சமீப நாட்களாக தமிழகத்தில் பெட்டிக் கடைகளின் முன் தோரணமாய்த் தொங்கும் தமிழ்க் கிசு கிசு பத்திரிகைகளின் போஸ்டர்களில் காணப்படும் தலைப்புச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க ஏதோ மகாப்பெரிய இக்கட்டில் சிக்கியிருப்பதாகவும், காங்கிரஸ் ஏதோ ‘கூட்டணி தர்மத்துக்காக’ காப்பாற்றி வருவதாகவும்; அரசியல் தரகர்களோடு தொடர்பில் இருந்ததால் ராசாத்தியம்மாள் மேல் கருணாநிதி கோபம் கொண்டு சி.ஐ.டி காலனி வீட்டுக்குச் செல்வதையே நிறுத்திக் கொண்டது போலவும்; மொத்தத்தில் கருணாநிதி குடும்பமே பிளவு பட்டு விட்டது போலவும் நம்பத் தோன்றுகிறது.

இதே இந்திய அளவிலான ஆங்கில ஊடகங்களைக் கவனித்தால், ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து  சம்பந்தப்பட்ட அனைவரும் இக்கட்டில் இருப்பது போலவும், சி.பி.ஐ ஏதோ வரம் பெற்று வந்த யோக்கியவானகள் போலவும் சித்தரிக்கிறார்கள். நீரா ராடியாவோடு பேசிய அரசியல்வாதிகள் யார் யார்; அவர்கள் பேசிய கிசு கிசுக்கள் என்ன? என்பது போன்ற ‘அதி முக்கியமான’ கேள்விகளுக்குள் சுருண்டு விட்டன. குறிப்பாக பேருந்தில் அகப்பட்ட ஜேப்படித் திருடனை கும்பலாகப் போட்டு கும்முவதைப் போல ஆ.ராசாவைப் போட்டு ஆங்கில ஊடகங்கள் கும்முகின்றன.

நீரா ராடியாவின் பிற உரையாடற் பதிவுகளின் உள்ளடக்கங்களில் தங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லையென்பதை உறுதி செய்து கொள்ளும் வரை கமுக்கமாய் இருந்த பிற முதலாளித்துவ ஊடகங்கள், உறுதியானதும் நீராவோடு தொடர்பில் இருந்த தமது போட்டிக் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி சாமியாடித் தீர்த்து விட்டன.

காங்கிரஸ், தி.மு.க, சோனியா, மன்மோகன், கருணாநிதி, ராசா ஏன் சில பத்திரிகைகள் பா.ஜ.கவையும் அதன் இறந்து போன தலைவரான பிரமோத் மகாஜனும் கூட இந்த ஊழலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று எழுதியுள்ளன. இதெல்லாம் இருக்கட்டும்; இந்தக் கொள்ளைக்குக் காரண கர்த்தாக்களும் கொள்ளையில் பலனடைந்தவர்களும் யார்?

அது தான் இவ்விவகாரத்தின் விசேஷம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொழுத்த லாபமடைந்த டாடா குழுமத்தின் ரத்தன் டாடா, ரிலையன்ஸின் அனில் அம்பானி, பாரதி டெலிகாமின் சுனில் மிட்டல் ஆகிய மூன்று தரகுப் பெருமுதலாளிகளும் தொலை தொடர்புத் துறையின் இப்போதைய அமைச்சரான கபில் சிபலைச் சந்தித்து ‘தொழிலுக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது’ என்கிற உறுதி மொழியைப் பெற்றுத் திரும்பியுள்ளனர்.

ஒரு வழியாக களவாணிகளின் மேலிருந்து மக்களின் பார்வையைத் திருப்பி விடுவதில் அவர்களின் கூட்டாளிகான காங்கிரசு, பா.ஜ.க உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளும் பங்காளிகளான பத்திரிகைகளும் வெற்றி பெற்றே விட்டன. இன்றைக்கு விவகாரம் புகைய ஆரம்பித்து ஏறக்குறைய இரண்டாண்டுகள் ஆகிறது, பற்றியெறிய ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிறது, ஆனால் இத்தனை காலமும் இல்லாத தீவிரத்தை சி.பி.ஐ தனது விசாரணைகளிலும் சோதனைகளிலும் காட்டுகிறது – அல்லது – அப்படி ஊடகங்கள் மூலமாகச் சொல்லப்படுகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது – ராசாவுக்கோ இல்லை மன்மோகனுக்கோ இல்லை ஆதாயதமடைந்த முதலாளிகளுக்கோஆதாரங்களை அழிக்கவே இந்த அவகாசம் தேவைப்பட்டுள்ளது என்பதைத் தான். இதோ நாங்கள் வீரப்பனின் ஜட்டியைப் பிடித்து விட்டோம் என்று அதிரடிப்படை சொன்னதைப் போல, இதோ நாங்கள் ராசாவின் டைரியைப் பிடித்து விட்டோம் என்று சி.பி.ஐ சொல்லிக் கொள்கிறது.

பொதுவில் இப்போது வெளியாகும் ஊழல்கள் என்பது குறைந்தது சில ஆயிரம் கோடிகளை அபேஸ் செய்த கதைகளாகவே இருப்பதும், அதில் இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாய் லட்சம் கோடிகளைக் கடந்த சாதனையை ஸ்பெக்ட்ரம் ஊழல் புரிந்திருப்பதும் பொதுவில் பலரின் அதிர்ச்சியின் அளவைக் கொஞ்சம் கூட்டி விட்டுள்ளன.

ஸ்பெக்டிரம் ஊழல் பற்றி இணையதளங்களில் தமது அதிர்ச்சியையும் திகைப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பதிவர்களும், டவிட்டர்களும் பெரும்பாலானோர் இந்த அமைப்புமுறையை மனதார நம்புகிறார்கள். ஹிந்து எடிட்டோ ரியலுக்கு லெட்டர் போடும் மயிலாப்பூர் பார்த்தசாரதிகளைப் போல் இந்த விவகாரங்கள் எல்லாம் நீதிமன்றங்களால் முறையாக விசாரித்து தீர்க்கப்பட்டுவிடும் என்று ஏங்குகிறார்கள். எதிரே பற்றியெறிவது மகர ஜோதியல்ல; யாரோ மனிதர்கள் தான் கொளுத்துகிறார்கள் என்பது தெரிந்தும் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஐயப்ப பக்தனைப் போல பிதற்றுகிறார்கள்.

ஆனால், எவராலும் சர்வநிச்சயமாய் இந்த ஊழலின் பின்னுள்ள சகலரும் தண்டிக்கப்படுவார்கள் என்றோ, திருடப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கும் என்றோ சொல்வதில்லை; அது நடக்காது என்று இவர்களுக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் எனப்படும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஆகிய மறுகாலனியாக்கச் செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தி பதினெட்டு ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்று அதன் பின்விளைவாக நுகர்தலையே ஒரு கலாச்சாரமாகக் கொண்டு நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்திலிருந்தும் பணக்காரவர்க்கத்திலிருந்தும் ஒரு தலைமுறையே உருவெடுத்துள்ளது. இடது கையில் கோக் டின்னும் வலது கையில் லேட்டஸ்டு மாடல் செல்போனும் நுனி நாக்கில் ஆங்கிலமுமாய் அலையும் இந்த யுப்பிகளுக்கு தரமான சேவை, நிறைந்த போட்டியால் குறைந்த விலை, நிறைய தேர்வுகள் என்பதை தனியார்மயம் உத்திரவாதப்படுத்தியுள்ளது. ஆனால் இவைகளே ஊழல்களின் மிக அடிப்படையாய் இருப்பதை இவர்கள் உணர்வதில்லை.

சிரீபெரும்புதூரின் நோக்கியா தொழிற்சாலையில் அபரிமிதமாய் அதிகரித்தாக வேண்டிய உற்பத்தி வேகத்திற்குப் பலியான அம்பிகா எனும் பெண்ணின் மரணத்திற்கு நேரடியாக நோக்கியாவின் லாபவெறி காரணம் என்றாலும் மறைமுகமான காரணி இந்த யுப்பிகள் தான். வினவில் அம்பிகா மரணம் பற்றிய செய்திக் கட்டுரைகள் வெளியான போது அதற்கு மறுமொழியாய் “என்ன செய்வது, இன்றைக்கு நோக்கியா போன் குறைந்த விலையில் கிடைக்கிறதே” என்று கூச்சநாச்சமே இல்லாமல் இவர்களைப் பேச வைப்பது எதுவோ அதுவே ஸ்பெக்டிரம் ஊழலின் அடிப்படை.

நாளையே ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த தொகையை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒழுங்காக அரசுக்குக் கட்டி விடும்; ஆனால் அதன் பின் ஒரு அலைபேசி அழைப்பு 3 ரூபாய் ஆகிவிடும் என்கிற நிலை வந்தால் – இவர்கள் இந்த ஊழலை நியாயப்படுத்தவும் தயங்கமாட்டார்கள்.

இந்த தனியார்மய தாசர்கள் சொல்வது போல் “சுதந்திரமான வெளிப்படையான போட்டி Free and Fair competition” என்பது முதலாளிகளிடையே எங்கும் எப்போதும் வெளிப்பட்டதில்லை. இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் கூட மிகத் தெளிவாய் அம்பலமாகியிருப்பது முதலாளிகளிடையேயான கழுத்தறுப்புக்களும், உள்ளடி வேலைகளும், நாய்ச்சண்டைகளும் தான். நுஸ்ஸிவாடியா, திருபாய் அம்பானி காலத்தில் நடந்த புதுப்பணக்காரன் vs பரம்பரைப்பணக்காரன் சண்டைகளின் இன்றைய நீட்சியாகத் தான் ராடியாவின் உரையாடல்கள் வெளியானதன் பிண்ணனி உள்ளது.

அரசுத்துறை என்றாலே திறமையின்மை, லஞ்சம், மொன்னையான நிர்வாகம் (bureaucracy) என்றும், அரசுத்துறை ஊழியர்கள் பொறுப்பற்றவர்கள் என்பதும், அவர்களுக்கு போட்டியில்லை என்பதால் ஒழுங்காக நிறுவனத்தை நடத்தமாட்டார்கள் என்பதும் தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் தனியார்மய தாசர்கள் பாடும் பல்லவி. அதே நேரம், சந்தையை எல்லோருக்கும் திறந்து விட்டுவிட்டால், போட்டி எழும்; அதன் காரணமாக சேவை தரமாகக் கிடைக்கும், விலை குறையும், நிர்வாகம் ஒழுங்காக இருக்கும் என்றெல்லாம் தனியார்மயத்தை உயர்த்திப் பிடித்தார்கள். மேலும், அரசுக்கு தொழில்களை நடத்த வேண்டிய தேவை என்ன? எனவே அரசுத்துறை நிறுவனங்களை

தனியாருக்கு விற்றுவிடுவதே நுகர்வோருக்கு நல்லது என்றெல்லாம் பலவாறாக இவர்கள் தனியார்மயத்திற்கு முட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால், எந்தத் தனியார்மயம் சிறந்த, ஒளிவில்லாத நிர்வாகத்தையும் (Fair & transparant) தரவல்லது என்று இவர்கள் சொன்னார்களோ அதே தனியார்மயத்தின் விளைவாக களத்தில் இறங்கியிருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் தான் வளங்களைக் கைப்பற்ற வெறித்தனமான போட்டியில் இறங்கியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் வளத்தைக் கைப்பற்ற முதலாளிகள் அமைத்த சிண்டிகேட்டும், அதன் விளைவாய் நடந்துள்ள ஊழலும் தண்டகாரண்யாவில் நடப்பதும் சாராம்சத்தில் ஒன்று தான். அது வெளிப்படும் விதத்தில் தான் வேறுபடுகிறது. ஸ்பெக்டிரம் விவகாரத்தில் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமமானதொரு வளம் என்றால், தண்டகாரண்யாவில் ஏலம் விடப்பட்டிருப்பது ஸ்தூலமாய் கண்ணெதிரே நிற்கும் மலைகள்.

தனியார் கம்பெனிகளுக்கு இந்த அலைக்கற்றை வளத்தை பங்கீடு செய்ததில் ஆ.இராசா தனியார் நிறுவனங்களுக்கு சார்பாக செயல்பட்டார் என்பது தானே குற்றச்சாட்டு? அதைத் தானே ஊழல் என்கிறார்கள்? எனில், வேதாந்தாவுக்கு வழக்கறிஞராகவும், அதன் போர்டு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த செட்டிநாட்டுச் சிதம்பரம், அமைச்சரானவுடன் அதே வேதாந்தாவுக்கு மலைகளை அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததை எந்தப் பெயரிட்டு அழைப்பது? விஸ்.என்.எல் நிறுவனத்தை விற்றதோடு அல்லாமல், அதோடு சேர்ந்த அசையாச் சொத்துக்களான ஏராளமான நிலங்களையும் இலவச இணைப்பாய் அள்ளிக் கொடுத்ததும், அந்நிறுவனத்தின் ரிசர்வ் நிதியை டாடா டெலிசர்வீசஸுக்கு மாற்றிக் கொள்ளவும் அனுமதியளித்த பாரதீய ஜனதாவின் நடவடிக்கைக்குப் பெயர் என்ன? இதெல்லாம் பச்சைத் திருட்டு இல்லையா?

