Tuesday, October 8, 2024
முகப்புகலைகவிதைநவம்பர் புரட்சி தினக் கவிதைகள்

நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்

-

நவம்பர் புரட்சி

தன்னையறிந்து இன்பமுறு என் தோழா….

vote-012புரட்சி
வெறும் விருப்பமாக மட்டும்
வெளிப்படுவது போதுமா?
அது செயலாய்
உன்னிடம் மலரும் நாள் எது?
நவம்பர் ஏழு கேட்கிறது

உலகை மாற்றுதல் புரட்சி என்பது
உண்மைதான், ஆனால் –
அதற்கு முதலில் உன்னை மாற்றுதல்
வேண்டுமென்பதை உணர்வாயா?

தாய், தந்தை உருவில்
பாசவடிவாய் முதலாளித்துவ வாழ்க்கை
உனக்கு வழங்கப்படும்போது,

காதலின் காந்தவிழிகளால், சாந்த சொரூபமாய்
தனியுடமை உன்னை நெருங்கும்போது

எதிர்த்து போராடத் தயங்குபவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நறுமணம்?

தாழ்த்தப்பட்ட மக்களை
உறவாட அனுமதிக்காத வீடு…
போராடும் தொழிலாளி வர்க்கத்தை
மதிக்கத் தெரியாத சொந்தம் – இவைகளை
வெறுக்கத் தெரியாதவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் உணர்ச்சி பலம்?

வீடுகூட்ட, சோறாக்க, துணிதுவைக்க
பிள்ளைக்கு கால்கழுவ – என
அனைத்து வேலைக்கும் பெண்ணை ஒதுக்கிவைத்து,
அரசியல் வேலைக்கு மட்டும் தடுப்பு வைத்து
பிறவிசுகம் காணும் சராசரி ஆணாய்
உறுத்தலின்றி வாழ்பவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நன்னெறி?

கருவறை வரைக்கும் கைநீட்டிச் சுரண்டும்
ஏகாதிபத்திய தீவிரத்தின் இயல்பறிந்தும்
இயன்றவரை என்னால் முடிந்த வேலைகளைச் செய்கிறேன் – என
வரம்பிட்டுக் கொள்ளும் வாழ்க்கை முறையைத் தகர்க்காமல்
வருமா புரட்சி?

கொண்டாடும் உங்களிடம்
இந்த நவம்பர் ஏழு வேண்டுவது இதைத்தான்:

தயவுசெய்து உங்கள் பழைய உணர்ச்சிகளுக்கு
சலுகை வழங்காதீர்!

புரட்சிக் கடமைகளுக்கு தடையாய் வரும்
உங்கள் சொந்த உணர்ச்சிகளை
எதிர்க்கத் தயங்காதீர்!

தன்சுகம் மறுத்துத் துடித்துக் கொண்டிருக்கும்
நவம்பர் தியாகிகள் இதயத்தின்
தீராத ஆசை கேட்கிறதா உங்கள் செவிகளுக்கு?

தோழர்களே “புரட்சிக்கு உங்களிடம் இடம் கொடுங்கள்”

……………………………………………….

–     நவம்பர் புரட்சிநாள் வாழத்துக்களுடன் துரை.சண்முகம்.

லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்....

லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…

அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?

இதோ,
திசைகளைக் கிழிக்கும்
காற்று வீசுகிறது!
மண்டி கிடக்கும் குப்பைகள்
பறந்து போகின்றன…
ஜாரின் அரண்மனையை
சுற்றி வளைத்த குரல்கள்
நியூயார்க்கில் ஒலிக்கின்றன…
இராக்கில் எதிரொலிக்கின்றன!
பணப்பெட்டிகள்
கவிழ்ந்து விழ,
பல்லிளித்தவாறு நிற்கிறாய்!

“முதலாளித்துவம் ஒழிக!”
“கம்யூனிசமே வெல்லும்!”
உனது கோட்டைக்குள்ளேயே
முழக்கங்கள் அதிருகின்றன…
உலகெங்கும் எதிரொலிக்கின்றன!
கொக்கரித்த சிரிப்படங்கி
நீ முகம் சிவக்கிறாய்!
மேசைக்கடியில்
ஒளிந்து கொள்கிறாய்!
அவசரமாக ஆயுதங்களை
தொட்டுப் பார்க்கிறாய்…

நனவான கனவுகளின்
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை
நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
அவசரமாக அவற்றை
குழிதோண்டி புதைத்திருக்கலாம்.
எனினும்,
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
புதிய மைல்கற்கள்.
நனவுகளை நொறுக்கலாம்.
கனவுகளை என்ன செய்வாய்!

இதோ,
எதிர்காலத்தின் கனவுகள்
எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,
நொடிக்கொரு முறை அலை அலையாய்
எழுந்து ஆர்ப்பரிக்கின்றன…

எங்கள் போர் மீண்டும் துவங்குகிறது..
இதயங்கள் பலமாகத் துடிக்கின்றன..
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்
அக்டோபர் மீண்டும் மலர்கிறது*

இக்கவிதை இன்று நவம்பர்-7, ரசியப் புரட்சி நாளையொட்டி எழுதப்பட்டுள்ளது.

* என்.டொப்ரொன்ரவோவ் எழுதிய பாடல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 1927-ல் செர்கேய் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘அக்டோபர்’ திரைப்படத்தில், ரசியப் புரட்சியின் நாட்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் காட்சித் தொகுப்பிற்கு இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. இப்படம் ஜான் ரீடின் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்நாவலை அடிப்படையாகக் கொண்டது.

-போராட்டம்

……………………………………………….

நண்பனுக்கு ஓர் கடிதம்

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்

கலகம்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

  1. தோழர் வினவிற்கு,
    நவம்பர் 7 புரட்சி நாள் வாழ்த்துக்கள். இணையத்தில் புரட்சிகரகருத்துக்களை கொண்டு செல்வது சாதாரண விசயமல்ல.உங்களின் அணுகுமுறை பல மாற்றங்களை பலரிடத்திலும் கொண்டு வந்திருக்கிறது. எதிர்க்கருத்துடையவரைக்கூட விவாதக்களத்திற்குள் கொண்டு வரும் உங்களின் நடை மிகவும் பாராட்டத்தக்கது.
    புரட்சிகர கருத்துக்களை தொடர்ச்சியாக மக்களிடத்தில் கொண்டு செல்லும் வினவிற்கு புரட்சிக வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    கலகம்
    http://kalagam.wordpress.com/2009/11/07/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

  2. anaivarukum enathu nov 7 russia puratchi vazhthukal.ulagam muluvathilum ulla ulaikum makkalin samuga matrahirkaga russia puratchiyai nenjil niruthi poraduvom.hail revoulution….

  3. தோழர்களுக்கு நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்.

    முதலாளிகளின் கோட்டைக்கு உள்ளேயே, அவர்களின் சித்தாந்தத்தை புதை குழிக்கு அனுப்ப வளர்கிறது கம்யுனிச பூதம்.
    அமேரிக்காவில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை 10.2% இது அரசாங்க அறிக்கை, உண்மை நிலைமை இதைவிட மோசம் என பலரும் ஒப்புக்கொள்கின்றனர். ஒரு சில எண்களின் வளர்ச்சியை காட்டி பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என பூச்சாண்டி காட்டும் நபர்கள், அடிக்குறிப்பாக சொல்வது “இந்த பொருளாதார வளர்ச்சி வேலை இல்லாமல் நடக்கும் வளர்ச்சி (Jobless recovery) , இன்னும் சில காலங்கள் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்..” அட மூடனே, இப்படி பல லட்சம் மக்கள் வேலை இழந்து முன் எப்போதையும் விட இப்போது, தனது அடிப்படை தேவைகளுக்கே போராடும் நிலையில் இதனை ஏனடா வளர்ச்சி என்கிறாய் என்றால்… “எங்களுக்கு (நிறுவனகளுக்கு ) லாபமா, நட்டமா என்பது மட்டுமே வளர்ச்சியா இல்லையா என தீர்மானிக்கும், அதை விடுத்து எத்தனை சதவீத மக்களுக்கு வேலை இருக்கிறது, உணவு இருக்கிறது என்பதெல்லாம் தேவை இல்லாத ஒன்று ” என பதில் வருகிறது…
    கொட்டிகிடக்கும் மூலதனம் ஒரு புறம், வேலை இல்லாமல் தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மற்றொரு புறம் , இதுதான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

    நேசனல் ஜியோக்ரபிக் தொலை காட்சியில் காட்டில் வசிக்கும் பழங்குடி மனிதர்களை லண்டனுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டும் நிகழ்ச்சி வருகிறது. அந்த நிகழ்ச்சியில், பழங்குடி மக்கள் சாலையிலும், ரயில் நிலையங்களிலும் மக்கள் படுத்து உறங்குவதை கண்டு, அவர்களின் நகரத்து நண்பர்களிடம் கேட்கின்றனர், ஏன் இவர்கள் இங்கு உறங்குகின்றனர் என்று?, அதற்கு அவர், இவர்கள் அனைவரும், வீடு அற்றவர்கள், இவர்களுக்கு உறங்குவதற்கு என்று ஒரு வீடு கிடையாது என குறிப்பிடுகிறார். அதைக்கேட்ட பழங்குடியினர் மிகுந்த வருத்தம் அடைகின்றனர். இத்தனை செல்வங்கள், கட்டிடங்களும் நிறைந்த இந்த நகரில் (Manchestar) எப்படி ஒரு சிலர் ஒன்றுமே இல்லாமல் இருக்க இயலும்.. எங்களின் காடுகளில் நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம், ஒரு புதிய மனிதர் அங்கு வாழ விரும்பினால் நாங்கள் அனைவரும் அவருக்காக வீடு அமைப்போம், அதே போல் அவரும் மற்ற அனைவருக்காகவும் உழைப்பார்.. எங்களில் செல்வமற்றவர்கள் என யாரும் கிடையாது என கூறுகின்றனர். இறுதியில் அந்த விருந்தினரின் வீட்டில் இருந்து விடை பெறுவதற்கு முன்பு, நன்றி தெரிவுக்கும் முகமாக, பழங்குடியினர் தங்களது நடனத்தை சில நகரவாசி நண்பர்களின் முன்னிலையில் நடத்திய பிறகு.. இப்படி கூறுகிறார்..”உங்களின் உபசரிப்புக்கு நன்றி..நீங்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் (live with unity, peace and harmony) வாழவேண்டும். நீங்கள் அனைவரும் உங்களின் செல்வங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும்(share the wealth equally), இல்லாதவர் என யாரும் இருக்கக் கூடாது”
    தன்னுடைய ஆண் குறியை மட்டும் மறைத்து உடை அணியும் அந்த பழங்குடி மக்களின் முன்னிலையில் , தலை முதல் கால்வரை “நாகரீகமாய்” உடை அணியும் நாம் அம்மணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது…

    “அனைத்து உழைக்கும் மக்களுக்காகவும் நான் உழைக்கிறேன், எனக்காக அனைத்து உழைக்கும் மக்களும் உழைக்கின்றனர் “

  4. தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சிநாள் வாழ்த்துக்கள்.

  5. என்னால் பேச முடியவில்லை
    என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
    சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்

  6. என்னால் பேச முடியவில்லை
    என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
    சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்

    Mistake ! Mistake !

  7. //சனல் ஜியோக்ரபிக் தொலை காட்சியில் காட்டில் வசிக்கும் பழங்குடி மனிதர்களை லண்டனுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டும் நிகழ்ச்சி வருகிறது. அந்த நிகழ்ச்சியில், பழங்குடி மக்கள் சாலையிலும், ரயில் நிலையங்களிலும் மக்கள் படுத்து உறங்குவதை கண்டு, அவர்களின் நகரத்து நண்பர்களிடம் கேட்கின்றனர், ஏன் இவர்கள் இங்கு உறங்குகின்றனர் என்று?, அதற்கு அவர், இவர்கள் அனைவரும், வீடு அற்றவர்கள், இவர்களுக்கு உறங்குவதற்கு என்று ஒரு வீடு கிடையாது என குறிப்பிடுகிறார். அதைக்கேட்ட பழங்குடியினர் மிகுந்த வருத்தம் அடைகின்றனர். இத்தனை செல்வங்கள், கட்டிடங்களும் நிறைந்த இந்த நகரில் (Manchestar) எப்படி ஒரு சிலர் ஒன்றுமே இல்லாமல் இருக்க இயலும்.. எங்களின் காடுகளில் நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம், ஒரு புதிய மனிதர் அங்கு வாழ விரும்பினால் நாங்கள் அனைவரும் அவருக்காக வீடு அமைப்போம், அதே போல் அவரும் மற்ற அனைவருக்காகவும் உழைப்பார்.. எங்களில் செல்வமற்றவர்கள் என யாரும் கிடையாது என கூறுகின்றனர். இறுதியில் அந்த விருந்தினரின் வீட்டில் இருந்து விடை பெறுவதற்கு முன்பு, நன்றி தெரிவுக்கும் முகமாக, பழங்குடியினர் தங்களது நடனத்தை சில நகரவாசி நண்பர்களின் முன்னிலையில் நடத்திய பிறகு.. இப்படி கூறுகிறார்..”உங்களின் உபசரிப்புக்கு நன்றி..நீங்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் (live with unity, peace and harmony) வாழவேண்டும். நீங்கள் அனைவரும் உங்களின் செல்வங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும்(share the wealth equally), இல்லாதவர் என யாரும் இருக்கக் கூடாது”
    தன்னுடைய ஆண் குறியை மட்டும் மறைத்து உடை அணியும் அந்த பழங்குடி மக்களின் முன்னிலையில் , தலை முதல் கால்வரை “நாகரீகமாய்” உடை அணியும் நாம் அம்மணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது…//
    தோழமையுள்ள
    பகத் நீங்கள் எழுதி இருப்பது அருமை சிந்திக்க வேண்டியது

  8. //புரட்சிக் கடமைகளுக்கு தடையாய் வரும்
    உங்கள் சொந்த உணர்ச்சிகளை
    எதிர்க்கத் தயங்காதீர்!

    தன்சுகம் மறுத்துத் துடித்துக் கொண்டிருக்கும்
    நவம்பர் தியாகிகள் இதயத்தின்
    தீராத ஆசை கேட்கிறதா உங்கள் செவிகளுக்கு?

    தோழர்களே “புரட்சிக்கு உங்களிடம் இடம் கொடுங்கள்”//

    //ஒருவரா இருவரா கருப்பாக,
    சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
    இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
    ஆனால அவர்கள் எல்லாம்
    எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
    கவனித்தாயா நண்பா
    உனக்காக எனக்காக எல்லோரும்
    போராடும் போது உனக்காக
    நீயும் எனக்காக நானும்
    போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
    அடிக்கடி சொல்வேனே
    நினைவிருக்கிறதா
    “நாட்கள் இப்படியே இருக்காது
    நாளை என் சாவு செய்தி கேட்டு
    நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
    அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
    புரட்சிகர வாழ்த்துக்களுடன்
    உன் அன்பு நண்பன்//

    சிந்தனைப் பொறிகளாய் நெருப்பிடுகின்றன வரிகள்

  9. //நனவான கனவுகளின்
    நீண்ட பாதையில்
    சில மைல் கற்களை
    நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
    அவசரமாக அவற்றை
    குழிதோண்டி புதைத்திருக்கலாம்.
    எனினும்,
    முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
    புதிய மைல்கற்கள்.
    நனவுகளை நொறுக்கலாம்.
    கனவுகளை என்ன செய்வாய்!

    இதோ,
    எதிர்காலத்தின் கனவுகள்
    எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
    உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
    விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,//

    இன்னும் இன்னும் பெயர்த்தெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தின் கனவுகளோ ஒன்றுக்கு இரண்டாய் பெருகிக் கொண்டிருக்கின்றன…

  10. அருமையான வரிகள், தயக்கத்தை அறுத்தெறிய வேண்டிய வேலை வந்து விட்டது இக் கவிதை அதன் வேலையை செய்து விட்டது

  11. அருமையான வரிகள், தயக்கத்தை அறுத்தெறிய வேண்டிய வேளை வந்து விட்டது இக் கவிதை அதன் வேலையை செய்து விட்டது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க