Thursday, December 12, 2024
முகப்புசெய்திஇந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

-

மெரிக்காவின் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் நிறுவனம் சமீபத்தில் தனது விற்பனையகத்தை ஹைதாரபாத்தில் திறந்திருக்கிறதாம். இந்த ஆண்டு இறுதிக்குள் சண்டிகர், தில்லி, மும்பை, பெங்களூரு முதலான இந்தியாவின் பொருளாதாரக் கோவில்களான நான்கு இடங்களிலும் விற்பனையகத்தை திறக்கப்போகிறார்களாம்.

குரூயிஸ் பைக் ( cruise bike ) என வகைப்பட்ட மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இந்த நிறுவனம் பெயர் பெற்றதாம். இங்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் ஐந்து மாடல்களில் உள்ள பைக்குகள் விற்பனைக்கு தயாராக இருக்கிறதாம். விலை என்ன?

883 சிசி திறன் கொண்ட பைக்கின் விலை ஏழு இலட்சம். 1800 சிசி திறன் கொண்ட பைக்கின் விலை 35 இலட்சம். இது என்ன காரின் விலை போல இருக்கிறது என்று நமக்கு ஐயம் வரலாம். உண்மையில் இவை மோட்டார் சைக்கிள்களுக்கான விலைதான்.

எல்லோரும் சாதா கார்கள் வைத்திருக்கும் போது மெர்சிடஸ் பென்ஸ் எனும் ஆடம்பரக் கார் வைத்திருப்பது பெருமையில்லையா, அது போலத்தான் 100 சிசி அதிகபட்சம் புல்லட்டின் 500 சிசி என்றிருக்கும் போது 1800 சிசி என்றால் விசேடமில்லையா?

பிறகு இந்தியா முன்னேறவில்லை என்று அதியமான் போன்றவர்கள் கவலைப்படக்கூடாதல்லவா? ஆனாலும் நம்மைப் போன்ற பாமரர்கள் இந்த விலையைக் கேட்டதும் வேறு கணக்குப் போட்டு பார்க்கிறோம். முப்பத்தி ஐந்து இலட்சமிருந்தால் எத்தனை சைக்கிள்கள் வாங்கலாம், எத்தனை மொபட்டுக்களை வாங்கி அண்ணாச்சிகளுக்கு கொடுக்கலாம், எத்தனை கார்களை வாங்கி வாடகை ஓட்டுநர்கள் பயன்படலாம் என்றுதான் நாம் யோசிக்கிறோம்.

யாரெல்லாம் இப்படி யோசிக்கிறார்களோ அவர்களெல்லாம் பயன்பாட்டுவாதிகள். ஆனால் 1800 சிசி என்பது வெறுமனே பயன்பாட்டு வாதத்தின்படி பார்க்கக் கூடிய மொக்கை ஐட்டமல்ல. அது வாழ்க்கைத் தரத்தின் ‘கம்பீரமான’ குறியீடு. இந்த உலகில் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் அதியுன்னதக் கலை ரசனை மிக்க பொருள். அதை வெறுமனே கணக்கு போட்டு புரிந்து கொள்ள முடியாது. அதற்கு ஒரு உயர்மட்ட இரசனை வேண்டும். அதுவும் கோடிகளில் பணத்தை வைத்துக் கொண்டு வாழ்வை சலிப்புறாமல், சோர்வுறாமல் தேடும் பண்பு வேண்டும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் சைக்கிளில்தான் வருகிறார்கள். அவர்களெல்லாம் கலை ரசனை அற்ற முண்டங்கள். விதர்பாவில் திருமணம் நடத்த முடியாமல் விவசாயிகள் திணறுகிறார்கள். அவர்களெல்லாம் கஞ்சப்பிசுநாரிகள். திருப்பூரில் ஏற்றுமதிக் கூடங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளிகள் மலிவான ஆடைகளைத்தான் உடுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களெல்லாம் அழகு பற்றி அறியாத ஜென்மங்கள்.

இத்தகைய கலா ரசனையற்ற ஜந்துகளுக்காக நாம் ஹார்லி டேவிட்ஸனை விட முடியுமா? இதுவல்லவோ இந்தியாவின் முன்னேற்றம்.

இனி என்ன நடக்கும்? ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூத்தடித்துவிட்டு, முழுப் போதையில் இந்த பைக்கை ஓட்டும் மேட்டுக்குடி கனவான்கள் பாதையோரத்தில் படுத்துறங்கும் ஏழைகளை மீது ஏற்றிக் கொல்லக்கூடும்.

எனினும் இந்த விலையுயர்ந்த அமெரிக்க பைக்கினால் ஒரு ஏழை இந்தியனின் உயிர் போவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா ?

தொடர்புடைய பாடல்

Adimai_Sasanam_03_Naadu