privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !

பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !

-

“இன்னும் ஒண்ணா” என்று நொந்து கொள்ளாதீர்கள். ஆமாம், ஒரு நிதி மோசடி நிறுவனம் மக்களுக்கு நாமம் போட்டுக் கொண்டிருந்த செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் சகாரா, மேற்கு வங்கத்தில் சாரதா, அதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஈமு கோழிப் பண்ணை, பாசி பாரெஸ்ட் டிரேடிங், கொஞ்சம் இன்னும் தள்ளி யோசித்தால் 1990-களின் தேக்குமரப் பண்ணைகளை காட்டி மோசடி செய்த அனுபவ் பிளான்டேஷன்ஸ், சிட் பண்ட் நிறுவனங்கள் என்று மக்களை மொட்டை போடும் நிதி நிறுவனங்களின் வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது பேர்ல் (pearl) குழுமம்.

 நிர்மல் சிங் பாங்கூ
நிர்மல் சிங் பாங்கூ

நமது உளவுத் துறை ‘புலி’களுக்கு தெரியாமலும், ஒழுங்கு முறை ஆணையங்களின் ‘கழுகு’ப் பார்வையில் படாமலும், நீதிமன்றங்களின் ‘கவன’த்தை ஈர்க்காமலும், புலனாய்வு பத்திரிகையாளர்களின் பொறிகளில் சிக்காமலும் இது போன்று எத்தனை மோசடி நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கணக்கு யாரிடமும் இல்லை.

ரிலையன்ஸ், அல்லது சகாரா என்று பிரபலமான நிறுவனங்கள் தமது பெயரோடு பல சொற்களை ஒட்டியும் வெட்டியும் புதுப் புது கம்பெனிகளை படைப்பது இந்திய தரகு முதலாளிகளின் அடிப்படை வணிக நடைமுறை. அதாவது ஒன்றில் பெற்ற பெயரை வைத்து மற்றதில் நாமம் போடலாம். பிரபலமான பெயரைப் பார்க்கும் மக்கள் அந்த பெயர் அறிமுகம் இல்லாத தொழிலில் ஈடுபட்டிருப்பது குறித்து கவலைப்படுவதில்லை.

அந்த வகையில் பஞ்சாபைச் சேர்ந்த நிர்மல் சிங் பாங்கூ 1983-ல் பேர்ல்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார். 1996-ல் ஜெய்ப்பூரில் பதிவு செய்யப்பட்ட பேர்ல் கோல்டன் ஃபாரஸ்ட் – பி.ஜி.எஃப் என்ற நிறுவனத்தின் பெயரிலும் தொடர்ந்து பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் – பி.ஏ.சி.எல் என்ற பெயரிலும் மக்களிடமிருந்து பணம் திரட்டியிருக்கிறார்கள். இப்படி பேர்ல் என்ற பெயர் கொண்ட தாய் நிறுவனம் பல லெட்டர் பேடு கம்பெனிகளை காளான்கள் போல ஆரம்பித்தது.

இந்நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ 45,000 கோடி நிதி திரட்டியிருக்கிறது. வாடிக்கையாளர்களை கொண்டு வரும் முகவர்களுக்கு முதலீட்டுத் தொகையில் 12% வரை கமிஷன் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் அப்படி சிலருக்கும் கொடுக்கவும் செய்தது. இது மீனை பிடிக்கும் தூண்டில் புழு என்பது பல மோசடி நிறுவனங்களின் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அப்படி பணம் போடுபவர்கள், தாமும் இதே அடிப்படையில் புது வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்து 12% கமிஷன் சம்பாதிக்கலாம் என்று லட்சக்கணக்கானவர்களை செயின் திட்டத்தில் ஈடுபடுத்தியிருக்கிறது. இதைப் பார்த்து ஏமாந்து பல ஆயிரம் மக்கள் தமது சேமிப்பு பணத்தை போட்டார்கள்.

பேர்ல் குழுமம் தனது தொழில் ரியல் எஸ்டேட் என்று சொல்லிக் கொண்டது. ஆனால், வாடிக்கையாளர்களிடம், ‘நீங்கள் போட்ட பணம் 6 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி விடும்’ என்று வாக்குறுதி அளித்து வைப்புத் தொகை வாங்கியிருக்கிறார்கள். ‘பணத்தை போட்டவர்களின் பெயரில் நிலம் வாங்கி வைத்து, ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை விற்று 2 மடங்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதாக’ கூறியிருக்கின்றனர். மறுகாலனியாக்க கால கட்டத்தில் பொன் விளையும் பூமி போல ரியல் எஸ்டேட் தொழில் பூதாகரமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இது போதாதா, மக்கள் நம்புவதற்கு?

இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக நிறுவன விவகாரத் துறையில் பதிவு செய்திருக்கிறது பி.ஏ.சி.எல். மேலும் நிறுவனத்தின் இணைய தளத்தில் கைவசம் 15 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனுபவ் முதலீட்டாளர்கள்
அனுபவ் தேக்குப் பண்ணை திட்டத்தில் பணம் இழந்தவர்கள்.

நோய்டா, டெல்லி, ஜிர்காபூர், மொகாலி, பதிண்டா, மும்பை, பூனே, வடோதரா (குஜராத்), மதுரை போன்ற இடங்களில் வீடு கட்டி வருவதாகவும் வட இந்தியாவில் கோதுமை, நெல், பேபி கார்ன், காய்கறிகள் பயிர்கள் விளைவிப்பதாகவும், தென்னிந்தியாவில் மாம்பழம், மாதுளை, சப்போட்டா, நெல்லிக்காய், முந்திரி விளைவிப்பதாகவும் கூறுகிறது அதன் இணையதளம். இப்படித்தான் 90-களில் அனுபவ் நிறுவனம் மல்டி கலர் ஆர்ட் பேப்பரில் தேக்கு மர படங்களை வைத்து மாத சம்பள பார்த்தசாரதிகளுக்கு முப்பரிமாண நாமம் போட்டது. இணைய தளத்தை வைத்து உயர்நீதிமன்றத்திலேயே வேலை வாய்ப்பு என்று ஏமாற்றிய காலத்தில் பழம், காய், தோட்டங்களை ஃபோட்டோஷாப்பில் காட்டி ஏமாற்றுவது ஒன்றும் சிரமமில்லை.

‘தேக்கு மரம் வளர்த்தால் நல்ல மதிப்பு இருக்கிறது, 20 ஆண்டுகளில் இத்தனை சதுர அடி மரம் கிடைக்கும், அதன் விலை இத்தனை லட்சமாக இருக்கும்’ என்று கணக்கு போட்டு ஏமாந்ததைப் போல ‘நிலத்தின் சந்தை விலை எப்படியும் ஏறிக் கொண்டோ போவதால், ஐந்தரை ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகி விடும். அப்படியே ஏதாவது பிரச்சனை என்றாலும் கையில் நிலத்துக்கான ஆவணம் இருக்கிறது’ என்று மக்கள் ஏமாந்திருக்கின்றனர்.

ஆனால் பி.ஏ.சி.எல் வாங்குவதாகச் சொன்ன நிலத்தில் ஒரு சிறுபகுதி கூட கைவசம் இல்லை. விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களை மட்டுமே ஆங்காங்கே ஒரு சில ஏக்கர் வாங்கி போட்டிருக்கிறது. நிலம் வாங்கி வீடு கட்டுவதாக சொன்ன இடங்களில் ஒன்று மதுரை. அங்கு பேர்ல் சிட்டி என்ற பெயரில் பணம் கொடுத்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், இப்போது அந்நிலத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் மட்டும் கட்டியிருக்கிறார்கள். காம்பவுண்டு வாலை வைத்தே நடுத்தர வர்க்க வாலாக்களை வளைக்கலாம் என்றால், வாணம் விட்டே இந்தியா ஏன் வல்லரசு ஆக முடியாது?

பேர்ல் குழுமம் தனது நிதி திரட்டும் திட்டங்களை விதிமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று செபி நிறுவனம் 2002-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து முறையீடு செய்த பேர்ல் குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து செபியின் உத்தரவை தள்ளுபடி செய்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். அதை ஏற்றுக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்துக்கு  மேல்முறையீடு செய்து விட்டு வேறு வேலைகளில் மும்முரமாகி விட்டிருந்தது செபி. உச்சநீதிமன்றமும் ஊழல் குற்றவாளிகளுக்கும், செக்ஸ் சாமியார்களுக்கும் பிணை வழங்குவது போன்ற பல முக்கியமான வழக்குகளில் பிசியாகி விட பேர்ல் குழுமத்தின் மீதான வழக்கு தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது.

மேற்கு வங்கம் ஏமாற்றப்பட்டவர்கள்
மேற்கு வங்கத்தில் சிட் பண்ட் மோசடியில் பணத்தை இழந்த மக்கள்.

மீண்டும் 2013-ல் செபி தாக்கல் செய்த நினைவூட்டலைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இப்போது பேர்ல் குழும நிறுவனங்களைப் பற்றி புலனாய்வு செய்யும்படி சி.பி.ஐ-க்கும் வருமான வரித் துறைக்கும் ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த தாமதம் பேர்ல் நிறுவனம் ஏற்பாடு செய்த பேரங்கள் காரணமாக மட்டும் இருந்திருக்க வேண்டும்.

இந்த உத்தரவின் படி பேர்ல் குழுமத்தின் டெல்லி, ஜெய்ப்பூர், சண்டிகர், மொகாலி, ரோபார் ஆகிய இடங்களில் உள்ள அலுவலங்களில் சி.பி.ஐ  ரெய்டு நடத்தியதாம். அப்போது கூட விவகாரம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லையாம். ஒரு சில மடிக்கணினிகளை திறந்து பார்த்த போதுதான் மோசடியின் முழுப் பரிமாணம் புரிய வந்ததாம். உத்தர பிரதேசத்தில் 1.3 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 51 லட்சம் பேரிடமும், மகாராஷ்டிராவில் 61 லட்சம் பேரிடமும், ராஜஸ்தானில் 45 லட்சம் பேரிடமும், ஹரியானாவில் 25 லட்சம் பேரிடமும் பேர்ல் குழுமம் பணம் திரட்டியதாக விபரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஏமாறுவதில் ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கும், தமிழ்நாடு, ஹரியானா போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கும் வேறுபாடு இல்லை. அந்த வகையில் மோசடிக்கும், ஏமாற்றப்படுதலுக்கும் இந்தியாவில் ஒரு சமத்துவம் இருக்கிறது. இதில் தமிழனின் தனித்துவம் ராஜஸ்தான் சேட்டோடு கரைந்திருப்பது குறித்து தமிழினவாதிகள் என்ன சொல்வார்களோ?

பங்குகள் கை மாறுவதன் மூலமாகவே தம் மதிப்பை ஏற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை மோசடி வர்த்தகத்தை போலவே ‘சும்மா கிடக்கும் நிலத்தின் மதிப்பு நான்கு பேர் கை மாறுவதன் மூலமாகவே ஏற்றி விடப்படும்’ என்ற ரியல் எஸ்டேட் சந்தையை பயன்படுத்தி கொண்டுதான் சத்யம் ராஜூ முதல் சகாரா சுப்ரதா ராய் மற்றும் பல நூற்றுக் கணக்கான பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் பெரிய அளவில் செய்பவர்கள் தரகு முதலாளிகளாகவும், சிறிய அளவில் செய்பவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களாகவும் இருக்கின்றனர்.

சி.பி.ஐ
புலனாய்வு புலி சி.பி.ஐ

இந்த நிதி மோசடி பேர்வழிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருட்டில் வீட்டை உடைத்து திருடும் பீரோ திருடர்கள் அல்ல. பட்டப் பகலில் அலுவலகம் திறந்து வைத்து, ஆண்டு தோறும் நிறுவன விவகாரங்கள் துறையில் அறிக்கை பதிவு செய்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்து 17 ஆண்டுகளாக தொழில் செய்து கொண்டிருந்தன பேர்ல் குழும நிறுவனங்கள். இக்குழும நிறுவனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 35 வங்கிகளில் 1,000 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.

ஆனால் இது எல்லாம் நடப்பது தெரிந்தும் நிதிச் சந்தையை ஒழுங்கு படுத்தும் ரிசர்வ் வங்கியும், பங்குச்சந்தை, முதலீட்டுச் சந்தைகளை ஒழுங்கு படுத்தும் செபியும், உளவுத் துறையின் பொருளாதாரப் பிரிவும், வருமான வரித்துறையும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அலட்சியமாகவே இருந்திருக்கின்றன. ஊழல்களில் ஒரிரண்டு மட்டுமே நமது பார்வைக்கு வரும் என்பதே இதன் நீதி! பார்வைக்கு வராமல் இருப்பதற்கு திரை மறைவு ஏற்பாடுகளும், சட்ட பூர்வ ஆதாயங்களும் காரணமாக இருக்கின்றன.

மேலும் இந்நிறுவனம் ஐ.எஸ்.ஓ 9001 என்ற சேவைக்கான தரச் சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ 14001 என்ற சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கான சான்றிதழ் இரண்டையும் பெற்றிருக்கிறது. மக்களின் தாலியறுத்து கொள்ளை அடிப்பதையும் தரமாக  செய்கிறார்கள் என்று சான்றிதழ் கொடுப்பதுதான் இத்தகைய சான்றிதழ் நிறுவனங்களின் யோக்கியதை. அதன்படி இனி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறும் நிறுவனங்கள் மோசடியிலும் நம்பர் ஒன் தரத்தோடு இருக்கும் என்பதறிக.

போதாக் குறைக்கு, பேர்ல் குழும முதலாளி பாங்கூ ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டியை’ தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார். அது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.

ஷெரட்டன் மிராஜ்
இந்திய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து பாங்கூ வாங்கிப் போட்ட ஷெரட்டன் மிராஜ், கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா.

2012-ம் ஆண்டில் கேரளாவில் கொல்லம், ஆலப்புழை போன்ற இடங்களில் படகுப் போட்டி நடத்த பணம் கொடுத்திருக்கிறார் பாங்கூ. கேரளாவின் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் பிரபலங்களும் பி.ஏ.சி.எல்லின் செலவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் போட்டியில் நிறுவனத்தின் இயக்குனர்கள் கலந்து கொள்ளவில்லை. பணம் போட ஆள் பிடித்துக் கொடுக்கும் முகவர்கள் மட்டும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். 2013-ம் ஆண்டு கேரள மக்களிடம் திரட்டிய நிதியோடு காசரகோடு, திரிச்சூர், கண்ணனூர் அலுவலங்களை இழுத்து மூடிக் கொண்டது பி.ஏ.சி.எல். அதிகம் படித்த சேட்டன்களது மாநிலத்திலேயே ஸ்வாகா என்றால் பாமரர்களது மாநிலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

பஞ்சாப் மாநிலத்தில் துணை முதல்வர், முதல்வரின் மகன் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் நடந்த அகில உலக கபடிப் போட்டிகள் நடத்துவதற்கு ரூ 35 கோடி கொடுத்திருக்கிறார் பாங்கூ. அப்படி கொடுத்ததாக பி.ஏ.சி.எல் கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அதை வாங்கியதாக போட்டியை நடத்தியவர்களின் கணக்கில் காட்டப்படவில்லை. இடையில் யார் பையிலோ அது தங்கிப் போயிருக்கிறது. யார் என்று சுக்பீர் சிங்கையை, பாங்கூவையோ கருப்புத் துணியால் முகத்தை மூடி கைது செய்து லாக்-அப்பில் அடித்து உதைத்து சி.பி.ஐ விசாரிக்கப் போவதில்லை. தமது விசாரணைக்கு ஒத்துழைக்கா விட்டால் மட்டும் இயக்குனர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறது சி.பி.ஐ. இந்த உலக கபடிப் போட்டியின் நிகழ்வுகளை ஆரவாரத்துடன் வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் இதன் புரவலரது யோக்கியதையை உச்சி மோந்தே வந்திருக்கின்றன.

பாங்கூ தன்னுடைய சமூக சேவையை இந்திய எல்லைக்குள் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் என்ற இடத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த ஷெரட்டன் மிராஜ் ரிசார்ட்ஸ் என்ற சுற்றுலா சொகுசு ஹோட்டலை சுமார் ரூ 300 கோடி கொடுத்து 2009-ல் வாங்கியிருக்கிறார். அதனால், ‘கோல்ட் கோஸ்ட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்க வந்த தேவதூதர்’ என்று அம்மாநில முதல்வர் உருகி கண்ணீர் வடித்திருக்கிறார். அந்த சொகுசு ஹோட்டலை புதுப்பிப்பதற்கு கூடுதலாக் ரூ 100 கோடி அள்ளிக் கொடுத்திருக்கிறார் பாங்கூ. பி.ஏ.சி.எல் குழுமத்தின் பெயரை பிரபலப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீயையும் பணம் கொடுத்து அமர்த்தியிருக்கிறார். ஒரு பிளேடு பக்கிரிக்கு பிரெட் லீ தூதர், ஆஸ்திரேலியாவில மாளிகை என்றால் பாவம் நம்மூர் பிக்பாக்கெட்டுகள்.

நாணயம் விகடன்வணிக மற்றும் முதலீட்டு பத்திரிகைகளும் இந்த மோசடியை வரும் கவரின் வெயிட்டில் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் இந்த பத்திரிகைகள் நேற்று வரை இத்தகைய திட்டங்களையே கவர்ச்சிகரமானது முதலீடு செய்யலாம் என்று அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். தற்போது தாம் போற்றிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் மோசடி நாளை வெளியானதும், முதலீட்டாளர்கள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று பம்மாத்து செய்வார்கள்.

பேர்ல் குழும அலுவலகங்களில் சி.பி.ஐ ரெய்டு பற்றி நாணயம் விகடன் பத்திரிகையின் ஷேர்லக் ஹோம்ஸ் (ஜூ.வி கழுகார் போல நா.வி-யின் ஷேர்லக்) மார்ச் 9 தேதியிட்ட இதழில் குறிப்பிட்டிருந்தாராம். அதைத் தொடர்ந்து பல வாசகர்கள் தொலைபேசி கேட்கவே இது தொடர்பான தகவல்களை திரட்டி அடுத்த இதழில் அட்டைப் பட சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வாசகர்களில் ஒருவர் கூட இதற்கு முன்னர் நாணயம் விகடனிடம் ஆலோசனை கேட்கவில்லை என்பதும், நாணயம் விகடன் நிருபர்களின் கண்ணிலும் இது தொடர்பான விபரங்கள் சிக்கவில்லை என்பதும் ஆச்சரியத்துக்குரியவை. இவ்வளவுக்கும் ஈரோட்டைச் சுற்றிய கிராமங்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்நிறுவனத்தால் திரட்டப்பட்டிருப்பதாக கூறுகிறது நாணயம் விகடன்.

சமீபகாலமாக பேர்ல் குழும நிறுவனங்களில் பணம் போட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் கொடுப்பது தாமதமாகியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டும் பணம் தரப்படும் என்று காலையில் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்க வைத்திருக்கின்றனர். அதன்படி கொடுத்த காசோலைகளும் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.

நிதி மோசடி நிறுவனங்கள் இது போன்று நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் போது பழைய சினிமாக்களில் இறுதிக் காட்சியில் வந்து நிற்கும் போலீஸ் போல போலீசும், சி.பி.ஐயும் களத்தில் குதித்து மோசடி முதலாளிகளை கைது செய்து பத்திரமாக சிறையில் அடைத்து விடுகிறார்கள். இதன்படி முதலாளிகளது மோசடி பணம் பத்திரமாக இருக்கும். ஏமாந்த மக்களும் எதிர்த்துக் கேட்க முடியாத படி சிறை, வழக்கு எல்லாம் பேருக்கு நடக்கும். இறுதியில்? இன்றும் சென்னை தி.நகர் பூங்காவில் 90-களில் சிட் பண்டு கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்தோர் வாரந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம்தான் வந்தபாடில்லை.

இப்படித்தான் மக்களும் வேறு வழியின்றி ஒரு தேர்தலில் ஓட்டு போட்டு ஏமாந்த பிறகும் அடுத்த தேர்தலில் இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடுவது போல அடுத்தடுத்து இது போன்ற மோசடி நிறுவனங்களை நம்பி ஏமாற்றப்பட்டுகின்றனர்.

1990-களில் அனுபவ் குழுமம் செய்த மோசடி தொகை ரூ 400 கோடி. பேர்ல் குழுமத்தின் மோசடி தொகை ரூ 45,000 கோடி. 1990-களுக்குப் பிறகு நாடு முன்னேறியிருக்கிறதோ இல்லையோ, மோசடி நிறுவனங்களின் மோசடி மதிப்பு சில நூறு கோடிகளிலிருந்து சில பத்தாயிரம் கோடிகளாக வளர்ந்திருப்பது மட்டும் நிதர்சனம். இத்தனை ஆண்டுகளில் இந்தியா உருவாக்கியிருக்கும் சாதனைதான் இம்மாதிரியான மோசடிகள்.

இம்மோசடிகளை வைத்தே நீங்கள் பார்க்கும் கிரிக்கெட்டோ, கபடியோ, சமூக சேவையோ, சிஎஸ்ஆரோ நடக்கின்றன. ஒரு சிக்சரில், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்தது மறந்து போகிறது, என்ன செய்ய?

–    பண்பரசு

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க