privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !

உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !

-

“சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம்” (International Federation of Journalists – IFJ – ச.ஊ.ச) 2016 ஆண்டில் 93 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பாக 2016-ம் ஆண்டில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்குப் பயங்கரமான நாடுகளாக இருந்துள்ளதாக அது கூறியுள்ளது.

கொலம்பியாவில் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிர்களை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு மக்கள் நவம்பர் மாதத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கொலம்பியாவில் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிர்களை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு மக்கள் நவம்பர் மாதத்தில் அஞ்சலி செலுத்தினர்.

திட்டமிட்டத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் அல்லது இருத்தரப்புத் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களைச் சேர்த்து இந்த எண்ணிக்கையை ச.ஊ.ச தெரிவித்துள்ளது. இரசியாவைச் சேர்ந்த 9 பத்திரிக்கையாளர்களும், கொலம்பியாவைச் சேர்ந்த 20 விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களும் விமான விபத்துகளில் கூடுதலாகப் பலியாகியுள்ளனர்.

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் இயங்கி வரும் ச.ஊ.ச, 140 நாடுகளில் உள்ள 6 இலட்சம் ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2015 ஆம் ஆண்டு வரை குறைந்தது 2,297 பத்திரிக்கையாளர்களின் மரணங்களை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கைச் சற்றுக் குறைவாக இருந்தாலும் அதைப் பற்றிய விசாரணையில் மெத்தனப் போக்கு இருப்பது குறித்தும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து விலக்கு பெரும் போக்குக் குறித்தும் ச.ஊ.ச எச்சரித்திருக்கிறது. 4 விழுக்காடு இறப்புகளுக்கு மட்டுமே இதுவரை நீதி கிடைத்திருக்கிறது என்று அது கூறியுள்ளது.

“பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை சற்று குறைந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது சிறு ஆறுதலை மட்டுமே கொடுப்பதுடன் ஊடகத்துறையில் நிலவும் பாதுகாப்பின்மை முடிவுக்கு வராமல் இருப்பது நம்பிக்கையளிப்பதாக இல்லை” என்று ச.ஊ.ச-வின் தலைவரான பிலிப்பே லேருத் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களால் 112 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பகுதிவாரியாகப் பார்க்கும் போது 30 படுகொலைகளுடன் மத்திய கிழக்கு பத்திரிக்கையாளர்களுக்கு கொலைக்களமாக இருக்கிறது. மத்திய கிழக்கை நிரந்தர போர்க்களமாக்கி தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு அல் கைதா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கிய அமெரிக்காவே முதன்மைக் குற்றவாளி. மத்திய கிழக்கைத் தொடர்ந்து ஆசியா – பசிபிக் பகுதியில் 24 படுகொலைகளும் ஆப்பிரிக்காவில் 8 படுகொலைகளும் ஐரோப்பாவில் 3 படுகொலைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக ச.ஊ.ச கூறியுள்ளது.

அதிகபடியான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகள்
அதிகபடியான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகள்

அதுமட்டுமல்லாமல் 2016 ஆண்டு முழுதும் பத்திரிக்கையாளர்கள் பலர் காணாமல் போயுள்ளது குறித்தும் தமக்குத் தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

“காணாமல் போனவர்கள் பற்றிய நம்பகமான தகவல் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத கும்பல்களிடமிருந்து வரும் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க சில நாடுகளில் நிருபர்கள் சுயதணிக்கை (Self-Censorship – இங்கே பத்திரிக்கையாளர் தமது அடையாளத்தை மறைத்தல் என்ற பொருளில்) செய்து கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்” என்று ச.ஊ.ச வின் பொதுச்செயலாளர் அந்தோணி பெல்லங்கர் கூறியுள்ளார்.

“படுகொலைகள், காணாமல் போதல் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆய்வு செய்ய அரசாங்கங்களைத் துரிதபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வு வேகமாகவும் நம்பகமான முறையிலும் பத்திரிக்கையாளர்களின் உடல்ரீதியிலான பாதுகாப்பையும் அவர்கள் தனித்துச் செயல்படுவதைப் பேணும் விதத்திலும் இருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விலக்குப் பெறுவது அதிகரித்து வருவதால் பத்திரிக்கையாளர்கள் சுயதணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று நியூயார்க்கில் இயங்கி வரும் பத்திரிக்கையாளர் பாதுகாப்புக் குழு(The Committee to Protect Journalists) டிசம்பர் மாத அறிக்கையொன்றில் கூறியிருந்தது.

“பத்திரிக்கையாளர்களை ஆபத்தான பகுதிகளில் செயல்படுவதிலிருந்து அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை இரண்டும் துரத்தி விடுகின்றன. மோதல் நடக்கும் இடங்களில் இருந்து வெளியேறவோ அல்லது சுயதணிக்கை செய்து கொள்ளவோ அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சுயாதீன பாகிஸ்தான் பத்திரிக்கை நிறுவனம்(The independent Pakistan Press Foundation) நவம்பரில் கூறியிருந்ததை CPJ மேற்கோள் காட்டியிருக்கிறது.

2016 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கு சிரியா மிகவும் பயங்கரமான நாடாக இருந்ததாகவும் அதற்கு அடுத்ததாக ஈராக் மற்றும் ஏமன் நாடுகள் இருந்ததாகவும் CPJ கூறியிருக்கிறது. சிரியாவில் 2011 க்குப் பிறகு நடந்து வரும் உள்நாட்டுப்போரில் இதுவரை 107 பத்திரிக்கையாளர்கள் பலியாகி இருப்பதாக அது கூறியிருக்கிறது.

உலகம் முழுவதும் இயற்கை வளங்களுக்காகவும் அதிகாரத்திற்காகவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தோற்றுவித்திருக்கும் முரண்பாட்டுப் பின்னல்களில் சிக்கிக் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர். இதை நேரடிக்காட்சிகளாக்க ஏகாதிபத்திய செய்தி நிறுவனங்கள் முதல் தன்னார்வ ஊடகவியலாளர்கள் வரை களத்தில் குதிக்கின்றனர். இந்த அவலங்கள் தோற்றுவித்திருக்கும் சீரழிவில் மக்களோடு சேர்ந்து பத்திரிக்கையாளர்களும் மடிந்து போகின்றனர்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்புப்போரில் ஊடகவியலாளர்களை நேரடியாக களத்தில் இறக்கி கொல்லப்படும் ஈராக்கிய மக்களை தீவிரவாதிகளாக நம்ப வைத்தது அமெரிக்கா. தன்னுடைய ஆக்கிரமிப்பையும் போர்வெறியையும் நியாயப்படுத்த அமெரிக்கா உருவாக்கிய இந்த பிரச்சார உத்தியை பின்னர் உலகமே காரித்துப்பியது.

1993 ஆம் ஆண்டில் பட்டினிச்சாவின் விளிம்பில் சிக்கியிருந்த தென் சூடானைச் சேர்ந்த ஒரு பெண்குழந்தையையும் அவளை தின்பதற்காக காத்திருந்த பருந்தையும் ஒரு சேர எடுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற படத்திற்கு 1994 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசு கிடைத்தது. கல்நெஞ்சத்தையும் கதறச் செய்யும் அந்த கோரக்காட்சியை படம் பிடித்த கெவின் கார்ட்டர் என்ற தென்னமெரிக்க பத்திரிக்கையாளர் குற்றவுணர்வால் உந்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் ‘கிம் புக்’ என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களின் மரணங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கூக்குரலிடும் இந்நிறுவனங்கள் இம்மரணங்களுக்கான மூலவேர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களில் முடிகின்றன என்பதைக் குறித்து சிறுத்தும்மலைக் கூட வெளிப்படுத்துவதில்லை. ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பத்திரிக்கையாளர்களுக்கு பயங்கரமான நாடுகள் என்றால் தனது ஏகாதிபத்திய நலன்களுக்காக அந்த சோதனைச்சாலைகளை உருவாக்கிய அமெரிக்காவை என்ன பெயரிட்டு அழைப்பது?

ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் படி டெய்லி இலெவன் (Daily Eleven) செய்திப் பத்திரிக்கையின் புலனாய்வு நிருபரான சு மோ துன்(Soe Moe Tun) 2016, டிசம்பர் 13 அதிகாலையில் மியான்மரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் படி டெய்லி இலெவன் (Daily Eleven) செய்திப் பத்திரிக்கையின் புலனாய்வு நிருபரான சு மோ துன்(Soe Moe Tun) 2016, டிசம்பர் 13 அதிகாலையில் மியான்மரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எல் - லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் – லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இரசிய நிருபரான பாவெல் செரிமெட்(Pavel Sheremet) ஜூலை மாத கடைசியில் உக்ரைனின் கிவ்வில் நடந்த ஒரு கார் வெடிகுண்டு விபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இரசிய நிருபரான பாவெல் செரிமெட்(Pavel Sheremet) ஜூலை மாத கடைசியில் உக்ரைனின் கிவ்வில் நடந்த ஒரு கார் வெடிகுண்டு விபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
சோமாலியாவின் தலைநகரமான மோகடிஸுவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சோமாலிய வானொலி நிருபரான அப்தியசிஸ் அலி ஹாஜி(Abdiasis Ali Haji) செப்டெம்பரில் படுகொலை செய்யப்பட்டார்.
சோமாலியாவின் தலைநகரமான மோகடிஸுவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சோமாலிய வானொலி நிருபரான அப்தியசிஸ் அலி ஹாஜி(Abdiasis Ali Haji) செப்டெம்பரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆப்கனைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையமான அரியானாவில்(Ariana) பணிப் புரிந்து வந்த பத்திரிக்கையாளரான நெமதுல்லாஹ் ஜாகிர்(Nematullah Zaheer) சாலையோர குண்டு ஒன்று வெடித்ததில் உயிரிழந்தார்.
ஆப்கனைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையமான அரியானாவில்(Ariana) பணிப் புரிந்து வந்த பத்திரிக்கையாளரான நெமதுல்லாஹ் ஜாகிர்(Nematullah Zaheer) சாலையோர குண்டு ஒன்று வெடித்ததில் உயிரிழந்தார்.

– சுந்தரம்

செய்தி ஆதாரம் :
Nearly 100 journalists killed worldwide in 2016: IFJ – அல் ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க