“என்ன மாதிரியான முசுலீம்கள் இவர்கள்? இவர்கள் எந்த மதமும் கிடையாது… பயங்கரவாதமே இவர்களின் மதம்” – வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

தலைநகர் டாக்காவின் மையத்தில் அமைந்துள்ள குல்ஷான் தானா பணக்காரர்களின் பகுதி. பல வெளி நாடுகளின் தூதரகங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. மால்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வெவ்வேறு நாடுகளின் உணவுகளுக்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு உணவு விடுதிகள் இங்கே இருக்கின்றன. தூதரகங்களில் பணிபுரியும் ஐரோப்பியர்கள் உள்ளிட்ட மேலை நாட்டினருக்கு அறிமுகமான பங்களாதேஷின் பரப்பரளவும், குல்ஷான் தானாவின் பரப்பளவும் ஏறக்குறைய ஒன்று தான்.

தூதரக அதிகாரிகள் சகஜமாக புழங்குவதால் இப்பகுதி இருபத்தி நான்கு மணி நேரமும் உயர் பாதுகாப்பு வளையத்திலேயே இருக்கும். கடந்த ஜூலை 2016 ஒன்றாம் தேதி இரவு 9:20 மணியளவில் குல்ஷான் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியினுள்ளே ஆறு இளைஞர்கள் துப்பாக்கி, அறிவாள், நாட்டு வெடிகுண்டுகள் சகிதமாக நுழைகிறார்கள். நுழையும் போதே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

பிறகு அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக பிடிக்கின்றனர். மறுநாள் அதிகாலை 3 மணி வரை ஆர்டிசன் பேக்கரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகள், ஒன்பது இத்தாலியர்கள், ஏழு ஜப்பானியர்கள் உள்ளிட்ட பதினெட்டு வெளிநாட்டவர்கள், இரண்டு வங்கதேசத்தவர்கள் மற்றும் இரண்டு போலீசு அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். அந்த பயங்கரவாதிகள், தாம் ஐ.எஸ் (Islamic State) அமைப்பின் சார்பில் இத்தாக்குதலை நடத்துவதாக அறிவித்ததோடு, அந்த அமைப்பின் தலைமைக்கு தமது கீழ்ப்படிதலை உணர்த்தும் அறிவிப்பு ஒன்றையும் வாசித்துள்ளனர். பின்னர் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்களில் முசுலீம்களை மட்டும் விடுவித்துள்ளனர்.

kahirul-islam-payal1

தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் இடமிருந்து வலமாக கெய்ரூல் இஸ்லாம் பாயல், ஷஃபிகுல் இஸ்லாம் உஸ்ஸல், ரோஹன் இமிதாஸ், மீர் சமக் முபாஷிர், நிப்ராஸ் இஸ்லாம்,

முசுலீம்களை அடையாளம் காண ஒவ்வொருவரிடமும் குரான் ஒன்றைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்டுள்ளனர். அதிகாலை வங்கதேச இராணுவத்தின் ”அதிரடி நடவடிக்கை படையணியை” (Rapid action battalion) சேர்ந்த வீரர்கள் பேக்கரியினுள் திடீர் தாக்குதலை நடத்தி ஐந்து பயங்கரவாதிகளைக் கொன்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்ததற்கு மறுநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் ஷேக் ஹசீனா பேசிவற்றில் ஒரு வரியைத்தான் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.

”அவர்கள் இசுலாமியர்கள் அல்ல” ”அவர்கள் பின்பற்றுவது இசுலாம் அல்ல” ”அவர்கள் இசுலாத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்’ “இசுலாம் உண்மையில் அமைதி மார்க்கம்” என்கிற வாதங்கள் நமக்குப் புதிதல்ல – குறிப்பாக இசுலாமின் பெயரால் பெரிய தாக்குதல்கள் நிகழும் சமயங்களில். தமிழ்நாட்டு தவ்ஹீது ஜமாஅத் இயக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் ஐ.எஸ்.ஐ.எஸ் இசுலாமியர்களே இல்லையென்று சுவரொட்டி கூட ஒட்டியது.

எனினும், எது சரியான இசுலாம், எது தவறான இசுலாம், குரானை எப்படிப் படிக்க வேண்டும் – படிக்க கூடாது, எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் – புரிந்து கொள்ளக் கூடாது, தொழுகையின் போது விரலை ஆட்டுவதா – கூடாதா என்பதைப் போன்ற ’அறிவியல் ஆராய்ச்சிகளை’ இசுலாமிய மதவாதிகளிடமிருந்து பறித்துக் கொள்வது கட்டுரையின் நோக்கமல்ல. நாம் மீண்டும் வங்கதேசத்திற்கே செல்வோம். முசுலீம் பயங்கரவாதம் வங்கதேசத்தைப் பீடித்த வரலாறை புரிந்து கொள்வோம். அதன் போக்கில் இசுலாம் ஒரு மதம் என்கிற நிலையிலிருந்து மனிதர்களைக் கொள்ளும் பயங்கரவாத தத்துவமாக எப்போது மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வோம் – ஏனெனில், இது இசுலாத்திற்கு மட்டுமின்றி கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கும் – ஏன், அமைதியின் மதமாக சொல்லப்படும் பௌத்தத்திற்கும் கூட பொருந்தக் கூடியதே. சமூக பொருளாதார அரசியல் போக்கிலிருந்து துண்டிக்கப்பட்ட மதம் என்று எதுவும் கிடையாது. அதனாலேயே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்வதே மதங்களின் தலையாயக் கடமையாக இருக்கின்றன. இது இசுலாமிற்கும் பொருந்தும்.

***

”நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்” – 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சியின் போது கேட்ட முழக்கங்களில் ஒன்று.

1971-ம் ஆண்டு பிறந்த வங்கதேசம் இன்றைக்கு உலக முசுலீம் மக்கள் தொகையின் அடிப்படையில் நான்காவது பெரிய இசுலாமிய நாடு. ஆனால், அரசியல் சாசனமோ வங்கதேசத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கிறது. வங்க தேசிய உணர்வின் குழந்தையே இன்றைய வங்கதேசம். அறுபதுகளில் எழுந்த வங்காள தேசிய உணர்ச்சியை நசுக்கியழிக்க ஒன்றுபட்ட பாகிஸ்தானின் இராணுவம் களமிறங்கிய போது அவர்களுக்கு மத ரீதியிலான காலாட்படையாக இருக்க முன்வந்தனர் ரஜாக்கர்கள். பாகிஸ்தான் இராணுவம் முறியடிக்கப்பட்டு தேசம் பிறந்த பின் ரஜாக்கர்கள் ஜமாத்-ஏ-இஸ்லாமி என்கிற கட்சியில் அடைக்கலமாயினர்.

2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

தேச விடுதலைப் போரின் சமயத்தில் எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு கொலை கொள்ளை வண்புணர்ச்சிகளில் ஈடுபட்ட ரஜாக்கர்களால் மதச்சார்பற்ற வங்கதேசத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜமாத்-ஏ-இஸ்லாமி தொடர்ந்து மத ரீதியிலான அரசியலில் ஈடுபட்டு வந்தது. விடுதலைப் போரின் சமயத்தில் பெரியளவிற்கு வங்காளிகளைக் கொன்று தீர்த்து மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா, ஜமாத் கட்சியின் தலைவராகியிருந்தார். படுகொலைகள் தொடர்பாக விசாரணைகளின் முடிவில் 2013 பிப்ரவரி 5-ம் தேதி அப்துல் காதர் மொல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை துச்சமாக மதித்து தனது கட்சியின் குண்டர் படையினர் புடைசூழ வெற்றிப் புன்னகையோடு கையசைத்துக் கொண்டே நீதிமன்றத்திலிருந்து அப்துல் காதர் வெளியேறும் காட்சி ஊடகங்களில் வெளியானது.

விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த கொலைகள் வங்க தேச மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருந்து வந்த நிலையில் மொல்லாவின் தெனாவெட்டு அந்தப் புண்ணைக் கீறி விடுவதைப் போல் அமைந்தது. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி போராடினர். இசுலாமிய மதவெறியின் முகத்தில் ஒட்டுமொத்த வங்கதேசமும் ஒன்றுகூடிக் காறி உமிழ்ந்த நிகழ்வு இது.

மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா

மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா

ஷாபாக் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமியும் கொலையாளிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியது. தண்டனை கோரி போராடும் மக்களின் மேல் ஜமாத்-ஏ-இஸ்லாமி குண்டர்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தினர். மொத்த விவகாரத்திற்கு மதச்சாயம் பூச வேண்டுமென்கிற வெறியில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஜமாத்-ஏ-இஸ்லாமி.

பரந்துபட்ட மக்களின் தேசியப் பெருமிதத்தினால் செலுத்தப்படும் அரசியலுக்கு எதிராக இசுலாமிய மத வெறியை நிறுத்தும் அளவுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி எப்படி வளர்ந்தது? முன்னொரு காலத்தில் வங்கதேசத்தில் இழிவாக மதிக்கப்பட்ட மதவெறி செல்வாக்காக எவ்வாறு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது?

***

”சோவியத் நாத்திக கம்யூனிஸ்டுகளை ஆப்கானிலிருந்து விரட்ட அல்லாவின் குழந்தைகளே வாரீர்” – 80-களில் அப்கான் முஜாஹித்தீன் படைகளில் சேர உலக முசுலீம்களுக்கு விடப்பட்ட அழைப்பு.

எண்பதுகளில் பணிப் போரின் இறுதிக் காலத்தில் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்திருந்த ரசியாவுக்குமான கடைசி யுத்த முனையாக விளங்கியது ஆப்கானிஸ்தான். சோவியத் படைகளை ரசியாவிலிருந்து விரட்ட நேரடியாக தனது இராணுவத்தை களமிறக்க விரும்பாத அமெரிக்கா, அந்தப் போரையே சாத்தானுக்கு எதிராக இசுலாமியர்கள் நடத்தும் ஜிஹாத் எனும் புனிதப் போராக சித்தரித்தது. சவூதியின் பெட்ரோல் டாலரையும் பாகிஸ்தானின் ராஜதந்திர உதவியையும் பெற்றுக் கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப்ரெஸென்ஸ்கி ஜிஹாதுக்குப் புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருந்தார்.

ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி

‘கிறிஸ்தவ’ அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இசுலாமிய ஜிஹாத் இந்தப் போருக்காக பல நாடுகளில் இருந்து இசுலாமிய இளைஞர்ளை ஆப்கான் நோக்கிக் கிளப்பியது. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே கூட தமது குடிமக்கள் இன்னொரு நாட்டில் ஆயுதப் போருக்காக கிளம்பிச் செல்வதைக் கண்டு கொள்ளவில்லை – ஏனெனில், அமெரிக்காவின் ஆதரவும் ஊக்குவிப்பும் அதை அங்கீகரிக்க வைத்தது. வங்கதேசத்திற்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வங்கதேசத்தில் பதவிக்கு வந்த அவாமி லீக், மதச்சாரபற்ற கட்சியாக இருந்தாலும் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்குத் தரகு வேலை பார்க்கும் முதலாளிகளின் நலன்களையே பிரதிபலித்தது.

எழுபதுகளின் துவக்கத்தில் இந்திய எல்லையில் அமைந்திருக்கும் மேற்கு வங்கமாநிலத்தில் செல்வாக்காக எழுந்த நக்சல்பாரி புரட்சியின் தாக்கம் வங்கதேச கம்யூனிஸ்டு கட்சியிடமும் எதிரொலித்தது. வங்கதேச கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவாமி லீக், அரசியலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மத உணர்வு கலப்பது எதிர்காலத்தில் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என கணித்தது. எனவே, தமது தேசத்தின் இளைஞர்கள் எல்லை தாண்டி ஆப்கானுக்குச் செல்வதை கண்டும் காணாமலும் விட்டது அவாமி லீக்.

1984-ம் ஆண்டு துவங்கி தொடர்ந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3000 வங்க இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட போதும் சரி, பின்னர் சுமார் 10 உலோமாக்கள் ஆப்கான் சென்ற போதும் சரி, பின்னர் 1992-ல் காபூலை முஜாஹித்தீன்கள் கைபற்றிய போது அவர்களின் வங்கதேசத்து பங்காளிகள் வெளிப்படையாக வெற்றி விழாக்கள் கொண்டாடிய போதும் சரி – வங்கதேச ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது. ஆப்கான் சென்ற வங்காளி முஜாஹிதீன்கள் நாடு திரும்பினர். அவர்கள் தங்களோடு சேர்த்து அமெரிக்கா அருளிய வகாபியத்தையும் அழைத்து வந்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில் துவங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி, வகாபிய இசுலாமியத்தை தீவிரமாக முன்னெடுத்தது. ஜமாத் கட்சி தனக்கென ஒரு வர்த்தக அமைப்பாக இஸ்லாமி வங்கிகளைத் துவங்கி நிதி வசூல் நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டது. டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, உள்ளிட்ட ஊடகங்களைத் துவக்கி கடுங்கோட்பாட்டு இசுலாமியத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஜமாத்-ஏ-இஸ்லாமி, பல்வேறு பெயர்களில் கலாச்சார நிறுவனங்களையும் ஆயிரக்கணக்கான மதரசாக்களையும் திறந்தது.

தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது

தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது

ஷாபாக் சதுக்கத்தில் நடந்த பேரெழுச்சியைத் தொடர்ந்து, மதச்சார்பற்றவர்களையும் நாத்திகர்களையும் கொன்றொழிப்பதற்கென்றே எண்ணற்ற முன்னணி அமைப்புகளையும் துவங்கியது ஜமாத் கட்சி. ஹெபாஜாட்-ஏ-இஸ்லாம், ஜமாத்-அல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ், ஹர்க்கத்துல் ஜிஹாத், ஜூந்த்-அல்-தவ்ஹீத் வல் கலீபாஹ் என கணக்கற்ற அமைப்புகள் முளைவிடத் துவங்கின. இதில் சில அமைப்புகள் இந்திய துணைக்கண்டத்திற்கான அல்குவைதா (AQIS) உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சில அமைப்புகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தொடர்புகளைப் பேணி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித் தனி அமைப்புகளைப் போல் வெளிக் காட்டிக் கொண்டாலும் தமக்குள் பரஸ்பர தொடர்புகளைப் பேணி வருகின்றன. போலீசு மற்றும் உளவுத் துறை நடவடிக்கைகள் ஒரு அமைப்பின் மீது எடுக்கப்படும் போது பெயரை மாற்றிக் கொள்வது அல்லது இன்னொரு அமைப்புடன் இணைந்து கொண்டு புதிய பெயரில் வேறு ஒரு அவதாரத்தில் திரும்பி வருவது போன்ற உத்திகளைக் கையாளுகின்றனர்.

இரண்டாயிரங்களுக்குப் பின் அதிகாரத்திற்கு வந்த வங்க தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி, அதிகாரத்தில் இருப்பதன் சாதகங்களைத் தனது பயங்கரவாத வலைப்பின்னலை உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டது. 2001-ம் ஆண்டு துவங்கி ஜமாத் கட்சியின் இரகசிய முன்னணி அமைப்புகள் முன்னெடுத்த பயங்கவாத நடவடிக்கைகள் அலையலையாக வங்கதேசத்தை தாக்கி வருகின்றன. 2001-ம் ஆண்டு வங்க புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில் குண்டு வீசி பத்து பேரைக் கொன்றதில் துவங்கி, அவாமி லீக் கட்சி கூட்டத்தில் 2004-ம் ஆண்டு நடந்த குண்டு வீச்சில் 24 பேர் பலியானதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடெங்கும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களாக வளர்ந்த போது தான் வங்கதேச அரசு கொஞ்சம் விழித்துக் கொண்டது.

கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்

முஸ்லீம் மதவெறியால் கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் துவங்கி 2010 வரையிலான காலகட்டத்தில் தீவிரவாத அமைப்புகளின் தலைமைகள் கைது செய்யப்பட்டது மற்றும் கடுமையான இராணுவ மற்றும் போலீசு நடவடிக்கைகளின் விளைவாக பல அமைப்புகள் செயலிழந்து போயின. எனினும், எஞ்சியவர்கள் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளைத் துவங்கி இசுலாமிய அடிப்படைவாத அரசியலை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இசுலாமிய தீவிரவாதம் மக்களிடையே ஒரு பிரிவினரிடம் செல்வாக்கோடு விளங்கியதற்கு மதரசாக்களும், இசுலாமிய கலாச்சார நிறுவனங்களும் ஒரு காரணம் என்றாலும், வேறு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

2008-ல் துவங்கிய உலகப் பொருளாதார பெருமந்தம் ஆடை ஏற்றுமதிப் பொருளாதாரத்தையே நம்பியிருந்த வங்கதேசத்தை மிகக் கடுமையாக தாக்கியது. வேலை இழப்புகளால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலால் ஒருமுனைப்படுத்தப்படவில்லை. வங்க தேசத்தில் செயல்பட்ட தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களின் அதிருப்தியை அமைப்பாக்கும் கடமையிலிருந்து பின்தங்கிய போது இசுலாமிய மதவெறி அந்த இடத்தில்தன்னை பதிலீடு செய்து கொண்டது.

பரவி வந்த வகாபிய இசுலாமிய மதவெறிக்கு எதிராக நின்ற ஜனநாயக சக்திகளும், ”இது இசுலாத்தை தவறாக புரிந்து கொண்டதன் விளைவு” என்றும் “குரானுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்கள்” என்றுமே சூழலை எதிர்கொண்டனர். அதாவது, குரானை செம்மையான முறையில் (அதாவது அமைதி மார்க்கமாக) வாசிக்க முடியும் என்கிற இந்த சில்லறை தொழில்நுட்ப பிரச்சினையை வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மிக எளிதாக முறியடித்து தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டனர்.

டாகா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்

டாக்கா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்

இந்நிலையில் 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சி, வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகளே எதிர்பாராத வண்ணம் பெருந்திரளான வங்காளிகளை மதச்சார்பற்ற அரசியலின் பின்னே அணிவகுக்கச் செய்தது. மக்களின் நினைவுகளில் இருந்து தாம் அழிக்க விரும்பிய வங்க தேசிய அடையாளம் வெடித்துக் கிளம்பியதை வகாபிகள் “அல்லாவுக்கு எதிரான” தாக்குதலாகவே எடுத்துக் கொண்டனர். ஷாபாக் சதுக்க எழுச்சிக்காக பிரச்சாரம் செய்த மதச்சார்பற்ற எழுத்தாளர்களின் பெயர்களையும் மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டனர். மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக ஆளும் வர்க்கம் மீண்டும் ஒரு சுற்று வகாபிய பயங்கரவாத அமைப்புகளின் மேல் நடவடிக்கைகளைத் துவங்கியது.

2013 துவங்கி கடந்த மூன்றாண்டுகளில் அரசின் கைது நடவடிக்கைகள் ஒருபக்கமும், வகாபிய தீவிரவாதிகளின் அறிவாள் வெட்டுக் கொலைகள் மறுபக்கமுமாக வங்கதேசத்தின் நாளேடுகளை நிறைத்தன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சிறுபான்மையினர் மற்றும் நாத்திகர்களின் மேல் சுமார் 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்திருப்பதாக சுயேச்சையான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலைகளை ஒருபக்கம் முன்னெடுத்துக் கொண்டே கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகும் பயங்கரவாதிகளின் மேல் அனுதாபம் வரவழைக்கும் வகையிலான பிரச்சாரங்களையும் செய்து வந்தனர் வகாபிகள்.

இந்த சூழலில் ஏற்கனவே அல்குவைதாவின் செயல்பரப்பில் இடம் பெற்றுள்ள வங்கதேசத்திற்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் நுழைகிறது. இந்த அமைப்புகள் மூளைச்சலவை செய்யும் விதம் மிக எளிமையானது. முதலில் ஒரு நல்ல இசுலாமியனாக இருக்க வேண்டும். எப்படி நல்ல முசுலீமாக இருப்பது? அல்லாவுக்காகவும் இசுலாமிய மதத்திற்காகவும் உயிரைத் தியாகம் செய்ய தயங்காமல் முன்வருகிறவன் எவனோ அவனே நல்ல முசுலீம். அதற்காக ஒருவன் ஜிஹாது செய்ய வேண்டும். ஜிஹாதில் உயிரைத் தியாகம் செய்கிறவன் சொர்க்கம் செல்வான்.

இவ்வாறாக தூய மதவாத மூளைச் சலவைக்குள்ளான இளைஞர்களே குல்ஷான் தானாவில் தாக்குதல் நடத்தியவர்கள். தாக்குதல் நடத்திய ஆறுபேர் கொண்ட கும்பலில் ஒருவர் தவிற மற்றவர்கள் எல்லோரும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புதிய போக்கு. மதவாத / தீவிரவாத கருத்துக்கள் ஏழைகளையே பற்றிக் கொள்ளும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டால் தீவிரவாத கருத்துக்கள் இளைஞர்களைப் பற்றிக் கொள்ளாமல் தடுத்து விட முடியும் என்பது போன்ற என்.ஜி.ஓ கருத்தாக்கங்கள் குல்ஷானில் வெடித்த குண்டுகளால் தகர்ந்து போயிருக்கின்றன.

 இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.

இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.

உலகமயக் கொள்கைகள் மக்களின் பொருளாதாய வாழ்க்கையை மட்டுமின்றி அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வின் சகல பகுதிகளையும் குலைத்துப் போட்டுள்ளது. அதிகரித்து வரும் தனிநபர்வாதம் ஏழைகளை விட உயர் நடுத்தரவர்க்க மற்றும் மேல் தட்டு வர்க்கங்களின் இளைஞர்களே பாதிக்கிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நுகர்வுக் கலாச்சாரத்தையும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் சமூகத்தில் அக்கம் பக்கமாக பரப்பி விட்டுள்ளன. இதன் விளைவாக சமூகத்தின் அங்கங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் துண்டித்து விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய காற்று வெளி முழுக்க பெட்ரோலின் ஆவி பரவியுள்ளதற்கு ஒப்பான நிலையில் மதவெறித் தீக்குச்சியின் சிறு உரசல் கூட மொத்த சமூகத்தையும் எரித்து சாம்பலாக்கப் போதுமானதாகும்.

ஆக, மதவெறி எதிர்ப்பும் ஏகாதிபத்திய பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கைகோர்த்துக் கொள்வது மட்டுமே நமது இளைஞர்களை கடுங்கோட்பாட்டுவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஒரே வழி. நமது இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும். மாறாக, குரான் போன்ற மத இலக்கியங்களை சிறப்பாக படித்து சிறந்த முறையில் புரிந்து கொண்டு சரியான முறையில் அமல்படுத்துவது எப்படி என போதிக்கக் கிளம்பி பீ.ஜே, ராம கோபாலன், ஜாஹீர் நாயக், பிரவீன் டொகாடியா போன்றவர்களிடம் போட்டிக்குச் சென்றால் நாம் தோற்பது உறுதி.

இறுதியாக… நல்ல இசுலாம் என ஒன்று இருக்க முடியுமா?

எப்படி நல்ல இந்து மதமோ, நல்ல கிறிஸ்தவமோ இருக்க முடியாதோ அப்படியே நல்ல இசுலாமும் இருக்க முடியாது. தனிப்பட்ட ஒருவரின் மத நம்பிக்கைகள் “தனிப்பட்டதாய்” மட்டும் இருக்கும் வரை பிரச்சினையில்லை. மாறாக அவரின் சமூக கண்ணோட்டத்தையும் உலக கண்ணோட்டத்தையும் மதமே தீர்மானிக்கும் என்றால் ஆன்மீகம் பின்னுக்குப் போய் பயங்கரவாதம் முன்னுக்கு வருவதை தவிர்க்க முடியாது. மதம் தான் அரசியல் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் என்றால் இசுலாமியர்கள் மட்டுமின்றி, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் – ஏன், அமைதி மதத்தைப் பின்பற்றும பௌத்தர்களும் – கூட தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதியாகி விடுவர்.

– தமிழரசன்

மேலும் படிக்க: