privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்

போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்

-

சி‌ஆர்‌ஐ தொழிலாளர் நேர்காணல் – 2

கோவையின் புறநகரான பெரியநாயக்கன்பாளையத்தை ஒட்டி அமைந்திருக்கும் தெக்குப் பாளையம் கிராமத்தில்தான் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளி ரவிக்குமார் வசிக்கிறார். திருநெல்வேலியிலிருந்து 25 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்து பல ஊர்களுக்கு மாறி பின்னர் இறுதியாக தெக்குப்பாளையத்துக்கு வந்து வாடகை அறையில் ஒரு மளிகைக் கடை வைத்துள்ளார்கள் வள்ளியம்மாள் தம்பதியினர்.

அவர்கள் இருக்கும் வாடகை வீட்டில் 10-க்கு 10 அறையும் அதை விட சிறிய சமையலறையும் இருக்கிறது. இங்கு ரவிக்குமாரின் தாயார் வள்ளியம்மாளும் அருகே மற்றொரு வீட்டில் ரவிக்குமாரின் குடும்பமும் இருக்கிறது. தனது இளமையின் ஆரம்பக் கட்டத்தில் சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ந்த ரவிக்குமார் சுமார் 11 வருடங்களாக உழைத்து வருகிறார். கடைசியாக அவர் வாங்கி வந்த சம்பளம் 6500.

சங்கம் துவங்கிய பின்னர் தொழிலாளர் நலத்துறையில் வழக்குப் போட்டு 35 பேரை நிரந்தரம் செய்ய உத்தரவு வாங்கிய பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சி‌.ஆர்‌.ஐ நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கிறது. அங்கு அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்புக்காக 5 மாதங்களாக காத்திருக்கும் தொழிலாளிகளில் இவரும் ஒருவர். 10-ம் தேதி போராட்டப் பந்தலில் இருந்த இவரையும் சண்முகம் என்ற தொழிலாளியையும் 12 -ம் தேதி, “போராட்டமா நடத்துறீங்க போராட்டம்” என்று மிரட்டியவாறே கைது செய்தார் சரவணம்பட்டி பி9 காவல் நிலைய ஆய்வாளர் சோதி. “வீட்டில் இருந்து யாராவது வந்தால் விட்டு விடுவோம் போன் பண்ணி சொல்லுங்க“ என நயவஞ்சகமாக கூறி இவரது மனைவியை வரவழைத்துள்ளார்.படிப்பறிவில்லாத அந்தப் பெண்ணிடம் ஒன்றுமே எழுதாத வெள்ளைத் தாளில் கை ரேகை வாங்கிக் கொண்டு, “மூணு நாள்ல வந்துடுவாரு” என்று கூறி அனுப்பியுள்ளார் சோதி.

முதல் தகவல் அறிக்கையில், சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ நிறுவனக் கிளையின் முன்பு உள்ள போராட்டப் பந்தலில் இதர தொழிலாளிகளுக்காக மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த சண்முகத்தையும் கேட்டின் முன்பு உள்ள கேமரா சாட்சியாக அவருக்கு உதவியாக நின்று கொண்டிருந்த ரவிக்குமாரையும் மணியக்காரன்பாளையத்தில் கைது செய்ததாக எழுதியுள்ளார் பொய்யர் சோதி.

இவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு விவரம் என்னவெனில், சி‌.ஆர்‌.ஐ நிறுவனத் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள் என்றும், சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்தை தீ வைத்துக் கொளுத்துவதாகவும் உடைத்து நொறுக்குவதாகவும் மிரட்டல் விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். 90 நாட்களாக இல்லாமல் 10ஆம் தேதிதான் திடீரென்று இப்படிப் பொய்க் கதை எழுதியிருக்கிறார் பொய்யர் சோதி.

இதை விட தோழர் விளவை இராமசாமியிடம் போலீசாரே எழுதி கையெழுத்துக் கேட்ட ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் செழுமையான திரைக்கதை கொண்டது. சினிமாக்களில் மட்டுமே அறிமுகமான இம்மாதிரியான காட்சிகளை கோயம்புத்தூரில் நடத்திக் காட்டியவர் பொய்யர் சோதி. பின்னர், இரவு வரை அலைக்கழிக்கப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர் இருவரும்.

இந்த சிறை வாசம் ரவிக்குமாரை பாதித்ததை விட அந்த எளிய தாயின் மனதையும் கடுமையாக பாதித்திருந்தது. இதனிடையில் ஊராரின் தூக்க விசாரிப்புகள் வேறு. இந்த பாதிப்பு 12-ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தாசில்தார் சந்திப்பிலும் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது. அதற்கு ஒரு உதாரணமாக, கோவை மாவட்ட தாசில்தாரை நேர் நின்று, “நீ எத்தன சூட்கேசு வாங்குன..?” என வள்ளியம்மாள் கேட்டதை கூறலாம்.

