privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி

ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி

-

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 3

ஜான் தெரோய்ன் - 1849
ஜான் தெரோய்ன் - 1849

பிரான்சில் மன்னராட்சி நடந்த காலமது. மார்க்சியம், சோசலிசம் போன்ற மக்கள் ஆட்சிக்கான போராட்டங்களும், தொழிலாளர்களுக்கான போராட்டங்களும், பெண்ணியவாதிகளின் பெண் விடுதலைக்கான குரல்களும் வெளிப்பட ஆரம்பித்த காலகட்டங்கள்.

ஜான் தெரோய்ன்’ [Jeanne Deroin] என்னும் பெண்மணியின் போராட்டம் அசாத்தியமாய் இருந்தது. இவரே பிரான்ஸ் நாட்டின் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் பெண்ணியவாதியுமாவார்.

1805-இல் பாரிசில், 31-டிசம்பரில் பிறந்த ‘ஜான் தெரோய்ன்’ சுமாரான வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர். அக்காலத்தில் பெண்கள் அதிகமாக படிக்க வைக்கப்படவில்லை. ஓரளவு மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் 1831-இல் ஆசிரியர் பயிற்சியில் தேர்வு பெற்றார். இருப்பினும் சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்த ஜான் தெரோய்ன் சிறு வயதில் இருந்தே தையற் கலையில் ஆர்வமாய் பயின்று வந்தார். அதுவே சொந்தமாக தையற் தொழில் நடத்தவும் காரணமானது.

ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் ஜான் தெரோய்ன் ஆசிரியர் படிப்பும், சுயதொழிலும், தனித்து இயங்கும் பாங்கும் அவர் வாழ்ந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜான் தெரோய்ன் அரசியல் குறித்த விவாதங்கள், பெண் விடுதலைக்கான வாதங்கள் பல ஆண்களை மட்டுமல்ல. பெண்களையும் கூட எரிச்சல் அடைய வைத்தது.

‘பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்’,

‘பெண்களுக்கு கல்வி முக்கியம்’,

‘ஒவ்வொரு பெண்ணுக்கும் சுயவருமானம் இருந்ததால் தான் ஆண் அடக்கியாள முடியாது…’

‘திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு பெயருக்கு பின்னால் எதற்காக கணவன் பெயர் இருக்க வேண்டும்..’

‘ஆண்களுக்கு இணையான கூலி உயர்வு’,

‘பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்…’

போன்ற மாற்று கருத்துக்களை துணிச்சலாய் ஒரு பெண் பேசும் போது, ‘படித்த திமிர்’, ‘நாலு காசு சம்பாதிக்கும் தெனாவெட்டு’ என்று வழமையாக பெண்கள் மீது ஏவப்படும் ஏச்சுக்களில் இருந்தும் ஜான் தெரோய்ன் தப்பவில்லை.

எல்லா வசவுகளையும் துணிச்சலாய் எதிர்கொண்டார்.

ஜான் தெரோய்ன் 1832-இல் திருமணம் செய்து கொண்டார். “என் பெயருக்கு பின்னே என் கணவரின் பெயர் இருக்கக்கூடாது” என்று அறிவித்தார். கடைசி வரையிலும் அவர் கணவரின் பெயரை இணைக்கவே இல்லை.

3-குழந்தைகளுக்கு தாயான பின்னும் ஜான் தெரோய்ன் குடும்ப வாழ்க்கைக்குள் முடங்கிவிடவில்லை. மாக்ஸியம், சோசலிசம் தத்துவங்களை  வாசிப்பதில் கவனம் செலுத்தினார். இடதுசாரிகளின் அரசியல் கோட்பாட்டு தத்துவங்களோடு மன்னர் ஆட்சி சிந்தனைகள் ஒத்துப்போக முடியவில்லை.

அப்போது லூயி நெப்போலியனின் [Louis – Napoleon] மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது.

மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். மக்களாட்சி நடைமுறைக்கு வரவேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்டிருந்த ஜான் தெரோய்ன் சோசலிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

அந்த காலகட்டத்தில் பெண்கள் மிகவும் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் குடும்பத்தில் ஆண்களின் கட்டுக்குள் இயங்க வேண்டிய நெருக்கடியை மதமும், அரசும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்றது.

பெண்கள் குரல்’ [La Voix des femmes] என்னும் பத்திரிக்கையை ஜான் தெரோய்ன் தொடங்கினார். பெண்களுக்கான ஊடகமாக அது இருந்தது. பெண்களின் உரிமைகள் குறித்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் ஜான் தெரோய்ன்.

அரசியல் விமரிசகராகவும், பெண்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்த ஜான் தெரோய்ன் தன்னுடைய 3-குழந்தைகளும் பெரியவர்களான பிறகே பொதுவாழ்க்கை களத்தில் தீவிரமாய் இயங்க ஆரம்பித்தார்.

குறிப்பாக பாரிசில் 1848-இல், மன்னராட்சிக்கு எதிராக பிப்ரவரி மாதம் 22, 23,  24, 25- தேதிகளில், ‘லூயி நெப்போலியன்’ மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியில் கலந்து கொண்டார். எனினும் அப்போராட்டம் கடுமையான அடக்குமுறையால் தோல்வியடைந்தது.

இந்த போராட்டத்தின் மூலமே ஜான் தெரோய்ன் பலரால் அறியப்பட்டார். மன்னாராட்சியின் கண்காணிப்புக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டார். மக்களிடம் மன்னராட்சியை எதிர்க்கும் தைரியம் ஒரளவுக்கு வந்திருப்பதை அறிந்து லூயி நெப்போலியன் 1849-இல் மே மாதம் 13-ஆம் தேதியில் பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் சார்பாக போட்டியிடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்.

ஜான் தெரோய்ன் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக மனு கொடுத்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டது. காரணம், அன்றைய அரசியல் சூழலில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அனுமதியும் கிடையாது. ஐரோப்பாவில் மன்னராட்சி காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமையும் மறுக்கப்பட்டிருந்தது.

முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்த நாடு சுவீடன். பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுப்பதற்கான பரிசீலனை செய்ய எடுத்துக் கொண்ட காலங்கள் 53-வருடங்களின் இழுபறிக்கு பிறகே! [1718 – 1771]

இருந்தும் சுவீடனில் பெண்களின் ஓட்டுக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது 1921-இல்தான்.

ஆனால், நியூசிலாந்து நாட்டில் 1893-இல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை உண்டு என்று உருவாக்கிய சட்டத்தை 1919-லேயே செயல் திட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

இதில் ஜான் தேலோய்ன் வாழ்ந்த காலங்கள் 1805 – 1894

பெண்களுக்கு ஓட்டுரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் குடும்பத்தினரின் அடக்குமுறைக்கு பயந்து பெரும்பான்மையான பெண்கள் ஓட்டுப் போட தயங்கிய காலத்தில்,

ஒரு பெண் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கிறார் என்றால், அதுவும் மன்னராட்சிக்கு எதிரானவர் என்றால் எவ்வளவு எதிர்ப்புகளை ஜான் தேலோய்ன் சந்தித்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

பெண்களே கடுமையாக எதிர்த்தும், விமரிசித்தும் பேசி இருக்கிறார்கள். அதுவும் சாதாரண பெண்களும் இல்லை. இலக்கியத்துறையில் ஜான் தேலோய்ன் சமகால பெண்ணிய எழுத்தாளர்களான George Sand, Marie d’agoult போன்றவர்கள் ஜான் தேலோய்ன் தேர்தலில் நிற்பதையும், அவருடைய முற்போக்கு சிந்தனைகளையும் கடுமையான விமரிசித்தார்கள்.

“பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது? ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது,  எனக்கு உரிமை இருக்கிறது” என்று கலகக் குரல் எழுப்பினார் ஜான் தேலோய்ன்.

பிரான்ஸ் அரசாங்கம் மக்களை சாமாதானப்படுத்தும் நோக்கத்தில் விட்டுக் கொடுத்தது.

ஜான் தேலோய்ன் பாராளுமன்ற தேர்தலில் நின்று போட்டியிட்டார். 15- ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இருப்பினும் பிரான்ஸ் நாட்டில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் தகுதியை பெற்றார்.

எப்போதும் சக பெண்ணயவாதிகளை கடும் கண்டனம் செய்வார் ஜான் தேலோய்ன். “எழுத்துத்துறையில் அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை பேசாமல் காவியமும், கவிதையும் கிழித்துக் கொண்டிருப்பதில் என்ன விடுதலையை காணப் போகிறீர்கள்? வாருங்கள் களத்திற்கு, போராட்டங்களில் ஈடுபட வாருங்கள். நம் பெண்களுக்காக நாம் தான் போராட வேண்டும்” என்று சக இலக்கிய பெண்ணியவாதிகளுக்கு அடிக்கடி வேண்டுகோள் வைப்பார் ஜான் தேலோய்ன்.

இலக்கிய பெண்ணியவாதிகளோ, ‘ஜான் தேலோய்ன் முற்போக்கு பெண்ணியம் கேடானது என்பதால் நாங்கள் விலகியே இருக்கிறோம்’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

ஜான் தேலோய்ன் நடத்திய ‘பெண்களின் குரல்’ பத்திரிகையில் படைப்புகளை அனுப்ப இலக்கிய பெண்கள் தயங்குவார்கள். சில பெண்களின் எழுத்துக்களோடு நடத்திக் கொண்டிருந்த அந்த ஊடகமும் அரசு அழுத்தத்தின் காரணமாக முடக்கப்பட்டது.

1851-இல் மீண்டும் இடதுசாரிகள் உதவியோடு “பிரான்ஸ் மன்னராட்சியை கலைக்க வேண்டும், மக்களாட்சி வர வேண்டும்” என்று போராட்டத்தை தோழர்களுடன்  ஜான் தேலோய்ன் தொடந்தார். இந்த போராட்டத்தில் மன்னராட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. லூயி நெப்போலியன், “ஜான் தேலோய்ன் தேசத்துரோகி” என்று அறிவித்து அவரை நாடு கடத்தினான்.

இலண்டனில் அடைக்கலமான ஜான் தேலோய்ன் வறுமையில் தவித்தார். அங்கும் அரசியல் கண்காணிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். வேலை தேடிய இடங்களில் அரசியல் காரணங்கள் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.

மிக வறிய நிலையில் வாடிய ஜான் தேலோய்ன் 1894-இல் 2-ஏப்ரலில் மரணம் அடைந்தார்.

நாடு கடத்தப்பட்ட போதும் ஜான் தேலோய்ன் பெண்களுக்கு எப்போதும் அறிவுறுத்தும் வார்த்தைகள்….

“பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள்,

சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது,

பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.

அதற்கான அறிவு நமக்கும் உண்டு…”

இதோ 2011-இல் மார்ச் 08- உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருட பெண்கள் தினத்திற்கு ஓர் சிறப்பும் உண்டு.

நூறாவது பெண்கள் தினமாம் இன்று!

இன்றைய பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

உலகில் மற்ற பாகங்களில் இருக்கும் பெண்களின் நிலையை குறித்து வேண்டாம். பிரான்சில் இருக்கும் பெண்களை குறித்து பார்ப்போம்…

பிரான்சில் மொத்த மக்கள் தொகை: 6,50,26,885.

2005- இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பெண்கள் தொகை: 31.385 மில்லியன்.

அரசியலில் உள்ள பெண்கள் 18.5%

வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 75.000

ஆண்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தின் சமபங்கு பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் இன்றளவும் செயல்பாட்டில் ஆண்களை விட குறைந்த விதமே ஊதியம் வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் பெண்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா?

சற்று இந்தியாவில் பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள். ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எத்தனை பெண்கள் போராடுகிறார்கள்? இலக்கியத்துறையில் எத்தனை பெண்கள் தொடர்ச்சியாய் பெண் விடுதலைக்காக களம் இறங்கி போராடுகிறார்கள்?

‘பெண்குறி’, ‘முலை’, ‘பாலியல் சுதந்திர உரிமை’யை தாண்டி பேசப்பட வேண்டிய பெண்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றனவே? சமுகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

நூற்றாண்டு மகளிர் தினத்தின் பெருமையை மெச்சும் இந்திய ‘பெண்ணியவாதிகளே’, நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்?

__________________________________________________________

தமிழச்சி, பெரியார் விழிப்புணர்வு இயக்கம் – அய்ரோப்பா, பிரான்ஸ்

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010