privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !

எஸ்மா உருட்டுக் கட்டையால் மிரட்டும் நீதிமன்றம் !

-

மே 14-ஆம் தேதி மதியம் தொடங்கிய போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மே 16-ஆம் தேதி இரவில் முடிவுக்கு வந்தது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

இந்த அறிவிப்பு வெளிவருவதற்குச் சற்று முன்பாக, எஸ்மா சட்டத்தின் கீழ் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்த மதுரை உயர்நீதி மன்றக் கிளை, “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

தொழிலாளர் விரோத தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம்

நீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சமான, அத்து மீறிய இந்த உத்தரவு, தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சுறுத்த திட்டமிட்டே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவையில், முதல் கட்டமாக 2,000 கோடி ரூபாயைத் தர வேண்டும்; மீதமுள்ள நிலுவையை தருவதற்கான கால அட்டவணையை நிர்ணயித்து, அதனை ஒரு ஒப்பந்தமாக அரசு கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கை.

தொழிலாளர்களின் கோரிக்கைகளுள் ஊதிய உயர்வும் ஒன்று. போராட்டத்தின் முக்கிய கோரிக்கை அதுவல்ல. போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்றுவிட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட எல்.ஐ.சி. பிரீமியம் தொகை, கூட்டுறவுக் கடன் தொகை ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்க வேண்டும்/செலுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதாவது தொழிலாளிகளுக்கு சொந்தமான பணத்தை அதிமுக அரசு திருடித் தின்றுவிட்டது. அதைத் திருப்பிக்கொடு என்பதுதான் கோரிக்கை.

போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

இப்படித் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களுக்குத் திருப்பித் தராமல் இருக்கும் தொகை 7,000 கோடி ரூபாய் என்கிறார்கள், தொழிலாளர்கள். குறிப்பாக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை மட்டும் 1,700 கோடி ரூபாய். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக மாதாமாதம் ஓய்வூதியம் தருவதைக்கூட மறுத்துவருகிறது, அ.தி.மு.க. அரசு. நாங்கள் வாழ்வதா, சாவதா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறார்கள் தொழிலாளிகள்.

தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து பெறப்பட்ட இந்தப் பல்லாயிரம் கோடி ரூபாயை ஊழல், முறைகேடுகள் மூலம் திருடித் தின்றுவிட்ட அ.தி.மு.க. அமைச்சர்களும் அதிகார வர்க்கமும் நிதி நெருக்கடி என்று நாடகமாடுகிறார்கள். நீதிமன்றமோ இந்தத் திருட்டைக் கண்டுகொள்ளாமல், “அதுதான் அரசாங்கம் 50 சதவீதப் பணத்தைத் தருவதாகக் கூறிவிட்டதே, அதற்குப் பிறகு ஏன் போராடுகிறீர்கள்?” எனக் கேட்டுத் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாக்குகிறது.

தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தால்தான் 1,250 கோடி தருவதாக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் அது வெறும் வாக்குறுதிதான். இந்த 1,250 கோடியில் முதல் தவணையாக 800 கோடி ரூபாய்தான் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. இதைத்தான் பாதி என்கிறது நீதிமன்றம். எது பாதி? 7000 கோடியில் 800 கோடி பாதியா? இதென்ன குமாரசாமி கணக்கா?

அமைச்சர் எனும் பெயரில் சுற்றிவரும் செல்லூர் ராஜூ

தொழிலாளிகளுக்கு உரிமையான அவர்களுடைய பணத்தை போக்குவரத்து துறை நிர்வாகமும், இந்த அரசும் அவர்களுடைய அனுமதி இல்லாமல் களவாடி விட்டன. கரும்பு விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு பணம் கொடுக்காமல் சுமார் 2000 கோடி ரூபாயை தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் எப்படி திருடியிருக்கிறார்களோ அப்படி தொழிலாளிகளின் பணம் திருடப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடு குறித்து குற்றவிசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.

பேருந்துகள் வாங்குவது முதல் டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவது வரையிலான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும், அரசுப் பேருந்துகளை காயலாங்கடை சரக்குகளாக மாற்றுவதன் மூலம் தனியார் பேருந்து முதலாளிகளுக்கு கள்ளத்தனமாக உதவுவது, வருமானம் வரும் ரூட்டுகளை அவர்களுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசுப்போக்குவரத்து கழகம் திவாலாக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுதும் உழைத்து தேய்ந்த தொழிலாளிகளின் குடும்பங்களோ தமக்கு சேரவேண்டிய ஓய்வூதியமும் கிடைக்காமல் பட்டினியிலும், நோயிலும் துடிக்கிறார்கள்.

கந்து வட்டிக்காரனும் வங்கியும் கொடுக்கின்ற நெருக்கடியில் கடன் வாங்கிய விவசாயிகளும் சிறு தொழில் செய்வோரும் உழைப்பாளிகளும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் இங்கே கடன் கொடுத்தவர்களான தொழிலாளர்கள் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தொழிலாளிகளின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திருடிய நிர்வாகத்திடம், தொழிலாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறது நீதிமன்றம். திருடிய பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டால், கேட்டவனை சிறைக்கு அனுப்புவார்களாம், இதற்குப் பெயர் சட்டத்தின் ஆட்சியாம்.

அமைச்சர் என்ற பெயரில் உலாவரும் அ.தி.மு.க ரவுடி செல்லூர் ராஜுவின் மிரட்டல்களுக்கு தொழிலாளிகள் அஞ்சவில்லை என்பதால், எஸ்மா என்ற உருட்டுக்கட்டையை காட்டி மிரட்டும் வேலையை நீதிபதிகள் செய்கிறார்கள்.

“போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொழில்தாவா சட்டத்தின் கீழ் வருகின்றனர். இச்சட்டப் பிரிவு 22-இன் கீழ் 14 நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கி போராட்டத்தில் ஈடுபடலாம். மேலும், போக்குவரத்துக் கழகங்கள் வாங்கும் டீசல், ஆயில், உதிரி பாகங்களுக்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ரூபாய் வரியாகச் செலுத்துகின்றன. அத்தியாவசியத் தேவை சட்டத்திலும், எஸ்மாவின் கீழும் வந்தால், சேவை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு எப்படி வரி வசூலிக்கலாம். இதனால் எஸ்மா சட்டம் போக்குவரத்து ஊழியர்களைக் கட்டுப்படுத்தாது” என்கிறார், போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளன செயல் தலைவர் திரு மலைச்சாமி.

வேலைநிறுத்த உரிமை என்பது உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமை. அந்த உரிமையை எஸ்மா சட்டம் மிகவும் வெளிப்படையாக மறுக்கிறது.  2003-இல் நடந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தடை செய்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை நாடே கண்டது. “தமது குறைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பணியாளர்கள் வேலைகளை மேலும் நேர்மையாக, திருத்தமாக, திறமையாகச் செய்வார்களேயானால், அம்மாதிரியான நடத்தையை அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அங்கீகரித்து வரவேற்பார்கள்” என உச்சநீதி மன்றம் அத்தீர்ப்பில் எழுதியது.

ஆண்டைகளின் மனம் குளிரும்படி அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாரம். இது போராடும் ஒரு பிரிவினருக்கு எதிராகப் பொதுமக்களுள் மற்றொரு பிரிவினரை நிறுத்தும் ஆண்டைகளின் நரித்தனம். தற்போது மதுரை உயர்நீதி மன்றமும் பொதுமக்களின் நலனில் இருந்தே தீர்ப்பளிப்பதாக கூறியிருக்கிறது.

ஓ.பி.எஸ். தொடங்கி இ.பி.எஸ் வரை, சேகர் ரெட்டி தொடங்கி ராம மோகன ராவ் வரை என நம் கண் முன்னே தமிழகத்தைக் கொள்ளையடித்த ஒரு பெருங்கூட்டம் உலவிக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய திருட்டுச் சொத்திலிருந்து ஒரே ஒரு ரூபாயை பறிமுதல் செய்வதற்கு கூட சட்டத்தில் இடமில்லை. அப்படி பறிமுதல் செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்வதற்கு கூட நீதிபதிகளுக்கு நாக்கு வருவதில்லை. ஏனென்றால் அது வர்க்கபாசம்.

ஆனால் பட்டினியில் தவிக்கும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் கொடு என்று கேட்டால், அவர்களை அடுத்த கணமே சிறைக்கு அனுப்புவதற்கு சட்டம் இருக்கிறது. மாண்புமிகு நீதியரசர்களும் தயாராக இருக்கிறார்கள்.

குடிமக்களின் உரிமைகளை ரத்து செய்வதில் போலீசை விட நீதிமன்றமே முன் நிற்கிறது

மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வேலை நிறுத்த உரிமையை உடனே தடை செய்வதாக அறிவித்த நீதிபதிகளுக்கு, கொள்ளையடிக்கும் உரிமையைத் தடை செய்ய விருப்பமில்லை.

இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள், நேற்று அரசு மருத்துவர்கள், அதற்கு முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள் எஸ்மாவால் தடை செய்யப்பட்டன. ஏன் நோக்கியா தொழிலாளர்களின் போராட்டத்தையும் இந்தச் சட்டப்பிரிவைக் கொண்டுதான் அடக்க முயன்றது அரசு.

தொழிலாளர்களின் போராட்டத்தை மட்டுமல்ல, பந்துக்குத் தடை, ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள், ஆர்ப்பாட்டங்களை ஆள் அரவம் இல்லாத இடங்களுக்குத் தூக்கியடிப்பது எனக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசைவிட தீவிரமாக இருப்பவர்கள் நீதிபதிகள்தான்.

நீதிபதிகளின் அதிகார அத்துமீறல்களையும், முறைகேடான தீர்ப்புகளையும் அம்பலப்படுத்தத் துணிந்த வழக்குரைஞர்களின் தொழில் உரிமையை இந்திய பார் கவுன்சில் மூலம் ரத்து செய்ய வைத்தது, சென்னை உயர்நீதி மன்றம். இவையனைத்தும் நீதிமன்றங்கள் நீதிக்கு எதிரான மன்றங்களாக நடந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றன.

ஜனநாயகத்தின் எல்லா தூண்களும் உளுத்துப்போய்விட்ட நிலையில் நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடமாக இருப்பதாக அறிவுத்துறையினர் சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்கங்களுக்கு, அத்தகைய காரியங்களை  சத்தமில்லாமல் முடித்து தரும் முதல் புகலிடமாக நீதிமன்றங்கள்  மாறி வருகின்றன  என்பதையே அனுபவம் காட்டுகிறது.

-திப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க