் வசுந்தரா ராஜே, லலித்மோடியின் மனைவியான மினாளின் நெருங்கிய தோழி. தன்னைப் பார்த்துச் சிரிக்கும் சக முதலாளிகளின் முன் தனது திறமையை நிரூபித்துக் காட்ட சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த லலித் மோடி ராஜஸ்தானுக்கு தனது முகாமை மாற்றுகிறார். நாளொன்றுக்கு 1,25,000 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படும் தாஜ் குழுமத்திற்குச் சொந்தமான ’ராம்பாக் மாளிகை’ ஹோட்டலின் இளவரசர் சூட்டில் தங்கிய லலித்மோடியை “சூப்பர் முதலமைச்சர்” என்றே அன்றைக்கு அழைத்தனர். ஆக “மக்கள் முதல்வருக்கு” முன்னாடியே ராஜஸ்தானில் இந்த வரலாற்றை பா.ஜ.க ஆரம்பித்திருந்தது. என்ன இருந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே புஷ்பக் விமானத்தை கண்டுபிடித்த இந்து ஞான மரபல்லவா!

சூப்பர் முதலமைச்சர்
வசுந்தரா ராஜே சிந்தியாவின் “சூப்பர் முதலமைச்சர்” ஆக இருந்தார் லலித் மோடி

மாநில அரசாங்கத்தில் நகரும் எந்த ஒரு கோப்பும் லலித்மோடியின் பார்வைக்கு வந்த பின்னரே நகர்ந்தன. அரசாங்க அதிகாரிகள் கோப்புகளோடு ராம்பாம் ஹோட்டலின் முன்னே வரிசை கட்டினர். பெரும் தரகு முதலாளிகள் பலரை மாநிலத்திற்கு அழைத்து வந்த மோடி, அவற்றிற்கான நிலக் கையகப்படுத்தலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மாநிலத்தின் மதுக் கொள்கைகளைத் தளர்த்தி சாராய வணிகத்தில் தனது மறைமுக முதலீடுகளைக் கொட்டினார். ஹெரிடேஜ் சிட்டி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிழல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் துவக்கிய லலித்மோடி, ராஜஸ்தானின் பாரம்பரிய பெருமை மிக்க கோட்டைகளை வாங்கிக் குவித்து ஓட்டல்களாக அவற்றை மாற்றத் துவங்கினார்.

ராஜஸ்தானின் சுரங்கங்கள் பலவற்றை வசுந்தரா ராஜே சிந்தியாவின் உதவியோடு கைப்பற்றிய லலித் தனது நிழல் நிறுவனங்களைக் கொண்டு அவற்றில் முதலிடச் செய்து, மாநிலத்தின் சுரங்கத் தொழிலைக் கட்டுப்படுத்தினார். முதல்வரின் மகனோடு தொழில் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு ஐந்தாண்டுகளில் மொத்த மாநிலத்தையும் பா.ஜ.கவின் உள்ளூர் தளபதிகளின் துணையோடு மொட்டையடித்தார்.

வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங்கோடு நெருக்கமான தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட லலித் மோடி, அதன் மூலம் சிக்கலான வழிகளில் கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டுள்ளார். தலையைக் கிறுகிறுக்க வைக்கும் இந்த நிதி சுழற்சி நடவடிக்கையை புரிந்து கொள்ள நியாந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் என்ற துஷ்யந்தின் நிறுவனத்திற்கும் மோடியின் அனந்தா ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பரிவர்த்தனைகளைக் குறிப்பிடலாம்.

துஷ்யந்த் சிங்
ராஜேவின் மகன் துஷ்யந்தின் நியாந்த் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் கொடுத்தார் லலித் மோடி.

அனந்தா ஹோட்டல்சின் போர்டு உறுப்பினர்களாக இருப்பது இரண்டே பேர்கள் –  மோடியும் அவரது மனைவும் மினாளினியும். அதே நேரம், மொரீசியஸ் தீவில் உள்ள வில்டன் என்ற உப்புமா கம்பெனியின் வசம் அனந்தா ஹோட்டலின் 99.5 சதவீத பங்குகள் உள்ளன. இந்த வில்டன் நிறுவனம் பங்குப் பரிவர்த்தனை மற்றும் நிதி முதலீட்டு நடவடிக்கைகளுக்காகவென்றே ஏற்படுத்தப்பட்ட ஒரு நிழல் நிறுவனம். இந்நிறுவனத்தின் மூலம் சுற்று வழிகளில் முதலீடு என்ற பெயரில் துஷ்யந்தின் நியாந்த் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. பத்துரூபாய் முகமதிப்பு உள்ள நியாந்த் ஹோட்டலின் பங்கை 96,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார் மோடி.

இரண்டாயிரங்களின் துவக்கத்திலிருந்தே இந்திய கிரிக்கெட் வாரியத்தினுள் நுழையும் வழியைத் தேடிக் கொண்டிருந்த லலித்மோடி, அதற்கான வழியாக ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியத்தை இனங் காணுகிறார். ஆனால் அந்த சமயத்தில் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக அம்மாநிலத்தின் பழைய பெருச்சாளிகளான ருங்தா குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் ருங்தா இருந்தார். அம்மாநில கிரிக்கெட் வாரியம் மொத்தத்தையும் ருங்தா குடும்பத்தினரே கட்டுப்படுத்தினர்.

ருங்தா குடும்பத்தினரை மாநில கிரிக்கெட் வாரியத்திலிருந்து வெளியேற்றவும் அதனுள் லலித்மோடியை நுழைக்கவுமான வேலையை வசுந்தராவே முன்னின்று மேற்கொண்டார். மாநில கிரிக்கெட் வாரியத்தின் பதிவைக் காலாவதியாக்கி, மறுபதிவு செய்ய வேண்டுமென்றும், அதில் வாரியத்தின் எல்லா உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என்றும், மாவட்ட வாரியத்தின் தலைவர்கள் மாத்திரம் வாக்களித்தால் போதுமென்றும் புதிதாக சட்டத்தையே ஏற்படுத்தினார் வசுந்தரா ராஜே. இதைத்தான் போலிஜனநாயகம் என்று சொன்னாலும் ஜனநாயகத்தை வெள்ளேந்தியாக நம்பும் கனவான்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு 2005ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியைக் கைப்பற்றிய மோடி, அதன் பின் பி.சி.சி.ஐயின் பொறுப்புகளில் தாவத் துவங்கினார்.

லலித் மோடி, நரேந்திர மோடி
ஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.

2003 – 2008 காலகட்டத்தில் லலித் மோடி ராஜஸ்தானில் மேற்கொண்ட ‘தொழில் நடவடிக்கைகளையும்’ கிரிக்கெட் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், அவர் அரசியலிலும் தலையிட்டு தங்கள் அடிமடியிலேயே கைவைக்கும் அளவுக்கு உயரத் துவங்கிய போது பதறிப் போனார்கள். தேர்தலில் யாருக்கு சீட்டு வழங்குவது, மறுப்பது என்பது தொடர்பாக வசுந்தராவின் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு மோடி மாறியது பாரதிய ஜனதாவில் உட்கட்சிக் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்சின் முதுகுக்குப் பின்னே பதுங்கிக் கொள்வதே மிகச் சிறந்த அரசியல் பாதுகாப்பு என்கிற சிந்தாந்தத்தின் அடிப்படையில் காலம் காலமாக செயல்பட்டு வந்தவர்கள் போர்க் கொடி தூக்கினர்.

ஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.

2008 தேர்தல் சமயத்தில் வசுந்தரா ராஜே, லலித் மோடியையும் அவருக்கு எதிராக கட்சிக்குள் உருவாகியிருந்த கோஷ்டியையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது – இதில் தான் பரிந்துரைத்த சிலருக்கு தேர்தல் சீட்டுகள் மறுக்கப்பட்டதை லலித் மோடி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவில்லை. எனினும், என்றைக்காவது பயன்படும் என்ற முன்யோசனையோடு வசுந்தராவோடான தனது உறவை அவர் பராமரித்து வந்தார். 2008 தேர்தலில் வசுந்தரா ராஜே மண்ணைக் கவ்விய நேரத்தில் லலித் மோடி ஐ.பி.எல் சூதாட்டத்தில் தீவிரமாக ஆழ்ந்திருந்தார்.

லலித் மோடி ஐரோப்பாவில்
”என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது”

ஐபிஎல் முறைகேடுகள் முற்றி 2010-ல் இங்கிலாந்துக்கு தஞ்சம் புகுந்த லலித் மோடியை அவரது எதிர் கோஷ்டிகள் மன்னிக்கத் தயாராக இல்லை. அந்த எதிர்கோஷ்டியில் அன்றைக்கு முன்னின்ற காங்கிரசின் ஜோதிராதித்ய சிந்தியாவும் பாரதிய ஜனதாவின் அருண் ஜேட்லியும் ஐ.பி.எல் சூதாட்டப் பணத்தில் பங்கு கிடைக்காத பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்தினர். இவர்களின் பின்னே இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனும், ப.சிதம்பரமும் இருந்தனர். சசி தரூர் கொச்சி அணியின் மறைமுகப் பங்குதாரராக இருந்ததை அம்பலப்படுத்தி தங்கள் பெயரைக் கெடுத்த லலித் மோடியின் மேல் காங்கிரசு ஆத்திரத்தோடு இருந்த சமயத்தில் ஊழல்களில் ஈடுபட்டு லலித் மோடியே காங்கிரசுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்; விளைவாக ஊழல் முறைகேட்டுப் புகார்களும் வழக்குகளும் வரிசை கட்டின.

ஆரம்பித்த அதே இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார் லலித் மோடி. ராய்பகதூர் குர்ச்சரன் மோடியின் பேரனும், புகழ்பெற்ற மோடி குழும முதலாளி கே.கே மோடின் மகனுமான லலித் மோடி அத்தனை சீக்கிரத்தில் சளைத்துப் போகிறவர் அல்ல. இங்கிலாந்தில் குடியேறிய லலித் தனது தோல்விகளை வெற்றியாக காட்ட ஆடம்பரமான வாழ்கை முறையைத் தேர்ந்தெடுத்தார். அப்படி தெரிவு செய்யுமளவு அவரது நிதி உலகமெங்கும் வெயிட்டாக இருந்தது.

