Thursday, May 8, 2025
முகப்புசெய்திதமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்

தமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்

-

தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலிசால் போலி என்கவுன்டரில் படுகொலை !

செம்மரம் வெட்டும் தொழிலாளிகள் கொலை
இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் அருகேயும் காய்ந்த செம்மர கட்டைகள் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்டுள்ளன.

ந்திர மாநில திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்கள் ஆந்திர போலிசால் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத போலி மோதல் படுகொலையாகும். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆந்திர அதிகார வர்கத்தின் இந்தக் காட்டுமிராண்டிச்செயலை வன்மையாக கண்டிக்கிறது. இச்செயலில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். கொல்லப்பட்ட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

“ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரிமெட்டு, சேஷாசலம் வனப்பகுதியில் 07-04-2015 அன்று 100-க்கும் மேற்பட்டவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டினார்கள். அவர்களை கைது செய்ய முயன்ற ஆந்திர சிறப்புப்படை போலீசார் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தினார்கள். தற்காப்புக்காகச் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். தப்பி ஓடியவர்களைத் தேடிவருகிறோம்” என ஆந்திர போலீசார் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்கள். இவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டகிரி, கண்ணமங்கலம், நந்தியம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஆந்திர போலீசாரின் மேற்கண்ட செயல் திட்டமிட்ட படுகொலை. சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் அனைவர் மீதும் கொலைவழக்குப் பதிவு செய்வதுடன், அனைவரும் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். உயர் அதிகாரிகள் உத்திரவு இன்றி இது நடந்திருக்க முடியாது.

ஆந்திரா என்கவுண்டர் போலீஸ்
படம் : ஓவியர் முகிலன்

இது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.

  • சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரது மார்பிலும் குண்டு துளைக்கப்பட்டுள்ளது.
  • இறந்த உடல்கள் அனைத்தும் மல்லாந்த நிலையில் உள்ளன.
  • சம்பவ இடத்தில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செம்மரங்கள் இல்லை.
  • இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் அருகேயும் காய்ந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்தோ கொண்டுவந்து போடப்பட்டுள்ளன.
  • கொல்லப்பட்டவர்களின் காலணிகள் அருகிலேயே கிடக்கின்றன. தப்பி ஓடிய 80-க்கும் மேற்பட்டவர்களின் செருப்புகள் எங்கே?
  • ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புபடையினர் 1500 அடி வரை சுடக் கூடிய எஸ்.எல்.ஆர். ரைபிள் பயன்படுத்தி உள்ளனர். கல் எறிபவர்களால் அவ்வளவு தூரம் வீச முடியாது.

சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் 06-04-2015 திங்கள்கிழமை மதியமே ஆந்திர போலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று தப்பி வந்த சேகர் என்ற தொழிலாளி கூறியுள்ளார்.

ஆந்திரா என்கவுண்டர் போலீஸ்
படம் : ஓவியர் முகிலன்

செம்மரக்கட்டைகளைக் கடத்துவது யார்? வாழ வழியின்றி வறுமையில் வாடும் கூலித் தொழிலாளிகளை பண ஆசைகாட்டி அழைத்துச் செய்லும் புரோக்கர்கள் யார்? சென்னைத் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஜப்பான் என செம்மரக்கட்டைகள் எப்படி செல்கிறது?. எத்தைனை அரசியல்வாதிகள், எத்தனை அதிகாரிகள், எத்தனை கடத்தல் மாஃபியாக்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என அனைத்து விபரங்களும் மாநில, மத்திய அரசுகளுக்கு நன்கு தெரியும்.

குடிமக்களைப் பாதுகாக்க வக்கற்ற அரசாங்கம் வயிற்றுப் பிழைப்புக்காக மரம் வெட்டச் சென்ற கூலித் தொழிலாளிகளைச் சுட்டு படுகொலை செய்தது கோழைத்தனமானது; குரூரமானது.

அனைவரும் நாடு முழுவதும், எல்லை கடந்து அரச பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும்.

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

702/5, ஜங்சன்ரோடு, விருத்தாசலம், கடலூர்மாவட்டம்.
கைபேசி 9443260164
நாள் 8-4-15

20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை!
ஆந்திர அரசின் பச்சைப் படுகொலை!!

செம்மரக்கடத்தல் போட்டியில் சந்திரபாபு நாயுடு கும்பல் நடத்திய நரவேட்டை

மத்திய – மாநில அரசுகளே

  • டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய்!
  • நடுநிலையாளர்கள், ஜனநாயக சக்திகளைக் கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டி!

உழைக்கும் மக்களே!

  • பெருகிவரும் அரசின் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!
  • இயற்கை வளங்களை பாதுகாக்க மக்கள் அதிகார மன்றங்களை நிறுவுவோம்

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி