privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: காந்தி தேசத்தின் துப்பாக்கி ராஜ்ஜியத்தில்...

ஈழம்: காந்தி தேசத்தின் துப்பாக்கி ராஜ்ஜியத்தில்…

-

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -9

vote-012இந்தியராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்திற்கு வந்து அமைதிகாப்பதை தவிர மற்ற எல்லா கொடுமைகளையும் நிகழ்த்தினார்கள். மிக குறுகிய காலத்திலேயே எங்கள் மீதான தங்கள் அடக்குமுறையை பிரயோகித்து சிங்கள ராணுவத்திற்கு எந்தவகையிலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழிக்கூத்தை ஆடி முடித்தார்கள். சிங்களராணுவம் நீண்டகாலமாக எங்கள் பகுதியில் இருந்ததால், அவர்களின் அட்டூழியங்களுக்கு வலித்தாலும் ஓரளவுக்கு மனம் பழகிப்போயிருந்தது. இந்தியராணுவம் அமைதிப்படை என்று வந்து தீடீரென பொதுமக்களான எங்கள் மீது போர் தொடுத்த போது இனம்புரியாத வெறுப்பும், அதிர்ச்சியும்தான் எங்கள் மனங்களில் எஞ்சியிருந்தது. ஏற்கனவே இழப்புகள் மட்டுமே எங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வாகிப்போயிருந்த சூழலில் இவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு வேறு எங்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது கொடுமையாக இருந்தது.

ஒவ்வொரு நாளும், எந்தவொரு வேலையை செய்வதானாலும் இவர்களை மனதில் நினைத்துக்கொண்டுதான் செய்யவேண்டியிருந்தது. இந்தியராணுவத்தின் அடக்குமுறையில் சொந்தமண்ணில் சுதந்திரமான நடமாட்டம், பேச்சு, கருத்து, கல்வி, காதல், கல்யாணம், கலவி என்று எங்களின் உரிமைகளும் சரி, இனிய உணர்வுகளும் சரி ஏதோ கொலைக்குற்றங்களோ என்ற உணர்வோடுதான் நடந்தேறின. நேரம் காலமின்றி எந்த வேளையிலும் திறந்த வீட்டிற்குள் எதுவோ நுழைந்தது போல் நுழைவார்கள் என்ற பயம் ஒருபுறம். மறுபுறம், வீட்டின் வாசலை தாண்டி வெளியே வருவதானாலும் வாசலில் காவல் நின்று யாராவது வருகிறார்களா என்று பார்த்து, அவர்களிடம், “ஆமிக்காரன் வழியில எங்கயாச்சும் வாறானோ” என்று விசாரித்து விட்டுத்தான் தெருவில் கால்வைக்க வேண்டியிருந்தது.

சில வேளைகளில், நான் நினைப்பதுண்டு சாகப்போகிறவன் எதற்கு சகுனம் பார்க்கவேண்டும் என்று. அப்படியான ஓர் உணர்வையே இந்தியராணுவம் எங்களின் மனங்களில் தோற்றுவித்திருந்தார்கள். படிக்கப்போகும் வழியில் மாணவர்கள் என்று கூடப் பார்க்காமல் தடுத்து வீதியில் உட்கார்த்தினார்கள், திருமணவீட்டில் புகுந்து சோதனை போட்டார்கள். பிறகு போகும் போது, சந்தனப்பொட்டை கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு, ஏன் கல்யாணவீட்டிற்கு தங்களை அழைக்கவில்லை என்று ஏதோ நெருங்கிய உறவினர்கள் போல் குறை வேறு பட்டுக்கொண்டார்கள். இப்படி இந்திய அமைதிப்படையால்  நித்தம், நித்தம் செத்து, செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தோம்.

ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு போய்வர ஒன்றிரண்டு தனியார் போக்குவரத்தே கதியாயிருந்த காலத்தில், இந்தியராணுவம் அதையும் கூட தங்களால் முடிந்தவரை குழப்பிக்கொண்டே இருந்தார்கள். இவர்களின் முகாம்களிலுள்ள காவலரண்களை தாண்டி யாரும் அவ்வளவு லேசாக போகமுடியாது. சோதனை போடுகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்வார்கள் பார் ஓர் அட்டூழியம்…! வாகனத்திலுள்ள அத்தனை போரையும் இறக்கி, இவர்களின் விசாரணை காலைக்கடன்  முடித்ததிலிருந்து தொடங்கி எப்போது புலியை கடைசியாய் பார்த்தாய் என்று முடிப்பார்கள்.

சிலவேளைகளில் ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் தடுத்து நிறுத்தி வைத்து, தமிழை கொலைசெய்து, எங்களை உயிர்க்குலை நடுங்கவைத்து, கேள்விகேட்டு காலங்கடத்தியபின் சில சகோதரர்களை தடுத்துவைத்துக்கொண்டு மற்றவர்களை ஏதோ பெருந்தன்மையோடு அனுப்பிவைப்பார்கள். இதில், சிங்களத்திலும், தமிழிலும் மட்டுமே எழுதப்பட்ட எங்கள் அடையாள அட்டைகளை, தமிழும் புரியாத, சிங்களமும் புரியாத; தனியார் வாகன உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் வாங்கிகொடுத்த கள்ளு, சாராயம் என்பவற்றால் போதை ஏறிப்போன சிப்பாய்கள்  திருப்பி, திருப்பிப் பார்த்து எங்களின் உயிரை பதறவைப்பார்களே, அந்த கணங்கள்  வார்த்தைகளில் விவரிக்கமுடியாத எங்களின் அவலம். இந்த இந்திய …… யார் என் மண்ணில் வந்து நின்று என்னை கேள்வி கேட்க என்று எனக்குள்ளேயே கொதித்து, எனக்குள்ளேயே அடங்கிப்போனேன். தனியார் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் அவர்களின் தொழில் தடையின்றி நடக்க இந்திய ராணுவத்தின் காவலாளிகளுக்கு ஏற்றிய போதைக்கும் நாங்கள் தான் கட்டணத்தோடு சேர்த்து காசு அழுதது.

இந்தியராணுவத்தின் போதை என்னும்போது இன்னோர் சம்பவத்தையும் நான் குறிப்பிடவேண்டும். கொஞ்சநாட்களாக மதிய வேளைகளில் இரண்டுராணுவ சிப்பாய்கள் (ஒருவர் தமிழர்) எங்களின் வீட்டிற்கு போதையோடு வருவதாகவும், வந்து Toddy, கள்ளு இருக்கா என்று கேட்பதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு நாள் நான் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பந்த்திலும் அந்த இருவரும் வந்தார்கள். இரண்டுபேருமே போதையில், புவியீர்ப்பு சக்தி இவர்களை மட்டும் தாங்காமல் தவிர்த்துவிட்டதோ என்று நினைக்குமளவிற்கு, நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார்கள். கையில் கள்ளுப்போத்தலும், இரண்டு கோழிகளும் வேறு தலைகீழாய் தொங்கிக்கொண்டு இருந்தன. இவர்கள் இப்படி மதிய வேளைகளில் வருவதற்கு காரணம், அந்த நேரங்களில் தான் வீட்டில் பெண்கள் தனியாக இருப்பார்கள் என்பதுதான். “இவன்களின் குரங்கு சேட்டைக்கு ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டேன்” என்று என் பாட்டி தடாலடியாய் ஒரு முடிவு கட்டினார். பொதுமக்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் பாலமாய் இருந்த பிரஜைகள் குழு என்ற அமைப்பின் மூலம் இவர்களை பற்றி முறைப்பாடு செய்தபின்னர் தான் இவர்களின் அட்டகாசம் நிறுத்தப்பட்டது. இந்த குழு பற்றி இந்த பதிவின் பிற்பகுதியில் விரிவாக சொல்கிறேன்.

எங்களின் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இவர்கள் பற்றிய பயமே நிறைந்திருந்ததை இன்னும் எத்தனையோ சம்பவங்களால் சொல்லலாம். ஆனால், அதற்கு இடமும் நேரமும் போதாததால் எங்கள் ஊர் எப்படி ஈழத்தின் மை லாய் ஆனது என்பதை மட்டும் சொல்கிறேன். தொண்டைமானாறு, உடுப்பிட்டி, பொலிகண்டி என்ற ஊர்களாலும், மறுபுறம் கடலாலும் சூழப்பட்ட ஓர் சிறிய நகரம் என்றும் சொல்ல முடியாத, கிராமம் என்றும் சொல்லமுடியாத இரண்டிற்கும் இடைப்பட்ட, நான் பிறந்து வளர்ந்த, என் நினைவுகளில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும், என்வரையில்   சொர்க்கபூமி, வல்வெட்டித்துறை.

ஈழவிடுதலைப்போரில் எனக்கு நினவு தெரிந்த நாள் முதல் வல்வெட்டித்துறையில் புலிகளைத் தவிர வேறெந்த ஒரு போராளிக்குழுக்களும் இருந்ததில்லை என்றுதான் சொல்லப்பட்டது. ஆனாலும், இந்தியராணுவத்தால் எந்தவொரு போராளியையும் பிடிக்கமுடியவில்லை என்ற கோபமும், எரிச்சலும் எவ்வளவு என்பது அவர்கள் எங்கள் மீது பிரயோகித்த வன்முறையில் வெளிப்பட்டது. வல்வைப் படுகொலைகளுக்கு சில காலத்திற்கு  முன் என் வீட்டருகில்  நடந்த ஓர் சம்பவம் இது.  ஒருநாள், உடம்புக்கு முடியாததால் நான் வீட்டில்தான் இருந்தேன். வழக்கம் போல் இந்தியராணுவம் வருவதற்கு முன் அவர்களின் வருகையை காற்று கட்டியம் கூறுகின்ற புளித்த நெய் அல்லது எதுவோ ஒன்றின் மணம் அல்லது துர்நாற்றம் வருகிறதா என்று என் மூக்கை காற்றுக்கு கொடுத்து, நாய்கள் குரைக்கிறதா என்று காதுகளையும் தீட்டி வைத்துக்கொண்டு, கட்டிலில் சுருண்டு கிடந்தேன். என் தாயார் வேறேதோ வேலையில் இருந்தார்.

திடீரென்று, காதை பிளக்கும் அளவிற்கு என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறியளவிலான ஓர் வெடிச்சத்தம் கேட்டது. போர்பூமியில் வாழ்ந்த எங்களுக்கு எங்கோ தூரத்தில் ஓர் குண்டு வெடித்தாலும்  அது விமானக்குண்டா, ஷெல்லா, அல்லது கண்ணிவெடியா என்பதை தரம்பிரித்து அறியமுடியும். நான் கேட்ட சத்தம் நிலத்தின் கீழிருந்து வெடித்த ஓர் குண்டின் சத்தமாகவே தோன்றியது. இப்படி ஏதாவது நடக்கும் போது நாங்களும் என் சிறியதாயார் மற்றும் அவரின் குழந்தைகள் எல்லோரும் பயத்தின் காரணமாய் ஒன்றாய் இருப்பதே வழக்கம். சரி, ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு என் சிறிய தாயார் குழந்தைகளோடு தனியே இருப்பார் என்பதாலும், பாட்டி வேறு கடைக்குப் போயிருந்ததாலும் முன்னாலுள்ள அவரின் வீட்டிற்கு ஓடுவோம் என்று காலடி எடுத்து வைக்கவும், இந்தியராணுவத்தின் புரியாத மொழிக்கூச்சல்கள் காதுகளை கிழித்தது மட்டுமல்ல பயத்தில் உயிரையே உறைய வைத்தது. “சரி, யமன்கள் வந்துவிட்டாங்கள்” என்றார் என் தாயார்.

பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மறுபடியும் வீட்டிற்குள் ஓடி,  இந்த பாழாய்ப்போன உயிரை உடம்பிலிருந்து தனியே பிடுங்கி எங்காவது மறைத்துவைக்க முடியுமா என்று தெரியாதவர்களாய் யன்னலுக்கு அருகில் சுவரில் பல்லிகளாய் ஒட்டிக்கொண்டோம். அந்த நேரத்தில் என் வீட்டு யன்னலோரம் தான் உலகிலேயே மிகப்பாதுகாப்பான இடம் என்று தோன்றிய பரிதாபத்தை என்ன சொல்ல நான்.

உயிராசை பயமாகி வேர்வையாய் உடம்பில் வழிந்துகொண்டிருக்க, வீட்டிற்குள் பதுங்கி  மெதுவாக வெளியே யன்னல் வழியே எட்டிப்பார்த்தோம். ஓர் ராணுவ சிப்பாய் எங்கள் வீட்டின் ஓர் சிறிய மற்றும் பெரிய இரண்டு கதவுகளையும் தன் வெறி, கோபம் எல்லாத்தையும் ஒன்றாய் சேர்த்து   மாறி, மாறி எட்டி உதைத்து திறந்தான். அவனுக்கு உயிர்ப்பயமோ என்னவோ முதலில் வெளியே நின்று பதுங்கிப், பதுங்கி எட்டிப்பார்த்தவன், சிறிது சிறிதாக தயங்கி, தயங்கி எங்கள் வீட்டின் முற்றத்திற்கு வந்தான். என் உயிர் இனி எனக்கு சொந்தமில்லை என்று எங்கோ மூளையின் மூலையில் ஓர் அபாய அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்க, அதன் எதிரொலியை இடியாய் என் இதயத்துடிப்பில் உணர்ந்தேன்.

இதோ, நெருங்கி, மிக நெருங்கி, என் உயிருக்கும் அவனுக்கும் இடையே உள்ள தூரம் குறையக், குறைய துப்பாக்கியை நீட்டியபடியே  வருகிறான். அந்த சிப்பாயின் வெறிக்கு என்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப்போவான். அடுத்து எங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் மனதில் தோன்றியதை  எல்லாம் தாறுமாறாய் எனக்குள் போட்டு குழப்பிக்கொண்டு, அது மரணமாய் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியபடி, அந்த நொடிகளுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். அந்த தருணத்தில், எங்கள் வீட்டின் இரு பெரிய கதவுகளுக்கும் இடையே நின்ற இன்னோர் சிப்பாய் உள்ளே வந்துகொண்டிருந்தவனை ஏதோ சொல்லி அழைத்துக்கொண்டிருந்தான். இவனுக்கு என்ன தோன்றியதோ, இவன் எங்கள் வீட்டையும் கூப்பிட்டவனையும் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவனை நோக்கி நடந்தான்.

கண் சிமிட்டும் நேரத்திற்கு எங்கள்  உயிர் தப்பிப்பிழைத்தது என்று ஓர் பெருமூச்சு வந்தது. எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலிருந்து பெண்களின் அலறல் சத்தம் வேறு கிலியை மூட்டியது. என் சிறியதாயாரின் அல்லது அவரின் குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறதா என்று வேறு தவித்துக்கொண்டிருந்தேன். இவற்றுக்கெல்லாம் இடையில் என் வாழ்நாளில் நான் கண்டிராத, காணவிரும்பாத அவலம் என் கண்முன்னே அரங்கேறிக்கொண்டிருந்தது. இந்திய சிப்பாய்கள் சிலர் நீண்ட அவிழ்ந்து விழுந்த கூந்தலுடனும் (கண்ணகியின் ஆணுருவம்?), வெறிக் கூச்சலுடனும், கைகளில் தீப்பந்தங்களோடு அங்குமிங்கும் அலைந்ததை என் வீட்டு திறந்த கதவுகளின் வழியே, மூச்சு விட்டால் கூட அவர்களுக்கு கேட்டுவிடுமோ என்ற பயத்துடன் ஏதோ ஊமைப்படம் போல் பார்த்து உயிர் உறைந்துகொண்டிருந்தேன்.

எவ்வளவு நேரம் போயிருக்குமோ தெரியவில்லை. இந்திய அமைதிப்படையின் ஊழிக்கூத்தை என் கண்முன்னே பார்த்துக்கொண்டிருந்தவளை இன்னோர் விடயம் உலுக்கிப்போட்டது. பக்கத்து வீடு, என் சிறியதாயார் வீடுகளிலிருந்தும் கரும் புகை மண்டலம் கிளம்பிக்கொண்டிருந்தது. உண்மையில், அந்த கணம் என் மதில் தோன்றியது இதுதான். இந்திய ராணுவம் என் சிறியதாயாரையும் அவர் குழந்தைகளையும் உயிருடன் எரிக்கிறார்கள்….  இவர்கள் தான் எந்த பழி, பாவத்திற்கும் அஞ்சாதவர்கள் ஆயிற்றே.

இதற்கு மேலும் என் உடம்பில் உயிர் தரித்து நிற்குமா? என் உயிரை விட அந்த மூன்று குழந்தைகளின் உயிரை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்று மனம் பதைத்தது. இதைப்பார்த்த என் தாயார் மிரண்டு போய், “சரி, வா வெளியிலே போவம்” என்றார். எனக்கும் அதற்கு மேல் அங்கே என் உயிர் ஒரு நிமிடம் கூட தங்காது என்று தோன்றவே, சரி கைகளை மேலே தூக்கிக்கொண்டு வெளியே போவோம் என்று முடிவெடுத்தோம். அப்போதுதான், என் தங்கையும், பக்கத்துவீட்டு குழந்தைகளும் கூட இந்த ஊழிக்கூத்து தெரிந்து பாடசாலையை அந்த காலை வேளையிலேயே மூடிவிட்டதால் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். சரி, இதுதான் சரியான தருணம் என்று தோன்றவே, இந்திய ராணுவ காடையர்கள் இந்த குழந்தைகளை வேறு ஏதாவது செய்துவிடக்கூடாதே என்ற தவிப்பிலும் நானும், என் தாயாரும் கைகளை மேலே தூக்கியவாறு வெளியே தெருவுக்கு வந்தோம்.

வெளியே வந்துகொண்டிருந்த எங்களை பார்த்த ராணுவ சிப்பாய்கள் உண்மையிலேயே கோபமும், எரிச்சலும் தான் அடைந்தார்கள் என்பது அவர்கள், ஏறக்குறைய ஓர் பத்து, பதினைந்து பேராவது இருக்கும், துப்பாக்கிகளை நீட்டியவாறே எங்களை பாய்ந்து சூழ்ந்து கொண்டதில் தெரிந்தது. இந்த அற்ப பதர்கள் இரண்டும் இவ்வளவு நேரமும் எப்படி எங்களிடமிருந்து தப்பியதுகள் என்று நினைத்திருக்கவேண்டும். அவர்களில் ஒருவன் என் மார்புக்கு நடுவே துப்பாக்கியை வைத்து தன் வெறி, கோபம், இயலாமை எல்லாம் ஒன்றுசேர எச்சில் தெறிக்க, தெறிக்க என்னைப் பார்த்து வெறிக்கூச்சல் போட, மற்றவர்கள் சூழ நின்றுகொண்டார்கள். அந்த அற்ப, சொற்ப கணங்களில் எனக்கு எங்கிருந்துதான் அந்த தைரியம் வந்ததோ தெரியவில்லை, “சுடுடா” என்று மனதிற்குள் சொல்லி, கண்களை இறுக்க மூடி சாவதற்கு தாயாராய் நின்றிருந்தேன்.

இதற்கு மேல் இந்த உயிர் இருந்தால் தான் என்ன போனால்தான் என்ன? மரணபயம் எனக்கு மரத்துப்போயிருந்தது, ஈழத்தில் உள்ள ஆயிரமாயிரம் என் சகோதரிகளைப் போல, தாய்மார்களைப் போல. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் தாயார், தங்கை, மற்ற குழந்தைகள் பெருங்குரலில் அலறிக்கொண்டிருந்தார்கள். என்ன இன்னமும் உயிருடன் இருக்கிறேன் என்று என் உள்ளுணர்வு சொல்ல, கண்களை திறந்து பார்த்தேன். அப்போதுதான், எனக்கு ஒரு விடயம் உறைத்தது. இதுவே, நானும் என் தாயாரும் மட்டுமே என்றால் என் உயிர் இவ்வளவுக்கும் பறிக்கப்பட்டிருக்கும். ஆனால், என்னை கொன்ற சாட்சிகளை மறைக்க என் தங்கை, மற்றும் என் அயலிலுள்ள மற்றக் குழந்தைகளையும் கொல்லவேண்டும். பிறகு எத்தனை கொலைகளை இவர்கள் மறைக்க வேண்டியது வரும்?

ஆனாலும், அவன் என்னை விடுவதாய் இல்லை. துப்பாக்கியை என் மார்பில் அழுத்திக்கொண்டு, என்னை பின்னோக்கி தள்ளிக்கொண்டே, LTTE என்று ஏதோ அவன் பாசையில் குளறிக், குளறிக் கேட்டுகொண்டிருந்தான். நானும் பதில் ஏதும் சொல்லாமல் பின்னோக்கி நகர்ந்துகொண்டே இருந்தேன். இப்படி கொஞ்ச நேரம் இழுபறிபட்டுக்கொண்டு இருந்தவன், இறுதியில் வெறிபிடித்துப்போய் ஒரேயடியாய் என்னை நெட்டித்தள்ளிவிட்டான். ஒருவாறு விழாமல் சமாளித்துக்கொண்டு முன்நோக்கி  நகர்ந்து என் சிறிய தாயார் வீடு நோக்கி நடந்தேன். இதைப்பார்த்த அவன் மறுபடியும் எனக்கு கிட்ட வந்தான், அதற்கு மேல் என்னால் அழுகையை அடக்கமுடியாமல் கதறிவிட்டேன். என் தாய்க்கு சமமானவருக்காகவும், மூன்று சிறிய குழந்தைகளுக்குமாகத்தான் என் உயிர் துடித்துக்கொண்டிருக்கிறது என்பதை எப்படி இந்த அரக்கனிடம் சொல்லி புரியவைப்பது என்று தடுமாறினேன்.

ஒருவழியாய், ஈழத்தில் இருந்த காலங்களில் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராத ஆங்கிலத்தில் தெரிந்த இரண்டு வார்த்தைகளை பொறுக்கி எடுத்து,  “my aunt..” என்று என் கையால் என் சிறியதாயார் வீட்டை நோக்கி கையை காட்டினேன். அதற்கு மேல் வாயும் வரவில்லை, வார்த்தையும் வரவில்லை, அழுகைதான் பீறிட்டு வந்தது.  எரிந்துகொண்டிருந்த  வீட்டையும் என்னையும் மாறி, மாறிப் பார்த்துவிட்டு அந்த விசரன் என்னென்னவோ பைத்தியம் பிடித்தவன் போல் கத்திக்கொண்டு என்னை மறுபடியும் பிடித்து தள்ளிவிட்டான். இந்த அமளிக்கிடையிலும் ஒரு விடயத்தை கவனித்தேன். முடியும் அவிழ்ந்து, தாடிக்கு போட்டிருந்த வலை போன்ற துணியும் அவிழ்ந்து சில சிப்பாய்கள் கண்ணகிக்கு ஆண் வேஷம் போட்டால் எப்படியிருக்குமோ, அப்படி தீப்பந்தங்களை கைகளில் பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் கொழுத்திப்போட இன்னும் ஏதாவது கிடைக்காதா என்று கூச்சலோடு அலைந்து கொண்டிருந்தார்கள்.

உண்மையிலேயே அன்று அவர்கள் நின்ற கோலத்தை பார்த்தபோது இவர்கள் எங்களை உயிருடன் கொழுத்திப்போடக்கூட தயங்கமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. நான் மறுபடியும் எப்படியாவது என் சிறியதாயார் வீட்டிற்குள் புகுந்துவிட வேண்டுமென்ற வெறியுடன் நடந்தேன். என்னோடு என் தாயார், மற்றக் குழந்தைகள் எல்லோருமே இழுபட்டார்கள். இப்படி எல்லோரையுமே பார்த்த சிப்பாய்கள் எங்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்டியபடி வரிசை கட்டி வீதியை மறித்து நின்றார்களே….. இவர்கள் தான் காந்திதேசத்திலிருந்து அமைதி, சமாதானம், அன்பு  என்ற சன்மார்க்கத்தை  போதிக்க வந்தவர்களாம்.

ஆனால், எங்களால் இதற்கு மேல் இந்த வல்லாதிக்க பேய்களின் ஏவல் நாய்களுடன் போராடமுடியாததால், அவன்கள் “சலோ, சலோ…” என்று  கைகாட்டிய திசையில் காந்தியின் குரங்குகளாய் கண்பொத்தி, காதுபொத்தி, வாய்பொத்தி இவர்களின் ஊழிக்கூத்தை எதிர்க்க வலுவற்றவர்களாய் நடக்கத்தொடங்கினோம். .

தாங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஊழிக்கூத்தினை  சாட்சியங்களை வைத்துக்கொண்டா செய்துமுடிப்பார்கள்? அவர்கள் விரட்டிய திசையில் நடந்து,

ஆளில்லா வீடுகள், தெருக்கள் எல்லாவற்றையும் கடந்து, நாய்கள் குரைத்தபோதெல்லாம் மறுபடியும் ராணுவத்திடம் மாட்டிவிட்டோமோ என்று உயிர்

நடுங்கி ஓரிரு தெருக்கள் தாண்டியுள்ள என் இன்னோர் சிறியதாயார் வீட்டை அடைந்தோம். உங்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி என்றால் என்னென்ன உணர்வுகளோ எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு, இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிரோடு வந்து நின்றால் அல்லது ஊரடங்கு உத்தரவு, கைது என்ற பெயரில் ராணுவத்தால் அழைத்துச்செல்லப்பட்டு ஒருவழியாய் இருட்டியபின் வீடு வந்து சேர்வார்களே எங்கள் வீட்டு ஆண்கள், அவையெல்லாம் தான் சந்தோஷ திக்குமுக்காடல்கள்.

ஆனால், அடுத்த ராணுவ சுற்றிவளைப்பின் போது அது துன்பியல் நிகழ்வாகாதவரைதான் அந்த சந்தோசம். எங்கள் கண்களையே நாங்கள் நம்பமுடியாதது போல், ஓர் சந்தோஷ திணறலாய், நாங்கள் என் மற்ற சித்தி வீட்டிற்கு  சென்றபோது என் சித்தியின் மூன்று குழந்தைகளும் அங்கே இருந்தார்கள். எங்களை கண்டவுடன் ஓடிவந்து தாவிக்கட்டிகொண்டார்கள். பிறகு, அவர்களின் மழலை மொழியில் தேம்பித் தேம்பிச்  சொன்னார்கள், தங்கள் தாயாரை இந்திய ராணுவம் தாக்கிவிட்டதென்று. பாய்ந்தடித்து உள்ளே சென்று என் சித்தியை பார்த்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

அவரின் வெள்ளை வெளேரென்ற இரண்டு கன்னங்களிலும் இடைவெளியின்றி பெரிய, பெரிய கைவிரல் அடையாளங்கள் சிவப்பாய் பதிந்திருந்தன. கழுத்துப்பகுதியில் நகக்கீறல்கள் வேறு. அவருடைய கழுத்தை கொடூரமாக நெரித்திருக்கிறார்கள். கொன்றுவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவரின் குழந்தைகளின் கண் முன்னாலேயே அவரை அடித்து, கொலை மிரட்டல் செய்து, சித்திரவதை செய்து, அவர் கண்முன்னாலேயே வீட்டையும், உடமைகளையும் கொளுத்தி விட்டு  ஓடிப்போகும்படி துரத்திவிட்டிருக்கிறார்கள். தன் ஐந்து வயதுக்கும் குறைவான மூன்று குழந்தைகளும் தன்னைப்பார்த்து கதறக் கதறத்தான் இந்த கொடுமையை இந்தியராணுவம் செய்ததாக தாளமுடியாமல் சொல்லி அழுதார்.

உங்கள் சொந்த தாயாரை யாராவது ஓர் அந்நியன் தாக்கினால் நீங்கள் எப்படி துடிப்பீர்களோ, உங்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ, அந்த நியாயமான கோபம் தான் எனக்கும் வந்தது. ஏதாவது பேசினால் நானும் அழுது அவரை மேலும், மேலும் அழவைத்து விடுவேனோ என்ற பயம் வந்தது. அதற்கு மேல் அவருடைய முகத்தை பார்க்க தைரியமற்றவளாய் வெளியில் வந்தேன். வெளியே வந்த எனக்கு, என்னடா ஓர் ஆதரவற்ற ஓர் இனமாய், கேட்பாரின்றி வருவோர், போவோர் எல்லாம் எங்களை வதைக்கிறார்களே என்ற ஏதோ ஓர் சுயபச்சாதாப உணர்விலிருந்து என்னை, என் நினைவுகளை விடுவிக்கமுடியாமல் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. விவரிக்கமுடியாத என் உணர்வுகளை இங்கே விவரித்து பக்கங்களை நிரப்பாமல் மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை மட்டும் சொல்கிறேன்.

வழக்கம் போல் கடைக்கு சென்றிருந்த பாட்டியும் இங்கே வந்து சேர்ந்திருந்தார். அவர் தான், தன் மகளை ராணுவம் இப்படி மிருகத்தனமாய் அடித்ததை சொல்லிச்சொல்லி அழுதுகொண்டிருந்தார். அன்று நடக்கவிருந்தது ஏற்கனவே என் சிறியதாயாருக்கும், எங்களுக்கும் தெரியும் அதை நாங்கள் சொல்லாமல் மறைத்துவிட்டோம் என்பது தான் இந்திய ராணுவத்தின் அன்றைய கோபம். இந்தியராணுவத்தின் புலிகள் மீது காட்ட முடியாத கோபம், இயலாமை, வன்மம்  எல்லாம் ஒருசேர்ந்து ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிப் பொதுமக்களான எங்கள்மீது வன்முறையாய் வெடித்தது எந்த விதத்தில் நியாயம்?

