Tuesday, September 26, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்? - ஜெயந்தி

பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்? – ஜெயந்தி

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 9

ரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமே கற்றதாகும். தான் கற்ற கல்வியை தன் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பாள். அந்தக் குடும்பமே கல்வி கற்ற குடும்பமாக மாறும். இன்றைய காலகட்டத்தில் கல்வியின் அருமையை அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.

அரசாங்கமும் தன் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு, சத்துணவுடன் முட்டை என்று பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைக்கிறது. இன்னும் என்ஜிஓ அமைப்பு என்று தனியார் அமைப்புகளின் வாயிலாகவும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

சரி இன்றைய கிராமப்புறங்கள் எப்படி இருக்கின்றன. இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணப்படும்போது கல்வி கற்பதில் நிச்சயம் வளர்ச்சிதானே இருக்க வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள முயன்றபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை.

கிராமப்புறங்களில் ஓரளவு வசதியுள்ளவர்கள் பக்கத்து நகரங்களில் உள்ள ஆங்கிலப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். அக்குழந்தைகள் வேன்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அடுத்த நிலையில் உள்ளவர்கள் அரசாங்கப் பள்ளியிலாவது தங்கள் குழந்தைகள் படித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதிலும் ஆண் குழந்தை எப்படியாவது படிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அம்மா, அப்பா வேலைக்குச் சென்றால் வீட்டைப் பராமரிக்க பெண் குழந்தைகள் பயன்படுகின்றனர்.

அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள்? நமது கல்வித்திட்டம் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் இல்லை. இது ஒருபுறம் என்றால் நமது அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்கள் பிள்ளைகளை முற்றாக பள்ளியையும் கல்வியையும் வெறுக்கச் செய்கின்றன. ஆசிரியர்கள் சைடு(மெயின்) பிசினஸ்களாக வட்டிக்கு விடுதல், ரியல் எஸ்டேட், எல்ஐசி ஏஜண்ட் என்று பலவேலைகளுக்கு நடுவில் பிள்ளைகளுக்கும் எப்போதாவது பாடம் நடத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு படிப்பின்மீது எப்படி ஆர்வம் தோன்றும்? இப்போது சமச்சீர் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பிள்ளைகளுக்கு ஆர்வமுடன் கற்கக்கூடியதாக இருப்பதாக தெரிகிறது. இது கொஞ்சம் பசுமையான கிராமங்களில் மட்டுமேயான நிலை.

தமிழ்நாட்டில் ஏராளமான கிராமப்புறங்கள் எப்படி இருக்கிறது? அங்குள்ள மக்களின் வாழ்நிலை எவ்வாறு உள்ளது?

உலகமயமாக்கலின் விளைவுகளை இங்கேதான் கண்கூடாக காண முடிகிறது. சாஃப்ட்வேர் கம்பெனிகள் வந்துவிட்டன. மக்களின் வாழ்நிலை உயர்ந்துவிட்டது என்று ஏசி ரூம்களின் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் கிராமங்களில் சென்று பார்த்தால் அப்போது அவர்களுக்கு உண்மை நிலை புரியவரலாம். விவசாயம், குடும்பத் தொழில்கள் அனைத்தும் நசிந்துவிட்டன.

அந்தக்காலத்துல ஒரு கிராமம்னு எடுத்துக்கிட்டா அவங்க தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்வார்கள். அப்படித்தான் ஒவ்வொரு கிராமமும் அமைக்கப்படும். விவசாய வேலைன்னா அதுக்குத் தேவையான கலப்பை, மண்வெட்டி, அருவா போன்ற தொழில் செய்பவர்கள், சமையலுக்குத் தேவையான மண் பாத்திரங்கள் செய்வோர், ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்கள், விவசாயக் கூலிகள் என்று அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை வாய்ப்பு இருக்கும். ஆனால் இப்போது விவசாயம் பொய்த்துப்போன நிலையில் பெரு விவசாயிகள் ஓரளவு சமாளித்துக் கொள்கின்றனர். சிறு விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி வருகின்றனர். விவசாயம் சார்ந்த தொழில் செய்தவர்களின் நிலையும் இதுவே.

பக்கத்து சிறு நகரங்களிலோ பெரு நகரங்களிலோ உள்ள பேக்டரிகளிலும் கம்பெனிகளிலும் வேலை செய்து தங்கள் குடும்பத்தை ஓட்டுகின்றனர். அதிலும் ஆண்கள் தனது சம்பாத்தியத்தை குடித்துவிடுவார்கள். பெண்தான் கடுமையான உழைத்து பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் புருஷனுக்கும் சோறு போட வேண்டும். புருஷனிடம் அடியும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்படி பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள். இந்தப்பெண்களைப் பற்றி மறந்தும் அவர்கள் பேச மாட்டார்கள். கோடிக்கணக்கான பெண்களின் நிலை இதுதான். இப்படி சாப்பாட்டிற்கே சிரமமான சூழ்நிலையில் பிள்ளைகளை படிக்க வைப்பது பற்றி அவர்களுக்கு யோசிக்க எங்கே நேரம்?

இன்னும் விவசாயத் தொழிலாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள், தாங்கள் வாங்கிய கடன் வட்டி குட்டிபோட்டு வளர்ந்துகொண்டே இருக்கும் சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை அடமானம் வைக்கின்றனர்.

இப்போது சமீபத்தில் கேரளாவில் வீட்டு வேலைக்காக விலைக்கு வாங்கப்பட்ட பெண்ணை துன்புறுத்தி சாகடித்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தங்கள் பெண் குழந்தைகளை பத்தாயிரம் இருபதாயிரம்னு விலைக்கு விற்று தங்கள் கடனின் வட்டியைக் கட்டுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பெல்லாம் ரிஜஸ்ரேஷன் பண்ணப்பட்ட கம்பெனிகளில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆடு,மாடு மேய்க்க, வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டுவது, தீக்குச்சி அடுக்குவது, பீடி லேபிள் ஒட்டுவது, தூள் வைத்து பீடி சுற்றுவது போன்ற வேலைகள் இல்லாமல் பிச்சை எடுக்க வைக்கப்படுவது, குப்பை பொறுக்குவது, பாலியல் ரீதியான வேலைகளைச் செய்வது போல பிள்ளைகளுக்குத்தான் எத்தனை வேலைகள்.

இப்படி சின்ன வயசுலயே கடுமையாக வேலை வாங்குவதால் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி சரியானபடி இருக்காதாம். ஒருவித முரட்டுத்தனத்துடன் வளர்வார்களாம்.

சென்னையிலிருந்து திருவள்ளூர் வரை நிறைய தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்று நிறைய இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது இல்லாமல் அரக்கோணம் வரை உள்ள விளை நிலங்கள் ப்ளாட் போடப்பட்டு விற்கப்படுவதை நாம் தினமும் நம் வீட்டு தொலைக்காட்சியிலேயே பார்க்கலாம். கோயமுத்தூர் பக்கம் எடுத்துக்கொண்டால் திருப்பூரிலிருந்து தஞ்சாவூர் வரையான நிலத்தடி நீர் சாயப்பட்டறைகளின் விளைவாக கெட்டுவிட்டது. அங்கேயுள்ள மக்களுக்கு விவசாய நிலங்களுக்கு அனுப்ப வேண்டிய நீரை குடிநீராக வழங்க வேண்டிய நிலை. அதனால் பொள்ளாச்சி வரையிலான நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை. இப்படி வாழவே முடியாத சூழ்நிலையில் மக்கள் வாழ்வாதாரம் தேடி சென்னை நோக்கியோ, ஆந்திரா நோக்கியோ சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் பிள்ளைகளின் படிப்பு பற்றி யாரால் நினைக்க முடியும்?

—————–

குடும்பங்கள் தங்களது வேலைவாய்ப்பிற்காக கிராமத்திலிருந்து நகத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதால் குழந்தைகளும் உடன் செல்கின்றனர். பல குழந்தைகள் சென்ற இடத்தில் பள்ளி செல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறான குடும்பங்கள் கூடுதல் வருமானத்திற்காகவும் முன்பணம் பெற்றும் இடம்பெயர்கின்றனர். இதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து பெற்றோர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் குழந்தைகள் அதே தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடன் பெற்ற தொகைக்கான வட்டி விகிதம் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் ஒவ்வொரு வருடத்திலும் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை கூடிக் கொண்டே போகிறது. அவ்வாறான சூழலில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வீடுகளில் தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அமர்த்துதல், கைத்தொழில் மற்றும் குடிசைத்த தொழிலில் ஈடுபடுத்துதல், விவசாய வேலைகளில், கால்நடை வளர்ப்பில், கட்டிட வேலைகளில் மற்றும் வரையறைக்குட்படாத பிற பணிகளில் குழந்தைகள் ஈடுபடுதல் உதாரணம் குப்பைகளை பொறுக்கும் பணியில், சுயமாக தொழில் செய்தல், பிற நிறுவனங்களின் உரிமையாளர்களால் கொத்தடிமைகள்போல் பணியில் ஈடுபட வைத்தல், கம்பளி செய்தல், எம்பிராய்டரி, இயந்திர பணிகள், சுரங்கங்களில், வீடுகளில் வேலை செய்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை.

குழந்தைகளை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி அதன் மூலம் தங்கள் ஆதாயத்தை அதிகரிப்பதே முதலாளிகளின் நோக்கமாகும். குறைந்த கூலி, அதிக நேரம் வேலை. அடிப்படை வசதிகளற்ற வேலைச்சூழல் போன்றவற்றை எதிர்த்து குழந்தைகள் குரல் கொடுக்காது என்பதாலும் சங்கம் அமைத்து போராட மாட்டார்கள் என்பதாலும் முதலாளிகள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள். குழந்தைகளை எளிதில் வேலைக்குப் பழக்க முடியும். ஒரே வேலையை திரும்பத் திரும்ப சலிப்பின்றி செய்ய வைக்க முடியும். சிறு சலுகைகள் வழங்கி பெருமளவு அவர்கள் உழைப்பை சுரண்ட முடியும் என்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

மேலே உள்ள நான்கு பத்திகளையும் சொன்னது முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களோ, கம்யூனிசம் பேசுபவர்களோ, லொட்டு லொசுக்குக் கட்சியைச் சேர்ந்தவர்களோ, தங்கள் நலனையும் தங்கள் குடும்ப நலனையும் பெரிதாக எண்ணாமல் மக்களுக்காக தொண்டாற்றிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கப் படுபவர்களோ சொல்லவில்லை.

வேறு யார் சொன்னது. அரசாங்கத்தின் மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலச்சங்கம் வெளியிட்டுள்ள பயிற்சியாளர் கையேட்டில் உள்ளது.

அந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு அழகான கவிதை உங்களுக்காக,

ஒரு குழந்தையின் வேண்டுகோள்

நான் ஒரு குழந்தை
உலகமே என் வருகைக்காக காத்திருக்கிறது

நான் என்னவாகப் போகிறேன் என்று
இந்தப் பூமி ஆர்வத்துடன் கவனிக்கிறது

நாகரீகம் ஊசலாடுகிறது
இன்று என்னவாக இருக்கிறேனோ
எனது நாளைய உலகம்
அவ்வாறு அமையும்
அந்தக் கணத்திற்காகவே
இந்த நாகரிகம் காத்திருக்கிறது

நான்தான் அந்தக் குழந்தை
என் எதிர்கால்ததை உங்கள் கரங்களில் பற்றியுள்ளீர்கள்
நான் தோல்வியுறுவேனா, வெற்றியுறுவேனா
எனத் தீர்மானிப்பதும் நீங்கள்தான்

எனக்கு மகிழ்ச்சியூட்டுவனவற்றை
நீங்கள் தரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்
உலகின் ஆசியாக நான் மாறுவதற்கு
என்னைப் பயிற்றுவிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.