இனி வள்ளியம்மாள்.,

12-ம் தேதி உங்க அனுபவத்த சொல்லுங்க..

வள்ளியம்மாள்
நாம சங்கத்து மூலமா போறோம். எப்படியாவது நாம ஜெவிச்சு வரணும் சாமி. காசு இல்லாட்டிலும் பரவால்ல. கேச அடிச்சு வரணும்.

நான் இதுக்கு முன்னாடி வர்ல. மருமவ தான் வந்திருக்கா.. நான் அன்னிக்குதான் மொத தடவ வரேன். அன்னிக்கு ரோட்டுல கூட்டம் போட்டு பேசுனோம். சௌந்தர்ராசு கொடுமையெல்லாம் சொன்னாங்க. நாங்களும் பேசுனோம். “எங்க பொண்டாட்டி புள்ள வயித்துல அடிச்சு பசங்கள டேசனுக்கு அனுப்புறாங்க” அப்டின்னு பேசுனோம். பேச பேச உள்ள செயிலுக்கு போங்கனாங்க

அப்புறம் எங்கள குடோன்ல அடச்சுப் போட்டாங்க. காபி கொண்டு வந்து கொடுத்தாங்க., “நாங்க காப்பி குடிக்க மாட்டோம். எங்க பசங்க என்ன பண்ணுனாங்க..? எதுக்கு அடைக்கறாங்க..? வேலைய ஏன் நிப்பாட்டுனாங்க மூணு மாசமா…? அதுக்கு எல்லாம் ஒரு வழிப்பாடு செஞ்சாதான் நாங்க மற்றதெல்லாம் பேசுவோம்” எல்லாருமே பேசுனோம்.

“தாசில்தாரு வந்தாதான் போவோம்”னு சொன்னோம். அப்புறம் தாசில்தாரு வந்து பேசுனாரு. 22-ம் தேதி எல்லாம் நியாயம் பேசி தீர்ப்பாயிரும்ன்னு சொன்னாரு.

தாசில்தாரு கிட்ட நீங்க என்ன பேசுனீங்க..?

“இல்ல சார், நீங்க கண்டிப்பா முடிவு சொல்லணும். நீங்க கையெழுத்து போட்டு நோட்டீசுல கொடுக்கணும்.” அப்டினு சொல்லி அவரும் நோட்டீஸ் கொடுத்தாரு.

அப்புறம் 22-ம் தேதி அவன் (முதலாளி) வர்ல. அப்பவே நாங்க சொன்னோம். பேச்சுவார்த்தைக்கு நாங்க வரோம்னு. அப்புறம் இவங்களே இப்ப போயிட்டு வந்தாங்க. இப்ப இல்லைனு லெட்டர் கொடுத்துட்டானாம். இனி வேற ஏதாவது பண்ணனும். (22-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் கலந்து கொள்ளாமல் ஒரு கடிதம் மட்டும் கொடுத்திருந்தது. அதில் ‘சங்கம் சௌந்திர ராஜனை அவமானப்படுத்துகிறது. திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தது. நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் எனக் கூறியிருக்கிறது)

கோர்ட்டில் பார்த்துக்கலாம் என்று நிர்வாகம் கூறியிருப்பதை பற்றி

அவங்க கோர்ட்டுல பாக்கலாம்கிறாங்க, கோர்ட்டுல போயி நம்மலாள பார்க்க முடியுமா சாமி..

நாம சங்கத்து மூலமா போறோம். காசு இல்லைனாலும் பரவால்ல, கேசுல நாம ஜெயிச்சோம்னு வரணும். முதலாளி கிட்ட நாம மண்டி போடக்கூடாது. பதினோரு வருசம் மண்டி போட்டாச்சு. இனிமே நம்ம கைதான் ஒசர இருக்கணும். முதலாளி கை கீழதான் போகணும்.

பக்கத்து வீடு சொந்தக் காரங்க என்ன சொல்றாங்க..?

“சங்கத்து காரங்க சங்கத்தை பார்த்துக்கிடுவாங்க. நீங்க வேற பக்கம் வேலைக்கு போக வேண்டியது தானே”. அப்டிங்கராங்க. எங்க பையன் “அவங்களா நாங்களா…? ஒனரா நாமளா..? கண்டிப்பா பாத்துதான் தீரணும்”ங்குறான்.

