Monday, November 4, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

-

டுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு.

இருபதாயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.  ஐந்து லட்சத்துக்கும் மேலானோர் முடமாக்கப்பட்டனர் மற்றும் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர்.  1989-ம் ஆண்டின் ரூபாய் மதிப்பில் இழப்பீடாக தலைக்கு வெறும் 12,414 ரூபாய்கள் மட்டுமே. (470 மில்லியன் டாலர் அல்லது ரூ.713 கோடிகள். இது பாதிக்கப்பட்ட 5,74,367 பேருக்குப் பங்கு வைக்கப்படுகிறது).  கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகக் காத்திருப்பு.  இதெல்லாம் யூனியன் கார்பைடின் இந்தியத் துணை நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குத்தானோ?  ஆகப்பெரும் பொறுப்பாளியான அமெரிக்கத் தலைமை நிறுவனத்தின் ஒரு அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை.

இருப்பினும் குற்றவாளி என்ற முறையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரத் தவறிய செயல் போபாலில் வீழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்ற கருத்துரை சற்றே கேலிக்குறியதாக இருக்கிறது. 1984 போபால் விஷவாயுப் பேரழிவு பகாசுரத் தொழிற்கழகங்களின் கொடுங்கோன்மையை அப்பட்டமாய் வெளிக்காட்டியது.  இதிலிருந்து படிப்பினை பெறுவதைத் தவிற்கும் முயற்சி முழுமையாய் நடந்தேறுகிறது. இந்நிறுவனத்தின் மித்தேன் ஐசோசயனைடு வாயு 20000 மக்களை (பெரும்பாலும் பரம ஏழைகள்) படுகொலை செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன.  இருந்தும் இந்த கார்பைடு நிறுவனத்தின் கொலை பாதகச் செயலுக்கான விலையை போபால் இன்னமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  (விஷ வாயுவால் தாக்கப்பட்டோரின் நீண்டகால உடல் பாதிப்புகளும் மற்றும் மூடப்பட்ட கர்பைட் ஆலையைச் சுற்றியுள்ள நஞ்சாக்கப்பட்ட நிலமும், நிலத்தடி நீரும் இதற்கு சான்று பகர்கின்றன).  இந்த நிலையில், அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா, நிறைவேற்றப்படுமானால், அது நாடெங்கிலும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதாக அமையும்.

படுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு. மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் துரப்பணப் பணியில் ஏராளமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுவருகிறது – ஒரு நாளைக்கு 30,000 முதல் 80,000 பேரல்கள் அளவுக்கு எண்ணை கடலில் கசிவதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தும் லாபம் ஈட்டலாம் என்று வெறிகொண்டு அலைந்து வரும் தொழிற்கழகங்களின் நடவடிக்கைகளிலேயே உச்சம் இது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் மீதான பாரக் ஒபாமாவின் ‘கடுஞ்சொற்கள்’ எல்லாம் பெரிதும் நவம்பருக்கு முந்திய வெற்றுத் தேர்தல் அமளியே தவிர வேறல்ல.  கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளில் படுத்துப் புரண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் இளைப்பாறுதல் பெறலாம்.

இத் தீர்ப்புகளில் முதலாவது 2008-ல் வழங்கப்பட்டது.  எக்சான் வேலிஸ் எண்ணை நிறுவனம் தொடர்பான அதுவரையிலான வரலாறு காணாத (அல்லது ஒப்புக்கொள்ளப்படாத) எண்ணைக் கசிவு பற்றிய வழக்கில் வந்த தீர்ப்பு அது. எளிமையாகச் சொன்னால், பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்சான் வேலிஸின் எண்ணைக் கசிவுக்கு நிகரான கசிவை சுமார் எட்டு நாட்களுக்கு ஒரு முறை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிகழ்த்திக் காட்டுகிறது. எக்சான் வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகை விதித்து 1994-ல் ஜூரிகள் தீர்ப்பு வழங்கினர்.  ”மேல் முறையீட்டு நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் அந்த அபராதத் தொகையை 2.5 பில்லியன் டாலர்கள் என்று பாதிக்குப் பாதியாகக் குறைத்தது” எனவும்  ஜூன் 2008-ல், “உச்ச நீதிமன்றமோ அபராதத் தொகையை வெறும் 500 மில்லியன் டாலர்களாக மேலும் 80% குறைத்தது – பாதிக்கப்பட்ட வாதிகளுக்குக் கிடைக்கப்போவது தலா 15000 டாலர்கள் மட்டுமே” என்று கவுண்டர்பஞ்ச்.ஆர்க் –ல் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஷரோன் ஸ்மித். இந்த அபராத வழக்கை விடாப்பிடியாக நடத்திய எக்சான் நிறுவனத் தலைமை இயக்குனர் லீ ரேமாண்ட் மொத்தமாக 400 மில்லியன் டாலர்களைத் தனக்காக மட்டும் பெற்றுக்கொண்டு பணிஓய்வு பெற்றார்.

நாங்கள் 33000 பேர் பகிர்ந்துகொள்ளும் தொகையை ஸ்மித் மட்டுமே சுருட்டிக்கொண்டு போய்விட்டார் என அவர் பற்றி எக்சான் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தொகை முதல் தீர்ப்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டில் சுமார் 10 சதவீதத்துக்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் பெறப்போகும் சுமார் 15000 டாலர்களுக்கும் சமமானது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வால் ஸ்டிரீட் மூலதனச் சந்தை சூதாடிகள் [kleptocrats] புகழார்ந்த வகையில் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுத்தச் செய்தனர்.  அவர்களது செயல் அமெரிக்கர்களும் ஏனைய உலக மக்களுமான பல பத்து லட்சம் பேர்களின் வேலைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உலை வைத்தது.  எனினும், அதே ஆண்டிலேயே அமெரிக்கத் தலைமை இயக்குனர்கள் பலர் போனசாகப் பல நூறு கோடி டாலர்களை அள்ளிச் சென்றனர்.  தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு கூட, “அமெரிக்கக் கருவூலத் துறை என்றும் காணாத பேரழிவில் இருந்து தேசத்தின் மாபெரும் வங்கிகளில் ஒன்பதைக் காப்பாற்ற மக்களின் வரிப்பணத்தில் இருந்து 125 பில்லியன் [12500 கோடி] டாலர்களைக் கொடுத்த சில வாரங்களிலேயே, அத்தொகையின் பெரும் பகுதியை வங்கி இயக்குனர்கள் தங்களது செயல்பாட்டுக்கான ஊக்கப்பரிசு என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை சுருட்டிச் செல்கின்றனர்”  என்று தனது சிறப்புத் தலையங்கத்தில் எழுதியது. (அதே தேர்தல் ஆண்டில் தான், ஆழ்கடல் எண்ணைத் துரப்பண நடவடிக்கையை ‘தோண்டு கண்ணு, தோண்டு’ என்ற குத்தாட்ட முழக்கத்துடன் குதியாட்டம் போட்டு வரவேற்றன பகாசுர எண்ணைக் குழுமங்கள். [Big Oil] இப்போது என்ன சொல்வது? ‘கசியட்டும் கண்ணு கசியட்டும்… கடலே கூவமாகட்டும்’ என்பதா?)

இவ்வாண்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்சிகோ வளைகுடாவையே குழம்பிய குட்டையாக்குவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சிடிசன்ஸ் யுனைடட்-க்கும்  தேசிய தேர்தல் ஆணையத்துக்கும்  இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்களின் பலத்துக்கு மேலும் வலு சேர்த்தது.  “ஏற்கனவே வெள்ளமெனப் பாயும் [கார்ப்பரேட்] பணத்தில் மிதந்துகொண்டிருக்கும் தேர்தல் களத்தில் இப்போது இந்தத் தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்கள் நேரடியாகவே ஏராளமான பணத்தைக் கொட்ட முடியும் … பிராந்திய, மாநில, தேசிய அளவுகளிலான பதவி நாற்காலிகளைப் பிடிக்க எத்தனிக்கும் எந்த நபரையும் இனி இவர்கள் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ முடியும்” என்கிறார் ரால்ப் நதிர்.   “இத்தீர்ப்பின் பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், தொழிற்கழகம் என்பது மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுடனும் [கடமைகள் என்று ஏதும் இல்லையாயினும்]  கூடிய ஒரு ‘சட்டவகை மனிதன்’; இவ்வாறாக, அது பேச்சுரிமையைப் பெற்றுள்ளது; மேலும், பணக் கொடை என்பது பேச்சின் ஒரு வடிவமே” என்று கவுண்டர்பஞ்ச் செய்திக் கடிதத்தில் மேசன் ஜாஃப்னி விளக்குகிறார். எனவே துவளாதே பிரிட்டிஷ் பெட்ரோலியமே, துடித்தெழு.. வாய்ப்புகள் இன்னும் கைநழுவி விடவில்லை.  காங்கிரஸ் மற்றும் செனட் நாற்காலிகளை அலங்கரித்திருப்பவர்களில் பெரும் எண்ணைக் குழுமங்களின் பணமூட்டைகளைப் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா, எண்ணிப்பார்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடர்பான எண்ணைக் கசிவுப் பிரச்சினையில் கவனம் செலுத்தும் இந்த தருணத்தில், இவ்வாறான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் வெள்ளைத் தோலர்களும் அல்லாத பிற மக்களைப் பற்றியும் சிறிது சிந்தித்துப் பார்க்கலாமே. ’அயலுறவுக் கொள்கை பற்றிய பார்வை’ [Foreign Policy in Focus ]யின் கட்டுரையாளர் கான் ஹல்லினன் குறிப்பிடுவது போல, “நைஜீரிய அரசின் புள்ளிவிவரப்படி 1970-ம் ஆண்டுக்கும்  2000-ம் ஆண்டுக்கும்  இடைப்பட்ட காலத்தில் 9000 –க்கும் மேலான எண்ணைக் கசிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன.  நடப்பில் உள்ள அதிகாரபூர்வமான எண்ணைக் கசிவுப் பகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 2000”.  அப்படியெனில் ஆப்பிரிக்க மக்களின் உயிருக்கு மதிப்பே இல்லையா?

போபால் பேரழிவு நிகழ்ந்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் உலக வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லாரி சம்மர்ஸ் கொடூரமானதொரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், பிற விசயங்களுக்கு மத்தியில், “நமக்குள்ள வச்சுக்குவோம், இந்த அசிங்கம் பிடிச்ச தொழிற்துறைகளை எல்லாம் பெருமளவில் வளர்ச்சி குன்றிய நாடுகள் தலையில் தள்ளிவிட உலக வங்கி உந்துதல் அளிக்கக் கூடாதா?” என்ற இக்கருத்தையும் எழுதியிருந்தார்.  “அபாயகரமான நச்சுக் கழிவுகளை வருமானமில்லாத ஏழை நாடுகளில் கொண்டு கொட்டுவதற்கான பொருளியல் காரணங்கள் முற்றிலும் சரியானவையே. அதற்கு நாம் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்றும் சம்மர்ஸ் பரிந்துரை செய்தார்.

கேலியாகவும், கிண்டலாகவும், இன்ன பிறவாகவும் தான் எழுதிவிட்டதாக சம்மர்ஸ் பின்னர் சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படியும் அவரது அந்த இரைஞ்சல்களைக் கொள்வார் இல்லை.  ஆயினும், பின்னாளில் அவர் ஹார்வர்ட் தலைவர் ஆனார், இன்னாள் அதிபர் ஒபாமாவின் தலைமை பொருளியல் ஆலோசகராகவும் இருக்கிறார்.  அவரது அன்றைய குறிப்பின் சாரமே உலக எதார்த்தமாக இருக்கிறது. போபால் நிகழ்வில் தொடங்கி துல்லியமாக இதுதான் நடந்திருக்கிறது.

அரசின் ஒழுக்கம் 1984-ல் இருந்த அதன் கேடுகெட்ட நிலையில் இருந்து சற்றும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையே போபால் தீர்ப்புக்கான ஐ.மு. கூட்டணி அரசின் எதிர்வினை காட்டுகிறது.  போபாலுக்கு அழுவதும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை சட்டமாக்கத் துடிப்பதும் ஒத்துப்போக முடியாத இரட்டை வேடம்.  போபால் பேரழிவில் பாதிக்கப்பட்டோரின் நியாயம் நடந்துவிட்டதற்குப் பின் செய்யப்பட்ட விற்பனை. அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா விசயத்திலோ இது அரசு செய்யும் முன்பேர விற்பனை.  1984 போபால் பேரழிவு தொடர்பாக மறைப்பதற்கு ஏதோ வைத்திருப்பது இந்த அரசுகள் மட்டும்தானா?  விபத்து நடந்த அந்த சமயத்தில் கூட, “கார்பைட் ஊழியர்களின் சதிவேலையால்”  இப்பேரழிவு நிகழ்ந்து விட்டது என்ற திட்டமிட்ட வதந்திகளை மகிழ்ச்சியாய்ப் பரப்பின செய்தித்தாள்கள்.  நான்கு ஆண்டுகள் கழித்து, யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு ’ஆய்வு’, ஆலையில் வேலைசெய்த அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளியால் நிகழ்ந்துவிட்ட போரழிவே இது என்று கண்டுபிடித்துவிட்டதாக கூறிக்கொண்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாதபடி கார்பைடு நிறுவனம் உத்தரவாதப்படுத்திக் கொண்டது.  இந்த வழக்கை நடத்துவதற்கு சரியான இடம் இந்திய நீதிமன்றங்களே என்று நானி பல்கிவாலா உள்ளிட்ட இந்தியாவின் சட்டத்துறை ஒளிவட்டங்கள் சிலர் அமெரிக்க நீதிமன்றங்களை ஏற்கச் செய்தனர். (அதன் விளைவுகளை நாம் இன்று சந்திக்கிறோம்) அமெரிக்க நீதிமன்றங்கள் விதித்திருக்கக் கூடிய ஒப்பீட்டளவில் கூடுதலான இழப்பீட்டுத் தொகையில் இருந்து இச்செயல்கள் கார்பைட் நிறுவனத்தை விடுவித்தன.

அடுத்த பத்தாண்டுகளிலேயே, தாராளமயம் என்ற புதிய சகாப்தத்தின் குறியீடாக என்ரான் பரிணமித்தது.  இந்த என்ரான் கும்பல் எவ்வளவு பரிசுத்தவான்கள் என்பதை நமக்கு எடுத்துச் சொல்ல மெத்தப் படித்த மேதாவிகளும், ‘வல்லுனர்களும்’, கட்டுரையாளர்களும் கடுமையாக உழைத்தனர். இவை எல்லாம், என்ரான் ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் கிளம்பிய பெருத்த விமர்சனங்களுக்குப் பின்னர்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மக்களிடையே கருத்துருவாக்கம் செய்வோர், சட்டம் இயற்றுவோர் போன்றவர்களுக்குக் “கற்பிப்பதற்கு” என்ரான் நிறுவனம் இறக்கிவிட்ட பல பத்து மில்லியன் டாலர்கள் நிதி செய்த மாயத்தால் இந்த திடீர் மன மாற்றம் சாத்தியமானது போலும். விளம்பரங்களும் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டன. ஆதரவு ஆரவாரம் செய்வோரில் ஒருவராக மாறிக்கொள்ள வேண்டியே என்ரான் பற்றிய கடுமையான விமர்சகராகத் தொடக்கத்தில் களம் இறங்கியது ஒரு பிரபலமான பத்திரிகை.  மேலும் பலரும் கூட அவ்வாறே செய்தனர். இப்படிப்பட்ட நிதிகளும் கூட பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்று நான் ஊகிக்கிறேன். மகாராட்டிரத்துக்கும் இந்தியாவுக்கும் அது பேரழிவைக் கொண்டுவந்தது. முன்பு லாபகரமாக இயங்கிய அம் மாநில மின்சார வாரியம் – என்ரான் வருகைக்குப் பின் – நட்டக் கணக்கை மலையெனக் குவிந்தது. அதன் விளைவாக, மாநில அரசு சேவை மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதியைத் தாருமாறாகக் குறைத்தது. என்ரான் நிறுவனம் தனது ஊழல் நடவடிக்கையால் அமெரிக்காவில் வீழ்ச்சியுற்றது. அதன் தலைமையில் இருந்த சிலர் சட்டத்தின் முன் நில்லாது தப்பி ஓட்டம் பிடித்தனர்.  ஆனால் அந்த நிறுவனம் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டும் இன்றளவும் நம்மை வதைக்கின்றன.  சி.ஐ.டி.யூ வும் அபய் மேதாவும் கொணர்ந்த என்ரான் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தூக்கி வெளியே வீசிய போதே இந்தப் பேரழிவில் இருந்து தப்ப இருந்த ஒரே வாய்ப்பும் தொலைந்துவிட்டது.

நிற்க, ஒபாமாவின் வாய்ச் சவடால்கள் பிரிட்டிஷ்  சகபாடிகளின் மனங்களைப் புண்படுத்திவிட்டது போல் தோன்றுகிறது.  கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நிதியும், ஆதரவும் நல்கி பேருதவி புரிந்திருக்கிறது அமெரிக்கா என்பதே உண்மை.  அலெக்சாண்டர் காக்பர்ன், “வரலாற்றில் மாபெரும் கைதூக்கிவிடல்” எனச் சித்தரிக்கும் நிகழ்வில், 1953ம் ஆண்டு ஈரானின் முகமது மொசாதிக் அரசின் தொல்லைகளில் இருந்து விடுபட கேவலமான ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது அமெரிக்க சி.ஐ.ஏ.  ஈரானிய பாராளுமன்றம் தனது ஒருமித்த வாக்களிப்பின் மூலம் கடுமையாகச் சுரண்டி வந்த ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனியை தேசவுடைமை ஆக்கியிருந்தது.  எனவே மொசாதிக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  அவரது இடத்தில் மேலை நாட்டு எண்ணைக் கம்பெனிகளின் வளர்ப்புப் பிராணியான ஷா ரிசா பஹல்வி சர்வாதிகாரியாக அமர்த்தப்பட்டார். ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனி தனது பழைய சலுகைகளில் நாற்பது சதவீதத்தை மீளப் பெற்றது.  பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெயர் மாற்றத்துடன் சர்வதேசக் குழுமம் ஆனது. பெரும் தொழிற்கழகங்களால் ஆதரவளிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளின் பட்டியலோ பெரிதாய் நீண்டு கிடக்கிறது.

போபாலில் யூனியன் கார்பைடின் செயலும், அது பழுதின்றித் தப்பியதும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்கிறது.  ஆனால், நிச்சயமாக வியப்பளிக்கவில்லை.  அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு காலத்திலும் தொழிற்கழகங்களின் பலம் கணிசமாக உயர்ந்தே வந்திருக்கிறது.  தொழிற்கழகங்களை சமுதாயத்திற்கு மேலானதாகவும், தனிநபர் ஆதாயத்தை பொது நலனுக்கு மேலானதாகவும் மதிக்கும், அனுமதிக்கும் சமூகப் பார்வை நீடிக்கும் வரை போபால்கள் பல தொடரத்தான் செய்யும்.  இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.

போபாலில் பாதிக்கப்பட்டோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு முக்கியமான விசயத்தையும் நினைவில் நிறுத்துங்கள்.  “மீண்டும் இவ்வாறான கொடுமை நிகழ முடியாதவாறு உறுதிசெய்வோம்” என்பதே அது.  எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுசக்தி விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் தற்போதைய உருவில் இருக்கும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா மூலமாக அற்ப இழப்பீட்டுடன் தப்பிச் செல்லும்.  தற்போது போபால் பேரழிவில் ஒரு குற்றமாக அணுகப்படும் இழப்பீடு பற்றிய புரிதல் எதிர்காலத்தில் வெறும் சட்ட வழிமுறையாக மட்டுமே எளிமைப்படுத்தப்படும்.  லாரி சம்மர்ஸ் அவர்களே, மீண்டும் வருக.
__________________________________________________
–    பி.சாய்நாத், நன்றி தி ஹிந்து, 15.6.2010
–    தமிழில்: அனாமதேயன்

__________________________________________________

  1. தோழர் இது மொழிமாற்ற சிக்கலான கட்டுரைதான் என்பதில் ஐயமில்லை, சாய்நாத் நடை எளிமையானது என்றாலும் இந்த கட்டுரையை கொஞ்சம் நடைமாற்றி எழுதியிருப்பார் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைந்திருந்தாலும் இன்னமும் சில வார்த்தைகளை, வாக்கியங்களை இழந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து

  2. மூல தனம் தான் ஆட்சி செய்கிறது என்பதை விவரிக்கிறது. அரசியல்வாதிகள் மோசம் அதிகாரிகள் சரியில்லை. நீதி மன்றம் என இழுத்தார்கள். போபால் … என நாமும் இழுக்கிறோம். ஈழப்போர் ஏன் நடைபெற்றது என நமக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் ஈழத்தில், இந்திய அரசின் முதலீடு, இந்திய தரகு முதலாளிகளின் முதலீடு எவ்வளவு என்ற புள்ளி விவரம் இருந்தால் நாம் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

    சொத்து உள்ளவர்கள் மட்டும் தான் குடிமக்கள். மற்றவர்கள் வழிப்போக்கர்களே! என்பதை ஈழமும், போபாலும் பறை சாற்றி கொண்டிருக்கின்றன.

  3. அருமையான கட்டுரை தோழர்களே. முதலாளிகள்தான் இன்றைய இந்தியாவின் இதயங்கள் என்பதை நடைபெறுகிற நிகழ்வுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இடைஞ்சலில்லாமல் மக்கள் வளங்களை கொள்ளையடித்து உள்ளூர் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்க்கும் இந்த இதயங்களை எதிர்த்து நிற்கிற மாவோயிஸ்டுகள்.ஒரு பக்கம்.இன்னொரு பக்கம் எல்லா இழப்புகளுடனும் மேலும் மேலும் தங்களின் விவசாய நிலங்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள்….அவர்களுக்கு சங்கம் கட்டுகிற உரிமையை மறுப்பதும் அதை மீறுக் கட்டுகிறவர்கள் மீது அடக்குமுறையையை ஏவுவதும்தான் இன்றைய இந்தியாவின் உண்மையான முகம். ………..அதான் ஓபாமா சொன்னார். “மன்மோகன் பேசுவதை உலகமே கேட்கிறதாம்.”அதான் பேசுகிறாரே விலைவாசியை குறைக்க முடியாது என்று………..ஒட்டு மொத்தமாக இந்த சமூக அமைப்பையே மாற்றியமைக்காமல் இனி மக்களைக் காப்பாற்றவே முடியாது என்பதை அரசும்,..ஆளும் வர்க்கங்களும் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  4. //எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுசக்தி விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் தற்போதைய உருவில் இருக்கும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா மூலமாக அற்ப இழப்பீட்டுடன் தப்பிச் செல்லும். //

    சரியான வரிகள். அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை எதிர்த்து தீவிரமான எதிர்வினையெழுப்புவதை இடதுசாரிகள் தொடர்ந்து பார்லிமெண்ட்டிலும், மக்களிடமும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.

  5. yes, we should stop the us deal for nuclear power but for that our people and the employee unions should come to be unity. here is no one party or any other public unions to make that unit. at the same one side the maoists may be option to control and do it. but they do not have any steps to take to unit the public so what or who will be choice and what can be precaution step.

  6. அருள் எழிலனை அப்படியே வழி மொழிகிறேன்.வினவு பாசையில் ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு அனைவரும் தயாராக வேண்டியது அவசியத்திலும் அவசியம்.

  7. சிறப்பான- விரைவான மொழிபெயர்ப்பு வாழ்த்துக்கள்
    சித்திரகுப்தன்-

  8. நல்ல கட்டுரை.நன்றி.எனக்கு ஒரு டவ்ட்.’இன்டியா’வ ஏன் இந்தியானு ஏன் சொல்றீங்க.ஹின்டுவ ஏன் ‘ஹிந்து’னு சொல்றீங்க?இதுல எது சரி எது தப்பு?

    • ‘தமிழை’ ‘டமில்’ என்றுதானே ஆங்கிலம் உச்சரிக்கிறது. அது போலத்தான். இந்தியா-ங்கிறது வடமொழி உச்சரிப்பு, இண்டியா-ங்கிறது ஆங்கில உச்சரிப்பு. இதெல்லாம் தப்பில்ல, ‘பாரதம்’-ன்னு சிலபேர் பேர் மாத்த சொல்லுவாங்க. அங்க தான் எச்சரிக்கையா இருக்கணும்.

  9. மிக சிக்கலான விசயங்களை தமிழில் மொழிமாற்றி தந்ததற்கு நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க