ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற தமிழின அழிப்பு நடவடிக்கையினால் நாங்கள் சொந்தமண்ணில் சொந்தவீடுகளிலிருந்து அகதிகளாய் விரட்டியடிக்கப்பட்டு பாடசாலைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தோம். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை அண்ணளவாக 7KM தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் நடந்தும், ஓடியும் கடந்து பருத்தித்துறையிலுள்ள புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையை அடைந்தோம். உண்மையில் எங்கே போவது என்று தெரியாமல் தான் ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு ஒருவாறாக அவசரம், அவசரமாக முடிவெடுத்து சிங்கள ராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தோம். கோவில்கள் என்றால் நிச்சயம் குண்டு போடுவார்கள். அதனால் பாடசாலை ஒன்றில் புகுந்துகொள்வதே கொஞ்சமாவது பாதுகாப்பு என்று தோன்றியது.
இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல், மருத்துவ வசதியும் கிடைக்காமல் மற்றவர்களுக்கு பாரமாக ஏன் இருக்கவேண்டும் என்று தோன்றியது. எப்படியோ, ஏறக்குறைய நடைப்பிணங்கள் போல் புட்டளை மகாவித்தியாலயத்தை அடைந்தோம். நாங்கள் அங்கு சென்றபோது நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. எந்தவொரு வெளிச்சமும் இல்லாமல் மனிதக்குரல்கள் பேச்சும் அழுகையுமாக கேட்டுக்கொண்டிருந்தது.
பெரியவர்களின் அழுகை, பேச்சுக்குரல்கள், குழந்தைகளின் அழுகை, எல்லாமே கலந்து எதோ ஒரு விவரிக்கமுடியாத வலி மனதைப்பிசைந்து கொண்டிருந்தது. ஒருவாறாக இருளில் தட்டி தடவி எதோ ஓர் வகுப்பறையில் ஒதுங்க கொஞ்சம் இடம் கிடைத்தது. பசி, தாகம், தூக்கம், வலி என்று எதுவுமே அறியாதபடி ராணுவம் எங்களை என்ன செய்யப்போகிறதோ என்ற பயம் மட்டுமே என்னையும் மற்றும் அனைவரையுமே வாட்டிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று உயிர் பதைக்க காத்திருந்தோம்.
இப்போது இதை எழுதும் போது தான் தோன்றுகிறது. இதைத்தான் அவலம் என்பார்களா? என்னால் உண்மையிலேயே அந்த உணர்வை வார்த்தைகளில் வர்ணிக்க முடியவில்லை. ராணுவ அடக்குமுறைக்கு பணிந்து, பயந்து வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் ஏனோ உயிரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விதமாக என்மீதே எனக்கு வெறுப்பாகவும் இருந்தது. உயிரோடு இருப்பது கூட கோழைத்தனம் என்பது போலெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். முகாமில் இடப்பற்றாக்குறை காரணமாக ஆண், பெண் என்ற பேதங்கள் ஏதுமின்றி எல்லோரும் நெருக்கியடித்துக்கொண்டுதான் இருக்கவேண்டியிருந்தது.
பாடசாலை வகுப்பறையில் இருந்த தளபாடங்களை ஓர் ஓரமாக ஒதுக்கி விட்டு கட்டாந்தரையில் உட்கார்ந்தும், சிலர் தூங்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பெரியவர்களின் மடிகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். என்ன நேரம் என்றும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலும் யாருக்கும் இருக்கவில்லை. அங்கிருந்தவர்களில் பலர் தங்கள் மற்றைய உறவுகளுக்கு, அயலவர்களுக்கு என்ன நடந்ததோ என்றும், குண்டுவீச்சில் தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள். அதை தவிர வேறென்ன செய்யமுடியும்?
மலசல கூடம் எங்கேயிருக்கிறது என்றும் தெரியாது. தண்ணீர் எங்கே கிடைக்கும் என்றும் தெரியாது. தெரிந்தாலும் அந்த இருளில் ராணுவம் எங்கேயாவது மறைந்து நின்று தாக்குமோ என்ற பயப்பீதியில் யாருமே அதைப்பற்றியெல்லாம் பேசக்கூட நினைக்கவில்லை. பொழுது விடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் பொறுமையோடு காத்திருந்தேன். பொழுது மட்டும் தான் விடியும். ஈழத்தமிழர்களின் தலைவிதி விடியுமா என்ன? எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியவில்லை.
ஒருவாறாக சூரிய வெளிச்சம் தலைகாட்டத்தொடங்கியது. கூடவே சிங்களராணுவம் பற்றிய பயமும் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கும் மனிததலைகளாக தெரிந்தது. எள் போட்டால் எண்ணையாகும் அளவிற்கு மனிதர்களால் அந்த பாடசாலை நிரம்பி வழிந்தது. இயற்கை உபாதை வேறு உயிரை வாங்கிக்கொண்டிருந்தது. சரி என்ன செய்வதென்று முழித்துக்கொண்டு இருந்தவேளை எங்களுக்கு அருகில் இருந்தவர்கள் தங்கள் வீடு பாடசாலைக்கு முன்னால் இருப்பதாகவும், வேண்டுமானால் தங்களோடு வரும்படியும் கூறினார்கள். அந்த நேரத்தில் உண்மையில் அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு.
அவர்கள் வீட்டிற்கு சென்று அவசரமாக காலைகடன்களை முடித்துக்கொண்டு மறுபடியும் அகதிமுகாமுக்கு திரும்பினோம். ஆனால், மக்கள் தொகை கூடிய பின் அவர்கள் எத்தனை பேரை தங்கள் வீடிற்கு அழைத்து செல்ல முடியும். அதனால் நாசூக்காக எங்களையும் வரவேண்டாம் என்று சொன்னார்கள். அவர்களை கோபித்துக்கொள்ளவும் முடியாது. அதனால், அந்த பாடாசாலைக்கு அருகிலுள்ள ஓர் சிறிய அதிகம் அடர்த்தியில்லாத பனங்கூடல் தான் மலசல கூடமாக மாறியது. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், அதுவும் அதிகாலை ஒரு மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் போனால் தான் உண்டு. இல்லையென்றால் சூரிய வெளிச்சம் எங்களின் பிட்டங்களை படம் பிடித்துக் காட்டிவிடும். அந்த அகால நேரத்தில் எங்காவது மறைந்து நின்று சிங்களராணுவம் பிட்டத்தில் சுட்டுவிடுமே என்ற பயமும் கூட இருந்தது.
இது தவிர நான் மாற்றுடுப்புகள் இல்லாமலும், குளிக்க வசதிகள் இல்லாமலும், இயற்கை பெண்களுக்கு அளித்த தண்டனையினாலும் நாறிய கதையெல்லாம் இங்கே தவிர்த்திருக்கிறேன். பெண்களுக்கு மட்டுமே அந்த நரகவேதனை புரியும். என் அனுபவத்தை நான் தவிர்த்தாலும் எங்கள் சகோதரிகள் வதைமுகாம்களில் இதைவிட மோசமாகத்தான் இன்று பாதிக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். என் உறவினர் ஒருவர் சொன்னார் குளிப்பதற்கு தண்ணீரின்றி இருப்பதால், இவர்களுக்கு பக்கத்தில் போனாலே ஓர் விதமான நாற்றம் அவர்கள் உடம்பிலிருந்து வருவதாக. இதுவும் எங்களின் அவலத்தின் ஓர் அங்கம் தான்.
அப்போதெல்லாம் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எந்தவொரு தொண்டு நிறுவனங்களும் இருந்ததில்லை. இப்போது வதைமுகாம்களில் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசால் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. வெறும் ஆயிரத்திச் சொச்ச மாணவர்களே படிக்கக்கூடிய எந்த வசதிகளும் அற்ற ஓர் பொது பாடசாலையில் எத்தனை ஆயிரம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி ஒரு நாளையேனும் தள்ள முடியும்? வீட்டிலுள்ள பெரியவர்கள் தான் சாப்பாடு, தண்ணீர் என்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத்தொடங்கினார்கள்.
அந்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ள மக்கள் சில சமையல் பாத்திரங்களை கொடுத்தார்கள். அரிசி, மரக்கறி என்று ஏதோ கிடைத்ததை வீட்டிலுள்ள ஆண்கள் கொண்டுவந்தார்கள். எல்லாவற்றையும் ஒன்றாக அவித்து ஏதோ சாப்பாடு என்ற பெயரில் அரை வயிறும், கால்வயிறுமாக உண்டு உயிரை பிடித்து வைத்துக்கொண்டோம். கிடைத்த இரண்டு தட்டுக்களில் முறைவைத்து உணவு பரிமாறப்பட்டது. பெரியவர்கள் பரவாயில்லை. குழந்தைகள் அதையெல்லாம் சாப்பிடவும் கஷ்டப்பட்டு, வேறு உணவு கிடைக்காததால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஈழத்தில் ரேஷன் கடைகளை பல நோக்கு கூட்டுறவு “சங்க கடை” என்றுதான் அழைப்பார்கள். உணவுப்பற்றாக்குறை காரணமாக அருகிலுள்ள ஊர்களிலிருந்த சங்க கடைகளை உடைத்து தான் அரிசி பருப்பு என்று முடியுமானவரை ஊர் விதானைகள் (கிராம சேவையாளர்கள்) மக்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அது வேறு விதமாகத்தான் முடிந்தது. ஒரு நாள் அங்கிருந்த மக்கள் ஓர் இடத்தில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக அந்த பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.
நானும் வரிசையில் நின்றால் ஏதாவது கிடைக்கும் என்று ஓடினேன். ஆனால், அங்கு நான் கண்ட அவலக்காட்சி என்னை தாக்கியதால் அப்படியே ஸ்தம்பித்து சிலை போல் நின்றுவிட்டேன். அப்படியே பார்த்துக்கொண்டே நின்றேன். அங்கே மக்கள் தொகையைவிட உணவின் அளவு மிகச்சிறியளவில் இருந்ததால் எல்லோரும் முண்டியடித்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, ஒருவர் கையில் இருந்ததை மற்றவர் பறித்தும் பெரிய போரே உணவுக்காக நடந்துகொண்டிருந்தது.
அந்த கூட்ட நெரிசலின் அடியில் இரண்டு பெண்மணிகள் ஒரு Lakspray பால் பெளடர் பையிற்காக தாங்கள் யாரென்றே தெரியாமல், ஒருவரையொருவர் பார்க்காமல் இழுபறி பட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்ற எனக்குத்தானே தெரியும் அவர்கள் இருவருமே என் சிறியதாய்மார்கள் என்பது. ஒருவாறு ஒருவரை மற்றவருக்கு அடையாளம் காட்டி விலக்கிவிட்ட பிறகுதான் இருவருமே ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர். இருவருமே ஒருவரின் குழந்தைகளுக்காகத்தான் பால்மா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இப்போது இதை நாங்கள் சொல்லி சிரித்துக்கொள்வதும் உண்டு. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் அது வேதனையாக இருந்தது. நல்ல வேளை, அந்த சாப்பாடிற்கான போராட்டத்தில் கூட்டத்தில் நசுங்கி யாருமே இறக்கவில்லை என்றுதான் நிம்மதிப்பெருமூச்சு விட முடிந்தது. இது எங்கள் அவலத்தின் இன்னோர் வடிவம். எங்களை தெருநாய்களைப்போல் உணவிற்காகப் போட்டிபோடவைத்து பிறகு அதை காட்சியாக்கி தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்கிறது சிங்களப்பேரினவாதம். வன்னியிலும் இதைத்தானே செய்தார்கள். இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அன்று எங்களுக்கு நல்லவேளையாக தண்ணீர் பிரச்சனை ஓரளவிற்கு சமாளிக்ககூடியதாகவே இருந்தது. பாடசாலையில் ஓர் துலா கிணறு ஒன்றிருந்தது. அதை யாரும் குளிப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ பாவிக்காமல் குடிதண்ணீர் தேவைகளுக்கு மட்டுமே பாவிக்கும்படி யாரோ சொல்லியிருந்தார்கள். அதனால் ஓரளவிற்கு குடிதண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்தது. இன்று, வதைமுகாம்களில் குடிதண்ணீருக்காக நாட்கணக்கில் கூட அவர்கள் வரிசையில் வாடவேண்டிய அவலம். இவ்வாறாக முகாம்களில் எங்கள் அடிப்படைவசதிகள் பற்றிய அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், அதை அனுபவித்தால் தான் அதன் வலியை உணர முடியும். எங்கள் உறவுகளை மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் போல காட்சிப்பொருளாகவும், அந்த மிருகக்காட்சிசாலையின் காவலர்களான அரசியல்வாதிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு, கூடவே அறிக்கைகளும் விட்டு எங்களின் வலிகளுக்கு மென்மேலும் அவலச்சுவை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை வசதிப்பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, ராணுவம் பற்றிய பயபீதியும் விவரிக்க முடியாத ஒன்றுதான். எங்களின் அவலங்களிலேயே வலிகூடிய அவலம் என்றால் அது ராணுவ அட்டூழியம் தான். முதலாவது நாள் ராணுவம் பற்றிய எந்தவொரு செய்தியும் யாருக்கும் தெரியாமல் ஏதோவொரு பதட்டத்துடனேயே பொழுது கழிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக ராணுவம் முகாமிற்குள் வரும் என்று சிறு குழந்தைக்குகூட தெரியும். இரண்டவது நாள் காலையில் நான் தங்கியிருந்த வகுப்பறையில் இருந்தேன். வேறேது போக்கிடம் எங்களுக்கு. திடீரென்று மக்களின் பேச்சொலிகள் அடங்கி, குழந்தைகளின் அழுகைச்சத்தமும் குறைந்து ஏதோவொரு அமைதி நிலவியது. பக்கென்று விவரிக்கமுடியாத பயத்தில் எனக்கு சர்வமும் அடங்கியது போலிருந்தது.
மரணத்தின் தூதுவர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அந்த திடீர் அமைதி என் செவிகளிலும், மனதிலும் அறைந்தாற்போல் சொல்லியது. குண்டுச்சத்தங்களை விடவும் இந்த அமைதி அதிக பயத்தை கொடுத்தது. என்னை சுற்றியுள்ளவர்களின் முகங்களையும் பார்த்தேன். பெரியவர்கள், சிறுவர்கள் என்று எல்லோருடைய முகங்களும் பயத்தில் இறுகிப்போயிருந்தன. எல்லோருடைய முகங்களிலும் தெரிந்தது பயம், பயம், வார்த்தைகளில் அடங்காத பயம் என்ற உணர்வுதான். மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தேன். வரிசையாக இரும்புத்தொப்பிகளும், துப்பாக்கிகளும் நரவேட்டைக்காய் முகாமிற்குள்ளே அணிவகுத்து வந்துகொண்டிருந்தன.
என்னை கற்பழித்துவிட்டு கொல்வார்களா? அல்லது போகிறபோக்கில் தெருநாயைப்போல் சுட்டுவிட்டுப்போவார்களா? என் சாவு எப்படியிருக்கும்? என்னை பிடித்துச்சென்றால் சித்திரவதை செய்வார்களா? ஐயோ, அதை எப்படி தாங்க முடியும்? பயப்பிராந்தியில் தாறுமாறாக என் மனதில் கேள்விகள் ஓடத்தொடங்கின.
சர்வநாடியும் அடங்கி ஒடுங்கிய படியே என்னைச்சுற்றி நடப்பதை ஊமைப்படம் போல் பார்த்துக்கொண்டிருந்தேன். ராணுவம் ஒவ்வொரு ஆண்மகனாக சுட்டுவிரலால் சுட்டி எழும்பச்சொல்லி, வரிசையாக நிற்கவைத்துக்கொண்டிருந்தார்கள். மாணவர்கள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று எந்த வயது வித்தியாசம் இல்லாமல்தான் கைதுகள் நடந்துகொண்டிருந்தன. சில சகோதரர்களை என்ன காரணத்திற்கு என்று தெரியாமலே நிலத்தில் போட்டு தங்கள் சப்பாத்து கால்களால் மிதித்துக்கொண்டு இருந்தார்கள். அடிவாங்கியவர்கள் தங்கள் கைகளால் தடுக்க முயற்சி செய்தார்களேயன்றி ஏனோ வாய்விட்டு அழக்கூட திராணியற்றவர்களாக மிருகங்களாய் மிதிபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அந்த வெறி பிடித்த ராணுவத்தை யாரால் தடுக்க முடியும்? அன்றும் சரி, இன்று இதை எழுதும் போதும் சரி என் மனம் அந்த ரணத்தால் வலிக்கிறது. பேசாமல் எழுதுவதை மூட்டைகட்டிவிட்டு ஏதாவதொரு மூலையில் முடங்கி அழவேண்டும் போலுள்ளது. ஆனால், அழுவதால் மட்டும் எங்கள் வலி ஆறாது என்றும் என் அறிவுசார் மனம் சொல்கிறது. யாராவது பெண்களையும் பிடித்துச் செல்கிறார்களா என்று என் கண்கள் சுழன்று, சுழன்று தேடின. அப்படி யாரையும் அழைத்துச் செல்வதாக என் கண்ணில் படவில்லை.
ஆனாலும் என் சகோதரர்களின் நிலையைப் பார்க்கும் போது வேதனையாகத்தானிருந்தது. கைதாகிய சகோதரர்களை துப்பாக்கிகளால் நெட்டித்தள்ளியும், பிடரியில் அடித்தும் அடிமைகளாய் அழைத்துச் சென்றார்கள். இதில் எங்கள் வீட்டு ஆண்களும் அடங்குவர். ஆண்டுகள் கடந்தாலும் அவலங்கள் மட்டும் வதைமுகாம் வடிவில் இன்னும் தொடர்கதைகளாய் தொடர்கிறது. ஆண், பெண், வயதானவர்கள், சிறுவர்கள் என்ற எந்த வரையறைகளுமின்றி கைதுகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் யாரிடமும் நாங்கள் முறையிட முடிகிறதா? காப்பாற்றுங்கள் என்று அவலக்குரல் எழுப்பினாலே எங்கள் குரல்வளைகளை நெரிக்க அரசியல்வாதிகள் முதல் ராணுவம் வரை ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். .
ஏறக்குறைய அந்த முகாமிலுள்ள ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அடுத்த நொடியே பெண்களின் அழுகையொலிகள், ஒப்பாரிகள் என்று முகாமையே உலுக்கியது. “நாசமாப்போவான்கள்” என்று மண்ணைவாரி தூற்றிக்கொண்டிருந்தார்கள் சில தாய்மார்கள். கைதாகி அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களின் குழந்தைகள் சிலர் “அப்பா, அப்பா” என்று குழறி அழுதுகொண்டிருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் சிங்கள ராணுவத்தின் மனதை கரைக்கவில்லை. ஒருவேளை கணவன் திரும்பி வராமலே போனால் ஆதரவில்லாமல் தன்னுடையதும், தன் குழந்தைகளினதும் வாழ்க்கை என்னாகுமோ என்ற விடைதெரியாத கேள்விகளுடன், அதை சொல்லியழத் தெரியாமல் எத்தனையோ மனைவிமார்களையும் பார்த்த போது………எனக்கு வார்த்தை வரவில்லை.
ஆனால், எல்லோருடைய மனதிலும் தொக்கி நின்ற கேள்வி என் மகன், என் கணவன், என் சகோதரன் உயிருடன் திரும்பி வருவானா என்பதுதான். என் உறவினர்களும் ஆளுக்கொரு மூலையில் இருந்து அழுதுகொண்டிருந்தார்கள். என் பாட்டி தான் கொஞ்சம் புலம்பிப் புலம்பி ஏதேதோ அரற்றிக்கொண்டிருந்தார். பக்கத்தில் சென்று “அழாதே” என்று சொன்னால் இயலாமையிலும் வேதனையிலும் பாட்டி கண்டபடி என்னை திட்டத்தொடங்குவார். அதனால், மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்தேன். விழியோரத்தில் கண்ணீர் மட்டும் என்னையும் அறியாமல் வழிந்து கொண்டிருந்தது.
அந்த அழுகை ஒலிகளுக்கு நடுவிலும் ஏதாவது துப்பாக்கிச் சத்தம் கேட்கிறதா என்று காதைக்கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். காரணம், சிங்கள ராணுவம் போகிற போக்கிலேயே பிடித்துச்சென்றவர்களை வீதியில் வைத்து சுட்டு எறிந்து விட்டும் செல்வார்கள். முகம் சிதைபடாமல் இருந்தால் உடனேயே யாரென்று அடையாளம் காணலாம். ஒப்பரேஷன் லிபரேஷன் போது இப்படி வீதிகளில் பலபேர் பிணங்களாய் ஆக்கப்பட்டவர்கள்தான்.
எங்களோடு அந்த பாடசாலை வகுப்பறையில் இருந்த ஓர் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வீதியில் பிணமாய் கிடந்தார். அவரின் அங்க அடையாளங்களை வைத்துத்தான் அவரை குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அவரின் உறவினர்கள் எல்லோரும் இறுதியாய் தெருவிலேயே கூடியழுதுவிட்டு, பக்கத்திலேயே எங்கோ உடலைப் புதைத்துவிட்டு வந்தார்கள். ராணுவ கெடுபிடிகளால் உடல்களை பெரும்பாலும் அச்சமயத்தில் சுடுகாட்டிற்கு கொண்டுசென்று எரிக்கமுடியவில்லை.
சிங்கள ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சிலர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். சிலர் அடுத்தநாளும், சிலர் சில நாட்களின் பின்பும் விடுவிக்கப்பட்டனர். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ராணுவத்திடம் நிறைய அடிவாங்கி முகாமிற்கு திரும்பி வந்தார்கள். நாங்கள் முகாமில் இருக்கும் வரை திரும்பி வராதவர்களும், திரும்பியே வராதவர்களும் கூட இருக்கிறரர்கள். ஒவ்வொரு பதிவிலும் இதைத்தானே சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் இது இன்று ஓர் அன்றாட நிகழ்வாகிப் போனதால் நான்/நாங்கள் தொடர்ந்தும் இதைப் பேசவேண்டியுள்ளது.
அந்த நாட்களில் ராணுவம் கைது செய்து கொண்டு போனாலும் யாரும் அவர்களின் முகாமிற்கு சென்று பார்க்கவோ பேசவோ முடியாது. எந்தவொரு அமைப்பிடமும் முறையிடவும் முடியாது. கைதானவர்கள் திரும்பி வந்தால் கண்டுகொள்ள வேண்டியதுதான். ஒரு மனைவி கணவன் இறந்து விட்டானா அல்லது உயிருடன் திரும்பி வருவானா என்று எவ்வளவு காலம் பதில் தெரியாமல் காத்திருக்க வேண்டும்? ஆனால், ஈழத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் இப்படி இன்றுவரை காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சொல்லத்தொடங்கினால் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும் எங்கள் அவலங்களின் பட்டியல்.
எத்தனை நாட்கள் இப்படி ஓர் பாடசாலையில் எந்தவொரு அடிப்படைவசதி இல்லாமலும், ராணுவம் எப்போது வந்து யாரை கொண்டு போகுமோ என்ற பீதியுடனும் நாட்களை நகர்த்த முடியும். சிங்கள ராணுவம் வடமராட்சியை கைப்பற்றிய பின் யாழ்ப்பாண நகர்ப்பகுதியையும், தென்மராட்சியையும் கைப்பற்றும் என்றும் தெரியும். ஆனாலும், தற்காலிகமாக ராணுவத்திடமிருந்து தப்பிக்கொள்ள இந்த இரண்டில் ஓர் இடம்தான் கதி. யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு போக முடியாது. அது நீண்டவழி. போக்குவரத்து வசதியும் கிடையாது. அதனால், தென்மராட்சிக்கு போவதாக வீட்டில் முடிவெடுத்தார்கள். எங்களுக்கு அங்கு உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ கூட கிடையாது. குறைந்த பட்சம் ஓர் கோவிலோ, மடமோ ராணுவ அட்டூழியம் இல்லாத ஓர் இடமாக இருந்தால் போதுமென்றிருந்தது. தவிரவும், ராணுவம் வேறு எல்லோரும் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று அறிவித்திருந்தார்கள்.
ஆனால், வீடுகளுக்கு திரும்பிப் போவது என்பது ஏதோ கொலைக்களத்திற்கு போவது போன்ற ஓர் உணர்வாகவே இருந்தது. தென்மராட்சிக்கு போக முன்னர் ஒருதடவை மறுபடியும் வீட்டுக்கு போய் மாற்றுடுப்புகளாவது எடுத்துக்கொண்டு போகலாம் என்று என் தாயாரும், பாட்டியும் ஊருக்கு போகத் தீர்மானித்தார்கள். அவர்கள் வரும்வரை மீதிப்பேர் முகாமில் இருப்பது என்று முடிவெடுத்தோம். எங்களோடு வந்திருந்த சாமிமாமாவின் மனைவி தன்னை ராணுவம் சுட்டாலும் பரவாயில்லை என்று ஏற்கனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார்.
ஊருக்கு நடந்து போய் நடந்து வரவேண்டும். எந்தவொரு போக்குவரத்து ஊடகமும் கிடையாது. போனவர்கள் உயிருடன் திரும்பவேண்டுமே. போன இருவரும் திரும்பி வரும்வரை உயிர் பதைக்க காத்திருந்தோம். எனக்கு தந்தை இல்லை, தாயார் மட்டுமே. அந்த போர் சூழலில் வாழ்ந்ததாலோ என்னவோ எங்கள் ஈழப்பெண்கள் ஓரளவிற்கு பிரச்சனைகளை சமாளிக்கும் சாதுர்யமும் வலுவும் பெற்றிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் சிங்கள ராணுவத்தின் இரக்கமற்ற இயல்பு தெரிந்தும் யாரும் துணிந்து இப்படியெல்லாம் போவார்களா? இருவரும் போய் எங்கள் பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பிவந்தார்கள்.
இருவருமே உடைமைகள் எரிக்கப்பட்டும் பல உயிர்கள் காவுவாங்கப்பட்டும் இருப்பதை பார்த்தும், கேட்டும் நிறையவே பயந்து போயிருந்தார்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக கிளம்பிப் போகவேண்டும் என்றார்கள். வடமராட்சியில் இருந்து தென்மராட்சிக்கு அண்ணளவாக 18KM இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள், காலையில் முகாமில் இருந்து புறப்பட்டு நீண்டதூரம் முதலில் கடற்கரையோரமாகவும் பிறகு குறுக்குவழிகளின் ஊடாகவும் நடந்து தான் தென்மராட்சிக்கு போனோம்.
ஒருவேளை போகும் வழியில் ராணுவம் மறித்து அடையாள அட்டையிலுள்ள ஊருக்குப் போகாமல் ஏன் வேறு திசையில் போகிறீர்கள் என்று கேட்டால் எல்லோருமே ஒரே பதிலை சொல்லவேண்டும் என்று பேசிவைத்துக்கொண்டோம். ராணுவத்திற்கு பயந்துதான் ஊரை விட்டுபோகிறோம் என்று சொல்ல முடியுமா? ஊரில் எங்களின் வீடுகள் எரிந்துவிட்டது, குண்டுவீச்சில் உடைந்துவிட்டது இருக்க இடமில்லை அதனால் உறவினர் வீட்டுக்கு செல்வதாக எல்லோரும் ஒரே பதிலை சொல்லவேண்டும் என்று தீர்மானித்தோம். ஆனால், இதை ராணுவம் ஏற்றுக்கொள்ளுமா என்பதெல்லாம் வேறுகதை.
எங்கள் வீடு எரிக்கப்படவில்லை. ஆனால், வீட்டிலுள்ள அத்தனை பொருட்களுமே உடைக்கப்பட்டும், சில பொருட்கள் திருட்டுப்போயும் இருந்தன. நல்லவேளையாக ராணுவத்தின் கண்ணில் அகப்படாமலே ஒருவாறு தப்பிவிட்டோம். நாங்கள் போகும் வழியில் கடற்கரையோரத்தில் உள்ள ஊர்களுக்கு ராணுவம் இன்னும் செல்லாததால் அவர்களுக்கு ராணுவம் வடமராட்சியை கைப்பற்றியது தெரிந்திருக்கவில்லை. வெடிச்சத்தங்கள் நிறையவே கேட்டதாகச் சொன்னார்கள். எங்களையும், எங்களின் கோலங்களையும் பார்த்தவர்களுக்கு நாங்கள் எதையுமே அதிகம் விளக்கத்தேவையில்லாமல் இருந்தது. உங்களுக்கு பின்னால் நாங்களும் தென்மராட்சிக்கு வருவதுதான் நல்லது என்றார்கள்.
ஒருவாறாக தென்மராட்சியை அடைந்தபோது ஏதோ ஓர் நிம்மதியாக இருந்தது. தென்மராட்சியில் மிருசுவில் என்ற இடத்தில் தான் ஓர் வீதியோரமாக இருந்த புளியமரத்தின் கீழ் மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்திருந்தோம். அதற்கு மேல் எங்கே போவது என்று தெரியவில்லை. அந்த ஊரில் தங்குவற்கு அருகில் கோவில் அல்லது மடம் இப்படி ஏதாவது இருக்குமா என்று யாரையாவது கேட்கலாம் என்று, யாராவது வருகிறார்களா என்று வீதியோரத்தில் காத்துக்கிடந்தோம். இருட்ட வேறு தொடங்கியிருந்தது. கொஞ்சநேரம் கழித்து அந்த வழியில் சைக்கிளில் வந்த ஒருவர் எங்களிடம் வந்து, “எங்க வடமராட்சியில் இருந்து வாறியளோ”? என்றார். நாங்கள் பதில் சொன்னதும், “உங்களைப்போல் நிறையப்பேர் வந்திருக்கினம். இங்கேயே இருங்கோ நான் போய் உங்களுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்புகிறேன்” என்றார்.
சிறிது நேரம் கழித்து சில இளைஞர்கள் சைக்கிளில் வந்தார்கள். எங்களை அழைத்துச் சென்று ஓர் வீட்டில் தங்க ஏற்பாடுகளை செய்தார்கள். அதை வீடு என்பதா என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியவில்லை. காரணம், அங்கிருந்தது ஒரேயொரு மூதாட்டி. அவர் ஏதோ தீட்சை பெற்றவராம். அவருடைய பரம்பரையில் எல்லோருமே சமாதியடைந்தவர்களாம். அவர் எங்களை பார்த்த பார்வையே ஏதோ விரோதியைப் பார்ப்பது போலிருந்தது. ஒருவேளை நாங்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோம் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஆனாலும், அவர் எங்களை வெளியே போ என்றெல்லாம் சொல்லவில்லை.
எங்களை அழைத்து வந்தவர்கள் ஏற்கனவே அந்த மூதாட்டியின் ஆச்சார அனுஷ்டானங்களைப் பற்றி எச்சரிக்கை செய்து, அனுசரித்துப்போங்கள் என்று சொல்லியிருந்தார்கள். சிங்கள ராணுவத்தை விட இவரை அனுசரிப்பது ஒன்றும் எங்களுக்கு பிரச்சனை இல்லையே. அந்த இளைஞர்கள் எங்களிடம் சாப்பாட்டிற்கு சமையல் செலவுக்கு பணம் இருக்கிறதா என்றெல்லாம் திருப்பித் திருப்பி கேட்டார்கள். தொடர்ந்து இரண்டு நாட்கள் வந்து நாங்கள் எப்படியிருக்கிறோம் என்று விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் யார் என்று நாங்கள் கேட்டதிற்கு, தாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்றார்கள். அந்த மூதாட்டியும், அந்த ஊரில் எங்களுக்கு உதவியவர்களும் இன்றும் என் மனதில் இருக்கிறார்கள்.
அந்த மூதாட்டியின் ஆசாரத்திற்கு பங்கம் வராமல் முற்றத்திலேயே அடுப்பு மூட்டி சமையல் செய்தோம். முற்றத்திலேயே தூங்கினோம். நல்லவேளை அது மழைக்காலம் இல்லை. இப்படி கொஞ்ச நாட்கள் கழிந்தன. ஒருநாள் வழக்கம் போல் மல்லாக்காக படுத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்கு என்றைக்குமே இல்லாத எதிர்காலத்தை நினைத்து ஏதோ சிந்தனையில் இருந்தேன்.
வெளியே சென்றிருந்த என் சித்தப்பா வந்து, “சரி, சரி இந்தியன் ஆமி வந்திட்டானாம் எல்லாரும் வெளிக்கிடுங்கோ ஊருக்கு போவம்” என்றார். ஊருக்கு, எங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பிப் போகப்போகிறோம் என்று சந்தோசமாக இருந்தாலும் மறுபடியும் ஆமியா என்று ஏதோவொன்று முள்ளாய் என் அடிமனதில் தைத்தது.
தொடரும்
–ரதி
தொடர்புடைய பதிவுகள்
ஈழம்: துயரங்களின் குவியல்!…
இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல், https://www.vinavu.com/2009/11/13/eelam-rathi-7/trackback/…
intha katturai ennai ezham paguthike kondu sendrathu.ilangai tamil makkal prechanayil ilangai arasai nirbanthikum vagayil iropiya ondriya nadugal pesi varuvathu sirantha munnetram thane,oru vagayil athanudaya nadunilamayai nirubithullathu.ithu patri vinavin karuthu enna?
ரதியோட கட்டுரை இப்பத்த முகாம்கள் எப்படியிருக்குமுனு வெவரமா காட்டுது. பார்ப்பான், இசுலாத்தில் விவாதிக்குற மக்களே கொஞ்சம் ஈழத்து பக்கமும் எட்டிப்பாருங்கடே
பல ராணுவங்கள் வெறும் அரசுகளின் அடியாள் படையாக மட்டும் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பல வருட போராட்டத்திற்கு பிறகு இன்றும் ஈழ மக்கள் ராணுவத்தின் பார்வையில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருப்பதை நினைத்தால் நெஞ்சு கனக்கிறது.
நண்பர் ரதி, ஒரு சந்தேகம், தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் , சிங்கள மக்களும் வாழ்ந்தனரா.. ஆம் எனில், அவர்களுக்கு இடையேயான உறவை பற்றி மறு மொழியிலோ அல்லது இனி வரும் கட்டுரைகளிலோ விளக்க இயலுமா..
ஈழம்: துயரங்களின் குவியல்!…
ஆம் உண்மை இந்தியா என்ற ஒன்று இருக்கும்வரை இது தொடர்கதை.
உண்மை இந்தியாவைப் பாருங்கள்…
http://www.youtube.com/watch?v=OVReet6b2ks
ரத்தம் கொதிக்கிறது.
கண்டிப்பாக வன்மையாக கண்டிக்க வேண்டியதுதான்.வன்முறை வெறியாட்டம் எங்கிருந்தாலும் கண்டிக்கத்தக்கதே.சட்ட கல்லுரி VIDEO வையும் பார்க்கச் சொல்லுங்க.
பகத்,
ஈழத்தில் என் சொந்த இடம் வடக்கு, யாழ்ப்பாணம். அங்கே சிங்கள சமூகத்தினர் ஒருசிலர் முன்பு அரச பணிகளில் இருந்ததாகவும், சிலர் பேக்கரி வைத்திருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர், அவர்கள் பிரச்சனைகள் வலுத்தபின் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றதாகவும் கேள்விப்படிருக்கிறேன். அதனால் வடக்கில் சிங்கள சமூகத்துடன் எனக்கு நேரடி அனுபவம் ஏதுமில்லை. மற்றப்படி வடக்கு (முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்) பகுதி முற்றுமுழுதாக தமிழர்கள் வாழும் பகுதியாகத்தான் வரலாற்றுக்காலம் தொட்டே இருந்துவருகிறது. கணிசமான முஸ்லிம் சமூகத்தினரும் இருந்து வந்திருக்கிறார்கள். கிழக்கிலும் இனப்பிரச்சனையால் சிறுதொகையில் சிங்கள சமூகத்தினரும் இடம்பெயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், வரலாற்றுக்காலம் தொட்டு தமிழர்கள் தான் பெரும்பான்மையினராக கிழக்கு மாகாணங்களிலும் இருக்கிறார்கள். ஆனால், சிங்கள ஆட்சி பீடமேறும் ஒவ்வொருவராலும் கிழக்கில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களால் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டும், ஏதாவது நீர்ப்பாசன திட்டம் அது, இதுவென்று அவர்களின் சொந்த நிலங்கள் பறிக்கப்படுவதாகத்தான் சொல்கிறார்கள். அது இன்றுவரை தொடர்கதை தான்.
அண்மையில் ஓர் Academic Paper (Cambridge Review of International Affairs) படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஓர் புள்ளிவிவரம், திருகோணமலையில் 1881 இல் சிங்கள சமூகத்தின் சனத்தொகை 4.2 வீதமாகவும், தமிழர்கள் 89.5 வீதமாகவும் இருந்திருந்தது. பின்னர், அது 1981 இல் சிங்களவர் 33.6 வீதமும், தமிழர்கள் தொகை 62.8 வீதமாகவும் வீழ்ச்சியடைந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. கிழக்கில் இப்படி சிங்கள குடியேற்றங்களை நிறுவி, கூடவே சிங்கள எல்லைப்படைகள் என்று ஆயுதக் கும்பலையும் அவர்களின் துணைக்கு வைத்து தமிழர்களின் மத்தியில் பதட்டத்தையும், பயத்தையும் அரசாங்கமே உருவாக்கினால் எப்படி தமிழ்சமூகமும், சிங்களசமூகமும் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழமுடியும். கூடவே ராணுவ கெடுபிடிகள் வேறு. கிழக்கில் தமிழர்கள் எப்போதுமே பயத்துடன் வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் இதே பயப்பீதியுடன் கூடிய வாழ்வுதான் தமிழர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள சமூகத்தின் அரசியல் பெரும்பான்மையை உருவாக்கி, அரசியல் ரீதியாக தமிழர்களை தமிழர்களின் இடங்களிலேயே சிறுபான்மையாக்கும் சிங்கள பேரினவாதத்தின் முயற்சி தான் இது என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இது தவிர, பெளத்த மகாசங்க பீடாதிபதிகள், தேரோக்கள் முதற்கொண்டு சிங்கள ஆட்சிபீடம் ஏறுபவர்கள், ராணுவத்தளபதிகள் என்று எல்லோரும் உரக்கச் சொல்வது இலங்கை என்ற நாடு சிங்களருக்கே சொந்தம். மற்றவர் யாரும் இலங்கையில் உரிமை கோர முடியாது. அவர்களாகப் பார்த்து எதைக் கொடுக்கிறார்களோ, அதை வாங்கி கொண்டு பேசாமல் மூடிக்கொண்டு இருக்கவேண்டும்.
நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது பதில், சிங்கள பேரினவாதிகளால் தமிழர்கள் பற்றிய விஷவிதை சிங்கள சமூகத்தின் மனங்களில் “பயங்கரவாதிகள்” என்ற முத்திரையுடனும், நாங்கள் முழு இலங்கையையும் ஆளநினைப்பதாகவும் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஒருவரை மற்றவர் பயத்துடனேயே பார்த்தாலும், தமிழர்கள் சிங்கள சமூகத்தை தாக்கியதாக நான் இதுவரை கேள்விப்படவோ அல்லது படிக்கவோ இல்லை. மற்றப்படி தமிழ் சமூகத்திற்கும் சிங்கள சமூகத்திற்கும் இடையேயான உறவு அல்லது பரஸ்பர நட்பு என்று சொல்லிக்கொளும் அளவிற்கு ஏதுமில்லை என்பதுதான் என் கருத்து.
ஈழத்தமிழர்கள் நாங்கள் இழக்கக் கூடாததை எல்லாம் இழந்தபின் யாருடனும் நட்போ அல்லது பகையோ பாராட்டும் ஓர் மனோநிலையில் இன்று இல்லை என்பதுதான் யதார்த்தம். Just leave us alone.
உங்களின் விளக்கமான மறுமொழிக்கு நன்றி நண்பர் ரதி.
ஈழ தமிழ் மக்கள் போர், வதை முகாம் என பல கோணங்களில் படும் அல்லல்கள் போதாது என்று, சிங்கள இனவெறி அரசு அவர்களின் வாழ்விடங்களையும் பறித்து கொள்வது மிக கொடுமையான விடயம். முன்பு இந்திய ராணுவம் வந்து மக்களை நேரடியாக கொன்றது, இப்பொழுது இந்தியா, ராணுவத்துடன் வராமல், பல முதலாளிகளுடன் வந்து ஈழ மக்களின் உயிரையும், உழைப்பையும் பறிக்க தயாராகிறது.
இதற்கெல்லாம் முடிவு கட்ட தமிழ் மக்கள் தம்முடைய போராட்டத்துடன், சிங்கள மக்களில் உள்ள ஜன நாயக சக்திகளையும் ஒன்றிணைத்து போராட முற்பட வேண்டும்.
சகோதரி ரதி எனக்கு நீண்ட நாட்களாய் இருக்கும் சந்தேகம் இது. தென் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் (ஏறக்குறைய இரண்டு கோடி பேர் ) இருக்கிறார்கள். அவர்கள் பேசும் விதத்திற்கும் ஈழத் தமிழர்கள் பேசும் விதத்திற்கும் niraiya ஒற்றுமைகள் இருக்கின்றன. உதாரணங்கள். “பஸ் வந்துட்டா? போயிட்டா?” மற்றவர்கள் பேசுவது “வந்துடுச்சா?” அதைப்போல “வசமா மாட்டிகிட்டான்” “நல்லா கதியா இருக்கும்போது” “கடாப்பெட்டி” .இந்த வார்த்தைகளை எல்லாம் மற்றவர்கள் பேசுவதே இல்லை. முக்கியமான விஷயம். நீங்க எப்போ வந்த்தீய? எப்போ போனிய? .மற்றவர்கள் பேசுவது எப்போ வந்தீங்க? எப்போ போனீங்க? . இவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன, எந்த வகையான தொடர்பு? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுவீர்களா? நன்றி.
Vijay,
மன்னிக்கவும், நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஈழத்தில் கூட யாழ்ப்பாண தமிழுக்கும் மட்டக்கிளப்பு தமிழுக்குமே வித்தியாசங்கள் உண்டு. அது போல் இதுவும் இருக்குமோ தெரியவில்லை எனக்கு. இனிவரும் நாட்களில் தெரிந்தால் நிச்சயம் பதில் சொல்கிறேன்.
//ஈழத்தில் கூட யாழ்ப்பாண தமிழுக்கும் மட்டக்கிளப்பு தமிழுக்குமே வித்தியாசங்கள் உண்டு.//
என்ன வித்தியாசம் சகோதரி?
நீங்கள் எந்தச் சமூகத்தைப் பற்றி கேட்டிகின்றீர்கள் கடல்தொழிலுடன் சம்பந்தப் பட்ட மக்களையா? செட்டி குலத்தவர்கள் பற்றி கேட்கின்றீர்களா? ( செட்டி Clan )