privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!

மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!

-

வரியில்லா தீவுகள்ரி தவிர்ப்பை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி போடுவதாக’ நிதி அமைச்சர் ப சிதம்பரம் அறிவித்திருக்கிறார். இந்திய தொழில் துறை இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பம்பாய் பங்குச் சந்தை குறியீட்டு எண் 243 புள்ளிகள் உயர்ந்து இரண்டு ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறது.

இதன் மூலம் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.

அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி கவர்வதற்காக ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமான பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ‘பார்த்தசாரதி ஷோமே தலைமையிலான குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை ஏற்றுக் கொண்டு வரி தவிர்ப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளை 2016 வரை தள்ளி போடுவதாக’  நிதி அமைச்சர் கூறினார்.

2012 மார்ச் மாதம் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசிய அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரி தவிர்ப்புக்கு எதிரான விதிமுறைகளை கொண்டு வரப் போவதாக அறிவித்தார். உடனேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய மூலதனத்தை வெளியில் கொண்டு போனார்கள்.  இந்திய  முதலாளிகளும் ஊடகங்களும் ‘இந்த விதிமுறைகள் அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தகர்ப்பதாக இருக்கின்றன’ என்று முறையிட்டார்கள். ‘வரி விதிப்பு தொடர்பான இந்திய அரசின் கொள்கைகள் முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாக’ இந்திய அரசை ஒபாமா எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி, ‘இப்பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்வதற்கு அவகாசம் வேண்டியிருப்பதால், இதன் அமலாக்கம் ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக’ அறிவித்து விட்டார்

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பார்சல் செய்து அனுப்பப்பட்ட பிறகு நிதி அமைச்சகத்தின் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், வரி தவிர்ப்புக்கு எதிரான விதிகளை ஆய்வு செய்வதற்காக வரி விதிப்புத் துறை நிபுணர் பார்த்தசாரதி ஷோமே தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.  பொதுவாக பல ஆண்டுகளாக இழுத்தடித்து முடிவை தள்ளிப் போடும் இத்தகைய குழுக்களுக்கு மத்தியில் ஷோமே குழு மிக விரைவில் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.

  • GAAR விதிமுறைகளை 3 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்
  • பங்குகளை விற்று கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு வரியை ரத்து செய்ய வேண்டும்.
  • மொரிஷியசில் பதிவு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்களின் வசிப்பிடத்தின் உண்மைத் தன்மையை சோதனை செய்ய இந்த விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது

என்றும் இன்னும் பல சலுகைகளையும் பரிந்துரைத்திருந்தது.

‘அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு GAAR செயல்பாட்டை 2016 வரை தள்ளிப் போடப் போவதாக’ நிதி அமைச்சர் ப சிதம்பரம் இப்போது அறிவித்திருக்கிறார்.

“’வரி ஏய்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரியில்லா சொர்க்கத் தீவுகளில் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீதும், வரி ஏய்ப்புக்காகவே செய்யப்படும் பரிவர்த்தனைகள் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை வருமானவரித்துறை ஆணையர்களுக்கு வழங்குவதற்காக’ வரி ஏய்ப்பு எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறியிருந்தது.

இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஒரு பெயர்ப்பலகை கம்பெனியைத் தொடங்கி, அதன் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து விட்டால், தானாகவே வரிச்சலுகை கிடைத்து விடும் என்பதே தற்போதைய நிலை. இதனை மாற்றி, இத்தகைய நிறுவனங்கள் உண்மையிலேயே அந்த நாட்டில் இருக்கின்றனவா, அல்லது அவை வெறும் பெயர்ப்பலகைகளா என்று ஆராயும் அதிகாரத்தை இந்தப் புதிய விதி வருவாய்த்துறை ஆணையருக்குத் தருகிறது.

அது மட்டுமின்றி, பன்னாட்டு நிதி நிறுவனங்களும், இந்தியக் கறுப்புப் பணப் பேர்வழிகளும், தங்களுடைய முகத்தை மறைத்துக் கொண்டு பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் இறக்கி வரும் வழியான, ‘பார்ட்டிசிபேட்டரி நோட்‘ என்ற முகமூடியணிந்த முதலீடுகள் விசயத்திலும், இந்த விதி “மூக்கை நுழைக்கிறது’’. வருமான வரித்துறை ஆணையர் கோரும் பட்சத்தில், வரி தவிர்ப்புக்கு அப்பாற்பட்ட பிற வணிக நோக்கங்களுக்காகவும்தான், பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் முதலீடு செய்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் நிரூபிக்கவேண்டும் என்று கூறுகிறது இந்த விதி.

கனடா போன்ற முன்னேறிய பொருளாதார நாடுகளிலும் இத்தகைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் வோடபோன் நிறுவனத்தின் மீது வருமான வரித் துறை விதித்த வரியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு தடுப்பு விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் வாம்போவாவும் இந்தியாவின் மேக்ஸ் குழுமும் 1992-ல் ஹட்சிசன்-மேக்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் ஆரம்பித்தன. செல்பேசி சேவைகளுக்கான உரிமங்களை பெற்றும் எஸ்ஸார், ஏர்செல் நிறுவனத்தின் ஒரு பகுதி, பி.பி.எல்.  போன்றவற்றை விலைக்கு வாங்கியும் ஹட்ச்-எஸ்ஸார் என்ற பெயரில் இந்தியாவின் பல பகுதிகளில் செல்பேசி சேவைகளை வழங்கி வந்தது அந்த நிறுவனம்.

நிறுவனத்தில் 67 சதவீதம் பங்குகளை வைத்திருந்த ஹட்சிசன் டெலிகாம் இன்டர்நேஷனல் 2007ம் ஆண்டு தனது பங்குகளை வோடபோன் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ரூ 52,300 கோடிக்கு விற்றது.  இதன் விளைவாக இந்தியாவில் இயங்கி வந்த ஹட்ச் தொலைபேசி சேவை வோடபோன் என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்திய வருமானவரிச் சட்டத்தின் படி ‘எந்த ஒரு சொத்தையும் விற்கும் போது அந்த விற்பனையால் கிடைக்கும் ஆதாயத்தின் மேல் வரி செலுத்தப்பட வேண்டும்.’ ‘சொத்தின் விற்பனை மதிப்பு வாங்கிய விலையை விட அதிகரிப்பது சொத்தின் உரிமையாளரின் முயற்சிகளை மட்டுமின்றி புறச் சூழல்களையும் சார்ந்திருப்பதால், ஆதாயத்தின் ஒரு பகுதி அரசுக்குச் சேர வேண்டும்’ என்ற அடிப்படையில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.

ஹட்ச்-வோடபோன்‘ஹட்சிசன்-வோடபோன் பரிமாற்றத்துக்கான மூலதன ஆதாய வரியாக ரூ 11,000 கோடி கட்ட வேண்டும்’ என்று இந்திய வருமான வரித் துறை வோடபோனுக்கு உத்தரவிட்டது. அதாவது ஹட்சிசன் தனது பங்குகளை வோடபோனுக்கு விற்றதால் ஈட்டிய ஆதாயத்தின் ஒரு பகுதியை இந்திய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். ஹட்சிசனுக்கு தான் கொடுத்த பணத்திலிருந்து வரியை கழித்துக் கொண்டு அரசாங்கத்துக்கு வோடபோன் நிறுவனம் கட்ட வேண்டும்.

இந்த பரிமாற்றம் கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்டது. எனவே ‘வாங்கப்பட்ட சொத்துக்கள் இந்தியாவில் இருந்தாலும் பரிமாற்றம் இந்தியாவுக்கு வெளியில் நடைபெற்றதால் வரி கட்டத் தேவையில்லை’ என்று வோடபோன் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோற்றது. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் ரூ 11,200 கோடி ரூபாய் இந்திய அரசிடமிருந்து பிடுங்கப்பட்டு வோடபோன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

ஹட்சிசன்-வோடபோன் நிறுவனங்கள் இந்திய மக்களிடமிருந்து ஏமாற்றி பறித்துச் சென்ற ரூ 11,200 கோடி ரூபாயைப் போல பல லட்சம் கோடி ரூபாய் வரி தவிர்ப்பு கார்ப்பரேட்டுகளால் செய்யப்படுகின்றன.  மக்களின் கோபத்தைப் பற்றி கவலைப்படாமல் ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் வெட்டு, பெட்ரோல்/டீசல் விலை உயர்வு என்று சுமைகளை ஏற்றிக் கொண்டே போகும் மத்திய அரசு, முதலீட்டாளர்களை கோபப்படுத்தக் கூடாது என்ற அக்கறையில் கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை விட்டுக் கொடுக்கிறது. இந்திய அரசும் ஜனநாயகமும் யாருக்காக செயல்படுகின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க