இங்கிலாந்திலிருந்து தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் மூலம் உலகின் ஓய்வுக் கேளிக்கை இலக்குகளுக்குப் பறக்கத் துவங்கினார். ”என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது” என்பதே அவர் சொல்ல விரும்பிய செய்தி. இந்தியாவில் நடந்து வந்த விசாரணைகளின் போக்கில் லலித்மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட போது, அதைத் தனக்கு ஏற்பட்ட அவமரியாதையாக எடுத்துக் கொண்டார்.

வசுந்தரா ராஜே சிந்தியா
லலித் மோடியின் ஊழல்கள் இந்தியாவெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது குடியேற்றத்திற்கு பரிந்துரை செய்து வசுந்தரா ராஜே இங்கிலாந்து அரசின் குடியமர்வுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லலித்மோடி, வழக்குகளை இங்கிலாந்திலிருந்தே எதிர்கொண்டார். இதை விசாரணைக்கு வரவேண்டிய ஜென்டில்மென் என்று ஊடகங்களை பேச வைத்தார். இந்தியாவுக்குச் செல்வது தனது உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தனது லண்டன் வாழ்க்கையை நீட்டித்துக் கொண்டார். இந்நிலையில் லலித் மோடியின் ஊழல்கள் இந்தியாவெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது குடியேற்றத்திற்கு பரிந்துரை செய்து இந்தியத் தலைவர் ஒருவர் இங்கிலாந்து அரசின் குடியமர்வுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.

“இந்திய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்கிற ஒரே நிபந்தனையின் பேரில் லலித்மோடியின் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்படும் யாதொரு குடியேற்ற விண்ணப்பத்தையும் நான் ஆதரிக்கிறேன்”

கடிதத்தை எழுதியவர் வசுந்தரா ராஜே சிந்தியா; கடிதம் எழுதப்பட்ட போது அவர் மாநில எதிர்கட்சித் தலைவர். தற்போது இந்தக் கடிதத்தின் நகலை வெளியிட்டுள்ள லலித்மோடி, கடிதம் எழுதியது மட்டுமின்றி கான்சர் நோயால் வாடும் தனது மனைவியை சிகிச்சைக்காக இங்கிலாந்திருந்து வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்று உதவியதும் வசுந்தரா ராஜே தான் என்று தெரிவித்துள்ளார்.

விவகாரம் துவங்கிய போது சுஷ்மா சுவராஜின் லலித்மோடி தொடர்பு மட்டும் தான் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது – இப்போது ஏன் வசுந்தராவை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளார் லலித்மோடி? அது தான் ஒரு மைனரின் கெத்து.

இரண்டாம் முறையாக பதவிக்கு வந்த வசுந்தரா, முதல் முறை உதவியதைப் போல் தனக்கு உதவவில்லை என்றும், மீண்டும் ராஜஸ்தான் அணியின் தலைவராக 2014-ம் ஆண்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டு அது மாநில கிரிக்கெட் வாரியத்திற்கும் பி.சி.சி.ஐக்கும் மோதலாக வெடித்து, அந்த மோதலில் தனது பதவி பறிக்கப்பட்ட போது மாநில முதல்வராக இருந்த வசுந்தரா போதிய அளவில் தனக்கு உதவி செய்யாமல் ஒதுங்கிக் கொண்டதை மோடி மறக்கவில்லை. அது தான் போகிற போக்கில் சுஷ்மா மட்டுமில்லை, பல கட்சிகளில் உள்ள பலரும், ஏன் ராஜஸ்தான் மாநில முதல்வரே கூட எனக்கு உதவியுள்ளாரே என்று இழுத்துப் போட்டுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜைப் பற்றிப் பேசும் போது அவரது தாயுள்ளத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சுஷ்மா சுவராஜின் நடத்தையில் பொங்கிவழியும் தாயன்பைப் பற்றி சமீப காலமாக ஓயாமல் பாடம் எடுத்து வருகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்.

சுஷ்மா ஸ்வராஜின் தாயன்பை பற்றி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்லித் தான் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவருக்கு நிறைய செல்லக் குழந்தைகள் உள்ளனர். அந்த செல்லக் குழந்தைகளில் கருநாடகத்தின் கனிம வளக் கொள்ளை ரெட்டி சகோதரர்களும் அடக்கம். அவ்வப்போது, இந்தக் குழந்தைகள் (பதவிப்) பசியில் சிணுங்கினால் தில்லியிலிருந்து அடுத்த விமானத்தில் பறந்து வரும் சுஷ்மா ஸ்வராஜ் தன் செல்லக் குழந்தைகளின் பசியாற்றிவிட்டே அடுத்த வேலையைப் பார்ப்பார். அவரது தாயுள்ளத்தைக் கண்டு வியந்து மகிந்த ராஜபக்சேவே நெக்லெஸ் பரிசளித்துள்ளார் எனும் போது, வேறு யாருடைய சான்றிதழும் தேவையே இல்லை.

–    தொடரும்.
– தமிழரசன்.

 

விழுப்புரம் – திருவாரூர் : அரசுப் பள்ளி காக்க போராட்டம்

0

அரசுப் பள்ளிகளின் சட்ட விரோத, கட்டாய நன்கொடை கொள்ளையை கண்டித்து…

விழுப்புரம்

நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடித்து வருகின்றன. குறிப்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜன், ரவிராஜபாண்டியன், சிங்காரவேலன் போன்றவர்களின் தலைமையில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு கல்விக் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு தனியார் பள்ளியும் கல்விக் கட்டணங்களை முறையாக வாங்குவதோ அல்லது சட்டத்துக்குட்பட்டு கல்விக்கட்டணங்களை நடைமுறைப் படுத்துவதோ இல்லை.

vilupuram-govt-school-fees-1
பல பள்ளிகளில் நேரில் ஆய்வு நடத்திய போது ஆயிரக்கணக்கில் ஏழை பெற்றோர்களிடம் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கூடமும் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது

இந்தப் பள்ளிகள் பக்கம் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத பெரும்பான்மை மக்களுக்கு அரசுப்பள்ளிதான் ஒரே புகலிடம். தமிழகம் முழுவதும் உள்ள பல அரசுப்பள்ளிகளில் போதிய கட்டிடங்கள், போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள், குடிநீர் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், “தனியார் பள்ளிகளில் பல ஆயிரங்கள் கொட்டி அழமுடியாது, படிக்க வைக்க முடியாது” என்று இலட்சக்கணக்கான மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்க்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாகத் தான் வழங்கப்படுகின்றது என்பதுதான் அதன் அடிப்படை.

குறிப்பாக, பத்தாம் வகுப்பு முடித்து மாணவர்கள் பதினோராம் வகுப்பில் இணையும் போது கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும் 200 ரூபாய் திருப்பித்தரப்படும் பணமாக பெறுகின்றனர், அதுவும் கட்டாயமில்லை என்ற அரசு உத்தரவுடன். அதற்கு மேல் எந்தக் கட்டணமும் கிடையாது என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கல்வியை இலவசமாக வழங்குவதற்காக பலகோடிகள் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கென்று தனி கல்வி அமைச்சகம், கல்வித்துறை, பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அதற்கென்று மிகப்பெரிய பொறுப்புகளில் அதிகாரிகள் என்று மிகப்பெரிய அரசமைப்பே இலவசக் கல்வி வழங்குவதற்கு செயல்படுகிறது.

இலவசக்கல்வியை கேள்விக்குறியாக்கும் விதத்தில் விழுப்புரத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இந்த கல்வியாண்டில் ரூ 50-லிருந்து ரூ 1,500 வரை மாணவர்களிடையே கட்டணம் மற்றும் நன்கொடை என்கின்ற பெயரில் கட்டாயமாக கொள்ளையடித்துள்ளதாக ஆதாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

பெற்றோர் – ஆசிரியர் இடையே ஒரு சுமுகமான உறவை வளர்த்து நிறைவான கல்விச் சூழலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது பெற்றோர் – ஆசிரியர் கழகம் என்ற அமைப்பு. ஆனால், அந்த அமைப்பின் மூலமாக அதற்குரிய பணியை ஆற்றாது ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் அநியாயமாக பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக பணத்தை பிடுங்கி உள்ளனர்.

பள்ளிகள் வாரியாக சொல்ல வேண்டும் என்றால்…

1. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 150 ரூபாய் கட்டணமாக வாங்கி விட்டு 50 ரூபாய்க்கு ரசீது கொடுத்திருக்கிறார்கள்.

2. எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 200 இருந்து 250 ரூபாய் வரை வசூலித்து இருக்கிறார்கள். ஆனால் ரசீது ஏதும் கொடுக்கவில்லை.

3. திரு.காமராஜ் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ 800 லிருந்து ரூ 1500 வரை வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக வகுப்புகளுக்கு தகுந்தவாறு நானூறு ரூபாய் ஆக பிரித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ரசீது கொடுத்திருக்கிறார்கள்.

4. கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ரசீது தரவில்லை.

5. பீமநாயக்கன் தோப்பு நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ரசீது தரவில்லை.

6. கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 250 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ரசீது தரவில்லை.

இது போன்று விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய நன்கொடையை வசூலித்திருக்கிறார்கள்.

மேலும் எடப்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றவர்களிடமும் ரூ.200 கட்டாயமாக வசூலித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, “பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழை வாங்கவோ, அல்லது கொடுக்கவோ பணம் ஏதும் வாங்கக்கூடாது” என்று அரசின் சார்பில் உத்தரவு உள்ளது. அதனையும் எந்தப் பள்ளியும் மதிப்பது இல்லை. கட்டாயமாக ரூ.50 முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்துள்ளனர்.

சோழகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்க 100 ரூபாய் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீதும் தரவில்லை என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்தச் சூழலில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி(RSYF) யின் சார்பாக பல பள்ளிகளில் நேரில் ஆய்வு நடத்திய போது ஆயிரக்கணக்கில் ஏழை பெற்றோர்களிடம் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கூடமும் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டக் கல்வித்துறையும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் சட்டவிரோதமாக அநியாயமாக ஏமாற்றி வாங்கிய பணத்தை ஒரு வாரத்திற்குள் திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும், கட்டணக் கொள்ளையடித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு 26-06-2015 அன்று  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனுவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசுப்பள்ளி கட்டணக் கொள்ளை, விழுப்புரம்
“எதிர்காலத்துல அரசு பள்ளிக்கூடத்துல தான் படிக்க போறாங்க… அதிகாரிங்கள எதிர்கொள்ளத்தான் போறாங்க, அதுக்கு இதெல்லாம் பயிற்சியா இருக்கும்”

தோழர்கள் மற்றும் பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. மார்ஸ்சை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்தித்து அரசுப் பள்ளிகூடங்கள் தந்த ரசிதுகளை காட்டியதும் அதிர்ந்தது போல் காட்டிக்கொண்டார்.

“எனக்கு அதிர்ச்சியா இருக்கு. உடனடியா இதுல தலையிட்டு நடவடிக்கை எடுக்கறேன். நீங்க நல்ல வேல செஞ்சி இருக்கீங்க..” என்றார் ஒன்றும் தெரியாதவர் போல.

“ஒரு வாரத்திற்குள் மாணவர்களுக்கு கட்டணங்கள் திருப்பி தரப்படவேண்டும். இல்லையேல் முற்றுகை போராட்டம் நடத்துவோம்” என்று கூறிவிட்டு கிளம்பினோம்.

நம் தோழர்கள் கைக் குழந்தைகளுடன் வந்திருந்ததை பார்த்துவிட்டு “ஏன் குழந்தைகளை அழைச்சிட்டு வெயில்ல வந்தீங்க” என்றார்.

நம் தோழர்கள் “எதிர்காலத்துல அரசு பள்ளிக்கூடத்துல தான் படிக்க போறாங்க… உங்களைப் போன்ற அதிகாரிங்கள அவங்க எதிர்கொள்ளத்தான் போறாங்க, அதுக்கு இதெல்லாம் பயிற்சியா இருக்கும்” என்று சளைக்காமல் பதிலளித்ததும் அவரும், அவருடன் இருந்தவர்களும் இணைந்து ஒரு சிரிப்பு சிரித்தார்கள் பாருங்கள். அக்மார்க் கவுர்மென்ட் சிரிப்பு!

தகவல்:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF),
விழுப்புரம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்.

2011-ம் ஆண்டு இப்பள்ளியில் தலைமையாசிரியர் சட்டவிரோதமாக மாணவர்களிடமிருந்து கட்டண வசூல் செய்ததை கண்டித்து  போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 4 பேர்  கலெக்டர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய அந்த தலைமையாசிரியர் ஜாலியாக உலா வருகிறார் ?

அது மட்டுமல்ல ஏழைகளிடம் பணம் புடுங்கும் திறமையை பாராட்டி இந்த அரசு DEO வாக பதவி உயர்வும் வழங்கியுள்ளது!

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) சார்பாக மாவட்டம் முழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அரசுப்பள்ளி கட்டணக் கொள்ளை, திருவாரூர்

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் !

17

காக்கா முட்டை திரைப்படம் சொல்லும் திடீர் நகர் மக்களின் வாழ்க்கை குறித்து இயக்குநர் வசந்தபாலன் மெய்மறந்து உள்ளொளியின் உவகையுடன் பேசுவதைக் கேட்டோம்.

‘அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள்’ என்று அவர் மட்டுமல்ல பல்வேறு அப்பாவிகளும் உண்மையிலேயே ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது ஒன்று தோன்றியது.

நாமே திடீர் நகருக்கு நேரில் சென்று படம் குறித்த படைப்பாளிகள், மற்றும் ரசிகர்களின் கருத்தை சொல்லி அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்வோம் என முடிவு செய்தோம்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள்

சென்னை-அண்ணாசாலையை ஒட்டிய சைதாப்பேட்டை மறைமறையடிகள் பாலம் அருகே கீழே உள்ள திடீர் நகர், கோதாமேடு-அண்ணாநகர் பகுதிகளுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்றோம்.

எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள். மூன்றடி இடைவெளிச்சந்தில் இருபுறமும் தகரக் கொட்டகைகள்.

சிரிப்பு, கும்மாளம், அவலம், வெறுமை, சுறுசுறுப்பு, சோம்பிக்கிடத்தல் என விதவிதமான உணர்ச்சிகளுடன் தென்பட்ட சிறுவர் பெரியவர் அனைவரையும் சந்தித்தோம்.

“காக்கா முட்டை படம் சூட்டிங் நடந்த இடம் இதுதானே”

“ஆமாம்” என்று சிரித்தனர்.

“காக்காமுட்டை படம் பார்த்தீர்களா”

“டிவியிலே பார்த்தோம் பாட்டு, ட்ரெயிலர் எல்லாம்..” என்றனர். சிலர் டி.வி.டியிலும் ஓரிருவர் தியேட்டரிலும் பார்த்தாக சொன்னார்கள். பெரும்பான்மையினர் பார்க்கவில்லை. சொல்லப்போனால் அப்படம் திரையரங்குகளில் வந்ததே தெரியாது.

கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…“, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..” என்று காக்கா முட்டையில் கவிஞர் நா. முத்துக்குமார் உருவாக்கியிருக்கும் அற்புதமான மகிழ்ச்சி, சந்தோஷம், ஜாலி, நிம்மதி குறித்து மக்களிடம் கேட்டோம்.

அருகில் வந்த ஒருவர் “அவனுங்க, காக்காமுட்டை, பல்லிமுட்டைனு படம் காம்ச்சி, அவார்டு வாங்கி மேலேமேலே பூடுவனுங்கோ….நாங்க மட்டும் கூமுட்டையா கூவத்துலேயே இருக்கணும்னு படம் காட்டாறனுங்களா? இங்க எங்களுக்கு இன்னா… நிம்மதிய கண்டானுங்க… அவசரம்னா…. போறத்துக்கு வீட்டுல ஒரு கக்கூஸ் இருக்குதானு பாத்தானுங்களா? பொம்பளைங்க, குழந்தையுங்க, வயித்துவலி பேதி வந்தா, ரோடு வரைக்கும் ஓடணும். அங்கேயும் போனா…க்கியூதான்…அது வரைக்கும் …நீ நில்லுன்னா… அது…நிக்குமா? பெருசுங்கக்கூட காலோடோ…போ…ய்யி..டும். அந்த அசிங்கம் அவனுங்களுக்கு தெரியுமா? …

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…”, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..”

இங்க..2000 பேருக்கு மேல்..கிறோம்…2..கக்கூஸ்தான் (பொதுக் கழிப்பறை – ஆணுக்கு 2, பெண்ணுக்கு 2)…அதுலயும் அங்க தண்ணீ…இல்ல.. டப்பாவுல எடுத்துகினு போனோதான் கழுவ முடியும்…!…இன்னும் ஆயிரம் கப்பு (நாற்றம்)… இருக்குது இங்கே.. ..அதலதான் ..நாங்க வாழ்றோம். இந்த.. வாழ்க்கை அவனுங்களுக்கு சந்தோசமா.. தெரியுதா?” என்று எரிச்சலாகி முறைத்தார்.

அடுத்ததாக கூவம் கரைக்கு அதாவது காக்கா முட்டையின் படி “தாயின் மடி” கரைக்கு நம்மை அழைத்துச் சென்றனர், பகுதி சிறுவர்கள். “பச்சை பசுங்காடு” என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் “பச்சை பீக் காடு” கண்டு பீதியில் உறைந்தோம்! அதன் நடுவே, சிறுவர்கள் ஒரு கற்பாறையில் கிரிக்கெட் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தனர். அனுபவம் இல்லாததால், கவனமாக சென்றும்  பீயில் விழுந்து எழுந்த பிறகுதான் வினவு செய்தியாளர் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது!

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”

“சார்.. இங்க எதுக்கு வர்றீங்க …?” என்றனர், அருகில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.

“இங்கு எப்படி விளையாடுவீர்கள்? பந்து ஆய் மீது விழுந்தால் என்ன செய்வீர்கள்”

‘அதெல்லாம் ஒரு மேட்ரா…’ என்பது போல் நம்மைப் பார்த்தார்கள்!

“டொக் (மெதுவாக அடிப்பது அல்லது கட்டை போடுவது) அடிச்சிதான் இங்க விளையாடணும். தூக்கி அடிக்கிறவன தொறத்திடுவோம்” என்றனர். ஆக இங்கே சிக்சரோ இல்லை ஃபோருக்கோ வழியில்லை. கிரிக்கெட்டிலே கூட திடீர் நகர சிறுவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது என்ற போது அங்காடித் தெரு இயக்குநரின் அறிவு குறித்து நாம் கரிசல் மண் சென்றுதான் அழ வேண்டும்.

அரசுக்கு சொந்தமான டோபி கானா (வண்ணார் துறை – சலவைத் தொழிலாளர் பகுதி) நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சுதாகர் என்ற மாணவரிடம்…

“ஆமா நீ ஏன் செருப்பு போட மாட்டேங்குற?

“அத போட்டா வழுக்குதுண்ணே?”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல”

“நடந்தாலே வழுக்குதா?”

“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”

“சரி வீட்டுல டாய்லெட் இல்லயா?”

“வீட்டுல குளிக்க மட்டுந்தா முடியும்”

“நைட்ல டாய்லெட் வந்துச்சுன்னா என்ன பண்ணுவ?

“கரைக்கி(கூவம்) போயிட்டு இங்க வந்து கழிவிக்குவேன்”.

திடீர்நகர சிறுவர்கள் செருப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது பற்றி காக்காமுட்டை படம் உருவாக்கிய குறியீடு, படிமம், கவித்துவம் குறித்து கதையளந்த அந்த நல்லவர்கள் எங்கே?

வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மு என்பவர், “சொன்னா.. அசிங்கம்..சார்…எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…” என்று மீண்டும்… கோபத்தோடு ஏதோ.. சொல்ல வந்தவரை அருகிலிருந்த பிற பெண்கள் இழுத்து வாயடைத்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?”

அத்தெருவில் சாப்பாட்டுக்கடை நடத்தும் கற்பகம் என்பவர், “இந்த சினிமாக்காரனுங்க எங்களப்பத்தி இப்படி காமிகிறதுக்கு புதுசு இல்ல! ஆனா இந்த சாக்கடையிலக் கூட எங்கள வாழவுடாம பலபேரு, இந்த எடத்த எப்படி புடிங்கிறதுனு குறியா கீறானுங்க. சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல” என்றார், குரல் உடைந்து.

பக்கத்திலிருந்த கமலக்கண்ணன் என்பவரிடம், “உங்களை கொசுக்கள் கடித்தாலும் காக்கா முட்டையில் வரும் பாடல் போல ‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?” என்று கேட்டோம்.

“….சார்…நல்லா வாய்ல்ல வருது சார்…பேமானிங்க, சினிமாக்காரனுங்கள இங்க ஒரேஒரு நாளைக்கு வந்து படுக்க சொல்லுங்க சார்…! 3 அடிஅகலம் உள்ள சாக்கடைதான் எங்களுக்கு தெருவு! அதுமேல சிமெண்டு ஸ்லாப் போட்டு  நடக்கிறோம், சாப்புடுறோம். தூங்றோம். இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!” என்றார்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…”

பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த சொளமியா என்பவர். “கொசுக்கடி மட்டுமில்ல, குடிக்க தண்ணீ, குழாயில ராத்திரி 12 மணிக்கு மேலதான் வரும்! பாதி ராத்திரி 1 மணி, 2மணிக்கு குடிக்கிற தண்ணிய புடிச்சுட்டு, அப்பிடியே குளிச்சிருவோம். அந்நேரத்திலதான் யார் பாப்பாங்களோன்ற பயம் இல்லாம குளிக்க முடியும்! பிறகுதான் தூங்கப் போவோம்.

எல்லார் தலைமாட்டிலும் ஒரு கொசு வத்திய கொளுத்தனாதான் தூங்க முடியும். அதனால பகல்லானா… குழந்தைங்க விடாம இருமுதுங்க… டாக்டர் கிட்டப்போனா கொசுவத்தி வைக்கக் கூடாதுனு சொல்றாரு.. .எங்க வேதனைய… யார்..கேக்றாங்க..” என்றார்.

திடீர்நகர் வீடுகளில் கழிப்பறை இல்லை. குளிக்கவே முடியாது. ஏனெனில் வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் பெண்கள் நள்ளிரவில் ஊர் அடங்கியதும் தெருக்கோடிகளில் சென்று குளிக்கிறார்கள். குளியல் என்றால் ஏற்படும் ஒரு ரம்மியம், மணம், மல்லிகை, ஸ்கந்தம், பாத்ரூம் பாடகர்கள் போன்ற குறியீடுகளில் வாழ்பவர்கள் தங்களது தெருக்களில் நள்ளிரவில் குளித்தால் காக்கா முட்டை குறித்த படிமங்கள் டமாலென உடைந்து விடும், கவனம்!

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“லின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”

திடீர் நகர் சிறுவர்களின் ஆர்வம், கனவு, பணப் புழக்கம், நவீன நுகர் பொருட்கள் பற்றிய அறிவு என்ன?

நாங்கள் சென்ற நேரம் கோலிக்குண்டு சீசன். கோதாமேடு, அதை ஒட்டியுள்ள ஹவுசிங் போர்டு தான் இவர்களின் ஆடுகளம். காலை 7 மணிக்கு ஆட ஆரம்பித்த சிறுவர்கள் 1 மணி வரையில் பல்வேறு கூட்டமாகப் பிரிந்து பிரிந்து விளையாடினர்.

மாத்திரை (விஷ்ணு) வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு வந்து மீண்டும் கெத்தா விளையாட ஆரம்பித்தான். அப்போது அவனுடைய நண்பன் சொரி(சந்தோஷ்) “டேய் இவன யாரும் சேத்துக்க வேணாண்டா! இவனுக்க சாப்ட கொடுத்த துட்ட வெச்சி கோலிக்குண்டு வாங்கியாந்துட்டான்” செல்வம் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்தார்.

சஞ்சீவ், முட்டை பஜ்ஜி (ரகுமான்), கலீல், ஷாஜஹான், கவுதம், கமலேஷ் என எல்லாரும் கோலிக்குண்டு விளையாடி ஜெயிப்பதில் மூழ்கியிருந்தனர். இவர்கள் ஒரே அணியாக மட்டுமே விளையாடவில்லை. சிறிது நேரம் ஒரு குழு, பிறகு வேறு ஒரு கூட்டம் என மாறி மாறிக்கொண்டே இருந்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா

ஒரு குண்டு ஒரு ரூபாய் என ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 ரூபாய் மதிக்கத்தக்க குண்டுகள் இருந்தன. புதிதாக ஒரு கிரவுண்ட் இருந்தாலும் அங்கே வாலிபர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொள்வதாலும், வெயிலாக இருப்பதாலும், வெறும் மணலாக மட்டுமே இருப்பதாலும் சிறுவர்கள் வீட்டிற்கு அருகிலேயே விளையாடுகின்றனர்.

திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா, 15 ரூபாய் சம்பாதிக்க திண்டாடுவார்களா என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

சுதாகரிடம்…

“ரயில்வே ட்ராக் பக்கமெல்லாம் போவீங்களா?

”இல்லண்ணே அங்க போனா பெரியவங்க தொரத்திருவாங்க”…

காக்கா முட்டை காட்டிய படங்கள்
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“பள்ளிக்கூடத்துல தெனமும் தீனி எதாவது வாங்கி சாப்புடுவியா?”

“சிப்ஸ், குர்குரே, பிங்கோ எல்லாம் சாப்புடுவேன்”

“சரி யாரு ஒனக்கு இவ்ளோ காசு கொடுப்பா?”

“எங்கம்மா தான் கொடுப்பாங்க, தெனமும் 5 ரூவா இல்ல 10 ரூவா கொடுப்பாங்க,

டீச்சர் கல்லூரியில் உள்ள அரசு மாடல் மேல்நிலைப்பள்ளியில் 11-வது படிக்கும் செல்வத்திடம்..

“என்னடா தம்பி கோலிக்குண்டு வெளையாடலியா?”

“இல்லண்ணா நாங்கெல்லாம் WWF-தான் பாப்போம்”

“அப்படியா யாரப் புடிக்கும்?”

“இப்பக்கி ஜான் சினா தான்”

“சரி வேற யாரையெல்லாம் தெரியும்?”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன்.”

“காலின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”

“ஏண்டா தம்பி பத்தாவது படிச்சவுடனே டிப்ளமோ படிக்க போயிருக்கலாம்ல?”

“இல்லண்ணா,  ஸ்கூல்ல படிச்சா ஃபிரண்ட்ஸ்களோட ஜாலியா பேசிக்கினு வெளையாடிக்கினு இருக்கலாம், காலேஜ்-னா செரமம் அதான் +1 சேந்துட்டேன்”

“ஒனக்கு நெறையா காசு கெடச்சா என்னடா தம்பி சாப்டுவ?”

“நெறையா காசு இருந்தா பீஃப் ரைஸ் தான்னே சாப்பிடுவேன்”

“பீசாவெல்லாம் சாப்பிடுவியா?”

“எங்கப்பாகிட்ட சொன்னா, ஆட்டோ ஓட்டி முடிச்சிட்டு வர்றப்ப வாங்கிக்கினு வருவாரு, பேக்கரில கூட 30 ரூவாக்கி கெடைக்குது. மெக்டொனால்ட்ஸ்-ல கூட 90 ருப்பீஸ்-கு போட்ருக்காங்கன்னா”

மற்றும் இங்கிருக்கும் பல சிறுவர்களுக்கு வாட்ஸ் அப் உட்பட அனைத்தும் பரிச்சயம். செல்பேசி இல்லாத சிறுவர்கள் கூட தங்களுக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு இருப்பதை சொல்லி பெயர் கொடுத்தார்கள்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு”

கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சுதாகரிடம்…

“தினமும் பள்ளிக்கூடத்துக்கு போறப்ப குளிப்பியா?

“குளிப்பேன்”,

“எங்கடா தம்பி குளிப்ப?“

“வீட்ல தான் குளிப்பேன்!”

“கூவத்துல குளிக்க மாட்டியா?”

“சின்னப்புள்ளயா இருக்கப்ப தான் குளிச்சிருக்கேன், அப்பல்லாம் தண்ணி நல்லா இருக்கும், இப்பல்லாம் வீட்ல மட்டும் தான் குளிக்கிறோம்”

செல்வத்திடம்…

“ஒனக்கு ரொம்ப நாளா எதாவது ஆசையிருக்குதா?”

“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல, லீவு நாள்ல வாட்டர் கேன் சப்ளை பண்ணுவேன், கெடைக்கிற வச்சு சட்டையெல்லாம் எடுத்துக்குவேன், மீதி இருந்தா அம்மா கிட்ட கொடுத்துருவேன்”

“சரி தினமும் கூவத்துல குளிக்கிறியா?”

“என்னாண்ணா? அங்க குளிக்கிற மாதிரியா இருக்கு? ஒரே சேறா இருக்கு, நான் சின்ன புள்ளயா இருந்தப்ப குளிச்சிருக்கேன், அப்பொல்லாம் தண்ணி க்ளியரா இருக்கும், இப்பல்லாம் சாக்கடை தண்ணியா தொறந்து வுடுறாங்க, ஏ.பி.டி-லேர்ந்து தெனமும் அவ்ளோ சாக்கட தண்ணியா கொட்டுறாய்ங்க”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!”

