privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !

தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !

-

செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், நிரந்தர வாகன ஓட்டுநர்  பணியை சட்டவிரோதமாக பர்வீன் டிராவல்ஸ் -இடம் ஒப்பந்தமுறைக்கு விட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். இத்னால் இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ள ஒரு பணியில் ஒப்பந்தமுறையைக் கொண்டுவரும் போது அதற்கு உரியமுறையில் தொழிலாளர் துறையில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு எந்த உரிமமும் பெறாமல் கல்லூரி நிர்வாகம் ஓட்டுநர் பணிகளில் ஒப்பந்தமுறையை தன்னிச்சையாக அமல்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து அக்கல்லூரியில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தொழிலாளர் நலத்துறையில் புகாரளிக்கப்பட்டு அது சம்பந்தமான தாவா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகமானது தொடர்ந்து தொழிலாளர்களை அவர்களது பணியைச் செய்யவிடாமல் தடுத்துவருகிறது. சட்டவிரோதமான ஒப்பந்த முறையை அமல்படுத்துவதுடன் தொழிலாளிகளை ’செட்டில்மெண்ட்’ வாங்கிக் கொண்டு பணியைவிட்டு விலகுமாறு நிர்பந்தம் கொடுத்துவருகிறது.

அதுமட்டுமில்லாமல் தொழிலாளிகளின் வங்கிக் கணக்கில் ’செட்டில்மெண்ட்’ தொகையை கடந்த 15.09.2017 அன்று செலுத்தியது நிர்வாகம். இதனை சங்கப் பொதுக்குழு கூடி ஏற்க மறுத்ததுடன் தொழிலாளர்கள் அனைவரும் அப்பணத்தை ஏற்க மறுத்து கடிதம் அனுப்பினர்.

இவ்வாறு நிரத்தரத் தொழிலாளிகளின் இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளிகளிடையே பிளவு ஏற்படுத்தி நேரடிப் பிரச்சினையை ஏற்படுத்த முயன்று வருகிறது. திட்டமிட்டே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

அதனால் தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த 20.09.2017 அன்று சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றனர். அங்கு இருந்த ஆய்வாளர் திரு.சுந்தர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திரு.வசந்தராஜா ஆகியோர் உதவி ஆணையர் திரு.ஐயப்பன் அவர்களிடம் புகாரை கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதனடிப்படையில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான FIR நகலை தராமல் மழுப்பியது காவல்துறை.

அதன் பின்னர் 21.08.2017-ல் பேருந்தை எடுத்து வந்த எமது தொழிலாளர்களிடம் மாணவர்களை கல்லூரிக்குள் இறக்கி விட்டுவிட்டு பேருந்தை வெளியே வேறிடத்தில் கொண்டு போய் நிறுத்த சொன்னது நிர்வாகம். ஏன் என கேட்ட போது, ”இனி பர்வீன் டிராவல்ஸ் தான் பேருந்தை இயக்குவார்கள்” என்றது நிர்வாகம்.

இதன் மீது நடந்த பேச்சுவார்த்தையில் நாங்களே பேருந்தை இயக்குவது என முடிவானது. 22.08.2017 அன்று வழக்கம் போல் கல்லூரிக்குள் பேருந்தை எடுத்து வந்தோம் காலை 11:00 மணிக்கு கல்லூரிக்கு விடுப்பு எனவும் சங்கத்தின் நிர்வாகிகள் எட்டு பேரை வேலை நீக்கம் செய்யப்படுவதாக வாய்வழியாக அறிவித்தது நிர்வாகம். பிறகு அவர்கள் வீட்டிற்கு தபால் மூலம் வேலை நீக்க உத்தரவு அனுப்பபட்டு இருந்தது.

22.08.2017 முதல் 27.08.2017 வரை உங்கள் அனைவருக்கும் விடுமுறை என அறிவித்துவிட்டது நிர்வாகம். பிறகு  28.08.2017 அன்று முதல் உங்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்கிறோம். பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்தம் செய்து விட்டோம். நீங்கள் செட்டில்மெண்ட் பெற்றுக்கொள்ளுங்கள் என தொழிலாளர்களின் வீடுகளுக்கு கடிதம் அனுப்பியது நிர்வாகம்.

28.08.2017 அன்று பர்வீன் டிராவல்ஸ் மூலம் பேருந்தை இயக்கியது நிர்வாகம். நாங்கள் தான் இயக்குவோம் என பேச்சு வார்த்தை நடத்தி எங்கள்  உரிமையை நிலை நாட்டினோம். மேற்கண்ட அனைத்து வகையிலும் பின்னடைவு கண்ட நிர்வாகம் 21.08.2017 தேதியிட்ட கடிதத்தில் 30 நாட்கள் கால அவகாசம் என 18.08.2017 முதல் 17.09.2017 வரை முன் தேதியிட்டு அறிவிப்பு வெளியிட்டது நிர்வாகம். இதன் மூலம் எமது நிரந்தர பணியை ஒழித்து கட்ட சட்ட விரோதமான வழிமுறைகளை கையாண்டது நிர்வாகம்.

அதன்  தொழிற்சங்க முன்னனியாளர்கள் எட்டு பேர் மீது பொய் புகார் கூறி, 22.08.2017 அன்று நள்ளிரவு 11:30 மணிக்கு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்தது கல்லூரி நிர்வாகம்.

20.08.2017-ல் புகார் செய்த எமது சங்கத்தின் புகாருக்குக்கான நகலை வழங்காமல் மழுப்பிய போலிசு அதிகாரிகள் ஏ.சி. திரு.ஐயப்பன், இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் திரு.வசந்தராஜன் ஆகியோர் 22.08.2017 அன்று நள்ளிரவில் புகார் செய்த நிர்வாகத்திற்கு அப்போதே அதற்கான நகலை வழங்கி தமது காவல் துறை ‘மாண்பை’ காட்டியுள்ளனர்.

தொழிலாளிகளை மிரட்டும் அடியாட்களாக செயல்படும் போலீசு

இந்நிலையில் மீண்டும் கடந்த 22.09.2017 அன்று மாலை கல்லூரி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு முன்பாக போலீசார் உளவுபிரிவு போலீசார் திரு.பாபு தலைமையில் வந்தனர். அவருடன் சில சீருடை அணியாத போலீஸ்காரர்கள் எனப்படுபவர்கள் வந்தார்கள். பிறகு  திரு.ஐயப்பன் அவர்களின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசு தடியுடன் வேனில் வந்து இறங்கியது.

பிறகு செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மேலும் சில காவலர்கள் வந்தனர். போராட்டகாரர்களை கைதுசெய்ய பயன்படுத்தபடும் வண்டி வந்தது ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தை பெரும் கலவரம் நடக்கப்போகும் இடமாக மாற்றினர் ‘கண்ணியமிகு’ காவல் துறையினர்.

20.09.2017-ல் நடந்த பேச்சு வார்த்தையில் 25.09.2017 அன்று காலை 11:30 தொடங்கபடும் எனவும், நிர்வாக தரப்பில் மேற்படி நிர்வாகத்தில் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாக அதிகாரியை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும்படி தொழிலாளர் நல உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தொழிலாளர் தரப்பில் இருந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், இப்பிரச்சினைகள் குறித்து போலீசாரிடம் உரிய முறையில் புகாரளித்துள்ளது தொழிற்சங்கம்.

இவ்வாறு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர் ஆணையத்தில் புகாரளித்து அதற்கான தாவா நடந்து வருகிறது.

ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவாக போலீசு நடந்துவருகிறது. அதனடிப்படையில் தான் கவசவாகனங்கள், குண்டாந்தடிகள், போலீசு பட்டாளம் என தொழிலாளிகளை மிரட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் திட்டமிட்டே சட்ட-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது அதனை சாக்காக வைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்து அவர்களின் போராட்டங்களை முடக்குவது என நடந்து கொள்கிறது போலீசு.

கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து சட்டவிரோதமாகவே செயல்பட்டு வருகிறது.

  • நிர்வாகம் இந்திய அரசின் தொழில் தகராறுகள் சட்டத்தை எதையும் மதிக்காமல் சட்ட விரோதமாக செயல்படுகிறது
  • நிரந்திர தொழிலாளர்களின் இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி நேருக்கு நேராக அவர்களை மோதவிடும் வகையில்  சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முற்படுகிறது.

ஒரு நிர்வாகம் ஒரு தொழில் ஒப்பந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால் அது சம்மந்தமான உத்தரவை தமிழ்நாடு அரசு தொழிலாளர் அதிகாரியுடன் மனு செய்து உரிய உரிமம் பெறாமல் ஒப்பந்தப் பணி நிர்வாக முறைக்கு பயன்படுத்த முடியாது.

அப்படி ஒரு உரிமத்தைப் பெறாமலே பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்திடம் ஒப்பந்தம் விட்டு நிரந்திர தொழிலாளர்களை ஒழித்து கட்டும் நிர்வாகத்தின் சட்ட விரோத செயலுக்கு துணை நிற்கும் போலீசு அதிகாரிகள் திரு.ஐயப்பன், இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா மற்றும்  உளவுபிரிவு இன்ஸ்பெக்டர் திரு.பாபு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், மேலும் தொழிற்தகராறு சட்டம் 1947 –ன் கீழ் கூறப்பட்டுள்ள சட்டபடியான தொழிலாளர் உரிமைகளை உத்தரவாதப்படுத்த ஆவண செய்யும் படி கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் – வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகரகாவல் ஆணையர், தொழிலாளர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அக்கல்லூரியில் 16 ஆண்டுகளாக பணிபுரிபவரும் திரு.பச்சைமுத்து என்பவரது மகன் பரத் அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு M.E. படித்துவருகிறார்.

மாணவர் பரத்

அவரது தந்தை  திரு.பச்சைமுத்து தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அவரை வேலையைவிட்டு விலகும்படி கல்லூரியின் நிர்வாகி திரு அபிலாஷ் மற்றும் திருமதி ரெஜினா ஆகியோர் மிரட்டியுளனர். மேலும் அவரது மகன் பரத் -தை கடந்த 26.09.2017 அன்று நடந்த தேர்வை எழுதவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனை அறிந்த தொழிலாளர்கள் அனவரும் திரு.பச்சைமுத்து -உடன் நேரடியாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று புகாரளித்தனர். இதனடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமானது மாணவரைத் தேர்வு எழுத அனுமதியளித்து எழுத்துபூர்வமாக உத்திரவளித்தது.

ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ஜேப்பியாருக்கே உரிய ரவுடிபாணியில் மிரட்டுகிறது நிர்வாகம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி உறுதியாகப் போராடி வருகின்றனர் தொழிலாளிகள்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94871 51165.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க