ஸ்பெயின் தேசத்து காளை போல ஸ்பக்ட்ரம் ஊழல்!

ஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் ‘அடக்குவதை’ நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து? அதில் தான் இருக்கிறது அந்த ‘வீரத்தின்’ சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி – அதனை வெல்கிறான் அந்த வீரன்.

இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது – அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க, காங்கிரசு, திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் – தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை – பந்தி பரிமாறியது ஆ.இராசா. இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம்: மக்களுக்குச் சொந்தமான ஒரு இயற்கை வளம்!

ஸ்பெக்ட்ரம் எனப்படும் மின் காந்த அலைக்கற்றையை ஒரு வளம் என்று எப்படிக் கொள்ள முடியும்? நமது நாட்டில் இதற்கு முன் ஆறுகளையும் மலைகளையும் நிலங்களையும்…. ஏன் கடலையே கூட பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துள்ளனர். அவையெல்லாம் பௌதீக உருவகமாக நம் கண் முன்னே நிற்பதால் அந்த திருட்டுத்தனம் நமக்கு எளிதில் புரிந்தது. ஆனால், திருட்டு என்று வந்து விட்டபின் கண்ணுக்குத் தெரியும் பொருளானால் என்ன கண்ணுக்குத் தெரியாத மின்காந்தப் புலமாக இருந்தால் என்ன?

நடந்து முடிந்துள்ள இந்தத் திருட்டைப் புரிந்து கொள்ளும் முன், மின்காந்த அலைக்கற்றையை ஒரு இயற்கை வளமாகக் கொள்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று நமது சட்டைப் பைக்குள் திணித்து வைக்கப்பட்டுள்ள செல்போனில் இருந்து கருணாநிதி ‘பாசத்தோடு’ அளித்துள்ள இலவச தொலைக்காட்சி வரையில் வளி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தான் இயங்குகின்றன. கிழட்டு எந்திரனை நமது படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க வைத்ததையும், நாம் செல்லும் இடமெல்லாம் ‘கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ என்று நுகர் பொருட்களின் விளம்பரங்களை நமது காதுகளுக்குள் திணிப்பதையும் சாத்தியப்படுத்தியிருப்பது இந்த அலைவரிசைகளில் இயங்கும் தொலைக்காட்சிகளும் பண்பலைகளும் தான்.

நிலத்தின் வளங்கள் எப்படி இயற்கையின் கொடையோ அதே போல் வளி மண்டலத்தின் படர்ந்திருக்கும் மின்காந்த அலைவரிசையும் இயற்கையின் கொடையே.

சந்தை – மக்களை இணைக்கும் முக்கிய ஊடகமே அலைக்கற்றை!

ஆறுகள், நிலங்கள், மலைகள், சமதளங்கள், காடுகள், கடல்கள், கனிவளங்கள் உள்ளிட்ட புவியியல் அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ள எல்லைக்கோடுகள் மட்டுமே இந்தியா எனும் தேசத்தை உண்டாக்கி விடவில்லை. அதனுள் இரத்தமும் சதையுமாய் வாழும் பல்வேறு இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த மனிதர்களும் சேர்ந்ததே இந்நாடு.

எனில், முந்தைய புவியியல் அம்சங்களை மட்டும் தனது எஜமானர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது என்று இந்திய அதிகாரவர்க்கத் தரகர்கள் சும்மா இருந்து விடமுடியாதல்லவா. அடுத்து இந்த எல்லைக்கோடுகளுக்குள் வாழும் உயிரியல் அம்சங்களை என்ன செய்வது? முதலாளிகளைப் பொருத்தளவில் இந்த நூறுகோடி மக்களும் ஒரு பெரிய சந்தை.

அவர்கள் உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ – அவற்றை இந்த சந்தை நுகர்ந்தாக வேண்டும். அதை எப்படித் தள்ளி விடுவது? முகேஷ் அம்பானி நமது செவ்வாய்க்கிழமை மார்க்கெட்டில் ஜமுக்காளத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளை கடை விரித்து ‘பத்து ரூவாய்க்கு ரெண்டு’ என்று கூவும் அப்பாவி வியாபாரியா என்ன?

இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகம் தேவை. அந்த ஊடகங்களுக்கு தமது பிரதான நிகழ்ச்சிகளான விளம்பரங்களையும் சைடு கேப்பில் அழுகுணி சீரியல்களையும் ஒலிபரப்ப அலைவரிசை தேவை. இது சென்ற தலைமுறையினருக்கு – அடுத்த தலைமுறையினருக்கு? செல்போன்கள்!

‘இதோ நான் தூங்கி எழுந்து விட்டேன்’ என்பதில் தொடங்கி, ‘இதோ இப்போது நான் கக்கூசில் இருக்கிறேன்’ என்பதில் தொடர்ந்து, ‘இதோ எனக்கு கொட்டாவி வருகிறது’ என்பது வரைக்குமான ‘மிக முக்கிய’ தகவல்களை நண்பர்களோடு ட்விட்டரில் பகிர்ந்து கொள்வதாகட்டும்; என்ன சினிமா பார்க்கலாம், எதை வாங்கலாம், எங்கே வாங்கலாம் என்பது வரைக்குமான சகல கேள்விகளுக்குமான பதில்கள் இணையத்தில் இருக்கிறது – அது செல்போனுக்கும் வருகிறது. இது போதாதா முதலாளிகளுக்கு?

எதிர்காலத்தில் தீர்மானகரமானதொரு  ஊடகமாக உருவெடுக்கும் சாத்தியம் செல்போனுக்கு உள்ளது. இதை நாம் வார்டு கவுன்சிலர் தேர்தலில் “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எச்சிலூற இறைஞ்சு வரும் எஸ்.எம்.எஸ் அளவுக்கு சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு பெரும் சந்தையை எளிதில் தடையில்லாமல் அணுகுவதற்கான பாதை தான் அலைக்கற்றைகள். அந்தப் பாதையை, யார் – எப்படி – எந்த விதத்தில் – எந்த அளவுக்குப் – பயன்படுத்துவது என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உலகளவில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே உரித்தானது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ஒதுக்கியதில் பதுங்கிய மாபெரும் ஊழல்!

வானொலி, தொலைக்காட்சி, பண்பலை, செல்போன்கள் எல்லாம் குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்குவது தான். இந்த அலைவரிசை என்பதை ஒரு சாலை என்பதாக உருவகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், மேலே செல்லப்பட்டுள்ள சேவைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சாலைகள் இருக்க வேண்டும். இப்போது, ஒரே நேரத்தில் நூறு அடி அகலம் கொண்ட சாலையில் எத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும்? இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று இணையாக செல்லலாம் அல்லவா?

அதே போலவே, செல்போன் சேவைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றைகளில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் தான் நிறுவனங்கள் இயங்கி சேவை வழங்க முடியும். இந்த அடிப்படையில் எந்தெந்த நிறுவனங்கள் சேவை அளிக்கலாம் என்பதை மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் முறையான டெண்டர் கோரி ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு சுமார் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைத்திருக்கும். அந்த வருமானம் நாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது என்பது தான் மத்திய தணிக்கைத் துறையினரின் அறிக்கை வைக்கும் குற்றச்சாட்டு.

செல்போன்கள் ஒரு பெரும் சந்தையின் மக்களை நுகர் பொருட்களை நோக்கி கவர்ந்திழுக்கும் ஒரு பாதை என்பதைக் கடந்து, அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் – அதுவே ஒரு பெரிய சந்தை. உலகமயமாக்கலைத் தொடர்ந்து நுகர்தலையே கலாச்சாரமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க / மேல் நடுத்தர வர்க்கத் தலைமுறை உருவெடுத்துள்ளது. விதவிதமான செல்போன்கள் மட்டுமல்ல, அதனூடாய்க் கிடைக்கும் சேவைகளின் மேம்பாடும் இவர்களுக்கு மிக முக்கியம்.

அந்த வகையில் இந்நூற்றாண்டின் துவக்கத்தில் புழக்கத்தில் இருந்த செல்போன்களை விட தற்போது புழக்கத்தில் உள்ள செல்போன்கள் அதிக வசதிகளைக் கொண்டது. இது நுகர்வு வெறியால் தூண்டப்பட்ட இந்த புதுப்பணக்கார கும்பலை மிக அதிகளவில் செல்போன்களை நுகரச் செய்து, அதையே ஒரு பெரும் சந்தையாக நிலை நாட்டியுள்ளது. ஒருவரே இரண்டுக்கும் மேற்பட்ட செல்பேசிகளை வைத்துக் கொள்வதும், ஒரே செல்பேசியில் இரண்டு இணைப்புகளை வைத்துக் கொள்வதும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு தொலைபேசி என்பதைக் கடந்து, பாடல்கள் கேட்க, படம் பார்க்க, இணையத்தை பாவிக்க என்று அணைத்து வசதிகளையும் உள்ளடக்கிய செல்போன் கருவிகள் தற்போது சந்தையில் குவிந்துள்ளது.

தொன்னூறுகளின் மத்தியில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் இயங்கும் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. அப்போது சந்தையில் இருந்த செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கான அலைவரிசையே 2001ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து சேவை அளிப்பதற்கான லைசென்சுகள் விற்கப்பட்டது. அப்போதே அந்த லைசென்சுகளை அடிமாட்டு விலைக்குத் தான் விற்றுள்ளார்கள். வருவாயில் ஒரு சொற்ப சதவீதம் பங்கு எனும் அடிப்படையில் விற்கப்பட்ட போதும், செல்போன் சேவை நிறுவனங்கள் அதையும் தராமல் பட்டை நாமம் சாற்றினர்.

2001ல் நான்கு மில்லியன்களாக இருந்த செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2008ல் 300 மில்லியன்களுக்கு மேலாக உயர்ந்துள்ளது. சீனத்துக்கு அடுத்து உலகிலேயே இந்தியாசின் செல்போன் பயன்பாட்டுச் சந்தை மிகப் பெரியது. இந்நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கே ஏழு ஆண்டுகள் கழித்து 2008ல் சேவை துவங்குவதற்கான புதிய லைசென்சுகளை விற்றுள்ளனர். அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி (First-come-first-serve basis) எனும் அடிப்படையில், அதிகாலை ஐந்து மணிக்கே ஒப்பந்தங்களை ஏற்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே பேரத்தை நடத்தியும் முடித்துள்ளனர்.

ஒப்பந்தங்களை வென்ற ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன் அனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1537 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி 4200 கோடிகள் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

இந்த போலி நிறுவனங்கள் பல அரசியல்வாதிகள், முதலாளிகளுக்கு சொந்தமானவை. இது போக ரிலையன்சு நிறுவனமும் பினாமி பெயரில் அடித்து சென்றிருக்கிறது. மற்றபடி சந்தை மதிப்பை விட கொள்ளை மலிவில் பிக்பாக்கட் அடித்தவர்களில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் உண்டு.

ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்!
இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு 73 இலட்சம் கோடி ரூபாய்கள்!!

ஊழல் நடந்துள்ளது என்பது சர்வநிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. இதற்குப் பெரிதாக மூளையைப் போட்டுக் கசக்கிக் கொள்ளத் தேவையே இல்லை. ஒரு பொருளுக்கான தேவை 100 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதை ஏழு வருடங்களுக்கு முன்பு விற்ற அதே விலையில் விற்றதில் ஊழல் நடந்துள்ளது என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்லி விடுவான். ஆனால், இதற்கெல்லாம் காரணமாக எல்லோராலும் கைகாட்டப்படுவது ஆ.இராசா மட்டும் என்பதில் தான் சூட்சும்ம் ஒளிந்திருக்கிறது.

கிராமப்புறங்களில் ஒரு வழக்கு உண்டு, கூட்டத்தில் நிற்கும் திருடன் – ‘அதோ திருடன்; இதோ திருடன்’ என்பானாம். இன்று சர்வ கட்சிகளும் போடும் கூச்சல்களும் அசப்பில் அப்படியே தான் உள்ளது.

அவுட்லுக் பத்திரிகை கணக்கெடுப்பு ஒன்றின் படி 1992ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் நடந்துள்ள மொத்த ஊழலின் மதிப்பு 73 லட்சம் கோடி ரூபாய்கள்! அதாவது – 73000000000000 ( எழுபத்தி மூன்று போட்டு பன்னிரண்டு சைபர்களையும் போட வேண்டும்!) ( தகவல் http://www.outlookindia.com/article.aspx?262842 ).

இந்தாண்டு இந்தியா பட்ஜெட் பற்றாக்குறைக்காக வாங்கியுள்ள அதிகாரப்பூர்வ கடனே மூன்று லட்சத்து நாற்பத்தையாயிரம் கோடிகள் தான். என்றால், இந்த ஊழல் பணத்தைக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு பற்றாக்குறையில்லாத பட்ஜெட் போட்டிருக்க முடியும்? நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியான 53 லட்சம் கோடிகளை விட இது 27% அதிகமாம்.

இதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள், வளங்கள், மக்கள் பணம் என்று கொள்ளை போன வகையில் கணக்கில் வரும் தொகை. இன்னும் வெளியாகாத குற்றச்சாட்டுகள் எத்தனை, ‘விஞ்ஞானப்பூர்வமான’ நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. எந்த உலகமயமாக்கம் நல்லாட்சியைத் தரும் என்று உலகமய தாசர்கள் பீற்றிக் கொள்கிறார்களோ அந்த உலகமயத்திற்குப் பின் தான் இத்தனையும் நடந்துள்ளது.

இங்கே அடிக்கடி அதியமான் வந்து ‘உலகமயம் தனியார்மயம் தாராளமயம் நிறைய ‘வாய்ப்புகளைத்’ திறந்து விட்டிருக்கிறது’ என்று வாதாடியதைப் பார்த்திருக்கிறோம். பொதுவான வாசகர்களுக்கு அதன் மெய்யான அர்த்தம் ஒருவேளை புரிந்திராமல் இருக்கும் – இப்போது தெரிந்து கொள்ளுங்கள், அந்த ‘வாய்ப்புகள்’ இந்த பன்னிரண்டு சைபர்களுக்குள் தான் எங்கோ பதுங்கிக் கிடக்கின்றன.

கடந்த இரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு முறை ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போதும் ஊடகங்கள் அதைவைத்து ஒரு வாரம் பத்து நாளைக்கு நோண்டி கொண்டாடி விட்டு பின் மீண்டும் நடிகர்களின் படுக்கையறைகளுக்குள் பதுங்கிக் கொள்கின்றன. எதிர்கட்சிகளின் கூச்சல்களும், “நமக்குக் கிடைக்காதது இவனுக்குக் கிடைத்து விட்டதே” என்கிற பொறுக்கித் தின்னும் ஏக்கத்தின் வெளிப்பாடுகள் தான். அதைத் தான் விஜயகாந்த் ஓரளவு நேர்மையுடன் “எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்களேன்” என்று கேட்கிறார். சிறிய அலையை பெரிய அலை விழுங்குவதைப் போல் ஒரு ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை அடுத்த ஊழல் விழுங்கி விடுகிறது.

இதெல்லாம் கருணாநிதியின் செல்லமான அடிமைப் பிள்ளை ஆ.இராசாவுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் அவரால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஊழல் நடந்துள்ளதை நிரூபித்துப் பாருங்களேன்” என்று தைரியமாக சவடால் அடிக்க முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “எல்லாம் பிரதமருக்குத் தெரியும்; பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் தான் மொத்த விற்பனையும் நடந்தது” என்று சொல்கிறார்.

தேசத்தின் வளங்களை கேள்விமுறையில்லாமல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தான் உலகமயமாக்கல் அரசிடம் கோரி நிற்கும் செயல்பாடு. அதைத் தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள், ‘அரசு நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்; வியாபாரத்தை முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள்’ என்கிறார்கள். அதன் மெய்யான அர்த்தம், “நீ பங்கு பிரித்துக் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்பதாகும்.

ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக கண்டுணர முடியாத வளம்; ஆனால், நாம் பௌதீகமாக கண்டுணர்வதோடு, நமது வாழ்க்கைக்கான ஜீவாதாரத் தேவையான நீர் வளத்தையே பட்டா போட்டுக் கொடுத்து விட்ட ஒரு நாட்டில், அதையே செயல்திட்டமாகக் கொண்ட ஒரு உலகவங்கியின் கைக்கூலி ஆட்சி செய்யும் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வருமான இழப்பு ஏற்படுத்தினார் என்று அதுவும் வேறுவழியின்றி தணிக்கை அறிக்கை வெளிவந்த பிறகு ஒரு இராசாவை தள்ளிவிட்டுவிட்டு மற்ற பெருச்சாளிகள் தப்பிக்க பார்க்கிறார்கள்.

தி.மு.கவின் பாரம்பரிய அரசியல் உத்தியான “நீ மட்டும் என்ன யோக்கியமா” என்கிற கேள்வியை இராசா திருப்பிக் கேட்டுவிட்டால் அங்கே காங்கிரசுக்கு கிழிசலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கடைசிக் கோவணத்துண்டும் அவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதன் ஒரு சின்ன சாம்பிள் தான் “எல்லாம் பிரதமரின் வழிகாட்டுதல் தான்” என்று உண்மையைச் சொல்வது. எனவே ஓரளவுக்கு மேல் இறுக்கிப் பிடிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தி.மு.க சார்பான அலாவுதீன் என்ற பினாமிக்கு பங்கு இருப்பதை விட காங்கிரசு ஆதரவு முதலாளிகளின் பங்கு அதிகம். தேனெடுத்து புறங்கையை நக்குவதல்ல இது. தேனிக்கள் வாழும் முழுக்காட்டையும் தின்று விழுங்குவது.

இதோ, இப்போதே தயாநிதி அழகிரியின் திருமண வரவேற்பிற்கு காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சி மத்திய மற்றும் மாநில பெருச்சாளிகள் வரிசை கட்டியிருக்கிறார்கள். இப்போதைக்கு ஆ.இராசாவை இராஜினாமா செய்ய வைத்திருப்பது விவகாரத்தை முடிந்த வரைக்கும் ஆ.இராசா மட்டும்சம்பந்தப்பட்டது போல மடைமாற்றிக் காட்டவே. மற்றபடி காங்கிரசு இதில் காட்டப் போகும் நாடகமான “தீவிரம்” என்பது மாநிலக் கூட்டணிக் கணக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படும்.

நாட்டை விற்கும் கூட்டுக் களவாணிகள்!

ஊடகங்களைப் பொறுத்த வரையில், கதையில் ஒரு வில்லன் வேண்டும்; அவன் தோற்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்த ‘ஊழல்’ மெகா சீரியலின் இப்போதைய எபிசோடில் வில்லன் ஆ.இராசா. அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் தோற்று விட்டார். இதை இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு கொண்டாடுவார்கள். பின்னர் அனைத்தும் மறக்கப்படும்; மறக்கடிக்கப்படும். அடுத்து இன்னும் சில மாதங்களில் வேறு ஏதாவது இரண்டு லட்சம் கோடி ஊழல் ஒன்று வெளிப்படும் நாளில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த என்ன உத்தியைக் கடைபிடிக்கலாம் என்று விவாதிப்பதில் அவர்கள் ‘பிஸியாகி’ விடுவார்கள். இதற்கிடையே அந்த 1.76 லட்சம் கோடிகளின் கதி? அது வழக்கம் போல என்றென்றைக்கும் திரும்பி வரவே போவதில்லை.

மேலே உள்ள அந்த எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளும் திரும்ப தேசத்திற்குக் கிடைத்து விட்டதாகவோ அல்லது அதில் இருந்து ஒரு குண்டூசி முனை அளவுக்காவது திரும்பி வந்தது என்பது போன்ற தகவல்களோ இல்லவே இல்லை.

முன்பு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, லாபத்தில் இயங்கிய மாடர்ன் பிரட்டை யுனிலீவருக்கு சல்லிசாக அள்ளிக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, அரசுத் துறை அலுமினிய உற்பத்தி நிறுவனமான ‘பால்கோ’வின் பங்குகளை குறைவாக மதிப்பிட்டு ஸ்டெர்லைட்டுக்கு விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ, நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ – அதே போன்ற விளைவு தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கும் ஏற்படும்.

அது என்னவென்று கேட்கிறீர்களா? மௌனம். ஆழ்ந்த மௌனம். வெட்கம் கெட்ட மௌனம். கேடு கெட்ட மௌனம். வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.

ஸ்பெக்டரம் ஊழலும், அரசியல் கட்சிகளின் கூட்டணி கனவுகளும்!

இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா ஆட்சியில் தான் பொதுத்துறை நிறுவனங்களையும் தேசத்தின் இயற்கை வளங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க தனியாக ஒரு அமைச்சரையே வைத்திருந்தனர். இன்றைக்கு எந்த கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை கைகளில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அதே கணக்குத் தனிக்கைத் துறை 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு விபரமாக அறிக்கையும் சமர்பித்திருந்தனர்.

தற்போது கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு கூக்குரலிடும் பா.ஜ.கவின் கோரிக்கை தேவையில்லை என்பதை அருண் ஷோரியே தெரிவித்திருக்கிறார். முந்தைய பா.ஜ.க அரசில் பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு அனுப்பிய புண்ணியவான் இவர்தான். அதனால்தான் அவர் ‘நீதி’வழுவாமல் பேசுகிறார்.

அ.தி.மு.கவுக்கு ஒரே பிரச்சினை தான் – அது கூட்டணி. அது கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ, கேப்மாரியோ, மொள்ளமாரியோ… எவனாக இருந்தாலும் சரி. தமிழகத்தில் குத்து மதிப்பாக பத்து சதவீதம் வாக்குகள் இருக்கும் கட்சியாக காங்கிரசு இருப்பதால், இதை வைத்து எப்படியாவது தி.மு.கவை கழட்டி விட்டு தன்னோடு காங்கிரசு சேர்ந்து விடாதா என்று ஏங்குகிறார். மற்றபடி ஸ்பெக்டரம் ஊழலெல்லாம் அம்மணியின் பேராசைக்கு முன்னே கால் தூசு.

போலி கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை ஆ.இராசா விலக வேண்டும் – விலகியாச்சு. பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டி வேண்டும் – அதுவும் கொஞ்ச நாள் பிகு பண்ணி விட்டு காங்கிரசு அமைத்துக் கொடுத்து விடும். அந்தக் ‘கூட்டில்’ பா.ஜ.கவும் இருக்கும்; எல்லாம் ஒரே மலக்குட்டையில் முழுகி முத்தெடுத்த பன்றிகள் தானே… எனவே காங்கிரசுக்கு ஒரு பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியை அமைத்து விடுவதனால் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேறு நடக்கிறது; எப்படியும் “சட்டம் தனது கடமையைச் செய்யும்” – அந்தக் ‘கடமை’ என்னவென்பது அரசியல் அணிசேர்க்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஆனால், இவர்கள் யாருமே தவறியும் கூட 2ஜி ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றோ, அடிமாட்டு விலைக்கு வாங்கி லாபம் பார்த்தவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றோ, அந்த 1.76 லட்சம் கோடியை கைபற்ற வேண்டும் என்றோ சொல்ல வில்லை என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மட்டுமல்லாமல், இந்த ஊழலுக்கு மிக அடிப்படையாய் இருக்கும் உலகமயமாக்களைப் பற்றியோ, இப்படி வளங்கள் கொள்ளை போய் நாடு மீண்டும் காலனியாவதைப் பற்றியோ கூட எவரும் வாயைத் திறக்கவில்லை.

இப்போது ட்ராய் ஏதோ நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகளைக் கசியவிடுகிறார்கள்; அதுவும் எப்படியாம்…? ஒரு நிறுவனம் லைசென்சை எடுத்து விட்டு சேவை அளிப்பதில் தாமதப்படுத்தினால் மிகப் பெரிய அளவில் “அபராதம்” விதிக்கப்போகிறார்களாம். அந்த அபராத விபரம் என்ன தெரியுமா? லைசென்ஸை எடுத்த நிறுவனம் முதல் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% சேவையை அளிக்கத் துவங்கியிருக்க வேண்டும். தாமதமாகும் முதல் 13 வாரங்களுக்கு 5 லட்சம் அபராதமாம், அடுத்த 13 வாரத்துக்கு 5 லட்சம் அபராதமாம்;  இப்படி லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப் போகிறார்களாம். ஸ்வான் என்கிற நிறுவனம் மட்டுமே லைசென்சை வாங்கி இந்தக் கையில் இருந்த அந்தக் கையில் மாற்றிய வகையில் 4200 கோடிகள் அடித்திருக்கிறார்கள்; அவர்களுக்கு இந்த அபராதமெல்லாம் சும்மா கொசு கடித்தது போலத் தான்.

இதற்கிடையே டிராயின் இந்த அறிக்கை வந்தவுடன் ஸ்வான் நிறுவனம் தான் லைசென்சு எடுத்த எல்லா சர்கிளிலும் சேவையை ஆரம்பித்து விட்டதாக அறிவித்து, அரசையும் மக்களையும் பார்த்து “பப்பி ஷேம்” பாடியுள்ளது தனிக் கதை. ( தகவல் http://in.biz.yahoo.com/101113/50/bawixo.html)

ஸ்பெக்டரம் ஊழல் இல்லையாம், தொழிலதிபர் பத்ரியின் ஆதங்கம்!

பொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பதிவுலகில் நிலவும் மனப்போக்கிற்கு எதிராக கிழக்கு பதிப்பகத்தின் அதிபரான பத்ரி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் இந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் என்றும்; அதற்குள் அது ராசாவின் ‘பைக்குள்’ போய் விட்டதைப் போல் மக்கள் பேசுவதாகவும் குறிப்பிடுகிறார். இதை தம்மால் ஒரு ஊழல் விவகாரமாகக் காண முடியவில்லை என்கிறார். ஆனால், ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக காண முடியாவிட்டாலும் அது ஒரு நாட்டின் இயற்கை வளம் தான். ஒரு சரக்கை திட்டமிட்டு சந்தை விலையை விட குறைத்து விற்பதால் ஏற்படும் நட்டத்தை ஊழல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? அந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் தான்; ஆனால் இருந்திருக்க வேண்டிய பணம்!

அடுத்து இந்தத் தொழிலில் ஈடுபடும் கம்பெனி, லைசென்ஸ் பெற்றதோடு நில்லாமல் அதை வைத்து லாபம் சம்பாதிக்க இருக்கும் நீண்ட ப்ராசஸ் பற்றி சொல்கிறார். என்னவோ மேற்படி கம்பெனிகளின் முதலாளிகள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்டு லாபம் பார்ப்பது போல ஒரு பில்டப்பு அதில் தொனிக்கிறது – இதை ஏதோ ஒரு பெட்டிக்கடை சிறு முதலாளியின் உழைப்புக்கு ஈடானதொன்றாக அம்முதலாளிகளின் ‘உழைப்பை’ எடுத்துக் கொண்டு விடலாகாது.

இத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இன்றி, போலியான ஆவணங்களைக் கொடுத்தும், மோசடியான முறைகளைப் பின்பற்றியும் எடுத்த லைசன்ஸை சும்மா கைமாற்றிய வகையிலேயே அவர்கள் லாபத்தைப் பார்த்து விட்டார்கள். அடுத்து, செல்போன் சேவைகளின் மூலம் மக்களிடம் அடிக்கப் போகும் பிக்பாட்டின் மதிப்பெல்லாம் தனிக் கணக்கு.

பத்ரி, அவரது முந்தைய பதிவு ஒன்றில், “ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது.” என்று குறிப்பிட்டு விட்டு, தொடர்ந்து – “இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.” – என்றும் சொல்கிறார்.

தேசத்தின் வளம் ஒன்றை பயன்படுத்துவதில் என்ன குழப்பம் இருக்க முடியும்?  அதைக் கொள்ளையடிப்பதில் உள்ள போட்டியும் மூர்க்கமும் பத்ரிக்கு குழப்பமாக தெரிகிறது. ஒன்று அதை நேரடியாக அரசுக் கட்டுப்பாடில் இருக்கும் நிறுவனம் பயன்படுத்த வேண்டும்; அல்லது அதை தனியாருக்கு விற்பதாக இருந்தால், அரசு நடத்தினால் கிடைக்கப் போகும் லாபத்தையோ அல்லது அதை வாங்கும் நிறுவனம் நடத்தினால் வரும் லாபத்தில் கணிசமான பங்கையோ கட்டணமாக நிர்ணயித்திருக்கலாமே? இப்படி அடிமாட்டு விலைக்கு; அதுவும் மோசடியான முறையில் விற்பதன் அடிப்படை என்ன?

இதற்கு மேல் பத்ரி கூறும் விசயமென்றால் செல்பேசி சேவை மலிவாக இருக்கவேண்டுமென்றால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை மலிவாகத்தான் விற்க முடியுமாம். ஆக மக்களுக்கு மலிவு சேவை கிடைப்பதை வைத்து பார்த்தால் இதில் ஊழல் என்று எதுவும் இல்லையாம். சரி, இருக்கட்டும்.

பத்ரி ஐயாவுக்கு புரியும் வித்த்தில் ஒரு சான்றைப் பார்ப்போம். தாமிரபரணியின் தண்ணீரை ஆயிரம் லிட்டருக்கு ஐந்து காசு என்ற வீதத்தில் அரசு கோகோ கோலாவிற்கு விற்கிறது என்று வைப்போம். அதை கோகோ கோலா மினரல் வாட்டராக பாட்டிலில் அடைத்து லிட்டருக்கு பத்து ரூபாய்க்கு விற்கிறது என்றால், பத்ரி என்ன கூறுவார்? “மக்களுக்கு குடிநீர் அதுவும் தரமான தரத்தில் மலிவாக கிடைக்க வேண்டுமென்றால் கோகோ கோலாவுக்கு அரசு மலிவாக தண்ணீர் விற்க வேண்டும். அது ஊழல் இல்லை.” பத்ரி அண்ணே சரிதானே?

முதலாளிகளின் மோசடி இலாபம் என்ற கொள்ளையடிக்கப்பட்ட பொருள் பத்ரியின் கண்ணுக்கு மட்டும் மக்களுக்கு கிடைக்கும் மலிவான சேவை என்று தெரிவதற்கு காரணம் அண்ணன் பத்ரி சக முதலாளியாக இருந்து ஒரு முதலாளியின் ‘துயரத்தை’ பகிர்ந்து கொள்கிறார் என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட ராசாதான் பேசப்படுகிறாரே ஒழிய அவருக்கும் அல்லா கட்சிகளுக்கும் கட்டிங் வெட்டிய முதலாளிகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த ஊழல் குறித்து இதுவரை இந்திய முதலாளிகளின் சங்கங்கள் எதுவும் மூச்சுக் கூடவிடவில்லை.

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் போதே ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாட முடியும்!

ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடிப்படை இந்த அரசின் அமைப்பில் இருக்கிறது. இந்த அரசியல் அமைப்பே தேச நலனையும் வளங்களையும் பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள் கொள்ளையிட்டுச் செல்ல உதவும் தரகு வர்க்கத்தால் நிர்வகிக்கப் படுகிறது. அதற்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் இன்ன பிற கட்சிகளும் அடியாள் வேலை செய்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு வைசிராய் இருந்தார் – அவருக்கு பொன்னிற முடியும் வெள்ளைத் தோலும் இருந்தது. இப்போது இருக்கும் வைசிராய்களுக்கு அந்த அடையாளங்கள் இல்லை. அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. இதைத் தான் மறைமுக காலனியாதிக்கம் – மறுகாலனியாதிக்கம் – என்கிறோம்.

வல்லரசு நாடுகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் இந்த அரசமைப்பைக்கும் அதன் அடியாட் படைக்கும் எதிராக நாட்டு மக்கள் தொடுக்கும் போராட்டம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும். அந்த களப்பணியில் இணைவது மட்டுமே இந்த ஊழலுக்கு நாம் காட்டும் உண்மையான எதிர்ப்பாக இருக்க முடியும்.

________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: