Friday, June 2, 2023
முகப்புஉலகம்அமெரிக்காவங்கதேசத்தை கொன்று வரும் முசுலீம் பயங்கரவாதம் !

வங்கதேசத்தை கொன்று வரும் முசுலீம் பயங்கரவாதம் !

-

“என்ன மாதிரியான முசுலீம்கள் இவர்கள்? இவர்கள் எந்த மதமும் கிடையாது… பயங்கரவாதமே இவர்களின் மதம்” – வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

தலைநகர் டாக்காவின் மையத்தில் அமைந்துள்ள குல்ஷான் தானா பணக்காரர்களின் பகுதி. பல வெளி நாடுகளின் தூதரகங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. மால்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வெவ்வேறு நாடுகளின் உணவுகளுக்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு உணவு விடுதிகள் இங்கே இருக்கின்றன. தூதரகங்களில் பணிபுரியும் ஐரோப்பியர்கள் உள்ளிட்ட மேலை நாட்டினருக்கு அறிமுகமான பங்களாதேஷின் பரப்பரளவும், குல்ஷான் தானாவின் பரப்பளவும் ஏறக்குறைய ஒன்று தான்.

தூதரக அதிகாரிகள் சகஜமாக புழங்குவதால் இப்பகுதி இருபத்தி நான்கு மணி நேரமும் உயர் பாதுகாப்பு வளையத்திலேயே இருக்கும். கடந்த ஜூலை 2016 ஒன்றாம் தேதி இரவு 9:20 மணியளவில் குல்ஷான் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியினுள்ளே ஆறு இளைஞர்கள் துப்பாக்கி, அறிவாள், நாட்டு வெடிகுண்டுகள் சகிதமாக நுழைகிறார்கள். நுழையும் போதே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

பிறகு அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக பிடிக்கின்றனர். மறுநாள் அதிகாலை 3 மணி வரை ஆர்டிசன் பேக்கரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகள், ஒன்பது இத்தாலியர்கள், ஏழு ஜப்பானியர்கள் உள்ளிட்ட பதினெட்டு வெளிநாட்டவர்கள், இரண்டு வங்கதேசத்தவர்கள் மற்றும் இரண்டு போலீசு அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். அந்த பயங்கரவாதிகள், தாம் ஐ.எஸ் (Islamic State) அமைப்பின் சார்பில் இத்தாக்குதலை நடத்துவதாக அறிவித்ததோடு, அந்த அமைப்பின் தலைமைக்கு தமது கீழ்ப்படிதலை உணர்த்தும் அறிவிப்பு ஒன்றையும் வாசித்துள்ளனர். பின்னர் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்களில் முசுலீம்களை மட்டும் விடுவித்துள்ளனர்.

kahirul-islam-payal1
தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் இடமிருந்து வலமாக கெய்ரூல் இஸ்லாம் பாயல், ஷஃபிகுல் இஸ்லாம் உஸ்ஸல், ரோஹன் இமிதாஸ், மீர் சமக் முபாஷிர், நிப்ராஸ் இஸ்லாம்,

முசுலீம்களை அடையாளம் காண ஒவ்வொருவரிடமும் குரான் ஒன்றைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்டுள்ளனர். அதிகாலை வங்கதேச இராணுவத்தின் ”அதிரடி நடவடிக்கை படையணியை” (Rapid action battalion) சேர்ந்த வீரர்கள் பேக்கரியினுள் திடீர் தாக்குதலை நடத்தி ஐந்து பயங்கரவாதிகளைக் கொன்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்ததற்கு மறுநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் ஷேக் ஹசீனா பேசிவற்றில் ஒரு வரியைத்தான் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.

”அவர்கள் இசுலாமியர்கள் அல்ல” ”அவர்கள் பின்பற்றுவது இசுலாம் அல்ல” ”அவர்கள் இசுலாத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்’ “இசுலாம் உண்மையில் அமைதி மார்க்கம்” என்கிற வாதங்கள் நமக்குப் புதிதல்ல – குறிப்பாக இசுலாமின் பெயரால் பெரிய தாக்குதல்கள் நிகழும் சமயங்களில். தமிழ்நாட்டு தவ்ஹீது ஜமாஅத் இயக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் ஐ.எஸ்.ஐ.எஸ் இசுலாமியர்களே இல்லையென்று சுவரொட்டி கூட ஒட்டியது.

எனினும், எது சரியான இசுலாம், எது தவறான இசுலாம், குரானை எப்படிப் படிக்க வேண்டும் – படிக்க கூடாது, எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் – புரிந்து கொள்ளக் கூடாது, தொழுகையின் போது விரலை ஆட்டுவதா – கூடாதா என்பதைப் போன்ற ’அறிவியல் ஆராய்ச்சிகளை’ இசுலாமிய மதவாதிகளிடமிருந்து பறித்துக் கொள்வது கட்டுரையின் நோக்கமல்ல. நாம் மீண்டும் வங்கதேசத்திற்கே செல்வோம். முசுலீம் பயங்கரவாதம் வங்கதேசத்தைப் பீடித்த வரலாறை புரிந்து கொள்வோம். அதன் போக்கில் இசுலாம் ஒரு மதம் என்கிற நிலையிலிருந்து மனிதர்களைக் கொள்ளும் பயங்கரவாத தத்துவமாக எப்போது மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வோம் – ஏனெனில், இது இசுலாத்திற்கு மட்டுமின்றி கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கும் – ஏன், அமைதியின் மதமாக சொல்லப்படும் பௌத்தத்திற்கும் கூட பொருந்தக் கூடியதே. சமூக பொருளாதார அரசியல் போக்கிலிருந்து துண்டிக்கப்பட்ட மதம் என்று எதுவும் கிடையாது. அதனாலேயே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்வதே மதங்களின் தலையாயக் கடமையாக இருக்கின்றன. இது இசுலாமிற்கும் பொருந்தும்.

***

”நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்” – 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சியின் போது கேட்ட முழக்கங்களில் ஒன்று.

1971-ம் ஆண்டு பிறந்த வங்கதேசம் இன்றைக்கு உலக முசுலீம் மக்கள் தொகையின் அடிப்படையில் நான்காவது பெரிய இசுலாமிய நாடு. ஆனால், அரசியல் சாசனமோ வங்கதேசத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கிறது. வங்க தேசிய உணர்வின் குழந்தையே இன்றைய வங்கதேசம். அறுபதுகளில் எழுந்த வங்காள தேசிய உணர்ச்சியை நசுக்கியழிக்க ஒன்றுபட்ட பாகிஸ்தானின் இராணுவம் களமிறங்கிய போது அவர்களுக்கு மத ரீதியிலான காலாட்படையாக இருக்க முன்வந்தனர் ரஜாக்கர்கள். பாகிஸ்தான் இராணுவம் முறியடிக்கப்பட்டு தேசம் பிறந்த பின் ரஜாக்கர்கள் ஜமாத்-ஏ-இஸ்லாமி என்கிற கட்சியில் அடைக்கலமாயினர்.

2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்
2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

தேச விடுதலைப் போரின் சமயத்தில் எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு கொலை கொள்ளை வண்புணர்ச்சிகளில் ஈடுபட்ட ரஜாக்கர்களால் மதச்சார்பற்ற வங்கதேசத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜமாத்-ஏ-இஸ்லாமி தொடர்ந்து மத ரீதியிலான அரசியலில் ஈடுபட்டு வந்தது. விடுதலைப் போரின் சமயத்தில் பெரியளவிற்கு வங்காளிகளைக் கொன்று தீர்த்து மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா, ஜமாத் கட்சியின் தலைவராகியிருந்தார். படுகொலைகள் தொடர்பாக விசாரணைகளின் முடிவில் 2013 பிப்ரவரி 5-ம் தேதி அப்துல் காதர் மொல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை துச்சமாக மதித்து தனது கட்சியின் குண்டர் படையினர் புடைசூழ வெற்றிப் புன்னகையோடு கையசைத்துக் கொண்டே நீதிமன்றத்திலிருந்து அப்துல் காதர் வெளியேறும் காட்சி ஊடகங்களில் வெளியானது.

விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த கொலைகள் வங்க தேச மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருந்து வந்த நிலையில் மொல்லாவின் தெனாவெட்டு அந்தப் புண்ணைக் கீறி விடுவதைப் போல் அமைந்தது. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி போராடினர். இசுலாமிய மதவெறியின் முகத்தில் ஒட்டுமொத்த வங்கதேசமும் ஒன்றுகூடிக் காறி உமிழ்ந்த நிகழ்வு இது.

மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா
மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா

ஷாபாக் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமியும் கொலையாளிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியது. தண்டனை கோரி போராடும் மக்களின் மேல் ஜமாத்-ஏ-இஸ்லாமி குண்டர்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தினர். மொத்த விவகாரத்திற்கு மதச்சாயம் பூச வேண்டுமென்கிற வெறியில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஜமாத்-ஏ-இஸ்லாமி.

பரந்துபட்ட மக்களின் தேசியப் பெருமிதத்தினால் செலுத்தப்படும் அரசியலுக்கு எதிராக இசுலாமிய மத வெறியை நிறுத்தும் அளவுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி எப்படி வளர்ந்தது? முன்னொரு காலத்தில் வங்கதேசத்தில் இழிவாக மதிக்கப்பட்ட மதவெறி செல்வாக்காக எவ்வாறு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது?

***

”சோவியத் நாத்திக கம்யூனிஸ்டுகளை ஆப்கானிலிருந்து விரட்ட அல்லாவின் குழந்தைகளே வாரீர்” – 80-களில் அப்கான் முஜாஹித்தீன் படைகளில் சேர உலக முசுலீம்களுக்கு விடப்பட்ட அழைப்பு.

எண்பதுகளில் பணிப் போரின் இறுதிக் காலத்தில் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்திருந்த ரசியாவுக்குமான கடைசி யுத்த முனையாக விளங்கியது ஆப்கானிஸ்தான். சோவியத் படைகளை ரசியாவிலிருந்து விரட்ட நேரடியாக தனது இராணுவத்தை களமிறக்க விரும்பாத அமெரிக்கா, அந்தப் போரையே சாத்தானுக்கு எதிராக இசுலாமியர்கள் நடத்தும் ஜிஹாத் எனும் புனிதப் போராக சித்தரித்தது. சவூதியின் பெட்ரோல் டாலரையும் பாகிஸ்தானின் ராஜதந்திர உதவியையும் பெற்றுக் கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப்ரெஸென்ஸ்கி ஜிஹாதுக்குப் புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருந்தார்.

ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி
அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி

‘கிறிஸ்தவ’ அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இசுலாமிய ஜிஹாத் இந்தப் போருக்காக பல நாடுகளில் இருந்து இசுலாமிய இளைஞர்ளை ஆப்கான் நோக்கிக் கிளப்பியது. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே கூட தமது குடிமக்கள் இன்னொரு நாட்டில் ஆயுதப் போருக்காக கிளம்பிச் செல்வதைக் கண்டு கொள்ளவில்லை – ஏனெனில், அமெரிக்காவின் ஆதரவும் ஊக்குவிப்பும் அதை அங்கீகரிக்க வைத்தது. வங்கதேசத்திற்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வங்கதேசத்தில் பதவிக்கு வந்த அவாமி லீக், மதச்சாரபற்ற கட்சியாக இருந்தாலும் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்குத் தரகு வேலை பார்க்கும் முதலாளிகளின் நலன்களையே பிரதிபலித்தது.

எழுபதுகளின் துவக்கத்தில் இந்திய எல்லையில் அமைந்திருக்கும் மேற்கு வங்கமாநிலத்தில் செல்வாக்காக எழுந்த நக்சல்பாரி புரட்சியின் தாக்கம் வங்கதேச கம்யூனிஸ்டு கட்சியிடமும் எதிரொலித்தது. வங்கதேச கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவாமி லீக், அரசியலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மத உணர்வு கலப்பது எதிர்காலத்தில் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என கணித்தது. எனவே, தமது தேசத்தின் இளைஞர்கள் எல்லை தாண்டி ஆப்கானுக்குச் செல்வதை கண்டும் காணாமலும் விட்டது அவாமி லீக்.

1984-ம் ஆண்டு துவங்கி தொடர்ந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3000 வங்க இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட போதும் சரி, பின்னர் சுமார் 10 உலோமாக்கள் ஆப்கான் சென்ற போதும் சரி, பின்னர் 1992-ல் காபூலை முஜாஹித்தீன்கள் கைபற்றிய போது அவர்களின் வங்கதேசத்து பங்காளிகள் வெளிப்படையாக வெற்றி விழாக்கள் கொண்டாடிய போதும் சரி – வங்கதேச ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது. ஆப்கான் சென்ற வங்காளி முஜாஹிதீன்கள் நாடு திரும்பினர். அவர்கள் தங்களோடு சேர்த்து அமெரிக்கா அருளிய வகாபியத்தையும் அழைத்து வந்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில் துவங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி, வகாபிய இசுலாமியத்தை தீவிரமாக முன்னெடுத்தது. ஜமாத் கட்சி தனக்கென ஒரு வர்த்தக அமைப்பாக இஸ்லாமி வங்கிகளைத் துவங்கி நிதி வசூல் நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டது. டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, உள்ளிட்ட ஊடகங்களைத் துவக்கி கடுங்கோட்பாட்டு இசுலாமியத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஜமாத்-ஏ-இஸ்லாமி, பல்வேறு பெயர்களில் கலாச்சார நிறுவனங்களையும் ஆயிரக்கணக்கான மதரசாக்களையும் திறந்தது.

தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது
தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது

ஷாபாக் சதுக்கத்தில் நடந்த பேரெழுச்சியைத் தொடர்ந்து, மதச்சார்பற்றவர்களையும் நாத்திகர்களையும் கொன்றொழிப்பதற்கென்றே எண்ணற்ற முன்னணி அமைப்புகளையும் துவங்கியது ஜமாத் கட்சி. ஹெபாஜாட்-ஏ-இஸ்லாம், ஜமாத்-அல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ், ஹர்க்கத்துல் ஜிஹாத், ஜூந்த்-அல்-தவ்ஹீத் வல் கலீபாஹ் என கணக்கற்ற அமைப்புகள் முளைவிடத் துவங்கின. இதில் சில அமைப்புகள் இந்திய துணைக்கண்டத்திற்கான அல்குவைதா (AQIS) உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சில அமைப்புகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தொடர்புகளைப் பேணி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித் தனி அமைப்புகளைப் போல் வெளிக் காட்டிக் கொண்டாலும் தமக்குள் பரஸ்பர தொடர்புகளைப் பேணி வருகின்றன. போலீசு மற்றும் உளவுத் துறை நடவடிக்கைகள் ஒரு அமைப்பின் மீது எடுக்கப்படும் போது பெயரை மாற்றிக் கொள்வது அல்லது இன்னொரு அமைப்புடன் இணைந்து கொண்டு புதிய பெயரில் வேறு ஒரு அவதாரத்தில் திரும்பி வருவது போன்ற உத்திகளைக் கையாளுகின்றனர்.

இரண்டாயிரங்களுக்குப் பின் அதிகாரத்திற்கு வந்த வங்க தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி, அதிகாரத்தில் இருப்பதன் சாதகங்களைத் தனது பயங்கரவாத வலைப்பின்னலை உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டது. 2001-ம் ஆண்டு துவங்கி ஜமாத் கட்சியின் இரகசிய முன்னணி அமைப்புகள் முன்னெடுத்த பயங்கவாத நடவடிக்கைகள் அலையலையாக வங்கதேசத்தை தாக்கி வருகின்றன. 2001-ம் ஆண்டு வங்க புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில் குண்டு வீசி பத்து பேரைக் கொன்றதில் துவங்கி, அவாமி லீக் கட்சி கூட்டத்தில் 2004-ம் ஆண்டு நடந்த குண்டு வீச்சில் 24 பேர் பலியானதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடெங்கும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களாக வளர்ந்த போது தான் வங்கதேச அரசு கொஞ்சம் விழித்துக் கொண்டது.

கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்
முஸ்லீம் மதவெறியால் கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் துவங்கி 2010 வரையிலான காலகட்டத்தில் தீவிரவாத அமைப்புகளின் தலைமைகள் கைது செய்யப்பட்டது மற்றும் கடுமையான இராணுவ மற்றும் போலீசு நடவடிக்கைகளின் விளைவாக பல அமைப்புகள் செயலிழந்து போயின. எனினும், எஞ்சியவர்கள் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளைத் துவங்கி இசுலாமிய அடிப்படைவாத அரசியலை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இசுலாமிய தீவிரவாதம் மக்களிடையே ஒரு பிரிவினரிடம் செல்வாக்கோடு விளங்கியதற்கு மதரசாக்களும், இசுலாமிய கலாச்சார நிறுவனங்களும் ஒரு காரணம் என்றாலும், வேறு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

2008-ல் துவங்கிய உலகப் பொருளாதார பெருமந்தம் ஆடை ஏற்றுமதிப் பொருளாதாரத்தையே நம்பியிருந்த வங்கதேசத்தை மிகக் கடுமையாக தாக்கியது. வேலை இழப்புகளால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலால் ஒருமுனைப்படுத்தப்படவில்லை. வங்க தேசத்தில் செயல்பட்ட தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களின் அதிருப்தியை அமைப்பாக்கும் கடமையிலிருந்து பின்தங்கிய போது இசுலாமிய மதவெறி அந்த இடத்தில்தன்னை பதிலீடு செய்து கொண்டது.

பரவி வந்த வகாபிய இசுலாமிய மதவெறிக்கு எதிராக நின்ற ஜனநாயக சக்திகளும், ”இது இசுலாத்தை தவறாக புரிந்து கொண்டதன் விளைவு” என்றும் “குரானுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்கள்” என்றுமே சூழலை எதிர்கொண்டனர். அதாவது, குரானை செம்மையான முறையில் (அதாவது அமைதி மார்க்கமாக) வாசிக்க முடியும் என்கிற இந்த சில்லறை தொழில்நுட்ப பிரச்சினையை வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மிக எளிதாக முறியடித்து தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டனர்.

டாகா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்
டாக்கா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்

இந்நிலையில் 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சி, வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகளே எதிர்பாராத வண்ணம் பெருந்திரளான வங்காளிகளை மதச்சார்பற்ற அரசியலின் பின்னே அணிவகுக்கச் செய்தது. மக்களின் நினைவுகளில் இருந்து தாம் அழிக்க விரும்பிய வங்க தேசிய அடையாளம் வெடித்துக் கிளம்பியதை வகாபிகள் “அல்லாவுக்கு எதிரான” தாக்குதலாகவே எடுத்துக் கொண்டனர். ஷாபாக் சதுக்க எழுச்சிக்காக பிரச்சாரம் செய்த மதச்சார்பற்ற எழுத்தாளர்களின் பெயர்களையும் மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டனர். மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக ஆளும் வர்க்கம் மீண்டும் ஒரு சுற்று வகாபிய பயங்கரவாத அமைப்புகளின் மேல் நடவடிக்கைகளைத் துவங்கியது.

2013 துவங்கி கடந்த மூன்றாண்டுகளில் அரசின் கைது நடவடிக்கைகள் ஒருபக்கமும், வகாபிய தீவிரவாதிகளின் அறிவாள் வெட்டுக் கொலைகள் மறுபக்கமுமாக வங்கதேசத்தின் நாளேடுகளை நிறைத்தன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சிறுபான்மையினர் மற்றும் நாத்திகர்களின் மேல் சுமார் 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்திருப்பதாக சுயேச்சையான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலைகளை ஒருபக்கம் முன்னெடுத்துக் கொண்டே கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகும் பயங்கரவாதிகளின் மேல் அனுதாபம் வரவழைக்கும் வகையிலான பிரச்சாரங்களையும் செய்து வந்தனர் வகாபிகள்.

இந்த சூழலில் ஏற்கனவே அல்குவைதாவின் செயல்பரப்பில் இடம் பெற்றுள்ள வங்கதேசத்திற்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் நுழைகிறது. இந்த அமைப்புகள் மூளைச்சலவை செய்யும் விதம் மிக எளிமையானது. முதலில் ஒரு நல்ல இசுலாமியனாக இருக்க வேண்டும். எப்படி நல்ல முசுலீமாக இருப்பது? அல்லாவுக்காகவும் இசுலாமிய மதத்திற்காகவும் உயிரைத் தியாகம் செய்ய தயங்காமல் முன்வருகிறவன் எவனோ அவனே நல்ல முசுலீம். அதற்காக ஒருவன் ஜிஹாது செய்ய வேண்டும். ஜிஹாதில் உயிரைத் தியாகம் செய்கிறவன் சொர்க்கம் செல்வான்.

இவ்வாறாக தூய மதவாத மூளைச் சலவைக்குள்ளான இளைஞர்களே குல்ஷான் தானாவில் தாக்குதல் நடத்தியவர்கள். தாக்குதல் நடத்திய ஆறுபேர் கொண்ட கும்பலில் ஒருவர் தவிற மற்றவர்கள் எல்லோரும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புதிய போக்கு. மதவாத / தீவிரவாத கருத்துக்கள் ஏழைகளையே பற்றிக் கொள்ளும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டால் தீவிரவாத கருத்துக்கள் இளைஞர்களைப் பற்றிக் கொள்ளாமல் தடுத்து விட முடியும் என்பது போன்ற என்.ஜி.ஓ கருத்தாக்கங்கள் குல்ஷானில் வெடித்த குண்டுகளால் தகர்ந்து போயிருக்கின்றன.

 இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.
இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.

உலகமயக் கொள்கைகள் மக்களின் பொருளாதாய வாழ்க்கையை மட்டுமின்றி அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வின் சகல பகுதிகளையும் குலைத்துப் போட்டுள்ளது. அதிகரித்து வரும் தனிநபர்வாதம் ஏழைகளை விட உயர் நடுத்தரவர்க்க மற்றும் மேல் தட்டு வர்க்கங்களின் இளைஞர்களே பாதிக்கிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நுகர்வுக் கலாச்சாரத்தையும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் சமூகத்தில் அக்கம் பக்கமாக பரப்பி விட்டுள்ளன. இதன் விளைவாக சமூகத்தின் அங்கங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் துண்டித்து விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய காற்று வெளி முழுக்க பெட்ரோலின் ஆவி பரவியுள்ளதற்கு ஒப்பான நிலையில் மதவெறித் தீக்குச்சியின் சிறு உரசல் கூட மொத்த சமூகத்தையும் எரித்து சாம்பலாக்கப் போதுமானதாகும்.

ஆக, மதவெறி எதிர்ப்பும் ஏகாதிபத்திய பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கைகோர்த்துக் கொள்வது மட்டுமே நமது இளைஞர்களை கடுங்கோட்பாட்டுவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஒரே வழி. நமது இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும். மாறாக, குரான் போன்ற மத இலக்கியங்களை சிறப்பாக படித்து சிறந்த முறையில் புரிந்து கொண்டு சரியான முறையில் அமல்படுத்துவது எப்படி என போதிக்கக் கிளம்பி பீ.ஜே, ராம கோபாலன், ஜாஹீர் நாயக், பிரவீன் டொகாடியா போன்றவர்களிடம் போட்டிக்குச் சென்றால் நாம் தோற்பது உறுதி.

இறுதியாக… நல்ல இசுலாம் என ஒன்று இருக்க முடியுமா?

எப்படி நல்ல இந்து மதமோ, நல்ல கிறிஸ்தவமோ இருக்க முடியாதோ அப்படியே நல்ல இசுலாமும் இருக்க முடியாது. தனிப்பட்ட ஒருவரின் மத நம்பிக்கைகள் “தனிப்பட்டதாய்” மட்டும் இருக்கும் வரை பிரச்சினையில்லை. மாறாக அவரின் சமூக கண்ணோட்டத்தையும் உலக கண்ணோட்டத்தையும் மதமே தீர்மானிக்கும் என்றால் ஆன்மீகம் பின்னுக்குப் போய் பயங்கரவாதம் முன்னுக்கு வருவதை தவிர்க்க முடியாது. மதம் தான் அரசியல் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் என்றால் இசுலாமியர்கள் மட்டுமின்றி, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் – ஏன், அமைதி மதத்தைப் பின்பற்றும பௌத்தர்களும் – கூட தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதியாகி விடுவர்.

– தமிழரசன்

மேலும் படிக்க:

 1. அய்யய்யோ.. முற்போக்கு “வட” போச்சு….. போச்சு… வினவு என்னாச்சு… ஏன் இப்படி சிந்திகிறீர்கள்…? இப்படியா உண்மையெல்லாம் போட்டு உடைக்கறது???… நல்லதா… சற்றே யோசனை வேண்டாமா… நாளைக்கு அவா ஆபீசுக்கு வந்தா என்ன பண்ணுவேள்…? ஜாக்கிரதங்காணும்….

 2. எப்பா ஒருவழியாய் ரங்கராஜன் சந்திரசேகரன் மற்றும் சிலரின் சோர்வு நீங்கி குஷி மலர்ந்திருக்கிறது.”வலதுசாரி கம்யூனிசம் இஸ்லாத்தோடு உறவாடுகிறது” என்ற அவர்களின் அவதூறு தற்காலிகமாய் தள்ளிப்போகிறது. சரி..விஷயத்துக்கு வருவோம். சுற்றி வளைத்து கட்டுரை சொல்வது என்ன? உண்மையான இந்து மதம் உண்மையான கிறிஸ்த்தவம் உண்மையான இஸ்லாம் உண்மையான பெளத்தம் எதுவுமே கிடையாது. உண்மையான கம்யூனிசமே உண்டு. நான் ஒரு முஸ்லிம். “நான் இஸ்லாத்தை பின் பற்றுகிறேன்.என் தனிப்பட்ட ,சமூக வாழ்க்கையில் இஸ்லாமிய நெறிப்படியே வாழ நினைக்கிறேன் கூடுமானவரை வாழ்கிறேன்.நான் அப்படி யாரையும் கொல்ல நினைத்ததோ கொன்றதோ இல்லையே மதத்திற்க்காக மற்ற மக்களின் உயிரை மானத்தை அவர்கள் வாழும் உரிமையை பறிக்க நினைத்ததோ பறித்ததோ இல்லையே” என்றால்,” இல்லை நீ நினைப்பாய் நீ செய்வாய் ஏனென்றால் நீ மதத்தை பின் பற்றுகிறாய்” இதுதான் இந்த கட்டுரையின் சாராம்சம்.பயங்கரவாதமும் பழிபாவமும் பெருக பல சமூக பொருளிய அரசியல் காரணங்கள் இருப்பது உண்மை.அதை மத வேடமிட்டு அப்பாவிகளை தூண்டிவிடுகிற வேடதாரிகள் இருப்பதும் உண்மை.மூன்றாம் உலக நாடுக்ளின் வறுமை அறியாமையை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் குழப்பங்களையும் மோதல்களையும் உருவாக்க முடியுமோ அத்தனை வகையிலும் உருவாக்கி அங்கே தன்னுடைய வல்லான்மையை ஊன்ற நினைக்கிற சர்வதேச அரசியல் சூழ்ச்சி இருப்பதும் உண்மை.ஆனால் இவைகளுக்கு மதமே பிரதான காரணம் என்று நிறுவ நினைப்பது கம்யூனிசத்தின் மிகப்பழைய தத்துவம்தான் இதில் என்ன புதிய செய்தி.இஸ்லாத்தை மையப்படுத்தி கட்டுரை இருப்பதால் தொடர்ந்து சோர்வுக்குள்ளான சிலருக்கு புத்துணர்வு பூத்திருக்கும்.

  • உலகம் முழுவதும் ஐ.எஸ் இசுலாமிய பயங்கரவாதிகள் செய்யும் படுகொலை ஏற்படுத்தும் அதிர்ச்சியை விட இஸ்லாம் குறித்த இந்தக் கட்டுரையின் விமரிசனமே உங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏழை நாடான வங்க தேசத்தில் வங்க தேசப்பெருமிதம் கொண்ட நாட்டில் இப்படி பலர் அன்றாடம் கொல்லப்படுவதும், அப்படி கொல்பவர்களை உருவாக்கும் ஜமாத்தே இ இஸ்லாமி இயக்கமே மதரசாக்கள் பலவற்றை நடத்துவதும் உங்களது மேலான கவனத்திற்கு வரவில்லை.

   முக்கியமாக இந்த கட்டுரையில் வரும் ஹோலி ஆர்டிசன் பேக்கரியில் நுழைந்த கொலைகாரர்கள் அனைவரும் பணக்கார பின்னணியைச் சேர்ந்தவர்கள். இந்த இடத்தில் வறுமையோ மூன்றாம் உலக நாடு என்ற அடையாளமோ மட்டும் மதவெறியை உருவாக்கவில்லை. பயங்கரவாதம் உருவாக சமூக பொருளிய அரசியல் காரணங்கள் இருப்பதாக நீங்கள் குறிப்பிடுவது குறித்த ஆய்வு, வரலாறு இசுலாத்திற்கு சொந்தமல்ல. அது கம்யூனிசமே நிரூபித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய இளைஞர்களை மதத்தின் பெயரில் சக மனிதர்களை கொல்லும் கொடூரத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அவர்களுக்கு இசுலாம் மதம் குறித்து தெரியாது என்று சொல்கிறீர்கள். அவர்களும் அதையே உங்களைப் போன்றவர்களுக்கு சொல்லி விட்டு கொலைகளை செய்கிறார்கள்.

   உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எந்த மதத்தையும் கடைப்பிடிக்கலாம். ஆனால் சமூக, அரசியல், பொருளாதார வாழ்விலும் அதையே கடைபிடிக்கவேண்டும் இல்லையேல் எங்களது மதம் ஒத்துக் கொள்ளாது என்று கூறினால் அதுதான் பயங்கரவாதத்தின் பலம், தோற்றுவாய். இதனால் அமைதியாக வாழும் முசுலீம்களை பயங்கரவாதிகள் என்று வினவு தூற்றுவதாக நீங்கள் கருதலாம். ஒரு வகையில் அமைதியாக வாழும் முசுலீம் மக்கள் மதத்திற்கும் இதர துறைகளுக்கும் தொடர்பில்லை, அது குறித்து மதரீதியதாக பரிசீலிப்பது தவறு என்று ஒத்துக் கொள்ளும் வரை ஒரு சராசரி முசுலீம் இளைஞனை ஐ.எஸ் இயக்கம் சுலபமாக வென்றெடுக்கும், சக மனிதர்களை ஈவிரக்கமின்றி கொல்லவும் பயிற்றுவிக்கும். இதை பரிசீலுக்குமாறுதான் திரும்பத் திரும்ப கோருகிறோம்.அதைத்தான் இசுலாமிய மதவெறியர்களுக்கு எதிராக தமது இன்னுயிரை ஈந்து போராடும் முற்போக்காளர்களும், நாத்திகர்களும், மக்களும் வங்கதேசத்தில் செய்கிறார்கள். இதற்கு மேல் முசுலீம்கள் எப்படி வாழவேண்டும் என்று உத்தரவு போடுவது ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துமதவெறி அதற்கும் வினவுக்கும் வித்தியாசம் இல்லை என்று முன்வைக்கலாம். எங்களைப் பொறுத்தவரை எந்த மதமும் அந்தந்த மத மக்களை எந்த விதத்திலும் அரசியல் சிவில் வாழ்க்கையை கட்டுப்படுத்தக் கூடாது என்பதையே கூறுகிறோம். அத்தகைய பிரம்பை விடக்கூடாது என்போரே எங்களை அவதூறும் செய்கிறார்கள். பரிசீலியுங்கள்.

   • வினவு, “பயங்கரவாதிகள் செய்யும் படுகொலை ஏற்ப்படுத்தும் அதிர்ச்சியை விட இந்த கட்டுரை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது”என்ற உங்களின் கருத்து உண்மையில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கத்தான் செய்கிறது.ஒவ்வொன்றையும் நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து சிந்திப்பவர்கள், “மதப்பற்றாளர்களாக இருப்பவர்கள் ம்னிதநேயத்தைவிட மனிதாபிமானத்தை விட மனசாட்சியற்று மதத்தையே தூக்கி பிடிப்பார்கள் என்று தட்டையாக கருத்துச் சொல்வது என்னை பேரதிர்ச்சிகுள்ளாக்கத்தான் செய்கிறது.இந்த அதிர்ச்சியை மேலும் கூட்டும் விதமாக இரவு டீவி செய்தி ஒரு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி பிடிபட்டானாம்.அவன் மேற்கு வங்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறானாம்.நாடு முழுக்க சிறுவியாபாரிகளாக இருப்பவர்கள் முஸ்லிகள். நானும் ஒரு துணி கடை நடத்தி வருபவனே.மற்ற சமூகத்தின் பார்வை எதை நோக்கி செல்லும்? சக மனிதர்களை கொல்லும் கொடூரத்தை குறைத்து நாங்கள் குறைத்து மதிப்பிடுவதாக சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?அந்த ஐஎஸ் ஐஎஸ் என்ற அரக்கர்கள் எங்கிருந்து உருவானார்கள் எதற்க்கு உருவானார்கள் அவர்களுடைய நோக்கம்தான் என்ன? அதில் பலதரப்பட்ட சந்தேகங்களும் ஊகங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.அவன் குறிப்பிட்ட மதத்தின் சாயத்தை பூசிக்கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்திற்க்கும் நாசம் ஏற்ப்படுத்துவதை சாக்காக்கி இதுதான் மதம் மதமே இப்படித்தான் என்பது, குற்றுயிரும் குலையிருமாய் கிடக்கும் கம்யூனிசத்திற்க்கு உயிரூட்டவா? இந்த சந்தேகம் எனக்கு வரலாமில்லையா.சமூக பொருளாதார அரசியல் வாழ்க்கையில் என் மதம் சொல்வதைத்தான் பின்பற்ற வேண்டுமென்று யார் சொன்னது யாரிடம் சொன்னது. “மதத்திற்க்கும் பிற துறைகளுக்கும் தொடர்பில்லை அப்படி தொடர்பிருப்பதாக சொன்னால் கூட இல்லை பரிசீலித்தால் கூட ஐஎஸ் ஐஎஸ் சோடு போய்விடுவாய்.இதுதான் ஜனநாயக முற்ப்போக்கு சிந்தனையோ.அப்துல்கலாம் போல் இரு.சல்மான் கான் ஷநவாஸ்குசைன் போல் இரு அப்போதுதான் நீ நல்ல முஸ்லிம் என் கிற காவிகளின் வார்த்தைகளுக்கும் இதற்க்கும் என்ன வேறுபாடு? இப்படி சில பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் பூச்சாண்டியாக்கி உங்களின் மதப்பற்றையும் மதநம்பிக்கையையும் குலைப்போம் என்பது எங்களின் தன்னம்பிக்கையை நீர்த்து போக செய்யும் முயற்ச்சிதான். தெளிவோடும் உறுதியோடும் இருக்கும் எங்களை எந்த தந்திரமும் எதுவும் செய்துவிட முடியாது.

    • வகாபி வகாபி என்ற வாந்தியை இப்போது பலரும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.அப்படி என்றால் என்ன என்றே தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளும் இன்றைக்கு இதை சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.வகாபியம் என்பது சவூதியோடு முடிந்து போன ஒன்று.அது அங்குள்ள ஒரு அரசியல் குறீயீடு.அதில் நல்லது கெட்டது அனைத்தும் கலந்திருக்கலாம்.அது என்னவாகவும் இருந்துவிட்டு போகிறது. அதைப்பற்றி நமக்கு என்ன? அதை யார் இங்கே கடத்திக்கொண்டு வந்தது? இங்குள்ள யாராவது நாங்கள் வகாபிகள் என்று சொன்னார்களா? நீங்களாக ஒருவனுக்கு நீதான் வகாபி என்ற பட்டத்தை திணித்து அதற்க்கு ஒரு பிம்பத்தையும் கட்டிவிட்டு ஐயோ ஐயோ வகாபி என்று அலறுவீர்கள். அதில் அவன் அரண்டு ஓட வேண்டும். நான் ஏற்கனவே வேறொரு விவாதத்தில் ஒரு உதாரணத்தை குறிப்பிட்டிருந்தேன். திருமூலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். இதுதான் இஸ்லாத்தின் நிலையும்.அதற்க்காக நாங்கள் திருமூலரைத்தான் முழுக்க முழுக்க பின்பற்றுகிறேம் என்று ஆகுமா? வகாபியம் அடிப்படையான சில மார்க்க விஷயங்களில் எங்களைப்போல கருத்து கொண்டிருக்கலாம்.அதனால் நாங்கள் வகாபிகளா?வினவிலிருந்து ஜெயமோகன் வரை இந்த வகாபியம் என்ற புள்ளியில் ஒன்றினைவதில் ஒரு மர்மம் இருக்கிறது.வகாபியம் என்பதற்க்கு என்ன அர்த்தத்தை உருவாக்கி அதை கட்டமைக்க முயல்கிறீர்கள் என்ற ரகசியமும் புரிகிறது.நான் கேட் கிறேன் இஸ்லாத்தை அதன் தனித்துவமான தர்க்கநியாயத்தோடு பின்பற்ற நினைப்பவன் கடுங்கோட்பாட்டுவாதி.அதே நேரத்தில் சில அரசியல் சமரசங்களோடு புரட்ச்சித்தலைவி அம்மாவோடும் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞசரோடும் கூட்டணி வைக்கிற ராமகிரிஷ்னனும் நல்லகண்ணு அவர்களும் தா பாண்டியனும் கள்ளகம்யூனிஸ்ட்டுகள்.நீங்கள் உங்கள் சித்தந்தத்தில் கறாராக பின் பற்ற நினைத்தால் நீங்கள் கொள்கை குன்றுகள். இந்த நியாயம் எங்களுக்கு பொருந்தாது அப்படித்தானே. சதா பார்ப்பணியம் பார்ப்பணியம் என்று பொங்குகிறீர்களே அந்த பார்ப்பணீயத்திற்க்குத்தானே தங்களை முஸ்லிகள் என்று சொல்லக்கூடிய பலர் தங்களை அறியாமலேயே பலியாகி இருக்கிறார்கள்.அவர்கள் மதத்தின் பெயரால் என்னென்ன மெளட்டீகளையெல்லாம் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அவை அத்தனையையும் வேறு பெயர்களில் இங்குள்ள இஸ்லாமியர்களிடத்தில் காணலாம்.அவைகளை களைவதும் இதுதான் இஸ்லாம் சொல்வது என்று தெளிவு படுத்துவதும் கடுங்கோட்பாட்டுவாதமும் வகாபியமுமா?பெரியார் போட்டு உடைத்தாரே எவ்வளவு மூர்க்கமாக,தான் சீர்திருத்தம் என்று கருதியவற்றுக்காக போராடினார்.அவரும் கடுங்கோட்பாட்டுவாதியா? எதை எதனோடு முடிச்சி போடுகிறீர்கள்.பயங்கரவாதத்திற்க்கும் மதச்சீர்திருத்தத்திற்க்கும் என்னங்க சம்மந்தம்? “நீ எல்லாரையும் போல இரு.வெறும் மத அடையாளம் மட்டும் உனக்கு போதும் உன் மதத்தின் தர்க்கநியாயத்தையெல்லாம் விளக்கவோ பரப்பவோ செய்தால் ஐஎஸ் ஐஎஸ்சோடு சேர்த்துவிடுவேன்.இதில் எது உங்களை பதறவைக்கிறது?ஜெயமோகன் களை அச்சுறுத்துவதுதான் உங்களையும் அச்சுறுத்துகிறதா..

   • //எங்களைப் பொறுத்தவரை எந்த மதமும் அந்தந்த மத மக்களை எந்த விதத்திலும் அரசியல் சிவில் வாழ்க்கையை கட்டுப்படுத்தக் கூடாது என்பதையே கூறுகிறோம்.//

    Well said

    • கட்டுப்படுத்தக்கூடாது என்றால், என்ன கட்டுப்பாடு எதிலெல்லாம் கட்டுப்பாடு அந்த கட்டுப்பாடால் என்ன விளைவு.அதனால் பிற சமூக பாதிப்பு என்ன? அல்லது அந்த சமூகத்திற்க்கே ஏற்பட்ட பாதிப்பு என்ன? பாதிக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் என்ன வகையில் பாதிக்கப்பட்டார்கள்? ஏதாவது விளக்கம் இருக்க வேண்டுமில்லையா.பொத்தாம் பொதுவாக கட்டுப்படுத்த்க்கூடாது கட்டுப்படுத்த்க்கூடாது என்றால்.எதை நினைத்து இதை சொல்கிறார்கள் என்ற சந்தேகம், நம்முடைய தனிப்பட்ட மத விவகாரங்களில் தலையிடுகிறார்களோ என்ற அச்சத்தை விதைக்கலாமில்லையா

  • அரெ பாய்
   நீங்களாச்சு வினவாச்சு நடுவுல என்னை ஏன் கோர்த்து விடறீங்க

   நான் இந்த பதிவில் தலையிட விரும்பவில்லை

 3. //மதம் தான் அரசியல் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் என்றால் இசுலாமியர்கள் மட்டுமின்றி, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் – ஏன், அமைதி மதத்தைப் பின்பற்றும பௌத்தர்களும் – கூட தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதியாகி விடுவர்.// மோசடியான வாதம் இசுலாம் மட்டும்தான் கல்ட் குரூப் வெகு சீக்கிரத்தில் உணருவீர்கள் இல்லை உணரச்செய்யப்படுவீர்கள் இங்க கூட்டம் பத்தல பா அதான் ஒரு நாள் வந்து கத்திட்டு மட்டும் போயிட்டாங்க இதே வங்க தேசமா இருந்தா கத்தியோடதான் வந்து இருப்பாங்க அப்புறம் உங்க கொடியோட கலர் உங்க கழுத்துல இருக்கும்

 4. இந்தியாவில் பெருபான்மை சமூகத்தினர் இடையே மத அடிப்படைவாதத்தை வேருட செய்து அதில் சிறிய அளவு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்த முடிந்த ஹிந்துத்துவ அடிப்படைவாதத்தை எதிர்க்கும் வினவு ,அதை விட உலக அளவில்பெரிய அளவில் பரப்ப படும் இத்தகைய மத அடிப்படைவாத விஷத்தை வெளிப்படையாக எதிர்த்து , இந்த நஞ்சு யார் நெஞ்சிலும் ஏறாமல் காக்க முயல வேண்டும் .

  • மத அடிப்படைவாதத்தை வினவு வந்துதான் எதிர்க்கவேண்டும் என்றில்லை.அந்தந்த மதத்தில் உள்ளவர்களே அதை அடையாளம் கண்டு வெறுத்து ஒதுக்கினால் அது கொஞசம் கொஞசமாய் விலகி ஒழிந்து விடும்.அதற்க்காக இறைநம்பிக்கையோடும் மதநெறியோடும் வாழ நினைப்பவர்களை மத அடிப்படைவாதிகள் என்ற பட்டியலில் சேர்த்து ஒதுக்க நினைத்தால் அது வெற்றி பெறாது.

 5. இசுலாமியர்கள் குழந்தை வளர்க்கும் போது , இது தற்காலிகமான வாழ்க்கை, சொர்க்கம் அல்லது நரகம் மட்டுமே நிரந்தரம் என்று திரும்ப திரும்ப கூறி வளர்க்கிறார்கள் .
  இறை பயம் , தர்மம் ,நோன்பு செய்தால் சொர்க்கம் அடையலாம் என்றும் சொல்கிறார்கள்.

  இப்படி வளர்ப்பதன் மூலம் தம் பிள்ளைகள் நல்ல நெறியோடு வாழ்ந்து , குற்றம் செய்ய பயப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள் . பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு இறை பயத்துடன் வாழவும் செய்கிறார்கள் .

  குறுக்கு வழி தேடும் சில மனங்கள் , எளிதில் சொர்க்கம் சென்று நிரந்தரமாக பல கோடி வருடங்கள் சுகம் அனுபவிக்க எண்ணுகிறார்கள். அவர்களை ஒரு கூட்டம் மூளை சலவை செய்கிறது. இறைவனின் சார்பாக போரிட்டாலும் சொர்க்கம் கிடைக்கும் என்று ஆசையை தூண்டுகிறார்கள் .
  இறைவன் என்ன எதிர்பார்க்கிறார் என்று அவர்கள் எதிர்பார்ப்பை திணிக்கிறார்கள் .

  தற்காலிகமான இந்த பூலோக வாழ்க்கையை இறைவனுக்காக உதறிவிட்டு சொர்க்கம் போவது நல்ல டீலாக தெரிகிறது. அறுபது வருஷம் வாழ்க்கையை இழந்தால் அறுபது ஆயிரம் கோடி வருடம் சொர்க்கத்தில் இருக்கலாம் என்பது அவர்களுக்கு சுலபமான வழியாக தெரிகிறது

  போர் வீரர்களுக்கு இந்து மதத்திலும் சொர்க்கம் கியாரண்டி தரப்படுகிறது . துரியோதனன் சொர்க்கம் தான் சென்றான் . ஆனால் ஒரு வித்தியாசமாக நாட்டிற்காக போரிட்டால் தான் சொர்க்கம் என்கிறது ஆனால் இசுலாத்தி தன் மத மக்களை காக்க போரிட்டால் சொர்க்கம் என்கிறது. இது நாடு என்னும் எல்லை வரையறையை எடுத்துவிட்டதால் , நாடு கடந்து மூளை சலவை செய்ய வழி வகுக்கிறது. எது நமது சமூக பிரச்சினை எது இல்லை என்கின்ற குழப்பத்தை இசுலாமிய இளைஞர்களுக்கு ஏற்படுத்துகிறது .

  இங்கே இசுலாம், மக்களை நெறிப்படுத்த செய்வது , தீயவர்களுக்கு அறுவடை செய்ய எளிதாக களம் அமைத்து கொடுப்பது போல ஒரு பிம்பம் உருவாகிறது. இந்த தீய பிம்பத்தை ஊடகங்கள் மற்ற மத வியாபாரிகள் இசுலாத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த நன்றாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

  தீர்வு என்ன என்று ஆராய்ந்தால் , சொர்க்கம் என்பதன் சுருதி குறைத்து விட்டு , தருமம் நோன்பு போன்ற நல்ல விஷயங்களை எம்பஸிஸ் செய்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் . இல்லை என்றால் நல்ல கல்வி கொடுத்தாலும் இசுலாமிய பெற்றோர் சோகத்தை அடைய வேண்டும்.
  சமூகத்தின் வெறுப்பை அடைய வேண்டி நேரிடும் .

  ரம்ஜான் வாழ்த்துக்கள்!

  • ///இது நாடு என்னும் எல்லை வரையறையை எடுத்துவிட்டதால் , நாடு கடந்து மூளை சலவை செய்ய வழி வகுக்கிறது. எது நமது சமூக பிரச்சினை எது இல்லை என்கின்ற குழப்பத்தை இசுலாமிய இளைஞர்களுக்கு ஏற்படுத்துகிறது .////

   அருமையான கண்டுபிடிப்பு போங்கோ ,,, இதை மாமல்லபுரம் கல்வெட்டுல எழுதி பக்கத்துல உக்காந்துக்கோங்க .. போறவா வர்றவா எல்லாம் அள்ளி எறைச்சிட்டுப் போவா ..

   உங்க இந்து மதத்துல சொர்க்கமே இல்லையா .. அதைச் சொல்லி வளர்ப்பதில்லையா .. சேட்டுமார்கள் கிட்ட போயி கேளுங்கோ மாமா … காசுக்கும் சொர்க்கத்துக்கும் இந்து மதத்துல என்ன ரிலேசன்னு புட்டு புட்டு வப்பாங்கோ ..

   • //உங்க இந்து மதத்துல சொர்க்கமே இல்லையா //

    அதை விளக்கி உள்ளேன் . நுனிப்புல் மேய வேண்டாம்

    • // சேட்டுமார்கள் கிட்ட போயி கேளுங்கோ மாமா … காசுக்கும் சொர்க்கத்துக்கும் இந்து மதத்துல என்ன ரிலேசன்னு புட்டு புட்டு வப்பாங்கோ ..////

     கீழே இருப்பதையும் படிங்கோ மாமா …

     சொர்க்கம் பணமா , நாட்டுப் பற்றான்னு புரியும் ..

  • ராமன் இஸ்லாமியர்கள் குழந்தை வளர்க்கும்போது என்றில்லை.எல்லா மதத்தினரும் குழந்தைகளை மதநெறியோடு நல்ல குழந்தைகளாக வள்ர்க்கவே எண்ணுகிறார்கள்.மதங்களில் விமர்சனத்திற்க்குரியவையும் அழுக்குகளும் இருக்கலாம்.தனி விவாதற்க்குரியவை.ஆனால் இங்கே மதம் பயங்கரவாதத்தோடு முடிச்சி போடப்படுவதை பற்றித்தான் பேசுகிறோம்.சொர்க்கத்தை அடைய குறுக்கு வழிதான் குண்டுவைத்து கொல்வது என்பது குண்டு வைப்பதையும் விட கொடூரமான கற்ப்பனை.மக்களை குரூரமாய் கொல்லத்துணிபவன் சொர்க்க நரகத்தியெல்லாம் நம்பமாட்டான்.என்ன காரண்த்தின்னாலோ மூளை வெம்பி போய் வெறி பிடித்து அலைபவனாய் இருப்பான்.நாட்டின் சட்டங்கள் சமூகத்தை காத்ததைவிட மத நெறிகளின் மூலம் சமூகம் காக்கப்பட்டதும் சீரடைந்ததும் தான் அதிகம்.இவை கண்களுக்கு தெரியாமல் மக்கள் மனங்களில் இறையச்சமாக இறைநம்பிக்கையாக மிளிர்ந்து சமூகத்தை வரம்புமீராமல் காக்கிறது என்பது உண்மை.எத்தனையோ அற்ச்செயலகள் மதத்தின் பெயரால் இறைநம்பிக்கையின் பெயரால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.ஏன் மதத்தையே ஆயுதமாக்கி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே துவேஷத்தை கிளப்பும்போதும் உண்மையான மதநம்பிக்கையும் இறையச்சமும் வெவ்வேறு மத மக்களை இன்னும் குரோதம் கொல்லாமல் காப்பாற்றி இருக்கிறது. மதவாதிகள் மதத்தின் பெயரால் மோதிக்கொள்ளவில்லயா அப்பாவிகள் ரத்தம் சிந்தவில்லையா என்றால் நடந்திருக்கிறது.இது மதத்தின் பெயரால் மட்டும்தான் நடந்துருக்கிறதா? மதமே இல்லை மதம் அபின் கடவுளே இல்லை என்று சொல்கிற கம்யூனிஸம் செய்யாத அட்டகாசமா? கம்னியூஸ்ட்டுகள் மோதிக்கொள்ளவே இல்லையா? நெறியோடு வாழக்கூடியவர்கள் எப்படி எல்லா இஸத்திலும் கொள்கையிலும் இருக்கிறார்களோ அதுபோல வெறிகொண்டு அலையக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.இதை காரணமாக்கி ஒரு கொள்கையை கோட்பாட்டை இல்லாமலாக்க எண்ணுவது ஒரு போட்டி அரசியல்தான்.

   • //சொர்க்கத்தை அடைய குறுக்கு வழிதான் குண்டுவைத்து கொல்வது என்பது குண்டு வைப்பதையும் விட கொடூரமான கற்ப்பனை//

    அடடே! அப்போ உங்கள் மத புத்தகத்தை அங்கே இலவசமாக கொடுத்தால் மக்கள் நல்லவர்களாகி விடுவார்கள் தானே ! பாவம் அந்த நாடுகளில் கிடைப்பது இல்லை

    • அறம் சார்ந்த நெறி நூலகள் எல்லா மொழியிலும் எல்லா நாட்டிலும்தான் இருக்கின்றன.எவன் நெறியோடு வாழ வேண்டும் என நினைக்கிறானோ அவந்தானே படிப்பான்.கடைபிடிப்பான்.அற்ப உலக வாழ்க்கையில் அனைத்தையும் அள்ளி வாரிட வேண்டும் என நினைப்பவனும் புத்தி பேதலித்து அன்பு அறம் சிரிப்பு அனைத்தும் மறந்து ஏதோ ஒரு விரக்த்தியில் வெறி கொண்டு அலைபவனும் இலவசமாக கொடுத்தால் மத புத்தகத்தை படித்து மனப்பாடம் பண்ணி ஒப்பித்து விடுவானா? உங்கள் யோசனை மிக அருமை.முயற்ச்சி பண்ணி பார்ப்போம்.

   • மீரா சாகிபி நீர் உன்மையில் முஸ்லீமோ முகமதின் நகலோ இல்லை இந்திய தேசம் உம்மை இவ்வாறு பேச வைக்க்கிறது இந்திய மக்களின் சகிப்பு தன்னமை உமக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒட்டி இருக்கலாமே தவிர இசுலாம் சகிப்பு தன்மையை போதிக்கிறது என்று உளருவது இசுலாமை அறியாது பிதற்றும் உம்முடய மடத்தன்மே தவிர வேறில்லை அனால் குரான் மற்றும் கதிஸின் போதனைகளின் படியாகவும் முகமதின் நகல்களாகவும் நடப்பவர்கள்தான் கட்டுரையின் போட்டோவில் இருப்பவர்கள் இதுக்குதான் இசுலாம் என்ற மாயயை எதிர்க்கிறோம் ஆனா பாருங்க கட்டுரை எழுதிய காம்ரேடுக்க்கு உமது பக்கம்தான் தெரிகிறது அவர்களின் இன்னொரு பக்கம் தெரியயவில்லை அதனாலதான் அவனும்நு கொலை பன்னலாம் இவனும் கொலை பன்னலாமுனு மத்தவங்க மேலயும் அவனுகள விடுவிக்கும் படியாக வம்படியா பேசுறார் அனா இவரே சொல்லுவார் ராம்குமார் ஆணாதிக்க கொலையாளினு இதுதான் இந்த தளத்தாரின் மோசமான இசுலாமிய செம்பு தூக்கள் …

    • என் ஜோசப்பு நீ என் கே இருந்தடா வருகிறாய் என் செல்வமே இவ்வளவு நாளும் நீ எங்கேயடா இருந்தாய் என் ரத்தினமே.உன் ஒவ்வொறு வார்த்தையும் புல்லரிக்க வைக்குதடா.உனக்கு மட்டும் எப்படியடா இத்தனை அறிவு? ஒரு விஷயம் விடாமல் எல்லா வற்றையுமே இவ்வளவு நுணுக்கமாக எங்கேயடா கற்றாய் என் வைரமா? பொதுத்தளத்தில் நீ இப்படி பேசுவது ஜாக்கிரதை.பொறாமையில் வெந்த சில கூட்டம் உன்னை கடத்திப்போய் வைத்திடுமே தங்களுக்கு சாதகமாய் உன் பேச்சுத்திறனை திருப்பிடுமே என்று நான் அஞுசுகிறேனடா என் குலக்கொழுந்தே. எப்போதுமே வீட்டுக்குள்ளேயே இரு என் மாணிக்கமே வெளியில் திரிந்தால் கண்டிப்பாய் உன் அறிவை களவாட சில கழுகுகள் வட்டமிடும் என் கண்மணி.

     • உன்மை உண்மை பாய் காவிக்கு செம்பு துக்கும் ஜோசப்புபால் கிறுக்கு கிறுத்துவ என்னுல் அதிகரித்தது

 6. சாதி அமைப்பை சாடும் போது இஸ்லாமியர்கள் போட்டி போட்டுகொண்டு தீவிர இடது சாரிகள் போல கருத்தை மொழிவார்கள் . அதே இஸ்லாமிய அடிப்படை வாதத்தை பேசும் போது மட்டும் அதிர்ச்சி அடைந்து இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பார்கள் . ஆக மொத்தம் இவர்களின் நோக்கம் சாதி கட்டமைப்பை ஒழிப்பதோ அல்லது தலித்துகளின் விடுதலையை உறுதி செய்வதோ இல்லை என்பது தெளிவாகிறது. மாற்று மதத்தில் உள்ள கழிசடை விடயங்களை சாடுவதன் மூலம் குரான் சொல்லியபடி காபிர் களுக்கு (Non – Muslim ) இஸ்லாத்தை போதிப்பதே ஆகும் .

  • ///// மாற்று மதத்தில் உள்ள கழிசடை விடயங்களை சாடுவதன் ///

   அருமை .. சாதியைக் கழிசடை விசயம் எனக் கழித்துக் கட்டியத்ற்கு. ஒரு சிறிய திருத்தம். இந்து மதம் என்பதே இந்த கழிசடைத் தனத்தின் மீதே கட்டப்பட்ட ஒரு பிரமிட் என்பதை ஏன் காண மறுக்கிறீர்கள் ?

   பெருமிதங்கொள்ள என்ன இருக்கிறது இந்து மதத்தில் ?.

   • அவரு சொன்ன விசயம் என்னனாவுது புரியுதா அனானி சரி விசயத்துக்கு வாரேன் இந்து மதம் சாதி கட்டமைப்புடன் இயங்குது உண்மைதான் அவரு இல்லனு சொன்னாறா ,இசுலாம் பயங்கரவாதத்தின் மீதும் மற்றவர்கள் மீதான வெறுப்பு உணர்விலும் கட்டமைக்கப்ப்ட்டு உள்ளது என்பதும் உண்மைதான் அதனால குரான குடுத்து படிக்க தெரியாதவனா பாத்து கொன்னானுகளாம் இப்பிடி வெக்கமே இல்லாம இசுலாமிய தீவிரவாத்துக்கு ஆதரவா இந்துவும் கொல்லுவான் கிறிஸ்தவனும் கொல்லுவான் பொளத்தனும் கொல்லுவான்ற ஓப்பீட்டை ஏற்க்க இயலாது செம்போ சிகப்பு கொடியோ நீங்க தூக்கலாம்

  • இடதுசாரிகள் போல நாங்கள் ஏன் கருத்து சொல்லனும். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம்.பத்துவிதமான விஷயங்களில் ஒருவன் கொண்டிருக்கும் கருத்தில் ஒன்றிரண்டு அவ்னுக்கு நேர் மாறான கருத்து கொள்கையுள்ளவர்களோடு கூட ஒத்துப்போவது எதேச்சையாக நடப்பதுதான்.இஸ்லாத்தை இனிய மார்க்கம் என்று சொல்வது இஸ்லாத்தை ஏற்றவர்களின் உரிமை.அதற்க்கு நீங்கள் எரிச்சலடைய வேண்டியதில்லை. இஸ்லாத்தின் நோக்கம் “சாதி கட்டமைப்பை ஒழிப்பது தலித்துகளின் விடுதலையை உறுதி செய்வது” என்று நாங்கள் எப்போது சொன்னோம்? சாதி என்ற ஒன்றே இஸ்லாத்தில் இல்லாதிருக்கும்போது சாதி ஒழிக்கும்நோக்கத்தை இஸ்லாம் ஏன் கொண்டிருக்கிறது.இஸ்லாம் என்பது ஓரிறையை மட்டும் நம்பி மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவர்களே என்பதையும் நம்பி குரான் கூறும் வழிகாட்டுதலின் படி அமைதியோடும் சமாதானத்தோடும் வாழ்தலே இஸ்லாம்.இந்த கொள்கை மனிதனை சாதி அற்றவனாக மாற்றும். எங்களை மாற்றி இருக்கிறது. மற்ற மற்ற மதங்களில் பிறப்பாலேயே ஒருவன் இழிவாகவும் ஒருவன் உயர்வாகவும் பிறப்பதாக நம்பப்பட்டு அப்படியே நடத்தப்பட்டும் வருகிறது.இதன் பாதிப்பு வேறுசில மதங்களுக்கும் தாவி இருக்கிறது. இஸ்லாத்தில் அது இல்லை என்றுதான் கூறுகிறோமே தவிர இந்து மதத்தில் பிறந்து இந்துவாய் இருக்கிற ஒரு தலித்தை இஸ்லாம் வந்து விடுதலை செய்யும் என்று இஸ்லாமும் கூறவில்லை. முஸ்லிம்களும் கூறவில்லை.

   • தலித்துகள் சார்பா அவங்களுக்கு எந்த சம்மந்தமுமே இல்லாத மீராசாகிபு இச்சுலாம் இனிய மார்க்கம் வாங்கனு கூப்பிடும் போது அவர்களில் ஒருவனாகிய நான் செத்துப்போன மனித இனத்தின் சார்பாக இது கொடிய மார்க்கம்னு சொன்னா மட்டும் நம்மள டவுசர் ஜட்டி ஆர் எஸ் எஸ்னு அடுக்க ஆரம்பிசிடலாம் மேட்டர் முடிஞ்சது அய்யா மீரா சகிபு நீங்க இனியவரா இருக்கலாம் அது உங்க தனிப்ப்ட்ட விசயம் நான் ரம்ஜான் கொண்டாடி 10 ஏழைகளுக்கு ஜக்காத் குடுத்தனேனு ஆனா குரான் யூதனகொல்லு ,வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவனோட நட்பு வைக்காத,அல்லாவுக்காக போர் ல செத்தா ஸ்டெரெயிட்டா சொர்க்கம் 72 கன்னி பொண்னுகனு ஆசை ,அல்லாவின் மார்க்கம் பூரணமாகும் வரை போர் புரியுங்கள்,சுருக்கமா சொல்லனுமுனா _____ இத அந்த காலத்துல இசுலாமிய அரச்ர்கள் இத பண்ணுனாங்க இப்பம் ஐ எஸ் காரண் பன்றான் ,அல்பத்தாதி சொல்லுறாரு உலகெங்கிலும் இசுலாமிய அரசை அமைப்போமுனு,முகமது வாளின் துணை கொண்டு இசுலாமிய ஆச்சியை அமைத்தார் மக்காவில்,நவீன முகமது அல்பத்தாதி டுப்பாக்கியால் அமைக்க் பார்க்கிறார்…

    • ஏன் ஜோசப்பு கண்ணு வரலாற என்னமா விளக்குற.ஒரு ரெண்டு வாரத்துக்கு உன் கூட இருந்தா போதும்.உலக வரலாறு அத்தனையும் எனக்கு அத்துபடி ஆயிடும்.சரி…இதெல்லாம் நீயே உக்காந்து ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சியா அல்லது பெரிய வரலாற்று ஆய்வாளர்களோடு பழகி க்த்துக்கிட்டியாமா?எது எப்படி இருந்தா என்ன உன் அறிவுக்கு எல்லாம் சீக்கிரம் வந்திடும்.

 7. மதத்தை வைத்து மத வெறி பிடிப்பதால் மனிதன் மிருகம் ஆகிறான்,
  ஜாதியை வைத்து ஜாதி வெறி பிடிப்பதால் மனிதன் காண்டாமிருகம் ஆகிறான், இந்த வெறிபிடித்த உதவாகரைகளுக்கு, ஓநாய்களுக்கு உலகத்திலே வேலையில்லை, இவர்கள்தான் நாய் வளர்ப்பார்கள், நரி வளர்ப்பார்கள் , மிருகத்தை வளர்ப்பார்கள். மிருகத்தோடே போகவேண்டியதுதானே ஏன் மனிதனோடு இருக்கணும். இவர்கள்தான் ஜனநாயகத்தை கொலை செய்யும் வெறி நாய்கள்

  ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறினால்
  விபச்சாரம் செய்தால்
  ஜாதிய வேறுபாடுகளை கொண்டுவந்தால்
  உண்மையான காதல் திருமணத்தை வெறுத்தால்
  கொலைசெய்தால்
  பெண்ணை அடிமைப்படுத்தினால்
  ஆணை அடிமைப்படுத்தினால்
  லஞ்சம் வாங்கினால், கொடுத்தால்
  பணத்திற்கு அடிமையானால்,
  பணத்தை வைத்து அடிமைப்படுத்தினால்
  பொதுநலத்தை வெறுத்தால்
  இவைகளுக்கு துணைபோனால்
  இவர்கள்தான் ஜனநாயகத்தை கொலை செய்யும் வெறி நாய்கள்.
  இவர்கள் மனிதனோடு இருந்தால் மக்கள் மாக்கள்தான் ஆவார்கள்.

 8. என்னைப் பொறுத்த வரை இஸ்லாம் வன்முறையையும் ஆதரிக்கிறது. அமைதியையும் ஆதரிக்கிறது. குர் ஆனில் கூறப்பட்டுட்டுள்ள பல விடயங்கள் அது கூறப்பட்டுள்ள சூழ்நிலையைப் பொறுத்து இரு வேறு விதமான அர்த்தங்களைத் தரவல்லவை. யுத்தம் என்று வருகின்ற போது இஸ்லாமியர் அல்லாதவரைக் கொல்லலாம் என்று குர் ஆனில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது (2:191-193). அதே சமயம் மற்றைய மதத்தவர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றது (60:8). இந்த முரண்பாடு தான் இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பாக அமைகிறது.

 9. நாடோடி,நீங்கள் குறிப்பிட்ட அந்த வசனம்”உங்களோடு போர் தொடுப்பவர்களோடு”என்று ஆரம்பிக்கிறது.ஆக போரில் நடந்து கொள்ள வேண்டிய முறையை பற்றி பேசும் ஒரு போதனையை பொதுமக்களை கொல்வதற்க்கு என்று ஒருவன் எடுத்துக்கொண்டால் கோளாறு அந்த போதனையிலாஅல்லது அவனது மனநிலையிலா?உலகில் எந்த ஒரு போதனையையும் சட்டத்தையும் இப்படி துஷ்பிரயோகம் செய்து திரித்து கூறி ஒருவன் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க நினைத்தால் அவனை தட்டி எலும்பை முறிக்க வேண்டுமா அல்லது அந்த போதனைகளுக்கும் சட்டங்களுக்கும் தடைபோடவேண்டுமா? போனவாரத்தில் கூட காவலர்கள் என்ற பெயரில் சில கருங்காலிகள் யாரோ ஒரு அப்பாவி வழிப்போக்கர் தன் மனைவியை அடித்தார் என்று கூறி மக்கள் நிறைந்த சாலையில் வைத்து மிருகத்தனமாய் அவரையும் அவர் மகனையும் துடிக்க துடிக்க அடித்து இணையங்களில் அனைவரும் பார்த்தோம்.இதற்க்காக காவலர்களுக்கு லத்தியை கொடுத்தது தப்பு.துப்பாக்கியை கொடுத்தது தப்பு என்ற முடிவுக்கு வரமுடியுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க