எங்களோடு வந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர் இந்த பிரச்சனையால் எங்கே ஓடினார்கள் என்று தெரியாததால் என் மற்றைய சிறியதாயார் அவர்களின் உறவினர் வீடுகளில் கொண்டுசென்று விட்டுவிட்டு வந்தார்கள். இந்த குழந்தைகளை பற்றி ஓரிரு வார்த்தைகள். இவர்களில் ஒருவர் பின்னாளில் போராளியாகி வீரமரணம் அடைந்தவர். இன்னொருவர், இந்திய ராணுவம் என் வீட்டிற்கு அருகிலுள்ள ஓர் சகோதரியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததை ஓடி, ஒளிக்க முடியாமல், தன் கண்களின் முன்னே என்ன நடக்கிறது என்று அறியாதவராய் பார்த்துக்கொண்டிருந்தவர். ஒருநாள் இந்திய ராணுவ சுற்றிவளைப்பு முடிந்தபின் வழக்கம்போல் எங்கள் தெருவில் உள்ளவர்கள் கூடிப்பேசிக்கொண்டிருந்த போது தான் பார்த்ததை நாலுபேருக்கு மத்தியில் சொல்லக்கூடாது என்பது கூடத்தெரியாமல் தன் குழந்தைத்தனமான  மொழியில் சொல்லி எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தவர். நீண்டநாட்களுக்குப் பிறகு ஓர் விமானக்குண்டுவீச்சில் பதுங்குக்குழியிலே பிணமாகிப்போனார்.

என் உறவுகள், அயலவர்கள் என்று எல்லோரையும் ஒருசேர நான் நினைத்துப் பார்ப்பதில்லைதான். ஆனால், இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களை எழுதும் போது எல்லோரின் நினைவுகளும் ஒன்றாய் என் நினைவுகளில் வருகிறது.  இந்த பதிவை நான் எழுத தொடங்கிய நாட்கள் முதல் (நீண்ட நாட்களாக இந்த பதிவை எழுத்திக்கொண்டிருக்கிறேன் என்பது வேறுவிடயம்) தூங்கவும் முடியாமல், சாப்பிடவும் முடியாமல் என் மூளையை யாரோ கூரிய நகங்கள் கொண்டு பிராண்டுவது போல் ஓர் உணர்வு.

தனக்கு நடந்த கொடுமையை தாளமுடியாமல் வேதனையில் அல்லாடிக்கொண்டிருந்த என் சித்தி இந்தியராணுவம் அவர்கள் செய்த அட்டூழியத்திற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொன்னதுதான் எனக்கு சற்று விநோதமாகப்பட்டது. ஒருவர் தனக்கு நடந்த கொடுமைக்கு ஏதாவது நியாயம் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் மற்றவர் எவரும் அதை பிழையென்று சொல்லமுடியாதுதான். ஆனால், அந்த ஈவிரக்கமற்ற செயலை செய்ததாக ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை இந்திய ராணுவத்திற்கு உள்ளதா என்பதே என்னை சந்தேகப்படவைத்தது.

அதெல்லாத்தையும் விட அவர்கள் தங்களின் கடின உழைப்பால் கட்டியெழுப்பிய வீடு அது. அவரின் கண் முன்னாலேயே அது இந்திய ராணுவத்தால் எதையோ ஊற்றி எரிக்கப்பட்டதில் நிறையவே மனம் நொந்து போயிருந்தார். தவிரவும், இந்திய ராணுவம் நிரந்தரமாக எங்கள் மண்ணில் தங்கிவிடுவார்களோ என்ற பயம் நிறைந்த சூழலில் இனிமேலும் தனக்கோ தன் குழந்தைகளுக்கோ இப்படியொரு இழிவும், துன்பமும் வரக்கூடாது என்பது கூட அவரது வாதமாக இருந்தது. அமைதி காக்க வந்தவர்கள் அதை மட்டுமே செய்யவேண்டும் என்கிற அவரது வாதத்தில் உறுதியாயிருந்தார். நிறையவே பாதிக்கப்பட்டவர் ஆதலால் யாருடைய மாற்றுக்கருத்தையும் அவர் ஏற்பதாக இல்லை.

யதார்த்தமாகவும், நியாயமாகவும் சிந்தித்துப்பார்த்தால் அவரது வாதம் சரியென்றே எனக்கு தோன்றியது. சித்தப்பா வேறு ஊரில் இல்லாத சமயத்தில் அவரின் இந்த உறுதி என்னை சற்றே வியப்படையக்கூட வைத்தது. சரி, அவரின் இந்த முயற்சியில் ஏதாவது  நடந்தால் பார்க்கலாம் என்று மூடிக்கொண்டிருந்துவிட்டேன். இந்திய ராணுவம் எப்படி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு வந்தார்கள் என்று சொல்லுமுன் சில விடயங்கள் பற்றிய விளக்கங்கள்.

வடமராட்சி புலிகளின் கட்டுப்பாடில் இருந்த காலங்களில் ஊரில் சில சமூக நலன் சார்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. இணக்க சபை- பொதுமக்களின் பிணக்குகளை தீர்க்கும் சபை (நானறிந்த புலிகளின் நீதிமன்றம்); விழிப்புக்குழு- கல்வி, கலாச்சாரம், விளையாட்டு என்று சமூக நலன்கள் சார்ந்த விடயங்களை கவனிக்கும் சமூக அமைப்பு; பிரஜைகள் குழு- அரசியல் சார்ந்த விடயங்களை கவனித்துக்கொண்ட சமூக அமைப்பு. இந்த பிரஜைகள் குழுவைத்தான் ஆங்கில ஊடங்கங்கள் அந்நாட்களில் Citizens Committee என்று குறிப்பிட்டார்கள். இந்திய ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் ஓர் பாலமாய் இருந்தவர்கள் இந்த பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தான்.

அவர்களிலும் எத்தனயோ பேர் விலகிவிட, ஓரிருவரே தொடர்ந்தும் பல சிரமங்களின் மத்தியிலும் செயற்பட்டு வந்தார்கள். இந்திய ராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்களை நேரடியாக அவர்களிடம் பொதுமக்களாக சென்று முறையிட முடியாததால் பிரஜைகள் குழு மூலம் தான் அதை செய்ய வேண்டியிருந்தது. அதுவும், என் சித்தியை தவிர அன்று பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இந்திய ராணுவம் மறுபடியும் தங்களை தாக்குமோ என்ற பயத்தினால் அவர்களைப் பற்றி முறையிட விரும்பவில்லை. பிரஜைகள் குழுவிடம் அந்த சம்பவத்தை பற்றி இந்திய ராணுவத்திடம் முறையிட வேண்டுமென்று கேட்ட போது அவர்களும் ஆரம்பத்தில் சற்றே தயக்கம் காட்டினார்கள். நாங்கள் மட்டுமே முறையீடு செய்தால் அதை அவர்கள் விசாரிப்பார்களா என்று சந்தேகத்தை கிளப்பினார்கள்.

பிறகு, அன்று பாதிக்கப்பட்டவர்களிடம் இந்தியராணுவத்தின் இந்த அட்டூழியம் இனிமேலும் தொடரக்கூடாது என்றால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளக்கி, அவர்களிடம் எல்லாம் ஒப்புதல் வாங்கி அதை பிரஜைகள் குழுவிடம் சமர்ப்பித்தோம். பிறகு ஒருவாறு பிரஜைகள் குழு சம்மதித்து, தாங்கள் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்லுவதாக சொன்னார்கள். ஒருவாறாக சில நாட்கள் கடந்தபின் பிரஜைகள் குழு உறுப்பினர்களுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் எங்களை விசாரிக்க வருவதாகவும், எல்லோரையும் வீட்டிலிருக்கும் படியும் சொல்லியனுப்பினார்கள். அன்று காலையிலிருந்து இவர்களுக்காக, இவர்கள் சொல்லப்போகும் “நாட்டாமை” பாணி தீர்ப்புக்காக காத்திருந்தோம். நிறைய நேரம் எல்லா வேலைவெட்டிகளையும் புறந்தள்ளி இவர்களின் வருகைக்காய் காத்திருந்தோம். ஏறக்குறைய மதியம் போல் அவசரமே இல்லாமல் நிதானமாய்  வந்து சேர்ந்தார்கள்.

எனக்கு அன்று வந்த இந்திய ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் ஞாபகம் இல்லை. வந்தவர்கள், இந்திய ராணுவத்தால் எரிக்கப்பட்ட, நாசமாக்கப்பட்ட எங்களின் உடமைகளை எந்தவொரு உணர்வுமின்றி ஏதோ சுற்றுலா பயணிகள் எதேச்சையாய் எதையாவது வேடிக்கை பார்ப்பது போல் கடனே என்று பார்வையிட்டார்கள். அந்த அதிகாரி தங்களுக்கு ஏதோ சுடச்சுட நியாயத்தை வழங்கிவிடப்போகிறார் என்ற நம்பிக்கை கண்களில் மின்ன அவரின் பின்னால் சிறியவர்கள், பெரியவர்கள் உட்பட ஓர் சிறிய கூட்டமே சென்றது.

உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை. எனக்கு இது ஓர் காணச்சகிக்காத அவலம். அதாவது, எந்தவொரு கடைநிலை குடிமக்களும் தங்களுக்கு நடந்த கொடுமை அல்லது அவலத்தை யாராவது ஓர் அரசியல்வாதி அல்லது பொறுப்பான பதவியிலிருப்பவர் பார்வையிட வருகிறார் என்றால் ஓர் கூட்டமாக அவரை பின்தொடர்வார்கள். இப்படி பல சமயங்களில் அவலங்களின் காரண கர்த்தாக்ளே ரட்சிப்பவர்கள் ஆகவும் அவதாரம் எடுப்பது ஓர் சமூக அவலம்.

வந்த அதிகாரிகள் என் சிறிய தாயாரை விசாரணை செய்தார்கள். அந்த ராணுவ அதிகாரி என் சித்தியை குறுக்கு விசாரணை எல்லாம் கூட செய்தார். ஆனால், அது விசாரணை போலில்லாமல் ஏதோ பயம் காட்டுவது போல் தானிருந்தது. அதட்டி, அதட்டி கேள்விகள் கேட்டார். அவரும் தனக்கு அன்று நடந்ததை ஒன்று விடாமல் ஒப்புவித்தார். எனக்குத்தான் இந்த கண்துடைப்பு விசாரணைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாததால், வேறு யாராவது முறையிட விரும்புகிறீர்களா என்று பிரஜைகள் குழு உறுப்பினர் கேட்ட போது அமைதி காத்து நின்றேன். ஆனால், சம்பவம் நடந்த இடத்திலிருந்த எங்களைத் தவிர மற்றைய அப்பாவிப் பொதுமக்களும் (வல்வெட்டித்துறை, பொலிகண்டி) அன்று இந்திய ராணுவத்தால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டார்கள் என்று விசாரிக்க வந்தவருக்கு தெரியாதா என்ன?

