privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்விஜய் டி.வி-யின் வை ராஜா வை !

விஜய் டி.வி-யின் வை ராஜா வை !

-

முதலில் விஜய் டி.வியும், பிறகு சன் டி.வியும் நடத்திய நடத்துகின்ற கோடீஸ்வரன் நிகழ்ச்சி குறித்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை இது. மேற்கத்திய தொலைக்காட்சிகளில் இத்தகைய பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் தினுசு தினுசாக உண்டு. அதன் மலிவான பிரதியாக தமிழ் தொலைக்காட்சிகள் நடத்தும் இந்த அபத்தங்கள் ஏதோ மாபெரும் அறிவுலக நடவடிக்கை போலவும், உழைத்து முன்னேறினால் கோடிசுவரனாக மாறலாம் என்றும் பிரமைகளை ஏற்படுத்துகின்றன. அதற்கு தமிழகத்தின் திரையுலக சந்தையை இழந்த இழக்கப்போகும் நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் செய்து கல்லா கட்டுகின்றனர். “வை ராஜா வை” எனும் மூணு சீட்டு மோசடியை பார்த்து முகம் சுளிக்கும் நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம் இதை திகில் பட ஆர்வத்தோடு பார்ப்பதும், கலந்து  கொள்ள விரும்புவதும், கோடிசுவரனாக மாற கனவு காண்பதும்…………. என்னவென்பது?

– வினவு

ந்தைகளிலும், சினிமாக்கொட்டகைக ளின் வாயிலிலும் “வை ராஜா வை” என்று முனு சீட்டுக்காரனும், நாடா குத்துபவனும் கூப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆர்வம், தயக்கம், பயம் என்ற பல்வேறு மன நிலைகளில் உள்ள பார்வையாளர்கள் 10, 20 பேர் அவனைச் சுற்றிக் குவிந்து நிற்பதையும் கண்டிருப்பீர்கள்.

இதே காட்சியை இப்படிக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பல ஆயிரம் வாட் விளக்கொளியில் உயரமானதொரு மேடையில் உட்கார்ந்திருக்கிறான் மூணு சீட்டுக்காரன். கீழே அரங்கத்தில் சுமார் ஒரு கோடி மக்கள். தாத்தா முதல் பேரன் வரை குடும்பம் குடும்பமாக, கை வேலையைப் போட்டுவிட்டு ஓடிவந்து வேடிக்கை பார்க்க நிற்கிறார்கள். தாங்களும் பங்கேற்பதற்கு முண்டியடிக்கிறார்கள்.

சன் டிவி கோட்டீஸ்வரன் நிகழ்ச்சி - சரத் குமார்
சன் டிவி கோட்டீஸ்வரன் நிகழ்ச்சி – சரத்குமார்

கற்பனை செய்து பார்க்கவே வெட்கமாக இல்லையா? தமிழகத்திலும், இந்தியா முழுவதும், ஏன் உலகின் 80 நாடுகளில் நடந்து கொண்டிருப்பது இதுதான். உலகிலேயே அதிகமான பார்வையாளர்கள் இந்தியாவில் தானாம்.

சூது ஒன்றும் நமக்குப் புதிதில்லை. பெண்டாட்டியைப் பணயம் வைத்து சூதாடிய அரசன்முதல் அரசே முன்னின்று நடத்தும் லாட்டரிச் சீட்டு வரை, ஒரு வெகு நீண்ட பாரம்பரியம் நமக்கு உண்டு என்பது உண்மைதான். எனினும் ”இது ஒரு ஒழுக்கக் கேடு” என்ற மதிப்பீடு மக்களிடம் நிலவியதன் காரணமாகத்தான் “விழுந்தால் வீட்டுக்கு – விழாவிட்டால் நாட்டுக்கு” என்றொரு புதுமொழியை உருவாக்கி சூதாட்டத்தையே நாட்டுப்பற்றுள்ள நடவடிக்கையாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது.

தமிழக அரசின் லாட்டரிச் சீட்டு முழக்கத்தை கேரடீசுவரன் முழக்கத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ‘நான் ரெடி நீங்க ரெடியா’ என்று கேட்பது பார்வையாளர்களை ஏதோ களத்துக்கு அழைப்பது போலவும் சவால் விடுவது போலவும் இல்லையா?

ஆம். குலுக்கல் சீட்டில் பரிசு பெற விரும்பும் அதிருஷ்டசாலிகளுக்கு இங்கே வேலையில்லை. திறமைசாலிகளுக்கு மட்டுமே வேலை. நான்கு விடைகளில் சரியானதை ஊகித்துச் சொல்வதும் ஒரு திறமைதானே எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று ஊகிப்பதும், எந்த நிறுவன்த்தின் பங்குகள் விலைபோகும் என்று ஊகிப்பதும் ஒரு திறமையில்லாமல் சாத்தியமில்லையல்லவா?

“ஐயோ, எவ்வளவு ஈசியான கேள்வி. இதுகூடத் தெரியல பாரு” என்று இருக்கையை விட்டுத் துள்ளுகிறான் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் இளைஞன். கேள்விக்கு பதில் சொல்லும் இளைஞர்களின் இத்தகைய பொதுவான ஆர்வம் ஒரு நொடியில் வேறொன்றாக மாறிவிடுகிறது. ”நமக்கு இவ்வளவு திறமை இருந்தும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதா?” என்று கோடீசுவரனாவதற்கு விண்ணப்பம் போடுகிறார்.

பாலுறவு நடவடிக்கைகளைத் திரையில் பார்த்து, தானே அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதைப் போலக் கிளர்ச்சியடையும் ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் அதை மறந்து விடுவதில்லை. பாலியல் வன்முறையாகவும், பெண்களைத் துரத்துவதாகவும், பாலியல் வக்கிரமாகவும் அந்தக் காட்சிகள் சமூகத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. கண்ணெதிரில் மிகச் சுலபமாக ஒருவன் கோடீசுவரன் ஆகும் காட்சி, பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு பல லட்சங்களுடன் புறப்படும் காட்சி பார்வையாளனைச் சும்மா விடாது. நீலத் திரைப்படம் போல இது ஒரு நீலச்சூதாட்டம்.

ஐரோப்பாவில் இச்சூதாட்டம் புதிய பரிமாணத்திற்குச் சென்றுவிட்டது. இங்கே இந்தியாவில் நடக்கும் கோடீசுவரனில் ஜெயித்தவனைக் கண்டு பார்வையாளர்கள் வியக்கிறார்கள் அல்லது பொறாமைப் படுகிறார்கள். தோற்றவனைக் கண்டு கொஞ்சம் அனுதாபப்படுகிறார்கள்.

விசிலடித்து, ஊளையிட்டு, கைதட்டி. தோற்றவனைப் பலவகையிலும் அவமானப் படுத்தி அரங்கை விட்டு வெளியேற்றும் நிகழ்ச்சி இப்போது அங்கே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

“முதல் சுற்றிலேயே தோற்றாலும் சரி, பாதி தூரம் வந்து தோற்றாலும் சரி, தகுதியும் திறமையும் இல்லாமல் கோடீசுவரனாகும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்டத்திற்கு வரும் நபர்களாகவே அவர்கள் கருதப்படவேண்டும். இத்தகைய நபர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” என்பது பார்வையாளர்களிடம் உருவாக்கப்படும் மனநிலை.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - சூர்யா
விஜய் டிவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – சூர்யா

“இப்படி அவமானப்படுத்தப் படுவதற்காகத் தோற்றவர்கள் கோபப்படக்கூடாது; மாறாக, எல்லா ஏளனங்களையும் அவமரியாதைகளையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இது பங்கேற்போரிடம் கோரப்படும் மனப்பக்குவம்.

“நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாமல் 95 மட்டுமே பெற்றதால், பொறியியல் கல்லூரியில் இடம் பிடிக்க முடியாத மாணவர்கள், விற்பனை இலக்கை எட்ட முடியாததால் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், உழைப்புச் சந்தையில் விலை போகாத தொழிலாளர்கள், சந்தைச் சூதாதட்டத்தின் விதிதெரியாமல் ஏமாந்து போண்டியாகும் விவசாயிகள் போன்றோர் மீது சமூகம் இரக்கம் காட்டத் தேவையில்லை. தோற்றவர்களும் தங்கள் தகுதியின்மை குறித்து குற்றவுணர்வு கொள்ள வேண்டுமேயன்றி கோபம் கொள்ளக்கூடாது” – இதுதான் இந்நிகழ்ச்சி உருவாக்க முனையும் சமூக உளவியல். சூதாட்டத்திலும் கொடியது இதுதான்.

நீங்கள் ரெடியா? போட்டியில் குதிப்பதனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட இழக்கப் போவதில்லை. உழைப்பு, நேர்மை, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை மட்டுமே இழப்பீர்கள். வென்றாலோ ஒரு கோடி!.

  • சூரியன்

புதிய கலாச்சாரம், ஜனவரி 2001.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க