தனியார்மயம் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த பதினெட்டு ஆண்டுகளில் இப்படிக் கொள்ளை போன வளங்கள் எத்தனை, அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகள் எத்தனை லட்சம் கோடிகள்? அவுட்லுக் ஏட்டின் கணக்குப் படி அது 73 லட்சம் கோடிகள். இன்றைக்கு ஆ.இராசா பதவியை இராஜினாமா செய்து விட்டார். வேண்டுமானால் ஏதாவது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு “விசாரணைக் கமிசன்” அமைப்பார்கள். அதன் பின் “சட்டம் தனது கடமையைச் செய்யும்” – ஆனால், வாரா வாரம் ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆவது போன்று புதுப்புது ஊழல்கள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கும். இதுவரையில் ஊழலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன்கள் எத்தனை ஊழல்வாதிகளைத் தண்டித்து சிறையில் அடைத்துள்ளன? எத்தனை முறை மக்கள் பணம் மீட்கப்பட்டுள்ளது?

கூட்டுப் பாராளுமன்ற கமிட்டி கோரி பாராளுமன்றத்தில் சாமியாடும் பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் (1999இல்) தொலைத் தொடர்புத் துறையின் விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே அனைத்து முறைகேடுகளுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டிய கபில் சிபல், அதன் காரணமாக தேசத்திற்கு 1.43 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்கும் பாரதிய ஜனதா, அப்படி விதிகளைத் தளர்த்தியது செல்பேசி சேவையை பரவலாக்கவே என்கிறது. இதன் பொருள், தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் லாபத்தை வாரிக் குவிக்க வேண்டுமானால், இயற்கை வளத்தை அடிமாட்டு ரேட்டுக்கு பிரித்துக் கொடுப்பதில் தவறில்லையென்பதாகும்.

பாரதிய ஜனதாவின் அதே வாதத்தை நாலு வருடங்களுக்குப் பிறகு, ஆ.இராசாவும் சொல்லக் கூடும். நான் ஸ்பெக்டரம் அலைவரிசையை சல்லிசாக வாரி வழங்கியதால் தான் உங்களால் ஐந்து பைசாவுக்கு ஒரு செல்பேசி அழைப்பு செய்ய சாத்தியமானது என்று ராசா சொல்வாரானால், இன்றைக்கு இணையத்திலும், ஆங்கில செய்தி ஊடகங்களிலும் சாமியாடிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அடிவருடிகள் வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

பஞ்சாயத்து ஆபீஸில் பைப் லைன் வாங்க ஐம்பது ரூபாய் லஞ்சம் கொடுப்பதையும் இந்த மெகா ஊழல்களையும் ஒரே விதமாய்ப் புரிந்து கொள்வது தவறு. முந்தையது சிறிய அளவிலான நிர்வாகக் கோளாறு என்றால், பிந்தையது பச்சையான பகல் கொள்ளை. தனியார்மயமாக்கம் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த சகல ஓட்டுக் கட்சிகளும் கர்ம சிரத்தையாய் இப்படித்தான் வளங்களை ஏலம் விட்டிருக்கின்றது. அப்போதும் ஒவ்வொரு முறையும் அதை எதிர்த்து குரல்கள் எழுப்பப்பட்டன, அந்நடவடிக்கைகளினால் ஏற்பட்ட இழப்புகளை மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டத்தான் செய்தது; ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவு என்ன?

தனித்தனியாக ஒவ்வொரு முறையும் ஊழலை எதிர்த்துக் குரல் கொடுப்பதும், அப்படிக் குரல் கொடுக்கும் போதும் கவனமாக அதன் மூலகாரணமான தனியார்மயத்த்ஐ தவிர்த்து விடுவதுமான இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் விளைவு தான் இந்த 1.76 லட்சம் கோடி பகல் கொள்ளை. இந்த முறை இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இதனோடு சேர்ந்திருக்கும் கிசு கிசுக்களும் சம்பந்தப்பட்ட கட்சியொன்றின் பெயரில் இருக்கும் ‘திராவிட’ என்கிற வார்த்தையும் தான்.

இந்த ஊழல்களின் அச்சு (Crux)  எங்கேயிருக்கிறது? ஆ.இராசாவிடமா? இல்லை. ஊழல் என்பது வளங்களை சில தனியார் நிறுவனங்களிடையே பங்கீடு செய்த முறையில் மட்டும் இல்லை. மக்களுக்குச் சொந்தமான – மக்களுக்குப் பூரண உரிமையுள்ள இந்த வளங்களை ஒரு சிலரின் லாபத்துக்காக கூறு கட்டி வைத்துள்ளதில் தான் இவை அனைத்தின் அச்சும் உள்ளது. தொண்ணூறுகளுக்குப் பிந்தைய ஊழல்களால் மட்டுமே தேசம் எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளை இழந்துள்ளது எனும் செய்திலிருந்தே இந்த எளியஉண்மை உங்களுக்குப் புலப்படவில்லையா?

உதாரணத்துக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையே பார்ப்போமே, தொண்ணூறுகளின் மத்தியில் செல்போன்கள் இந்தியாவுக்கு அறிமுகமான போது முதலில் அது தனியார்களுக்குத் தான் திறந்து விடப்படுகிறது. அரசுத் தொலை தொடர்புத் துறை செல்போன் சேவை வழங்குவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டது. அப்போது தேசம் முழுவதையும் 20 இருபது சர்கிள்களாகப் பிரித்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒரு சில கம்பெனிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கிறது அரசு. கிட்டத்தட்ட தனியார் நிறுவனங்கள் வலுவாகக் காலூன்றிய பின், 2001ம் ஆண்டு தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு செல்போன் சேவை அளிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

அரசுத்துறைக்கு செல்போன் சேவைகளை அளிப்பதில் திறமையில்லை என்பதால் அது தடுத்து வைக்கப்படவில்லை; மாறாக இப்படி அரசுத்துறையை தொழில் துவங்க விடாமல் தடுக்க வேண்டும் என்பது தான் நரசிம்மராவ் தலைமையில் மன்மோகன் சிங் வழிகாட்டுதலில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் விதிகள்.

1880ஆம் ஆண்டு முதன் முதலாக ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி அப்போதிருந்த பிரிட்டிஷ்-இந்திய அரசிடம் தரைவழி தொலைபேசி சேவையைத் துவங்க அனுமதி கேட்கிறது. முதலில் தொலைபேசிச் சேவையை அரசே அளிக்கும் என்று அனுமதி மறுத்த அரசு, பின்னர் தனது முடிவுகளை ‘ஏதோ காரணங்களுக்காக’ மாற்றிக் கொண்டு அதே தனியார் நிறுவனத்திற்கு 1881ஆம் ஆண்டு அனுமதியளிக்கிறது. அதற்கும், தற்போது செல்போன் சேவை விஷயத்தில் அரசு நடந்து கொண்டதற்கும் ஏதேனும் வேறுபாட்டை உணர முடிகிறதா? அதைக் காலனிய காலம் என்று அழைத்தால், இது மறுகாலனிய காலம்! அவ்வளவு தான் வித்தியாசம்.

“அடடா.. அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை வரவிடாமல் செய்து விட்டாரே ஆ.இராசா” என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். ஆனால், வராத வருமானம் எங்கே தங்கியதோ அங்கே இருந்து அதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொல்ல அவர்களுக்கு வாய் வருவதில்லை. ஆ.ராசாவைத் தண்டிக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் இப்போது சொல்லத் துவங்கியுள்ளன; ஆனால், அவர் இப்படிச் செயல்பட ஊக்கம் அளித்தவர்களையும், செயல்பட்டு மாட்டிக் கொண்டு அம்பலமாகி நிற்கும் போதும் காத்து நிற்பவர்களையும் பற்றிப் பேச மாட்டேனென்கிறார்கள். ஸ்பெக்டிரம் ஒதுக்கீட்டு முறையில் ஊழல் என்பவர்கள்; அந்த ஒதுக்கீடே ஒரு ஊழல் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.

இந்த ஊழலைச் செய்யாமல் தவிர்க்கும் உரிமையோ வேறு தேர்வுகளோ இந்த ஆளும் வர்க்கத்திற்கு இல்லை. இவர்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை இவர்களின் எஜமானர்கள் தீர்மானிக்கிறார்கள். அரசாங்கத்தை தொழில்துறையில் இருந்து விலக்கி வைத்து விடுவோம் என்றும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்று விடுவோம் என்றும், மக்களுக்குச் சொந்தமான் இயற்கை வளங்களின் மேல் பன்னாட்டு நிறுவனங்களைத் திறந்து விடுவோம் என்றும் ஏற்கனவே எழுதிக் கொடுத்து விட்டு வந்துள்ளார்கள். அதற்கு மாறாக அவர்களால் ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட்டு விட முடியாது -அந்த அதிகாரத்தை அவர்கள் ஏற்கனவே தமது எஜமானர்களிடம் அடகு வைத்து விட்டு வந்துவிட்டார்கள்.

மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. தேசத்தின் அரசியல் அமைப்பு என்கிற நிலம் பண்பட்டிருப்பதே ஊழலின் விதை இன்று விருட்சமாய் நிமிர்ந்து நிற்கக் காரணமாய் உள்ளது.

__________________

– தமிழரசன்
__________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: