Thursday, June 8, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! - சாந்தி

தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி

-

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 2

தாய்லாந்தின் புன்னகை அரசிகள் ! - சாந்தி

தாய்லாந்து நாட்டு பெண்களின் அழகும் அறிவும் உலகம் முழுதுமே அறிந்த விடயம்.. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவும் , வீரமுள்ள அதே சமயத்தில் மிக்க மென்மையானவர்களாகவுமே காணப்படுவார்கள்… கவர்ச்சியான பெண்கள் மட்டுமல்ல , அதீத பெண்மைத்தனமும் நிறைந்தவர்கள்.. அதிகமான வெட்கம் எப்போதும் இருக்கும் முகத்தில்.. சின்ன  பேச்சோ , முக வாடுதலோ கூட அடுத்தவரை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருப்பார்கள்.. என் கஷ்டம் எனக்கு .. அதை நாந்தான் பார்த்துக்கொள்ளணும்.. உன்மேல் சுமத்தமாட்டேன்..  வெளிப்படுத்த கூட மாட்டேன்.. அதற்கு பதில் புன்னகைப்பேன்.. உன்னையும் புன்னகை செய்ய வைப்பேன்.. அப்படியே இந்த தொற்று ( வெட்கமும் , சிரிப்பும் )  நாடு முழுதுமே நாம் பார்க்கலாம்..

அதீத பெண்மைத்தனம்  என ஏன் சொல்லப்படுகிறார்கள் என்றால் மிக மென்மையான , மிருதுவான தோலும், மிக அழகிய , பட்டுப்போன்ற கருங்கூந்தலும் உடையவர்களாம்..ஆனால் பெண்மைக்கு இலக்கணமாய் இவற்றை சொன்னாலும் , வீரத்தில் எள்ளளவும் குறைந்தவர்களில்லை.. வீரம்  காட்டும் விதமே வித்யாசமாயும்.. கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..

தான் எதிர்பார்க்கும் மரியாதையை அடுத்தவருக்கு முந்திக்கொண்டு தருவதாலேயேயும் , முகம் சுழிக்க வேண்டிய விசயத்தையும் , அன்போடு எடுத்தாழும் வித்தையையும்  உலகம் முழுதும்  திரும்பிப்பார்க்க செய்த விசேட குணங்கள்.. எச்சூழலிலும் அனுசரித்தும் போகக்கூடியவர்கள்.. அதீத பொறுமையுமுண்டு.. இவையெல்லாவற்றும் அடிப்படை அமைத்ததில்  புத்த மதக் கொள்கைக்கும் பெரும் பங்குண்டு..

அவர்களது நளினங்களை  அவர்களின் நடன அசைவுகளிலேயும் காணலாம்..அறுபது வயதிலும் 20 வயதினரைப்போல துடிப்போடு இருக்க ஆசைப்படுவார்கள்.. சோம்பி இருந்து பார்க்க முடியாது..

சரி இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. அவர்கள் குடும்ப அமைப்பு, பெண்ணுரிமை பற்றி..

____________________________________________

பெண்ணுரிமைக்கான அனுமதி 2004-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக வந்தாலும் , ஏற்கனவே பெண்கள் பங்கு சிறப்பாகவே இருந்து வந்துள்ளதால் அது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டால், இல்லறம்,  குழந்தை வளர்ப்பில் மிகுந்த ஆர்வத்தோடும், பெருமையோடும் ஈடுபடுவார்கள்..கணவருக்கு மிக உறுதுணையாகவும் இருப்பார்கள்..

இங்கே பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்தே ஆண் மணமுடிக்கணும்.. அனேகர் படித்து நல்ல பெரிய வேலைகளுக்கு செலவதால் 3 மாதத்தில் குழந்தையை பெற்றோரிடமோ, பாதுகாப்பு  இல்லங்களிலோ விட்டுவிட்டு  வேலைக்கு செல்கின்றனர்.. குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த ஒழுக்கத்தோடும் , நன்னெறிகளோடும், மரியாதையோடும் சிறார்கள் வளர்க்கப்படுகின்றனர்..

ஒரு பொருளை வாங்குமுன்பே இருகரம் கூப்பி , ஒரு கால் முட்டியை மடக்கி (தாழ்ச்சியாக) நன்றி என சொல்லிவிட்டே வாங்குவார்கள்..

ஒரு முக்கியமான நற்பண்பு கருணை.. தன்னைவிட தன் குடும்பத்தார்க்கும் , உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்..அதுவே ஒரு இன்பமயமான அன்புச்சூழலை உருவாக்கிவிடும்.. ஒருவருக்கொருவர் அன்போடு கிண்டலடித்துக் கொண்டும் , பகிர்ந்து கொண்டும்..

வாழ்க்கையை எளிதாக அதன் போக்கில் வாழ கற்றுக் கொண்டவர்கள்..இதனால் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல்  மனது எப்பவும் லேசாக இருக்கிறது அவர்களுக்கு ..

கீழ் தட்டு பெண்கள் உணவுக் கடை , சிகை அலங்காரம், மற்ற பொருட்கள்  விற்கும் கடைகளை  வைத்து பிழைப்பது எளிதாக உள்ளது..ஆண்கள் பலர் குடி மற்றும் பல பழக்கங்களுக்கு ஆளாவதால் குழந்தை வளர்க்கும் பொறுப்பு குறித்து நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.. விவாகரத்தானாலும் தனியே இருந்து துணிவா வாழக்கூடிய சமூக அமைப்பும் சிறப்பாகவே இருக்கிறது..

அனேக குடும்பங்களில் பெண்களே தலைமை தாங்குகின்றார்கள்.. அவர்கள் செய்ய முடியாத வேலை எதுவுமில்லை என்பதுபோல ஆணுக்கு இணையாக மிகப்பெரிய கண்டெய்னர் ஓட்டும் பெண்களும்,  குத்துச்சண்டை வீராங்கனைகளும், மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய மூடைகளை அலேக்காக துக்கி வேலை செய்யும் பெண்களையும் சாதாரணமாகக் காணலாம்.. கணவன் விட்டு சென்றானே என உட்கார்ந்து வருந்துவதெல்லாம் இல்லை.. பெண்கள் காவல்துறையிலும் ,  அரசியலிலும் , ராணுவத்திலும் கூட பங்கெடுக்கிறார்கள்..

நம்ம நாட்டு காந்தி சொன்னது இங்கேதான் நான் பார்க்கிறேன்.. எந்த நேரத்திலும் நள்ளிரவிலும் ஒரு பெண் தனியாக வேலைக்கு சென்று வர முடிகிறது.. பெண்களை மதிக்கிறார்கள்.. தாய்லாந்து என்றாலே பாலியல் தொழில் என அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மிக வேதனை அடைகிறார்கள் கடினமாய் உழைக்கும் மற்ற பெண்மணிகள்.. அத்தகைய தொழிலில் ஈடுபடுவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. இருப்பினும் இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டும் இருக்கிறது.. சட்டப்படி அங்கீகரிக்கப்படாத தொழில் தான் இன்னமும்..

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்றாலும் கத்தி கோபப்பட்டு பொருட்களை உடைப்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்.. கோபப்பட்டு பார்ப்பது அரிது.. கோபம் என்றால் அமைதியாக தவிர்த்திடுவார்கள் அச்சூழலையே.. ஏமாற்றங்களை ஏற்க பழகியதால்  மனவளர்ச்சியற்ற குழந்தைகளையும் பொறுமையாக மிகுந்த அன்போடு சமூகமே  ஊக்கத்தோடு வளர்க்கின்றது.. அதுமட்டுமல்ல திருநங்கைகளுக்கும் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்து தந்து அவர்களை தலை நிமிரச்செய்துள்ளது.. அவர்கள் மக்களோடு மக்களாக.. யாரும் வித்யாசமாய் பார்ப்பது கூட இல்லை..இது நாம் கற்கவேண்டிய முக்கியமானது..

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதும் அந்த சத்தம் கூட அடுத்தவருக்கு தொந்தரவாய் இருந்திடக்கூடாதென்பதற்காக ரகசியம் பேசுவது போன்ற ஒலியில் பேசுவதை கேட்பது ஆச்சரியமாக இருக்கும்.. பேருந்திலோ,போக்குவரத்து நெரிசலிலோ , வங்கியிலோ அதிக நேரம் காத்திருக்கணும் என்றாலும் , அமைதியாக முணுமுணுக்காமல் பொறுமையா காத்திருப்பார்கள்.. அதிலும் குழந்தைகள் , கர்ப்பிணி, வயோதிகருக்கு முன்னுரிமை கொடுக்கவும் உதவவும் முன்வருவார்கள்.. இதற்காக சிறு வயதிலேயே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்..

மேலும் சுத்தத்துக்கு முன்னுரிமை தருவார்கள்.. பொருட்களை சிறப்பாக அடுக்கவும் இடங்களை  அழகாக அலங்கரிக்கவும் தெரிந்தவர்கள்..எந்த வேலை செய்தாலும் அதிலொரு அழகு மிளிரும்.. முழுமை இருக்கும்.. மொத்தத்தில் அமைதி விரும்புவதால் தானும் அமைதியான சூழலை உருவாக்க பங்கெடுக்கணும் என்பதில் ஆரம்பிக்குது அந்த பொதுநலம் , ஒருவருக்கொருவர் உதவுவது..

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் அருமையா இருக்கும்.. சாதம் மட்டும் தனித்தனியே வைத்துக்கொண்டு கூட்டு குழம்புகளை முதலில் அடுத்தவருக்கு ( அருகிலிருப்பவருக்கு )  பறிமாறிவிட்டே அவர்கள் உண்ணுவார்கள்..இவை தாண்டி இன்னும் சில கலாச்சார பழக்கவழக்கம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது..  அவை என்னவென்று பார்ப்போம்.

பெண் புகைபிடிப்பதோ குடிப்பதோ மிக அவமானமாக கருதும் அதே நேரத்தில் ஆணுக்கு அனுமதிக்கப்படுகிறது. விவாகரத்து கூட பெண்கள் முன்பெல்லாம் சமர்ப்பிக்க முடியாது.. கணவன் மீது உறுதியான குற்றச்சாட்டும், அவன் தன் சம்பாத்யத்தை வேறோருவருக்கு தருவதாக நிரூபணம் ஆனால் மட்டுமே.. ஆனால் ஒரு ஆணால் எளிதாக விவாகரத்து பெற முடியுதாம்.. இப்போது மாற்றம் கொண்டுவர முயல்கிறார்கள்..

” ஆண் யானையின் முன்னங்கால். பெண் பின்னங்கால் ” என ஒரு பழமொழி சொல்கிறார்கள் இப்படி அர்த்தம் வரும்படி.. அதாவது ஆணே முதன்மை என .. ஆனால் நிதர்சனத்தில் பெண்ணே நிர்வகிப்பதாய் பார்க்க முடிகிறது..கொஞ்சம் வசதியான வீட்டுப்பெண்கள் திருமணத்தை கூட ஒரு சிறை என்ற நோக்கில் பார்ப்பதால் அவர்கள் திருமணத்தை விரும்புவதில்லை.. பணம் இருக்கையில் கணவன் எதற்கு என்ற மனப்பான்மை பெண்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது .. அது பெண்ணுக்கு லாபமாக இருக்குதோ இல்லையோ, ஆணுக்கும் சமூகத்துக்கும் ஒரு ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.. அதனால் திருமணம், குழந்தை பெறுவதையும் அரசு ஊக்குவிக்கின்றது..

கண்ணியமாக உடை உடுத்த பள்ளி கல்லூரிகளில் வலியுறுத்தப்படுகிறார்கள்..அனேக தாய் பெண்கள் வெளி நாடுகளுக்கு படிக்கவும் வேலைக்கு செல்லவும் தயங்குவதில்லை.. ஆக அங்கே இருந்து திரும்பினாலும் சொந்த நாட்டில் பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டுத் தருவதில்லை.. சீன வம்சா வழியினர் பலர் தாய்க்காரர் ஆனதாலோ என்னமோ , முதல் குழந்தை ஆணாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனாலும் பெண் குழந்தை பிறந்தால் வருந்துவதெல்லாம் இல்லை.. கொண்டாடப்படுகிறார்கள்..

அனேக பெண்கள் படித்து நல்ல வேலையிலிருந்தாலும், தம் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் சீரழிக்கப்படுகிறது என்பதில் வருத்தப்படுகிறார்கள்..

_________________________________________________

தாய்லாந்து பெண்மணி பென்னி ( வயது 38 ) சொல்கிறார் ,

” எனக்கு 23 வயதாகும் போது  ஆண் தோழன் கிடைத்தார். பின் 3 வருடம் காதலித்தோம். அப்பதான் என் அம்மாவுக்கு கான்சர் நோய் தாக்கியது தெரிந்தது.. சிகிச்சை எடுத்து எல்லாவற்றையும் நான் கவனிக்கவேண்டிய சூழல்.. நான் மூத்த பெண்.. இரண்டு தங்கை , ஒரு தம்பி.. அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்..அப்பா கடை வைத்திருக்கார்.. வருமானத்துக்கு குறைவில்லை என்றாலும் மருத்துவ செலவு , படிப்பு செலவுக்கு சரியா இருந்தது.. நான் உதவ வேண்டிய கட்டாயம்.. அந்த நேரம் என் காதலர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்.. என் நிலைமையில் அம்மாவுக்கு சரியாகும் வரை திருமணம் பற்றி எண்ணி பார்க்கவே  முடியவில்லை.. பாவம் காத்திருந்து விட்டு வேறொரு பெண்ணை மணமுடித்தார்.. இப்பவும் எனக்கு நல்ல நண்பன் அவன்..”.

அதன் பின் அவர் அம்மா மரணமடைந்ததும் , அப்பா இரண்டாம்  தரமாக ஒரு ஏழைப்பெண்ணை ( அவள் குழந்தையோடு ) திருமணம் செய்து கொண்டாராம்.. அந்த சிற்றன்னை இவளிடம் மிக அன்பாக இருப்பாராம்.. இவர் இங்கே தலைநகரில் வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் அப்பா வீட்டுக்கு செல்லும்போது அனைத்து துணிகளையும் துவைத்து தேய்த்து , சுவையான உணவு சமைத்து தந்து மகிழ்ச்சியளிப்பாராம்..

” உன் அப்பா இரண்டாவது திருமணம் செய்தது குறித்து  வருத்தமில்லையா ?. ” என்றால் , சிரித்துக்கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டும், என் காதருகே வந்து “உனக்கு தெரியுமா , ஆண்கள் பெண் துணை இல்லாமல் வாழவே முடியாது.. ஹஹ..:) “.

ஆக ஆண் என்றால் அவனுக்கு பெண்ணின் தேவை அதிகம் என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் இவர்கள் கலாச்சாரத்தில்.. சின்ன துணைவி வைத்திருப்பது அந்த காலந்தொட்டே பழக்கமாய் இருந்து வருகிறது பணக்காரர்கள் மத்தியில்.. அனேகமாக இந்த இரண்டாம் மனைவி ஏழை வீட்டு பெண்ணாக இருக்கிறார்.. சமூக அந்தஸ்து கிடையாது இவருக்கு..ஆனல் அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.. இப்போது படித்து முன்னேறுவதால் , பெண் கிடைப்பதே மிக அரிதாக உள்ளதாம்.. மேலும் மேல்நாட்டுக்காரர்கள் விரும்பி தாய் பெண்களை மணமுடிக்கின்றனர்.. அதனால் உள்ளூரில் பெண் தட்டுப்பாடு…

தன்னையும் , குடும்பத்தையும் , குழந்தைகளையும் , மிக நேர்த்தியாக , மிகுந்த அன்போடு கவனித்துக்கொள்வதால் பல வெளிநாட்டினர் தாய்லாந்து வந்து குடியேறுகின்றனர்.. அதனால் உள்நாட்டு ஆண்களுக்கு மணமுடிக்கவே பெண்கள் கிடைப்பது அரிதாகி வருவது கவலைக்குரிய விஷயம்..

ஏற்கனவே மணமகன் வரதட்சணை கொடுக்கணும், இப்ப பெண் வேறு கிடைக்காததால் பெண்ணின் மதிப்பை யோசித்துப்பாருங்கள்..

ஆக பெண் என்றால் செல்வம்/வருமானம்  என்றளவில் பெண்ணின் மதிப்பு கூடியுள்ளது.. பாலியல் தொழில் செய்வதற்கென்றே தாய்லாந்தின் வடகிழகு மாகாணத்திலிருந்து ( ஈசான் ) மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வருகின்றனர்..அங்கு விவசாயமே முக்கிய தொழில்.. வறட்சி ஏற்பட்டதால் இப்படியாம்.. ஆக அப்பகுதியில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.  பாலியல்  தொழில் செய்வதாக கூறப்படும் பெண்களுக்கு அனேகமாக துணையாக ஒரு ஆண் இருப்பார்.. நிமிர்ந்த நடையோடு எவ்வித அச்சமோ, கூச்சமோ இல்லாமல் இதுவும் ஒரு வேலைதான் என்பதுபோல் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். திருநங்கைகளும்.. அவர்கள் ஒரு மூன்றாவது பாலினமாக ஏற்கப்பட்டு  பல வருடங்களாகிவிட்டது.. இப்போதும் பல சேவை நிறுவனங்களும் , அரசும் , அவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவாகும்  பாலின மாற்று சிகிச்சைக்கு இலவசமாகவே  ஏற்பாடு செய்கிறார்கள்.

இன்னொரு முக்கிய செய்தி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சீக்கியர்கள் (இந்திய வம்சாவழி) , இங்கே வந்து தாய்க்காரர்களாகவே மாறிவிட்டனர்.. சீக்கிய மதம் வளர்க்கவோ, பள்ளி நடத்தவோ , கலாச்சாரத்தை ஏற்பதிலோ , அவர்களுக்கு எல்லா துறையிலேயும் உரிமை கிடைத்திருப்பதிலேயே  தெரியும் இவர்களின் விசாலமான மனது.சீக்கிய கம்பெனிகள் பல இங்கே மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.. தாய்லாந்தின் முதல் பைலட் இந்திய வம்சாவழியில் வந்த தாய் பெண் நிதிஷா.. ( அவர் படம் இணைக்கப்ப்ட்டுள்ளது ) ..ஆக பெண் என்ன துறையில் முன்னேறணும் என்றாலும் இங்கே ஏதும் தடையில்லை..வானமே எல்லை அவளுக்கு..

ஈவ் டீஸிங் போன்ற எவ்வித பிரச்னைகளுமில்லை இங்கே.. ஆனாலும் சில கலாச்சார சீரழிவுகள் இருப்பதாக வருத்தப்படுகிறார் 45 வயது கூன். தங்.. (கூன் என்பது பெண்ணுக்கு முன் போடப்படும் அடைமொழி மரியாதைக்காக.. ஃபி என பெரியவர்களையும்  துணையையும் அழைப்பார்கள்.. ஃபி என்பது அண்ணா, அக்கா, எனவும் பொருள்படும்..அதே போல ஆண் பெண்ணிடம் பேசும்போழுது  “காப்” என முடிக்கணும் ஒவ்வொரு பேச்சையும்.. பெண் ஆணிடம் பேசும்போது “கா” என முடிக்கணும்.. இவை மரியாதை நிமித்தம் வலியுறுத்தப்படுகிறது.. “கா, காப்” என முடிக்கும்போதே புன்னகையோடு முடிக்கணும்.. )

நான் எண்ணிப்பார்க்கிறேன் நம் நாட்டிலும் இப்படி பாலியல் தொழிலாளிகளும் (பாலியல் தொழிலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்ற பட்சத்தில்), திருநங்கைகளும்,  தலை நிமிர்ந்து நடக்கும் நாள் விரைவில் வருமா?..  தாய்லாந்து பெண்கள் கணவர் தன்னைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்தான் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.. ஆணுக்கு அதற்கான சக்தி இருக்கு என நம்புகின்றனர்.. பலர் அடங்கி போவதை தவறில்லை என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.. மேலும் ஆயுசுக்கும் தாங்கள் தங்கள் உடலழகை பேணி பாதுகாத்தால் தன் கணவர் தன்னை விட்டு போகமாட்டார் என நம்புகின்றனர்.. (இது கொஞ்சம் உவப்பில்லாத செய்தி எனினும்..பெண் போகப்பொருளல்லவே.

அதனால் எல்லோருமே மெலிவாக, கட்டுக்கோப்பாக இருக்க நல்ல ஆரோக்கியமான , அளவான உணவும் , உடற்பயிற்சியும்  தினமும் கடைபிடிக்கின்றனர்.. அரசும் இதுக்கு ஆங்காங்கே பூங்காக்களிலும் , பொது இடங்களிலும் உடற்பயிற்சியான ஏரோபிக்ஸ் இலவசமாக சொல்லித்தர ஏற்பாடு செய்துள்ளது அதிசயமாயிருக்கும்..

________________________________________________

நான் சந்தித்த கூன். ” பிரிம் “ என்ற பெண் வீட்டு வேலை செய்கிறார்.. காலையில் கிளம்பி அவர் செல்கையில் ஏதோ அலுவலுக்கு செல்வது  போலவே மிக சுத்தமாக அழகான உடுப்பு  போட்டுக்கொண்டு  , தலையை அழகாக சீவி , க்ளிப் போட்டுக்கொண்டு, அளவோடு  முகப்பூச்சும், லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு ஆர்வமாக செல்கிறார்..போகும் வழியிலேயே வேலைக்கு செல்லும் அனைவரும் காலை உணவை வாங்கிக் கொள்கின்றனர்.. (உணவுகள் இங்கே மிக சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன)…

அந்த உணவு விற்பவர்களும் அனேகர் பெண்களே.. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே உணவும் தரப்படுகிறது..  பின் அந்த உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் வீட்டில் வேலை முடிந்ததும் உண்கிறார். பல வீடுகளில் அவர்கள் மேசையிலேயே அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கப்படுகின்றார்கள்..”ப்ரிம்” கணவர் டாக்சி ஓட்டுனர்.. இவர்கள் இருவருமாய் சம்பாதித்து  கிராமத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைக்கும் , பெற்றோருக்கும் பணம் அனுப்புகின்றனர்..சில ஆண்கள் குடித்து பணத்தை செல்வழிப்பதில் மனைவியருக்கு வருத்தமுண்டு..  சில குடும்பங்கள் குடியால் , சூதாட்டத்தால் நிம்மதி இழப்பதாக சொல்கிறார்கள்.. குடித்துவிட்டு அடிக்கும் ஆண்கள் வெகு சிலரே.. சில பெண்கள் துணிவாக எதிர்த்து விடுகின்றனர்.. அப்படி எதிர்க்கும் பட்சத்தில் பொதுமக்களும் இணைந்து கொள்வார்களாம்..

ஆண்கள் அனேக வீடுகளில் சமைக்கின்றனர்  விரும்பியே.. வீட்டு வேலை செய்வதையும் இழிவாக நினைப்பதில்லை.. அலுவல் செல்லும் மனைவியருக்கு வீட்டிலிருந்து உதவும் கணவருண்டு.. குழந்தை வளர்ப்பையும் கூட அற்புதமாக , செய்யும் கணவருண்டு.. சில பெண்கள் வெளிநாடு சென்று வேலை செய்து பணம் அனுப்ப , கணவர் குழந்தைகளை , பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுண்டு.. சில உணவு கடைகள் நடத்தும் பெண்மணிக்கு கூட இருந்து உப வேலைகளை கணவரும் , பசங்களுமே செய்கின்றனர்.. இதை பல இடங்களில் வெகு சர்வ சாதாரணமாய் காணலாம்..

இதேபோல கூன்.” பிபூன்சாக் “ என்பவர் சொல்கிறார் .. தலைநகர் பாங்காக்கில் மட்டும் 60% பெண்கள் தனியே தங்கியிருந்த்தே வேலைக்கு செல்கின்றனர்.. தானும் அப்படி 5 வருடம் தங்கியிருந்ததாகவும் , தனக்கும் , மற்ற பெண்களுக்கும் எந்த ஆணாலும் பிரச்னை ஏற்பட்டதேயில்லை.. மாறாக நேரம் காலம் பார்க்காமல் உதவவே தயாராக இருப்பார்கள் எனவும் சொல்கின்றார்.. ஆம அதை கண்கூடாக பார்க்கலாம்..

இங்கே பல ஆண்கள் “பைக்மேன் , அல்லது மோட்டார்சைக்கிள் மேன்” (மோட்டார்பைக் டாக்சி) என அழைக்கப்படுகிறார்கள்.. அவர்களே  வேலைக்கு செல்பவர்களுக்கு சில நேரம் கடவுள் போல.. தலைநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தி.. அதில் இந்த பைக்மேன்கள் வாகனங்களுக்கிடையில் நெளிந்து , வளைந்து வெகு சாமர்த்தியமாகவும் மிக விரைவாகவும் வேலை செய்யுமிடத்துக்கு சென்று பத்திரமாக சேர்த்திடுவார்கள்..அனைவருக்கும் அடையாள அட்டையும் இருக்கிறது.. இவர்களை பல தெரு முனைகளில் பார்க்கலாம்,,பல வர்ண சட்டைகளோடு , புன்னகையோடும் காட்சியளிப்பார்கள்..ஆக பைக்கில் ஏறும்  பெண்மணிகளை தத்தம் குடும்ப உறுப்பினர்களாய் பார்க்கிறார்களே தவிர எவ்வித சபல மனப்பான்மையும் இல்லை..அனேகர் பள்ளி குழந்தைகளையும் இப்படி மிக பொறுப்போடு அழைத்து செல்வதுண்டு.. துணிந்து செல்லலாம் அவர்களை நம்பி எந்நேரமும்..

அதே போல இப்போது அவர்கள் தொழிலில் போட்டியாக பெண்களும் “பைக் வுமன்” களாக வலம் வருகிறார்கள்.. அவர்கள் நுழையாத இடமே இல்லை என்பது போல்.. அதற்கு முக்கிய காரணம் ஆண்களின் ஆதரவாகத்தானே இருக்க முடியும்..?.

பாகிஸ்தானில் தன் மாமியார் வீட்டுக்கு போகும்போது பெண்கள் அடிமை போல நடத்தப்படுவதை கண்டு மிக வேதனைப்படுகிறார் எனது ஒரு தோழி.. இந்திய தொலைக்காட்சிகளில் வரதட்சணை கொடுமைகளை பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா? என அதிசயப்படுகிறார்..

சட்டம் போட்டுத்தான் சம உரிமை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை. என நிரூபிக்கின்றார்கள் மெல்ல மெல்ல..பெண் முன்னேற்றத்தை தடுப்பதுமில்லை இங்கே.. புயிங்.நோக் ( புயிங் என்றால் பெண், .நோக் என்பது செல்லப்பெயர் , அவர்கள் விருப்பப்படி வைத்துக்கொள்வார்கள் . நோக் என்றால் பறவை என்ற அர்த்தம் . அவருக்கு பறவைகள் பிடிக்குமாம்.. )சொல்கிறார் , தான் சில வருடங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்துக்கொண்டே வேலையும் செய்து சம்பாதித்ததாக.. அவர்  சகோதரி அமெரிக்காவிலும் ,தோழி ஜெர்மனியிலும் இதே போல் வேலை பார்த்ததாக.. ஆனாலும் பலரும் எங்களை ஏதோ  பாலியல் தொழிலாளி போல பார்ப்பது எமக்கு மிக தர்மசங்கடத்தையும் மன வருத்தத்தையும் தந்துள்ளது .. அதனால் நான் என்னுடைய நாட்டுக்கே திரும்பி வந்துவிட்டேன்.. என் நாட்டில்தான் எனக்கு அதிக அன்பும் ,மரியாதையும் கிடைக்கிறது என  மிகப்பெருமையாக கூறுகிறார்.. அது நான் பார்த்தவரையிலும் மிக உண்மையும்..

நீங்கள் ஏங்கேயாவது ஒரு தாய் பெண்ணை சந்திக்க நேர்ந்தால் புன்னகை என்ற ஆயுதத்தோடு மட்டும் அவர் உள்ளத்தை தொட்டுப் பாருங்கள் , ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. அத்தனை மென்மையான மனதுடையவர்கள்… தாய்லாந்து பெண்கள் கடின உழைப்பாளிகள் ,  மிகச் சிறந்த குடும்பத்தலைவிகள் , . அவர்களை மதித்து  போற்றுவோம்..

( நான் பேட்டி காண என் தாய்லாந்து தோழி வீட்டுக்கு சென்றபோது அங்கே அக்கம்பக்கமுள்ளவரெல்லாம் என்னை மிகுந்த வாஞ்சையோடு நெஞ்சார தழுவி வரவேற்றனர்.. என் குழந்தைகளை அன்போடு வரவேற்றனர் அங்கேயுள்ள குழந்தைகள்.. பின் நானும் அவர்களோடு சமையலறையில் நின்று சமைக்க அனுமதி தந்தனர்..  சொல்லிக்கொடுத்தனர்.. பின் எல்லோருமாக சமைத்த அனைத்தையும் தரையில் நடுவில் வைத்து  சுற்றி உட்கார்ந்தோம்.. அப்போது தட்டில் சாதம் போட்டுக்கொண்டு பலவகை கூட்டுக்களை அவ்வப்போது எடுத்து போட்டுக்கொண்டு உண்ணவேண்டும்..எமக்காக சப்பாத்தியும் செய்திருந்தார் தோழியின் கணவரான பாகீஸ்தானியர்…. நான் கரண்டி உபயோகித்த போது என்னை அன்போடு தடுத்து , நீ வேற்று ஆள் அல்ல , அதனால்  சப்பாத்தியை பிட்டு கூட்டுக்குள் தேய்த்து எடுத்தே உண்ணவேண்டும்  என்றார் பிடிவாதமாய்..பின்பு மொட்டை மாடிக்கு சென்று அந்தாக்ஷரி போல பாட்டு பாடினார்கள்.. அப்போது உண்ண சில நாட்டுப்  பலகாரமும் , பழங்களும்..வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆயிற்று.. அன்பு வைத்தார்களானால் அவர்களை மிஞ்சிடவே முடியாது.. என்பதை பலமுறை புரிந்துள்ளேன்.. )

தாய்லாந்து பெண்கள் பற்றி எழுத சந்தர்ப்பம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

– சாந்தி

________________________________________________

வினவு பின்குறிப்பு:

ஓரிரு ஆண்டுகளாக ஜனநாயகத்திற்கான போராட்டமும், தெருச்சண்டைகளும் தாய்லாந்தில் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். உலகமயத்தின் ‘அருளால்’ அங்கும் சமூக ஏற்றத்தாழ்வு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. தாய்லாந்தின் நாட்டுப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் அழிந்து நகரங்களும் கேளிக்கை சுற்றுலாக்களுமே முக்கிய மையங்களாகி வருகின்றன. மேற்குலகின் மாந்தருக்கான ‘இனிய’ விபச்சார விடுதியாக தாய்லாந்து மாற்றப்பட்டிருப்பது ஒரு கசப்பான உண்மை. சாந்தி சொல்வது போல இது ஒரு மாநிலத்திலிருந்து வரும் ஏழைகள் காரணமாக இருந்தாலும் அத்தகைய நிலையை மேற்குலகும், அதற்கு இடம் கொடுக்கும் தாய்லாந்தின் ஆளும் வர்க்கங்களுமே தோற்றுவித்துள்ளன.

இதனால் தாய்லாந்து பெண்கள் என்றாலே விபச்சாரிகள் என்றொரு பார்வை உருவாகிவிட்டிருப்பது குறித்து இந்த கட்டுரையில் ஒரு தாய்லாந்து பெண் வருத்தப்படுகிறார். எனினும் அந்த வருத்தம் கோபமாக எழும்போதுதான் இந்த பெயருக்கு காரணமான கயவர்களை அப்புறப்படுத்த முடியும். புத்த மதமும், நிலவுடமைப் பண்பும் தோற்றுவித்திருக்கும் ஒருவித ‘மென்மையை’ தாய்லாந்து நாட்டின் பெண்களிடம் காண முடிகிறது. அதே நேரம் இதனாலேயே அவர்கள் அதிகம் சுரண்டப்படுவது கூட எளிதாகவே நடக்கலாம். இத்தகையை அதீதமான பெண்மை என்பது ஒருவித அடிமை நிலைதான். இதில் சாந்தி கூறும் நல்லவிசயங்கள் இருப்பது போலவே கெட்ட விசயங்களும் இருக்கின்றன.

ஒரு நாட்டின் சமூகத்தையும், குறிப்பாக பெண்களது நிலையையும் வரலாற்று ரீதியான பார்வையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். அதற்கு இந்த கட்டுரை ஓரளவிற்காவது உதவி செய்யும். இதற்காக நேர்காணல்கள் எடுத்து முனைப்புடன் கட்டுரை அனுப்பிய பதிவர் சாந்திக்கு எமது நன்றிகள்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010