Thursday, July 25, 2024
முகப்புஉலகம்அமெரிக்காதிவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

-

இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்.

தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களைக் கண்டோரெல்லாம் “இனி எல்லாம் பிரைவேட்தான், பேஷ், பேஷ் ரொம்ப நன்னாகப் போறது” என்று சப்புக்கொட்டினர். கல்வி, காப்பீடு, சுகாதாரம், நிதி, அத்தனையிலும் தனியார் மயம் வெள்ளமென ஓடியது. அரசுக் கட்டுப்பாடுகள் எனும் கோட்டா ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு தாரளமயம் திறந்து விடப்பட்டது. கோக், பெப்சி முதல் எண்ணற்ற நுகர்வுப் பொருட்கள் ஒரு அடியில் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன.

பங்குச் சந்தை முன்னெப்போதையும் விட பகாசுரமாக வளர்ந்தது. ஒவர் நைட்டில் அம்பானி போன்ற முதலாளிகளெல்லாம் பில்லியனில் இலாபம் பார்க்கத் தொடங்கினார்கள். வளர்ச்சியின் அளவுகோலாக செல்பேசிகளும், வாகனங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தொலைக்காட்சி சீரியல்களும், பேரங்காடிகளும், ஏ.டி.எம்களும் அலையலையாய் வந்திறங்கின. சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் முன் இரவுபகலாய் இருந்த நீண்டவரிசை ஆடு விழுங்கிய மலைப்பாம்பு போல எப்போதும் கிடந்தது.

இப்படி உலகமயம் பூத்துக்குலுங்கிய நாட்டில்தான் இதே காலத்தில்தான் இந்த உலகமயக் கொள்கைகள் காரணமாக ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப் புறங்களில் வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களை அப்பிக் கொண்டனர். பின்தங்கிய மாநிலங்களிலிருந்து நாடோடிகளாய் புலம் பெயருவது வாடிக்கையானது. கல்வியும், சுகாதாரமும் காசு உள்ளவனுக்கு மட்டும் என்றானது. இருப்பினும் தனியார் மயத்தின் மகிமைகளை குறிப்பாக நடுத்தர வர்க்கம் மறப்பதற்குத் தயாராக இல்லை. இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை மதவெறியை விட அதிகமான முதலாளித்துவ வெறியுடன் ஆதரித்து வந்தன.

எக்னாமிஸ்ட் போன்ற பத்திரிகைகளெல்லாம் இனி உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது எனவும் யாரும் தனியாக வாழ முடியாது என்றும் பிரகடனம் செய்தன. சோசலிச முகாம் அழிந்த நிலையில் முதலாளித்துவமே இனி உலகின் யதார்த்தம் என்ற கொள்கை முழக்கம் வெற்றிகரமாய் அறிவிக்கப்பட்டது. உலக வங்கியும், ஐ.எம்.எஃப்பும், உலக வர்த்தகக் கழகமும் புதிய உலகின் சக்கரவர்த்திகளாக முடிசூட்டப்பட்டார்கள்.

இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உலகமயம் என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதை திவாலான அர்ஜென்டினா, மெக்சிகோவும், 95களில் பொருளாதா பூகம்பங்களைச் சந்தித்த தென்கிழக்காசிய நாடுகளும் அவ்வப்போது எடுத்துக் காட்டின. அப்போதெல்லாம் இவையெல்லாம் விதிவிலக்குகள், காலப்போக்கில் பிரச்சினைகள் சரியாகிவிடும், சந்தையின் வளர்ச்சி எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து விடும் என்று ஜோசியம் சொன்னார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

தனிநபர்களிடம் மேலும் மேலும் சொத்து சேர்வதும், பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், குறிப்பிட்ட தொழிற்சாலையில் திட்டமிட்ட உற்பத்தியும், நாட்டளவில் அராஜக உற்பத்தியும் நிலவுவதும் என முதலாளித்துவ சமூகத்தின் இரு முரண்பாடுகளை காரல் மார்க்ஸ் தனது மூலதனம் ஆய்வில் நிறுவியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் முற்றும்போதுதான் பலவிதமான பொருளாதார நெருக்கடிகளும், போர்களும் வெடிக்கின்றன. உலகில் தற்காலிகமாக சோசலிசம் மறைந்திருக்கலாம், ஆனால் மார்க்சியம் என்ற சமூக அறிவியல் மறையாது. ஆம். தற்பொது அந்த விதிப்படி உலக முதலாளித்துவத்தின் தலைமையிடமான அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசிகளை அளித்திருக்கின்றன. வால்ஸ்டீரீட் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைநகரத் தெரு கடந்த சில நாட்களாக அதிர்ச்சியில் புதையுண்டிருக்கிறது. இது அமெரிக்காவோடு முடியாமல் பிரச்சினையும் உலகமயமாகியிருக்கிறது.

2001இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காய்தாவால் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு விமானப் போக்குவரத்து, சுற்றுலா என்று பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதை ஈடுகட்ட ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்தது அமெரிக்கா. இதனால் போர்தளவாட உற்பத்தியும், எண்ணெய் தொழிலும் அபராமாக இலாபம் சம்பாதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அப்படி ஒன்றும் நடந்து விடவில்லை. ஈராக் போர் அமெரிக்காவின் பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது.

இந்நிலையில் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்த கடன் என்ற போதையை நிபந்தனைகள் இல்லாமல் நிதி நிறுவனங்கள் மூலம் அளித்தார்கள். ஏற்கனவே ஆளாளுக்கு பத்து கடன் அட்டைகள் வைத்திருக்கும் அமெரிக்காவில் இந்த புதிய கடன் வெள்ளமெனத் திறந்து விடப்பட்டது. கொஞ்ச நாளைக்கு எல்லா அமெரிக்கர்களும் தின்று தீர்த்தார்கள். முக்கியமாக வீட்டின் அடமானத்தை வைத்து வாங்கப்பட்ட கடன்கள் பல கைககள் மாறி கடன் குட்டிகள் போட்டு பண செயலாக்கத்தை பன்மடங்காக்கியது. இறுதியில் கடன் வசூலிக்கும் போது நிபந்தனையில்லாத கடன்களை வசூலிக்க முடியவில்லை. வீட்டு மதிப்பும் பாதாளத்தில் இறங்கியது. இதைச் சரிக்கட்ட நல்ல கடன், கெட்ட கடன் எல்லாவற்றையும் கலந்து ஒரு காக்டெயில் மாதிரி ரெடிபண்ணி நிதி நிறுவனங்கள் பிரித்துக்கொண்டன. இதன் மூலம் நட்டத்தை தவிர்க்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. மேலும் சரிவை எல்லா நிறுவனங்களும் சேர்ந்து சந்தித்தால்தான் தப்பிக்க முடியும் என்ற காரிய வாதமும் அதில் இருந்தது. இதைத்தான் சப் பிரைம் லோன் நெருக்கடி என்று அழைக்கிறார்கள். ஆனால் லோன் மட்டும் வந்தபாடில்லை.

தேவைக்கு அதிகமான உற்பத்தி, வாங்குவதற்கு ஆளில்லை. அதனால் கடன் கொடுத்து வாங்க வைக்கிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் தீடிரென்று விண்ணுக்கு பாய்கிறது. தேவை முடிந்ததும் பாதாளத்தில் சரிகிறது. முந்தைய மதிப்பில் கடன் வாங்கியவர்கள் தற்போதைய குறைவான மதிப்பை வைத்துக் கடனைக் கட்ட முடியவில்லை. வீடுகளின் உண்மையான பயன் மதிப்பு செயற்கையாக உப்பவைக்கப்பட்ட போது ஒன்றும் தெரியவில்லை. உப்பியது வெடித்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை.

வராக்கடன்கள் கைமாறி கடைசியில் போய்ச்சேர்ந்த நிறுவனங்கள் கடனை வசூலிக்க முடியாமல் மாட்டிக்கொண்டன. இதில் கொள்ளை இலாபம் அடித்தது யார், சுமாரன இலாபம் சுருட்டியது யார், நட்டமடைந்தது யார், மக்களுக்கு என்ன இழப்பு இன்னபிறவையெல்லாம் தேவ ரகசியங்கள். நமக்கு புரியாத உபநிடதங்களும் கூட. இவற்றை சி.ஐ.ஏ புலனாய்வு செய்தாலும் கண்டுபிடிக்க முடியாத மறை பொருளாகும். மொத்தத்தில் ஊக வணிகமும், எதிர்பார்ப்பு வணிகமும், பங்குச்சந்தைச் சூதாட்டமும் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீர்க்குமிழ் உடைந்து விட்டது. முதலாளித்துவத்தின் இலாபம் தனக்குத் தானே தோண்டிக்கொண்டுள்ள சவக்கிடங்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மார்க் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதைத் தொடர்ந்து உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமான் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி எனப்படும் அமெரிக்கன் இன்டர் நேஷ்னல் குரூப் நிறுவனமும் திவாலாகியது. தற்போது அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாஷிங்டன் மியுட்சுவல் மற்றும் மார்கன் ஸ்டான்லி, கோல்ட் மேன் சாஸ் ஆகிய நிதிக் கழகங்களும் மஞ்சள் கடுதாசி வரிசையில் காத்திருக்கின்றன. மொத்தத்தில் வால் தெருவிலிருக்கும் நிதி நிறுவனங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டன.

சரி தனியார் மயக் கொள்கைப் படி வல்லவன் வாழ்வான், முடியாதவன் சாவான் என்று விட வேண்டியதுதானே? அதுதானில்லை. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பல்லாயிரம் பேர் வேலையிழப்பர், பொருளாதாரம் சீர் குலையும், ஆடம்பர வாழ்க்கை மட்டுமல்ல அத்தியாவசிய வாழ்க்கையைக் கூட இழக்க நேரிடும், அமெரிக்கர்கள் நுகர்வைக் குறைத்துவிட்டால் அதற்காக உலகமெங்கும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாடுகள் பாதிக்கப்படும் என்று பலவிதமான சென்டிமென்டுகள் சொல்லப்பட்டு அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணததில் கிட்டத்தட்ட 35 இலட்சம் கோடி ரூபாயை கொடுத்து இந்நிறுவனங்களை மீட்கப் போகிறது. அதற்காக புஷ் கையெழுத்திட்டு பாராளுமன்றத்திலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் அரசுடைமையாக்கப் படவும் இருக்கின்றன. இந்த நிவாரணப் பணத்தை அந்த நிறுவனங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம, அமெரிக்க சட்டப்படி கணக்கு தணிக்கை தேவையில்லை, என்றெல்லாம் சலுகைகள் வேறு!

எல்லாவற்றையும் தனியார் மயம் என்று பேசியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? இழப்பு என்று வந்ததும் அரசு தலையிட்டு பணம் கொடுத்து அரசுடைமையாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரு சோசலிச நாட்டில் அனைத்தும் மக்களுடைமையாக்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி செய்யும் போது மட்டுமே இந்த பிரச்சினைகளை வரவிடாமல் செய்ய முடியும் என்று மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தை வன்மத்தோடு எதிர்த்த நாடு தனது முதலாளிகளைப் பாதுகாக்க நிறுவனங்களை அரசுடைமையாக்குகிறது என்றால் இதுதான் வரலாற்றின் கவித்துவமான நீதி!

இந்தப் பொருளாதாரச் சரிவால் அமெரிக்காவின் நிதி, காப்பீடு, வங்கி நிறுவனங்களுக்கு அவுட் சோர்சிங் செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதி இலாபத்தை இழக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் 25,000பேருக்கு மேல் வேலையிழப்பும் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்குறைப்பு, செலவு குறைப்பு என்று மாற்றப்படும் ஐ.டி துறையின் பொற்கால வாழ்க்கையை இனி மலரும் நினைவுகளாய் பாடவேண்டியதுதான். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் பலநாடுகளிலும் சேவைத் துறைசார்ந்த நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சீர்குலைவால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முதலாளித்துவ அறிஞர்களே கணிக்கிறார்கள். அடுத்த பலிகடா யார் என்று காத்திருந்து பார்ப்போம். ஓவர் நைட்டில் பில்லியனரான மொள்ளை மாறிகளெல்லாம் அதே ஓவர் நைட்டில் தெருவுக்கு வருவதும் நடக்கப் போகிறது. ஆனாலும் மேற்கண்ட திவாலான நிறுவனங்களின் முதலாளிகளும், தலைமை நிர்வாகிகளும் திவாலாவதற்கு முன்னால் எச்சரிக்கையாக முடிந்த அளவை சுருட்டியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதையெல்லாம் யார் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பது? பின்லேடனையே இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இதில் பணலேடன்களை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பது?

பூச்சி மருந்து குடித்த விவசாயிகளைக் கொலை செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் நாயகன் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அவல நிலைக்காக கண்ணீர் விடுகிறார். ஏதாவது செய்து உதவ வேண்டுமே எனத் துடிக்கிறார். அமெரிக்கா பொருளாதாரத்தைச் சூறாவளி தாக்கியிருக்கும் இச்சூழலில்தான் இந்தியவை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 123 ஒப்பந்தம் ஒரிரு நாட்களில் நிறைவேறப் போகிறது. எல்லா வகை நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் இவ்வொப்பந்தம் காலாவதியான அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக இந்திய மக்களின் சில இலட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்காவுக்கு தாரை வார்ப்பதோடு, இறையாண்øமையையும் சேர்த்துக் கொடுக்கிறது. மட்டுமல்ல அமெரிக்காவின் நலனுக்கு உட்பட்டு இந்தியா செயல்படுகிறது என்று ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் மதிப்பீடு செய்து இந்த ஒப்பந்தத்தை அமல் படுத்துவராம். இது பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் விரிவஞ்சி இங்கே தவிர்க்கிறோம். அமெரிக்காவின் தெற்காசிய பேட்டை அடியாளாக இந்தியா மாறப்போவது மட்டும் உறுதி. எதிர்காலத்தில் ஈரானின் மீது அமெரிக்கா படையெடுக்கும் பட்சத்தில் இந்தியா அதன் இராணுவத்தளமாக செயல்படுவது நிச்சயம். இந்திய அரசில் இருக்கும் சில அமெரிக்க கைக்கூலிகளால் இது சாத்தியாமாயிருக்கிறது.

இவ்வொப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அம்பானி முதலான தரகுமுதலாளிகள் பாராளுமன்ற வியாபாரத்தில் இறங்கி காரியத்தை சாதித்தார்கள். அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு கட்சிகளும் ஒன்றுபட்டு ஆதரித்தார்கள். இடது சாரி கட்சிகள் மட்டும் வேறு வழியின்றி அதுவும் காலம் கடந்த எதிர்ப்பைக் காட்டினார்கள். கனிமொழி தி.மு.க சார்பில் சிங்கிற்கு மலர்க்கொத்து கொடுத்து ஒப்பந்தம் நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒட்டுமொத்த அரசியல் உலகும், இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்குவதற்கு கர்ம சிரத்தையோடு வேலை செய்திருக்கிறது என்பதைத்தான். ஆயினும் அமெரிக்காவைத் தாக்கிய பொருளாதாரச் சூறாவளி இந்தியாவையும் தாக்குவதற்கு அதிக காலம் பிடிக்காது. அப்போது இந்த இந்திய அடிமைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

பூலோக சொர்க்கமான அமெரிக்காவிலேயே தனியார் மயம், சந்தை, முதலாளித்துவ உற்பத்தி முறை, அபரிதமான இலாபம் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறது முதல் முறையல்ல. ஏற்கனவே 1930களில் உலகப் பெருமந்தம் என்ற பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடங்கி உலகமெங்கும் ஏழைகளை அழித்துச் சென்றது. அப்போது அமெரிக்காவில் ஒரு புறம் கஞ்சித் தொட்டி திறந்தும், மறுபுறம் விலை வீழ்ச்சியடைந்த கோதுமையை கடலில் கொட்டியும் நெருக்கடியை சமாளிக்க முயன்றார்கள். இப்போதோ அதை விட பன்மடங்கு நெருக்கடி வந்திருக்கிறது. தேவனே வந்து மீட்புப் பணி செய்தாலும் காப்பாற்ற முடியாத நெருக்கடி.

ஏழை நாடுகளைச் சுரண்டி தன் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கும் அமெரிக்க நெருக்கடியை மற்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் கவலையோடுதான் பார்க்கின்றன. இதனால் அந்த நாடுகளும் பாதிப்பு அடையும் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஜி எட்டு மாநாட்டிலேயே இதைப் பற்றி பேசி கூட்டாக நெருக்கடியை சமாளிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் நோபல் பரிசுபெற்ற பொருளாதார வல்லுநர்களை அதிபர்களாக நியமித்தாலும் இப்போதைய நெருக்கடி அவ்வளவு சுலபத்தில் தீர்ந்து விடாது. சந்தையின் பாசிசம் உருவாக்கிய அராஜகம் அதன் அழிவுகளை செய்து விட்டுத்தான் தணியும். எனினும் இறுதியில் இந்த அழிவுகளை சுமக்கப் போகிறவர்கள் உலகின் பெரும்பான்மையான மக்கள்தான். அவர்களைப் பற்றி கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இதுநாள் வரையிலும் அறியாமையில் உலகமயத்தை ஆதரித்து வந்த பலர் இனியாவது விழித்துக் கொண்டு எதிர்க்க வேண்டியது அவசியம். தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே உலகமயத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி. அந்த வழியை சாதிக்க வேண்டுமென்றால் அரசியல் களத்தில் வெல்லவேண்டும். உலகமயத்தை ஆதரித்து அமல்படுத்திவரும் அரசியல், முதலாளித்துவ வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டுவது ஒன்றே இந்த அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.

 

 

 1. தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே உலகமயத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி
  அந்த வழியை சாதிக்க வேண்டுமென்றால் அரசியல் களத்தில் வெல்லவேண்டும் –

  அருமையான கருத்துக்கள் தோழரே!

  காசுக்கொடுத்து வாங்கப்பட்ட குதிரைகளை (பாராளுமன்ற உறுப்பினர்களை) கொண்டு இயக்கப்படும் ‘பாராளுமன்ற ஆட்சி முறையை’ அடிப்படையாகக் கொண்ட- இந்திய அரசியல் களத்தில் வெல்வது எவ்வாறு என்று செயல் திட்டத்தை சிறிது விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

  அருமையான பதிவு..

 2. வினவு இது நியாயமா!

  அடுத்த மாசம்தான் ஒரு பிளாட் வாங்கலாம்னு நெனச்சேன் அத கெடுத்துப்புட்டீங்களே…
  எத்தன பேர் ஆசையில மண்ணள்ளி போட்டீங்ளோ?

  பொட்டி தட்டற பிரதர்ஸ் அன்ட் ஸிஸ்டர்ஸ்…

  டாக்ஸ குறைக்கறன்னு வூடு வாங்காதீங்க…அப்பால உங்கள பெயிலவுட் பண்ண யாரும் வரமாட்டாங்க

  ஹும் நாம வாடக வீடுதான்….

  பி.கு..
  ‘அதிகமா வாடக வாங்குனா அடிக்குறாங்களான்’..ங்குற மாதிரி எதாவது பதிவு போடுங்க ப்ளீஸ்

 3. நல்ல பதிவு தோழர். ஒரு சாதரண வீட்டு கடன் தொல்லையால்.. உலகில் உள்ள பல முன்னணி வங்கிகள் திவாலாகி இன்று அரசுடமை ஆகும் பொழுது.. இந்த பொருளாதார கட்டமைப்பு எவ்வளவு தூரம் தவறான கொள்கைகளின் அடிப்படையில் அமைந்து உள்ளது என்பது தெளிவு.
  //இதில் கொள்ளை இலாபம் அடித்தது யார், சுமாரன இலாபம் சுருட்டியது யார், நட்டமடைந்தது யார், மக்களுக்கு என்ன இழப்பு இன்னபிறவையெல்லாம் தேவ ரகசியங்கள். நமக்கு புரியாத உபநிடதங்களும் கூட.//
  சரியாய் சொன்னீர்கள் தோழர். முதலாளித்துவத்தில்… ஒருவனின் இழப்பு என்பது மற்று ஒருவனின் இலாபம்.. அப்படி இருக்கையில்.. இந்த இழப்பில் , இலாபம் சம்பாதித்தது யார்?
  அமெரிக்காவில் நட்டமாக காட்டப்படும் 700 பில்லியன் டாலர் பணம் நிதி சந்தையில் ஆவியாய் மறைந்து விட்டதா என்ன?

 4. சிறந்த கட்டுரை தோழர்,

  கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களிடம் முதலாளித்துவ அபாயங்கள் பற்றி பேசினால் உங்கள் தத்துவத்தை திணிப்பதற்காக வலிந்து கற்பனை செய்கிறீர்கள் என்று சொன்னார்கள். அவர்களே சமீப நாட்களாய் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் கற்பனை என்று சொன்னது கண்முன்னே வந்து நிற்கிறது.

  தோழமையுடன்,
  செங்கொடி

 5. I can see your concern in every word in this article.

  //உலகமயத்தை ஆதரித்து அமல்படுத்திவரும் அரசியல், முதலாளித்துவ வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டுவது // The million dollar question is who is that person??

  with regards
  Venkat Satheesh

 6. மிகச்சரியாக, தெளிவாக, இலகுதமிழில் கூறியிருக்கிறீர்கள், தோழர். இந்தியாவில் அமெரிக்கா பாணியில் பூரண சந்தை பொருளாதாரம் வர வேண்டும் என்று மக்களுக்கு வேப்பிலை அடித்துக் கொண்டிருந்த “இந்தியா டுடே” போன்ற சஞ்சிகைகள் தற்போது என்ன எழுதி சமாளிக்கப் போகின்றனவோ? இவ்வளவு காலமும் தனியார் மயத்தை ஆதரித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் தற்போது அதிர்ந்து போயிருக்கின்றனர். அதேநேரம் மௌனமாக நாங்கள் சொல்வதை கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
  http://kalaiy.blogspot.com/2008/10/blog-post.html

 7. //
  தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களைக் கண்டோரெல்லாம் “இனி எல்லாம் பிரைவேட்தான், பேஷ், பேஷ் ரொம்ப நன்னாகப் போறது” என்று சப்புக்கொட்டினர். கல்வி, காப்பீடு, சுகாதாரம், நிதி, அத்தனையிலும் தனியார் மயம் வெள்ளமென ஓடியது. அரசுக் கட்டுப்பாடுகள் எனும் கோட்டா ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு தாரளமயம் திறந்து விடப்பட்டது. கோக், பெப்சி முதல் எண்ணற்ற நுகர்வுப் பொருட்கள் ஒரு அடியில் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன.
  //

  ஆக‌, அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளின் ல‌ஞ்ச‌ ஊழ‌ல், திமிர்த்த‌ன‌ம், ர‌வுடித்த‌னத்தை நீங்க‌ளும் ஒப்புக்கொள்கிறீர்க‌ள்.

  கோக்கும், பெப்சியும் இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை அழித்து விட்ட‌து உண்மையே. ஆனால், கோக்கிட‌மும், பெப்சியிட‌மும் ல‌ஞ்ச‌ம் வாங்கி கொண்டு விவ‌சாய‌ நில‌ங்க‌ளை கைய‌க‌ப்ப‌டுத்திய‌து யார்? நில‌ம் த‌ந்த‌ விவ‌சாயிக்கு இழ‌ப்பீடு த‌ராம‌ல், அவ‌னை தாலுகா ஆஃபிசுக்கும் க‌ருவூல‌த்திற்கும் அலைய‌ விட்ட‌து யார்? கோக்கா? பெப்சியா? நீங்க‌ள் கொண்டாடும் அர‌சுத்துறை ஊழிய‌ர்க‌ள் அல்ல‌வா?

  //
  இப்படி உலகமயம் பூத்துக்குலுங்கிய நாட்டில்தான் இதே காலத்தில்தான் இந்த உலகமயக் கொள்கைகள் காரணமாக ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப் புறங்களில் வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களை அப்பிக் கொண்டனர்.
  //

  விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைக்கு கார‌ண‌ம் உல‌க‌ம‌ய‌மாக்க‌லா இல்லை விவ‌சாயிக‌ளுக்கு எந்த‌ அடிப்ப‌டி வ‌ச‌தி கூட‌ செய்து த‌ராத‌ அர‌சாங்க‌மா? குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு குளிர்சாத‌ன‌ சேமிப்பு கிட‌ங்கு கூட‌ செய்து த‌ராத‌ அர‌சாங்க‌மும், விவ‌சாயி என்றாலே பிச்சைக்கார‌ன் போல‌ விர‌ட்டும் அர‌சு ஊழிய‌ர்க‌ளும் கார‌ண‌மா இல்லை வால் ஸ்ட்ரீட் கார‌ண‌மா?

  ம‌ழை நீரை சேமிக்க‌ ஒரு அணை க‌ட்ட‌ காசு ஒதுக்கினாலும் அதில் கொள்ளை அடிக்கும் உங்க‌ள் அர‌சு அதிகாரி கார‌ண‌மா இல்லை மார்க‌ன் ஸ்டான்லி கார‌ண‌மா??

  //
  இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உலகமயம் என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதை திவாலான அர்ஜென்டினா, மெக்சிகோவும், 95களில் பொருளாதா பூகம்பங்களைச் சந்தித்த தென்கிழக்காசிய நாடுகளும் அவ்வப்போது எடுத்துக் காட்டின.
  //

  மீண்டும், அர்ஜென்டினா, மெக்சிகோவின் சிக்க‌லுக்கு உங்க‌ள் பேராத‌ர‌வை பெற்ற‌ அர‌சு அதிகாரிக‌ளே கார‌ண‌ம். ஊழ‌லில் இந்திய‌ அர‌சு அதிகாரிகளுக்கு எந்த‌ வித‌த்திலும் அவ‌ர்கள் குறைந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌.

  //
  ஆனால் மார்க்சியம் என்ற சமூக அறிவியல் மறையாது. ஆம். தற்பொது அந்த விதிப்படி உலக முதலாளித்துவத்தின் தலைமையிடமான அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசிகளை அளித்திருக்கின்றன.
  //

  இதை சொல்ல‌ மார்க்ஸ் எத‌ற்கு? Demand Vs Supply இதை விட‌ தெளிவாக‌ சொல்லும். எந்த‌ ஒரு பொருளுக்கும் தேவை குறையும் போது அது கீழே வ‌ர‌வே செய்யும். இதை நிறுவ‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

  //
  2001இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காய்தாவால் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு விமானப் போக்குவரத்து, சுற்றுலா என்று பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதை ஈடுகட்ட ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்தது அமெரிக்கா//

  அப்ப‌டியா? உங்க‌ளின் புல‌னாய்வு திற‌மை கே.ஜி.பியை மிஞ்சிவிட்ட‌து. பாராட்டுக்க‌ள்!

  //
  இந்நிலையில் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்த கடன் என்ற போதையை நிபந்தனைகள் இல்லாமல் நிதி நிறுவனங்கள் மூலம் அளித்தார்கள். ஏற்கனவே ஆளாளுக்கு பத்து கடன் அட்டைகள் வைத்திருக்கும் அமெரிக்காவில் இந்த புதிய கடன் வெள்ளமெனத் திறந்து விடப்பட்டது.
  //

  ம‌க்க‌ளின் வாங்கும் திற‌னை அதிக‌ப்ப‌டுத்த‌ எல்லாருக்கும் திற‌ந்து விட‌ப்ப‌ட்ட‌து உண்மையே. பொலிட் பீரோ மெம்ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் திற‌ந்து விட‌ப்ப‌ட‌வில்லை என்று ஒப்புக்கொண்ட‌த‌ற்கு ந‌ன்றி!

  //
  கொஞ்ச நாளைக்கு எல்லா அமெரிக்கர்களும் தின்று தீர்த்தார்கள்.
  //

  சூப்ப‌ர். சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ ம‌னித‌ர்க‌ள்!

  //
  மொத்தத்தில் ஊக வணிகமும், எதிர்பார்ப்பு வணிகமும், பங்குச்சந்தைச் சூதாட்டமும் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீர்க்குமிழ் உடைந்து விட்டது. முதலாளித்துவத்தின் இலாபம் தனக்குத் தானே தோண்டிக்கொண்டுள்ள சவக்கிடங்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
  //

  உங்க‌ள் ச‌ந்தோஷ‌த்திற்கு கார‌ண‌ம் இருக்கிற‌து. ஆனால், மார்க்கெட் ப‌ற்றி தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு எந்த‌ ஆச்ச‌ரிய‌மும் இல்லை. பிர‌ச்சினை இருக்கிற‌து என்று ஒப்புக்கொள்வ‌தே முத‌லாளித்துவ‌த்தின் வெற்றி தான்.

  //
  கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மார்க் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதைத் தொடர்ந்து உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமான் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின.
  //

  மெரில் லிஞ்ச் திவால‌க‌வில்லை. ம‌ற்றொரு வ‌ங்கியுட‌ன் இணைந்து விட்ட‌து. (Bank of America)

  //
  சரி தனியார் மயக் கொள்கைப் படி வல்லவன் வாழ்வான், முடியாதவன் சாவான் என்று விட வேண்டியதுதானே? அதுதானில்லை. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பல்லாயிரம் பேர் வேலையிழப்பர், பொருளாதாரம் சீர் குலையும், ஆடம்பர வாழ்க்கை மட்டுமல்ல அத்தியாவசிய வாழ்க்கையைக் கூட இழக்க நேரிடும், அமெரிக்கர்கள் நுகர்வைக் குறைத்துவிட்டால் அதற்காக உலகமெங்கும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாடுகள் பாதிக்கப்படும் என்று பலவிதமான சென்டிமென்டுகள் சொல்லப்பட்டு அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணததில் கிட்டத்தட்ட 35 இலட்சம் கோடி ரூபாயை கொடுத்து இந்நிறுவனங்களை மீட்கப் போகிறது. அதற்காக புஷ் கையெழுத்திட்டு பாராளுமன்றத்திலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் அரசுடைமையாக்கப் படவும் இருக்கின்றன. இந்த நிவாரணப் பணத்தை அந்த நிறுவனங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம, அமெரிக்க சட்டப்படி கணக்கு தணிக்கை தேவையில்லை, என்றெல்லாம் சலுகைகள் வேறு!
  //

  வ‌ல்ல‌வ‌ன் வாழ்வான் இல்லாத‌வ‌ன் சாவான் என்று விட்டுவிட‌லாம். ஆனால், அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் சென‌ட்ட‌ர்க‌ளின் உட‌மையாக்க‌ப்ப‌ட‌வில்லை. எவ்வ‌ள‌வு ப‌ண‌ம் த‌ர‌ப்ப‌ட்ட‌து, எந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு த‌ர‌ப்ப‌ட்ட‌து என்ப‌து வெளிப்ப‌டையாக‌ எல்லாரும் பார்க்க‌லாம். திற‌ந்த‌ ஜ‌ன‌ நாய‌க‌த்தின் அடையாள‌ம் அது தான்.

  //
  எல்லாவற்றையும் தனியார் மயம் என்று பேசியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? இழப்பு என்று வந்ததும் அரசு தலையிட்டு பணம் கொடுத்து அரசுடைமையாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரு சோசலிச நாட்டில் அனைத்தும் மக்களுடைமையாக்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி செய்யும் போது மட்டுமே இந்த பிரச்சினைகளை வரவிடாமல் செய்ய முடியும் என்று மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தை வன்மத்தோடு எதிர்த்த நாடு தனது முதலாளிகளைப் பாதுகாக்க நிறுவனங்களை அரசுடைமையாக்குகிறது என்றால் இதுதான் வரலாற்றின் கவித்துவமான நீதி!
  //

  அர‌சுடைமையான‌ நிறுவ‌ன‌ங்க‌ள் மீண்டும் த‌னியார் ம‌ய‌ம‌க‌லாம். அனைத்து ம‌க்க‌ளும் திட்ட‌மிட்ட‌ உற்ப‌த்தி என்ப‌து ந‌ல்ல‌தே. த‌வ‌றில்லை. ஆனால், அ ந்த‌ திட்ட‌த்தை, இல‌க்கை நிர்ண‌யிப்ப‌து யார்? ப‌த்து பொலிட் பீரோ மெம்ப‌ர்க‌ளா? அப்ப‌டி அவ‌ர்க‌ள் திட்ட‌மிட்டு செய்த‌ ர‌ஷ்யா சித‌றிய‌து ஏன்? அதை விடுங்க‌ள்.. எந்த‌ வேலையும் செய்யாம‌ல், வ‌ருட‌த்திற்கு 20% போன‌ஸ், 50% ஊதிய‌ உய‌ர்வு என்று மாத‌ம் மூன்று நாட்க‌ள் நாட்டை ஸ்த‌ம்பிக்க‌ செய்யும் அர‌சு ஊழிய‌ர்க‌ள் என்ன‌ வித‌மான‌ உற்ப‌த்தி செய்கிறார்க‌ள்??

  //
  அமெரிக்கா பொருளாதாரத்தைச் சூறாவளி தாக்கியிருக்கும் இச்சூழலில்தான் இந்தியவை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 123 ஒப்பந்தம் ஒரிரு நாட்களில் நிறைவேறப் போகிறது. எல்லா வகை நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் இவ்வொப்பந்தம் காலாவதியான அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக இந்திய மக்களின் சில இலட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்காவுக்கு தாரை வார்ப்பதோடு, இறையாண்øமையையும் சேர்த்துக் கொடுக்கிறது.
  //

  இதில் என்ன‌ பிர‌ச்சினை என்றே தெரிய‌வில்லை. ச‌ரி, ஒப்ப‌ந்த‌ம் பிடிக்காவிட்டால் வெளியே வ‌ந்து விட‌வேண்டிய‌து தானே? இறையாண்மையையும், பொறையாண்மைய‌யும் ஏன் விட்டுக்கொடுக்க‌ வேண்டும்?

  தொழில் நுட்ப‌த்தை வாங்கியே ஆக‌ வேண்டும் என்ப‌தும் க‌ட்டாய‌மில்லை. வாங்க‌லாம் என்ப‌து தான் ஒப்ப‌ந்த‌ம். இந்தியாவிற்கு வ‌ச‌தி இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளே உருவாக்கிக் கொள்ள‌லாம். எந்த‌ த‌டையுமில்லை.

  //
  அமெரிக்காவின் நலனுக்கு உட்பட்டு இந்தியா செயல்படுகிறது என்று ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் மதிப்பீடு செய்து இந்த ஒப்பந்தத்தை அமல் படுத்துவராம்.
  //

  ஏன், இந்தியாவில் இத்த‌னை கேள்வி கேட்கும்போது அமெரிக்காவில் கேட்க‌க்கூடாதா என்ன‌?

  //
  எதிர்காலத்தில் ஈரானின் மீது அமெரிக்கா படையெடுக்கும் பட்சத்தில் இந்தியா அதன் இராணுவத்தளமாக செயல்படுவது நிச்சயம். இந்திய அரசில் இருக்கும் சில அமெரிக்க கைக்கூலிகளால் இது சாத்தியாமாயிருக்கிறது.
  //

  ஈரானின் மீது அமெரிக்கா ப‌டையெடுக்க‌ கார‌ண‌மிருப்பின் அதை ஆத‌ரிப்ப‌தில் த‌வ‌றில்லை. ஆனால், ஆத‌ரிப்ப‌தும், எதிர்ப்ப‌தும் இந்தியாவின் உரிமை. அது இப்ப‌வே போச்சி என்று எப்ப‌டி சொல்கிறீர்க‌ள்? அமெரிக்க‌ கைக்கூலிக‌ள் இருப்ப‌து போல் இரானின் கைக்கூலிக‌ளும் இருக்க‌ மாட்டார்க‌ளா என்ன‌?

  //
  ஏற்கனவே 1930களில் உலகப் பெருமந்தம் என்ற பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடங்கி உலகமெங்கும் ஏழைகளை அழித்துச் சென்றது. அப்போது அமெரிக்காவில் ஒரு புறம் கஞ்சித் தொட்டி திறந்தும், மறுபுறம் விலை வீழ்ச்சியடைந்த கோதுமையை கடலில் கொட்டியும் நெருக்கடியை சமாளிக்க முயன்றார்கள். இப்போதோ அதை விட பன்மடங்கு நெருக்கடி வந்திருக்கிறது. தேவனே வந்து மீட்புப் பணி செய்தாலும் காப்பாற்ற முடியாத நெருக்கடி.
  //

  ஆனால், அது மீண்டு வ‌ந்திருக்கிற‌து. அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.

  //
  சந்தையின் பாசிசம் உருவாக்கிய அராஜகம் அதன் அழிவுகளை செய்து விட்டுத்தான் தணியும்.
  //

  பாசிச‌ம், அராஜ‌க‌ம்…. இவ்வ‌ள‌வு தான் வார்த்தைக‌ளா இல்லை வேறு ஏதேனும் இருக்கிற‌தா?

  //
  எனினும் இறுதியில் இந்த அழிவுகளை சுமக்கப் போகிறவர்கள் உலகின் பெரும்பான்மையான மக்கள்தான். அவர்களைப் பற்றி கவலைப்பட யார் இருக்கிறார்கள்?
  //

  ந‌ட‌க்கிற‌ பிர‌ச்சினைக‌ளை க‌ண்டு மிகுந்த‌ ச‌ந்தோச‌த்துட‌ன் இருப்ப‌திலிருந்து அது நீங்க‌ள் இல்லை என்ப‌து தெளிவாக‌ தெரிகிற‌து.

  //
  இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இதுநாள் வரையிலும் அறியாமையில் உலகமயத்தை ஆதரித்து வந்த பலர் இனியாவது விழித்துக் கொண்டு எதிர்க்க வேண்டியது அவசியம். தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே உலகமயத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி. அந்த வழியை சாதிக்க வேண்டுமென்றால் அரசியல் களத்தில் வெல்லவேண்டும். உலகமயத்தை ஆதரித்து அமல்படுத்திவரும் அரசியல், முதலாளித்துவ வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டுவது ஒன்றே இந்த அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.
  //

  ஆக‌, இது வ‌ரையில் ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் அறியாமையில் ஆத‌ரித்து விட்டார்க‌ள்.. பிதாவே, இவ‌ர்க‌ளை ம‌ன்னித்து விடும்..இவ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்வ‌து இன்ன‌தென்று அறியார்… நீங்க‌ள் எப்பொழுது ஏசு ஆனீர்க‌ள்?

  ஒரு தேசிய‌ பொருளாத‌ர‌த்தை க‌ட்டிய‌மைப்ப‌தில் த‌வ‌றில்லை. ஆனால், அது அர‌சு வ‌ங்கி ஊழிய‌ர்க‌ளின் ஏச்சுக‌ளையும் பேச்சுக‌ளையும் கேட்டுக்கொண்டு இருக்க‌ வேண்டும், அர‌சு ஊழிய‌ர்க‌ளின் பொறுப்ப‌ற்ற‌ த‌ன‌த்துக்கு போன‌ஸ் கொடுக்க‌ வேண்டும் என்று இருந்தால், அது சில‌ க‌ம்பெனிக‌ளை ம‌ட்டும் அல்ல‌, ஒரு நாட்டையே திவாலாக்கி விடும்….க‌ம்யூனிச‌த்தை க‌ரைத்து குடித்த உங்க‌ளுக்கு சொல்ல‌ வேண்டிய‌தில்லை… ர‌ஷ்யாவும், 90க‌ளுக்கு முந்திய‌ இந்தியாவும் போதும்….

  இந்தியாவின் மிக‌ முக்கிய‌ பிர‌ச்சினை ப‌ன்னாட்டு க‌ம்பெனிக‌ளோ, அமெரிக்க‌ வ‌ங்கிக‌ளோ இல்லை… நாட்டின் வ‌ருவாயில் சுமார் எண்ப‌து ச‌த‌வீத‌த்தை ஊதிய‌மாக‌ பெற்றுக்கொண்டு, ஊழ‌லில் திளைக்கும் அர‌சு ஊழிய‌ர்க‌ளே.. நீங்க‌ள் சொல்லும் அந்த‌ அணி திர‌ட்ட‌லில் இந்த‌ ஊழ‌ல் பெருச்சாளிக‌ளை சேர்க்காம‌ல் இருந்தால் அது மிக‌ ந‌ன்மையாக‌ அமையும்.. ஆனால், என்ன‌ கொடுமை..கார‌ல் மார்க்சையும், க‌ம்யூனிச‌த்தையும் துணைக்கு அழைப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் ஊழ‌லில் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் வாங்கியிருக்கிறார்க‌ளே?

  பின் குறிப்பு: முத‌லாளித்துவ‌, அமெரிக்க‌ அடிவ‌ருடி என்று நீங்க‌ள் அழைக்குமுன், நானே சொல்கிறேன்.. நான் முத‌லாளித்துவ‌த்தை ஆத‌ரிக்கிறேன்..இரான், ச‌வுதி அரேபியா, இராக், இந்தியாவை விட‌ த‌னிம‌னித‌ சுத‌ந்திர‌ம் அதிக‌ம் என்ப‌தால் அமெரிக்காவையும் ஆத‌ரிக்கிறேன். நான் அமெரிக்க‌ன் அல்ல‌.

 8. நண்பர் “அது சரி”…
  1. அரசு ஊழியர்கள் குற்றமற்றவர்கள் என்றும் இப்பொழுது உள்ள அரசு துறைதான் சிறந்தது என்றும் வினவு குறிப்பிட்டதாக எனக்கு எங்கும் தெரியவில்லை

  2. விவசாயின் வாழ்க்கையை தீர்மானிப்பது இந்திய அரசு மட்டும்தான் என்றால்.. உலக வர்த்தக கழகமும், உலக வங்கியும் தான் கடன் கொடுக்கும் போதெல்லாம் விவசாயத்திற்கான மானியத்தை வெட்ட சொல்லி ஆணை இடுகிறதே.. அது எதற்க்காக..?

  3. உங்களை போன்ற ஏமாளிகள், எல்லா அரசியல் வாதியும் ஊழல் செய்கிறான் என்று தெரிந்தும் , மீண்டும் மீண்டும் ஒட்டு போட்டு பதவிக்கு கொண்டு வருவது ஏனோ?

  4. எதோ அரசு அதிகாரி மட்டும் தான் அணை கட்டுவதில் இருந்து சாலை அமைப்பது வரை ஊழல் செய்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது.. உங்களின் அரசியல் சட்டமும், நீதித் துறையும்… முக்கியமாக அரசியல் வாதியும் என்ன செய்து கொண்டு இருகிறார்கள்..

  5. Demand Vs Supply மட்டும்தான் பிரச்சினை என்றால் அமெரிக்காவில் நட்டமடைந்ததாக சொல்லப்படும் 700 பில்லியன் டாலர் எங்கு சென்றது.. ? சாதரண வீட்டுக் கடன் எப்படி உலகின் பல பகுதிகளில் நட்டத்தை ஏற்படுத்தியது.. இங்கு நண்பர் சொல்லும் முதலாளித்துவ குருமார்கள் இதை கணிக்காமல் எங்கு சென்றனர்..?

  6. 24 மணி நேரமும் சந்தை நிலவரத்தை தெரிவிக்கும் உங்களின் முதலாளித்துவ செய்தி நிறுவனங்களிடம் போய் சொல்லுங்கள் Demand Vs Supply என்ற ஒரு சுலபமான கருத்துக்கு எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம் என்று? பிறகு மார்க்ஸ் சொன்னதை பற்றி பார்க்கலாம்…

  7. //மெரில் லிஞ்ச் திவால‌க‌வில்லை. ம‌ற்றொரு வ‌ங்கியுட‌ன் இணைந்து விட்ட‌து// இதற்க்கு என்ன பொருளோ? திவாலான வங்கிகளுக்கு இரண்டே வழிகள் தான் ஒன்று ,அரசுடமை ஆக்குவது… இரண்டு, திவாலான வங்கியை மற்று ஒரு வங்கி வாங்குவது.. இங்கு நடந்து உள்ளது இரண்டாவது வகை..

  8. எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதை வெளிப்படையாக பார்க்கலாம் என்றால்.. நீங்கள் சொல்லும் வால் தெரு முதலாளிகளின் ஊழல் தான் இந்த நிதி சரிவுக்கு காரணம் என்று குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் சொல்கிறது.. இந்த வெளிப்படை, ஊழலில் மட்டும் தெரியாதது ஏனோ?

  9. தனியார் நிறுவனத்தில் பல ஆண்டுகளாய் நிரந்தரமாக்கப் படாமல் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலார்களை பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏனோ? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யாமல் அவர்களின் உரிமைக்காக எப்படி போராடுவது என்பதை.. நண்பர்.. Demand Vs Supply போல் விளக்கினால் நலம்.

  10. //ஆனால், அது மீண்டு வ‌ந்திருக்கிற‌து. அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.// மீண்டு வந்தது.. பல நாடுகளின் இயற்க்கை வளங்களை சூறையாடி, புதிய புதிய சந்தைகளை உருவாக்கியதால்.. அது ஒரு போதும் முதலாளித்துவ கட்டமைப்பின் வெற்றி அல்ல..

  11. //இந்தியாவின் மிக‌ முக்கிய‌ பிர‌ச்சினை ப‌ன்னாட்டு க‌ம்பெனிக‌ளோ, அமெரிக்க‌ வ‌ங்கிக‌ளோ இல்லை… நாட்டின் வ‌ருவாயில் சுமார் எண்ப‌து ச‌த‌வீத‌த்தை ஊதிய‌மாக‌ பெற்றுக்கொண்டு, ஊழ‌லில் திளைக்கும் அர‌சு ஊழிய‌ர்க‌ளே..//
  அப்படியா.. அரசு ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள் என்பதை இங்கு யாரும் மறுக்கவில்லை.. தவறு செய்தால் தண்டனை கொடுக்கும் உங்களது அரசியல் சட்டம் என்ன இன்னும் எழுதப்படவே இல்லையா? தேர்தலில் போட்டியிடும் எல்லா அரசியல் வாதியும் 24 காரட் தங்கமோ?

  12. அரசு துறையில் மட்டும்தான் ஊழல் என்றால், தனியார் நிறுவனங்கள் எல்லாம் புனிதமான நிறுவனங்களோ?
  தொழிலார்களை நிரந்தர மாக்காமல் வேலை வாங்குவது..
  அவர்களை கொத்தடிமை போல் 16 மணி நேரம் வேலை வாங்குவது..
  எந்த வித அடிப்படை வசதியும் செய்து தராமல் இருப்பது..

  13. ஒரு சாதாரண இந்திய குடிமகன் , இந்தியாவின் சராசரி மாத ஊதியத்தில் வாழும் ஒருவன் தனியார் மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? அதற்கான பணம்தான் அவனிடம் இருக்குமா? பணம் இருக்கிறவனின் உயிர் மட்டும் உயர்ந்ததா என்ன? ஏன் அவனுக்கு மட்டும் சிறந்த மருத்துவ சேவை…? அரசு மருத்துவமனையில் ஊழல் என்றால் அதை தடுக்க இயலாத இந்த அரசியல் அமைப்பு இருந்து என்ன பயன்…

  14. இறுதியாக என் கருத்து என்னவென்றால் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும், அரசு ஊழியர்களையும், அதற்க்கு வழிவகுக்கும் அரசியல் சட்டத்தையும் தூக்கி எறிவோம்.. மக்களை ஒன்று திரட்டி போராடி மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டி அமைப்போம்..

 9. அரசு ஊழியர் ஊழல் செய்தால் அதை களைவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல்.. அல்லது அதை தண்டிக்காத அரசியல் சட்டத்தை மற்ற முயலாமல்…தனியார் துறைதான் சிறந்தது என்று வாதிடும் வேடிக்கையை என்னவென்று சொல்வது.. தனியார் துறையில் ஒரு தனி நபர், அரசு ஊழியர் செய்த அதே ஊழலை செய்தால்.. நண்பர் மீண்டும் அரசு துறையை ஆதரிப்பாரோ?
  ஊழல் எவ்வாறு ஏன் உருவாகிறது என்று ஆராயாமல்.. அதற்கு மாற்று தனியார்தான் என்று கூறுகிறார்… தனியாரில் மட்டும் ஊழல் இல்லாமல் உள்ளதா என்று நண்பர் “அது சரி” விளக்கட்டும்..
  பணம் , அதிகாரம் உள்ளவன் தப்பித்துக்கொள்ள வழி செய்யும் இந்த சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பு உள்ள வரை.. தனியாராக இருந்தாலும், அரசு ஊழியராக இருந்தாலும் ஊழல் இருந்தே தீரும்..

 10. //ஒரு சாதாரண இந்திய குடிமகன் , இந்தியாவின் சராசரி மாத ஊதியத்தில் வாழும் ஒருவன் தனியார் மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? அதற்கான பணம்தான் அவனிடம் இருக்குமா? பணம் இருக்கிறவனின் உயிர் மட்டும் உயர்ந்ததா என்ன? ஏன் அவனுக்கு மட்டும் சிறந்த மருத்துவ சேவை…?//

  மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாமே?

 11. அது சரி நண்பர் அது சரி,

  ஊர்ல சின்னப் பசங்க கூட ஒரு கேள்வி கேப்பாங்க, கல்லால எறிஞ்சா கல்ல அடிப்பியா? எறிஞ்சவன அடிப்பியா?ன்னு.

  எல்லாத்துக்கும் அது சரி அதுசரின்னு போறதை விட எது சரின்னு கேட்டுப்பாருங்க அப்புறம் உங்களுக்கே புறியும்.

  தோழமையுடன்,
  செங்கொடி

 12. அது சரி நண்பருக்கு பதிலளித்த தோழர் பகத்துக்கும் செங்கொடிக்கும் நன்றிகள். தோழர் பகத்தின் பதில்களில் முன்பிருந்ததைவிட முதிர்ச்சியும் பொறுமையும் கூடியிருக்கிறது குறித்து மகிழ்ச்சி. ஆனாலும் அது சரி நண்பர் இதற்கெல்லாம் மசிவாரா என்று தெரியவில்லை. வாய்ப்பிருந்தால் இது குறித்து மீண்டும் விவாதிப்போம்.ஆனால் நாம் விவாதிப்பதற்குள் அமெரிக்காவிலிருந்து வரும் குண்டு வெடிப்பு போன்ற செய்திகள் அதற்கு அவசியம் இல்லாம் செய்து விடும் போலிருக்கிறது. நண்பர் அதுசரி அமெரிக்க திவால் குறித்த இணையத்தளங்களை பார்க்கலாம். நமது பதிலைவிட நடந்து கொண்டிருக்கும் யதார்த்தம் கண்ணைத் திறக்கலாம். நன்றி.

 13. முதலாளித்துவம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேலே கொண்டு வரும் முயற்சி, அதில் தவறுகள் நடக்கும். ஏழைகளை ஏழைகளாகவே வைத்து இருப்பதை விட பணக்காரன் ஆக்கும் முயற்சி தவறல்ல. சமீபத்திய இந்த பிரச்சினையில் நான் இழந்தது அதிகம், ஆனால் தவறுகள் சரி செய்யப்படவேண்டுமே தவிர முயற்சி கைவிடப்படக்கூடாது என நினைக்கிறேன். நண்பர் அது சரியின் கருத்தோடு பெரிதும் உடன்படுகிறேன்.

 14. நண்பர் பகத்,

  //
  நண்பர் “அது சரி”…
  1. அரசு ஊழியர்கள் குற்றமற்றவர்கள் என்றும் இப்பொழுது உள்ள அரசு துறைதான் சிறந்தது என்றும் வினவு குறிப்பிட்டதாக எனக்கு எங்கும் தெரியவில்லை
  //

  தனியார் துறை வேண்டாமென்றால், மீதி இருப்பது அரசுத்துறை தான். (இல்லை வேறு ஏதேனும் துறையை மார்க்ஸ் கண்டுபிடித்து விட்டாரா?). தனியார் துறையையும், அதன் அடிப்படையான முதலாளித்துவத்தையும் கண்டிக்கும் நண்பர் வினவு, அரசுத்துறை ஊழியர்கள் குறித்து கண்டித்து எதுவும் பதிவிட்டதாக தெரியவில்லை. சொல்லாத வார்த்தைகளுக்கும் பொருளுண்டு.

  //
  2. விவசாயின் வாழ்க்கையை தீர்மானிப்பது இந்திய அரசு மட்டும்தான் என்றால்.. உலக வர்த்தக கழகமும், உலக வங்கியும் தான் கடன் கொடுக்கும் போதெல்லாம் விவசாயத்திற்கான மானியத்தை வெட்ட சொல்லி ஆணை இடுகிறதே.. அது எதற்க்காக..?
  //

  நீங்க‌ள் முத‌லாளித்துவ‌த்தையும், அர‌சிய‌லையும் க‌ல‌க்கிறீர்க‌ள். மானிய‌த்தை வெட்டுவ‌த‌ற்கும் மார்க‌ன் ஸ்டான்லிக்கும் தொட‌ர்பில்லை. த‌விர‌, நீங்கள் எந்த‌ வ‌ங்கியில் க‌ட‌ன் வாங்கினாலும் நிப‌ந்த‌னைக‌ளை த‌விர்க்க‌ முடியாது. அது உல‌க‌ வ‌ங்கியாக‌ இருந்தாலும்..

  //
  3. உங்களை போன்ற ஏமாளிகள், எல்லா அரசியல் வாதியும் ஊழல் செய்கிறான் என்று தெரிந்தும் , மீண்டும் மீண்டும் ஒட்டு போட்டு பதவிக்கு கொண்டு வருவது ஏனோ?
  //

  ஏமாளி என்ற‌ புதிய‌ ப‌ட்ட‌த்திற்கு ந‌ன்றி.. கோமாளி என்ற‌ ப‌ட்ட‌ம் த‌ராம‌ல் போனீர்க‌ளே, அதுவ‌ரையிலும் ந‌ன்றி. (அது அடுத்த‌ ப‌திவில் இருக்கு என்கிறீர்க‌ளா?)

  த‌னிப்ப‌ட்ட‌ முறையில், நான் எந்த‌ க‌ட்சிக்கும் இது வ‌ரை ஓட்டுப்போட்ட‌து இல்லை. போட‌க்கூடாது என்றில்லை, ஆனால், பொறுக்கிக‌ளும், மொல்ல‌ மாறிக‌ளும், கொலை வ‌ழ‌க்கில் த‌லை ம‌றைவான‌வ‌ர்க‌ளும், மோச‌டி/க‌ற்ப‌ழிப்பு வ‌ழ‌க்கில் சிறையில் இருப்ப‌வ‌ர்களும், காலில் விழும் சுய‌ம‌ரியாதை செம்ம‌ல்க‌ளும் நிற்கும் தேர்த‌லில் எவ‌னுக்கு ஓட்டுப் போடுவ‌து என்று தெரிய‌வில்லை. அத‌னால், நான் ஓட்டுப்போட்ட‌தில்லை.

  //
  4. எதோ அரசு அதிகாரி மட்டும் தான் அணை கட்டுவதில் இருந்து சாலை அமைப்பது வரை ஊழல் செய்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது.. உங்களின் அரசியல் சட்டமும், நீதித் துறையும்… முக்கியமாக அரசியல் வாதியும் என்ன செய்து கொண்டு இருகிறார்கள்..
  //

  ஓ, நான் அர‌சிய‌ல் வியாதிக‌ளின் ஆதர‌வாள‌ன் என்று நினைத்து விட்டீர்க‌ளா? இல்லை, வின‌வு ப‌திவு, முத‌லாளித்துவ‌ம் ப‌ற்றி இருந்த‌தால், அர‌சிய‌ல் ப‌ற்றி நான் அதிக‌ம் சொல்ல‌வில்லை.

  ஆனால், ஊழ‌லுக்கு அர‌சிய‌ல் வாதியை விட‌, அதிகாரிக‌ளே அடிப்ப‌டையாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌து என‌து க‌ருத்து. அத‌ற்காக‌, அர‌சிய‌ல்வியாதிக‌ள் அப்பாவிக‌ள் என்று நான் சொல்ல‌வில்லை. வைர‌ஸ், ஒட்டுண்ணி… இதில் எது ந‌ல்ல‌து?

  அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் அர‌சு அதிகாரிக‌ளே. ச‌ட்ட‌த்தை அவ‌ர்க‌ள் ச‌ம்பாதிக்கும் வ‌ழியாக‌ நினைப்ப‌தால் தான் அர‌சிய‌ல்வியாதிக‌ளுட‌ன் கூட்ட‌ணி அமைத்து கொள்ளை அடிக்க‌ முடிகிற‌து.

  நீதித்துறை த‌க்க‌ ஆதார‌ங்க‌ள் இன்றி முடிவெடுக்க‌ முடியாது. அது அப்பாவிக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டு விட‌க்கூடாது என்ற‌ ந‌ல்ல‌ நோக்க‌த்தில் அமைக்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால், அதை அர‌சு அதிகாரிக‌ளும், அர‌சிய‌ல் வியாதிக‌ளும் த‌ங்க‌ள் வ‌ச‌திக்கு ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தால், நீதித்துறையால் பெரிதாக‌ எதுவும் செய்ய‌ முடியாது.

  //
  5. Demand Vs Supply மட்டும்தான் பிரச்சினை என்றால் அமெரிக்காவில் நட்டமடைந்ததாக சொல்லப்படும் 700 பில்லியன் டாலர் எங்கு சென்றது.. ? சாதரண வீட்டுக் கடன் எப்படி உலகின் பல பகுதிகளில் நட்டத்தை ஏற்படுத்தியது.. இங்கு நண்பர் சொல்லும் முதலாளித்துவ குருமார்கள் இதை கணிக்காமல் எங்கு சென்றனர்..?
  //

  700 பில்லிய‌ன் டால‌ர் எப்ப‌டி ந‌ஷ்ட‌மான‌து என்ப‌தை இங்கு விள‌க்குவ‌து க‌டின‌ம். சாதார‌ண‌ வீட்டுக்க‌ட‌ன் ஒரு உட‌ன‌டிக்கார‌ண‌மே.. அத‌ன் அடிப்ப‌டைக்கார‌ண‌ங்க‌ள் வேறு…Sub Prime mortgage is only a trigger.

  முத‌லாளித்துவ‌த்தில் குருமார்க‌ள் என்று யாரும் இல்லை. நீ த‌ப்பு செய்தால் உன‌க்கு ந‌ஷ்ட‌ம் அவ்வ‌ள‌வே.. இது என்ன‌ CCCP யா குருமார்க‌ளும், ஐடியால‌ஜிஸ்டுக‌ளும் இருப்ப‌த‌ற்கு… ஒரு பிஸின‌ஸ் பிராக்டிசில் ந‌ஷ்ட‌ம் அவ்வ‌ள‌வே… இதில் கொள்கை த‌வ‌றோ, இல்லை குருமார்க‌ளோ இல்லை.

  //
  6. 24 மணி நேரமும் சந்தை நிலவரத்தை தெரிவிக்கும் உங்களின் முதலாளித்துவ செய்தி நிறுவனங்களிடம் போய் சொல்லுங்கள் Demand Vs Supply என்ற ஒரு சுலபமான கருத்துக்கு எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம் என்று? பிறகு மார்க்ஸ் சொன்னதை பற்றி பார்க்கலாம்…
  //

  செய்திக‌ளை விற்ப‌து அவ‌ர்க‌ள் தொழில்.. அதை த‌ங்க‌ளுக்கு ஏற்ற‌ முறையில் விற்க‌த்தான் செய்வார்க‌ள்… அப்ப‌டியெல்லாம் செய்தி போட‌க்கூடாது என்று த‌ணிக்கை செய்ய‌, அமெரிக்காவில் க‌ம்யூனிஸ்ட் அர‌சு இல்லையே! த‌விர‌, இப்ப‌டி ப‌ல‌ செய்தி நிறுவ‌ன‌ங்க‌ள் செய்தி வெளியிடுவ‌தால் தான் ப‌ல‌ருக்கு பிர‌ச்சினை தெரிந்திருக்கிற‌து. ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌து போல் மூடி ம‌றைக்க‌வில்லையே?

  //
  8. எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதை வெளிப்படையாக பார்க்கலாம் என்றால்.. நீங்கள் சொல்லும் வால் தெரு முதலாளிகளின் ஊழல் தான் இந்த நிதி சரிவுக்கு காரணம் என்று குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் சொல்கிறது.. இந்த வெளிப்படை, ஊழலில் மட்டும் தெரியாதது ஏனோ?
  //

  ஊழ‌லா இல்லையா என்ப‌து இனிமேல் தான் தெரியும். இது வ‌ரை, ஊழ‌ல் என்று எந்த‌க்க‌ட்சியும் சொல்ல‌வில்லை, அத‌ற்கான‌ ஆதார‌ங்க‌ளும் இல்லை. ஊழ‌ல் ந‌ட‌ந்தால், அவ‌ர்க‌ள் வேர்ல்ட் காம், என்ரான் போல் சிறைக்கு அனுப்ப‌ப்ப‌டுவார்க‌ள்.

  //
  9. தனியார் நிறுவனத்தில் பல ஆண்டுகளாய் நிரந்தரமாக்கப் படாமல் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலார்களை பற்றி நீங்கள் வாய் திறக்காதது ஏனோ? அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யாமல் அவர்களின் உரிமைக்காக எப்படி போராடுவது என்பதை.. நண்பர்.. Demand Vs Supply போல் விளக்கினால் நலம்.
  //

  நிர‌ந்த‌ர‌மாக்க‌ப்ப‌டாம‌ல் வேலை செய்ய‌ கார‌ண‌ம் வேறு வேலை கிடைக்காத‌து தான். இந்த‌ சூழ் நிலையை த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்கின்ற‌ன‌.. ச‌ரி, அர‌சுத்துறை ஒழுங்காக‌ செய‌ல்ப‌ட்டால் அவ‌ர்க‌ள் ப‌ல‌ வேலை வாய்ப்பை ஏற்ப‌டுத்த‌ முடியும்..ஆனால் செய‌ல்ப‌டுகிற‌தா??

  உரிமைக்காக‌ அர‌சு ஊழிய‌ர்க‌ள் வேலை நிறுத்த‌ம்… முத‌லில் க‌ட‌மையை செய்ய‌ட்டும்..சும்மா செய்ய‌ வேண்டாம்..அத‌ற்கு ச‌ம்ப‌ள‌ம் வாங்கிக்கொண்டு தான் செய்கிறார்க‌ள்..

  நீங்க‌ள் எந்த‌ அர‌சு வ‌ங்கிக்காவ‌து போயிருக்கீங்க‌ளா இல்லியா? எப்ப‌னா எதுனா ஜி.ஹெச். ப‌க்க‌ம் போய் பாத்திருக்கீங்க‌ளா?? அங்க‌ வ‌ர்ற‌வ‌ங்க‌ளை உங்க‌ள் உரிமைப்போராளிக‌ள் எப்ப‌டி ந‌ட‌த்துறாங்க‌ன்னு ஒரு ப‌த்து நிமிச‌ம் பாத்தீங்க‌ன்னா, யாரோட‌ உரிமை நாச‌மாவுதுன்னு உங்க‌ளுக்கு தெரியும்.

  //
  10. //ஆனால், அது மீண்டு வ‌ந்திருக்கிற‌து. அதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.// மீண்டு வந்தது.. பல நாடுகளின் இயற்க்கை வளங்களை சூறையாடி, புதிய புதிய சந்தைகளை உருவாக்கியதால்.. அது ஒரு போதும் முதலாளித்துவ கட்டமைப்பின் வெற்றி அல்ல..
  //

  புதிய‌ ச‌ந்தைக‌ளை உருவாக்குவ‌து தான் முத‌லாளித்துவ‌த்தின் அடிப்ப‌டையே.. இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளில் முக்கிய‌ பெட்ரோல் முத‌ல் பொது ச‌ந்தையில் தான் விலை தீர்மானிக்க‌ப்ப‌டுகிற‌து. இதில் கொள்ளை எங்கு வ‌ந்த‌து??

  //
  11.
  அப்படியா.. அரசு ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள் என்பதை இங்கு யாரும் மறுக்கவில்லை.. தவறு செய்தால் தண்டனை கொடுக்கும் உங்களது அரசியல் சட்டம் என்ன இன்னும் எழுதப்படவே இல்லையா? தேர்தலில் போட்டியிடும் எல்லா அரசியல் வாதியும் 24 காரட் தங்கமோ?
  //

  அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டிய‌ அர‌சு ஊழிய‌ர்க‌ள் அதை செய்ய‌வில்லை என்ப‌து தான் பிர‌ச்சினையே!

  அர‌சிய‌ல்வியாதிக‌ள் த‌ங்க‌ம் என்று நான் எங்கும் சொல்ல‌வில்லை. என‌து முந்திய‌ ப‌திவு முழுக்க‌ முழுக்க‌ ச‌ந்தை பொருளாதார‌ம், கேப்பிட‌லிச‌ம் ப‌ற்றிய‌து..அதனால் அர‌சிய‌ல்வாதிக‌ள் ப‌ற்றி சொல்ல‌வில்லை.

  //
  12. அரசு துறையில் மட்டும்தான் ஊழல் என்றால், தனியார் நிறுவனங்கள் எல்லாம் புனிதமான நிறுவனங்களோ?
  தொழிலார்களை நிரந்தர மாக்காமல் வேலை வாங்குவது..
  அவர்களை கொத்தடிமை போல் 16 மணி நேரம் வேலை வாங்குவது..
  எந்த வித அடிப்படை வசதியும் செய்து தராமல் இருப்பது..

  //

  த‌னியார் துறை புனித‌ம் என்று நானும் சொல்ல‌வில்லை.

  தொழிலாள‌ர்க‌ளை நிர‌ந்த‌ர‌மாக்க‌ வேண்டும், கொத்த‌டிமை போல் ந‌ட‌த்தாம‌ல் இருக்க‌ வேண்டும், அடிப்ப‌டி வ‌ச‌திக‌ள் செய்து த‌ர‌வேண்டும்..

  த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் இதை செய்கிற‌தா என்ப‌தை க‌ண்காணிக்க‌ தான் உங்க‌ளின் உரிமைப் போராளிக‌ளான‌ லேப‌ர் ஆஃபிச‌ர் போன்ற‌ அர‌சு ஊழிய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர்… அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து உரிமைக்கு போராடும் முன், க‌டைமையை செய்ய‌வில்லை என்ப‌து உங்க‌ள் க‌ருத்தில்லிருன்தே தெரிகிற‌து..

  //
  13. ஒரு சாதாரண இந்திய குடிமகன் , இந்தியாவின் சராசரி மாத ஊதியத்தில் வாழும் ஒருவன் தனியார் மருத்துவமனையில் சென்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா? அதற்கான பணம்தான் அவனிடம் இருக்குமா? பணம் இருக்கிறவனின் உயிர் மட்டும் உயர்ந்ததா என்ன? ஏன் அவனுக்கு மட்டும் சிறந்த மருத்துவ சேவை…? அரசு மருத்துவமனையில் ஊழல் என்றால் அதை தடுக்க இயலாத இந்த அரசியல் அமைப்பு இருந்து என்ன பயன்…

  //

  நீங்க‌ளே இப்பிடி சேம் சைட் கோல் போட‌லாமா??

  உங்க‌ள் உரிமைப்போராளிக‌ள் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ஒழுங்காக‌ வேலை பார்த்தால் ம‌க்க‌ள் ஏன் க‌ட‌ன் வாங்கி த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்கிறார்க‌ள்? உயிருக்கு ப‌ய‌ந்து தானே??

  //
  14. இறுதியாக என் கருத்து என்னவென்றால் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும், அரசு ஊழியர்களையும், அதற்க்கு வழிவகுக்கும் அரசியல் சட்டத்தையும் தூக்கி எறிவோம்.. மக்களை ஒன்று திரட்டி போராடி மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டி அமைப்போம்..
  //

  பிர‌ச்சினையே அந்த‌ ச‌ர்வாதிகார‌ ம‌ன்ற‌ங்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்தும் ச‌ர்வாதிகாரி யார் என்ப‌து தான்..

  குப்புசாமி தெரு மக்க‌ளும், க‌ந்த‌சாமி தெரு ம‌க்க‌ளும் ஒரு பிர‌ச்சினையில் வேறு முடிவை தேடினால் அதை தீர்த்து வைக்கும் ச‌ர்வாதிகாரி யார்? அந்த‌ ச‌ர்வாதிகாரி ஊழ‌ல் செய்தால் அதை த‌டுப்ப‌து யார்?

  ====
  பின் குறிப்பு: ஸ்ஸ்ஸ் அப்பாடா…. உங்க‌ கேள்விக்கெல்லாம் ப‌தில் சொல்லி ரொம்ப‌ ட‌ய‌ர்டா இருங்குங்க‌ண்ணா…. மீதி கேள்விக்கு அப்புறமா ப‌தில் சொல்றேனே…

 15. //
  vinavu
  11:42 பிற்பகல் இல் அக்டோபர் 7, 2008
  அது சரி நண்பருக்கு பதிலளித்த தோழர் பகத்துக்கும் செங்கொடிக்கும் நன்றிகள். தோழர் பகத்தின் பதில்களில் முன்பிருந்ததைவிட முதிர்ச்சியும் பொறுமையும் கூடியிருக்கிறது குறித்து மகிழ்ச்சி. ஆனாலும் அது சரி நண்பர் இதற்கெல்லாம் மசிவாரா என்று தெரியவில்லை. வாய்ப்பிருந்தால் இது குறித்து மீண்டும் விவாதிப்போம்.ஆனால் நாம் விவாதிப்பதற்குள் அமெரிக்காவிலிருந்து வரும் குண்டு வெடிப்பு போன்ற செய்திகள் அதற்கு அவசியம் இல்லாம் செய்து விடும் போலிருக்கிறது. நண்பர் அதுசரி அமெரிக்க திவால் குறித்த இணையத்தளங்களை பார்க்கலாம். நமது பதிலைவிட நடந்து கொண்டிருக்கும் யதார்த்தம் கண்ணைத் திறக்கலாம். நன்றி.

  //

  நான் மகிழ்வேனா இல்லையா என்பதை குறித்து கவலை வேண்டாம் நண்பரே..

  எனக்கு இன்னமும் கம்யூனிசத்திலும், உங்கள் பதிவிலும் ஒப்புதல் இல்லை.

  ஆனால், உங்கள் கருத்துக்கள் மீதும், உங்கள் மீதும் பெரும் மதிப்பு உண்டு. அதனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.. நான் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்..அவ்வளவே!

 16. அமெரிக்கவிற்கு இது ஒரு சரிவு, முடிவு அல்ல. 1930களில் பெரிய வீழ்ச்சி, பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா அதனால் அழிந்துவிடவில்லை. ஐரோப்பா இரண்டாம் உலகப்
  போரில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐரோப்பா சிதறி சின்னாபின்னமாகவில்லை.கிழக்காசிய நாடுகள் 97-98ல் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. இருப்பினும் மீண்டன. இந்த சரிவிலிருந்து அமெரிக்க கற்க வேண்டிய பாடங்கள் உண்டு. அதை கற்று செயல்படுத்தாவிட்டால் இதே போன்ற சிக்கல்களை அடுத்து எதிர்கொள்ள வேண்டிவரும்.ஸ்வீடன் இது போன்ற நிலையை கண்டிருக்கிறது.
  ஜப்பானிலும் நிதிநிறுவனங்களின் நிலை மோசமாகி நெருக்கடி ஏற்ப்பட்டது.

  உலகமயமாதல் உட்பட சில காரணங்களால் அமெரிக்காவில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் மிக அதிகம், அது பிற நாடுகளிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பாவும் இதை எதிர்கொள்ளக்கூடிய வலு உள்ளவை.எனவே அமெரிக்காவும் திவால் ஆகாது, இந்தியாவும் அடிமை ஆகாது. நீங்கள் மனக்கோட்டை கட்டி அமெரிக்கா திவால் என்று எழுதிக் கொண்டிருக்கலாம்.உங்களையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

 17. hi athusari
  1. context is very important. if i scold you, i cant become a friend to your enemy for only this reason.
  2. if you get a loan from icici. But they ask your mother to be change as a call girl. How it is correct. how you differentiate captalism,feudalism,communism with politics. i cant understand ur theory which has invented by yourself.
  3. Why are you nominate in this election system as a candidate?
  4. your assessment on judicial dept is childhood yet. i can give many example. they are the partner of the corruption and scandle. they work for not people.
  5. u didnt understand about capitalist system also. so dont discuss the nextlevel of cccp and so kurumaars etc.

  if you loss in your business why the state (using tax on peoples) will give some componsation?
  who take the responsibility on this mistake?

  6. r u understand supply vs demand is not a news. y they boom it as a expanded stories. ok russia hadnt hide any news. if u got some info pls express here.
  9. worldbank restriction is the reason. misbehavor or buerocracy of govt employee is punishable. but rights shouldnot depend on how the resposibility to be done. two r different. so what is the soln. if you have a election system for govt employee post (with the rights of selection/recall), why we bother about it. y u spent for MP, Judges, collectors separately. if a reperesentative will select, he should write the rules, execute it as judge/govt employee
  10. has market has any democracy. nil, so robbery is sustain. in the case petrolium, b4 1973 the rate had defined by arabu shakes like our land-lords. After that it has done by sme higher broking captalist of usa. sadam like nationalist (so called) also do it for such time.
  11. already told the answer
  12. rights cant give to anyone. especially, a burocrate like labor officer cant give. however our nations’ freedom.
  13. you didnt understand the process. u worried about the set of peoples. if your project (in software) is failure, ur boss cant evaluate yours strenth instead of the strenth of the processing f the existing system. apply it to all the system. Boss do not post mordem their employee instead of proceess.
  14. if you go to doctor for problem in heart and lungs (dont deviate to separate for specialist) he give some medicine for separately. these medicines affect one organ. one organ has improve. but we need the two-in-one medicine and both organ to be improve. Here ur prority is doctor. my prority is cure of disease.

 18. what is the stength for europe and america.

  what is the relation between 1930s america and the role os usa in second worlwar. after 2nd worldwar europe compensate their lost by their colonies like india, etc. but now they want colonies for compensation.

  they can find any way to sustain.

 19. After a decade of >>unprecedented boom<>exceptional level of productivity,<>fictitious capital<>speculation on the share market and unsecured bank loans.<>uncontrolled development of the early 1920s<>>dump their produce onto markets in other countries,<<< to make a profit however small or at least recover some of their costs. To defend their own markets against saturation by this practice of dumping, every country in the world put up tariff barriers and quotas to block foreign imports.

  ___________________
  Instead of goods now the capital is dumped in other products like Future commodit, Petorl three four months before and Gold now.

  Prognostic sage

 20. ந‌ண்ப‌ர் அதுச‌ரி அவ‌ர்க‌ளுக்கு,

  http://www.senkodi.multiply.com
  என்னும் என்னுடைய‌ த‌ள‌த்தில் “விசிரிக‌ளின் நுனிப்புல்லும் முத‌லாளித்துவ‌த்தின் ஆணிவேரும்” என்ற‌ த‌லைப்பில் ஒரு ப‌திவிட்டுள்ளேன். அது உங்க‌ள் கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்கும் என‌ எதிர்பார்க்கிறேன். வ‌ருக‌.

  தோழ‌மையுட‌ன்,
  செங்கொடி

 21. அதுசரி அவர்களே ! நீங்கள் கூறுவது போல அரசு நிறுவனங்களில் இவ்வளவு ஊழல் இருப்பதற்கு காரணம், அரசு என்றுமே ஒரு ஆதிக்க கருவியாகவும், முதலாளிகளின் காரியக் கமிட்டியாக இருப்பதும் தான் !. ரஷ்யா ! ரஷ்யா என்று பிதற்றுகிறீர்களே ?? ரஷ்யாவினில் முதலாளிகள் ஸ்டாலினிற்குப் பிறகு கட்சிக்குள் ஊடுருவியது தான் ! இதைப் பற்றி, அசுரன் அவர்கள் விரிவாக எழுதி உள்ளார். http://poar-parai.blogspot.com/ என்ற முகவரிக்கு சென்றுப் பார்க்கவும்.

  இது எல்லாவற்றிற்குமான தீர்வு, மார்ஸிஸம் மட்டும்தான் !

  அறிவுடைநம்பி.

  http://purachikavi.blogspot.com

 22. இந்தியப் பொருளாதாரமும் அமெரிக்க போலுலதரத்தை போல் தன் உள்ளது. இங்கும் நிலங்களின் மதிப்பு அநியாயமாக உயர்துவிடது..

  இதை கேட்பது யார் சீர் செய்வது யார். இங்கும் கடன் வழங்கப்பட்டு பணம் இல்லாமலேயே இருபது போன்ற ஒரு நிலை நிலவுகிறது. இது மாறவேண்டும் .. பத்து வருடம் முன் இரண்டு லட்சம் விற்ற நிலத்தின் வில்லை இன்று அறுபது லட்சம்…. என்ன கொடுமை இது…………..

 23. Indian Private sector airliners started to reduce manpower/ reduce salaries, and asking govt to reduce tax on ATF. Minister of civil aviation asked MoP to reduce fuel prices and Private airline chiefs met MoF & MoP.some deal is there. why the govt not reduce petrol /diesel/LPG price since the crude price felt down to below $65.
  Democrazy by the people and is it for people?

 24. Private and public sectors both have problems that need to be monitored and regulated properly. They become dis-functional if not monitored. In public sector there is no accountability and no efficiency in the work performed. There is no concern for customer service. In private sectors it is the greed that is caused the downfall of capitalism.

  Companies that becomes multi-national and focused on increasing shareholder value every quarter don’t care about ethics. Even Govt becomes their servant.
  In the recent home mortgage burst the money moved from common men to few corporations ( or to few CEOs and share holders). Their sole focus was on getting the fees collected by closing mortgage loans.

  What ever creative these schemes where it was very apparent from the beginning that Interest-Only mortgages are white lie. It was designed to go unpaid at the expense of tax payer’s money.

  This is a lesson for free market czar’s and politicians. The corporations shouldn’t be allowed to grow bigger as a monster. The shareholder interest is only next to market ethics. It is the duty of Govt to ensure this.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க