privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்

அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்

-

சென்னை இராயபுரம் விடுதி மாணவிகளுக்கு நியாயம் கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடந்த மாணவர் போராட்டத்திற்கு வெற்றி!

  • இராயபுரம் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் மேற்கூரை இடிந்து  விழுந்து இரண்டு மாணவிகள் படுகாயம்!
  • புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போராட்டத்தால் பணிந்தது ஆதி-திராவிட நலத்துறை

புமாஇமு ஆர்ப்பாட்டம்

சேரிகளாக புறக்கணிக்கப்படும் அரசு ஆதிதிராவிடர் விடுதிகள்

பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்  என்றும் பஞ்சமர், சண்டாளர்  என்றும் இழித்துரைத்து அவர்களை கல்வி கற்கவிடாமல், கல்வியின் நறுமணத்தைக் கூட நுகரவிடாமல் தடுத்து ஊருக்கு வெளியே குடிக்க தண்ணீர் இல்லாமல், பிழைக்க நிலம் இல்லாமல், ஏன்? செத்தால் புதைக்க சுடுகாடு கூட இல்லாமல் ஒதுக்கி வைத்து அவர்களை அடக்கி ஒடுக்கியது பார்ப்பனீயம். இன்று நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஜெயா தலைமையிலான அதிமுக அரசு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை புறக்கணிக்கப்பட்ட சேரிகளாகவே நடத்துகிறது. “எங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை” என்று முறையிடும் மாணவர்களிடம்  “கவர்மெண்டு ஆஸ்டல்னா அப்படித்தான் இருக்கும், ரொம்ப துள்ளாதீங்க….. அப்பறம் படிப்பும் போயிடும்” என்று சாதி ஆதிக்க மனோபாவத்துடன் கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

royapuram-girls-hostel-rsyf-05

‘சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து வந்த பார்ப்பனீய மனுநீதியின் தொடர்ச்சியாக இன்றும் கூட உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கின்ற அரசுக் கல்லூரிகளும், அவர்களுக்கான விடுதிகளும் இந்த அரசால்  சேரிகளைப் போன்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் உயிரை பறிக்கத் துடிக்கும் அரசின் அலட்சியம்

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று சென்னையில் உள்ள 6 விடுதிகளில் ஒன்று, ராயபுரம் மாணவிகள் விடுதி. சென்னையில் உள்ள 10-க்கும்மேற்பட்ட அரசுக்கல்லூரிகளில் பயிலும் தலித் மாணவிகளின் ஒரே புகலிடம் இந்த விடுதிதான். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இவ்விடுதி பார்ப்பதற்கு அகதிகள் முகாம் போன்றே உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பராமரிப்பும் இன்றி பாழடைந்த கட்டிடங்கள் மட்டுமே விடுதியாக இயங்குகிறது.

வயது வந்த மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை இவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கல்லூரிக்கு செல்லும் போது வீடுகளில் இருந்து வரும் சக நண்பர்களான மாணவிகளை பார்த்து அவர்களைப் போல் நாம் இருக்க முடியவில்லையே என்ற இந்த ஏக்கத்தை எருமை மாட்டுத்தோல்களைக் கொண்ட அதிகாரிகளால் உணர முடியாது. திடகாத்திரமான உடல் அமைப்புடன் இந்த விடுதிக்கு வந்த கிராமத்து ஏழை மாணவிகளின் ஆரோக்கியத்தை விடுதி உணவும், சூழலும் பறித்துக்கொண்டது என்றால், மிச்சம் இருக்கும் உயிரையும் பறிக்கப் பார்க்கிறது அரசின் அலட்சியம்.

royapuram-girls-hostel-rsyf-10

மூன்று நாட்களுக்கு முன்பு ராயபுரத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து கலைவாணி, விநாயகசெல்வி எனும் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அறைக்கு ஒட்டுப்போடும் நாடகத்தை அரங்கேற்றியது அரசு.

ஆனால், மாணவிகளின் கோரிக்கை உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்பது. “ஏற்கனவே வேப்பேரியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள விடுதிக்கு மாற்ற வேண்டும்” என்கிறார்கள் மாணவிகள். அந்த விடுதியை திறக்க மறுக்கிறது அரசு. காரணம் ’அம்மா’ முதல்வராக இருந்தபோது கட்டிய அந்த விடுதியை அவர் கையால் திறக்க திட்டமிடப்பட்டதாம். தற்போது பதவி இழந்ததால் திறக்கும் திட்டமில்லையாம். மீண்டும் ’அம்மா’ பதவிக்கு வந்தால்தான் இந்த மாணவிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமாம். எவ்வளவு வக்கிரம் இது. இந்த வக்கிரத்திற்கு கொடுக்கப்பட்ட பலிதான் இரண்டு மாணவிகள் படுகாயம்.

தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகின்ற பல ஆயிரம் உழைக்கும் மக்கள் வீட்டு மாணவர்களின் புகலிடம் அரசுக் கல்லூரிகளும், அரசு விடுதிகளும்தான். ஆனால் அவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், கழிவறை இல்லாமல், குளியல் அறை இல்லாமல், சரியான உணவு இல்லாமல், மோசமான முறையில் தான் உள்ளன. அரசுக்கு இதெல்லாம் தெரியும்.

ஆனால், “இவனுக்கெல்லாம் படிப்பா ?” என்று ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் படிப்பதைப் பார்த்து சாதி வெறியன் கொக்கரிப்பது போலவே நம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளையும், அவர்களுக்கான விடுதிகளையும் இந்த அரசு பார்க்கிறது. அதனால் தான் போதிய நிதி ஒதுக்குவதில்லை. அது மட்டுமல்ல, மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையையும் தராமல் இழுத்தடிக்கிறது.

royapuram-girls-hostel-rsyf-08

‘பஞ்சப்பராரிகளுக்கு,  எதற்கு கக்கூசு’  என்று தான் நம்மை ஒதுக்குகிறது அரசு. ஐ.ஐ.டி விடுதிகளையும் மத்திய பல்கலைக் கழக விடுதிகளையும், நன்றாகப் பராமரிக்கும் அரசு உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகள் தங்கி படிக்கும் விடுதிகளை கண்டுகொள்வதில்லை.

நரகமயமான விடுதி வாழ்க்கை

இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லை  என்றாலும் எப்படியாவது படித்து உழைத்து முன்னேறி விடலாம் என்ற லட்சியத்துடன் தான் பல்லாயிரம் மாணவர்கள் இந்த விடுதிகளை நோக்கி வருகின்றனர். கழிப்பறை இல்லை, குடிநீர் இல்லை, குளிக்க அறை இல்லை, படுக்கும் அறையில் இடமில்லை என எப்பேர்பட்ட இடர்பாடு வந்தாலும் இந்த நெருப்புக் கடலில் நீந்தி, அதிலேயே வாழ்ந்து எப்படியும், மூன்றாண்டு, அல்லது இரண்டாண்டு படிப்பை முடித்துவிடலாம் என்று மாணவர்கள் போராடுகின்றனர். அதனால், இவற்றை சகித்துக் கொள்கின்றனர்.

பல விடுதி மாணவர்கள் ஒருவேளை நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக பல கனவான்களின் திருமணங்களிலும், விசேசங்களிலும் சமையல் மற்றும் பந்தி பரிமாறல், பாத்திரம் கழுவும் வேலைக்கு போகிறார்கள். தங்களைப் பராமரித்துக் கொள்ள ஊரில் இருந்து பணம் எதிர்பார்த்து பெற்றோருக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் விடுதி மாணவர்களை காவல் தடிகள் குற்றவாளிகளாகவும், பொறுக்கிகளாகவும் சித்தரித்து அவர்களை சந்தேகக் கேசு போட்டு துன்புறுத்துகிறார்கள். கல்லூரியில் மாணவர்கள் பகுதிநேர வேலைக்கும் போகக் கூடாது என்று சொல்கிறார்கள். இப்படி பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் விடுதி மாணவர்கள் வாழ்கிறார்கள். மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் மாணவிகளின் நிலை சொல்லி மாளாது.

royapuram-poster

மாணவர்கள் தங்கள் பராமரிப்பிற்காக பகுதி நேர வேலைக்கு செல்ல முடியும். கேட்டரிங் வேலை செய்து ஒரு வேளை நல்ல சோறு சாப்பிட முடியும். ஆனால் மாணவிகளுக்கு இந்த வாய்ப்புகள் கூட குறைவு. அதையும் தாண்டி வேறு வழியே இல்லை எனும் போது, சூப்பர்மார்க்கெடுகளிலும், பேன்சிஸ்டோர்களிலும் அற்பக் கூலிக்கு வேலைக்குச் செல்வது என்று உள்ளது. அங்கும் கூட பாதுகாப்பான சூழல் இல்லை. வேலியில்லா பயிராகவே இவர்களைப் பார்க்கிறது சமூகம். அப்படி வேலைக்குச் சென்றாலும், அதனை வீட்டிற்கு தெரிவிப்பது கிடையாது. ஊருக்குப் போய் வரும் போது பிள்ளைகளுக்கு வழிச்செலவுக்கு 200 ரூபாய் கூட கொடுத்தனுப்ப முடியாத  ஏழைப் பெற்றோர்கள் எப்படி இவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்ப  முடியும்? இப்படி துன்பகரமான சூழலில் தான் பல ஆயிரம் முதல் தலைமுறை மாணவ மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள். இப்படி இவர்களின் பிறவிப் பெருங்கடல் நெருப்பால் ஆனதாகத் தான் உள்ளது.

ஆனால் அவர்கள் நரக வாழ்க்கை வாழும் இதே நகரங்களில் தான் எந்த நேரமும் கேட்டதெல்லாம் கிடைக்கும் வசதியுடன் தனியார் விடுதிகளைப் பார்க்க முடிகிறது. பல ஆயிரம் ரூபாய் வாடகையாகத் தந்து அப்பார்ட்மெண்ட்களில் தங்கி மாதச் செலவுகளுக்கு வீடுகளில் பணம் வாங்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவுக்கு வழங்கும் பெற்றோரும் படிக்கிற பிள்ளைகளுக்கு  எதற்கு கஷ்டம் என்று காரணம் சொல்லுகின்றனர். பள்ளியில் படிக்கும் போதே பிள்ளைகளை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக மாற்றி எப்படியாவது அரசு ஐ.ஐ.டியிலும், மத்தியப் பல்கலைக் கழகங்களிலும், மருத்துவப் படிப்பிலும் சீட்டு வாங்கிவிடவேண்டும் என்று போராடுகின்றனர். இடஒதுக்கீடு திறமை இல்லாதவர்கள் எல்லாம் கொண்டு வருகிறது என அங்கலாய்க்கின்றனர்.

ஆதிக்க சாதிக் காரன் குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது  என்றும் சொல்லிவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் குளிக்கமாட்டார்கள் என்று கூறுவது போல அரசுக் கல்லூரியின் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களை இவர்கள் பார்க்கிறார்கள். பட்டப்படிப்பு முடிந்தாலும் தன்வீட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது என நினைக்கும் இவர்கள் எப்படி இந்த விடுதி மாணவிகளின் வாழ்நிலையை உணர்வார்கள்.

மனுகொடுத்து மன்றாடிய விடுதி மாணவர்கள் – எட்டிக்கூட பார்க்காத அதிகாரிகளின் அலட்சியம்

இப்படி இந்த மாணவர்கள் படுகின்ற துன்பங்கள் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இல்லை.

அதிகாரிகளுக்கு அனைத்துப் பிரச்சனைகளும் தெரிந்து தான் இருக்கிறது. ஆனாலும் இவர்களின் எருமைத் தோலுக்கு எதுவும் உறைப்பதில்லை. மாணவர்கள் மனு கொடுத்தால் சரிசரி என்று தட்டிவிட்டுச் செல்லுகின்றனர். படுக்கை அறை முதல் கக்கூசு வரை ஏ.சி. போட்டு குளுகுளு என்று இருப்பவர்களுக்கு எப்படி மாணவர்களின் துன்பம் உறைக்கும்? உறைக்காது. மாணவர்களைப் போன்று அவர்கள் பலர் பார்க்கும் வகையில் குளித்தால்  தெரியும் இந்த அவமானம். குளுகுளு அறையில் நீர்த்தொட்டியில் குளிப்பவர்களுக்கு இது அலட்சியமாகத் தான் தெரியும்.

அதிகாரிகளைக் கண்காணிக்கும்  இந்த அரசுக்குத் தெரியாதா? அனைத்தும் தெரியும். ஆனால் இந்த அரசிற்கு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தரவும், கல்வி நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. அதையும் தாண்டி சிந்தித்தால் ஜெயி(ல்)லலிதா வின் விடுதலை பற்றியோ தான் யோசிக்க முடிகிறது. இது போன்ற வேலைகளில் இவர்கள் அரசு விடுதி மாணவர்களைப் பற்றி சிந்திக்க ஏது நேரம்?

போராட்டம் ஒன்றே விடிவெள்ளி

ஆம்! மாணவர்களின் போராட்டங்கள் ஒன்றே தீர்வு, அதுவும் அதிகாரிகளுக்கு உறைக்கும் வகையிலான போராட்டம் மட்டுமே தீர்வு. அது போன்ற போராட்டங்களை எந்த ஓட்டுக் கட்சியும் நடத்தமுடியாது. அவர்களுக்கு அந்த தகுதியும், யோக்கியதையும் இல்லை. எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் தான் செய்ய முடியும். ஆம் அந்த விதத்தில் தான் எங்களுடைய அமைப்பின் சார்பாக மாணவர்களை அணிதிரட்டி சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து முழக்கமிட்ட படியே சென்று கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திடீர் என ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

royapuram-girls-hostel-rsyf-07

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, பாழாய்போன தேர்வின் காரணமாக பல நூறு மாணவர்களை அணிதிரட்ட முடியாமல் போகக் கூடிய துரதிஷ்டமான நிலை இருந்த போதிலும் நூறு மாணவர்களை வைத்து எமது அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் போடப்பட்ட முழக்கங்களும் எருமைத் தோல் படைத்த அதிகாரிகளுக்கு உறைக்கும் வகையில் இருந்தது.

எமது அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார். அதன்பின்னர் அந்த மேன்மக்கள் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளான எங்களை சந்திக்க ஒத்துக் கொண்டனர். பல அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருந்த இடத்தில் எமது தோழர்கள், “ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளையும் சீரமைத்துக் கொடுக்க வேண்டும். உடனடியாக இராயபுரம் விடுதியை சீரமைக்க வேண்டும்” என்றதும் சொன்னதற்கு சரி என்று சொன்னார்.

chennai-collectorஆனால், “இதுபோன்ற பதில்களை பலமுறை நாங்கள் கேட்டு விட்டோம்”, என இராயபுரம் ஆண்கள் விடுதியின் பிரதிநிதி சொன்னதும் பு.மா.இ.மு தோழர்கள் “இந்த இடத்திலேயே நாள் உட்பட்டு தெளிவான பதிலை சொல்லுங்கள்” என்று நெருக்குதல் தந்த பிறகு இன்னும் 15 நாட்களுக்குள் செய்து விடுவதாக உறுதி அளித்தனர். அந்த அடிப்படையில் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் காத்திருந்த மாணவர்களிடம் தகவல் சொல்லப்பட்டது. விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

அதன் பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டத்தகவலை சொல்லச் சென்றோம். விடுதியில் உணவு இடைவேளை என்பதால் மாணவிகள் அனைவரும் அவரவர் அறைகளில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அந்த விடுதியின் காப்பாளர் நம்மை பார்த்து பயமடைந்தார்; பேசுவதற்குத் தயங்கினார்.

அவரிடம் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றியும், ஆட்சியரை சந்தித்தது பற்றியும் விளக்கினோம். “காப்பாளர் என்ற முறையில் நீங்கள் மாணவிகளுக்குத் தான் பொறுப்பு, ஆனால் கட்டிடத்தை பராமரிக்காததற்கு காரணம் இந்த அரசு தான். எனவே எங்களுக்கு நீங்கள் தனிப்பட்ட எதிரி இல்லை. ஆனால், நம் அனைவருக்குமே இந்த அரசும் அது அமுல் படுத்திவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைதான் எதிரி” என்றதும்,

அவராகவே “ஆமாம், விடுதியில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட நிரந்தர ஆட்கள் இல்லை. அதற்குக் கூட தனியார் நிறுவனம் தான் காண்ட்ராக்ட் விடுகிறது. இதனையாரும் பேசுவதில்லை” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார். “இதுபோன்ற விபத்து ஏற்படும் என்பதால் உடனே இவற்றை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பலமுறை சொல்லியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று நீங்கள் போராட்டம் நடத்தியுள்ளீர்கள்  என்பதற்கு நன்றி” என்று கூறினார்.

பின்னர் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த ஆண்கள் விடுதி மாணவர்களிடம் இந்தப் போராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கிவிட்டு காயமடைந்த மாணவிகளைச் சந்திக்க மாணவியர் விடுதிவழியாகச் சென்றோம். விடுதியினை ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றார் என்று தகவல் கிடைத்தது.

மருத்துவமனையிலும் எமது பெண் தோழர்கள் இரண்டு நாட்களாக காயமடைந்த மாணவிகளுடன் துணையாக இருந்து வருகின்றனர். மருத்துவமனைவளாகத்தில் இவர்களைப் பார்ப்பதற்காக 25-க்கும் மேற்பட்ட தோழர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவிகள் காயமடைந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு அமைச்சர் பார்வையிட வந்தார். உடன் அவருடைய அல்லக்கைகளும், காவல் துறையும், மின் தூக்கியில் சென்று மாணவிகளைப் பார்த்தனர். அதுவரை எமது தோழர்களை காத்திருக்கச் செய்தனர். ஆனாலும் “அவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களை அவர் மதிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த மக்களை மதிக்க வேண்டும்” என்று எமது தோழர்களும் மாணவர்களும் அமைதியாக, பொறுமையாக இருந்தனர்.

minister-subramanianஅதன் பிறகு வந்த அமைச்சர், ஜெயாவின் தரிசனத்துக்காக பெங்களூரு நீதிமன்றத்தின் வாசலில், கை கட்டி மெய்மறந்து காத்திருந்த அமைச்சர் அங்கு நின்றிருந்த எமது தோழர்களை கண்டு கொள்ளாமல் செல்ல முயன்றார்.  “நாங்கள் தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியிணர். இவர்தான் எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்” என்று கூறியதும் சரிப்பா என்று ஓட்டம் பிடிக்கப் பார்த்தார்.

“எங்களை பார்த்து ஏன் பதில் பேசாமல் இப்படி செல்கிறீர்கள்” என்றதும், போலீசு, “அமைச்சரை நீங்கள் ஏதாவது செய்துவிடுவீர்கள் என்று தான் பேசாமல் செல்கிறோம்” என்றார். அப்போது தான் இவர்கள் தங்கள் நிழலைக் கூட பார்த்து பயப்படும் அளவிற்கு வீரமானவர்கள், எப்படி நம்மைப் போன்ற புரட்சிகர அமைப்பினைச் சந்தித்தால், நிற்பார்கள் என்பது நினைவுக்கு வந்தது.

அதன் பின்னர் காயமடைந்த மாணவிகளைச் சந்தித்து நமது ஆர்ப்பாட்டச் செய்திகளைத் தெரிவித்தோம். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கவும், போராடியுள்ளோம் என்று சொன்னதும், அந்த மாணவியின் தாய் “இந்த ஊரில் எங்களுக்காக நீங்கள் வந்துள்ளீர்கள், மிக்க நன்றி” எனக் கூறினார்.

“இது எங்களுடையகடமை மாணவர் உரிமை எங்கு பாதித்தாலும் எமது பு.மா.இ.மு – அங்கு அவர்களுக்காக நிற்கும்” என்று கூறினோம்.

rsyf-hospital-visit-5

“நீங்கள் எல்லாம் போராடியதன் விளைவுதான் இன்று அமைச்சரே நேரில் வந்து எங்கள் பிள்ளைகளைப் பார்த்தது மட்டுமில்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதிஅளித்துவிட்டு சென்றுள்ளார்” என்று அவர் கூறினார்.

ஒரு மாணவி தனக்கு அடிபட்டதை அவரது பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. அவரது அம்மாவிற்கு வலிப்பு நோய் இருப்பதால், அதிர்ச்சியான வற்றை சொல்லக்கூடாது.  எனவே, அவரது சக தோழியும், தோழர்களும் தான் இவருக்கு துணையாக இருந்துள்ளனர்.

மற்றொரு மாணவியின் பெற்றோர், “இது போன்று தான் எங்களிடம் இவர்கள் படும் கஷ்டங்களை பற்றி சொல்வதே இல்லை.  சொன்னால் கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்து விடுவோமோ என்று பயப்படுகின்றனர், வேறு இடத்தில் தங்க வைக்க சென்னையில் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. வெளியில் தங்க வைக்கும் அளவுக்கும் எங்களுக்கு வசதியில்லை. ஊருக்கு வந்து போகக் கூட 100 அல்லது 200 ரூபாய் தான் கொடுக்க முடிகிறது, ஒரு நல்லது கெட்டது  என்றால் கூட நல்ல சாப்பாடு போட முடிவதில்லை. இது தான் எங்கள் நிலை” என்று அந்தத் தாய் உடைந்து பேசினார். “கை, காலில் அடிபட்டிருந்தால் கூட சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம், கழுத்திலே பலமான அடி என்று சொல்கிறார்கள் அது தான் எங்களுக்கு பயமாக உள்ளது” என்று கண்ணீர் சிந்தினார்.

“தரமான மருத்துவ வசதி அளிப்பதாக அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை  உங்களுக்குத் துணையாக இருப்போம்” என்றோம். “இந்தப் போராட்டம் மட்டும் இல்லையென்றால், இந்த அளவிற்குக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார் அந்தத் தாய்.

rsyf-hospital-visit-2நாங்கள் வரும்வரை காத்திருந்த விடுதிக் காப்பாளர், எமது தோழர்களைச் சந்தித்து “நீங்கள் என்னைச் சந்தித்துச் சென்ற 10 வது நிமிடம் அமைச்சரும் அதிகாரிகளும் வந்தார்கள். எப்போது பார்வையிடுவது என்றாலும் 5 – 10 நிமிடம் தான் நடக்கும், ஆனால் இன்று ½ மணி நேரம் அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டனர். கட்டிடம் மேற்கூரை இடிந்த இடத்தில் பூச்சுவேலைகளைப் பார்வையிட்டவர்கள் கொடியில் ஏன் துணிகள் காய்கின்றன. என்ன  இது எனச் சத்தம் போடுகின்றனர். குப்பைத் தொட்டியே தராத இவர்கள் குப்பையாக இருக்கிறது என்று குறை சொல்லுகிறார்கள். மாணவர்களைப் பராமரிக்க போதிய காப்பாளர்களை அரசு நியமிப்பதில்லை. இப்போது கூட பார்வையிடச் சென்ற அமைச்சர், படுத்திருந்த மாணவியிடம் என்ன ஆச்சு என்றதற்கு , சளி பிடித்துள்ளது என்று அந்த மாணவி பதில் அளித்ததும், என்ன கவனிக்கிறீர்கள் என்று சத்தம் போட்டுவிட்டுச் சென்றார்.  ஆனால் நான் இரண்டு நாட்களாக இந்த மாணவிகளுடனேயே தான் இருந்து வருகிறேன். இதையெல்லாம் இந்த அமைச்சரும், அதிகாரிகளும் கண் திறந்து பார்ப்பதில்லை” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார்.

“இறுதியாக இந்த விடுதி வேப்பேரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடுதிக்கு இடமாற்றம் இன்னும் 2, 3 நாட்களில் செய்யப்படும் என்று உறுதி அளித்துவிட்டுச் சென்றார்”  எனக் கூறினார்.

rsyf-hospital-visit-4

இந்த அரசே இப்படித்தான் செயல்படுகிறது, பிரச்சனை என்று வராதவரை அதைப்பற்றி ஒன்றும் கண்டு கொள்வது கிடையாது. பிரச்சனை ஏற்பட்டால் உடனே கீழ்நிலை அதிகாரிகளைத் தண்டிப்பது என்று செய்து தற்காலிக கண் துடைப்பு நாடகங்களை நடத்துகிறது. இராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், “நான் தினமும் இந்த வழியாகத் தான் போகிறேன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” என்று நைச்சியமாக பேசுகிறார். ஏன் இவர் தினமும் வீட்டுக்கு போகும் வழிதானே, இவரது தொகுதிக்குட்பட்ட விடுதிதானே, ஒரு நாள் இவர் எட்டிப் பார்த்து இருக்கலாமே!

நமது போராட்டங்கள் தான் போயஸ் தோட்டத்து காவலர்களையும் எருமைத் தோல் அதிகாரிகளையும் மக்களைச் சந்திக்க அழைத்து வந்திருக்கிறது. ஆம் எண்ணிக்கை என்பதை விடவும் போராட்டத்தின் தலைமை யாரிடம் இருக்கிறது, புரட்சிகர அமைப்புகளிடமா? அல்லது ஓட்டுப் பொறுக்கி அமைப்புகளிடமா? என்பது தான் கேள்வி. மருத்துவமனையில் அமைச்சர் பயந்து போகக்காரணம் எண்ணிக்கை இல்லை. நமது அரசியல் பின்புலமே வலிமை.

இதை ஒரு தற்காலிக வெற்றியாகத் தான் பார்க்கிறோம். அனைத்து அரசுவிடுதிகளையும் சீரமைக்கும் வரையிலும் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் வரையில் எமது போராட்டங்கள் தொடரும்.

மாணவர்களே! இளைஞர்களே! உழைக்கும் மக்களே! புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வீர்!

தாழ்த்தப்பட்ட விடுதி மாணவர்களே!

  • பாழடைந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை உடனடியாக சீரமைப்பு செய்ய மாணவர் கமிட்டிகளை கட்டியமைப்போம்!
  • வீதியில் இறங்கி போராடுவோம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தி பேரணி, ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க