Sunday, October 13, 2024

போரை நிறுத்து !!

-

 

ஈழப் போரின் முடிவு தமிழ் மக்களுக்கு பெரும் சாபமாகவும், துயர் நிறைந்ததாகவும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஈழப் போரின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா  தண்டகாரண்யாவில் (மத்திய இந்தியா) போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏகாதிபத்திய, தேசம் கடந்த தொழில் நிறுவனங்களுக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மக்கள் வளங்களை தாரைவார்க்கும் நோக்குடனும்  பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரில் மாபெரும் நக்சல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. அதற்கு இந்தியா வைத்துள்ள பெயர்தான் ‘க்ரீன் ஹண்ட்.”

அமெரிக்காவின் அடியாளாக தென்கிழக்கில் உருவாகியிருக்கும் இந்தியா தனது விஸ்தரிப்புக் கனவுகளுக்கும் சுரண்டல் வர்த்தக நலன்களுக்கும் இடையூறாகவோ, தடங்கலாகவோ இருக்கும் எந்த ஒன்றையும் அழித்தொழித்து சுதந்திர வர்த்தக வலையமாக இப்பிராந்தியத்தை மாற்றுவதே இந்த அடியாளின் ஆசை.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் மக்களாட்சி மலர்ந்தால் இப்பிராந்தியத்தில் தனது இருத்தலுக்கு அது இடையூறாக இருக்கும் எனக் கருதுகிற இந்தியா நேபாளத்தில் தனது தனது விசுவாசியான மாதவ் குமார் நேபாளை பிரதமராக்கி பொம்மையாட்சி ஒன்றை நேபாளத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய அடிமையான மாதவ் குமார் நேபாளோ ”இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத நடவடிக்கையையும் நேபாளம் அனுமதிக்காது” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மாதவ் குமார் நேபாள் பயங்கரவாதம் என்று சொல்வது மாவோயிஸ்ட் போராளிகளின் மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்கள் விடுதலையை.

நேபாளத்தின் மக்கள் கிளர்ச்சி இந்தியாவுக்கு எதிரான பாயங்கரவாதம். ஈழ மக்களின் தேசிய சுயநிர்ணய போராட்டமும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது; என்கிற நிலையில் அந்நிய ஆபத்து, எல்லை தாண்டும் பயங்கரவாதம் என்ற கதையாடல்கள் எல்லாம் மாறி இப்போது உள்நாட்டு அச்சுறுத்தல் என்று துவங்கியிருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். சமீபத்தில் அவர் ‘’உள்நாட்டு அச்சுறுத்தல்களை சமாளிக்க தனி அமைச்சகம் வேண்டும்”’ என்று சொல்லியிருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு உருவான அச்சுறுத்தல் இப்போது உள்நாட்டிலேயே உருவாகிறதாம்.

இந்தியா உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. சரி சமமாக பிளக்கப்பட்ட சமுகத்தில் நிலத்தின் மீதான உரிமையும், பொருளாதார உத்திரவாதத்தையும் இழந்த மக்கள் எதிர்ப்பியங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். பல இடங்களில் அது மக்கள் வன்முறையாக வெடிப்பதனையும் புரட்சிகர சக்திகள் தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு பெருந்திரள் மக்கள் போராட்டங்களை பயன்படுத்திக் கொள்வதையும் நாம் காண முடிகிறது. மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் தோற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக வழிமுறைகளையுமே சிதம்பரம் உள்நாட்டு அச்சுறுத்தல் என்கிறார். இந்தியாவின் இன்றைய விஸ்தரிப்பு நோக்கங்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தெளிவாக நமக்கு ஒரு உண்மையை உணர்த்துகின்றன.

ஏகாதிபத்தியங்கள், தேசம் கடந்த தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு தரகு பெரு முதலாளிகள் என அவர்களுக்கு நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி தாரை வார்த்தல் என்று அமெரிக்காவின் அடியாளாக தென்கிழக்கில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா. நாம் காண்கிற, கண்டுகொண்டிருக்கின்ற மக்கள் கொலைகள், போர்கள், பயங்கரங்கள் என எல்லாமே நமக்கு உணர்த்துவது இதைத்தான். தந்திரங்கள்தான் வேறு வேறு…..

இலங்கையில் புலிகள் போராடினார்கள். அரை குறையான மரபு வழி இராணுவமும் ஒரு நிர்வாக அலகும் அவர்களிடம் இருந்த போது அவர்களை கடுமையான இராணுவத் தாக்குதலின் மூலமே எதிர்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. ( புலிகளின் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமாகவோ, சுரண்டல் நலன்களுக்கு எதிரான போராட்டமாகவோ நான் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பிராந்திய வல்லரசுகளின் வர்த்தக நலன்களுக்கு புலிகளின் போராட்டம் தடையாக இருந்தது) கடைசியில் அதை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கி அழித்தார்கள்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு மக்கள் திரள் போராட்டங்களை நடத்துகிறார்கள். அங்கே இந்திய, நேபாள அரசுகளின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. மத வெறியைத் தூண்டி விட்டு மக்களை பிளவு படுத்துவது, இன முரண்களை தூண்டி விடுதல், என்பதாகவும், இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுகள் குழந்தைப் போராளிகளை போரில் ஈடுபடுத்துகிறார்கள். தங்களின் இராணுவத்திற்கு குழந்தைகளை கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பிடிக்கிறார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது இந்தியா. இன்னொரு பக்கம் நேபாள மாவோயிஸ்டுகளின் மக்களாட்சிக்கான போராட்டத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து மாவோயிஸ்டுகளை விழுங்க தருணம் பார்த்துக் காத்திருக்கிறது இந்தியா.

நேபாளத்தில் இந்தியா செய்யவிரும்புவதற்கான தருணம் இன்னும் வாய்க்காத நிலையில் வன்னிக் கொலைகளின் முன்னுதாரணத்தைக் கொண்டு   மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர், ஆந்திரா என இம்மாநில மாநில எல்லையோரப் பகுதிகளான தண்டகாரண்யாவிலும் பெரும் போரை க்ரீன் கண்ட் என்னும் பெயரில் ஒரு இலட்சம் படை வீரர்களின் துணையோடு நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா.

உள்நாட்டு அச்சுறுத்தல் என்று சிதம்பரம் சொல்வது எதை? யாருக்காக இந்தப் போர்?

பன்னாட்டு வணிக நிறுவனங்களோடு கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்தியா. நமது மாநிலங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல, சிறுவணிகம், தண்ணீர், இயற்க்கை வளங்கள், கனிம வளங்கள், கடல், மலை, என எதுவும் பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக நோக்கங்களில் இருந்து தப்ப முடியாது. நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் இருந்து நிலங்களை அபகரிப்பதில்லை. மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு நிர்பந்தம் செய்து வாங்கி சட்டத்தின் அங்கீகாரத்தோடு பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதுதான் இந்த ஒப்பந்தங்கள். கனிமங்கள், தண்ணீர், தேயிலை, ரப்பர், கடல் என எதுவும் இதற்கு விதிவிலக்கில்லை.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்காக மக்களின் நிலங்களை அபகரிக்கும் இந்தியா தேசம் கடந்த தொழில் நிறுவனங்களோடு எத்தனை ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது? எந்தெந்த நிறுவனங்களுக்கு? எந்த நிலம்? என்ன விலை? என்ன வளம்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் தெரிந்து கொள்ள முடியாது. காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பார்கள்.

இங்கே இந்தியப் பிரதமர் மன்மோகன் பற்றியும் சிதம்பரம் பற்றியும் ஒன்றைச் சொல்ல வேண்டும். பிரதமர் அலுவலக ஸ்டெனோ கிராஃபராக இருந்த மன்மோகனின் அரசியல் நுழைவு என்பது திடீரென நிகழ்ந்த ஒன்று. அவரைத் திட்டமிட்டே இந்திய அரசியலில் நுழைத்தது அமெரிக்கா. நேரடியாக தனது அடிமை விசுவாசிகளை உருவாக்கி பொம்மையாட்சியை அவர்களிடம் வழங்கி அவர்கள் மூலமாக இந்தியாவை தனது அறிவிக்கப்படாத மறு காலனியாக வைத்திருப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

