privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅச்சத்தைக் கைவிடு ! துணிந்து போராடு !

அச்சத்தைக் கைவிடு ! துணிந்து போராடு !

-

“அச்சத்தைக் கைவிடு! துணிந்து போராடு!‘” – உதவிப் பேராசிரியர் விக்ரமின் கலகக்குரல்

10-vikram-battle-cryல்விக்குச் சற்றும் தொடர்பில்லாத கிரிமினல் மாஃபியா கும்பல்களால் நடத்தப்பட்டுவரும் தனியார் கல்லூரிகளில், நிர்வாகத்தின் கொத்தடிமைத்தனத்தையும் அட்டூழியங்களையும், குண்டர்களின் அச்சுறுத்தலையும் அக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களால் எதிர்க்க முடியுமா? நிர்வாகத்தை எதிர்த்தால் வேலை பறிபோய் விடும் என்பதோடு, தமது உயிருக்கும்கூட உத்திரவாதம் இல்லை என்ற அச்சத்தின் பிடியில் ஆசிரியர்கள் இருத்தப்பட்டுள்ள நிலையில் இது சாத்தியமாகுமா? முடியும் என்று தனது போராட்டத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார், விஜயகாந்த் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய விக்ரம்.

விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடங்கி பேராசிரியர்கள் வரையில் அனைவருக்குமே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பேராசிரியரே ஆனாலும் நிர்வாகம் ஏவும் எடுபிடி வேலைகள் எதுவானாலும் தட்டாமல் செய்தாக வேண்டும். முக்கியமாக, கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்கும் புரோக்கர்களாகவே ஆசிரியர்களை மாற்றியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். ஆண்டுதோறும் அண்ணா பல்கலையில் நடைபெறும் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்களிடம் ஆசிரியர் என்ற அடையாளத்தை மறைத்து, தெருவில் நின்றுகொண்டு நோட்டீசு விநியோகிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். விற்பனைப் பிரதிநிதிகளைப் போல அவர்களை நேரில் சந்தித்து சோப்பு போட்டாக வேண்டும். ஆண்டுக்கு இரண்டு மாணவர்களை ஆசிரியர்கள் தமது சொந்தப் பொறுப்பில் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும். தவறும்பட்சத்தில் தானாகவே விலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கல்லூரியிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

வேலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமென்ற மனநிலையில்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் விஜயகாந்த் கல்லூரியில் பணியாற்றுகின்றனர். ஆனால், விக்ரமோ நிர்வாகத்தின் அடாவடித்தனங்களைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்டார். எடுபிடி வேலைகளைச் செய்ய முடியாதென மறுத்தார். கட்டணக் கொள்ளைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை வெளிப்படையாக ஆதரித்து நின்றார். இவரது இத்தகைய நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் பராமரித்து வரும் பண்ணையார்தனத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பயன்படுத்தினார் விக்ரம். விழா மேடையில் அமர்ந்திருந்த கல்லூரி முதலாளி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சிறப்பு விருந்தினர் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மாதவன் நாயர் ஆகியோரை உலுக்கிப் போடும் விதத்தில், “மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதோடு, பேராசிரியர்களை கொத்தடிமைகளைப் போல நடத்தும் இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது அவமானம்” என்று தனியொருவராய் நின்று கலகக் குரலெழுப்பினார். நூற்றுக்கணக்கான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இருந்த இவ்விழாவில் எழுந்த அவரது கலகக் குரல் நிச்சயம் அவர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியிருக்கும். இதனால் அவரை விழா அரங்கிலிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தியது, கல்லூரி நிர்வாகம்.

இந்த கலகத்தால் பெருத்த அவமானத்துக்கும் பீதிக்கும் ஆளான கல்லூரி நிர்வாகம், அதுவரையில் நிறுத்தி வைத்திருந்த அவரது சம்பள பணத்தை மறுநாளே பட்டுவாடா செய்தது. “கல்லூரியிலிருந்து நீங்களே விலகிச் சென்றுவிடுங்கள்” என ஜென்டில்மேனாக சமரச நாடகமாடியது. மறுபுறமோ, “அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடியவர்” என்ற அவதூறைப் பரப்பி, அவரது கலகத்தைச் சிறுமைப்படுத்த முயன்றது.

தனியொருவராக நின்று போராடியதன் வரம்பு காரணமாக, விக்ரம் தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். இதனையடுத்து அவரது பட்டச் சான்றிதழ்களைத் திருப்பிக் கொடுத்த நிர்வாகம், விக்ரம் அக்கல்லூரியில் வேலை பார்த்து வந்ததற்கான பணிச் சான்றிதழைத் தராமல் இழுத்தடித்தது. இந்நிலையில் அச்சான்றிதழைப் பெறுவதற்காக கடந்த ஜூலை 15 அன்று கல்லூரிக்குச் சென்ற விக்ரமை, அவர் கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற சமயத்தில், உள்ளூர் குண்டர்களை ஏவி, நடுரோட்டில் வழிமறித்து தாக்கியது, கல்லூரி நிர்வாகம். தாக்குதல் தொடுப்பவர்கள் யார் என அவர் அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவரது கண்ணாடியைப் பறித்து உடைத்த அக்கும்பல், அவரது செல்போனையும் பறித்து உடைத்தது. இது கல்லூரி நிர்வாகத்தால் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இவை.

இத்தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகத்தின் மீது அவர் கொடுத்த புகாரைத் தட்டிக்கழிக்க முயன்ற போலீசோடு போராடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதல் மற்றும் புகார் குறித்த தகவல்கள் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியாகக் கொடுக்கப்பட்டது. தனது கட்சிக்காரனைக் கோபத்துடன் விஜயகாந்த் அடித்ததை ஏதோ சர்வதேசப் பிரச்சினை போல ஊதிப்பெருக்கி வெளியிடும் ஊடகங்கள், விக்ரம் மீதான தாக்குதல் பற்றிய தகவலைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன. தொழிலாளர் பிரச்சினையில் எந்தவொரு முதலாளியும் இன்னொரு முதலாளியை விட்டுக் கொடுப்பதில்லை என்பதற்கு இந்த இருட்டடிப்பு இன்னொரு சான்று.

தனியார், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சங்கம் அமைக்கக்கூட உரிமையில்லாமல் இருந்துவரும் நிலையில், கல்லூரி முதலாளிகளின் அட்டூழியங்களை தட்டிக்கேட்ட முடியும் என்பதைத் தனது கலகத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார், உதவிப் பேராசிரியர் விக்ரம். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தனியார் கல்லூரி ஆசிரியர்களும் ஊழியர்களும் தமது அச்சத்தைக் கைவிட்டு சங்கமாக அணிதிரண்டு போராடத் துணிய வேண்டும். அச்சமற்ற போராட்டங்களின் மூலம்தான், தனியார் கல்லூரி கொள்ளைக் கும்பலின் கொட்டத்தை அடக்கி, ஆசிரியர்கள் தமது உரிமைகளையும், சுயமரியாதையையும் நிலைநாட்டிக் கொள்ளமுடியும்.

-கலைமதி
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________