“அப்ப ஆத்துகெல்லாம் எப்ப தான் போவீங்க?”

“காலைல கால் கழுவ மட்டும் தான்னா போவோம், அதுவும் வூட்ல கக்கூஸ் இருந்தா இன்னாத்துக்கு போறோம்.”

“சார்… இங்க.. வாங்க” என்றார் கமலக்கண்ணன், “பல நாள் சூட்டிங் எடுத்து எங்க பொழப்ப கெடுத்தாங்க சார்… எங்க வீட்டிலேயே எங்கள நிம்மதியா இருக்க விடாம…. அடிக்கடி வெளிய வராதீங்க.. வீட்டுல டிவி சவுண்டு கொஞ்சம் கொறைங்க… அப்படினு அவனுங்க சொல்லறது எல்லாம் கேட்டோம். இப்ப அந்த சினிமாவிலயே எங்களையே நக்கல் பன்றானுங்களா” என்றார் எரிச்சலாக.

ஆறுமுகம் என்பவர் “கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு… அவங்க குழந்தைக்குட்டிங்க இப்ப அநாதையா இருக்குது சார்” என்றார் விரக்தியுடன். கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் பல இணைய பிரபலங்கள் இந்த வரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த விக்னேஷ் என்ற இளைஞர், “அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன். சினிமாக்காரனுங்க எல்லாம் ஜோட்டா (பிராடு) வேலை பண்றவங்க” என்றார்.

அங்கு கும்பலாக இருந்த பெண்களிடம் பேசினோம், “மழைக்காலம் வந்தா இங்க எப்படி? குழந்தைகளோடு நீங்களும் சந்தோசத்தில் மிதப்பீங்களாமே?

“….அப்படியா….மழைவந்தா நீங்க இங்க வாங்க. எங்கக்கூட சேர்ந்து வெள்ளாடுவிங்க….” என்று சிரித்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும்”

“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க  ரொம்ப கஸ்ட்டப்படும். காய்ச்சல், பேதி, நாத்தம், வேலையில்ல, சோறு இல்லனு…. செத்து பொழைப்போம்… இருந்தாலும் மழை வேணுமில்லனு… மனசு சொல்லும். குழந்தைகளை தேத்திகினு.. இருப்போம்” என்று வலியோடு பேசினர்.

மழையை ரசித்து சிறுவர்கள் ஆட்டம் போடுவதாக காக்கா முட்டை படத்தில் காட்டப்பட்டது பற்றி செல்வம் என்ற சிறுவனிடம்

“மழையெல்லாம் வந்தா என்னடா தம்பி செய்வீங்க”

“அண்ணா, மழை பெஞ்சுச்சுனா வீட்டுல ஒழுவுற எடத்துலெல்லாம் பானைய வெக்கணும், அப்புறமா ரெண்டு மூனு நாளு கழிச்சி கொசு கடி தாங்காது, வெள்ளம் கூடுனா உடனே பள்ளிக்கூடத்தண்ட போயிருவோம். தண்ணி வடிஞ்சப்புறம் வருவோம்”

நாம் பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் பலர் சூழ்ந்து கொண்டனர். காக்காமுட்டை படத்தில்  வரும்  டாஸ்மாக் கடைக்காக  தன்னுடைய டீக்கடையை தற்காலிகமாகக் கொடுத்தவர், கொதிப்புடன், “சூட்டிங் எடுத்துட்டு அப்பால, பேசுனது மாதிரி பணம் கொடுக்காம ஓடுன திருட்டுபசங்க சார் அவனுங்க… இந்தப்படம் தியேட்டருக்கு இல்ல… சின்ன பட்ஜெட்டு.. நீங்களெல்லாம் உதவி  பண்ணனும்னு…. பொய் சொன்னாங்க அவனுங்க. பிச்சைக்கார பசங்க! இப்ப அவனுங்கள வரச்சொல்லுங்க. 100 பொம்பளங்கள கூப்பிட்டு தொடப்பக்கட்டையாலேயே அடிப்போம்! அவனுங்க போலீசு ஸ்டேசன் இல்ல எங்கவேனாலும் போய் ரிப்போட் பண்ணட்டும். டூபாக்கூர் பசங்க… ” என்றார்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள்.

இப்படி பலபேர், காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள். “துணி காயப்போடும் சீனுக்காக, பலமுறை பசங்களை ஓட்டுமேல ஏத்தினாங்க, எங்க வீட்டு சிமெண்ட் ஓடெல்லாம் போச்சி. அத ரிப்பேரு பண்ண  பணம் தரேனு, கடைசியிலே ஏமாத்திட்டு போய்ட்டாங்க…” என்றார் ஒருவர்.

மேலும் சூட்டிங்க்குகாக தன்னுடைய காயலாங் கடையைக் கொடுத்தவர், தடுப்பு கட்டி பாத்ரூம் தந்தவர், அதில் நடித்த அப்பகுதி லட்சுமி பாட்டி…  இப்படி பலர் காக்காமுட்டை சினிமா கும்பல் தருவதாக சொன்ன சில நூறு ரூபாய்களைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடிய  கதையை சொன்னார்கள். ஆனல் காக்காய் முட்டை உலகமெங்கும் வசூலித்த தொகை பதினைந்து கோடி என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சினிமா படைப்பாளிகள்தான் காக்கமுட்டைத் திரைப்படத்தில் வரும் திடீர் நகர் மக்கள், தமது பகுதி சிறுவர்களை அடித்த பீட்சா முதலாளியை எதிர்த்து போராடுவதற்கு பணம் எதிர்பார்த்தார்கள் என்று காட்டுகிறார்கள். தங்கள் சொந்தப் பிரச்சினைக்குக்கூட, பேரணி, போராட்டம் என்று அவர்கள் தெருவுக்கு வருவது சாராயம், பிரியாணி, பணத்திற்குதான் என்று பார்வையாளர்களுக்கு குறிப்பால் புரிய வைத்து உலக சினிமா, ஈரானிய சினிமா என்று ஏங்க வைத்தார்கள்.

திடீர் நகர் மக்களிடம் இதைப்பற்றிக் கேட்டதும்,

காக்கா முட்டை காட்டிய படங்கள்
அவன்ங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?

“எங்க பசங்கள எந்த கஸ்மாலமோ அடிச்சதுக்கு, ஞாயம் கேக்க நாங்க காசு கேட்டோமுனு எந்த பாடு சொன்னான்? அவன இங்க இத்துணு வா, கீறி டிக்கிய பொளந்து பீசாக்குறேன். ஏன் சார், எங்க பசங்கள காப்பாத்தக்கூட நாங்க துட்டு கேப்பமா? இதெல்லாம் நிஜமென்னு நம்பிக்கினு உன்ன மாறி பட்ச்சவங்க வந்து கேப்பீங்களா? இதுவே அந்த சினிமா பாடு வந்து சொன்னான்னா கதை வேற! இதுக்கு மேல கேக்காதா, வாயில வந்துற போது”

“சினிமாக்காரனுங்கன்னா எங்கள எது ஒன்னாலும் சொல்வான்களா? அவனங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய  ஆட்டுவான்களாமா?…. கண்டத சினிமான்னு காம்ச்சி எங்கள பணம் புடுங்குவோம்னு காட்டுவானுங்களா”, என்று கொதித்தனர்.

இனி என்ன? இந்த வினவு கட்டுரை பிரபலமாகி, காக்கா முட்டை படப்பிடிப்புக்குழு, தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறன், பெரிய தயாரிப்பாளர் முர்டோச் (ஃபாக்ஸ் ஸ்டூடியோ), 60 மார்க் ஆனந்த விகடன் அனைவரும் திடீர் நகர் சென்று இஸ்திரி பெட்டி, மூன்று சக்கர சைக்கிள்,
வேட்டி சட்டை, சேலை கொடுக்கும் விழாவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அப்படி ஏதும் திட்டம் அறிவிக்கப்பட்டால் காக்கா முட்டையின் கவித்துவத்தை அம்மக்களுக்கு காட்சிப்படுத்துவோம். மீதியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

– வினவு செய்தியாளர்கள்

எச்சரிக்கை : இந்திய ரயில்வே இனி மக்களுக்கில்லை

12

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும் பேருந்து கட்டணம் எக்கச்சக்கமாக எகிறியது. அதுவரை 600 ரூபாயாக இருந்த மாதாந்திர பயண அட்டை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இனி பேருந்தில் பயணிக்கவே முடியாது என்று லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்திற்கு மாறினர். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் மக்கள் பெரிதும் நம்பியிருப்பது ரயில்களைத் தான். அனைத்து ரயில்களிலும் நான்கு பெட்டிகள் தான் பொதுப்பெட்டிகளாக இணைக்கப்பட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு பயணிக்கின்றனர். மோடி ஆட்சியின் கீழ் இனிமேல் அதற்கும் வழியில்லை.

ஐ.சி.எஃப்
சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தற்போது ஐம்பதாயிரமாவது பெட்டியை தயாரித்துள்ளது.

ரயில்களுக்கான பெட்டிகளையும், இன்ஜின்களையும் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களே தயாரித்து வருகின்றன. சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தற்போது ஐம்பதாயிரமாவது பெட்டியை தயாரித்துள்ளது. ஆனால் தற்போது ரயில்களுக்கான பெட்டிகளையும், இன்ஜின்களையும் தயாரிக்க 2,500 கோடி ரூபாயை கொட்டி 15 ரயில் ஷெட்டுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கவிருக்கிறது மோடி அரசு. இவற்றை வாங்குவதோடு ஏழு ஆண்டுகளுக்கு அவற்றின் முழு பராமரிப்பையும் வாங்கிய தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கவிருக்கிறது. இதற்காக விரைவில் உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட இருக்கிறது.

12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என்று உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் இந்திய ரயில்வே. இந்திய ரயில்களில் தினமும் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர், மின்சாரம், வரிச்சலுகை, பல ஆயிரம் கோடி கடன்கள் என்று வாரி வழங்கும் அரசு, பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை கை தூக்கிவிடாமல் எட்டி உதைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது, இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

விவேக் தேவ்ராய்
மத்திய கொள்கைக் குழுவின் உறுப்பினரும், உலகமயமாக்கலுக்கு ஆதரவான பொருளாதாரவாதியும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவ்ராய்.

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறதாம். இவ்வாறு கடனிலும் நட்டத்திலும் இயங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவது பற்றி ஆராய்வது என்கிற பெயரில், மத்திய கொள்கைக் குழுவின் உறுப்பினரும், உலகமயமாக்கலுக்கு ஆதரவான பொருளாதாரவாதியும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவ்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை நியமித்தார் மோடி. உடனே சுறுசுறுப்பாக ‘ஆய்வு’ மேற்கொண்ட குழு தனது பரிந்துரைகளை 300 பக்க அறிக்கையாக மார்ச் மாதம் அளித்தது.

அந்த அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறையை முழுமையாக ‘மேம்படுத்துவதற்கான’ ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது.. மேம்படுத்துவது என்றால் தனியார்மயமாக்குவது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன ?

  • ரயில்வே மண்டலங்கள் ஒவ்வொன்றின் கணக்குகளையும் தனித்தனியே நிர்வகிக்க வேண்டும்.
  • மண்டல பொது மேலாளர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரமளிக்க வேண்டும்.
  • ரயில் பெட்டிகள், இன்ஜின்களை பராமரிக்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
  • பயணிகள் ரயிலை தனியார்மயமாக்குவதற்கு முன்னோட்டமாக சரக்குப் போக்குவரத்தை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • ரயில்வே துறைக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை.
  • ரயில்வேயை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விட வேண்டும்.

 

  • ரயில்வே துறையை உள்கட்டமைப்புக் கழகம், போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்க வேண்டும்.
  • உள்கட்டமைப்புக்குள் எவை எல்லாம் அடங்கும்? தண்டவாளங்கள் போடுவது, ரயில் நிலையங்களைப் பராமரிப்பது, சிக்னல்களை பார்த்துக் கொள்வது போன்றவை மட்டும் இதில் அடங்கும்.
  • போக்குவரத்துக் கழகத்தை தனியார் நிர்வகிக்க வேண்டும்.

அதாவது ரயில் நிலையத்தை அரசாங்கம் நிர்வகித்து பராமரித்துக் கொள்ள வேண்டும். அதில் தனியார் முதலாளிகள் ரயில்களை இயக்குவார்கள். அதாவது விமான நிலையங்கள் போல.

ரயில்வே மருத்துவமனை
இப்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
  • புறநகர் ரயில்கள் போன்ற நட்டம் ஏற்படுத்தும் ரயில்களை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். அல்லது அதையும் தனியாரிடமே ஒப்படைத்து விடலாம்.
  • இப்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, ரயில் போக்குவரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும்.
  • கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • ஓய்வுபெறும் ஊழியர்கள் மற்றும் பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிதியை பணமாகத் தராமல், புல்லட் பாண்ட்டாக – ஒருவகையான நிதி பத்திரம் – தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்து தான் பணமாக்க முடியும்).
  • தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
  • அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது

என்பது போன்ற கொடூரமான பரிந்துரைகளை, அவற்றை அமுல்படுத்துவதற்கான கால இலக்குடன் வழங்கியிருக்கிறது இக்குழு.

ரயில்வே தனியார்மயம்
குழுவின் பரிந்துரைகள் வெளியாகி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்ததும் மோடியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்களைப் போல போகும் இடமெல்லாம் மழுப்பினர்.

இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்ததும் மோடியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்களைப் போல போகும் இடமெல்லாம் மழுப்பினர். “நிதி திரட்டுவது தான் நோக்கமே தவிர, எந்த நிலையிலும் ரயில்வே துறை தனியார்மயமாகாது” என்றார் சுரேஷ் பிரபு.

பொய்யிலும் ஆங்காங்கே உண்மைகள் தூவி சதுரங்கவேட்டை நாயகன் போல பேசுவதில் மோடியை மிஞ்ச யாருமே இருக்க முடியாது. அவ்வாறு, வாரணாசியில் செய்தியாளர்களிடமும், ரயில்வே தொழிற்சங்கத்தினரிடமும் பேசிய போது மோடி கூறினார்.

“ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் ஒரு போதும் இல்லை, இதில் அன்னிய நேரடி முதலீடு பற்றி கவலைப்படத் தேவையில்லை. அன்னிய நேரடி முதலீடு ரயில்வேயின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றும், “இந்த அந்நிய நேரடி முதலீடு தான், ரயில்வே துறையில் தனியார்மயம் கொண்டுவரப்படுகிறது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்றும், “கடந்த 60 ஆண்டுகளில் காணாத அளவுக்கு ரயில்வே துறையில் வளர்ச்சியை காண விரும்புகிறேன். ரயில்வேயை போக்குவரத்துக்கான கருவியாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதை நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் துறையாக மாற்ற விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

மோடி - ஒபாமா
அந்நிய முதலீடு, மாற்றம், வளர்ச்சி, சீர்திருத்தம், நவீனமயம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் ஏகாதிபத்தியதாசர்களின் அகராதியில் ஒரே பொருள் தான்.

அந்நிய முதலீடு, மாற்றம், வளர்ச்சி, சீர்திருத்தம், நவீனமயம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் ஏகாதிபத்தியதாசர்களின் அகராதியில் ஒரே பொருள் தான். அரசு துறைகளை தனியார்மயமாக்குவது, தூக்கிக் கொடுப்பது, ஊத்திமூடுவது என்பது தான் அதன் பொருள். உண்மையை மூடிமறைக்க புத்திசாலி போல பேசுவதாக நினைத்துக்கொண்டு, மோடி அவிழ்த்துவிட்டிருக்கும் அனைத்தும் ரயில்வேயை தனியார்மயமாக்கத்தான் போகிறோம் என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன.

ஜெயலலிதா மற்றும் மோடியின் அடிமைகளில் சிறந்த அடிமையாகவும், ஊடக ஜால்ராவாகவும் இருந்து வரும் தினமணி வைத்தி ‘மாற்றம் அவசியம்’ என்கிற பெயரில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். “ரயில்வேயை தனியார்மயமாக்குவது மக்கள் விரோத போக்கல்ல, ரயில்வேயில் நடக்கவிருக்கும் மாற்றங்களை முடக்க முயற்சிப்பது தான் மக்கள் விரோதப் போக்கு” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “விவேக் தேவ்ராய் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும் பகுதியை அப்படியே நிறைவேற்றினால் தான் ரயில்வே துறை பிழைக்கும்” என்றும், “இக்குழுவின் பரிந்துரைகள் ரயில்வே துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறவில்லை. ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று தான் பரிந்துரைத்திருக்கிறது” என்றும் அக்குழுவின் அறிக்கைக்கும், தனியார்மயத்திற்கும் புதிய விளக்கமளித்திருக்கிறார் வைத்தி மாமா.

ரயில்வேயில் தனியார்மயம் என்பது தற்போதே அமுலில் தான் இருக்கிறது. ரயில்களை சுத்தப்படுத்துவது, உணவு சமைத்து பரிமாறுவது, குளிர்சாதனப் பெட்டிகளில் கம்பளிப் போர்வை வழங்குவது, ரயில் நிலையங்களில் கழிவறைகளை பராமரிப்பது ஆகியவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனியாரின் கைகளால் சுத்தப்படுத்தப்பட்டு வரும் ரயில்கள் என்ன லட்சணத்தில் இருக்கின்றன, கழிவறைகள் எப்படி இருக்கின்றன, கேட்டரிங் எப்படியிருக்கிறது என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். மட்டுமின்றி இவற்றில் எல்லாம் வரையமுறையின்றி கட்டணக் கொள்ளையும் அடிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து ரயில்வே
1990 களில் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு

தினமணி வைத்தி உட்பட பல அறிவாளிகளும் ரயில்வேயை தனியார்மயமாக்குவது அவசியம், தனியார்மயமானால் தான் சேவைத்தரம் உயரும், வசதிகள் பெருகும் என்று வாதிடுகின்றனர். பல செய்தி ஊடகங்கள் இதற்காகவே பிரச்சார இயக்கம் நடத்தி வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் ஐரோப்பாவில் உள்ள  ஒரு ரயில் நிலையத்தையும் காட்டி உங்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் போல வேண்டுமா, அல்லது இந்த மாதிரி வேண்டுமா என்று கேட்கின்றன.

இவர்கள் விருப்பப்படி ரயில்வே துறையில் தனியார் முதலாளிகளை அனுமதித்தால்

  • தற்போது இயக்கப்படும் பல தடங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்.
  • வருமானம் அதிகமுள்ள பெருநகரங்களுக்கு மட்டும் அதிக சேவை இருக்கும். அதிலும் கட்டணம் பல மடங்கு உயரும்.
  • சிறு நகரங்களுக்கோ, ஊரகப் பகுதிகளுக்கோ போகும் ரயில்களும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒழிக்கப்படும்.
  • தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள். ஒப்பந்த சேவை அடிப்படையில் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்கள் கசக்கி பிழிந்து வேலை வாங்கப்படுவார்கள். பாதுகாப்பு உணர்வு அதிகம் தேவைப்படும் ரயில்வேயில் அது குறையும்.
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவ்வப்போது தீர்மானிக்கப்படுவது போல கட்டணங்களும் சீசனுக்கேற்ப, கிராக்கிக்கேற்ப தீர்மானிக்கப்படும். இதனால் காசுள்ளவருக்கே உடன் சேவை என்று ரயில்வே துறை மாற்றியமைக்கப்படும்.

ஒரு பொதுத்துறை தனியார் மயமானால் என்ன தீமை?

இந்தியாவில் உள்ள எந்த குக்கிராமத்திற்கு இணைப்பு கேட்டாலும் பி.எஸ்.என்.எல் வழங்கும். ஆனால் டாடாவோ, அம்பானியோ, அவ்வாறு வழங்குவதில்லை. அதே போல இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அடிக்கட்டுமானங்களை பயன்படுத்திக்கொண்டு தான் இன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. டிராயிடமிருந்து அலைக்கற்றைகளை பெற்று சேவை வழங்குவதற்கு பதிலாக, அவற்றை பல நாட்கள் கையில் வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களிடம் பேரம் பேசி எப்படி கொளையடித்தனவோ அப்படி கொள்ளையடிக்கும் துறையாக ரயில்வேயும் மாறிவிடும்

இதற்கு சிறந்த உதாரணம் இங்கிலாந்து ரயில்வே. 1990 களில் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு. 2013-ம் ஆண்டு Centre for Research on Socio-Cultural Change (CRESC) என்கிற குழு “ரயில்வேயை தனியார்மயமாக்கியதால் கிடைத்த நன்மை என்ன” என்கிற ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் இறுதியில் தொகுக்கப்பட்ட  அறிக்கைக்கு “ஒரு மாபெரும் ரயில் கொள்ளை-ரயில்வே தனியார்மயத்திற்கு பிறகு” என்று அவர்கள் பெயரிட்டனர்.

இந்திய ரயில்வேயை கொள்ளையடிப்பதற்காக மோடி நிபுணர் குழு அமைத்தார், நிபுணர்களும் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டனர். அடுத்து, கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும். இங்கிலாந்து ரயில்வேயில் என்ன நடந்ததோ அது தான் இந்தியன் ரயில்வேயிலும் நடக்கப்போகிறது. துவங்குவதற்கு முன்பே முடிவு தெரிந்துவிட்டது, நாம் என்ன செய்யப்போகிறோம் ?

– வையவன்

மேலும் விபரங்களுக்கு

போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்

0

சி‌ஆர்‌ஐ தொழிலாளர் நேர்காணல் – 2

கோவையின் புறநகரான பெரியநாயக்கன்பாளையத்தை ஒட்டி அமைந்திருக்கும் தெக்குப் பாளையம் கிராமத்தில்தான் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளி ரவிக்குமார் வசிக்கிறார். திருநெல்வேலியிலிருந்து 25 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்து பல ஊர்களுக்கு மாறி பின்னர் இறுதியாக தெக்குப்பாளையத்துக்கு வந்து வாடகை அறையில் ஒரு மளிகைக் கடை வைத்துள்ளார்கள் வள்ளியம்மாள் தம்பதியினர்.

அவர்கள் இருக்கும் வாடகை வீட்டில் 10-க்கு 10 அறையும் அதை விட சிறிய சமையலறையும் இருக்கிறது. இங்கு ரவிக்குமாரின் தாயார் வள்ளியம்மாளும் அருகே மற்றொரு வீட்டில் ரவிக்குமாரின் குடும்பமும் இருக்கிறது. தனது இளமையின் ஆரம்பக் கட்டத்தில் சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ந்த ரவிக்குமார் சுமார் 11 வருடங்களாக உழைத்து வருகிறார். கடைசியாக அவர் வாங்கி வந்த சம்பளம் 6500.

சங்கம் துவங்கிய பின்னர் தொழிலாளர் நலத்துறையில் வழக்குப் போட்டு 35 பேரை நிரந்தரம் செய்ய உத்தரவு வாங்கிய பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சி‌.ஆர்‌.ஐ நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கிறது. அங்கு அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்புக்காக 5 மாதங்களாக காத்திருக்கும் தொழிலாளிகளில் இவரும் ஒருவர். 10-ம் தேதி போராட்டப் பந்தலில் இருந்த இவரையும் சண்முகம் என்ற தொழிலாளியையும் 12 -ம் தேதி, “போராட்டமா நடத்துறீங்க போராட்டம்” என்று மிரட்டியவாறே கைது செய்தார் சரவணம்பட்டி பி9 காவல் நிலைய ஆய்வாளர் சோதி. “வீட்டில் இருந்து யாராவது வந்தால் விட்டு விடுவோம் போன் பண்ணி சொல்லுங்க“ என நயவஞ்சகமாக கூறி இவரது மனைவியை வரவழைத்துள்ளார்.படிப்பறிவில்லாத அந்தப் பெண்ணிடம் ஒன்றுமே எழுதாத வெள்ளைத் தாளில் கை ரேகை வாங்கிக் கொண்டு, “மூணு நாள்ல வந்துடுவாரு” என்று கூறி அனுப்பியுள்ளார் சோதி.

முதல் தகவல் அறிக்கையில், சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ நிறுவனக் கிளையின் முன்பு உள்ள போராட்டப் பந்தலில் இதர தொழிலாளிகளுக்காக மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த சண்முகத்தையும் கேட்டின் முன்பு உள்ள கேமரா சாட்சியாக அவருக்கு உதவியாக நின்று கொண்டிருந்த ரவிக்குமாரையும் மணியக்காரன்பாளையத்தில் கைது செய்ததாக எழுதியுள்ளார் பொய்யர் சோதி.

இவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு விவரம் என்னவெனில், சி‌.ஆர்‌.ஐ நிறுவனத் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள் என்றும், சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்தை தீ வைத்துக் கொளுத்துவதாகவும் உடைத்து நொறுக்குவதாகவும் மிரட்டல் விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். 90 நாட்களாக இல்லாமல் 10ஆம் தேதிதான் திடீரென்று இப்படிப் பொய்க் கதை எழுதியிருக்கிறார் பொய்யர் சோதி.

இதை விட தோழர் விளவை இராமசாமியிடம் போலீசாரே எழுதி கையெழுத்துக் கேட்ட ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் செழுமையான திரைக்கதை கொண்டது. சினிமாக்களில் மட்டுமே அறிமுகமான இம்மாதிரியான காட்சிகளை கோயம்புத்தூரில் நடத்திக் காட்டியவர் பொய்யர் சோதி. பின்னர், இரவு வரை அலைக்கழிக்கப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர் இருவரும்.

இந்த சிறை வாசம் ரவிக்குமாரை பாதித்ததை விட அந்த எளிய தாயின் மனதையும் கடுமையாக பாதித்திருந்தது. இதனிடையில் ஊராரின் தூக்க விசாரிப்புகள் வேறு. இந்த பாதிப்பு 12-ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தாசில்தார் சந்திப்பிலும் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது. அதற்கு ஒரு உதாரணமாக, கோவை மாவட்ட தாசில்தாரை நேர் நின்று, “நீ எத்தன சூட்கேசு வாங்குன..?” என வள்ளியம்மாள் கேட்டதை கூறலாம்.

இனி வள்ளியம்மாள்.,

12-ம் தேதி உங்க அனுபவத்த சொல்லுங்க..

வள்ளியம்மாள்
நாம சங்கத்து மூலமா போறோம். எப்படியாவது நாம ஜெவிச்சு வரணும் சாமி. காசு இல்லாட்டிலும் பரவால்ல. கேச அடிச்சு வரணும்.

நான் இதுக்கு முன்னாடி வர்ல. மருமவ தான் வந்திருக்கா.. நான் அன்னிக்குதான் மொத தடவ வரேன். அன்னிக்கு ரோட்டுல கூட்டம் போட்டு பேசுனோம். சௌந்தர்ராசு கொடுமையெல்லாம் சொன்னாங்க. நாங்களும் பேசுனோம். “எங்க பொண்டாட்டி புள்ள வயித்துல அடிச்சு பசங்கள டேசனுக்கு அனுப்புறாங்க” அப்டின்னு பேசுனோம். பேச பேச உள்ள செயிலுக்கு போங்கனாங்க

அப்புறம் எங்கள குடோன்ல அடச்சுப் போட்டாங்க. காபி கொண்டு வந்து கொடுத்தாங்க., “நாங்க காப்பி குடிக்க மாட்டோம். எங்க பசங்க என்ன பண்ணுனாங்க..? எதுக்கு அடைக்கறாங்க..? வேலைய ஏன் நிப்பாட்டுனாங்க மூணு மாசமா…? அதுக்கு எல்லாம் ஒரு வழிப்பாடு செஞ்சாதான் நாங்க மற்றதெல்லாம் பேசுவோம்” எல்லாருமே பேசுனோம்.

“தாசில்தாரு வந்தாதான் போவோம்”னு சொன்னோம். அப்புறம் தாசில்தாரு வந்து பேசுனாரு. 22-ம் தேதி எல்லாம் நியாயம் பேசி தீர்ப்பாயிரும்ன்னு சொன்னாரு.

தாசில்தாரு கிட்ட நீங்க என்ன பேசுனீங்க..?

“இல்ல சார், நீங்க கண்டிப்பா முடிவு சொல்லணும். நீங்க கையெழுத்து போட்டு நோட்டீசுல கொடுக்கணும்.” அப்டினு சொல்லி அவரும் நோட்டீஸ் கொடுத்தாரு.

அப்புறம் 22-ம் தேதி அவன் (முதலாளி) வர்ல. அப்பவே நாங்க சொன்னோம். பேச்சுவார்த்தைக்கு நாங்க வரோம்னு. அப்புறம் இவங்களே இப்ப போயிட்டு வந்தாங்க. இப்ப இல்லைனு லெட்டர் கொடுத்துட்டானாம். இனி வேற ஏதாவது பண்ணனும். (22-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் கலந்து கொள்ளாமல் ஒரு கடிதம் மட்டும் கொடுத்திருந்தது. அதில் ‘சங்கம் சௌந்திர ராஜனை அவமானப்படுத்துகிறது. திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தது. நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் எனக் கூறியிருக்கிறது)

கோர்ட்டில் பார்த்துக்கலாம் என்று நிர்வாகம் கூறியிருப்பதை பற்றி

அவங்க கோர்ட்டுல பாக்கலாம்கிறாங்க, கோர்ட்டுல போயி நம்மலாள பார்க்க முடியுமா சாமி..

நாம சங்கத்து மூலமா போறோம். காசு இல்லைனாலும் பரவால்ல, கேசுல நாம ஜெயிச்சோம்னு வரணும். முதலாளி கிட்ட நாம மண்டி போடக்கூடாது. பதினோரு வருசம் மண்டி போட்டாச்சு. இனிமே நம்ம கைதான் ஒசர இருக்கணும். முதலாளி கை கீழதான் போகணும்.

பக்கத்து வீடு சொந்தக் காரங்க என்ன சொல்றாங்க..?

“சங்கத்து காரங்க சங்கத்தை பார்த்துக்கிடுவாங்க. நீங்க வேற பக்கம் வேலைக்கு போக வேண்டியது தானே”. அப்டிங்கராங்க. எங்க பையன் “அவங்களா நாங்களா…? ஒனரா நாமளா..? கண்டிப்பா பாத்துதான் தீரணும்”ங்குறான்.

பத்து வருசத்துக்கு மேல வேலை செய்துட்டு விட்டுட்டு போக முடியுமா…?

ஹும்ம்., நான் சொந்தக்காரங்க கிட்ட இததான் சொல்றேன். எப்புடி உட முடியும். உயிர பூரா எடுத்தாச்சு சாமி, இனி சக்கைதான். இப்ப வயசும் ஆயிட்டு. அவனுக்கும் முப்பந்தஞ்சு முப்பத்தாறு ஆகுது. இனி வேற கம்பெனிக்கு போயி எத்தன வருசம் பாடுபட முடியும். கொழந்த குட்டிகள எப்படி படிக்க வைக்க முடியும். ரெண்டும் பொட்டப் புள்ள. ரெண்டையும் எப்பிடி படிக்க வெச்சு பட்டம் வாங்க முடியும். இவனுக்கு பாடுபட்டு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிட்டு சக்கய கொண்டாந்து போட்டுட்டான். இப்ப இந்திக்கார பசங்க நெறைய வந்துட்டாங்களா… இப்ப இவங்களா வேணாம்னுட்டு 3 ரூபா 4 ரூபா கொடுத்தாலும் இந்திக்கார பசங்க வேலை செய்றதுக்கு ரெடியா இருக்காங்க.. அவங்கள தான் எடுக்கலாம்னு கம்பெனிக்காரனுக்கு ஒரு நெனப்பு இருக்கும் போல.

ஊருக்குள்ள என்ன சொல்லுறாங்க

ஊருக்குள்ளதான், ஓனரு ஜெயிச்சிருவாரு, நாம தான் தோத்துப் போவோம்ங்கறாங்க. பணக்காரன் கிட்ட போயி மொத முடியுமா..? அவன் கடல் தண்ணி நீங்க குட்டத் தண்ணீம்பாங்க..! அவங்க, காச வெச்சு போலீசு எல்லாத்துக்கும் கொடுத்துருவாங்க. நீங்க என்னத்த செய்வீங்க…. அப்பிடிங்கறாங்க. மோதிப் பார்த்துட்டு தானே நிப்போம்னு நாங்க சொல்லுவோம்.

சி‌.ஆர்‌.ஐ முதலாளிய பத்தி என்ன நினைச்சிருந்தீங்க இதுக்கு முன்னாடி, இப்போ..?

பையன் வேலைக்கு போறான் அவனுக்கு தெரியும்னு இருந்தோம். வெளம்பரத்துல பூரா, பம்பு கம்பெனி பம்பு கம்பெனினு போடவும், நல்ல முதலாளின்னுதான் நெனச்சோம். போனசு ஒரு மூணு போனசு வாங்குனான். தீவாளிக்கு அப்ப கொஞ்சம் பரவாயில்லன்னு நெனச்சோம். அப்புறம் தானே தெரியுது சம்பளம் கம்மி பண்ணிதானே போனசே கொடுத்துருக்கறான் அவன். சம்பளம் 4000, 5000 தானே பசங்களுக்கு போட்டுருக்குறான். இப்ப பையன் சிக்கிட்டானேன்னு வேதனைப் பட்டுகிட்டு இருக்கறோம். இப்பவும் ரெண்டு மூணு கம்பெனிக்கு கூப்புடுறாங்க., எல்‌எம்‌டபில்யு க்கு கூப்புடுறாங்க. ரெண்டு மாசமா கூப்பிட்டுகிட்டு இருக்காங்க, எங்க பையன் அத பாத்துட்டு தாம்மா வருவேன்னு கொடிய புடிக்கறான்.

சங்கத்தின் சார்பாக வேலை நிறுத்தம் செய்யவே இல்லை. அவங்களாதான் கதவ அடச்சாங்க..?

ஆமாம். அவன்தான் மொதல்ல அடச்சது. போலீஸ்காரங்களுக்கு தெரியுமே. ஏன் நீ அடச்சன்னு அவனுகள கேக்கோனும். இப்ப டி‌.எஸ்‌.பி, எஸ்‌.பி எல்லாருமே ஓனர கேக்கணும். இவனுவ ஓனர கேக்காம பசங்கள கேட்டு மெரட்டுனா என்ன பண்ண முடியும்.

நாம நேர்மையா இருந்தும் எல்லாரும் முதலாளிக்கு சாதகமா இருக்காங்களே..?

அது தான் காசை வீசிட்டான்ல சாமி, அவங்கிட்ட காசு பேசுது. அன்னிக்கு, “எத்தன சூட்டு கேசு வாங்குனீங்க, சௌந்தர் ராசு எத்தன சூட்டு கேசு கொடுத்தான்”னு கேட்டேன்.

தாசில்தாரு, “என்னமா, பொம்பளைங்க இப்பிடி பேசுறீங்க”, அப்டிங்கறான்.

“என்ன எப்பிடி பேசிட்டாங்க. நீங்க சொல்றது என்ன நடக்கறது என்ன, இப்பிடி வந்து அடையணும்னு எங்களுக்கு விதியா சார்” அப்டின்னு சொன்னேன். எல்லாம் திரு திருன்னு முழிக்கரானுக. டெண்ட் கொடியெல்லாம் திருடிட்டு போனத பத்தி கேட்டா, இன்னும் கொடுக்கல யா அப்டின்னு திரும்பி கேக்கராணுக., எப்புடி.?

சங்க நிர்வாகிகளை கைது செய்தது பற்றி என்ன நினைக்கறீங்க…?

இவங்கள அரேஸ்டு பண்ணாதான், வெளியே பேச மாட்டாங்கன்னு அவங்கள மொதல்ல அடச்சுப் போட்டாங்க.நாம காந்திபுரத்துல போட்டு இருக்க கூடாது. அங்க மண்டபத்துக்கே போயிருக்கணும்.

அங்கதான் மூணு அடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்காங்களே..?

எந்த போலீசுகாரனுக நம்மள என்ன பண்ணிருவான் தம்பி, நாம யாரையும் வெட்டிட்டு வந்தமா குத்திட்டு வந்தமா.. என்ன பண்ணிட்டு வந்தோம். எதுக்கு பயரனும். எங்களுக்கு பதில் சொல்லிட்டு அவன் போயி தாலி கட்டட்டும். நாங்க அங்கண்ணுதான் நெனச்சு வந்தோம் அப்புறம் தானே இங்கன்னு தெரிஞ்சது.

அவன் நல்ல ஒனரா இருந்துருந்தா, எல்லோருக்கும் துணி மணி எடுத்து கொடுத்து பத்திரிக்கை வச்சு சந்தோஷமா வாங்க கல்யாணத்துக்குன்னு சொல்லிருக்கணும்

உங்க மகன் கைதானாதைப் பற்றி..?

எனக்கு தூக்கமே இல்ல. ஏழு நாளா. போனவன உள்ள புடிச்சு போட்டுட்டாங்க. அவங்க வீட்டுக்காரி போலீசுக்காரன் கேட்டதும் கைரேகை உருட்டீட்டு வந்திருக்கறா..

அடுத்து என்ன மாதிரி போராட்டம் பண்ணலாம்னு நினைக்கறீங்க..?

சௌந்தர்ராசு வீட்டுக்கு முன்னாடி எல்லோரும் போயி உக்காந்துரலாம். ஒண்ணு வேலை கொடு. இல்ல நஷ்ட ஈடு கொடு. அவனுக்கு இவனுக்குன்னு கொடுக்கறீல. கட்சிக்காரனுக்கு கொடுக்கற, போலீசுக்கு கொடுக்கற, கலெக்டர் தாசில்தாருக்கு கொடுக்கறீங்க, அந்தக் காச இல்லாத பசங்களுக்கு உனக்கு வேலை செஞ்ச பசங்களுக்கு கொடு. அப்டின்னு கேட்கணும். கண்டிப்பா வீட்டுக்கு போகணும்.

போராட்டங்களினால் மீண்டும் சிறைக்கு போவது பற்றி..?

மொதல்ல தான் கொஞ்சம் பயமா இருந்துச்சு. இப்ப இல்லை. இந்த தம்பிங்கல்லாம் (தெக்குப்பாளையத்தை சேர்ந்த வேறு சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள்) இருக்காங்கள்ல. இவங்க நல்லா பாத்தாங்க. என்ன வேணும்மா..? ன்னு தான் கேட்டாங்களே தவிர வேறு ஒண்ணும் சொல்லல. அவங்க அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட் பன்னாங்க. நானுங் கூட சொல்லல, அவங்க அம்மாதான் கேட்டுச்சு.

“உங்க பையன் என்ன வேலை செய்வானோ அக்கா, அதே வேலைக்கு எங்க பசங்கள கூட்டீடு போங்க. ஜாமான் வாங்கிக் கொடுப்பான். உங்களுக்கு எங்க போகணுமோ கூட்டிட்டு போங்க”. அதே மாதிரி பசங்களும் நடந்துக்கிட்டாங்க. “அம்மா, உங்கள எங்க போகணுமோ கூட்டிட்டு போறோம். அண்ணன் இல்லைனு வருத்தப்படாதீங்க”, அப்டின்னு தான் சொன்னாங்க.

-தொடரும்

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை