Saturday, February 8, 2025
முகப்புஉலகம்ஈழம்முள்ளிவாய்க்கால் – போபால்

முள்ளிவாய்க்கால் – போபால்

-

vote-0121983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும்  நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.

போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது

ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன்சிங் கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.

தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும்,  இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.

– புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. செம்மொழி மாநாட்டில் பாதிரி ஜெகத் கஸ்பர்.
    ஹிட்லர் யூத மக்களை கொன்ற போது, அதற்கு நேரடியாக துணை போகத ஜெர்மனிய மக்களும் குற்றவாளிகள் தான் என இனி நாம் பேச முடியாது. அந்த வரிசையில் (தமிழகம்) நாமும் உள்ளோம். தமிழகத்தில் என்ன ஓர் அமைதி. மயான அமைதி!

    அமைதியை கிழித்து குரல் எழுப்பினால்,
    லத்தி வருகிறது குரல் வளையை கிழிக்க!
    குரல் வளை இருந்தால் தானே
    குரல் எழுப்ப முடியும்!
    அச்சிட்டால் தானே சுவரொட்டி ஒட்டுவாய்!

  2. இந்திய நீதி மன்றம் ஆண்டர்சன் -க்கு தூக்கு தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். அப்பொழுது மக்களின் மனம் கொஞ்சமாவது ஆறியிருக்கும். பின் ‘தப்ப’ விட்டு இருக்கலாம் நம் “பிரேம் குமாரை”ப் போல. ருச்சிகா வழக்கில் நாய்க்கு களி கொடுத்தாயிற்றா? ‘மாநாட்டால்’ இவனையும், ‘நித்தி’ யையும் ‘மீடியா’ வில் பார்க்க முடியவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  3. ஆரம்பித்த வரிகள் வைத்து கட்டுரையை முடித்திருப்பது அழகு.

    இந்தியர்களை பற்றி கவலை படாத இந்திய அரசு, இலங்கையில் இருக்கும் தமிழர்களை பற்றி நினைத்து பார்க்கவா போகிறது ???

  4. போபால் முதல் முள்ளிவாய்க்கால் வரை corporate கைக்கூலிகள் பொங்கிப்பூரித்து புன்னைகை செய்கின்றன. செம்மொழி மாநாடு முதல் G20 உச்சி மாநாடு வரை “ஜனநாயகம்” பல்லிளிக்கிறது.

  5. இந்த இந்திய அரசு பயங்கரவாதிகளிடம் இருந்து இந்தியாவை மீட்கவேண்டும். குறிப்பாக தமிழகத்தை இந்த தமிழ் எதிர்ப்பு மற்றும் தமிழர் துரோக மத்திய பயங்கரவாத அரசிடம் இருந்து தமிழகத்தை தனிநாடாக உருவாக்கி. தமிழகத்தில் இருந்து படை திரட்டி சிங்கள பேரினவாதிகளை ஒழித்து இலங்கையில் அமைதி பிறக்க வழிசெய்யவேண்டும். தமிழர்கள் தயாராவார்களா? இதை வினவு போன்ற சிந்தனைவாதிகள் ஊக்கபடுத்துவார்களா?

  6. பொருள் முதல்வாதம் ஒரு “சார்புநிலையற்ற(சார்பு ஹேகலின் இயங்கியல்) சமூக விங்ஞானம் கிடையாது”!.
    இயற்பியலின்,இயற்கை விதிகள் வேறு,சமூகவிஞ்ஞானம் அப்படி இன்றுவரை வரையறுக்க முடியவில்லை!.
    /இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த போது இலங்கை அரசு நாட்டையும் மக்களையும் புலிகளின் ப்யங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதாகத் தான் தென்னிலங்கையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்./–இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த சமூக “ஒழுங்கு முறைகளை” அராய்ந்தீர்களா?.இந்த..
    ”ஒரு “நியாய பூர்வமான அணுகுமுறைகள் போல்” “முள்ளியவாய்க்கால்கள் முகத்தில் அறையப்படுகின்றன”!. காலனித்துவ காலத்தில் இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே, இதற்கு இயல்பாக, ”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!”…. ஆதரவில்லாமல் நிச்சயமாக “ஒடுக்கப்பட்டவர்களின் குரல்” ஒடுக்கப்பட்டிருக்காது என்பது தெற்காசிய வரலாறு!.சாதிய ஒடுக்கு முறையை இங்கு குழப்பிக் கொள்ளவேண்டாம்.என் அனுபவப்படி,தமிழகத்தில்,இருபது ஆண்டுகளுக்கு முன்பே,”பரிணாம வளர்ச்சிப்படியே?”, அற்றுப்போயிருந்த,சாதிய அச்சுப்படிவங்கள் தற்போது உயிர்வாழ்வது,ஆராய்ச்சி நூல்களிலும் அதனை ஒட்டிய அரசியலிலும்தான்!.

    • இருபது ஆண்டுக்கு முன்னரே அகமண முறையை கைவிட்டு மேட்ரிமோனியலில் பதிவுசெய்து காத்திருக்கும் சாதி ஒழித்த போராளி பெருமக்களுக்கும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக துடைப்பத்தை கையில் எடுக்காத எய்ம்ஸ் புகழ் பார்ப்பன மாணவ போராளிகளுக்கும், கயர்லாஞ்சியில் படிக்கப் போன தாழ்த்தப்பட்ட பெண்ணையும் அவரது அன்னையையும் தங்களது ஊருக்கு நடுவில் வைத்து மாலையிட்டு அலங்கரித்து கவுரவித்த மராட்டிய சாதியற்ற உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க