முகப்புவாழ்க்கைஅனுபவம்பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து... – உமா ருத்ரன்.

பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 3

எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது. பின்னர், ஒரு பதிவு கூட ஒழுங்காக எழுதாத என்னையும் பெண் பதிவர் குழுவில் சேர்த்து மகளிர் தினத்தையொட்டி எழுதச்சொன்னதை வேறென்பது?! மறுத்தாலோ என் மேலேயே எனக்கு மரியாதை போய் விடும் அளவுக்கு இருந்தது வந்த அழைப்புக் கடிதம். அதனால் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டேன்.

நண்பர் ஆணாதிக்கம், இன்றைய பெண்கள் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டிருக்கிறார். எனக்கு பதில் சொல்ல நிறையத் தகுதிகள் கிடையாது. நான் இதை ஒரு பொய்யான தன்னடக்கத்தோடு சொல்லவில்லை. நிஜமாகவே நான் அவ்வளவு ஆணாதிக்கத்தினால் பாதிக்கப்பட்டேனா என்று நீண்ட நாட்களுக்குப்பின் யோசித்துப் பார்க்க வேண்டி வந்தது. எனக்கு அவர் கேட்டிருந்ததுக்கான பதிவாக இது அமையுமா என்று தெரியவில்லை. என்னுடைய சில அனுபவங்களையும் அதன் மூலம் வந்த அறிவையும் வேண்டுமானால் பகிரலாம்… இது மேலோட்டமாக இருந்தால் மன்னிக்கவும். எனக்கு எழுதிய பின் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும், பல பெண்கள் என்னைப் போல இருக்கிறார்கள் என்பதால் இதை அனுப்பி வைக்கிறேன்.

_____________________________________

நான் சுதந்திரமானவளா?

அவசரப்படாமல் கொஞ்சம் என்னைப் புரிந்து கொண்டால் நான் இப்போது  A சென்டர் பெண். சரி தப்பு மீறி என் இன்றைய நிலை அதுதான். வேலையில் நல்ல பதவியில் இருக்கிறேன். பொருளாதார சுதந்திரம் உண்டு. கார் வாங்கி ஒட்டுகிறேன். உள்நாடு வெளிநாடு என்று தனியாக அலைகிறேன். பல நாட்டவரைச் சந்திக்கிறேன். தெரியாதவர்களோடு உணவருந்த வெளியே செல்கிறேன்; சில சமயம் சேர்ந்து ஒரே வீட்டில் அவர்களோடு தங்குகிறேன். அலுவலகத்தில் பல ஆண்கள் சில பெண்கள் எனக்காக/என்னோடு வேலை செய்கிறார்கள். இரவு கண்ட நேரத்திற்கு வீட்டிற்கு வருகிறேன்.

வீட்டில் மகாராணி. சுவாதீனம் சோம்பேறியாக்கும் அளவுக்கு உண்டு. வீட்டில் எல்லா விஷயத்திலும் seat in the table  உண்டு. என்னவாவது செய்து கொள் – டென்ஷன் ஆகாமல் இருந்தால் போதும் என்ற ஒரே விதி. நான் எதற்காகவாவது கவலைப்படாத வரையில் யாருக்கும் என்னைப் பற்றி கவலையில்லை.ஆனாலும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர லேட்டாகும்போது விசாரித்து ஃபோன் வரவில்லையென்றால் என்ன இப்படி கை கழுவி விட்டு விட்டார் என்று தோன்றுகிறது.

நான் ஒரு முடிவெடுக்கும் முன்பு அவரைக் கேட்க வேண்டும் என்றால் புரிந்து கொண்டு ஆமோதிப்பவர்கள், அவர் என்னைக் கேட்டுக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால் அவரை “Hen Pecked” என்று கேலி பேசுவது கடுப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் ஏதாவது சொல்லிவிட்டால்… சுத்தமாக இருட்டி மூடி விடுகிறது.

வீட்டில் இருக்கும் போது ஆஃபிசில் செய்யாத வேலைகள் ஞாபகம் வருகின்றன. ஆஃபிஸில் இருக்கும் போது வீட்டில் இல்லாத குற்ற உணர்வு வருகிறது.

அவ்வப்போது ரோட்டில் ஆண் டிரைவர்கள் நான் பெண் என்பதால் தவறு மட்டுமே செய்திருக்க முடியும் என்று நம்புகிறார்கள். நான் வீட்டில் செய்ய மறந்த வேலைகளைப் போய் செய்யுமாறு ஞாபகமூட்டுகிறார்கள்.

பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கார்பெண்டர், கார் மெக்கானிக், மேஸ்த்ரி போன்ற டெக்னிக்கல் வேலை செய்பவர்கள் பொதுவாக நான் சொல்வது தவறு அல்லது எனக்குப் புரியாது என்று அலட்சியப் படுத்துகிறார்கள். நான் சொன்னதையே அவர் சொன்னால் கேட்டுக் கொள்கிறார்கள். “அவர் வயதும் தாடியும்தான் காரணம்… அவருக்கு ரிமோட் பயன்படுத்தவே நான் தேவை” என்று நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சில சமயம் சுருக்கென்று இருக்கத்தான் செய்கிறது.

அலுவலகத்தில் diversityக்காக பெண்களை சில விஷயங்களில் உப்புக்கு சப்பாணியாகச் சேர்த்துக் கொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் வருகிறது. பிரசவத்திற்குப்பின் வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண் ஊழியர்களை அல்லது பகுதி நேர வேலை செய்யும் பெண்கள் பற்றி இளக்காரமாகப் பேசிக் கேட்கும் போது கோபம் வருகிறது.

கணவரின் மேலாளர் என்ற முறையில் சில கஷ்டப்படும் மனைவிகள் என்னை அணுகி “வேலையிலிருந்து அனுப்பி விடு”, “இரவு வேலையாக மட்டும் கொடு” என்னும் போதெல்லாம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு வழியில்லை என்று மட்டும்தான் சொல்ல முடிந்திருக்கிறது.

தான் பெண் என்பதை சரியாக வேலை செய்யாத போது சமாளிப்பதற்காக பயன்படுத்தும் பெண்களும், ஆண்களை manipulate செய்யும் பெண்களும், சட்டத்தைக் கொண்டு ஆண்களை அலைக்கழிக்கும் பெண்களும் – ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விட அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

ஆஃபிஸில் நல்ல நண்பர்கள் கூட, ஆண்கள் கோபமாக விவாதித்தால் aggressive என்றும், பெண்கள் கோபமாக விவாதித்தால் (என்ன, கொஞ்சம் குரல் கிறீச்சீட்டு விடுகிறது) emotional  என்றும் சொல்வது விநோதமாக உள்ளது. அலுவலகத்தில் என்றாவது என்னை மீறி அழுதுவிட்டால் மறுநாள் விடியவே வேண்டாமென்று தோன்றுகிறது.

பல இடங்களில் வேலை பார்த்த, பல பெண்களின் அனுபவத்தில் – பொதுவாக ரொம்ப முக்கியமான பொறுப்பான வேலை, பயிற்சி என்றால் முதலில் ஆண்களைத்தான் அணுகுவார்கள்; அதே சமயம் கஷ்டமான அல்லது கோபத்திலிருக்கும் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தப் பெண்களைத் தேடி முன் நிறுத்தவும் செய்வார்கள் என்று தெரிகிறது.

எப்படியோ Glass Ceiling  கார்ப்பரேட் உலகத்தின் ஒரே உண்மை – சில விதிவிலக்குகளைத் தவிர. “இந்தப் பழம் புளிக்கும். கொஞ்சம் கீழேயே இருந்தால்தான் வீட்டு வாழ்க்கையையும் கொஞ்சம் வாழ முடியும்” என்று சமாதானம் செய்து கொள்ள முடிகிறது. பணத்தேவை கருதி கணக்கில் வராத நாட்களாக வருடங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

________________________________________

இப்படி என் சொந்தக் கவலையெல்லாம் மீறி வசதி இருக்கும் போது நேரம் காலம் பார்த்து, பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழாவை ஸ்கூல் ஃபீஸூக்காக கொடுத்த பணத்துடன் கடன் வாங்கியாவது விமர்சையாகக் கொண்டாட ஆசைப்படும் வீட்டு வேலை செய்து கொடுப்பவரை நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

தேவநாதனின் பெண் குழந்தைகளை பள்ளியில் தொடரத் தடை செய்பவர்களையும், வன்புணர்ச்சிக்குள்ளான 12 வயது சிறுமி போலீசில் புகார் சொன்னதால் பள்ளியை விட்டு அனுப்பப் பார்ப்பவர்களையும் ஏதாவது செய்தால் கண்டிப்பாக முக்தி நிச்சயம் என்றே தோன்றுகிறது. Child Abuse என்று கேள்விப்பட்டால் பாடத்தில் சொல்லப்பட்ட Pedophilic என்ற வெறும் வார்த்தையையும் அதன் காரணங்களையும் தாண்டி அந்த கொடுமைக்காரன் மீது பாயத் தோன்றுகிறது.

மொத்தத்தில் கஷ்டப்படும் பிற பெண்களைப் பார்த்து holocaust survivor’s guilt வருகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டிருப்பதைப் போல சில பெண்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் அதே சமயம் பல பெண்கள் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.

இதற்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று தீர்மானமாகவில்லை. பெண்ணியவாதிகள், பெண்கள் இயக்கம் என்றெல்லாம் கேட்டால் ரொம்பத் தயக்கமாக இருக்கிறது.

________________________________

எப்படி இப்படி ஆனேன்?

நான் வளர்ந்தபின் சுதந்திரமாக இருப்பதற்காக, வளர்க்கப்பட்டேனா?

மிருகங்களை விட மனிதர்கள்தான் சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமளவு வளர பல வருடங்கள் ஆகின்றதே. இந்த சார்புள்ள சூழலில் இருந்து சுதந்திரமானவளாக வளருவதுதான் எனக்கு சிறிது கடினமானதாக இருந்துள்ளது. நம்மால் நமக்கே உபயோகமாய் இருக்க முடியாத நிலை, வயது.

எனக்கு இருக்கும் கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நான் தேர்வு செய்யும் எந்த உறவும் நன்றாக இருப்பதற்கும் நாசமாய்ப் போவதற்கும் நான் மட்டுமே காரணம் என்று எல்லாச் சமயங்களிலும் சொல்லமுடியாது என்றாலும், என் பொறுப்பின் பங்கு அதில் அதிகமுள்ளது. ஆனால் தான் சுதந்திரமாக இல்லை என்று புரிந்து கொள்வதற்கும், சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வதற்கும் கூட வளர்ப்பின் பாதிப்பு தேவையாகிறது.

என் பிறந்த வீட்டில், நெருங்கிய உறவினர் வீடுகள் உட்பட, பெண் குழந்தைகள் மட்டுமே. ஒவ்வொரு முறை குழந்தை பிறந்த செய்திக்குப் பின் “இதுவும் பொண்ணாப் போச்சு, போ!” என்ற அங்கலாய்ப்பு நான் மூத்த பேத்தி என்பதால் கேட்டிருக்கிறேன். நானும் வீட்டில் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று பெரியவர்களோடு சேர்ந்து கொண்டு கவலைப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து 9 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே தங்கையை அவள் பிறந்த அன்று பார்த்து தம்பியாகப் பிறக்கவில்லையே என்று அழுதிருக்கிறேன்.

பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லித்தான் வளர்க்கப்பட்டேன். ஆனால் அறிவு வளர்கையில் இப்படியும் இருக்கலாம் என்று படிக்க, பார்க்க, கேட்க முடிந்தது. அப்படி இருக்க ஆசைப்படுவதில் நாலில் ஒன்றாவது பெற பெற்றவரில் ஒருவரது ஆதரவாவது இருந்தது. தான் செய்ய முடியாததை என்னை செய்யவைக்க வேண்டி வந்த ஆசையா, இல்லை, பிள்ளைப்பாசமா என்று நான் புரிந்து கொள்ளும் முன்பே கிடைக்காத மூன்றை நினைத்து, கிடைத்த ஒன்றிற்கும் நன்றி மறந்திருக்கிறேன். “ஆம்பிளையாக வளர்கிறேன்! அடங்காப்பிடாரியாக ஆகிவிட்டேன்” என்று பேச்சு கேட்டால் இன்னும் கொஞ்சம் வீடு கட்டி ஆட்டம் காட்டி இருக்கிறேன். நான் வருத்தப்பட்டால் கலங்கிவிடும் சில உறவினர்களால் தப்பிப் பிழைக்க விடப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப பதின் வயதுகளில் பெண் ஆண் இருவருக்கும் வளர்ந்த பின் உள்ள பொதுவான எதிர்காலம் நான் வளர்ந்த ஒரு சிறிய டவுனில் உள்ளவர்களைப் பார்த்துப் புரிந்த பின் பயந்து நடுங்கியிருக்கிறேன். இரவு வேளைகளில் தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு பெற்றவர்கள் என் எதிர்காலத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டு கேட்டிருக்கிறேன். ஒரு முறை, அவர்கள் ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்” படித்து விட்டு, “இப்படியெல்லாம் நம் பெண்ணுக்கு நடந்து விடக்கூடாது; அதனால்தான் அவள் விருப்பத்திற்கு விடக்கூடாது” என்று (நாமொன்று எழுத அவர்களாக ஒன்று புரிந்து(!) கொண்டு படிக்கும் சில பதிவுலக நண்பர்கள் போல) பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்கள் பெற்ற பெண்ணாய் மழை நாட்களில் எங்கும் வெளியே செல்லாமல் கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்தும் பார்த்தேன்!

சினிமா பாடல்கள் கேட்கக் கூடாது, யாரும் வீட்டுக் கதவைத் தட்டினால் பெண்கள் போய் திறக்கக் கூடாது என்ற விதிகளுக்கிடையில், வீதியில் நான் சைக்கிள் ஓட்டினதே ஒரு சாதனை ஆகியது. சல்வார் கமீஸ் இமாலய சாதனையாகியது. பத்தாம் வகுப்பில் தாவணி போட மறுத்தது பெரும் புரட்சி வெடித்ததாகக் கருதி அடக்கப்பட்டது. இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும் விஷயங்கள் ஏன் என்னை அப்போது அவ்வளவு பாதித்து வெறுப்பாக்கின என்று இன்றும் புரியவில்லை. ஏதோ நான் மட்டுமே அடக்கி ஆளப்படுகின்ற victim என்ற உணர்வு. காப்பாற்ற ராஜகுமாரர்கள் மட்டும் வரப்போவதில்லை என்ற ஒரே தெளிவு. புத்தகங்கள் மட்டும் கிடைத்திருக்கா விட்டால்? நினைக்கவே பயமாக இருக்கிறது.

நான் படித்த புத்தகங்களும், பேசிக் கேட்ட சில படைப்பாளிகளும் எதையோ திருகி விட்டனர்; சினிமாவில் நடிக்க ஊரை விட்டு சென்னை வரும் இளைஞர்களைப் போல, எள் விற்ற காசில் சினிமா எடுக்க ஆசைப்படுபவர்களைப் போல, நானும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தி வேலைக்கு தயாராவது என்ற முடிவு எடுத்து விட்டேன். ஒன்று மட்டும் தெரியும் – “+2 வரை பொறுக்க முடியாது! பொருளாதார சுதந்திரம்தான் என் சர்வரோக நிவாரணி!”

என்றோ சுஜாதா படித்து, அவரால் கேம்பஸ் இன்டர்வியூ செய்யப்பட்ட பக்கத்து வீட்டு அண்ணன் பேசியதைக் கேட்டு கம்ப்யூட்டர் என்ற வார்த்தை மட்டும் நிலாவிடம் ஒட்டிக்கொண்ட ஜீனோ போல என்னோடு ஒட்டிக்கொண்டது. “15 வயசில கல்யாணம் பண்ணலைன்னா பின்னாடி கல்யாணத்தில் பிரச்சினை வரும். எட்டுல சனி” என்ற இரவு நேரப் பேச்சுக்கள் பீதி, பேதியைக் கிளப்ப, பத்தாவது ரிசல்ட் வந்தவுடன் அறிவித்து விட்டேன். “நான் இனிமே ஸ்கூல்க்கு போகப்போறதில்லை. கம்ப்யூட்டர் படிக்கப் போறேன்.” சுத்தமாக எந்த காலேஜ், எந்த இன்ஸ்ட்டிட்யூட், எந்த கோர்ஸ் என்று ஒண்ணும் தெரியாது. பேப்பரில் பார்த்த ஒரு விளம்பரம் மட்டும் கலங்கலாக ஞாபகம்.

அதற்கப்புறம் மூன்று வருடங்கள் ஹாஸ்டல், ஆறு மாதங்கள் கழித்து சென்னை மாநகரில் முதல் சம்பளம். Mission Accomplished but Partially பணம் சம்பாதிக்கும் பச்சைமண்!

பிறகு ருத்ரனைச் சந்தித்தல், அவரால் எல்லாவகையிலும் என் இப்போதைய வளர்ச்சி, உறவினர்களின் எமோஷனல் ப்ளாக்மெயில், நான் என் சுயநலம் பேணல், காசுக்காக அமெரிக்க வாசம், பெற்றோர் ஒரு வழியாக சமாதானமாதல் என்று பல அத்தியாயங்கள் தாண்டி, இப்போது.

என்னில் பிறர் குற்ற உணர்ச்சி ஏற்படுத்த முயலும் நேரங்களில் மரத்துப்போய் கடினமாக நின்றிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமாக இருக்கிறேன் என்றபோது நான் என் நிலையில் அழுத்தமாக இருக்கிறேன் என்று என்னையே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதில் எவ்வளவு என்னால் மட்டுமே முடிந்தது, இதில் எந்த நல்லது கெட்டதுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு, இதில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் இருக்கிறதா, கடவுள் காப்பாற்றியதா என்றெல்லாம் பகுத்துப் பார்க்கும் அளவுக்கு என்னால் இன்னும் அன்னியப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

______________________________________

என்ன சொல்ல வந்தேன்?.

இவ்வளவு நேரம் சுய புராண கொசுவத்திக்குப் பிறகு என்ன சொல்ல வந்தேன் என்றால்,

ஒரு பெண் மணந்து கொள்வதா, வேண்டாமா என்று தீர்மானிப்பது முதல், மணப்பதானால் யாரை மணந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்கவும் அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை என்பதால் அவள் பொறுப்பும் அதிகம். சுதந்திரம் வேண்டுமென்றால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அலுவல், தொழிலும் அப்படியே.

மணந்தபின் வரும் உறவு முறைகளைச் சந்திக்க, சமாளிக்க அதற்குமுன் அவள் முழுவதும் தயாராகி இருக்க வேண்டும் – தேவைப்பட்டால் அந்த உறவுகளைத் துறந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவும் தயாராகி இருக்க வேண்டும். சொல்வது எளிது! ஆனாலும் அந்த நேரத்து விரக்தியை மீறி மீண்டு வரத் துணிவு, தேவை என்றவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தன்னிறைவுக்கான தகுதிகள் -அந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே தேவை.

இதற்கு அவள் வேண்டுவதெல்லாம் அந்த வயது, நிலைக்கு வரும்வரை அவள் தேர்ந்தெடுக்காத மற்ற உறவுகள் (பெற்றோர் முதல் சமூகம் வரை) அவளை எல்லா வகையிலும் வளர விடுதல் மட்டுமே. முடிந்தால் அந்தக் காலம் வரை அவள் வாழ்க்கையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவள் சரியான தேர்வுகளைச் செய்ய, தன் மனதின் குரலை கேட்டுப் பழக்கப் படுத்த உதவினாலே அது ஞாலத்தின் மாணப் பெரிது.

பள்ளிக்கல்வி கற்றுக் கொடுப்பதை விட இலக்கியம் கற்றுக் கொடுக்கும் என்பது, என் வாழ்க்கைப் பாடம். எப்படியும் கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆண் பெண் எல்லோருக்கும் கண்டிப்பாகத் தேவை. அதைத் தவிர, தன்னளவில் ஒரு பெண் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

 • உணர்வு பூர்வமான சார்பு நிலையிலிருந்து வெளியே வரமுடியாது – அதனால், அதைப் பற்றிய புரிதலாவது வேண்டும். உணர்வுகளை வைத்துச் செய்யப்படும் ப்ளாக்மெயில், குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி குளிர்காயப் பார்க்கும் கயமையை அடையாளம் கண்டு விலகுவது.
 • பெற்றோர் உறவினரிடமிருந்துப் பெற்ற சுதந்திரத்தை கணவன், பிள்ளையிடம் இழக்காமலிருப்பது.
 • பெற்ற பெண்ணை அடிமையாக இருக்கவும், ஆணை ஆதிக்கம் செய்யவும் பழக்காமல் இருப்பது.
 • மண வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவாகவே, எந்த சண்டை போட வேண்டும் எந்த சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்யப் பழகுவது. Sometimes it is better to give up fighting wars to win battles

பிறர் செய்ய வேண்டியதாக நான் நினைப்பது:

 • ஒரு நாள், “மகளிர் தினமா! யாராவது அபத்தமாய் மனிதர்களாய் இருப்பதைக் கொண்டாட வேண்டுமா?” என்று எல்லோரும் கேட்குமாறு ஆக வேண்டும். சீக்கிரமாய் இந்த நாள் வர முடிந்ததைச் செய்யுங்கள்.
 • வீட்டிலும் வெளியிலும் ஆண்தான் அல்லது பெண்தான் செய்ய வேண்டிய வேலை என்று நிறைய வேலைகள் இல்லை. Dignity of Labour ஐ வீட்டிலும் ஆரம்பிக்கலாம்.
 • “உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?” என்று கேட்டு லொள்ளு பண்ணாமல் திருச்செங்கோடாய் இருக்க உதவி செய்யுங்கள். “Who wears the pants in your house?” என்பது அபத்தம். பாண்ட்டோ ஸ்கர்ட்டோ எப்போது எந்த சைஸாக இருக்கிறது, யார் அதை அணிந்தால் அந்த நேரம் பொருத்தம் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டியது.

–   உமா ருத்ரன்

______________________________

உமா ருத்ரன்:

படித்தது: கணினி தொழில்நுட்பப் பட்டயம், மனவியல் முதுநிலை, மேலாண்மை முதுநிலைப் பட்டயம், தர மேலாண்மை முதுநிலை, ஆய்வுப்படிப்பு இப்போதைக்கு ஆசை மட்டுமே.
பிடிப்பது: சினிமா, இலக்கியம், கலை, இசை
வேலை: தனியார் கணினி தொழில் நுட்ப நிறுவனமொன்றில் மேலாளர்
வாழ்வது: கணவர் டாக்டர் ருத்ரனுடன் சென்னை.
உமா ருத்ரனது வலைப்பூ:http://umarudhran.blogspot.com/

_______________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. தன்னைக் குறித்து உரையாடியபடியே பெண்களை குறித்து உரையாடவும் யோசிக்கவும் வைத்திருக்கிறார். வினவுத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். மகளிர் தினத்தை ஒட்டி இந்த மாதம் முழுக்க நண்பர்களை இடுகை எழுதச் சொல்லப்போவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். அனைத்து இடுகைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். தோழமையுடன் பைத்தியக்காரன்

 2. மொத்தப் பதிவுமே ஒரு கடகடக்கும் விரைவு ரயில் பயணம் செய்தது போல் இருக்கிறது. Great work!
  //இதற்கு அவள் வேண்டுவதெல்லாம் அந்த வயது, நிலைக்கு வரும்வரை அவள் தேர்ந்தெடுக்காத மற்ற உறவுகள் (பெற்றோர் முதல் சமூகம் வரை) அவளை எல்லா வகையிலும் வளர விடுதல் மட்டுமே. முடிந்தால் அந்தக் காலம் வரை அவள் வாழ்க்கையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவள் சரியான தேர்வுகளைச் செய்ய, தன் மனதின் குரலை கேட்டுப் பழக்கப் படுத்த உதவினாலே அது ஞாலத்தின் மாணப் பெரிது.//

  மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

 3. ரொம்ப நல்லாருக்கு உமா..பிரமிக்க வைத்திருக்கிறீர்கள்!
  மிகவு பிடித்திருக்கிறது தங்கள் பதிவு!

  /பெண்கள் கோபமாக விவாதித்தால் (என்ன, கொஞ்சம் குரல் கிறீச்சீட்டு விடுகிறது) emotional என்றும் சொல்வது விநோதமாக உள்ளது/ – இதை அடிக்கடி கேட்கிறேன், நானும். பதிவுக்கு சம்பந்தம் இருக்கிறதாவென்று தெரியவில்லை…அலுவலகம் என்றதும் நினைவுக்கு வந்துவிட்டது – இண்டர்வியூவில் ஒரு ஆணும் பெண்ணும் சமமாக பர்ஃபார்ம் செய்தால் யாரை தேர்ந்தெடுப்பது என்ற நிலை வந்தால் ஒரு ஆணையே தேர்ந்தெடுப்பேன் என்ற ஒருவரிடமிருந்து கேட்க நேர்ந்தது. ஏனெனில், பெண்ணுக்கு வேலை கிடைத்து சம்பாதித்தால் அது எக்ஸ்ட்ரா மணி. ஆனால், ஆணுக்கு வேலை கிடைத்தால், ஒரு குடும்பமே பயனடையும்! என்பது அந்த கண்ணோட்டத்துக்கு கிடைத்த விளக்கம்!!

 4. தீபா சொன்னது போல ஒரு எக்ஸ்பிரஸ் வேகத்துல உங்க வாழ்க்கையை திரும்பி பாத்து மதிப்பிட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள்! கூடவே ஒரு கேள்வி!!!!!!!!!!
  //
  இதற்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று தீர்மானமாகவில்லை. பெண்ணியவாதிகள், பெண்கள் இயக்கம் என்றெல்லாம் கேட்டால் ரொம்பத் தயக்கமாக இருக்கிறது.//

  ஏன் என்று அறியலாமா????????

  • I don’t know if I am biting your bullet or you are biting mine 😉
   எனக்குத் தெரிந்த பெண்ணிய இயக்கங்கள் ஆண்கள் வெறுப்பு இயக்கங்களாகவே இருக்கின்றன. நான் கிணற்றுத் தவளையாக இருக்க சாத்தியங்கள் நிறைய உண்டு என்றாலும், வரதராஜனுக்கு இழைத்தது போன்ற அநீதிகளுக்கு என்னால் மனதளவிலும் துணை போக முடியாது. சில நிறுவன இயக்கங்களில் சேர்ந்து நித்யானந்தாவின் சிஷ்ய கோடிகளின் இப்போதைய நிலை வரக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு என்றும் கருதலாம்.சும்மா பேச்சாக மட்டுமில்லாமல் ஏதாவது செய்யவேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் சுயநலங்களுக்கே நேரம் போதவில்லை என்பதாலும் இருக்கலாம். தெரியவில்லை….As I said, may be I want to choose my battle to fight and in the process, I am procrastinating. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் 🙂

 5. /“மகளிர் தினமா! யாராவது அபத்தமாய் மனிதர்களாய் இருப்பதைக் கொண்டாட வேண்டுமா?” /

  நல்ல கேள்வி. பெண்களின் உணர்வை பிரதிபளிக்கும் நல்ல கட்டுரை.

 6. மண வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவாகவே, எந்த சண்டை போட வேண்டும் எந்த சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று தேர்வு செய்யப் பழகுவது. Sometimes it is better to give up fighting wars to win

  ‘சமுக நிகழ்வு
  களில் நிகழும் அநீநி
  திகளுக்க்கு எ
  திரா
  க போராடுவது என்ற மையத்தில் இணைய வேண்டும், தன்னளவில் பெற்ற பெண்சுதந்திரம் என்பது’
  என்ற கருத்தை தெரிவிப்பதக்க உள்ளது தங்களின் பதிவு.வாழ்த்துக்கள்.
  அப்படி இல்லாத பெண் சுதந்திரம் என்பது வெறும் பொருளாதார தேவையை பூர்த்தி செயவதக்கு மட்டுமே பயன்படும்

 7. In the beginning//ஒரு பதிவு கூட ஒழுங்காக எழுதாத //.same sweet……பின்னர் //ரோட்டில் ………. ஞாபகமூட்டுகிறார்கள்//உங்க positive spirit…….:),then,தேவநாதனின் …………………………பாயத் தோன்றுகிறது.//your love for the fellowhumans//அவள் வேண்டுவதெல்லாம்…… ஞாலத்தின் மாணப் பெரிது.//உங்க சிந்தனைத்தெளிவு ,உங்க presentation…………what not ………..really amazing…, . ,why dont you try getting time to write., and you are not meant for writing………, simply blogs.books எதுவும் try பண்ணியிருக்கீங்களா?hearty wishes.with love anandhi

 8. அறிவுரைகளை அள்ளி வீசாமல், பிறர் குற்றங்களுக்கு கை நீட்டாமல் தன் வாழ்க்கை உதாரணங்களின் வழியே பெண்கள் இயல்பாக வாழ ஒரு புரட்சி பெண்ணியவாதியாக இருக்க வேண்டியதில்லை என்பதை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பதுவும் பெற்றோர்கள், பிற உறவுகளின் பங்கு என்னவாக இருக்க முடியும் என்று சொல்லி இருப்பதுவும் அருமை.

 9. மகளிர் தினப் பதிவுகளை படித்தே ஆகவேண்டும் என்ற அவாவுடன் இன்று கணணி முன் உட்கார்ந்து எழுத்துகளோடு என் எண்ணங்களையும் ஓடவிட்டேன். உமா, உங்களின் சில வாக்கியங்களில் என்னையே நான் தரிசித்துக்கொண்ட இடங்களும் உண்டு. சில சமயங்களில் என் உணர்வுகளை, செயல்களை என்னால் பிரதிபலிக்க முடியாமல், என் பிரச்னையை அடையாளம் காண தவறும் போது என் மீது அக்கறை கொண்டவர்கள் மிக எளிதாக இது தான் உன் பிரச்சனை, இங்கிருந்து தீர்வை தேடு என்று இரண்டு வார்த்தைகளில் சொல்லும் போது மனம் நெகிழ்ந்து லேசாகிப்போகும் அல்லவா. அந்த உணர்வு தான் உங்கள் பதிவைப்படிக்கும் போது ஏனோ ஏற்பட்டது. 

 10. என்னவாவது செய்து கொள் – டென்ஷன் ஆகாமல் இருந்தால் போதும் என்ற ஒரே விதி. நான் எதற்காகவாவது கவலைப்படாத வரையில் யாருக்கும் என்னைப் பற்றி கவலையில்லை.ஆனாலும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர லேட்டாகும்போது விசாரித்து ஃபோன் வரவில்லையென்றால் என்ன இப்படி கை கழுவி விட்டு விட்டார் என்று தோன்றுகிறது.

  …………… so sweet! பல விஷயங்களை நன்கு வெளிப்படுத்தி இருக்கும், அருமையான பதிவு.

 11. மிக அருமையான பதிவு. உங்களிடம் இருந்து மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம். .

 12. படித்த, பின்னூட்டமிட்டு ஊக்குவித்த எல்லோருக்கும், வினவிற்கும் நன்றி.

 13. நான் என்னையே திரும்பி பார்த்தது போல் இருந்தது . என் தவிப்பையும் தாக்கத்தையும் உங்களிடம் கண்டேன் . இதுவரை எங்கும் எழுதியது இல்லை .இதுவே முதல் முறை .எழுத தூண்டியது நீங்கள் மட்டும்தான் உமா .தொடர வேண்டும் ,நீங்களும் நானும் …..

 14. தான் பெண் என்பதை சரியாக வேலை செய்யாத போது சமாளிப்பதற்காக பயன்படுத்தும் பெண்களும், ஆண்களை manipulate செய்யும் பெண்களும், சட்டத்தைக் கொண்டு ஆண்களை அலைக்கழிக்கும் பெண்களும் – ஆதிக்கம் செலுத்தும் ஆண்களை விட அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்

  .பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டிருப்பதைப் போல சில பெண்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் அதே சமயம் பல பெண்கள் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது

  எனக்கு இருக்கும் கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நான் தேர்வு செய்யும் எந்த உறவும் நன்றாக இருப்பதற்கும் நாசமாய்ப் போவதற்கும் நான் மட்டுமே காரணம் என்று எல்லாச் சமயங்களிலும் சொல்லமுடியாது என்றாலும், என் பொறுப்பின் பங்கு அதில் அதிகமுள்ளது. ஆனால் தான் சுதந்திரமாக இல்லை என்று புரிந்து கொள்வதற்கும், சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வதற்கும் கூட வளர்ப்பின் பாதிப்பு தேவையாகிறது.

  என்னில் பிறர் குற்ற உணர்ச்சி ஏற்படுத்த முயலும் நேரங்களில் மரத்துப்போய் கடினமாக நின்றிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமாக இருக்கிறேன் என்றபோது நான் என் நிலையில் அழுத்தமாக இருக்கிறேன் என்று என்னையே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.இதில் எவ்வளவு என்னால் மட்டுமே முடிந்தது, இதில் எந்த நல்லது கெட்டதுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு, இதில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் இருக்கிறதா, கடவுள் காப்பாற்றியதா என்றெல்லாம் பகுத்துப் பார்க்கும் அளவுக்கு என்னால் இன்னும் அன்னியப்படுத்திக் கொள்ள முடியவில்லை

  .ஒரு பெண் மணந்து கொள்வதா, வேண்டாமா என்று தீர்மானிப்பது முதல், மணப்பதானால் யாரை மணந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்கவும் அவளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை என்பதால் அவள் பொறுப்பும் அதிகம். சுதந்திரம் வேண்டுமென்றால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. அலுவல், தொழிலும் அப்படியே.மணந்தபின் வரும் உறவு முறைகளைச் சந்திக்க, சமாளிக்க அதற்குமுன் அவள் முழுவதும் தயாராகி இருக்க வேண்டும் – தேவைப்பட்டால் அந்த உறவுகளைத் துறந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவும் தயாராகி இருக்க வேண்டும். சொல்வது எளிது! ஆனாலும் அந்த நேரத்து விரக்தியை மீறி மீண்டு வரத் துணிவு, தேவை என்றவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தன்னிறைவுக்கான தகுதிகள் -அந்த நிலைக்கு வருவதற்கு முன்னரே தேவை.இதற்கு அவள் வேண்டுவதெல்லாம் அந்த வயது, நிலைக்கு வரும்வரை அவள் தேர்ந்தெடுக்காத மற்ற உறவுகள் (பெற்றோர் முதல் சமூகம் வரை) அவளை எல்லா வகையிலும் வளர விடுதல் மட்டுமே. முடிந்தால் அந்தக் காலம் வரை அவள் வாழ்க்கையில் உள்ள ஆண்களும் பெண்களும் அவள் சரியான தேர்வுகளைச் செய்ய, தன் மனதின் குரலை கேட்டுப் பழக்கப் படுத்த உதவினாலே அது ஞாலத்தின் மாணப் பெரிது

  .ஒரு நாள், “மகளிர் தினமா! யாராவது அபத்தமாய் மனிதர்களாய் இருப்பதைக் கொண்டாட வேண்டுமா?” என்று எல்லோரும் கேட்குமாறு ஆக வேண்டும். சீக்கிரமாய் இந்த நாள் வர முடிந்ததைச் செய்யுங்கள்.

  டாக்டரின் மனைவி என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்றுதான் வந்தேன் உமா…….ஒரு சுயமரியாதை உள்ள பெண் எதையெல்லாம் எதிர்கொள்ள்வேண்டியிருக்கிறது என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள் உமா…..உமா உங்கள் வரிகளில் பிடித்த வரிகள் எதை விடுவது….எதைச் சொல்வது….பிரம்மித்துவிட்டேன்..அழகான பதிவு…..______________________________________

 15. பக்குவமான பதிவு.
  சேமித்து வைத்துக்கொண்டேன். இன்றைய நிலையில் எனக்கு பயனுள்ளதாக அமைந்த இந்தப்பதிவு நாளை என் மகளுக்கும் உதவும்.

  நன்றி உமா மேடம்.

 16. என் அம்மா மேல் எனக்கு கோவம் வராது – ஆனால் என் மனைவிமேல் கோவம் வருது இது வெருப்ப இல்ல அன்பா –

  • இதை ஏன் என்னிடம் கேட்டீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் நினைத்ததை அப்படியே பதிவு செய்திருக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன். நானும் நினைத்ததை பதிவு செய்யலாம் என்பதால் “இல்ல கொழுப்பா” என்றும் உங்கள் கேள்வியில் சேர்க்கத் தோன்றுகிறது!

   • அம்மா உன்னை சுமந்தாள், உன் மனைவி உன் திரவத்தையும் உன்னையும் அல்லவே சேர்த்து சுமக்கிறாள் .அதனால் அவளை பார்த்தல் கொஞ்சம் வேர் வேருப்பகதான் இருக்கும்

    • enga amma ennai romba freedom ma irukka viduranga anaal en manaivi en familya kavanithal he used to fight with me.

     My mom gives more freedom on my decision making , when i server my family my wife becames angry & and try to make fight with me. ithu – what I am trying to say for women another women is enemy – !? correct .

    • நீங்கள் உங்கள் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ந
     முறையாக கொடுத்திருந்தால் உங்களை விட உங்கள் மனைவி
     பல மடங்கு உங்கள் வீட்டாரை கொண்டாடி இருபார்.ஒரு பெண்
     இன்னொரு பெண்ணை எதிரியாக நினைப்பதற்கு
     பின்னால் கண்டிப்பாக ஒரு ஆணின் நயவஞ்சகம் உண்டு.
     நீங்கள் செய்ய வேண்டியதை அவரிடமே விட்டு விடுங்கள் .
     பிறகு பாருங்கள் உங்கள் மனைவியின் மாற்றத்தை.

 17. நல்ல பதிவு. சில இடங்கள் கொஞ்சம் அசை போட்டால் தான், மண்டையில் உரைக்கும் என நினைக்கிறேன். (பெண்ணுரிமை சார்ந்த விசயங்கள் மட்டுமில்லை 🙂 ) விரிவாக பிறகு, பின்னூட்டமிடுகிறேன்.

 18. உமா ருத்ரன்,

  படிக்க மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  உங்களின் எழுத்தை உங்கள் தளத்திலும் படித்தேன்.

  எனக்கு பெண்களை பொறுத்தவரை திருமதி/ செல்வி எனப்போடுவதை வெறுக்கிறேன். ஆதலால் பெயரை மட்டும் போட்டிருக்கிறேன்.

  கொசுறு :தோழர் கிளாரா செத்கின் எழுதிய “என் நினைவுகளில் லெனின்” உழைக்கும் பெண்களின் விடுதலை குறித்த முக்கிய விவாதங்கள் இருக்கின்றன.. உமா ருத்ரன் ,, நீங்கள் படித்துவிட்டீர்களா?

  கலகம்

  • நன்றி.நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் படிக்கவில்லை. விரைவில் செய்கிறேன். பிரதி எங்கே கிடைக்கும்?

 19. At times, if you are very involved with your work and tend to argue or fight with someone in office, immediately they brand u as mother-in-law, wife etc in the office. When a woman is passionate about her work, values, or ideas – it should be viewed dispassionately!!!

 20. நெருக்கமாக உணர வைத்தது உங்களின் பதிவு.
  இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க வைத்தது (பிள்ளைகள் வளர்ப்பு) சிறப்பு.
  என்னையும் கொஞ்சமாவது பக்குவப்படுத்தியது தமிழ் எழுத்துக்கள்தான்.

 21. உமா ருத்ரன் அவர்களின் சுதந்திர ஜனநாயக உணர்வுகள் மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன .வாழ்த்துக்கள் உங்களுடைய திறந்த மனப் பதிவுகள் தொடரட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க