Tuesday, October 3, 2023
முகப்புஅரசியல்ஊடகம்எந்திரன்: படமா? படையெடுப்பா??

எந்திரன்: படமா? படையெடுப்பா??

-

எந்திரன்

எந்திரன் விருப்பமா, நிபந்தனையா?

எந்திரன் நீங்கள் பார்க்கப் போகும் சினிமா அல்ல, பார்த்தே ஆகவேண்டிய ஒரு நிபந்தனை. உழைத்துக் களைத்த அலுப்பின் வார இறுதியில் ஏதோ ஒரு சினிமா பார்ப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம். அந்தப் படம் பிடித்திருந்தால் சிந்தனையில் சில மணிநேரங்கள் நீடித்து விட்டு அகன்றுவிடும். சமூக உரையாடலில் அதற்கு மேல் ஒரு சினிமாவுக்கு இடமில்லை.

தமிழகத்தில் ஆண்டு தோறும் வெளியாகும் சில நூறு சினிமாக்களில் சிலவற்றை தவிர்த்துவிட்டு பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தரத்தில் பெரும்பான்மையானவை இல்லை என்றாலும் பொழுது போக்கு நேரத்தின் முழுமையை கட்டிப்போட்டிருப்பது சினிமா அன்றி வேறில்லை. ஒரு குப்பை படம் கூட ஒலியும்– ஒளியும், உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, நகைச்சுவை, விமரிசனம், படம் பற்றி ஊடக செய்திகள், நடிகைகளின் அட்டை படங்கள் என்று ஏதோ ஒரு வகையில் நம் சிந்தனையில் ஊடுறுவாமால் விடுவதில்லை.

பிரபுதேவா – நயன்தாரா ’திருமணப் போராட்டச்’ செய்திகள் , வடிவேலு, சிங்கமுத்து சண்டையின் முழுக்கதையும் தெரியாதவர் உண்டா? மக்களது சொந்த வாழ்க்கைக்குரிய அறிவைத் தாண்டி பொது அறிவின் அளவுகோலாக சினிமாதான் இருக்கிறது. ஓடாத படங்களின் துணுக்குகள் கூட மூளையின் மடல்களில் படியும் போது ஓடும் படங்கள்? சரி, ஓடும் படங்களை விடுங்கள், ஆக்கிரமிப்பு படங்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சினிமாவிற்கும் ஆக்கிரமிப்புக்கும் என்ன சம்பந்தமென்று தோன்றலாம். உங்களது தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு உங்களது நேரம், பொருள், சிந்தனையை ஒரு விசயம் அடித்து வீழ்த்துகிறது. ஆம். எந்திரன் உங்கள்மேல் நிகழ்ந்து வரும் ஆக்கிரமிப்பு. கலையின் பெயரால் பணத்தின் வலிமையால் உங்களை எதிர்த்து நடத்தப்படும் போர்!

அமெரிக்க இராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழக மக்களை மூலதனத்தின் ஏகபோக அசுரபலத்தால் ஆக்கிரமிப்பு செய்யும் எந்திரனை எப்படி புரிந்து கொள்வது?

எந்திரனுக்காக செலவிடப்பட்ட சமூக நேரம் எவ்வளவு?

முதலில் எந்திரன் பற்றிய செய்திகள், என்னென்ன விதத்தில், எத்தனை மாதங்களாய் உங்களை படர்நது வருகிறது, யோசித்து பாருங்கள்.

“ஹாலிவுட்டிற்கு இணையான தமிழ்ப்படம், தொழில் நுட்ப ரீதியில் தமிழக சினிமாவின் மைல்கல், 150 (190 என்றும் சொல்கிறார்கள்) கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பட்ஜெட் படம், அவதார் திரைப்படக் குழுவினர் வேலை செய்யும் படம்”, முதலான  வெத்துவேட்டு பிரகடனங்கள், புள்ளிவிவர பிதற்றல்கள்….பத்திரிகைகளில், இதழிகளில், தொலைக்காட்சியில், நட்பு அரட்டையில், இணைய செய்தித்தளங்களில், பதிவுகளில், சேட், பேஸ்புக், யூடியூப், பஸ், டிவிட்டர்….  மொத்தத்தில் உலக தமிழ் மனங்களில் எந்திரன் பற்றிய துணுக்குச் செய்திகள் ஏராளம். இவற்றை நாடிச் செல்லவில்லையென்றாலும், இவற்றில் நீங்கள் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற உண்மை உங்களின் தன்மானத்தை சீண்டினாலும் மறுக்க முடியாதே?

மனிதன் கண்டுபிடித்த ரோபோ உலகத்தை அழிக்கப் போகிறது என்று ஹாலிவுட்டின் இராம நாராயணன்கள் மென்று துப்பிய ஒரு அரதப் பழசான எந்திரக் கதைக்கு நீங்கள் செலவழித்த நேரத்தை கணக்கிட்டு பாருங்கள். துணுக்களை படித்தது போக, மலேசிய பாடல் அறிமுகவிழாவை அச்சில் இரசித்து, இருநாட்கள் சன்னிலும் பார்த்தீர்கள், பின்னர் அந்த விழா உருவான விதம் அதையும் முடித்து விட்டீர்கள், இதில் தமிழ் மட்டுமல்ல கூடுதலாக இந்தி, தெலுங்கு அறிமுக விழாவும் உண்டு, அப்புறம் எந்திரன் ட்ரெய்லர் பற்றிய முன்னோட்டம்,  பிறகு  ட்ரெய்லர் ரிலீஸ், பின்னர் அது குறித்த பின்னோட்டம், அப்புறம் எந்திரன் படம் எடுக்கப்பட்ட விதம், நட்சத்திர, தொழில் நுட்ப கலைஞர்களின் அனுபவங்கள், திரையங்கில் முன்பதிவு செய்ய கோரும் விளம்பரங்கள், பயணச் சீட்டுக்கான வரிசைகள், அப்புறம் புகழ் பெற்ற அந்த மூன்று மணிநேர திரையரங்க அனுபவம், வெளியே ஆனந்த விகடன் முதல் அமெரிக்கா வரையிலான மவுத் டாக்…..

எந்திரனது அரட்டை நேரத்தில் என்னென்ன செய்திருக்கலாம்?

எல்லாம் கணக்கிட்டு பார்த்தால் எந்திரனுக்கு செலவழித்த, இல்லை, செலவழிக்க வைக்கப்பட்ட நேரத்தின் கூட்டுத்தொகை சில நாட்களைத் தாண்டும். பூமி சூரியனை சுற்றுவது போல பதிவுலகம் சென்ற மாதம் முதல் எந்திரனை சுற்றியே வருகிறது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த கூட்டுநேரத்தின் சமூக மொத்தம் எவ்வளவு இருக்கும்? இந்த நேரத்தில் தமிழக மக்களிடையே எழுத்தறிவு அற்ற மக்களுக்கு கல்வியறிவு கற்றுக்கொடுத்திருந்தால் நூறு சத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக ஆகியிருக்க முடியாதா?  இந்த நேரத்தில் சமகால வரலாற்றை கற்றிருந்தால் காஷ்மீரின் போராட்ட நியாயத்தையும், ஈழம் தோற்கடிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்திருக்க முடியாதா? குறைந்தபட்சம் கணினிக்கு ஒதுக்கி முறையான தமிழ் தட்டச்சு கற்று மொழியையாவது வளர்திருக்கலாம்….

ஒரு நாட்டின் பணம் மட்டுமல்ல அதன் மக்களது பயன்பாட்டு நேரமும் இப்படி வீணே செலவழிக்கப்பட்டால் அதன் இழப்பு என்ன? எந்திரன் ஆக்கிரமிப்புக் காலத்தில்தான் காஷ்மீரில் பல மக்கள் கொல்லப்படும் அடக்குமுறை நடந்ந் வருகிறது. பாலஸ்தீனில் கணக்கு வழக்கில்லாமல் மக்களது ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அணுவிபத்து கடப்பாடு என்ற அடிமை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ…….. எதுவும் நம் கவனத்திற்கு வரவில்லை என்பதன் அவலசாட்சி எந்திரன்தான்.

ஒருநாட்டின் மக்கள், அரசியல் சமூக வாழ்க்கைக்கு இடையில் சினிமா பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கு இடையில் அரசியல் சமூக வாழ்வை கொறிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? கல்விக் கட்டணத்தை எதிர்க்க முடியாததற்கும் வீட்டில் எந்நேரமும் வடிவேலு நகைச்சுவை பார்ப்பதற்கும் எந்த தொடர்புமில்லையா? விசைத்தறிக்கில்லாத மின்சாரம் மாலைநேர சீரியல்களுக்கு மட்டும் தவறாமல் கிடைப்பதற்கும் தொடர்பு உண்டா, இல்லையா?

கலைத்தாகமா, காசு பறிக்கும் கட்டவுட் மோகமா?

ஒரு ரூபாய் ரேசன் அரிசிக்கு அலைவதற்கும், இலவச தொலைக்காட்சியில் இருந்து சங்கமிப்பதற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதுதான் எந்திரனுக்கும் தமிழக வாழ்க்கைக்கும் இருக்கிறது. கருணாநிதியின் அழகிரி தேர்தல் ஃபார்முலாவின்படி விலை கொடுத்து வாங்கப்படும் வாக்கிற்கான செலவு உங்கள் பாக்கெட்டிலிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?
எந்திரன் எவ்வளவு பிரம்மாண்டமாக செலவழித்து எடுக்கப்பட்டது என்பதை விட அந்த பிரம்மாண்டத்தை வசூலிலும், இலாபத்திலும் பார்க்கப் போகிறார்கள் என்பதே முக்கியம். ஒரு சினிமாவின் தயாரிப்புச் செலவு கலைத் தாகத்திற்காக இருப்பதற்கும், கட்டவுட்டை காட்டி காசு பறிப்பதற்காக செலவு செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

முதலில் எந்திரனை தயாரிக்க ஈடுபட்ட ஐங்கரன் இன்டர் நேஷ்னல் அதிலிருந்து விலகியதும் சங்கர் கோஷ்டி கலாநிதி மாறனை சந்தித்ததாம். மலேசிய பாடல் அறிமுக விழாவில் ரஜினி சொன்னதன்படி அப்போது கலாநிதி மாறன் கையில் சிவாஜி வசூல் விவரங்களை வைத்திருந்தாராம். ஒரு படத்தின் தயாரிப்புச் செலவுக்கான நியாயத்தை கதையில் தேடாமல் சூப்பர் ஸ்டாரின் முந்தைய படத்தின் வசூலை வைத்து அவர் ஆய்வு செய்வதிலிருந்தே இந்த படத்தின் கலை யோக்கியதையை தெரிந்து கொள்ளலாம்.  மூன்று நாட்கள் வசூல் ஆராய்ச்சியின் பின் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தாராம்.

கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் மதுரையிலிருந்து கனவுகளுடன் வந்திறங்கி தயாரிப்பாளர்களிடம் மதுரை தமிழில் கதை சொல்லும் உதவி இயக்குநர்களை காண இயலாது.  பொறியியல், மருத்துவம், மேலாண்மை முதலான உயர்கல்வி படித்த மேட்டுக்குடி இளைஞர்களே சங்கர் முதலான கார்ப்பரேட் இயக்குநர்களிடம் உதவியாளர்களாய் சேரமுடியும். இந்த போக்கு வெகுவேகமாக பரவி வருகிறது. இனி எதிர்கால இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி வாய்ப்பு கேட்க இயலாது. மாறாக படம் அள்ளப்போகும் வசூல் குறித்த மேலாண்மை திட்டத்தைத்தான் கச்சிதமாக தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.வசூல் செய்யும்  ‘கலையில்’ கதைக்கு என்ன கலைச்சேவை வேலை இருக்கமுடியும்?

திருட்டுப் பணத்தில் சம்பாதிக்கும் ரஜினி!

படத்தின் தயாரிப்புச் செலவில் ரஜினிகாந்த், சங்கர், ஐஸ்வர்யாராய், ரஹ்மான் போன்ற நட்சத்திரங்களின் ஊதியம் முக்கியமானது. சில கோடிகளை ஊதியமாக வாங்கும் நட்சத்திரங்களின் பங்கு என்பது ஏதோ அவர்களது சந்தை மதிப்பை வைத்து மட்டும் உருவாவதில்லை. நம்மிடமிருந்து எவ்வவளவு பணம் பிக்பாக்கெட் அடிக்க முடியும் என்ற உண்மைதான் நட்சத்திரங்களின் மதிப்பை தீர்மானிக்கிறது. இதற்கு ரஜினி என்ன செய்ய முடியும் என்று சில அப்பாவிகள் கேட்கக்கூடும்.

முழுவதும் தொழில்நுட்பத்தின் தயவில் தயாராகும் இந்தப்படத்தில் முகத்தை மாத்திரம் அதுவும் ஒரு துணை நடிகரைப் போல காட்டிச்செல்வது மட்டுமே ரஜினியின் வேலை. ரஜினி என்ற ஊதிப் பெருக்கப்பட்ட மாயையை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அவருக்கு ஊதியமே அன்றி அவரது நடிப்பிற்காக அல்ல. நடிப்புத் திறன் தேவையின்றி ஊதியத்தை அதுவும் பல கோடிகளில் வாங்குவது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.

எந்திரன் ரிலீசாகும் சமயத்தில் அவரது மகள் திருமணம் நடைபெற்ற போது, ரசிகர்கள் மத்தியில் தன் இமேஜ் அடிவாங்கும் சாத்தியத்தைப் பற்றிக் கூட கவலையில்லாத ரஜினியின் அறிக்கையை நாம் அறிவோம். இதனால் நாம் குறைந்த பட்சம் அறிவது என்ன,  இனி ரஜினியின் இரசிகர்கள் பலம் எதுவும் அவரது படம் ஓடுவதற்கும் சம்பாதிப்பதற்கும் தேவையில்லை. அதை தீர்மானிப்பது சன் டி.வியின் வர்த்தக சாம்ராஜ்ஜியம்தான். அந்த சாம்ராஜ்ஜியத்தில் அவர்கள் நினைத்தால் நட்சத்திர இளவரசர்கள் சடுதியில் உருவாக்கி களமிறக்கப்படுவார்கள். அவர்களது கொள்ளைக்கு உடன்படும் எவரும் நட்சத்திர இமேஜை அடைய வாய்ப்புண்டு. கூடவே கொள்ளைப் பணத்தில் பங்கு பெறவும் வழியுண்டு. மறுத்தால் ஒளி மங்கி , மறைந்து போகவேண்டியதுதான்.

இதனால் தமிழ்நாட்டின் நட்சத்திர ஆதிக்கம் குறைந்து விட்டதாக பொருளில்லை. மாறாக நட்சத்திர மதிப்பை தீர்மானிக்கும் ஏகபோக முதலாளிகள்தான் இனி கடவுளர்கள், இரசிகர்கள் அல்லர். இரசிகர்களும் பங்கு பெற்ற நட்சத்திர உருவாக்கத்தில் இனி முழுமையாக தீர்மானிக்கப் போவது சன் போன்ற தரகு முதலாளிகள்தான்.

எந்திரனின் ஏகபோக பகல் கொள்ளை !

ஏற்கனவே புதிய திரைப்படங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டபூர்வ அனுமதி இருப்பதால் சட்டபூர்வமாகவே கொள்ளையடிப்பதில் பிரச்சினையில்லை. எந்திரனின் முதல் வாரத்தில் ஒரு டிக்கெட்டின் விலை ஆயிரமா, இரண்டாயிரமா என்று தெரியவில்லை. படத்தின் மேனியாவுக்கேற்ப இது கூடத்தான் செய்யுமே அன்றி குறையப் போவதில்லை. இப்படி ஓரிரு வாரத்தில் அவர்கள் அள்ளப்போகும் பணம்தான் அவர்களது மூலதனத்தை சில மடங்காக அள்ளிக் கொடுக்க போகிறது.

சமீபத்திய செய்தியின் படி எந்திரனது இந்தி மற்றும் தமிழ் மொழி படப்பிரதிகளுக்காக சுமார் 2000 பிரதிகள் திரையிட இருக்கிறார்களாம். இதில் தமிழில் சுமார் ஐநூறு முதல் ஆயிரம் வரை இருக்கலாம். இதை நாம் 500 திரையரங்குகளில் வெளியிடுவதாக வைத்து ஒரு திரையரங்கிற்கு தலா 500 இருக்கைகள் என்று கொண்டால் மொத்தம் 2,50,000. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் என்றால் மொத்தம் பத்து இலட்சம் பேர் பார்ப்பார்கள். முதல் ஒரு வாரத்திற்கு ரூ.500 என்று ஒரு டிக்கெட்டின் விலையை வைத்தால் ஒரு நாள் வசூல் 50,00,00,000. அதாவது ஐம்பது கோடி ரூபாய்.  டிக்கெட்டின் விலை சராசரியாக 300 என்று வைத்தாலும் கூட ஒரு நாள் வசூல் முப்பது கோடி ரூபாய். ஒரு நாளில் ஐந்து இலட்சம் பேர்தான் பார்க்கிறார்கள் என்று வைத்தாலும் ஒருநாளின் வசூல் 15 கோடி ரூபாய்.

இதில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் முதல் சில நாட்களில் டிக்கெட்டின் விலை ஆயிரத்திற்கும் மேலேயே கூட இருக்கும். இரசிகர் மன்றங்களுக்கான காட்சிகள் ஒட்டு மொத்தமாக விற்கப்படும் போது அதன் விலை இன்னும் அதிகம். மொத்தத்தில் எந்திரன் படம் சுமார் ஒரு மாதம் ஓடினால் கூட அது குறைந்த பட்சம் முன்னூறு கோடி ரூபாயை வசூலிப்பது உறுதி.

எனில் இந்த சட்டபூர்வ கொள்ளை இல்லாமல் ரஜினியின் பல கோடி சம்பளம் இல்லை. திரையரங்குகளின் உரிய கட்டணத்தில் எந்திரன் நூறு நாள் ஓடினால் ரஜினிக்கு சம்பளத்தை சில இலட்சங்களை தாண்டமுடியாது. கோடிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

இந்த ஒருமாதம் நீங்கள் விரும்பினாலும் வேறு படங்களை பார்க்க முடியாது. தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் எந்திரன் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சென்னை நகரத்தில் உள்ள முப்பது திரையரங்குகள், புற நகரில் உள்ள நாற்பது திரையரங்குகளில் எந்திரன் படம் வெளியாக இருக்கிறது. ஆக இந்த எழுபது திரையரங்குகளில் முதல் ஒரு மாதத்தில் எந்திரன் மட்டுமே ஓடும். வாரம் ஒரு முறை படம் பார்ப்பவர்கள், மாதம் ஒரு முறை படம் பார்ப்பவர்கள் அனைவரும் எந்திரனைத் தவிர வேறுபடத்தை பார்க்க முடியாது.

எந்திரனின் வெற்றி தோல்வி மக்களால் தீர்மானிக்கப்படாது!

இதைத்தான் எந்திரனின் ஆக்கிரமிப்பு போர் என்று சொல்கிறோம். தமிழர்களின் வாழ்வில் சினிமா பார்க்க முடியாமல் பொழுது போக்கு இல்லை என்றான பிறகு அந்த சினிமாவில் எந்திரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றாக்கிவிட்டால் அது ஆக்கிரமிப்பு இல்லாமல் வேறு என்ன? மேலும் எந்திரனின் முதல் நான்கைந்து வாரங்களில் எந்த படங்களும் வெளிவராமல் சன் குழுமம் பார்த்துக் கொள்கிறது. தமிழக திரைப்படங்களை யார் தயாரித்தாலும் அவர்கள்  தமது படங்களை கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் விற்க முடியும் என்றான பிறகு சன் குழுமத்தின் எந்திர ஆதிக்கத்தினை யார் கேட்க முடியும்? அழகிரியின் மகன் தயாநிதி எந்திரனின் தமிழ்நாட்டு உரிமையை சுமார் 100 கோடிக்கு கேட்டு பேரம் படியவில்லை என்பதற்காக சன் குழுமத்தின் சக்சேனாவை ஒரு அடிதடி வழக்கில் சிக்கவைக்க முயன்றார் என்பதுதான் இருந்த ஒரே கேள்வி. அதைக்கூட ஏதோ இரகசிய ஒப்பந்தம் போட்டு சரிக்கட்டிவிட்டார்கள். எனவே இனி எந்திரனின் போரை ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டிலேயே முழு செலவையும் தாண்டி இலாபம் பார்க்க முடியும் என்ற பிறகு கேரள உரிமை பத்து கோடி, ஆந்திர உரிமை முப்பது கோடி, கர்நாடக உரிமை பத்து கோடி, இந்திக்கு எத்தனை என்று தெரியவில்லை என்றாலும் தமிழை விட அதிகமாகவே இருக்கும், பிறகு சர்வதேச உரிமை என்று மொத்தமாக கூட்டிக்கழித்தால் எப்படியும் சுமார் ஐநூறு கோடியை சுருட்டி விடுவார்கள். இதற்கு மேல் எந்திரன் தொடர்பான பல்வேறு தொடர் நிகழ்வுகள் – பாடல் அறிமுகம், டிரைலர் அறிமுகம், தயாரித்த விதம், என்று பல புராணங்கள் சன் தொலைக்காட்சியில் ஓடும்போது அதற்குண்டான விளம்பர வருமானம் . ஆடியோ ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ் எல்லாம் கூடுதல் போனஸ். இறுதியாக உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வரும் வைபவத்தில் வரும் விளம்பர வருமானம் என்ற சூப்பர் போனஸ். சூரியன் வானொலியின் எந்திரன் சிறப்பு ஒலிபரப்பு, சன் டைரெக்ட் வீடியோ ஆன் டிமேன்ட், தனது இருபத்தி சொச்சம் சேனலில் மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்து ஆயுசுக்கும் விளம்பரத்தினால் கட்டும் கல்லா….

இவை அத்தனையும் ஒரு பெரிய அலை போல குறுகிய நேரத்தில் தாக்கினால்தான் விழுங்க முடியும் என்பதால் அந்த அலையின் வீச்சை காண்பிப்பதற்காக சன் குழுமம் விளம்பரங்கள் மற்றும் ஏனைய ஊடக கவரேஜ் மூலம் பிரம்மாண்டமாக காண்பித்து வருகின்றது. இந்த பிரச்சாரத்தில் விழாதவர் யாருமில்லை. ஆக எந்திரனை பார்ப்பது என்பது உங்களது விருப்பமோ, உரிமையோ, தெரிவோ அல்ல. அது நீங்கள் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். அந்த கட்டாயத்தை தவிர்த்துவிட்டு வேறு ஒரு சினிமாவை பார்க்க விரும்பினால் அதற்கு வாய்ப்புமில்லை, வழியுமில்லை.

அடுத்து குறுகிய நாட்களில் ஒரு பேச்சை செயற்கையாக உருவாக்கிவிட்டு, அதனைப்பற்றிய மக்களின் மவுத் டாக் ஒரு கருத்தாக உருவெடுப்பதற்கு முன்னர் எந்திரன் தனது இலாபத்தை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடும். மக்களெல்லாம் சாகவாசமாக படத்தை அசை போட்டு நிராகரிக்க விரும்பினாலும் இந்த படம் வசூலில் தோற்கவே முடியாது. ஒரு படம் வெற்றியடைவதோ இல்லை தோல்வியடைவதோ மக்களின் கையில் என்ற ஜனநாயகமெல்லாம் எந்திரனது ஏகபோகத்திடம் எடுபடாது. ஆகவே இந்த வகையிலும் இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்பதே உண்மை.

பிராந்திய சினிமாக்களுக்கு வேட்டு வைக்கும் எந்திரன்!

அடுத்து இது உருவாக்கப் போகும் சமூக விளைவுகள் குறைந்த பட்சம் சினிமாத் துறையில் எப்படி இருக்கும்? கேரளாவில் மம்முடடி, மோகன்லால் படங்களுக்கு கிடைக்காத வியாபாரம் எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது. அங்கே நேரடியாக தமிழில் வெளியாகும் எந்திரன் ஒரு சராசரி மலையாளப்படத்தின் பிரதிகளை விட அதிக அளவில் முழு கேரளாவிற்கும் வெளியாகிறது. அங்கும் அந்த நேரத்தில் புதிய படங்கள் வரப்போவதில்லை.

80களில் சராசரி மலையாளிகள் வாழ்வை கலைநயமிக்க சிறுகதைகள் போல அழகாக சித்தரித்த மலையாளப் படங்களின் போக்கை, மெக்கை மசாலா ஃபார்முலாவிற்கு மாற்றியதை தமிழக படங்கள் 90களில் செய்தன. இப்போது எந்திரன் அந்த மாற்றத்தில் ஒரு பெரும் பாய்ச்சல். பண்பாட்டு விசயத்தில் தமிழ்நாட்டு அண்ணனை தம்பி போல பின்தொடரும் கேரளம் தனது தனித்தன்மையை இழந்து இத்தகைய கட்டவுட் சினிமாவிற்கு அடிபணிகிறது. எந்திரன் வரவால் கேரளத்தின் சிறு முதலீட்டு படங்களுக்கு இனி எதிர்காலமில்லை. வரும் மலையாளப் படங்களின் நாயகர்கள் தேவையே இல்லாமல் வெளிநாட்டில் பாடி, கார்களை நொறுக்கி, கிராபிக்சில் செலவழித்துத்தான் கடைத்தேற முடியும்.

ஆனால் அதையும் சன்குழுமம்தான் தீர்மானிக்கும் என்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. நூறு சிறுமுதலீட்டு படங்கள் வந்த இடத்தில் சில பெரும் முதலீட்டு படங்கள்தான் வரமுடியும் என்றால் இரசிகர்களின் இரசனையும் மாறி பாதாளத்தில் விழுந்து குலையும். ஆந்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பிரதிகளை எந்திரனுக்காக வெளியிடப் போகிறார்களாம். ஏற்கனவே ஆந்திரம் என்பது ஜிகினா சினிமாவிற்கு புகழ்பெற்றது. அந்த ஜிகினாவில் கொஞ்சம் வைரத்தூளை தூவி கலந்து கட்டி அடிக்கும் எந்திரனால் தெலுங்கு பட உலகம் அர்த்தமற்ற செலவழிப்பில் காவியம் படைக்கும்.

இந்தியில் எந்திரனது வரவு நல்ல கதைப்படங்களை தயாரிப்பவர்களைக்கூட பிரம்மாண்டமான மசாலா பக்கம் இழுக்கும். பாலிவுட் ஏற்கனவே அப்படித்தான் இயங்குகிறது என்றாலும் முழு இந்தியாவையும் தென்னிந்திய மொழிகளோடு சேர்ந்து முழுங்க முடியும் என்றால் இந்தி தயாரிப்பாளர்கள் அடுத்த பிரம்மாண்டத்தை தமிழ், தெலுங்கில் தயாரிப்பது உறுதி. இதன்மூலம் தமிழ் மூலம் இந்திக்கு சென்ற ஆப்பு மீண்டும் தமிழுக்கு வருவது நிச்சயம். சன் குழுமத்தைப் போல ரிலையன்ஸ் முதலான பெரும் தரகு முதலாளிகளும், இதுவரை சினிமாவில் இறங்காத முதலாளிகளும் துணிந்து குதிக்கப்போவது உறுதி. ஐ.பி.எல்  மூலம் கிரிக்கெட் எனும் விளையாட்டை வளைத்திருக்கும் முதலாளிகளுக்கு, பெரும் முதலீடுதான் அதுவும் உத்தரவாதமான இலாபம் உறுதி எனும் போது சினிமாவை ஏன் விட்டு வைக்கப் போகிறார்கள்.

“வெண்ணிலா கபடிக்குழு” என்ற யதார்த்தவகை படத்தை எடுத்த இயக்குநர் “நான் மகான் அல்ல” மூலம்தான் தனது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றான பிறகு எந்திரன் தெரிவிக்கும் ஃபார்முலாதான் தமிழ் சினிமாவின் தேசியகீதமாக நிலைபெறும். சராசரி தமிழ் மக்களின் வாழ்க்கை என்பதற்கு ஏதோ கொஞ்சம் கருணை கண்பித்ததாக போற்றப்பட்ட “சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அங்காடித்தெரு, ” போன்ற படங்களின் மார்கெட் தமிழகம் மட்டும்தான் அதுவும் ஊர்ப்புறங்கள்தான் என்ற நிலையில் அகில இந்தியாவை குறி வைத்து அடிக்கும் எந்திரனது வருகை பிராந்திய வாழ்க்கையின் தேவையை இரக்கமின்றி ரத்து செய்துவிடும்.

குறைந்த பட்சம் தென்னிந்தியாவை இலக்காக வைத்து எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நகர்ப்புறத்து மேட்டுக்குடி அடையாளம் மட்டுமே தேவைப்படும். அந்த வகையில் எந்திரனது ஆக்கிரமிப்பு வெற்றியின் மூலம் விதவிதமான தேசிய இனங்களின் அழகு அழிக்கப்படும். சன் டி.வியின் சீரியல்கள் தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்யப்படுவதற்கேற்ற கதை, உணர்ச்சி, களத்தை வைத்திருப்பது போல சினிமாவில் மாநகர இந்தியாவின் மினுமினுப்பு மட்டும் தேவைப்படும். எனில் முன்னர் சொன்னது போல உசிலம்பட்டி இளைஞனின் தேவை இனியும் தமிழ் சினிமாவிற்கு அவசியமில்லை. மலப்புறத்து மலையாளியின் நாட்டுப்புறப்பாடல் கேரள சினிமாவிற்கு தேவைப்படாது. கோதாவரியின் வனங்களில் நிறைந்து வாழும் பழங்குடி மக்களின் அடையாளம் தெலுங்கு சினிமாவை அண்டாது.

பூபன் ஹசாரிகாவின் மனதை வருடும் கிழக்கிந்தியாவின் நாட்டுப்புற பண்களை ரஹ்மானின் சர்வதேச ரகத்தில் வரும் தாளங்கள் நீக்கிவிடும். இளையராஜாவின் நாட்டுப்புற இசை இனி நினைவுகளில் மட்டுமே உயிர்வாழும். தேசிய இனங்களின் தனித்தன்மையை நேற்றைய வரலாற்றில் அழிக்க முயன்ற பார்ப்பனிய சம்ஸ்கிருத ஆதிக்கத்திற்கு இணையாக, இன்றைய வரலாற்றில் மேற்குலக அடையாளங்களை உலகமயமாக்கத்தின் தயவில் தேசிய தனித்தன்மைகளின் மீது திணிக்கும் நோக்த்திற்கு எந்திரன் போன்ற ஆக்கிரமிப்பு படங்கள் உதவும். நடை, உடை, பாவனை, வாழ்விடம், சந்தை அனைத்தும் அதாவது சென்னையின் சத்யம், மாயஜால், எக்ஸ்பிரஸ் அவின்யு, பிஸா டெலிவரி இளைஞர்கள், கிழக்கு கடற்கறை சாலை, டிஸ்கோத்தே, இறக்குமதி பைக், ஸ்போர்டஸ் கார் மட்டுமே இனி தமிழ்ப்படங்களின் அடையாளங்களாக உலாவரும். அதனாலேயே அவற்றை தமிழடையாளங்கள் என்று அழைக்கவே முடியாது.

அடுத்த தேர்தலுக்கு செலவழிக்கப்படும் பணம் உங்களிடமிருந்து………..

உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.

அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?

ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.

ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்!

 1. எந்திரன் : படமா? படையெடுப்பா ??…

  மனிதன் கண்டுபிடித்த ரோபோ உலகத்தை அழிக்கப் போகிறது என்ற ஹாலிவுட்டின் இராம நாராயணன்கள் மென்று துப்பிய ஒரு அரதப் பழசான எந்திரக் கதை நம் சிந்தனையை அடித்து வீழ்த்தியிருக்கிறது…

 2. Dear Mr or Miss Vinavu

  Thanks for ur ENTHIRAN Advertisement.. From this Blos 1 thing is clear that YOU to want to show YOU thru commenting & writing these type of Fooolish ..
  May be if it is true that all are wasting their time in Enthiran ETC’s .. I think you have spent your Precious Time… Anyway keep going … All The Best…

 3. நண்பரே!

  எல்லா உரிமையும் மக்களிடம் தான் இருக்கிறது. மக்களிடம் ஒன்றும் இல்லாதது போலவே பேசுகின்றீர்கள். ரஜினி படங்களைக் கூட மக்கள் பிடித்திருந்தால் தான் ஓட வைப்பார்கள். பிடிக்கவில்லை என்கின்ற காரணத்தில் தான் பாபா, குசேலன் போன்ற ரஜினியின் படங்களை தோல்வி அடைய செய்தார்கள்

  மக்களின் ரசனை இப்போது மசாலா படங்களை காணும் நிலையில் உள்ளது. அதை பணம் இருப்பவர்கள் காசாக்கி கொள்கிறார்கள்.

  மக்களுக்கு இந்த மசாலா படங்கள் பிடிக்காமல் போகும் காலம் வரும். அப்போது நல்ல நல்ல கலை படங்களுக்கு கிராக்கி வரும். அதுவரை இது தான் நடைமுறை. பெரும்பானமையினர் விரும்பி போய் பார்த்தால் தான் படங்கள் ஓடுமே தவிர மீடியாக்களில் செய்யபடும் விளம்பரங்களால் அல்ல

  அப்படி விளம்பரங்களால் படங்கள் ஓடும் என்று இருந்தால் இன்று எடுக்கபடும் எந்த படமும் தோல்வியை தழுவாது. உதாரணத்திற்கு ராவணன். அந்த படத்திற்கு அதிகமாய் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் அது தோல்வி கண்டது.

  படங்களை எதிர்பதில் நாம் ஏன் முனைப்புடன் இருக்க வேண்டும். மக்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் வரும்போது அவர்களே தேவையில்லாதவைகளை தள்ளிவிட மாட்டார்களா? என்ன?

  மாற்றம் என்பது உலக நியதி. அன்று AVM நிர்வாகம் கொடி கட்டி பறந்தது. இன்று Sun Network போன்றோர் உச்சியில் இருக்கிறார்கள். நாளை வேறு யாரோ வருவார்கள்.

  நம்முடைய ஆற்றலை இந்த விஷயத்திற்காக செலவு செய்ய வேண்டாம் என நினைக்கின்றேன் நண்பரே!

   • முதல் போட்டவன் காசு எடுக்கத் தான் பார்ப்பான் தல… ஆனால் வெற்றியா தோல்வியா என்பது மக்கள் வைக்கும் தீர்ப்பில் தானே இருக்கிறது. வெற்றியை யாரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது என்பதை அவர் சரியாக சொல்லி இருக்கிறார். அவ்வளவே…

    • I have wasted my time reading this article.

     Do not read this and waste your time. If you want to see the movie go ahead and if you don’t want to see means don’t go….

     Vinavu have wasted time in preparing this article instead he should have done some good things ( his statement only )

 4. ஆழமான பதிவு தோழர் . சன் குழுமம் சொல்வபவர்கள் தான் நட்சத்திரங்கள் தோழர் .இப்பொழுது சூர்யா கார்த்தி எல்லா படங்களும்
  அவர்களுடைய தயவே . மதுரையில் இருந்து உதவி இயக்குனர் பெரிய இயக்குனர் ஆக வேண்டுமென்றால் ……….அழகிரி தயவி வேண்டும்

 5. மிகச் சிறந்த கட்டுரை. ஒரு சினிமாவின் பின்னுள்ள அத்தனை அரசியலையும் மிகத் தெளிவாக எளிமையாக விவரிக்கிறது. எழுதிய தோழருக்கு அன்பு வாழ்த்துக்கள்!

 6. எந்திரனை எதிர்ப்பது மட்டும் சமூக பிரச்சினைகளை களையுமா? உங்களின் நேரம் இதில் செலவாகவில்லையா…. டிமாண்ட் இருப்பதால்தான் படமெடுக்கிறார்கள்

  எந்திரனை புறக்கணித்தால் எல்லா பிரச்சினையும் தீருமா? உங்களுக்கு இந்த கட்டுரையால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பது மட்டும் உண்மை…!

  • உங்களுக்கு இந்த கட்டுரையால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பது மட்டும் உண்மை…!

   10000000000000000000% True…
   Let him get some good will from this Publicity…

   • இக்கட்டுரை மூலம் வினவுக்கு பப்ளிசிட்டி கிடைக்குமென்றால் அது 10000000000000000000% பேர் வினவின் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களிடமிருந்து. இதுவும் வினவிற்கு வெற்றிதானே.

 7. ஆளாளுக்கு எந்திரனை கும்மறாங்கப்பா. பகல் கொள்ளை, பிக்பாட் என்றெல்லாம். ஏற்றுக்கொள்ள முடியாது. 150 கோடி செலவு செய்வது அவர்களின் உரிமை. அதை அதிக விலை டிக்கட்டில் பார்க்க முயல்வது ரசிகர்களின் உரிமை. இவை இரண்டும் அடிப்படை உரிமைகள். செம்புரட்சிக்கு பிறகு இவற்றை தடை செய்து கொள்ளுங்க. ஆனால் இன்று முடியாது/ கூடாது. And costs determine prices as well as demand and supply. That is all.

  மாறன் சகோதர்கள் மீது ஒரெ ஒரு அடிப்படை குற்றச்சாட்டு தான் உண்டு : மாஃபியா போல தியட்டர்காரகளை மிரட்டி, தம் படங்களை மட்டும் தான் குறிப்பிட்ட தேதிகளில் திரையிட வேண்டும் என்று மிரட்டுவது. இது தான் அயோக்கியத்தனம். ஃபாசிசம். இருக்கட்டும். என்றாவது ஒரு நாள் இதற்க்கு நீதி கிடைக்கும்.

  மற்றபடி : மக்கள் / ரசிகர்கள் எதை பார்க்கவேண்டும் அல்லது கூடாது என்று உத்தரவிட முடியாது / கூடாது. எல்லோரும் அதற்க்கு பதில் ‘புதிய ஜனனாயகம்’ மற்றும் கீழை காற்று நூலகளை தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. :)))))

  பி.கு : நான் ரஜனி படங்களை பார்பதில்லை. பாபா, சிவாஜி, சந்தரமுகி இன்னும் பார்க்கவில்லை. ஆர்வமில்லை. அது எனது சுய விருப்பம். அதே போல் பிறரின் விருப்பத்தை தடுக்க / விமர்சிக்க முயலமாட்டேன்.

  • //மக்கள் / ரசிகர்கள் எதை பார்க்கவேண்டும் அல்லது கூடாது என்று உத்தரவிட முடியாது / கூடாது. //

   அப்படியா? செக்ஸ் வகையாறாப் படங்கள், அதிலேயே கோரூர வன்முறைப் படங்கள், வக்கிர செக்ஸ் படங்கள் இவற்றுக்கும் அதியமானுடைய அளவுகோல் இதேதானா?

   சாதி-மத வெறிப் படங்கள் மக்களால் ஆதரிக்கப்படவே செய்யும் இவற்றுக்கும் அதியமானுடைய அளவுகோல் இவைதானா?

   • அசுரன்,

    தனிக்கை (censor board) என்று ஒன்று உள்ளது. அதனால் clear செய்யப்படும் படங்கள் தான் வெளி வரும். அதன் (தனிக்கை) அளவீடுகளை வேண்டுமானால் மாற்ற ஜனனாயக முறையில் பேராடுங்கள். யார் வேண்டாங்கறா.

    • //அசுரன்,

     தனிக்கை (censor board) என்று ஒன்று உள்ளது. அதனால் clear செய்யப்படும் படங்கள் தான் வெளி வரும். அதன் (தனிக்கை) அளவீடுகளை வேண்டுமானால் மாற்ற ஜனனாயக முறையில் பேராடுங்கள். யார் வேண்டாங்கறா.//

     ஹா.. ஹா.. இதுதான் இரட்டை அனுகுமுறை என்பது. இங்கு கேள்வி ஒரு விசயம் வேண்டுமா வேண்டாம என்பதுதான். வேண்டாம் என்பதை எப்படி நடைமுறைப்படுத்துகிறோம் என்பது பற்றியல்ல. அதியமான் சென்சார் என்ற அதிகார அமைப்பு மூலம் செய்யலாம் என்கிறார், வினவு குழுவினர் மக்களது பண்பாட்டிலேயே அத்தகைய சென்சாரை வர வைக்க வேண்டும் என்ற ஜனநாயக முறையை முயற்சி செய்கிறார்கள். எனக்கென்னவே வினவு பெட்டராத் தோணுது…

     சோசலிச நாட்டில் வேண்டுமானால் புதியஜனநாயகத்தை மட்டும் படிக்கச் சொல்லுங்கள் என்று நையாண்டி செய்யும் அதியமான், ஒருவேளை சோசலிச நாட்டில் அவரே பரிந்துரைக்கும் சென்சார் என்ற அமைப்பு கொண்டே வேண்டாத திரைப் படங்கள் தடை செய்யப்படுமானால் ஆதரித்துவிடுவாரா என்ன? மாட்டார்.

    • //இங்கு கேள்வி ஒரு விசயம் வேண்டுமா வேண்டாம என்பதுதான். /

     அப்படியா ? எந்திரன் படத்தில் ஆபாசம், வன்முறை அதிகமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் அதற்க்கு இத்தனை கண்டனங்களா ? இன்னும் படமே வெளிவரவில்லை. சரி, ரஜனி படங்களை விட படு ஆபாசம் மற்றும் வன்முறை அதிகமான படங்கள் பல நூறு உள்ளன. அவற்றை பற்றி இதுவரை ஒரு பதிவு இங்கு இல்லை ? அப்ப யார் இரட்டை நிலை எடுக்கிறார் ?

    • ///அதியமான் சென்சார் என்ற அதிகார அமைப்பு மூலம் செய்யலாம் என்கிறார், வினவு குழுவினர் மக்களது பண்பாட்டிலேயே அத்தகைய சென்சாரை வர வைக்க வேண்டும் என்ற ஜனநாயக முறையை முயற்சி செய்கிறார்கள். எனக்கென்னவே வினவு பெட்டராத் தோணுது…//

     அப்ப சென்சார் போர்டை கலைத்துவிடலாமா ? வினவுவின் முயற்சி மட்டும் போதுமா ? அதென்ன ஜனனாயக முறையில் ? ரஜினியை பிக்பாட், திருடன் என்று வசைபாடுவதுதான் ஜனனாயகமா ? என்ன துப்பாக்கி முனையிலா திருடினார் ?

   • தலைவா அதியமான்,

    ஏன் அதி அவசரமாக அடுத்த டாபிக்கிற்கு ஓடுறீங்க. எனது கேள்விகள் உங்களது இந்தக் கருத்துக் குறித்து,

    @@@//மக்கள் / ரசிகர்கள் எதை பார்க்கவேண்டும் அல்லது கூடாது என்று உத்தரவிட முடியாது / கூடாது. //@@@

    என்ற சொன்ன நீங்கள். சென்சார் போர்டு என்ற அதிகார அமைப்பு மூலம் படங்கள் தடைச் செய்யப்படுவதைச் சரி என்று சொன்னீர்கள்.

    @@@
    தனிக்கை (censor board) என்று ஒன்று உள்ளது. அதனால் clear செய்யப்படும் படங்கள் தான் வெளி வரும். அதன் (தனிக்கை) அளவீடுகளை வேண்டுமானால் மாற்ற ஜனனாயக முறையில் பேராடுங்கள். யார் வேண்டாங்கறா.
    @@@

    இந்த இரட்டை அணுகுமுறை ஜனநாயகமற்றது என்பதைத்தான் நான் கேள்விக்குள்ளாக்கினேன்.

    //அதியமான் சென்சார் என்ற அதிகார அமைப்பு மூலம் செய்யலாம் என்கிறார், வினவு குழுவினர் மக்களது பண்பாட்டிலேயே அத்தகைய சென்சாரை வர வைக்க வேண்டும் என்ற ஜனநாயக முறையை முயற்சி செய்கிறார்கள். எனக்கென்னவே வினவு பெட்டராத் தோணுது…//

    இது குறித்து கருத்துச் சொல்லுங்க. எந்திரன் இதில் எங்க வருதுன்னு அடுத்தக் கட்டமா பேசலாம்…

    • மேலும், வினவு தடை செய்வது குறித்து பேசவில்லை, புறக்கணிப்போம் என்று கோரிக்கை விடுக்கிறது. இதைவிட தனக்கு ஒவ்வாத விசயத்திற்கு எதிராக நாகரிகமான, ஜனநாயகமான போராட்டம் இருந்து விட முடியாது.

    • //சென்சார் போர்டு என்ற அதிகார அமைப்பு மூலம் படங்கள் தடைச் செய்யப்படுவதைச் சரி என்று சொன்னீர்கள்.//

     அசுரன்,

     தடை செய்யபடுவதை பற்றி நான் சொன்னேனா ? தனிக்கையின் அளவுகோல்களை மாற்ற ஒரு consensus, பொது கருத்தில் மூலம் மாற்ற முயலலாம் என்றேன். தடை எல்லாம் பேசவில்லை. மிக மோசமான வன்முறை அல்லது காமம் நிறைந்த காட்சிகளை தனிகை செய்யும் முறை பற்றி விவாதித்து முடிவு செய்யலாம். தடை என்பது வேறு. திரிக்கிறீர்களே..

   • Asuran,
    You are always thinking that you are right and wharever you says is the great.
    but i have observed you for the long time…whatever you say is utter stupidity.
    I doubt whether yopu passed in tenth class? (don’t say that whats is the relationship for that?)
    guys like you (half-boiled) thinking that you are great. Only your self-assumption is like that.
    I really don’t want to reply you, but I can’t tolerate you. Thatswhy this reply.
    WE ARE NOT HERE TO TOLERATE YOUR VOMIT.
    when you don’t like, don’t watch that.
    WHO ARE YOU TO ADVISE OTHERS? ARE YOU 100% CORRECT?
    DO YOU/VINAVU THINK YOU ARE THE REPRESENTIVE FOR THE WHOLE PEOPLE?
    NONSENSE!
    VINAVU – DON’T DO SUCH THINGS LIKE THIS TO GET CHEAP PUBLICITY.
    FINALLY ONE THING – YOU CAN’T EVEN IGNORE THE MOVIE ADVERTISEMNT, HOW COME POEPLE WILL INGORE THIS MOVIE?

    Regards,
    Sathish

  • ”மக்கள் / ரசிகர்கள் எதை பார்க்கவேண்டும் அல்லது கூடாது என்று உத்தரவிட முடியாது / கூடாது.”

   ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னுடைய விடுதலையைத் தானே நிறைவேற்றுவதற்குப் பக்குவம் பெறாதிருக்கின்ற வரையில் இன்றுள்ள சமூக அமைப்பு ஒன்றுதான் சாத்தியமானது என்று அதன் பெரும்பான்மையினர் கருதிக்கொண்டிருப்பார்கள். – எங்கெல்ஸ்.

   இப்படி இதுவரையில் உருவான சமூகங்களிலேயே ஆகச் சிறந்த சமூகம் முதலாளித்துவ சமூகம் என்று பெரும்பான்மையினர் நம்பியிருக்க, முதலாளித்துவமோ அப்பெரும்பான்மையினரை இளிச்சவாயன்களாக்கி ஓட்டாண்டியாக்கிக்கொண்டிருக்க, சொரனையுள்ளவர்(கம்யூனிஸ்ட்)களால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது.

 8. நன்றி தோழரே, உண்மையில் எந்திரன் தொடர்பான எந்த செய்தியையும் நான் படித்ததில்லை, முகப்பு செய்தியை தவிர்த்து (அதுவும் போகிர போக்கில் கண்ணில் படுவதால்). உங்கள் கட்டுரையின் ஆழம் ஏற்கனவே உணர்ந்தவன் என்பதால் அதை தவிர்த்தே வந்திருக்கிறேன். எந்திரன் படம் சார்ந்து உங்கள் கட்டுரையில் தான் அதிக நேரம் செலவளித்திருக்கிறேன், அந்தவகையில் அதன் தாக்கம் பெரியதுதான், இல்லை என்றால் நீங்கள் ஏன் இந்த கட்டுரையை எழுதபோகிரீர். இது பாமரனக்கு போய் சேர வேண்டும், அதில் தான் என் வருத்தம்.
  ம்ம்ம்ம்………….என்ன செய்வதென்றே புரியவில்லை.

 9. எத்தனயோஆராய்சி செய்து இக்கட்டுரை எழுதிய நேரத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல //இந்த நேரத்தில் தமிழக மக்களிடையே எழுத்தறிவு அற்ற மக்களுக்கு கல்வியறிவு கற்றுக்கொடுத்திருந்தால் நூறு சத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக ஆகியிருக்க முடியாதா? குறைந்தபட்சம் கணினிக்கு ஒதுக்கி முறையான தமிழ் தட்டச்சு கற்று மொழியையாவது வளர்திருக்கலாம்//

  இதை நீங்கள் செய்ய முயற்சி செய்யலாமே நண்பரே…

  //முழுவதும் தொழில்நுட்பத்தின் தயவில் தயாராகும் இந்தப்படத்தில் முகத்தை மாத்திரம் அதுவும் ஒரு துணை நடிகரைப் போல காட்டிச்செல்வது மட்டுமே ரஜினியின் வேலை. ரஜினி என்ற ஊதிப் பெருக்கப்பட்ட மாயையை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அவருக்கு ஊதியமே அன்றி அவரது நடிப்பிற்காக அல்ல. நடிப்புத் திறன் தேவையின்றி ஊதியத்தை அதுவும் பல கோடிகளில் வாங்குவது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.//

  இது கொஞ்சம் ஓவர் சார்

  • இலவசமாக ரத்ததானம் செய்யும் ஒரு அமைப்பை வைத்து நடத்தி வருகிறேம்.

   நண்பர்கள் 25பேர் சேர்ந்து இந்த ஆண்டு முதல் 5 பள்ளி மாணவர்களுக்கு கல்விகற்க உதவிசெய்துள்ளோம்.ஏதோ எங்களால் முடிந்தது.போதுமா …….

  • இலவசமாக ரத்ததானம் செய்யும் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பை வைத்து நடத்தி வருகிறேம்.
   நண்பர்கள் 25பேர் சேர்ந்து இந்த ஆண்டு முதல் 5 பள்ளி மாணவர்களுக்கு கல்விகற்க உதவிசெய்துள்ளோம்.ஏதோ எங்களால் முடிந்தது.போதுமா …….
   Reply

   • Pothum.Respecting you for that. Most of the rajini fans (hardcore) are philanthropist ! Starting from the person who had given free rides in autos, free Barbour, thousands of blood donations. I represent group of 300+ IT engineers who are elevating poor thro education. In my group, most of them are fans of superstar. Point is , we should not mix few things. We do help poor to see smile on their face and we also see movies for ourselves to smile.

    Propaganda against something which is liked by the most, will not stand out.
    Its exactly like atheist propaganda (most of the people believe in god).

    Its democracy and everyone can have their say !

    • /// Point is , we should not mix few things. We do help poor to see smile on their face and we also see movies for ourselves to smile.///

     So you expect more people to be poor due to your gang and people seeing such waste movies . you will see that movie and have smile in your face. Those poor will remain poor and you ***kers will give money to that people as thaanam.
     தூ.. உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்லையா ?..
     மக்களோட பணத்தை சுரண்டி திண்ணுட்டு கோடீஸ்வரனாகிட்டு இருக்குறானுங்க … அதை நியாயமாக்க அந்தக் கருத்துக்களை தொடர்ச்சியா நம்ம மூளையில் செலுத்துறானுங்கன்னு சொன்னா இவ்வளவு வியாக்கியானம் பேசுறவனுங்க .. இவ்வளவு நாள் சமூக பிரச்சனைகளைப் பற்றி பேசுனதுக்கு எவனும் பதில் சொல்லி விவாதிக்க வரல .. இப்பொ ரசினிகாந்த்தைப் பற்றி பேசினால் நாக்கத்தொங்க போட்டுக்கிட்டு மோப்பம் பிடிச்சி வந்து குலைக்கிறீங்களா ?..

 10. Dont expect messages from all the movies. Some movies are for entertainment. Enthiran is one such movie. I am surely going to watch it for Rajnikanth.

  It is not good to say to boycott the movie even before it is released.

 11. This is nonsense. If you don’t like then don’t watch it. Simple as that.
  Why telling people not to watch it too?
  The promotion for Endhiran is one which is expected ever since they bought the movie 2 years ago.
  Don’t say you never saw it coming.
  And rajini don’t act in 2 or 3 movies per year too.
  So its ok to go and watch his movies in cinema.
  Stop whining.

 12. நல்ல கட்டுரை.. அதியமான் :)) ஹஹஹ.. supply demand செம காமெடி போங்க உங்களோட..supply demand can be applicable in basic commodities.. படத்துக்கு 2000 குடுத்து வாங்கி பாக்குறான்னா அதுக்கு பேரு கொழுப்பு..

  • ”படத்துக்கு 2000 குடுத்து வாங்கி பாக்குறான்னா அதுக்கு பேரு கொழுப்பு..”

   அப்போ கொழுப்ப குறைக்கிற மருந்து இருந்தா சொல்லுங்க 20 ம் நம்பர் ராஜாவுக்கு கொடுக்கனும்

  • சரிங்க அப்போ அவ்ளோ பணம் குடுத்து பார்க்கற ரசிகனை நல்லா திட்டுங்க .பதிவு போடுங்க.ரஜினிதான் கைய பிடிச்சு இழுத்து ௨௦௦௦ ரூபாய்க்கு டிக்கட் வாங்கி படம் பார்க்க சொன்னாரா?அவர் காசுக்கு நடிக்கிறார்.அவருக்கு எவ்வளவு சம்பளம் குடுப்பது என்பதை தீர்மானிப்பது அவரால் லாபம் சம்பாதிக்கும் ஆட்களின் பொறுப்பு.அவரால் நஷ்டம் அடைந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பேசி அதை சரியும் செய்து கொள்கிறார்கள்.உங்களுக்கு என்ன பிரச்சனை?