உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 11
பிள்ளத்தாச்சிப் பெண் மீது எல்லோருக்கும் ஒரு அனுதாபம் உண்டு. என்னைக்கேட்டால் பத்து மாதம் சுமக்கும் துன்பம் (அப்படி சொல்லக் கூடாதோ) ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.
ஃப்ரீடம், ஸ்டேஃப்ரீ, விஸ்பர் … எல்லா நாப்கின் விளம்பரங்களிலும் துள்ளித் திரியும் பெண்கள்… எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கி, காலையில் முழு உற்சாகத்துடன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழும் பெண்கள்…
மெடிக்கல் ஷாப்களின் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாப்கின்களை தூரத்திலிருந்தே ஏக்கத்துடன் பார்த்தபடி செல்லும் ஏழைச் சிறுமிகளைப் பார்க்கிறேன். இந்த ஏக்கத்தை நான் அனுபவித்ததில்லை. நான் பருவத்துக்கு வந்த நாளில் இதெல்லாம் இருந்ததா என்றே எனக்குத் தெரியாது.
தாமதமாகப் பூப்பெய்துவது ஏழ்மை பெண்ணுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு அப்போது வயது 16. அரை வயிறு சோறு. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு வேளை. அதுவும் நிச்சயமில்லை. பள்ளி இறுதியாண்டு. அரைப் பரீட்சை நெருங்கிய நேரம். என்ன ஏது என்று அப்போது புரியவில்லை. வீட்டில் என்னை வைத்து ஒரு சின்ன கொண்டாட்டம். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
முதல் ஆறு மாதங்களுக்கு வலி எதுவும் இல்லை. அப்புறம் அந்த நாட்களில் உதிரப் போக்கு அதிகமானது. இரண்டு கி.மீ நடந்து பள்ளிக்கூடம் போகவேண்டும். பஸ்ஸுக்கு காசு கிடையாது. காலையில் கிளம்பினால் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் வரை தாக்குப் பிடிக்கின்ற அளவுக்கு பழந் துணிதான் பாதுகாப்பு. ஈரமான பகுதியைக் கீழே மாற்றி, உலர்ந்த பகுதியை மேலாக மாற்றி மடித்து வைத்துக் கொண்டு நடக்க வேண்டும்.
நல்லவேளையாக அது பெண்கள் பள்ளி. அரசுப் பள்ளியின் கழிப்பிட வசதி பற்றிக் கேட்க வேண்டுமா? தண்ணீர் இருக்காது. 10 நிமிட இடைவெளியில் வகுப்பில் உள்ள எல்லாப் பெண்களும் சென்று வரவேண்டும். இடையில் கேட்டால் டீச்சர் திட்டுவார்களோ என்று பயம். நடந்து வீட்டுக்கு வரும்போது ரத்தக் கசிவினால் ஈரமான துணி இருபக்கத் தொடையையும் உரசிப் புண்ணாக்கி இருக்கும்.
வீட்டுக்கு வந்தால் கழிப்பறை எப்போதும் மூடியே இருக்கும். நீண்ட காம்பவுண்டின் கோடியில் பத்து வீட்டுக்கும் பொதுவாக ஒரு கழிப்பறை. குழாய் கிடையாது. 2,3 முறை வந்து தண்ணீரை எடுத்துப் போக வேண்டும். இரவிலும் போக வேண்டியிருக்கும். வீட்டு ஓனரின் மகன் ஒரு பொறுக்கி. இருட்டில் வந்து மார்பில் கை வைப்பான். துணைக்கு அம்மாவைக் கூப்பிடலாம் என்றால், தம்பியோ தங்கையோ அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவைக் கூப்பிடலாம். இருந்தாலும் கூச்சம்.
பள்ளி முடிந்து ஐ.டி.ஐ யில் சேர்ந்தேன். இடுப்பெலும்பில் வலி ஆரம்பித்தது. இடுப்பெலும்பின் சுற்று வட்டம் முழுவதும் அதன் நடுப் பகுதியில் ஒரு கம்பியை விட்டுக் குடைவது போன்றிருக்கும். வயிற்றின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தொடங்கி சிறுநீர்த்துவாரம் வரை அழுத்தும் வலி, தலை பாரம், கண்ணை இமை அழுத்தும். இடையிடையே வாந்தி, 4 நாட்களுக்கு அதிகமான உதிரப்போக்கு, எப்போதும் வாந்தி வருவது போன்ற உணர்வு, சாப்பிடப் பிடிக்காது, சாப்பிடவும் முடியாது, குளிர்ச்சியாக ஒரு சோடாவோ குளிர்பானமோ குடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். முடியாது. வறுமையில் அது ஒரு ஆடம்பரச் செலவு. படுத்துக் கொண்டு அம்மா, அம்மா என்று அரற்றுவேன். உருளுவேன். பரால்கான் மாத்திரை சாப்பிட்டு ஒரிரு மணி நேரங்களில் அரற்றலும் உருளலும் குறைந்து அசையாமல் படுத்து கொஞ்ச நேரம் அரை உறக்கத்திலிருப்பேன். அந்த 4 நாட்கள் முடிந்து விட்டால்.. அதுதான் சுதந்திரம்!
மாத விலக்குக்கு ஒரு வாரம் இருக்கும் போதே பயமாக இருக்கும். வெறுப்பும் விரக்தியும் தோன்றும். ஆனால் யாரிடம் சொல்வது? எங்கே ஓடி ஒளிவது? நாள் நெருங்க நெருங்க செத்துப்போய் விட்டால் நல்லது என்று தோன்றும். வலி குறைந்தவுடன் இன்னும் மூன்று வார காலம் வலியின்றி இருப்போம், அடுத்த முறை வலி வருவதற்குள் செத்துப்போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
அம்மாவுடன் ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு போனேன். இந்த வலிக்கு மருந்தில்லை, கல்யாணமானால் சரியாகி விடும் என்றார் டாக்டர். திருமணம் என்றால் மாலைதானே போடுகிறார்கள், அந்த மாலையை இப்போதே போட்டுக் கொண்டால்? அந்த அளவுக்குத்தான் அன்றைக்கு விவரம் தெரியும். அதையும் அம்மாவிடம் சொல்ல பயம்.
மாதங்கள் செல்லச் செல்ல உபத்திரவம் அதிகரித்தது. நான் படித்தது பெண்களுக்கான ஐ.டி.ஐ தான் என்றாலும் சில பாடங்களுக்கு ஆண் லெக்சரர்கள் வருவார்கள். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆங்கில லெக்சரர் வருவதற்குள் கழிவறைக்குச் சென்று வந்துவிட எண்ணி அவசரமாய் வெளியேறினேன். அப்போதும் துணி தான் உபயோகம். துணி நழுவிக் கீழே விழுந்தது. லெக்சரரின் கண்ணிலிருந்து அது தப்பியிருக்காது. கூசிப்போனேன்.
1977, 78 இருக்கும். சானிட்டரி நாப்கின் பற்றி அப்போது வாரப் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன். வகுப்பில் கொஞ்சம் வசதியான பெண்களும் இருந்தனர். தோழி சாரதாவிடம் கேட்டதற்கு எலாஸ்டிக் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கின் இருப்பதாகச் சொன்னாள். வீட்டில் காசு கேட்க முடியாது. வீட்டிலிருந்தது கல்லூரிக்கு வர இரண்டு பஸ் மாற வேண்டும். மொத்தம் 7 கி.மீ தூரம். ஒரு பஸ்ஸுக்கு மட்டும்தான் வீட்டில் காசு தருவார்கள். டிக்கெட் விலை 25 பைசா. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி மொத்த தூரத்தையும் நடந்து காசு சேர்த்தேன். அதில் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கினை சாரதா வாங்கித் தந்தாள். துணியை ஒப்பிடுகையில் மிகவும் மெலிதாக பார்க்க அழகாக இருந்தது. முதல் முறை உபயோகித்து பத்திரமாக உறையில் சுற்றி வீட்டுக்கு எடுத்து வந்தேன். இவ்வளவு சுலபமான வழி நமக்கு தெரியவில்லையே என்ற நினைத்துக் கொண்டேன். சோப் போட்டுக் கசக்கினேன். நாப்கின் துண்டு துண்டானது.
யூஸ் அண்டு த்ரோவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஒரு நாள் சுதந்திரத்தின் விலை எத்தனை கிலோ மீட்டர் நடை? இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.
படிப்பு முடிந்து ஒரு எலக்ட்ரிகல் சாமான் கடையில் வேலை. மாதம் 100 ரூபாய் சம்பளம். தம்பி தங்கைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு நிச்சயம் ஆனது. எனக்கு அளவு கடந்த நிம்மதி. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை. வீட்டிலிருந்து கடை 5 கி.மீ. தூரம். மாதத்தின் முதல் 10 நாட்கள் பஸ்ஸில். மீதி நாட்கள் நடை. எனது நெருங்கிய தோழியும் அங்கு வேலைக்கு சேர்ந்தாள். துணைக்கு ஆள் வந்தது எனக்கு பெரிய பலம் போல இருந்தது. காலையிலும் சரி, மாலையிலும் சரி, ஒரு டீ குடிக்க வேண்டும் என்றால், ஓனர் சொல்வாரா என்று காத்திருக்க வேண்டும். டீ சொல்வதும் சொல்லாததும் வாங்கி வரச்சொல்லும் நேரமும் அவர்களது மூடைப் பொறுத்தது. மாத விலக்கு சமயத்தில் தொண்டையும் நாக்கும் உலர்ந்து ஒரு டீ கிடைக்காதா என்று தவிக்கும்.
இந்த சமயம் பார்த்து ஸ்டாக் எடுக்கும் வேலையும் வரும். ஏணியில் ஏறி, உயரமான ஷெல்ஃபுகளில் இருக்கும் பொருட்களை இறக்கி, எண்ணி எழுதி தூசி தட்டி வைக்க வேண்டும். எத்தனை முறை ஏறி இறங்குவது? நானும் அவளும் சேர்ந்து தான் செய்வோம். வலி உயிர் போகும். ஸ்டாக் எடுக்கும் வேலையை ஆண்களைச் செய்யச் சொல்லுங்கள் என்று அவள் ஓனரிடம் ஒருநாள் தைரியமாக சொல்லி விட்டாள். அவள் சம்பளத்தை நம்பி குடும்பம் இல்லை. எனக்கோ தம்பி தங்கைகளை நினைத்தால் தைரியம் வராது.
ஒரு நீளமான பழைய வீட்டைத்தான் கடைக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கழிவறைக்கு மேலே மேலே கூரை கிடையாது. நின்றால் பக்கத்து மாடி வீடு, கடைகளில் உள்ளவர்களுக்குப் பார்க்க முடியும். அங்கும் தண்ணீர்ப் பிரச்சினை. மாத விலக்கின் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் லீவு போட வேண்டாம். மற்ற நாட்களாக இருக்கும் பட்சத்தில் லீவு போடுவேன். ஓனர் கோபமாகக் கேள்வி கேட்பார். அழுவதற்கு என் தன்மானம் இடம் கொடுத்ததில்லை. வேலை செய்து கொண்டு அழுகையை அடக்கிக் கொள்வேன். ஒரு நாள் இரண்டாவது பார்ட்னரின் மனைவி கடைக்கு வந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் மனிதாபிமானி. நான் ரொம்பவும் சோர்ந்திருப்பதைப் பார்தது, “ஏன் இப்படி இருக்கிறாய்” எனக் கேட்டார். “என்ன செய்வது, செத்துப்போய் விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் சாக முடியவில்லை” என்று சொல்லி விட்டேன். அப்போது எனக்கு வயது 20. மிகவும் வருத்தப்பட்டார்.
ஒரு பெண் டாக்டரிடம் அழைத்துப் போனார். மருந்துகள் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. “வலி நிவாரணிகள் தவிர வேறு வழி இல்லை, வேறு சில மருந்துகள் உள்ளன, ஆனால் அதையெல்லாம் தொடர்ந்து உபயோகித்தால் வேறு பக்க விளைவு வரும். திருமணமானால் படிப்படியாக சரியாகி விடும்” என்றார். அன்று திருமணம் என் தேவையாக இல்லை. குடும்ப நிலைமை அப்படி. “கர்ப்பப் பையை எடுத்து விட்டால் இந்தப்பிரச்சினை இருக்காது என்கிறார்களே டாக்டர், செய்வீர்களா” என்றேன். “இந்த வயதில் அதைச் செய்ய முடியாதும்மா” என்றார் சோகம் கலந்த புன்னகையுடன். அப்புறம் நான் டாக்டரை பார்ப்பதில்லை. நான் லீவு போட்டால் ஓனரும் என்னைத் திட்டுவதில்லை.
அப்புறம் கொஞ்சம் நல்ல வேலை கிடைத்தது. எனினும் நாப்கின் வாங்கும் அளவு வசதி கூடிவிடவில்லை. துணிக்கு பதிலாக கட்டுக்கட்டாக பஞ்சு. வலி நீடித்தாலும், தொடை உரசிப் புண்ணாவது பெரிதும் குறைந்தது. அன்று அதுவே பெரிய சந்தோஷம்.
பின்னர் திருமணம். அந்த நாட்களில் நான் பட்ட வேதனையைப் பார்த்து அவரது கண்ணில் நீர் வழிந்தது. வலியை மறக்கும் அளவுக்கு அதுவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. இரண்டாவது மாதம் சற்றே சோகமாக இருந்தார். மூன்றாவது மாதம் அந்த சமயத்தில் சினிமாவுக்குக் கிளம்பி விட்டார். கேட்டதற்கு “ஆமாம், உனக்கு வலியாக இருக்கும்போது நான் என்ன செய்வது? நானாவது சினிமாவுக்குப் போய் பொழுதுபோக்கிக் கொள்கிறேன்” என்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. என் வலியை அவரால் வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அவர் இது போன்றொரு அவஸ்தையிலிருக்கும்போது நான் சந்தோஷம் தேட நினைத்திருப்பேனா?
வலியுடன் இரவு நேரத்தில் வாந்தி வருவதும் வாடிக்கையாகியிருந்தது. திருமணத்துக்கு முன் அம்மாவோ, தம்பியோ, தங்கையோ வந்து முதுகை நீவி விடுவார்கள். முடிந்தவுடன் கொஞ்சம் வெந்நீர் கொடுப்பார்கள். இதமாக இருக்கும். ஒருநாள் இரவில் வாந்தி வந்தது. நடுநிசி. அவரை எழுப்பி விட்டு அவசரமாக பாத்ரூமுக்கு ஓடினேன். வாந்தி எடுக்கும்போது முதுகை நீவிவிடும் கை இல்லை. திரும்பி வந்தேன். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மனம் கனத்தது. நாம் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்குகிறார் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன். “நான் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்கி விட்டீர்களா?” என்று கேட்டு விட்டு ஆமாம் என்ற பதிலுக்காக காத்திருந்தேன். “நான் தூக்கத்தை விட்டு வருமளவிற்கு இது என்ன பிரச்சினை, எப்பவும் வரும் வாந்தி தானே” என்றார். வலித்தது. இந்த மாதிரியான வலிகளும் கூட பெண்களுக்கே உரியவை. இல்லையா?
அவர் கொடுமையான ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து உதவும் அளவுக்கு நல்லவர். கை நீட்டாதவர். இருந்தாலும்.. எப்போதாவது சொற்களால் மட்டுமே சுடுகின்ற சராசரி ஆண். நான் சொன்ன சம்பவம் ஆண்களின் மனதைத் தொடுமா என்று தெரியவில்லை. சின்ன உதாசீனங்களை நான் பெரிது படுத்துவதாகக் கூட நினைக்கலாம். ஆனால் ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.
இதைப் படிக்கின்ற ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் சிலருக்கும் கூட கொஞ்சம் அலுப்பாக இருக்கலாம். இன்றைய நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது. எனவே ‘கேர் ஃப்ரீ’ யாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் சாதாரண ஏழைப்பெண்களுக்கு இது பிரச்சினைதான். இதை பெண்ணின் பிரச்சினை என்று சொல்வதா, ஏழையின் பிரச்சினை என்று சொல்வதா தெரியவில்லை.
குறிப்பிட்ட நாட்களில் லீவு போட்டால், ஆண்களின் ஏளனமான சிரிப்பு, இதை சாக்கு வைத்துக் கொண்டு வேலையை தட்டிக் கழிக்கிறார்கள் என்று கிண்டல், கடமையை வலியுறுத்தும் மேலதிகாரிகள், அவர்களிடம் தனது பிரச்சினையைச் சொல்வதற்கு தன்மானம் இடம் கொடுக்காததால் தவிக்கும் பெண் ஊழியர்கள்… நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் கூட அன்றாடம் இதையெல்லாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமீபத்திய தினமணியில் பார்த்தேன். இந்தியாவில் 65 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்று ஒரு கட்டுரை. கிராமமோ நகரமோ, காலைக் கடனைக் கழிப்பதற்கே விடிவதற்கு முன் பெண்கள் புதர்களைத் தேடி ஓட வேண்டும். பிறகு இருட்டும் வரையில் காத்திருக்க வேண்டும்.
பொறுக்க முடியாத வலி என்பது என்னைப் போன்ற சில பெண்களைப் பிடித்த சாபக்கேடு. ஆனால் அந்த நாட்களின் உதிரப்போக்கும், களைப்பும் பெண்கள் அனைவருக்கும் உடன் பிறந்தவை. தாங்க முடியாத போது இப்போதெல்லாம் நான் லீவு போட்டு விடுகிறேன். அலுவலகத்தில் தரமான பாத்ரூம் இருக்கிறது. எனக்கு வாழ்க்கை மாறியிருக்கிறது.
ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்கள், கடைகளில் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கும் பெண்கள், கார்ப்பரேசன் பள்ளிகளின் படிக்கும் சிறுமிகள்.. இவர்கள் யாருக்கும் வாழ்க்கை மாறவில்லை. என்னைப் போல இவர்கள் விவரம் தெரியாத அசடுகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த ‘ஃப்ரீடம்’ தங்கள் கைக்கு எட்டாது என்பதும் புரிந்திருக்கும்.
இடுப்பு எலும்பைக் குடையும் அந்த வலியுடன் நாப்கின் வாங்குவதற்காக போன மாதம் கடையில் நின்று கொண்டிருந்தேன். சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு 16 வயதுச் சிறுமி கலவைக்கு ஜல்லி அள்ளிக் கொண்டிருந்தாள். கறுப்பான பொலிவான முகம். கொஞ்சம் சாயம் போன பாலியெஸ்டர் பட்டு பாவாடை சட்டை. வயசுக்கு வந்ததைக் கொண்டாட வாங்கித் தந்ததாக இருக்குமோ? நானும் அந்த நாளில் இப்படி ஏதோ ஒரு புதுப் பாவாடை சட்டை போட்ட ஞாபகம்.
கருங்கல் ஜல்லியை சட்டியில் அள்ளிப்போட்டு விட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தூக்கி விட ஆள் இல்லை. அவள் யாரையும் கூப்பிடவும் இல்லை. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு அந்தச் சட்டியைத் தூக்கினாள். எனக்குச் சுரீர் என்று வலித்தது.
அழுகையை அடக்கிக் கொண்டு, எலக்டிரிகல் கடையில் ஏணியில் ஏறி ஸ்டாக் எடுத்த அந்த நாள், நினைவுக்கு வந்தது. கல்லைக் கொட்டிவிட்டு அடுத்த நடைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பார்த்தேன். கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது.
_____________________________________
– சங்கரி
தோழர் சங்கரி ஒரு ம.க.இ.க ஆதரவாளர். தனியார் நிறுவனத்தில் வேலை, சென்னையில் குடும்பத்துடன் வாழ்கிறார்.
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
மரியாதை மிகுந்த வாழ்த்துகள் ; எழுத்தும் கருவும் வழியையும் உரத்தையும் நுட்பமாய்க் கொண்டு வந்திருக்கின்றன.
மிக நுட்பமான ஒரு பதிவு. இந்த பதிவை எழுதியவர், இன்று இந்த வலியை கடந்து இருந்தாலும், நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் இந்த வலியுடன் இருக்கிறார்கள் என்பது வலியுடன் கூடிய உண்மை.
தெருவில் ரத்தம் சொட்ட சொட நடந்த பெண்களையும் பார்த்து இருக்கிறேன். பாசாங்கற்ற இம் மாதிரியான நேர்மையான இடுகைகளை வரவேற்கிறோம்.
என்னவொரு அழுத்தமான இடுகை… மனம் முழுக்க பாரம்… ஆணாக இருப்பதாலேயே உணர முடியாத கொடுமை… ‘இடுப்பு முழுக்க குண்டூசியால தைச்ச துணியத்தான் 4 நாட்களும் அணியறேன்… வலிக்குதுடா…’ என்று அழுத தோழிதான் நினைவுக்கு வருகிறாள். பல தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் தோழிகளுடன் உரையாடும்போது அவர்கள் மறக்காமல் குறிப்பிடுவது இன்றும் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள், போதுமான கழிவறை வசதியின்றி திணறுவதை குறித்துத்தான். சென்னையிலேயே எத்தனை நிறுவனங்களில் போதுமான கழிப்பிட வசதி இருக்கிறது? அழுத்தமான இடுகையை பிரசுரித்த வினவுத் தோழர்களுக்கு நன்றி… தோழமையுடன் பைத்தியக்காரன்
வேதனை தரும் கட்டுரை தோழர். சில சமயம் பெண்களை இயற்கை கடுமையாக வஞ்சிக்கிறதோ எனத் தோன்றுகிறது. எனினும், தங்கள் போராட்டம், தனது சொந்தத் துயரத்திலிருந்து அதன் வர்க்கப் பரிமாணத்தை தாங்கள் உணர்ந்திருக்கும் தன்மை, அதனை எளிமையாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தியிருக்கும் விதம்… பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எழுதியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
//ஆனால் ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.//
மொத்தப் பதிவுமே கூர்மையாகவும், நெற்றிப் பொட்டிலறைவதாகவும் இருந்த போதிலும், இந்த ஒரு வரி… என்ன சொல்ல? கண்ணிய வேடமணிந்த ஆணாதிக்கத்தின் முகத்தில் விழும் அறை!
என்ன சொல்றதுனே தெரியல …..
இன்னும் ஆழமாக பெண்மையை புரிந்து கொள்ள இந்த பதிவு உதவியது.
உழைக்கும் எந்த பெண்ணை பார்த்தாலும் இந்த வலி கண் முன்னே நிற்கும்
நன்றி
//இதைப் படிக்கின்ற ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் சிலருக்கும் கூட கொஞ்சம் அலுப்பாக இருக்கலாம். இன்றைய நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது. எனவே ‘கேர் ஃப்ரீ’ யாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் சாதாரண ஏழைப்பெண்களுக்கு இது பிரச்சினைதான்.//
நிச்சயமாக அலுப்பாக இருக்காது, தோழி. அப்படி யோசிக்க, பெண் வர்க்கம் கேவலமானது அல்ல.
u r true sankari sis….tears in my eyes………very very good article…..
நீண்ட நாட்களுக்கு இந்தக் கட்டுரை நினைவில் இருக்கும். எனது சிந்தனையில், அணுகுமுறையில், நடைமுறையில் மாற்றத்தைக் கோரிய
எழுத்துக்களை மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே வாசித்திருக்கிறேன் – அதில் இந்த எழுத்து இனிமேல் என்றென்றைக்கும் இருந்து
கொண்டேயிருக்கும்.
துன்பங்களை பேசும் எழுத்துக்கள் பொதுவில் பரிதாபத்தை ஏற்படுத்தும் – ஆனால் இந்தக் கட்டுரை மரியாதையை ஏற்படுத்துகிறது.
வேதனையாக இருக்கின்றது. ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும் ? எங்கள் வீட்டுப் பெண்களுக்கு இந்த கஷ்டம் இல்லை. அந்த ஏழை மக்களுக்கு ?. இந்த உழைக்கும் மக்கள் உணவு,உடை, உறைவிடம் போன்று பெண்களுக்கே உரிய இந்த தேவைகளுக்காக அறுபத்தி சொச்சம் சுதந்திர ஆண்டுகளிலும் தவிக்கும்போது, ஜகத்தினை கொளுத்திடும் ஆத்திரம் வருகிறது. ஆனால் என்ன செய்ய முடியும் ?. புரட்சிகர அமைப்புகளில் மக்கள் சேர்ந்து அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வென்றெடுக்கும் வரை அவர்கள் இந்த வாழ்க்கையை அனுபவிக்கதான் வேண்டும் என்னும் போது இன்னும் மனது வலிக்கிறது.
மனதை கனக்க வைத்து விட்டீர்கள், சங்கரி! /பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த ‘ஃப்ரீடம்’ தங்கள் கைக்கு எட்டாது என்பதும் புரிந்திருக்கும்./ 🙁 ‘எனக்கு யூட்ரஸ் வேணாம் பெரிம்மா’-னு ஏழாவது படிக்கும்போது அழுதது ஞாபகத்து வருகிறது. இதே துணியால், அந்த நாட்களில் ஒதுக்கி வைத்து படுத்திய வீட்டினரின் சம்பிரதாயங்களால் பட்ட கஷ்டங்களை பெரிம்மாவும், அம்மாவும் சொன்னதையும் நினைத்துக்கொள்கிறேன்.
எழுத்தில் பாசாங்கு இல்லாமல் இருந்தாலே படித்து முடித்தவுடன் கண்ணீர் வந்து விடும் போலிருக்கு. பெண் உரிமை என்பதை விட உலகில் உள்ளவை என்று எடுத்துப் பார்த்தால் தோழியின் எழுத்து கல்வெட்டு.
நல்ல இடுகை.இதை எல்லாம் நானும் அனுபவித்து இருக்கேன். இன்னும் எத்தனயோ பெண்கள் கஷ்ட படறாங்கன்னு நெனைக்கிற அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. நாம இதில் இருந்து வெளிய வந்துட்டோம். ஆனா அந்த பெண்களுக்கு எல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்…???? காலம் அதுவா பிறக்குமா???? நம்ப எல்லோரும் அந்த பெண்களுக்கு எந்த விதத்தில் உதவ போகிறோம்??? யாருக்கேனும் எண்ணம் தோன்றினால் சொல்லுங்க. ஒரு பெண்ணின் வழியையாவது போக்க முயற்சிகலாமே….
பொது நலனில் அக்கறை உள்ள அனைவராலும் முடியும் என்று நம்புகிறேன்.
நல்ல இடுகை சங்கரி..
துணிகளை பயன்படுத்திய துன்பம் நினைவுக்கு வருகிறது.
பல பெண்களுக்கு துணியும் கூட கிடைப்பதில்லையாம் . கிழிந்த ப்ளவுஸ்களை பயன்படுத்தி அதிலிருந்து ஹூக் ஒன்று கர்ப்பப்பைகுள் சென்று ஒரு பெண் மிக மோசமான நிலை அடைந்தாள் என்று படித்த ஞாபகம். இது போன்ற சூழ்நிலையில் பயன்படுத்த என்றே ஒரு NGO பழைய துணிகளை சேமித்துக்கொண்டிருந்தார்கள். அன்று மிக அழுகையாக வந்தது.
சகோதரியின் இந்தக் கடிதத்தை என் வாழ்வில் என்றும் நான் மறக்க முடியாது.
####தோழர் சங்கரி ஒரு ம.க.இ.க ஆதரவாளர்####
அதென்ன ஒரு ம.க.இ.க ஆதரவாளர்?
[…] This post was mentioned on Twitter by vinavu and Sundar, பொறுக்கி. பொறுக்கி said: இந்த மாதிரியான வலிகளும் கூட பெண்களுக்கே உரியவை. இல்லையா? http://tiny.cc/792ox […]
சகோதரி, உங்கள் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. பாதிக்கு மேல் படிக்க முடியாமல் கழிவறைக்குச் சென்று கண்ணீரைக் கொட்டி விட்டு வருகிறேன்.
எப்படிப்பட்ட எழுத்து?
சானிடரி நாப்கினின் ‘ஆடம்பரச் செலவை’ நானும் விடுதியில் இருந்த போது உணர்ந்திருக்கிறேன். ஏழைப் பெண்கள் என்ன செய்வார்களென்றும் யோசித்திருக்கிறேன். ஆனால்.. இவ்வளவு சங்கடங்களை அறிந்ததில்லை.
ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியால் அடிக்கிறது. இம்மாதிரி அதிகம் வலி வரும் ஒரு தோழியை அறிவேன். வகுப்புக்கு வராமல் விடுதியிலேயே ஓய்வெடுத்துக் கொள்வாள். அந்த நாட்களில் வேலை செய்ய வேண்டி இருக்கும் பெண்களின் நிலை.. :((
//சோப் போட்டுக் கசக்கினேன். நாப்கின் துண்டு துண்டானது.
யூஸ் அண்டு த்ரோவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஒரு நாள் சுதந்திரத்தின் விலை எத்தனை கிலோ மீட்டர் நடை? இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.//
:((
//ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.// 🙂
// வயசுக்கு வந்ததைக் கொண்டாட வாங்கித் தந்ததாக இருக்குமோ? நானும் அந்த நாளில் இப்படி ஏதோ ஒரு புதுப் பாவாடை சட்டை போட்ட ஞாபகம்.
// ஐயோ…
A heart-rending post, comrade. You have so empathetically captured the sufferings of women and contextualized it so perfectly in this unforgiving patriarchal class soceity. Your words are powerful, real, and moving. It really makes one emotional, but your words also definitely fills us with pride for having taken on the system with such guts and clarity. Thank you so much for writing this piece. Women like you give us so much hope and inspiration. Please do write more.
பெண்களின் வாழ்க்கையும் வலியையும் புரிந்து கொள்ள இக்கட்டுரையை அவசியம் ஆண்கள் வாசிக்க வேண்டும். எளிமையாக அதே நேரத்தில் வலிமையாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். பெண்ணுரிமை என்ற பெயரில் எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கும் பெண்களிடைய சங்கரி போற்றப்பட வேண்டியவர்
சகோதரி சங்கரி உங்களுடைய நேர்மையான எழுத்தைக்கண்டு வியக்கிறோன் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை நானும் உழைக்கும் பெண்களை பல சந்தர்ப்பங்களிள் கவனித்திருக்கிறோன் ஊரு விட்டு ஊரு வந்து வீடு வீடாக சென்று புதுக்கம்பேனி டுத்பேஸ்ட்டை அறிமுகப்படுத்தி விற்கின்ற ஒரு பெண் எனது வீட்டுக்கும் வந்தார் நான் பேஸ்ட் வாங்க வேண்டிய தேவை இல்லமால் இருந்தும் ஒரு பேஸ்ட் வாங்கிக்கொண்டு என் மனைவியை அழைத்து அந்த பெண்ண பாத்ரூம்க்கு கூட்டிட்டு போ ந சொன்ன கூச்சப்படுவார் என்று சொன்னோன் என் மனைவி அந்த பெண்ணை பாத்ரூம் போறத இருந்த இங்கே உள்ளே வா என்று கூப்பிட்டவுடன் அந்தப்பெண் அவசரமாக கழிவறைக்குள் நுழைந்தது எதோ முழு பெண் சுகந்திரமும் கிடைச்சது மாதிரி என் மனைவி கைகளைப்பிடித்து நன்றி சொன்னது எனக்கு இன்றும் நினைவிறுக்கிறது
நன்றி.
அழுத்தமான இடுகை… மனம் முழுக்க பாரம்
வாழ்த்துக்கள் தோழர்,
அந்த நாட்களின் வலிகளை துல்லியமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள். இந்த வலிகளை என்னாலும் உணர்ந்துகொள்ள முடிகிறது. என் மனைவிக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. மருத்துவத்தால் ஆறுதல் படுத்த முடியாத அந்த வேதனைகளை விட \\ஒரு நாள் சுதந்திரத்தின் விலை எத்தனை கிலோ மீட்டர் நடை// எனும் உங்களின் வரியின் யதார்த்தம் வேதனை தருகிறது.
தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.
செங்கொடி
என்ன செய்வது இறைவன் கொடுத்த வரம் ஆனால் மாதவிடாய் வரவில்லை என்று சொன்னால் அதுவும் பெண்ணுக்கு பெரிய பிரச்சனை என்ன செய்வது தோழியே ………………..?
சிறப்பான இடுகை.
இரண்டு சகோதரிகளுடன் பிறந்திருந்ததால்… சிறு வயதிலேயே அரசல் புரசலாக தெரிந்திருந்தது. வலியும் தெரிந்திருந்தது. நானும் ஒரு பெண்ணும் வேலைபார்த்த அலுவலகத்தில்…அந்த பெண் மூன்று நாட்களில் உருண்டு புரண்டு அழுவார். அதிர்ச்சியாய் இருந்தது அப்பொழுது தான். இரண்டு வருடத்திற்கு முன்பு நான் அறிந்த பெண்ணுக்கு 6 மாதங்களாக, 8 மாதங்களாக தொடர்ச்சியாக உதிரப்போக்கு இருக்கிறது என அறிந்த பொழுது, அரண்டே போனேன்.
ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்திருந்ததால்.. துணி தான் எனக்கும் முதலில் அறிமுகமாயிருந்தது. பிறகு கடைகளில் கேர்ப்ரி பார்த்த பொழுது… அதன் மென்மைக்காக ஆச்சரியமாய் பார்த்திருக்கிறேன்.
இந்த பீரிட்ஸ்-ஐ தீட்டு என தள்ளி வைக்கும் பொழுது… கோபமாய் வரும். அடேய்! இது மட்டும் நின்று போய்விட்டால்…இனி மனித சமூகமே அவ்வளவு தான்! எண்ணியிருக்கிறேன்.
வர்க்கப்பார்வையுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பலரையும் சென்றடையும்.
என்ன சொல்றதுன்னே தெரியலை, ஆனா அந்த பழைய துணி வேற உரசி உரசி புண்ணாகி தண்ணி பட்டா எரியுமே, அந்த எரிச்சலும், வலியையும் இந்தப் பதிவு உணர்த்தியது. படிச்சு முடிச்சவுடன் கடவுளே! ந்னு ஒரு நிமிசம் கண்ணை மூடிக்கிட்டேன்.
ஒட்டு மொத்த பெண் சமூகத்தின் வலியும் வெளிப்பட ஒரு கட்டுரை.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது நாப்கின் தருகிறார்கள்.
பாப்போம். விடிவு பிறக்காதா மனித சமூகத்திற்கு-வேண்டும்போது மட்டும் விலக்கு வரும் வழி செய்ய.
எப்படி தான் வாழ்ந்தாரோ என் மூதாதையர் –ஆச்சரியம்.
நாளும் நலமே விளையட்டும்
///ஆனால் ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.///
வேதனையை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.
சொல்வதற்க்கு வார்த்தைகள் ஒன்றுமில்லை….
///அவர் கொடுமையான ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து உதவும் அளவுக்கு நல்லவர். கை நீட்டாதவர். இருந்தாலும்.. எப்போதாவது சொற்களால் மட்டுமே சுடுகின்ற சராசரி ஆண்.////
ஒவ்வொரு சராசரி ஆணும் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதி தானே தோழர்?
//// நான் சொன்ன சம்பவம் ஆண்களின் மனதைத் தொடுமா என்று தெரியவில்லை./////
ஒருவர் ஆணாதிக்கவாதியா இல்லையா என்பதன் உரைகல் எது?
இதுவாக கூட இருக்கலாம்!
///பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த ‘ஃப்ரீடம்’ தங்கள் கைக்கு எட்டாது என்பதும் புரிந்திருக்கும்.////
மொத்தத்தில் சிறப்பான பதிவு.
சமூகம் இன்னும் அப்படியே தானிருக்கிறது…
வாழ்த்துக்கள் ஒன்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்ல முடியவில்லை.
எனக்குச் சுரீர் என்று வலித்தது..
நிச்சயமாய்
பெண்மையின் வலியை
எங்களாலும் உணர முடிகிறது.
சின்ன வயதில் வயிற்று வலிக்கு பரோல்கான் மாத்திரை வாங்கி சாப்பிடும் ஆண்களில் ஒருவனான என்னை கடைக்கார்ர் உட்பட பலரும் கிண்டல் செய்வார்கள். பதின்வயதில் கொஞ்சம் புரிந்தாலும் அதன் நகைச்சுவையை என்னால் ரசிக்க முடிந்த்தில்லை. ஒரு பெண்ணாக பிறப்பதன் வலியை உணர்த்தி விட்டீர்கள். ஆனால் நான் என்னை பல முறை ஒரு ஆணாதிக்க வாதி இல்லை என்றுதான் கருதிக் கொள்கிறேன். இப்படிப்பட்ட உங்களது கையறுநிலையை நீங்கள் சொல்லும் வரை தெரியாமல் இருந்த என் நிலைக்கும், உங்களது கணவரின் அக்கறையின்மைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சமூக மாற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில் உள்ள நான் இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்த்தற்காக அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். அந்த மன்னிப்பு என்பது இனிமேல் நீங்கள் சொல்வதற்கு பதில் நானே சென்று எனக்கு தெரிந்த அறிமுகமான பெண்களிடம் வெட்டி அரட்டை அடிப்பதற்கு பதில் அவர்களது உலகத்தை அவர்களது பிரச்சினைகளை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இரத்தம் சொட்ட சொட்ட எத்தனை பெண்கள் இன்னமும் அலைய இதுபற்றி ஒரு நல்ல மருத்துவரீதியான தீர்வை கண்டறிவதை விட முதலாளித்துவம் இளமை, அழகு, மார்பு சிகிச்சை என போகும்போது கோபம் வராமல் எப்படி இருக்க முடியும்.
பிறவி மீது நம்பிக்கையில்லை என்றாலும், கொஞ்ச நாளாவது பெண்ணாக வாழ்ந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு நல்ல பாதுகாப்பை இதுபோன்ற விசயத்திற்கே தரமுடியாத ஆணாதிக்க சமூகத்தில் வாழ நேர்ந்த இந்திய பெண்களுக்கு, சாதி இழிவின் காரணமாக இதனை எல்லாம ஒர விசயமாகவே கருதாத சமூகத்தில் வாழ நேர்ந்த எனதருமை சகோதரிகளுக்கு, ஒரு ஆண் என்ற முறையில் என்னை சிவல விசயங்களில் திருத்த முடியாதோ என்ற பயம் மேலும் வருவதால் நான் திருமணம் செய்ய மாட்டேன் என் வாழ்வில் என உறுதி கூறுகிறேன்.
//நான் திருமணம் செய்ய மாட்டேன் என் வாழ்வில் என உறுதி கூறுகிறேன்//
ஏன் சார் இப்படி உணர்ச்சி வசப்படறீங்க! ஆணாதிக்கத்தை அதன் நடைமுறையில் தான் திருத்த முடியும். திருமணம் பண்ணுங்க! ஒரு நல்ல துணையா… நல்ல தகப்பனா வாழ்வதின் மூலமாக தான் நீங்கள் மாற முடியும்.
///ஒரு ஆண் என்ற முறையில் என்னை சிவல விசயங்களில் திருத்த முடியாதோ என்ற பயம் மேலும் வருவதால் நான் திருமணம் செய்ய மாட்டேன் என் வாழ்வில் என உறுதி கூறுகிறேன்////
நீங்க ஏங்க எங்களை பயமுறுத்துறீங்க??
இப்படி உணர முடிந்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் போராடினால்
நல்ல துணையை வாழ முடியும் என்று கருதுகிறேன்.
வெரி வெரி useful
ஹ்ம்ம்
உங்கள் கட்டுரை என் கடந்த கால வாழ்க்கை முழுவதும் திரும்பி பார்க்க வைக்கிறது. நடப்பு சமூக நிகழ்வுகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன.
நல்ல பாத்ரூம் இல்லாத அலுவலகம், நாலு பரால்கான் மாத்திரை போட்டும் நிற்காத தோழிகளின் வலி!
வீட்டில் வேலை; அலுவலகத்திலும் வேலை; நீண்டதூரம் பயணிக்கும் பெண்கள்! ஒரு நிமிடம் சொணங்கினாலும்… வீட்டில் அடைபட வேண்டிய நிலை! பெண்கள் வீக்கர் செக்ஸ் இல்லை என்பது மட்டும் யதார்த்தமாய் உணர்ந்திருக்கிறேன்.
பல காலம் இந்த கட்டுரை மனதில் ஓடும். தொடர்ந்து எழுதுங்கள்!
வினவு பலரை கண்டுபிடித்து மேடையேற்றுகிறது. எதை எதையோ எழுதி கொண்டிருந்தவர்களையும் உருப்படியாய் எழுதுங்கள் என பாதையும் காட்டுகிறது!
மரியாதை மிகுந்த வாழ்த்துகள்.
எழுதுங்கள் சங்கரி தொடர்தந்து.
வினவுக்கு பாராட்டுகள்.
வினவு தோழர்களே, தேடுங்கள் சங்கரி போன்ற நண்பர்களை
எழுத அழையுங்கள்.
this is my first Reply in vinavu. i am regular reader of vinau but Respectable Sangar’s articale is givning some pain to me.
-NM, Uganda.
Really good one.
மங்கையராய்ப் பிறக்க
மட்டுமன்று
ஒவ்வொரு மாத விடாயைக்
கடக்கவும் மா தவம் செய்திட
வேண்டுமம்மா !
I remember telling this to my friend sometime back.After reading this I updated in my blog today..
பாதித்தது இந்தக்கட்டுரை. என் சிறுவயதும் நினைவுக்கு வந்தது. ஏழைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை நான். இருந்தாலும், பிராமணக் குடும்பம் என்பதால் தூமைநாட்களில் ஒதுங்கித்தான் இருக்க வேண்டும். தட்டில் சாப்பாட்டை வைத்து எட்டடிக்கு தள்ளிவிடுவார்கள். கரப்புகளும் எலிப்புழுக்கைகளும் எலிகளும் இருட்டும் நிறைந்த, மூன்றுகட்டுகளுக்கு நடுவேயான அறையில்தான் அந்த ந… See Moreாட்கள். அதேபோல, பெண்ணுடல் குறித்த அக்கறையும் மரியாதையும் இல்லாததால், நடுத்தர குடும்பமாக இருந்தாலும்கூட நாப்கின்கள் வாங்கித்தரமாட்டார்கள். முரட்டுச் சீட்டித்துணிதான். மேலும் ஒண்டுக்குடித்தனம், இன்னும் இரு குடும்பங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய கழிப்பறை. அதுவோ வீட்டுக்கு கொல்லைப்புறத்தில். பாம்புகளும் மரநாயும் சர்வசாதாரணம். இரவில் எட்டு மணிக்கு ஒருமுறை கழிப்பறைக்கு போக அம்மா துணைக்கு வருவார்கள். அதன்பின்பு காலை ஆறுவரை அப்படியே அந்த அறையில் கிடக்கவேண்டியதுதான். முதுகலைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும்வரையில் இப்படித்தான் கேடுகெட்டு ஓடியது வாழ்ழ்ழ்ழ்க்கை..
நல்ல பதிவு.
//கருங்கல் ஜல்லியை சட்டியில் அள்ளிப்போட்டு விட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தூக்கி விட ஆள் இல்லை. அவள் யாரையும் கூப்பிடவும் இல்லை. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு அந்தச் சட்டியைத் தூக்கினாள். எனக்குச் சுரீர் என்று வலித்தது//
உண்மை ..
எனக்கும் முகத்தில் அறைஞ்ச மாத்ரி இருக்கு இந்த வரிகள் …
உண்மை ..
எனக்கும் முகத்தில் அறைஞ்ச மாத்ரி இருக்கு இந்த வரிகள்
சங்கரி தோழரின் வலிமையான பதிவிற்கு வாழ்த்துக்கள். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது பெண் இன்னும் வயதிற்கு வரவில்லை. மனைவி அவ்வப்போது தெரிவித்து இவற்றைப்பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவு அழுத்தமாக உணர்த்தியது. மேற்கண்டவற்றை ஓரளவிற்கு தெரிந்ததால் அந்த நாட்களில் என் முதல் பெண்ணிடம் வலியை உணர்ந்த தாயே முரட்டுத் தனமாக நடந்து கொள்ளாதே என என் மனைவியை கடிந்து கொண்டிருக்கிறேன். என்னால் இயன்றவரை அந்த நாட்களில் மனைவியிடமும்- மகளிடமும் இதமாக இருக்க முயற்சித்திருக்கிறேன். அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
இப்படி பட்ட பெண்களை எப்படி எல்லம் அவமதிக்கிறார்கள் இனியாவது திருந்துவார்களா இந்த மதி கெட்ட ஆண்கள்?
சிறப்பான பதிவு. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு.
என்னங்க சொல்ல…எந்திரிச்சு நின்னு கை தட்றேன் உங்க எழுத்துக்கு .!!..
மிக நேர்மையான செயற்கைத்தனம் துளியும் இல்லாத ஒரு பதிவு இது..!!
வாழ்த்துக்கள் சங்கரி..!!
இதயத்தை தொட வைத்தது. ஒரு ஆணாக இந்த நிகழ்வின் வலிகளை இதுவரை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். இத்தனைக்கும் எனக்கு வயது வந்த மகள் இருக்கிறாள். ஆனால் ஒரு பெண்ணாக இதனை புரிந்து கொள்ளாமல் என் மனைவியை ஏன் திட்டினார் ஏன் அம்மா என புரியவில்லை. அந்த நாட்களில் தனக்கு சமைக்கிற வேலை வந்து விட்டதே என கஷ்டம் அவருக்கு பெரிதாக தெரிந்திருக்கிறது. ஏன் மனைவி வலி தாங்காமல் கருப்பை எடுத்து விட ஒரு குழந்தையோடு எங்கள் குடும்பம் நின்று விட்டது. நுட்பமாக புரிய வைத்ததற்கு நன்றி
உனது வலியை நானும் உணர்கிறேன் தோழி.
இதை தங்க முடியவில்லை தோழி.இதயத்தை தொட வைத்தது.entha kastathai solla varthaikal ellai thozhi….
சங்கரி,
பெண்களுக்கேயான வலிகளை உங்களின் அனுபவத்தில் எழுதியிருப்பதை, முழுதாய் படிப்பதே வலி தருவதாக இருக்கிறது.
வளரும் மருத்துவமும் வசதிகளும் எல்லோரையும் எட்டினால், இந்த வலிகளில் பல குறையும்!
உங்களின் எழுத்திலுள்ள உண்மைக்கும், மகளிர் பதிவுத் தொடர் தந்து, பெண்களுக்கான சமூகப் பிரச்சினைகளை பெண்கள் மூலமாகவே வினவு எழுத வைத்திருப்பதற்கும் நன்றிகள்!
பாசாங்கில்லாத , ஆடம்பரமில்லாத எந்தப் பூச்சுக்களுமில்லாமல் மனதை ஆழமாக பாதிக்கும் பதிவு . மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் கண் கலங்குவர்… சிந்தை நெகிழ்வர். சங்கரி அவர்கள் வலைப் பதிவரா? முகவரி என்ன ? என் மனம் கனிந்த பாராட்டுகள் . நிறைய எழுத வாழ்த்துகள்
தோழி மனது ரொம்ப வலிக்கிறது. வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருப்பேன்
எண்பத்தி ஒன்றாவது பதிவுக்குப் பின் மீண்டும் எழுதுகிறேன். அநேகமாக அதிக நேரங்களில் அக்கப்போர் பின்னூட்டங்களை வினவில் எழுதும் நண்பர்களை இந்தப் பதிவு அடித்துப் போட்டு விட்டது. தோழி சங்கரிக்கும் வினவுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
சகோதரனாக ,கணவனாக ,தந்தையாக….மனதை பிசைய வைத்துவிட்டது
ஆக்கம்.வாழ்த்துக்கள்
அருமை சங்கரி, துணி வைத்து புண்ணாகி நானும் அவதிப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருவர் சம்பளத்தில் நாப்கின் வாங்குவது இயலாத காரியம். அம்மாவின் பழைய புடவைகள்தான் வீட்டின் மூன்று பெண்களுக்கும் உதவும்.
மனது வலிகிறது, இதையெல்லாம் நினைத்து தான், நான் பெண்களை எபோழுதும் ரொம்ப உயர்வாக மதிக்கிறேன் , கடவுளை பொறுத்தவரை அவர் நடுநிலை வாதி அல்ல, எவளவு வேதனையை தான் தாங்குவாள் ஒரு பெண், பிரசவ வலி கொடுமையிலும் கொடுமை , பத்து மாதம், பிழையை சுமைக்கிற வேதனை ……. கடவுளே … ஏன் எப்படி ஒரு ஓரவஞ்சனை ….
பெலிக்ஸ்