மேம் ஜீன் கோல்

_________________________________________________

– ஜெயந்தி
__________________________________________________

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2011

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

  1. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன் ? – ஜெயந்தி – உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 9 | வினவு!…

    பெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள்…

  2. வீடுகளில் தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அமர்த்துதல், கைத்தொழில் மற்றும் குடிசைத்த தொழிலில் ஈடுபடுத்துதல், விவசாய வேலைகளில், கால்நடை வளர்ப்பில், கட்டிட வேலைகளில் மற்றும் வரையறைக்குட்படாத பிற பணிகளில் குழந்தைகள் ஈடுபடுதல் உதாரணம் குப்பைகளை பொறுக்கும் பணியில், சுயமாக தொழில் செய்தல், பிற நிறுவனங்களின் உரிமையாளர்களால் கொத்தடிமைகள்போல் பணியில் ஈடுபட வைத்தல், கம்பளி செய்தல், எம்பிராய்டரி, இயந்திர பணிகள், சுரங்கங்களில், வீடுகளில் வேலை செய்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை.//

    ஆஹா இந்தியா முன்னேறிவிட்டது .. நாம எந்திரன் பார்ப்போம்,.,. கிரிக்கெட் பார்ப்போம்.. ஏசி ரூமில் உட்கார்ந்து விமர்சிப்போம்..

    உள்நாட்டிலேயே அகதி வாழ்க்கை.. இதைவிட புலம்பெயர்ந்த அகதிகளை மிக நாகரீகமாக மனிதாபிமானத்துடனே நடத்து பல நாடுகள்..

    தயவுசெய்து இக்குழந்தைகளை காப்பாற்றவாவது அகதிகள் என அறிவித்து வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்கள்.. சகிக்கல.

    ஒரு குழந்தையை வேலைக்கு /கொத்தடிமையாய் விலைக்கு விற்க வேண்டிய சூழல் கொடுத்த அரசு என்ன அரசு.?..

    அப்படியான சூழல் இனியும் தொடருமானால் அழிந்து போகட்டும் உலகம்..பூகம்பத்தால் , சுனாமியால்..

    வெட்கப்படுவோம்.

  3. அரசாங்கமும் தன் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சத்துணவு, சத்துணவுடன் முட்டை என்று பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைக்கிறது. இன்னும் என்ஜிஓ அமைப்பு என்று தனியார் அமைப்புகளின் வாயிலாகவும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர். பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது

  4. நான் சென்னைக்கு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு தொழிற்சங்க தாவா தொடர்பாக செல்லும் போதெல்லாம், அந்த அலுவலகத்தின் தகவல் பலகையில், லிப்ட் அருகிலுள்ள சுவற்றில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பின் அவசியமும், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்பது போன்ற தோற்றத்தில் பிரசுரங்களும், சுற்றறிக்கைகளும் இருக்கும். நாங்கள் சென்ற வழக்கு விசாரணை முடிந்து சற்று குறைவான விலையில் சாப்பாடு கிடைக்கும் சேப்பாக்கம் அருகிலுள்ள மெஸ்ஸில் வந்து உட்கார்ந்தால் இலை போடுவது, தண்ணீர் வைப்பதிலிருந்து, காய்கறி வைப்பது வரை 12 வயதிற்குட்பட்ட விவசாய அழிவால் படிப்பை தொடரமுடியாமல், சுற்றுச் சூழலால், குடும்ப தலைவனின் டாஸ்மாக் பாதிப்பினால் வெறுத்து கிராமங்களை விட்டு ஓடிவந்த பையன்கள் சர்வராக பணிபுரிந்து கொண்டிருப்பார். மாலை உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயிலில் ஏறினால் டிபன் பாக்ஸ் சகிதமாக பல குழந்தை தொழிலாளர்கள் வீடு திரும்புவதை பார்க்க முடியும்.
    இங்கு குழந்தைத் தொழிலாளர் இல்லை என வாசலில் அட்டை தொங்கும் பல பனியன் (திருப்பூரில்)கம்பெனிகளின் உள்ளே சென்றால்,ஒவ்வொரு அறையிலும் பெண் (குழந்தை) தொழிலாளர்கள் ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டிருப்பார்கள். பல ஊர்களில் கட்டிடத் தொழிலில் இன்றும் கல்வியை தொடர முடியாத குழந்தைகள் பணிசெய்து கொண்டிருப்பதை காண முடியும். ஊடகங்களில் காண்பிக்கிற மாயை என்பது வேறு – யதார்த்தம் என்பது வேறு. தோழியின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  5. எனக்கு மகிழ்ச்சியூட்டுவனவற்றை
    நீங்கள் தரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்
    உலகின் ஆசியாக நான் மாறுவதற்கு
    என்னைப் பயிற்றுவிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்
    Nice.Who will respect these lines

  6. தாராளமயக்கால் மற்றும் கல்வி வியாபாரத்தால் குழந்தைகளின் கல்வி சிரமமானதாகி விட்டது…

    1991க்கு முன்னாள் 7000-8000 ரூபாய் கட்டணத்தில் அரசு கல்லூரியில் 4 ஆண்டு தொழில் துட்ப பட்டமும்… 2000 ரூபாய் கட்டணத்தில் அரசு கல்லூரியில் பட்டயமும் பெற முடிந்திருக்கும்… ஆனால் 1992 தாராளமயமாக்கலுக்கு பின்… பல மடங்கு அதிகரித்த கல்வி கட்டணத்தை பெண் பிள்ளை செலுத்துவது வீண் என சமூகத்தில் நிலவுகிறது…

    இன்னொரு காரணமும் சொல்வார்கள்… அதிகம் படிக்க வைத்தால்… நல்ல படித்த மாப்பிள்ளைக்கு… அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பார்கள்…

    கொஞ்சம் வசதியான குடும்பத்தில் கூட திறமையுள்ள பெண் பிள்ளைகளை குறைந்த செலவில் கலை/அறிவியல் பட்டம் படிக்க வைத்து விட்டு… ஆண் பிள்ளைகளுக்கு லட்சங்கள் கட்டணம் செலுத்துபவர்களும் உண்டு…

    இன்னும் நம் சமூகத்திற்கு பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி… 64 கதைகள் மூலம்… சொன்ன… பாரதிதாசனின் இருண்ட வீடு… இலக்கியத்தை பரப்ப வேண்டும்…

  7. தமிழகத்தின் உண்மை நிலவரத்தை இந்தக் கட்டுரை அப்படியே பிரதிப்பலிக்கின்றது.

    ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்கள் கூட தங்கள் வீட்டில் பெண் குழந்தைகளை வேலை செய்யப் பயன்படுத்துகின்றனர்.

    டியூஸன் எடுக்கின்றனர், பணத்தினை வட்டிக்கு விடுகின்றனர், ஆனால் கொஞ்சம் பணம் கொடுத்து பெரிய ஆட்களை வேலைக்கு எடுக்க மாட்டேன் என்கின்றனர்.

    எழுத்தறிவிப்பவன் இறைவன் ஆவான் என்பதெல்லாம் போய்விட்டது. எழுத்தறிவிப்பவன் ஒரு கந்துவட்டிக்காரன் என்பதுதான் இன்றையக் காலக்கட்டம்.

    ஆதவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க