மிகக்குறைந்த விலையில் ஈரானுடன் இந்தியா செய்து கொண்ட எரிவாயு ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு விட்டு அதை வலியுறுத்திய நட்வர்சிங் போன்றவர்களையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு எஜமானர்களின் தேவைகளை அறிந்து சேவை செய்யும் இருவராகவே மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை இந்திய அரசுப் பிரதிநிதிகளாக மட்டும் பார்க்க முடியாது. பன்னாட்டு நிறுவனங்களுடனான தனிப்பட்ட விருப்பங்களும் இவர்களுக்கு உண்டு. நேரடியாகவோ தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ பல்வேறு தொழில் தொடர்புகளை பன்னாட்டு நிறுவங்களுடன் பேணுகிறவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் சிந்தனை முறை என்பது மட்டுமல்ல நிர்வாக ஆட்சியும் அமெரிக்கா பாணியில்தான் கட்டவிழ்த்து விடப்படுகிறது. புலனாய்வுக்குழு, உளவுக்குழு, அடியாட்படை, கட்டற்ற வேட்கை கொண்ட ( உண்மையில் வெறி நாய்களைப் போன்ற) படைகள் என இந்தியாவிலும் அதே பாணிதான் இப்போது பின்பற்றப்படுகிறது. போர் நடைபெறும் எந்தப் பகுதியிலும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் என்று சொல்லப்படும் கலெக்டர்கள் செல்லாக்காசுகள்தான். மாவட்ட எஸ்.பிக்களும் சிறப்பு அதிரடிப்படை தலைவர்களுக்குமே, மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கும் அதிகாரம் உள்ளிட்ட சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார்கள். இம்மாதிரியான சூழலில் இருந்தே இந்தியா முன்னெடுத்து சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் ” “ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்“ என்னும் போரை நாம் காண முடியும்.

இந்தப் போர் துவங்கிய சென்ற வருட மத்திய மாதங்களில் ஆங்கில ஊடகங்கள் தண்டகாரண்யாவிலும், லால்கர் இயக்கத்தின் மீதும் அதிக கவனம் கொண்டிருந்தன. ஆனால் பின்னர் ஊடகங்களும் ஆளும் வர்க்க நலன்களை முன்னெடுக்க மௌனம் என்னும் ஒரே பதிலின் மூலம் இப்போரில் ஊடங்களும் பங்கெடுக்கின்றன. ஈழ மக்கள் மீதான போரின் போது இந்திய ஊடகங்கள் காட்டிய அதே வன்மத்தை இன்று மத்திய இந்தியா மக்கள் மீதும் அவை காட்டுகின்றன. காட்டிக் கொண்டே இருக்கின்றன.

தண்டகாரண்யா மக்களின் பிரச்சனை என்பது நீண்ட காலப் போராட்டமும் கோபமும் நிறைந்தது. எப்போதும் அவர்கள் தனியார் முதலாளிகளால் சுரண்டப்பட்டே வந்திருக்கிறார்கள். பொதுவாக பழங்குடிகள் என்றும் மலை சார்ந்து வாழும் மக்கள் என்றும் அறியப்பட்ட பழங்குடி மக்களிடம் நிலங்கள் இல்லை. அவர்கள் நிலத்துக்காக போராடினார்கள். தங்களின் பூர்வீகநிலங்கள் மீதான உரிமைகளுக்காக போராடினார்கள்.

இன்றைய வடகிழக்கு மற்றும்  தண்டகாரண்ய மக்களின் போராட்டம் என்பதை நாம் சுரண்டல் வர்த்தக நலன்களுக்கு எதிரானது என துல்லியமாக அடையாளப்படுத்தி விட முடியும். இதைத்தான் சிதம்பரம் உள்நாட்டு அச்சுறுத்தல் என்கிறார். மத்திய இந்தியாவின் மாநிலங்களில் இந்த தேடுதல் வேட்டை  இருந்தாலும் அதிகமான மக்கள் இந்தப் போரால் பாதிக்கப்பட்டிருப்பது சட்டீஸ்கர் மாநிலத்தில்தான். T.T.P.P, C.R.P.F, S.T.F. B.S.F, என இவர்களோடு சல்வார்ஜூடும், லோக்கல் போலீசும் களமிரக்கப்பட்டு கொடூரமான யுத்தம் ஒன்றை சட்டீஸ்கர் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ( 2008-ல் லால்கர் மீட்பின் போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பது கிராம மக்கள் இன்னும் அவர்களின் பூர்வீக கிராமங்களில் குடியமர்த்தப்படவில்லை. அந்த நிலங்களில் ஏராளமான இராணுவ முகாம்களை நிறுவியுள்ள இந்திய அரசு. பன்னாட்டு நிறுவங்களின் கைகளில் அந்த நிலங்களை ஒப்படைக்கக் காத்திருக்கிறது. ) ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் கூட இம்மாதிரியான அகதி முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டீஸ்கரில் இருந்து இடம் பெயரும் மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு வருகிறார்கள். அப்படி வருகிற மக்களுக்கும் ஆந்திர பழங்குடி மக்களுக்குமிடையே மோதல்கள் உருவாகின்றன.

இந்திய உளவு நிறுவனங்கள் உருவாக்கியுள்ள உளவாளிகள் இந்த மக்களுக்கிடையிலான முரண்களை கூர்மையடைய வைத்து மோதலை உருவாக்கி விடுகிறார்கள். மொழி, பிராந்தியவாதம், இனக்குழு வேறுபாடு என பலவகையான முரண்கள் இக்குழுக்களுக்கிடையில் உருவாகின்றன.

தண்டகாரண்யாவை மாவோயிஸ்ட் போராளிகளிடமிருந்து மீட்க முதலில் நாற்பதாயிரம் வீரர்களைக் கொண்டு போரை இந்தியா துவங்கிய போது அதற்கு அவர்கள் வைத்த பெயர் green hunt.  இதை பசுமை வேட்டை என்றோ காட்டு வேட்டை என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இந்தப் போரில் இந்தியா வைத்திருக்கும் பெயர் போரின் உண்மையான காரணத்தை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. அவர்கள் பசுமையை வேட்டையாடுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகளுக்காகவும், உள்ளூர் டாட்டா, பிர்லாக்களுக்காகவும் மக்களிடம் இருக்கும் பசுமையை வேட்டையாடி முதலாளிகளுக்கு பரிசளிக்கப் போகிறார்கள்.

இந்தப் போரில் கட்டற்ற சுதந்திரம் இந்த படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சட்ட விரோதக் கடத்தல், காணாமல் போதல், சுட்டுக் கொல்லுதல், ரகசிய வதை முகாம்கள், பாலியல் வன்முறைகள் என பல விதமான சுதந்திரங்களும் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மனித உரிமை அமைப்புகளைக் கூட தொடர்பு கொண்டு முறையிட முடியாத கொடுமை தண்டகாரண்யாவில் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஹிமான்சு குமார் என்பவர் ஒரு காந்தீயவாதி. மக்களின் பெருந்திரள் வன்முறைப் போராட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர். அவர் சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் ‘வனவாசி சேத்னா’ என்ற பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவி ஆதிவாசி மக்களுக்கு சேவை செய்து வந்தார். சட்டவிரோத சல்வார்ஜூடும் ஆயுதப் படைகளின் கொலைகளைக் கண்டு ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன ஹிமான்சு குமார், சல்வார்ஜூடும்களின் கொலைகள், கடத்தல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். விளைவு அவரது காந்தியாஸ்ரமம் சூறையாடப்பட்டது. அவர் செயல்பட முடியா நிலைக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ள சட்டவிரோத செயல்கள் குறித்தும், க்ரீன் ஹண்ட் போர் குற்றங்கள் குறித்தும் மக்கள் கருத்தறியும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஹிமான்சு குமார். டில்லியில் இருந்து மேதாபட்கர், சந்தீப் பாண்டே, நந்தினி சுந்தர் போன்றோர் செல்வதாக ஏற்பாடு. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் சென்று விசாரிப்பதைக் கூட விரும்பாத இந்திய அரசு, கடும் அச்சுறுத்தலை ஏவி விட்டு அக்கூட்டத்தை நடத்த விடாமல் செய்து விட்டது. ஏற்கனவே மேற்குவங்க அடக்குமுறைக்கு எதிராகப் பேசிய மஹாஸ்வேதா தேவி போன்ற அறிவுஜீகள் கடுமையாக ஒடுக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.

இதே சூழலில் இன்று காந்தி மறுவாசிப்பு செய்யப்படுவதையும் காந்தீயக் கொள்கையான அஹிம்சையை எதிர்ப்பியங்களுக்கு மாற்று அரசியல் சிந்தனையாக சிலர் முன்வைப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அன்றைய காந்தி பிரிட்டிஷ் பேரரசில் கௌரவமான ஒரு இடத்திற்காகப் போராடியதும் அதற்காக இந்திய தேசிய முதலாளிகளை சிதைத்து டாடா,பிர்லாக்கள் போன்ற ஏகாதிபத்திய சேவகர்களின் பண்ணைக்குள் ஒளிந்து கொண்டு காந்தி உருவாக்கியவைதான் எளிமையும் அஹிம்சையும். இந்த எளிமையும் அஹிம்சையும் ஏகாதிபத்தியங்களை தோற்கடிக்கப் போதுமானவையா? எளிமையும் அஹிம்சையும் அரசு வன்முறையும் ஏகாதிபத்திய சுரண்டலையும் தோற்கடிக்க போதுமானவையாக இருந்திருந்தால் ஹிமான்சு குமாரால் மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்தியிருக்க முடியுமல்லவா?

புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் முடிவை ஒட்டி முன் வைக்கப்படுகிற காந்திய சிந்தனைகள் துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய அன்றைய காலச் சூழலுக்கே பொருந்தாத போது, அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்கள் படுகொலைகள் சகஜமாக நிகவும் இந்தக் காலத்திற்கு காந்தியின் அஹிம்சை எப்படி எதிர்ப்பியங்களுக்கு பயன்படும்?

போர் நிறுத்தம் கேட்போம்……..

வன்னியில் இந்தியாவின் துணையோடு இலங்கை அரசு ஈழ மக்களைக் கொன்று குவித்த போது ஏனைய இனத்து மக்கள் வன்னி மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆகவே யார் செத்தால் என்ன? நாம் ஏன் இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தின் சில மட்டங்களில் கேட்க முடிகிறது. உண்மைதான். வன்னியில் நடந்த போரின் போது ஜனநாயகவாதிகள் என்று தங்களை பீற்றிக் கொள்கிற சிலர் மௌனமாகவே இருந்தார்கள். இவர்கள் பாலஸ்தீனத்திற்காகப் பேசுவார்கள், கியுபாவிற்காகவும் பேசுவார்கள், கொசோவா என்றால் கொதிப்பார்கள். ஆனால் ஈழம் என்று வந்தால் அதை பயங்கரவாதம் என்று ஒதுக்குவார்கள். அல்லது மௌனிகளாகிவிடுவார்கள்.

பல நேரங்களில் இந்த மௌனமே பெரும் போர் வெறியர்களுக்கு சாதகமான ஒன்றாக உருவாகிவிடுகிறது. க்ரீன் ஹண்ட் போருக்கு எதிராகவும் இம்மாதிரியான மௌனம் ஒன்று நிலவுகிறது. ஆனால் நமது இந்த மௌனம் பல லட்சம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு துணைபோகிறது. ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு காலச் சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் நீதியைத் தேடி அலைந்து மக்கள் சோர்ந்து விட்டார்கள்.

ஜனநாயகத்தின் இரும்புக் கதவுகள் ஏழைகளுக்காக இனி எப்போது திறக்கப் போவதில்லை என்பதை போபால் விஷவாய்வுக் கசிவு நமக்கு உணர்த்துகிறது. மக்கள் முன்னால் இப்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள்… எதிர்ப்பியங்களை வலுப்படுத்துதல்…ஆம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது நாம் கைபிசைந்து நின்றோம். போராட்ட வடிவங்களை மாற்றி மக்கள் எழுச்சியை நாம் உருவாக்கத் தவறினோம். அங்கே மக்கள் கொல்லப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இப்போது மக்களிடமிருந்து நிலங்களையும் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வன்னிப் போரை முன்மாதியாகக் கொண்டு வடகிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. தண்டகாரண்யா மக்கள் வேறு இன மக்கள் அவர்கள் செத்தால் நமக்கு என்ன? என்று இருந்தால்…. இப்போது மத்திய இந்தியாவில் வீசப்படும் குண்டும்… பாலியல் வன்முறையும்….. சட்டவிரோதக் காவலும், கடத்தலும், கொலைகளும் நாளை ராமேஸ்வரத்திலும் நடக்கும்…

ஆமாம் அதிகப்படியாக நான் எதையும் சொல்லவில்லை. தண்டகாரண்யா மக்களின் நிலங்களை பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்தியா ராமேஸ்வரத்திலும் கடலை தேசம் கடந்த தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகச் சூதாட்டத்திற்கு தடையாக இருக்கும் மீனவர்களை அங்கிருந்து துரத்த சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.  இன்று தண்டகாரண்யாவில் மாவோயிஸ்ட் போராளிகள் பழங்குடி மக்களுக்காக போராடுவது போல மீனவ மக்களுக்கான எதிர்ப்பியக்கம் ஒன்று வலுவடைந்தால் இன்று அங்கே செய்யும் போரை ராமேஸ்வரத்தில் செய்ய இந்தியாவுக்கு எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் எப்போதும் மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

ஆளும் வர்க்கங்களின் சந்தை நலனுக்கான இந்தப் போரின் முன் மாதிரியாக ஐம்பதாயிரம் ஈழ மக்களின் பிணங்களை நம்முன் கிடத்தியிருக்கிறார்கள் போர் வெறியர்கள். ஆகவே மக்கள் போராட்டங்களை ஆதரிப்போம். தண்டகாரண்யா மக்கள் மீதான போரை நிறுத்தக் கேட்போம். மக்களின் நிலங்களை மக்களிடமே வழங்கக் கோருவோம்.

  1. ///வன்னிப் போரை முன்மாதியாகக் கொண்டு வடகிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. வடகிழக்கு மக்கள் வேறு இன மக்கள் அவர்கள் செத்தால் நமக்கு என்ன? என்று இருந்தால்…. இப்போது வடகிழக்கில் வீசப்படும் குண்டும்… பாலியல் வன்முறையும்….. சட்டவிரோதக் காவலும், கடத்தலும், கொலைகளும் நாளை ராமேஸ்வரத்திலும் நடக்கும்…////

    இது ஏற்கனவே நடக்கின்றதே தமிழக மீனவர்கள் சுட்டுக்கொள்ளும் போது இந்திய அரசு கண்டிக்கின்றதா அல்லது அது குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கின்றதா

    ஈழத் தமிழரும் சரி தமிழகத் தமிழர்களும் சரி இந்தியாவின் பலி ஆடுகளாகத் தான் வைத்திருக்கின்றார்கள் இந்திய ஆளும் வர்க்கம் இதை தமிழக மாக்கள் ஒரு போதும் உணரப்போவதில்லை

  2. // போராட்ட வடிவங்களை மாற்றி மக்கள் எழுச்சியை நாம் உருவாக்கத் தவறினோம்.// நெடு நாட்களாக என்னுள் இருந்த கேள்வி .ஏன்?

  3. ஆப்ரேஷன் கிரீன் ஹன்ட்டை அம்பலமாக்கும் கருத்தரங்கம்‍ சென்னையில். அனைவரும் வாருங்கள்.

    http://vrinternationalists.wordpress.com/2010/01/20/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/

  4. பசும வேட்டங்குற பேருல நாட்டையும் ஜனத்தையும் கொல்லுததுக்கு இந்திய அரசு போரை நடத்துது. இதுல மக்கள் ஜெயிச்சாத்தான் பெரியண்ணன் அடங்குவான். இல்லாட்டி ஈழத்தில நடந்தமாதிரி ஆயிரும். போராடுத மக்களுக்கு தோளைக் கொடுக்கணும்டே!

  5. இந்திய அரசின் தாக்குதலான ‘கிரீன் ஹன்ட்’ பற்றிய அருமையான கட்டுரை.

    இந்த கொடூர தாக்குதலை முறியடிக்க இந்தியா முழுவதும் எதிர்ப்பியக்கம் உருவாக வேண்டும். நாம் முன் கை எடுத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்களும் இதன் ஆபத்தை உணர்ந்து, போராடுதல் வேண்டும்.

  6. //பிரதமர் அலுவலக ஸ்டெனோ கிராஃபராக இருந்த மன்மோகனின் அரசியல் நுழைவு என்பது திடீரென நிகழ்ந்த ஒன்று.//
    இந்த செய்தியின் அர்த்தம் புரிந்து படிக்கனும். நேரிடையாக அர்த்தம் எடுத்தார்கள் என்றால் பிரச்சனை தான். இது சம்பந்தமாக… ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
    ஒருமுறை பேருந்து விற்பனையின் பொழுது… “இந்த (இந்திய) நாட்டின் பிரதமர் ஜார்ஸ் புஷ். அவர் நினைக்கிற திட்டங்கள் இங்கு அமுலாகின்றன.” என தோழர் பேசி முடித்தார்.
    பயணிகளில் ஒருவர் புத்தகம் வாங்கி விட்டு, அமெரிக்க ஜனாதிபதியை இப்படி இந்திய பிரதமர்னு சொல்றார் அவர். அதெல்லாம் தப்பு” என்றார்.

  7. தென் அமெரிக்க நாடான உருகுவேயில் சமீபத்தில் நடந்த தேர்ந்தலில் வென்று ஜனாதிபதியான ஒரு முன்னாள் மார்கிசிய போராளியான முஜிக்காவின் இன்றைய நிலைபாடு பற்றிய சுட்டி இது :

    http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

    A new beginning

    How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists, says India’s Ambassador to Argentina, Uruguay and Paraguay R.
    VISWANATHAN.

    In one of his campaign speeches, Mujica vowed
    to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United
    States.” He said, “I’ll shout it if they want: Down with isms! Up with
    a Left that is capable of thinking outside the box! In other words, I
    am more than completely cured of simplifications, of dividing the
    world into good and evil, of thinking in black and white. I have repented!”

    உங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும் இதை. Marxism, Maoisim இன்று எத்தனை தூரம் relevant and credible என்பதை பற்றி ஒரு முன்னால் மாவோயிஸ்ட்டின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் இவை..

  8. சாதாரண ஏழை மக்கள் பிரயாணம் செஞ்ச ஒரு பயணிகள் ரயில கவுக்குறது…. அப்பாவி மக்களை கொல்றது…..
    இதுதான் உங்க கம்யூனிசமா?
    உங்களோட கொள்கைதான் என்னன்னு சொல்லுங்கடா?
    நாட்ல ஒரு நாற்பது பேரு இருக்கும்போதே, இந்தளவுக்கு மக்களை கொன்னு குவிக்குறீங்க… இன்னும் உங்ககிட்ட ஆட்சி இருந்தா என்னென்ன பண்ணுவீங்க?

    மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு கூட்டமெல்லாம் நடத்துனீங்களே, இப்ப எப்படி அவங்களோட செயல்களை நியாயபடுத்துங்க போறீங்க?

  9. This is rather a late comment. But I just read this article. Nicely framed but not thought of. If the war is stopped, what do you expect to happen? Will Maoists stop killing people? Will they allow their own people to grow?

    Do you know what is happening in China, biggest communist country. Do you know how people are suppressed and killed there? Did you say anything about that or you dont want to say?

    Presenting the things in your view is not a big deal but suggest something that would help the country and people to grow.

    I strongly believe that “Corruption” at all levels both in government and with the people (Moaists or any group) is the root cause of all these happenings. If we try to address that, all will be well.

    Ofcourse again this is my view.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க