அன்றைய தினம் ஒரு சில மணிநேரங்களில் மட்டும் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஆகிய இரண்டு ஊர்களிலும் ஏறக்குறைய நூற்றி அறுபத்தைந்து பொதுமக்கள் வரையில் சைக்கிள் செயின், உலக்கை மற்றும் இரும்புக்கம்பி போன்றவற்றால் மிக மோசமான முறையில் இந்தியராணுவத்தால் தாக்கப்பட்டு ஊறணி வைத்தியசாலை நிரம்பிவழிந்தது இன்னோர் கிளைக்கதை அவலம். ஒருவாறு, நீட்டி முழக்கி மனமின்றி அந்த அதிகாரி அன்று  இந்தியராணுவம் நடத்தி முடித்த ஊழிக்கூத்திற்கு வருந்தி முடித்தார். இனிமேல் அப்படி நடக்காமல் இருக்க தன்னால் ஆனதை செய்கிறேன் என்றும் புலிகள் பற்றி ஏதாவது தெரிந்தால் தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அதிகாரத்துடன் பயமுறுத்தி விட்டுச்சென்றார்.

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இந்திய ராணுவம் அன்று எங்களுக்கு இழைத்த கொடுமைகளுக்குப் பின்னால் அவர்களுக்கு ஏதோ இழப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்றுவரை தெரியாது. எல்லாம் முடிந்த பின் சம்பவம் நடந்த இடத்தில் மிக, மிகச் சிறியளவிலான ஓர் குழி ஆளில்லாத வீட்டின் சுவரோரமாய் இருந்ததை மட்டுமே நாங்கள் பார்த்தோம். கடைசியாய் அந்த அதிகாரி கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி நான் ஆடிப்போய்விட்டேன். அன்று என் சிறியதாயாரை தாக்கிய சிப்பாய்களில் யாரையாவது அடையாளம் தெரியுமா என்பது தான் அவரின் ராணுவ அறிவு சார்ந்த கேள்வி. தனக்கு ஞாபகம் இல்லை என்று என் சித்தி சொன்னதற்கு அவர் உள்ளூர சந்தோசப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஒரேயொரு விடயம் மட்டும் எனக்கு புரியவில்லை அதிகாரி. ஒரேயொரு  சிப்பாய் தாக்கினால் ஒருவேளை நாங்கள் இவர் சொன்னதை பரீட்ச்சித்துப் பார்க்கலாம். ஆனால், இவர்கள் குழுவாக கற்பழிக்கும்போது என்ன செய்திருக்க வேண்டும் நாங்கள். எங்களை நாசம் செய்ய வந்தவர்களிடம், “கொஞ்சம் பொறுப்பா, உன் அடையாளத்தை குறித்துக்கொள்கிறேன், பிறகு சாவகாசமாய் என்னை சீரழித்துவிட்டுப்போ” என்று சொல்லியிருக்கவேண்டுமா? இது தவிர, இவர்களின் சம்பிரதாய விசாரணைகளையும் தாண்டி பொதுப்புத்தி மட்டுமே உள்ள என் மனதில் தொக்கி நின்ற கேள்வி, கட்டளைகளை பிறப்பிக்கும்  ஓர் உயர் ராணுவ அதிகாரிக்கு தெரியாமல், அவரின் சம்மதம் இல்லாமலா இதெல்லாம் நடந்திருக்கும்? ஆனால் அப்படியெல்லாம் நடக்க சந்தர்ப்பம் இல்லை என்பதை தோலுரித்துக்காட்டிய எங்களின் இன்னோர் அவலம் தான் வல்வைப்படுகொலைகள்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

  1. அநீதி என்கிருண்டலும் கண்டிக்கப்பட வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் 
    ஈழம் மட்டுமா ? கஷ்மீர் இலும் தான்

  2. ஒரு ௨௩ வருடங்களக்கு முன் புதிய ஜனநாயகத்தில் படித்த கவிதை ஞாபகம் வருகிறது , தென் ஆசியாவின் முடி சூடா மன்னன்னக்கு தன் நாடும் இல்லலாத காலம் வரும் தீ இட படும் இந்த தீர்ப்பு.

  3. ரதி, இந்த நெடிய பதிவில் இந்திய இராணுவத்தின் இரக்கமற்ற நாட்களின் ரத்தமும் சதையுமான பதிவு இதயத்தை உலுக்கும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. உங்களது எளிய மொழி அருகாமையில் அமர்ந்து கதை சொல்லும் பாங்கில் அமைந்துள்ளதற்கு வாழ்த்துக்கள். உங்களது புலி அபிமான அரசியல் சிக்கலான ஈழ அரசியலை சூழலை தெரிந்து கொள்வதற்கு உங்களிடத்தே தடை ஏற்படுத்தியிருந்தாலும் உங்களின் அகதி வாழ்வு யதார்த்தமாகவே பதிவு செய்யப்படுகிறது. இதிலிருந்து நீங்கள் ஈழத்தின் உண்மையை வருங்காலத்தில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஈழத்தின் நினைவுகளை மீட்டி வருவதற்கு வினவு உங்களை பொருத்தமாக தெரிவு செய்ததற்கு வரவேற்கிறேன்.

    • ரியல் என்கவுண்டர்,

      நான் கூட என் பதிவு வெளியான பின் தான் கவனித்தேன் அது எவ்வளவு நீண்டுவிட்டதென்று. வழக்கமாக ஓர் பதிவு நீண்டு போனால், அதை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற யதார்த்தம் பதிவுலகில் இல்லாமலில்லை. இருந்தாலும் இந்தியராணுவம் பற்றிய என் உணர்வுகளை படித்துப்பார்க்காமல் விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என் நினைவுகளை கோர்வையாக்கி, அதன் வலிகளை வார்த்தைகளில் சொல்லுமுன் நான் பட்ட அவஸ்தை இங்கேயுள்ள பின்னூட்டங்களை (irshad, punjab Ravi, n.madhavan, ரியல் என்கவுண்டர்) பார்த்தபோது சற்றே குறைந்தது போலுள்ளது. இந்திய ராணுவம் பற்றிய என் வலிகளை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்ள ஈழத்தமிழர்கள் சார்பில் எனக்கு சந்தர்ப்பம் கொடுத்த வினவுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். நான் இந்தியராணுவம் பற்றிய என் எனுபவங்களை தான் சொகிறேன் என்றாலும் எத்தனை பேர் உன் வலிகளைச் சொல்லு என்று அதற்கு களம் அமைத்துக்கொடுப்பர்கள்? அடுத்து, என் எளிய மொழி பற்றிய பாராட்டுக்கு நன்றி. 

      • //என் நினைவுகளை கோர்வையாக்கி, அதன் வலிகளை வார்த்தைகளில் சொல்லுமுன் நான் பட்ட அவஸ்தை இங்கேயுள்ள பின்னூட்டங்களை பார்த்தபோது சற்றே குறைந்தது போலுள்ளது.//

        இதே போல முஸ்லீம்களில் வலி குறையவும் நீங்கள் உதவ வேண்டும்.

        உங்கள் பதிவின் அடுத்த அத்தியாயம் முஸ்லிம்களை புலிகள் துரோகிப் பட்டம் கட்டி விரட்டியடித்த நிகழ்வை விளக்கும் எனில் அதற்கு “புலிகளின் ஃ பாசிசம் : சொந்த மண்ணிலிருந்து தமிழ் முஸ்லிம்களை பிரபாகரன் விரட்டியடித்து தலைமுறை தலைமுறையாக அகதிகளாக்கிய கொடுமை” என்று தலைப்பு வைக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

        • Why do you go outside the points?
          Rathi talked about atrocities of Indian army. Why do you get tigers regarding Muslims at this point?
          Did Tigers kill or rape Muslims

      • வித்தகன் கூறுவதுபோல முஸ்லீம்களை கெடு விதித்து விரட்டியடித்த புலிகளின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்க செயல். நீங்கள் கூறும் உங்களுடைய வலிகளைப் போன்றே அவர்களுக்கும் ஆறாத வலியாக அந்நிகழ்வு அமைந்திருக்கும். உங்களுடைய வலிகளை மட்டுமல்லாது அவர்களின் வலிகளையும் நீங்கள் பதிய வேண்டும்.  இப்பொழுதெல்லாம் நீங்கள் விவாதத்தில் கலந்துகொள்வதில்லை.உங்கள் கருத்திற்கு மாற்றமாக‌ விவாதித்தால் உங்களிடம் மவுனமே பதிலாக வருகிறது. ஐயோ பாவம்.நல்லாயிருக்கு, அருமை என்று மட்டும் பின்னூட்டமிடுவதில் என்ன பயனிருக்கும்?

        • //உங்கள் கருத்திற்கு மாற்றமாக‌ விவாதித்தால் உங்களிடம் மவுனமே பதிலாக வருகிறது//

          ஆக, என் கருத்து என்ன என்பது உங்களுக்கு புரிகிறது. என் கருத்தை மற்றவர்கள் புரிந்துகொண்டால் மெளனம் தானே பதில். ஆம், நான் இப்போது மெளனமாகி விட்டேன். காவிரியும், முல்லைப்பெரியாறும், தெலுங்கானாவும் எனக்குள் மெளனத்தை விதைத்துவிட்டன.   

  4. இந்திய அமைதிப்படையின் இன்னுமொரு அட்டூழியத்தை உங்கள் முன் வைக்கிறேன். மாங்குளம் இந்திய இராணுவ தடை முகாம். மதிய நேரம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிரார்கள் (எங்கள் மண்ணில் எங்களுக்கே அன்னியவனால் சோதனை) அப்போது இந்திய ஜவான்களால் வாலிபன் ஒருவன் பின்னால் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கூட்டிவரப்படுகிறான். அவ் வாலிபனின் தோற்றம் அவன் ஏற்கனவே நன்கு தாக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது,அங்கு வந்த இன்னுமொரு ஜவான் அவனை மீண்டும் தாக்குகின்றான், அவ் வாலிபன் செய்த குற்றம், அவனது கிராமத்தில் அவன் வைத்திருந்த கடையில் புலிகளுக்கு சாமான் விற்றது தான். இப்போது ஒரு ஜீப் வருகிறது அதிலிருந்து நான்கைந்து இந்திய மிருகங்கள் இறங்குகின்றன. பயணிகள் எல்லோரும் வரிசையாக நிற்க்க வைக்கப் படுகின்றனர். இப்போது அவ்வாலிபன் இழுத்து வரப்பட்டு அவனது ஆடைகளை களைந்து அவனை தார் வீதியில் மல்லாக்காக படுக்கவைத்து அவனது கால்கள் இரண்டும் கட்டப் படுகின்றன. கயிற்றின் மற்றய முனை ஜீப்பின் பின் பக்கத்தில் கட்டப்படுகிறது இப்போது ஜீப் தார் வீதியில் வேகமாக ஓடுகிறது, அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ,அய்யோ ஓ கடவுளே நீ எங்கே உள்ளாய்…..? அவன் மரணிக்கும் வரை ஜீப்பை ஓட்டிச்சென்ற இந்திய மிருகங்கள் அவன் மரணித்ததும், அவனது சடலத்தை வீதியோரத்தில் போட்டுவிட்டு போய்விட்டனர்.அதனைத் தொடர்ந்து நாம் பஸ்ஸில் அவ் வழியால் சென்றோம்….. அப்போது சற்று முன் உயிருடன் இருந்த அவ் வாலிபனின் உடல் உருக்குலைந்து நாராகி இருந்தது. ஒ இந்தியனே உன்னை மிருகத்துக்கு ஒப்பிட்டால் ,அவை கூட கோபித்துக் கொல்லும்.இப்போது சொல்லுங்கள் ராஜிவுக்கு ஈழத் தமிழர் கொடுத்த தண்டனை பிழையா?

    • RAJIV இக்கு மட்டும் இல்லை குடும்பத்துக்கும் திட்சித் மிருகத்துக்கும் இன்னும்பலர்க்கும் வேண்டும் ஜாய்

  5. //இப்போது சொல்லுங்கள் ராஜிவுக்கு ஈழத் தமிழர் கொடுத்த தண்டனை பிழையா?//

    அது ஈழத் தமிழர் கொடுத்த தண்டனையா? இல்லை புலிகள் கொடுத்த தண்டனையா?

    புலிகள் செய்த ஏராளமான அட்டூழியங்களிலிருந்து ஒன்றை எடுத்து விளக்கி விட்டு “இப்போது சொல்லுங்கள் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் கொடுத்த தண்டனை பிழையா” என்று கேட்பது ஒன்றும் கடினமல்ல. தரம் தாழ்ந்த தமிழ்த் திரைப்படக் கதை போல பழிக்கு பழிக்கு என்ற அளவிலேயே இவர்கள் அறிவு இருக்கிறது. தனி நாடு கிடைக்கத் தேவையான தந்திரோபாய முதிர்ச்சியோ அந்நாடு உருவானால் அது சிங்கள ஆட்சியை விட உயர்வாக இருந்திருக்கும் என்று காட்டவோ எந்த எடுத்துக்காட்டும் கண்ணில் தட்டுப் படவில்லை. ஈழம் இவர்களால் உருவாகியிருந்தால் பிரபாகரனும் அவர்பின் சார்லசும் அதன் பின் அவர் மகனும் என் முடியாட்சிதான் நடந்திருக்கும்.

    இப்போது கிடைத்திருக்கும் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனதற்கு உள்ள பல காரணங்களுல் முக்கியமான ஒன்று, இந்தியத் தமிழர்கள் தான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள் என்று புலிகள் நினைத்த அடி முட்டாள்தனமே. ராஜீவக் கொன்றதையோ இந்திய அமைதிப் படையுடன் சண்டையிட்டதையோ பற்றிப் பீற்றிக் கொள்ளும் போது 17 ஆண்டுகளாக இருந்த கோபம் இன்னும் இந்தியத் தமிழர்களுக்கு அடங்கவில்லை. இந்தியாவிற்கு வந்து தன் வெடிகுண்டு கலாசாரத்தைப் புகுத்த நினைத்தது புலிகள் செய்த பெரும் தவறு. அதனால்தான் இன்று அடியோடு அழிக்கப்பட்டு விட்டார்கள்.

      • தமிழன் உங்கள் ஆழமான விளக்கங்களுக்கு நன்றி… புலி ஆதரவாளர்களின் அறிவிற்கும், பண்பிற்கும், தனி நாடு கிடைத்தால் ஆளும் தகுதிக்கும் நீங்கலி வாழும் உதாரணம்.

        • தமிழன்… என்னை மதிப்பீடு செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை.. தனிப்பட்ட தாக்குதல்களை ஒதுக்கி விட்டு முடிந்தால் உங்கள் கருத்துக்களை விளக்கமாக சொல்லவும்… சொல்லுவதற்கு கருத்து இல்லை கேவலமாக மட்டும்தான் பேசத் தெரியும் என்றால் உங்களுடன் உரையாட எனக்கு ஒன்றுமில்லை…

  6. ஈழத் தமிழர்கள் எவ்வளவு தான் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும் தமிழக மக்கள் மட்டும் புலிகள் வீரம், தியாகம் பற்றி பேசி பெருமை பட்டுக் கொள்வதையும், புலிகள் தவறை (வினையை மறைத்து எதிர்வினையை மட்டும்) பேசுவதையும் நிறுத்தவே மாட்டார்கள். ஈழம் என்று வந்து விட்டாலே சிங்கள இன வெறியர்கள் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய அட்டூழியங்களை விட புலிகளைப் பற்றித்தான் தமிழக மக்கள் அதிகம் பேசுகிறார்கள். இது சிங்களவாதிகள் ஈழத் தமிழர்களை மேலும் மேலும் அடிமைப்படுத்துவதற்கு வழி வகுக்குமே தவிர அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது.

    தோழமையுடன் லெனின்.

  7. லெனின்… இந்தியா ஒரு கொடுங்கோல் ராஜ்ஜியம் போலவும் புலிகள்தான் உலகிலேயே உத்தமர்கள் போலவும் சித்தரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எந்த இந்தியத் தமிழனுக்கும் இல்லை. மேலே ஒரு மறுமொழியில் ஈழத் தமிழர்கள் ராஜீவைத் தண்டித்திருப்பதாக ஒருவர் சொல்லி உள்ளதை, அது புலிகளின் கைங்கரியம் என்று நான் பிரித்து சொல்லியிருப்பதை கவனியுங்கள். ஈழப் பிரச்சினையில் முதல் குற்றவாளிகள் சிங்களர்கள் பின்னர் புலிகள் அதன் பின்தான் 80களில் இருந்த இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது என் நிலைப்பாடு. ஈழம் மலர இனிமேலும் வாய்ப்புக் கிடைத்தால் அந்தப் பூமாலையைப் புலிகள் கையில் கொடுக்கக் கூடாது என்பதால்தான் ரதியோ மற்றவர்களோ ஒவ்வொரு முறை புலி புராணம் பாடும் போதும் இந்தியாவை அவமதிக்கும் போதும் தலையிட வேண்டியிருக்கிறது. தற்பெருமையை நிறுத்திவிட்டு சாதாரண ஈழ மக்களைப் பற்றி மட்டும் பேசும் முதிர்ச்சி இவர்களுக்கு வரும் நாளுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்.

  8. இலங்கை தமிழரின் உண்மையான எதிரி நிச்சயமாக சிங்களவன் இல்லை, இந்தியனே அது. 1947 முதல் சிங்களவனால் இன சுத்திகரிப்பிற்குட்பட்டு அரசியல் ரீதியாக போரிட்டு எதுவுமே கிடைக்காமல், இறுதியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து(1974ல்) சிங்கள ராணுவத்தால் 14 தமிழர்கள் கொல்லப்பட்ட பின்பு , ஆயுதம் ஏந்தினால் தான் தமிழன் தப்பலாம் என்ற நிலை ஏற்பட்ட போது, தமிழ் இளைஞர்கள் தம்முள் ஒன்று சேர்ந்த போது, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து ஆயுதபயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆதரவு தந்தார் இந்திரா காந்தி அம்மையார்.இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இப்போது தமிழீழம் எனும் சுதந்திர தேசம் தனது இருபதாவது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கும், ஆனால் அம்மையாரின் மரணம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.அதன் பின் பதவியேற்ற ராஜிவ் ஆளுமையற்றவராகவே இருந்தார்.இந்திரா காந்தி அம்மையார் இந்திய கொள்கை வகுப்பாளர்களை மிக திறமையாக இயக்கி இருந்தார்.ஆனால் ஆளுமையற்ற ராஜிவை இந்திய கொள்கை வகுப்பாளர்களே இயக்கியிருந்தனர். இந்திய கொள்கை வகுப்பாளர்களில் இருந்த மலையாளிகள் தமிழீழம் அமைவதை விரும்பவில்லை. ராஜிவ் பிழையாக வழி நடத்தப்பட்டார். றோவினால் தமிழ் இயக்கங்களிடையே பிளவுகள் ஏற்படுதப்பட்டன,பிரபாகரனை விட மற்றய அணைவரும் றோவினால் கட்டுப்படுத்தப் பட்டனர்.பிரபாகரன் மிகவும் உக்கிரமாக இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டார்.நெல்லியடியில் நடந்த தாக்குதலில் ஒரே நாளில் 500க்கு மேற்ப்ப்ட்ட ராணுவம் கொல்லப்பட, அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜயவர்த்தனா புலிகளை ஒரு போதும் இலங்கை ராணுவத்தினால் வெல்ல முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். இந்தியனை வைத்தே புலிகளை அழிக்க திட்டமிட்டார்.இந்திரா காந்தியிடம் பலிக்காத ஜயவர்த்தனாவின் தந்திரம் முட்டாள் ராஜிவிடம் பலித்தது, விளைவு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ,நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க் மறுக்கிறார்.ஆணால் இந்தியா அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது.அதன் பின்னர் தமிழீழம் வந்த(கொலை வெறி,கொள்ளை வெறி , காம வெறி) இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் வரலாற்று வடு. விளைவு ராஜிவ் கொலை.ராஜிவ் என்ற மிருகம் கொல்ல பட வேண்டியதுவே. ஏன்? ஒரு சம்பவம் (இந்திய அமைதிப்படையின் அட்டூழியம் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறேன்.
    இந்திய காம வெறியர்களாள் கீரிமலை கிராமம் சுற்றி வளைக்கப்படுகிறது. சிவன் கோவில் அய்யர் வீட்டினுள் வெறியர் நுழைந்தனர். அங்ஙே அய்யர் தனது மனைவி, மகள், மருமகன் உடன் இருகிறார். வெறியர் கூட்டதின் பார்வை அங்குள்ள பெண்கள் மீது படுகிறது.உடனே அய்யரும் மருமகனும் கயிற்றால் கட்டப்படுகின்றனர்.நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த அவர்கள் கத்துகின்றனர்.மிக பெரிய பாரத வல்லரசை அவர்களது கத்தல் என்ன செய்து விட முடியும், வெறியர் கூட்டம் தனது வேலையை காட்டுகிறது, இரு பெண்களும் அவர்களது கணவர், தந்தை கண்களின் முன்கற்பழிக்கப் படுகிறார்கள்.அப்போது கயிற்றுக் கட்டை அறுத்துக் கொண்டு மனைவியை காப்பாற்ற முயற்சித்த அய்யரின்மருமகன் சுட்டுக் கொல்லப் படுகிறார். 14 இந்திய வெறியன்களாள் மாறி மாறி கற்பழிக்கப்பட்ட பின் அந்த பெண்கள் இருவரும் அவர்களது பெண் உறுப்பிலேயே சுட்டுக் கொல்லப் ப்டுகின்றனர்.மூலம் வினோ(வினவு) )இதைப் போல் நூற்றுக்கணக்காண சம்பவங்கள். ராஜிவ் கொலையை எதிர்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி, மேற்கூறப்பட்ட சம்பவம் உங்கள் குடும்பத்தில் நடந்திருந்தால்……? (அதிக வேலைப் பளு காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை.. இன்னொறு சந்தர்ப்பத்தில் இணைந்து கொள்கிறேன்.

    • இதற்கெல்லாம் பதிலளிக்க மாட்டார்கள் போலி இறையாண்மை பேசுபவர்கள்.

    • Anika, 

      //இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இப்போது தமிழீழம் எனும் சுதந்திர தேசம் தனது இருபதாவது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கும்,..// எனக்கு தெரிந்தவரை, நான் அறிந்தவரை இந்திரா காந்தி அமையார், I will not support Tamil Eelam cause, என்று சொன்னதாகத்தான் ஞாபகம். தனி ஈழம் உருவாகுவதை அவரும் விரும்பவில்லை என்பதுதான் நிஜம். அன்றிருந்த பனிப்போர் உலக ஒழுங்கும், 1983 July கலவரத்தால் தமிழ்நாட்டுக்கு/இந்தியாவுக்கு தலைவலியாய் ஆன அகதிப்பிரச்சனையும், தமிழ்நாட்டின் அழுத்தங்களும் தான் இந்தியா/இந்திரா காந்தி அம்மையாரின் ஈழப்பிரச்சனை தலையீட்டிற்கு காரணமாக அமைந்தன. My friend, don’t be euphoric of Indra Gandhi’s intervention in Eezham. ஆனால், இந்திரா காந்தி அம்மையார் இருந்திருந்தால் ஒருவேளை எங்கள் விடியலுக்கான முயற்சி, கனவு எல்லாமே இன்னோர் நூறு வருடங்கள் தள்ளிப்போயிருக்காதோ என்ற நப்பாசை என் மனதிலும் எழாமலிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

      • இந்திரா காந்தி பங்கலேதேஷ் இல் செய்த கொடும்மைகளை
        கேள்விப்படலையா?

  9. சந்தேகத்தில் பிடித்த தமிழ் இளைஞரை சல்லி கல்லு வாயிற்குள் இட்டு பின் கன்னத்தில் குத்தினார்க்ள. அவர் வாயை களுவும் போது பற்களும் கற்களுகம் வந்தன…
    இராணுவ முகாமில் நைலோன் கறிற்நினால் பெருவிரலில் இறுகக் கட்டி தலைகீழாக கட்டி அப்பார்கள். வலியில் துடிக்கும் போது நைகலான் கயிறு இறுகி பெருவிரல் சதையை கிழித்து பெருவிரல் எலும்பில் இறுகி நிற்கும்.. 2அம் மாடியில் நடந்த இந்த சம்வம் சர்மா என்ற கப்ரன் தர அதிகாரியின் முகாமில் நடந்தது.. எனது வீட்டீல் இருந்து பார்க்ககூடியதாக இருந்தது. இப்படி ஆயிரம் ஆயிரம் அநியாயம். இதே சர்மா வன்னிகாட்டீல் ஒரு சிறு புலிப்போராளியிடம் வெடி பட்ட இறந்ததாக ௧௦ வருடங்ளின் பின் அறிநத்தேன். இராசிவ் செத்தபோது ஏற்பட்ட சந்தோசம் அன்றும் ஏற்பட்டது… எம் உணர்வுகள் இந்தியர்களை புண்படுத்தலாம்… யுலியன்வாலபாக் இந்தியவிடுதலைப்போராட்மம் போன்றதுதான் எம் படுகொலைகளும் பேராாட்டடும்

    • பிரபாகரன் மாத்தையாவை எப்படி சித்ரவதை செய்து கொன்றார் என்று கொஞ்சம் விளக்குங்களேன் வெங்கட்டன்!

      • வித்தகன்… பாலர் பாடசாலையில் எங்கள் அப்பா தான் கெட்டிகரன் என்று சின்ன குழந்தை சொல்ல மற்ற குழந்தை சொல்லம் இல்லை எங்கட அப்பா தான் என்று. அதுபோல இருக்கிறது உங்கள் வாதம்.. இந்திய படைகள் செய்யத அட்டுளியத்தை சொன்னால் அதை எற்றுக்கொள்ளுங்கள்..
        தமிழர்களை காக்க வந்ததுதர்ன இந்தயி படை. பன்னியது அனியாயம். அதைச்சொன்னால் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது உங்களின் கேள்வி. அது சரி நீங்களே சொல்லிவிட்டிர்கள் சித்திரவதை செய்து என்று. அதை நான் என் விளங்கப்படுத்தவேண்டும்.. இந்த பதிவு எழுதியவவரை விட்டுவிட்டு என்னை ஏன் கேள்வி கே்ட்கிறீர்கள்?
        மாத்தையா பற்றி அனிக்கா எழுதியதை வாசித்தால் போதும் என நினைக்கிறறேன்.

      • துரோகிகளுக்கு கொடுரம்மான தண்டனை கொடுப்பதில் பிளை இல்லை.எதிரியை மன்னித்தல்லும் துரோகிகளை மன்னிக்கவே முடியாது இன்னும்பலர் வருசையேல் இர்ருக்கெர்ரர்கள் ஒர்ருனால் பதில்வரும்

  10. இந்தியாவை அவமதிக்கும் என்று நீங்கள் கூறுவதுகூட நீங்கள் செய்த அநியாயத்தை சுட்டிக்காட்டினால் ஏற்படும் உங்களின் தேசப்பற்றே காரணம்… எல்லை கடந்த பயங்கரவாதம் பாக்கிஸ்தான் என்றால் இந்தியாவும் எல்லை கடநத் பயங்கரவாதம் தான். அது சரி உங்கள் வல்லரசு இந்தியா எந்த அயல் நாடுடன் நல்லுறவு கொண்டுள்ளது? இந்திய நடுவன் அரசை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இந்திய நாட்டுப்பற்றை குறை கூறவில்லை. அது உங்களுக்கு இருக்கத்தான் வேண்டும். அதற்காக உங்கள் சகோதரர்க்ள கொல்லப்பட்டதையோ சகோதரிகள் கற்பழிக்கப்ட்டதையோ நியாயபுடுத்தாதிர்கள்.. இராசீவ் கொலைக்கு புலிகள் தான் காரணம் என்பதில் நீங்கள் காட்டும் அக்கறை இந்திய படைகள் செய்த அநியயத்தை வெளிகொணரும் போது ஏன் பொங்கவேண்டும். அது சரி.. சொந்த மீனவர்கள் சாகும் போது உங்கள் இந்தியா என்ன புடுங்கிகொண்டிருந்தது… தமிழ் நாட்டு மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்கட்டும். பக்கதது மானிலங்கள் ஒழுங்காக தன்னி திறந்து விடட்டும்.. அப்போது பேசுங்கள் இந்தியா என்று… உங்கள் நாட்டுபற்றுக்கு தலைவணங்கும் நான் அதற்காக இந்தியா செய்யும் அநியாங்களை சுட்டிக்காட்ட தவறாதீர்கள். இந்தியா – இலங்கை யும் அமெரிக்ாக ஈழமும் ஒன்றே.. அமரிக்ாக பாக்கிஸ்தானை பாவிப்பது போலவே இந்தியா புலிகளை பாவித்தது. ஆனால் போராட்டம் எ்னறு சரியான பாதையில் சென்ற புலிகளை அழிக்க மாத்தையாவை பயன்படுத்தியது இந்தியா.. அரசியல் அறிந்து கொண்டு பேசவாருங்கள். இல்லை இந்தியா புராணம் பாடிகொண்டிருங்கள். கன்னடனும் மலையாளியும் ஏறிமிதிப்பான். தமிழ் மீனவர்கள் சாவார்கள்.. நீங்கள் வந்தே மாதரம் என்று அவர்களின் குருதியல் பாடிக்கொண்டிருங்கள்… இந்திய மத்திய அரசு அதற்காக உங்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை.. உங்களைப்போலவே யாழ்பாபண மக்கள் முழுவதும் இந்தியாவிற்கே கிரிகட்டில் ஆதவவு இந்திய அமைதிப்படை வரும் மட்டும்… நானும் கூடட.

    • தமிழகத் தமிழர்கள் இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமைகள். அவர்களின் நாட்டுப் பற்றைக் கண்டு/கேட்டு பக்கத்து மாநிலங்கள் எல்லாம் பல்லிளிக்கின்றன. அது போதாதா, தமிழனுக்கு?

  11. Tamilan,

    //You don’t know the political situations at that time in Jaffna.//  நீங்கள் சொல்வது சரி. எனக்கு அந்த வயதில் அது பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாதுதான். காரணம், அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கூட ஓடிக்கொண்டிருந்ததாகத்தான் எனக்கு ஞாபாகம். ஆனால், புலிகள் இந்த விடயத்தில் தங்கள் தவறையுணர்ந்து மன்னிப்பு கேட்டது தெரிந்ததே. நான் என் அனுபவத்தைத்தான் சொன்னாலும் சிலர் இங்கே நான் ஏதோ புலிகளை புகழ்வதாகவும், இந்தியராணுவத்தை நிந்திப்பதாகவும் தான் பார்க்கிறார்கள். என்னை முத்திரை குத்தி விமர்சிக்க இவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் வேண்டும். நான் எழுதுவதை நிறுத்தவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அதன் விளைவு தான் இது. சிங்கள ராணுவம் ஆயுதம் வைத்துக்கொண்டு தான் எங்களை பாதுகாக்கிறோம் என்றார்கள். ஆனால் கொன்றுகுவித்தார்கள், கொடுமைப்படுத்தினார்கள். இந்திய அமைதிப்படையும் அதே பல்லவியைத்தான் பாடினார்கள். சிங்கள ராணுவத்தை அடியொற்றி நடந்தார்கள். புலிகளும் ஆயுதம் வைத்திருந்தார்கள். நானெல்லாம் ஓர் துரும்பு, பாமரன் (பெண்பால் தெரியவில்லை)  எனக்கு யார் வைத்திருந்த ஆயுதம் என்னை தாக்கவில்லையோ, யார் எனக்காக தங்கள் உயிரை எங்களுக்காக துச்சமாக மதித்தார்களோ அவர்கள் தான் எனக்கு உயந்தவர்களாக தெரிகிறார்கள். இதை நான் அரசியல் கலந்து யோசிக்கவில்லை என்பதே என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. புலிகள் விடயத்தில் எனக்கு அரசியல் அறிவு இல்லையென்றால், அது என் அறியாமையாகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்கு நான் வருந்தவில்லை. ஆனால், என் பதிவில் புலி அரசியல் தேடுபவர்களின் செயலுக்கு நான் என்ன பதில் சொல்ல?  

    • ரதி. உங்கள் பதிவில் புலி அரசியல் தேடுபவர்களின் செயலுக்கு எந்த பதிலும் சொல்லவேண்டியதில்லை. எனக்கு புரிந்த வரை இதில் உங்கள் அனுபவம்தான் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் அதிலிருந்து வழுவாமல், விரக்தியடையாமல், அனுபவமாகவே எழுதினால் போதும். புரிதல் படிப்பவரின் பிரச்சனை.

      • ஐ.பி.கே.எஃ. பற்றிக் குறை சொல்லும் வேகமும் உருக்கமும் புலிகள் செய்துள்ள தவறுகளைக் சுட்டும் போதும் இருக்க வேண்டும் என்பதே என் வாதம்.

        இந்துக் கடவுளரை வணங்கும் தமிழருக்கும், அல்லாவை வணங்கும் தமிழருக்கும் அன்பும் பாசமும் குடும்பப் பற்றும் வழியும் வேதனையும் வெவ்வேறு அளவில் இருக்குமா? ஒரு சாராருக்கு நிகழ்ந்தது அநியாயமெனில் இன்னொரு பிரிவிற்கு நடந்ததும் அதே அளவு அநியாயம் தானே.

        புல்கள் என் காவல் தெய்வங்கள் என்று சொல்லிக் கொள்ளும் ரதியின் வாயிலிருந்து இந்திய ராணுவத்தின் மீது விழும் திட்டுகள் புலி ஆதரவுப் பிரசாரமென இந்தியத் தமிழர்கள் நினைப்பதில் என்ன தவறு?

        • வித்தகன்,

          தெளிவாகச் சொல்லுங்கள் உங்களின் வாதம் தான் என்ன? இந்திய ராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய அட்டூழியங்களை அக்கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் அதை அம்பலப்படுத்தக் கூடாது என்பதா? இல்லை… இந்திய ராணுவம் தவறே செய்யவில்லை என்பதா? இல்லை… இந்திய ராணுவம் ஈழத் தமிழர்களை கொன்றதை விட, புலிகள் முஸ்லிம் மத மக்களை வெளியேறச் சொன்னது மிகப்பெரிய குற்றம் என்பதா? (இந்த இடத்தில் நீங்கள் முஸ்லிம் மக்கள் பற்றிப் பேசியதால் இதை கேட்கிறேன்)… இல்லை… புலிகளைப் பற்றி தினம் தினம் ஒரு வசை பாடும் கட்டுரை வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதா? இல்லை… ரதி அவர்கள் ஒரு புலி அபிமானி என்பதால் அவர் இதை சொல்லக் கூடாது என்பதா?

          மீண்டும் உங்களுக்காக… தோழர் கேள்விக்குறி https://www.vinavu.com/2009/12/04/eelam-rathi-8-ipkf/ என்ற கட்டுரையில் உங்களுக்கு அளித்த மறுமொழியை காணவும்:

          இதை download செய்து நீங்கள் படித்தீர்களா இல்லையா???

          தோழர் கேள்விக்குறி உங்களுக்கு அளித்த மறுமொழி:
          On December 10, 2009 at 12:19 am
          வித்தகன் கீழே உள்ள 3 தொடுப்புகளையும் தரவிறக்கம் செய்து படிக்கவும். இது இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த ‘அட்டுழியங்களின்’ தொகுப்பு. விடுதலைப் புலிகள் வெளியிடானாலும், இதில் உள்ள பல தகவல்கள் இந்திய பத்திரிக்கைகளிலிருந்து பெறப்பட்டவை அவை ஆதாரத்துடன் இருக்கின்றன.
          200MB அளவு. PDF ஃபைல்கள்
          http://www.mediafire.com/?emj0zigyjyu
          http://www.mediafire.com/?i5tzkzyjfny
          http://www.mediafire.com/?tz1mvzdgggz

        • வித்தகன்! ‘அமைதிப்படை’ ‘அமைதியை நிலைனாட்டிய’ கதை வுலகறிந்த உண்மை. இதற்கு புதிதாக ரதியின் பிரச்சாரம் தேவையேயில்லை.

  12. ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டவர்கள் /ஈழத் தமிழர் பிரச்சனையை புரிந்து கொள்ள விரும்புவர்கள் பார்க்க வேண்டிய காட்சி ஊடகத்தில் வரலாற்று பதிவு. http://www.youtube.com/watch?v=3wf2Tr498hk&feature=player_embedded http://www.youtube.com/watch?v=3wf2Tr498hk&feature=player_embedded நன்றி குளோபல் தமிழ்.

  13. பலமுறை பலரின் மொழிகளிலும் வாசித்தறிந்த எங்கள் நாடு உங்களுக்கிழைத்த இக்கொடுமைகளை இன்று உங்கள் மொழியில் வாசிக்கிறபோதும் வலி தராமல் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள் ரதி.

  14. வினவின் கட்டுரைகள் எல்லாம் நீள…மாக இருக்கின்றன. அல்லது படிக்க என் பணிச்சுமை அனுமதிக்கவில்லை. வினவின் கட்டுரையாளர்கள் நீள்..மாகவே இருக்கின்றன. ரதியும் விதிவிலக்கில்லை. பழக்கதோஷம் என்பார்களா! இது தானோ! படித்தால் தானே பின்னூட்டம் இட முடியும் இரண்டொரு நாளில் பின்னூட்டமிடுகிறேன். ரதி தொடர்ந்து எழுதுங்கள்.

  15. இரங்குவோன், செல்வநாயகி, குருத்து, 
    இரங்குவோன், //அமைதிப்படை’ ‘அமைதியை நிலைனாட்டிய’ கதை வுலகறிந்த உண்மை. இதற்கு புதிதாக ரதியின் பிரச்சாரம் தேவையேயில்லை.// நச்சென்று உண்மையை உன்னதாமாக சொன்னீர்கள். செல்வநாயகி, இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்தை எந்த பத்திரிகையும் சொல்லாததை நான் சொல்லவில்லை. அவையெல்லாம் பெரும்பாலும் செய்திகள். இது என்னுடைய உணர்வுகள், அனுபவம். அவ்வளவே. குருத்து, நானும் இப்படி நீஈஈஈஈஈஈஈஈஈ….ளமாய் எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும், என் பதிவு நீண்டுவிடுகிறது. அடுத்த பதிவுகளில் நீங்கள் சொன்னதை கருத்திற் கொண்டு எழுதுகிறேன். நன்றி. 

  16. அருமை சகோதரி,

    தங்களுக்கு நேர்ந்த இந்த கொடுமைகளை கேட்கும் போது இதயம் கனக்கிறது. ஒரு இந்தியனாகவும் தமிழனாகவும் வெக்கபடுகிறேன். உங்களது மன உளைச்சலை கூட பகிர்ந்து கொள்ள முடியாமல் இந்திய இராணுவத்தின் கொடுமைகளை கூற நீங்கள் முற்பட்டது தனி மனித அவலங்களை கூட பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு ஓர் இனம் எவ்வளவு துன்பப்பட்டது என்பதை காட்டுகின்றது. தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை கேட்கும் போது பொறுமைக்கும் அன்பிற்கும் ஓர் இனம் இருந்தால் அந்த இனத்தை உலகம் இவ்வாறு தான் நடத்துமோ என தோன்றுகிறது . என்னால் உங்களுக்கு நடந்த துயரங்களுக்கு மருந்து போட முடியாது, ஆனால் ஒரு சகோதரனாகவும் நண்பனாகவும் உங்கள் துயரங்களை நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன். தங்களை போன்று பாதிப்படைந்த அனைத்து தமிழ் மக்களும் ஆரோக்கியமும் செல்வமும் கல்வியும் பெற்று நீண்ட நாட்கள் வாழ நன் இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  17. அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை.

    சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வீடியோவை பார்க்க……… http://www.youtube.com/watch?v=IjQLETUS7TU&feature=player_embedded

Leave a Reply to punjab Ravi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க