பத்து வருசத்துக்கு மேல வேலை செய்துட்டு விட்டுட்டு போக முடியுமா…?

ஹும்ம்., நான் சொந்தக்காரங்க கிட்ட இததான் சொல்றேன். எப்புடி உட முடியும். உயிர பூரா எடுத்தாச்சு சாமி, இனி சக்கைதான். இப்ப வயசும் ஆயிட்டு. அவனுக்கும் முப்பந்தஞ்சு முப்பத்தாறு ஆகுது. இனி வேற கம்பெனிக்கு போயி எத்தன வருசம் பாடுபட முடியும். கொழந்த குட்டிகள எப்படி படிக்க வைக்க முடியும். ரெண்டும் பொட்டப் புள்ள. ரெண்டையும் எப்பிடி படிக்க வெச்சு பட்டம் வாங்க முடியும். இவனுக்கு பாடுபட்டு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிட்டு சக்கய கொண்டாந்து போட்டுட்டான். இப்ப இந்திக்கார பசங்க நெறைய வந்துட்டாங்களா… இப்ப இவங்களா வேணாம்னுட்டு 3 ரூபா 4 ரூபா கொடுத்தாலும் இந்திக்கார பசங்க வேலை செய்றதுக்கு ரெடியா இருக்காங்க.. அவங்கள தான் எடுக்கலாம்னு கம்பெனிக்காரனுக்கு ஒரு நெனப்பு இருக்கும் போல.

ஊருக்குள்ள என்ன சொல்லுறாங்க

ஊருக்குள்ளதான், ஓனரு ஜெயிச்சிருவாரு, நாம தான் தோத்துப் போவோம்ங்கறாங்க. பணக்காரன் கிட்ட போயி மொத முடியுமா..? அவன் கடல் தண்ணி நீங்க குட்டத் தண்ணீம்பாங்க..! அவங்க, காச வெச்சு போலீசு எல்லாத்துக்கும் கொடுத்துருவாங்க. நீங்க என்னத்த செய்வீங்க…. அப்பிடிங்கறாங்க. மோதிப் பார்த்துட்டு தானே நிப்போம்னு நாங்க சொல்லுவோம்.

சி‌.ஆர்‌.ஐ முதலாளிய பத்தி என்ன நினைச்சிருந்தீங்க இதுக்கு முன்னாடி, இப்போ..?

பையன் வேலைக்கு போறான் அவனுக்கு தெரியும்னு இருந்தோம். வெளம்பரத்துல பூரா, பம்பு கம்பெனி பம்பு கம்பெனினு போடவும், நல்ல முதலாளின்னுதான் நெனச்சோம். போனசு ஒரு மூணு போனசு வாங்குனான். தீவாளிக்கு அப்ப கொஞ்சம் பரவாயில்லன்னு நெனச்சோம். அப்புறம் தானே தெரியுது சம்பளம் கம்மி பண்ணிதானே போனசே கொடுத்துருக்கறான் அவன். சம்பளம் 4000, 5000 தானே பசங்களுக்கு போட்டுருக்குறான். இப்ப பையன் சிக்கிட்டானேன்னு வேதனைப் பட்டுகிட்டு இருக்கறோம். இப்பவும் ரெண்டு மூணு கம்பெனிக்கு கூப்புடுறாங்க., எல்‌எம்‌டபில்யு க்கு கூப்புடுறாங்க. ரெண்டு மாசமா கூப்பிட்டுகிட்டு இருக்காங்க, எங்க பையன் அத பாத்துட்டு தாம்மா வருவேன்னு கொடிய புடிக்கறான்.

சங்கத்தின் சார்பாக வேலை நிறுத்தம் செய்யவே இல்லை. அவங்களாதான் கதவ அடச்சாங்க..?

ஆமாம். அவன்தான் மொதல்ல அடச்சது. போலீஸ்காரங்களுக்கு தெரியுமே. ஏன் நீ அடச்சன்னு அவனுகள கேக்கோனும். இப்ப டி‌.எஸ்‌.பி, எஸ்‌.பி எல்லாருமே ஓனர கேக்கணும். இவனுவ ஓனர கேக்காம பசங்கள கேட்டு மெரட்டுனா என்ன பண்ண முடியும்.

நாம நேர்மையா இருந்தும் எல்லாரும் முதலாளிக்கு சாதகமா இருக்காங்களே..?

அது தான் காசை வீசிட்டான்ல சாமி, அவங்கிட்ட காசு பேசுது. அன்னிக்கு, “எத்தன சூட்டு கேசு வாங்குனீங்க, சௌந்தர் ராசு எத்தன சூட்டு கேசு கொடுத்தான்”னு கேட்டேன்.

தாசில்தாரு, “என்னமா, பொம்பளைங்க இப்பிடி பேசுறீங்க”, அப்டிங்கறான்.

“என்ன எப்பிடி பேசிட்டாங்க. நீங்க சொல்றது என்ன நடக்கறது என்ன, இப்பிடி வந்து அடையணும்னு எங்களுக்கு விதியா சார்” அப்டின்னு சொன்னேன். எல்லாம் திரு திருன்னு முழிக்கரானுக. டெண்ட் கொடியெல்லாம் திருடிட்டு போனத பத்தி கேட்டா, இன்னும் கொடுக்கல யா அப்டின்னு திரும்பி கேக்கராணுக., எப்புடி.?

சங்க நிர்வாகிகளை கைது செய்தது பற்றி என்ன நினைக்கறீங்க…?

இவங்கள அரேஸ்டு பண்ணாதான், வெளியே பேச மாட்டாங்கன்னு அவங்கள மொதல்ல அடச்சுப் போட்டாங்க.நாம காந்திபுரத்துல போட்டு இருக்க கூடாது. அங்க மண்டபத்துக்கே போயிருக்கணும்.

அங்கதான் மூணு அடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்காங்களே..?

எந்த போலீசுகாரனுக நம்மள என்ன பண்ணிருவான் தம்பி, நாம யாரையும் வெட்டிட்டு வந்தமா குத்திட்டு வந்தமா.. என்ன பண்ணிட்டு வந்தோம். எதுக்கு பயரனும். எங்களுக்கு பதில் சொல்லிட்டு அவன் போயி தாலி கட்டட்டும். நாங்க அங்கண்ணுதான் நெனச்சு வந்தோம் அப்புறம் தானே இங்கன்னு தெரிஞ்சது.

அவன் நல்ல ஒனரா இருந்துருந்தா, எல்லோருக்கும் துணி மணி எடுத்து கொடுத்து பத்திரிக்கை வச்சு சந்தோஷமா வாங்க கல்யாணத்துக்குன்னு சொல்லிருக்கணும்

உங்க மகன் கைதானாதைப் பற்றி..?

எனக்கு தூக்கமே இல்ல. ஏழு நாளா. போனவன உள்ள புடிச்சு போட்டுட்டாங்க. அவங்க வீட்டுக்காரி போலீசுக்காரன் கேட்டதும் கைரேகை உருட்டீட்டு வந்திருக்கறா..

அடுத்து என்ன மாதிரி போராட்டம் பண்ணலாம்னு நினைக்கறீங்க..?

சௌந்தர்ராசு வீட்டுக்கு முன்னாடி எல்லோரும் போயி உக்காந்துரலாம். ஒண்ணு வேலை கொடு. இல்ல நஷ்ட ஈடு கொடு. அவனுக்கு இவனுக்குன்னு கொடுக்கறீல. கட்சிக்காரனுக்கு கொடுக்கற, போலீசுக்கு கொடுக்கற, கலெக்டர் தாசில்தாருக்கு கொடுக்கறீங்க, அந்தக் காச இல்லாத பசங்களுக்கு உனக்கு வேலை செஞ்ச பசங்களுக்கு கொடு. அப்டின்னு கேட்கணும். கண்டிப்பா வீட்டுக்கு போகணும்.

போராட்டங்களினால் மீண்டும் சிறைக்கு போவது பற்றி..?

மொதல்ல தான் கொஞ்சம் பயமா இருந்துச்சு. இப்ப இல்லை. இந்த தம்பிங்கல்லாம் (தெக்குப்பாளையத்தை சேர்ந்த வேறு சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள்) இருக்காங்கள்ல. இவங்க நல்லா பாத்தாங்க. என்ன வேணும்மா..? ன்னு தான் கேட்டாங்களே தவிர வேறு ஒண்ணும் சொல்லல. அவங்க அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட் பன்னாங்க. நானுங் கூட சொல்லல, அவங்க அம்மாதான் கேட்டுச்சு.

“உங்க பையன் என்ன வேலை செய்வானோ அக்கா, அதே வேலைக்கு எங்க பசங்கள கூட்டீடு போங்க. ஜாமான் வாங்கிக் கொடுப்பான். உங்களுக்கு எங்க போகணுமோ கூட்டிட்டு போங்க”. அதே மாதிரி பசங்களும் நடந்துக்கிட்டாங்க. “அம்மா, உங்கள எங்க போகணுமோ கூட்டிட்டு போறோம். அண்ணன் இல்லைனு வருத்தப்படாதீங்க”, அப்டின்னு தான் சொன்னாங்க.

-தொடரும்

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க