Tuesday, July 7, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

-

அண்ணா ஹசாரே

ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…

கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும்  இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?

நேரடிச் செய்தி ஒளிபரப்புகளில் மெழுகுவர்த்தியும் கையுமாகத் தோன்றும் ஊழல் ஒழிப்புப் ‘போராட்டக்காரர்கள்’, இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லையென்கிறார்கள். இப்போது விட்டால் இனியெப்போதும் ஊழலை ஒழிக்கும் சந்தர்ப்பம் அமையாது என்கிறார்கள். நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பேட்டியளித்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ‘போராட்டக்காரர்’ ஒருவர், “இன்று காலை எங்க வீட்ல வேலை பார்க்கும் பெண்மணியிடம் கேட்டேன். அவருக்கு லோக்பால்  என்றால் என்னவென்றே தெரியவில்லை. என்னவொரு அநியாயம்? இப்படியும் அறிவில்லாத மக்கள் நாட்டில் வாழ்கிறார்களே? அதனால் தான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் வந்து போராடிவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்” என்கிறார். இதைப் போன்ற ‘இலட்சிய வெறியுடன்’ பெருந்திரளான ‘மக்கள்’ நாடெங்கும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கொண்டாட்டம் குறைந்துவிடவில்லை.

டைம்ஸ் நௌ சேனலில் தோன்றிய ஷோபா டே, தனது லிப்ஸ்டிக் கலைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் சத்தியாவேசம் பொங்க ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் போட்டுக் காய்ச்சியெடுத்து விட்டார். பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணிக்கு ஆதரவளித்ததைப் போலவே இப்போதும் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், பல்வேறு இந்தி நடிகர்களும் ஊழலை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவதாக சபதம் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் வருகின்றன. இதில் உச்சகட்ட பரபரப்பான செய்தியென்னவென்றால், காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.

ஏதோ இந்தியா முழுவதும் படுபயங்கரமான மக்கள் கிளர்ச்சி நடந்து வருவதைப் போன்ற இந்த சித்தரிப்புகள் எல்லாம் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து தான் ஆரம்பித்தது. அன்று தான் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு பக்கம் பகத்சிங் தோழர்களும் அதற்கு எதிர்புறம் அவர்களைப் பார்த்து பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும் காந்தியும் பிரிண்ட் அடிக்கப்பட்ட பெரிய ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்ட மேடையில், பின்னணியில் காந்தி பஜனைப் பாடல்கள் ஒலிக்க, காந்தி குல்லாயை மாட்டிக் கொண்டு, ஒரு காந்தியப் புன்னகையோடு தனது உண்ணாவிரதத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு, ஆங்கில இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்  பரபரப்பான விவாதப் பொருளாகி, தற்போது நாடெங்கும் உள்ள பல்வேறு பெருநகரங்களில் இருக்கும் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இது ஒரு இயக்கமாக வளர்ந்து வருகிறது. உச்சகட்டமாக, வரும் ஞாயிற்றுக் கிழமையை மஞ்சள் டி-சர்ட், மஞ்சள் தொப்பி சகிதம் ஒரு ‘மஞ்சள் ஞாயிறாக’ கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஏன் ஞாயிற்றுக் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்குக் கொள்கை விளக்கமாக ‘அது ஒரு விடுமுறை நாள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் ஊழலை எதிர்த்து என்ன செய்ய முடியும் என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஊடகங்களின் கேமரா வெளிச்சத்தில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கும் முன், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் கோரும் சீர்திருத்தங்கள் – லோக்பால் மசோதாவின் பின்னணி!

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த 42 வருடங்களாக நிறைவேறாமல் பாராளுமன்றக் கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 1969-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையில் பத்து முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வின்னர் கைப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால், கட்சி பாகுபாடின்றி சர்வகட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இம்மசோதாவைப் பாராளுமன்ற மூத்திரச் சந்தினுள் போட்டு ரவுண்டு கட்டி தெளிய வைத்து தெளிய வைத்து கும்மியிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, சமீப நாட்களாக வெளியாகி வரும் ஊழல் செய்திகள் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இமாலய ஊழல்களாக இருக்கின்றது. காமென்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹசன் அலியின் வருமான வரியேய்ப்பு ஊழல், இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கரையைத் தாக்கும் கடலின் அலைகளைப் போல மாறி மாறி இந்திய மக்களை ஊழல் செய்திகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இவை பொதுவில் பத்திரிகைகள் வாசிக்கும் படித்த நடுத்தர வர்க்க மக்கட் பிரிவினரிடையே ஓரளவுக்குத் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற ஆன்மீக பிரபலங்களை உறுப்பினர்களாகக் கொண்ட  ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் என்.ஜி. ஓ அமைப்பின் சார்பாக, அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரன் பெடி, சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் போன்றோரால், ஜன் லோக்பால் என்கிற மசோதாவின் முன்வரைவு ஒன்றைத் தயாரித்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவின் படி உண்டாக்கப்படும் ஊழல் தடுப்பு அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது. மேலும், புகார்கள் ஏதும் இல்லாத நிலையிலும் ஒரு விவகாரம் பற்றி சுயேச்சையாக விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை. மட்டுமல்லாமல், புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் கிடையாது; மக்களவை சபாநாயகரோ மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும் அளவிற்குத் தான் அதன் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.

ஊழலுக்கு எதிரான இந்தியா முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேற்படி மசோதா முன்வரைவைத் தயாரித்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினர், இதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்களாம். இதற்குப் பேசாமல் அந்தக் கடிதங்களை அவர்கள் நேரடியாக ஒபாமாவுக்கே அனுப்பியிருக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் இங்கேயிருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்காவது அனுப்பியிருக்கலாம். சாமியை விட்டுப் பூசாரியிடம் வரம் கேட்டுக் கெஞ்சி இருக்கிறார்கள். போகட்டும்.

மற்ற போராட்டங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் அண்ணா ஹசாராவை ஆதரிப்பது ஏன்?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியே பேர் போன திருடனாக இருந்தது சமீபத்தில் தான் அம்பலமானது. அது ஊரெல்லாம் தெரிந்து, சகலரும் காறித் துப்பிய பின்னரும் ‘அப்டியா எனுக்கு ஒன்னியுமே தெரியாதே’ என்று விளக்கம் அளித்த நெம்ப நல்லவர் தான் பிரதமர். அப்போது மட்டுமா? இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஊழல் உள்ளிட்டு ஒவ்வொரு முறை முறைகேடுகள் பற்றிய விவரங்கள் அம்பலமாகிய போது சலிக்காமல் அவர் அளிக்கும் விளக்கம் ‘தெரியாது’ தான். அந்தக் கல்லுளிமங்கனுக்குத் தான் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். மவுனமோகனின் மற்ற அரசியல் நடவடிக்கைகள் குறித்து அண்ணா ஹசாரேவுக்கு எந்த புகாரும் இல்லை. அவர் எதிர்பார்த்தது ஊழல் குறித்த ஆலோசனைக்கு ஒரு பதில்தான். ஆனால் அவர் எதிர்பார்த்திற்கும் மேலான பதில்கள் பலரிடமிருந்தும் படையெடுத்து வருகின்றன.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், நாடெங்கும் போராடும் மக்கள் மேல் பாய்ந்து குதறும் அரசு, அண்ணா ஹசாரேவிடம் பொறுமையாகப் பதிலளிக்கிறது. ஒன்றுமே தெரியாத பிரதமரே கூட முன்வந்து அண்ணாவிடம் கோரிக்கை வைக்கிறார். சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்று பரிவோடு பேசுகிறார். பாரதிய ஜனதா, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றனர். பிரதமரின் பரிவு, சோனியாவின் ஆதரவு, எதிர்கட்சிகளின் ஆதரவு – இதற்கெல்லாம் மணிமகுடமாக – இத்தனை பேரின் ஆதரவோடு சேர்த்து பீகாரின் மு.க அழகிரியான பப்புயாதவின் ஆதரவையும் அண்ணா ஹசாரே பெற்றுள்ளார். கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பப்பு யாதவ், அண்ணாவுக்கு ஆதரவாகத் தாமும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு கிரிமினலைக்கூட ஒரு காந்தியவாதி திருத்திவிட்டார் என்றும் நீங்கள் கருதிக் கொள்ளலாம்.

தற்போது ஊடகங்களில் போராட்டக்காரர்களாகவும் புரட்சிக்காரர்களாகவும் கிளர்ச்சியாளர்களாகவும் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் நபர்கள் யாரும் அரசின் ஊழல்களால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அல்ல. இவர்கள் தமது சொந்த வாழ்க்கையின் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, சொகுசான வேலைகளில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் கொஞ்சம் சமூக உணர்வு வந்திருப்பதாக கருதிக் கொள்பவர்கள். சிலர் கேமராமுன் பேட்டியளித்த போது வெவ்வேறு பாலிஷான வார்த்தைகளில் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கவும் இல்லை. இதே அண்ணா ஹசாரே ஒரு பத்து நாளைக்கு முன் – கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த சமயத்தில் – தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தால் ஜந்தர் மந்தரில் ஒரு குஞ்சு குளுவான் கூட கூடியிருக்காது என்பது தான் நிதர்சனம்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஆங்கில செய்திச் சேனல்களின் கேமாராக்களின் முன் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான் மத்திய இந்தியாவில் இந்தியாவின் அரிய வளங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு படையலிட்ட போதும் அதை எதிர்த்து பழங்குடியின மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போதும், அந்தப் போராட்டத்தின் மேல் இரத்த வெறியோடு இராணுவம் பாய்ந்து குதறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அப்போது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் மத்திய அரசு தனது மிருகத்தனமான ஒடுக்குமுறையை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் கட்டவிழ்த்து விட்ட போதும் அதை எதிர்த்து சாமானிய மக்கள் போராடிய போதும் பாப்கார்னைக் கொறித்துக் கொண்டும் கோக்கை அருந்திக் கொண்டும் ஆதரித்தவர்கள்.

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாம் நாளிலேயே அவரின் கோரிக்கைகளில் ஒன்றான லோக்பால் மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது. காங்கிரசு பார்க்காத கமிட்டியா? இந்த லோக்பால் மசோதாவும் கூட நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பல்வேறு கமிட்டிகளில் தான் மூழ்கிக் கிடந்தது. இத்தனை நாளும் குட்டையில் முங்கிக் கிடந்த லோக்பால் மசோதாவைத் தூக்கிக் குளத்தில் போடப் போகிறார்கள்.  அநேகமாக இன்னும் இரண்டொரு நாளில் கமிட்டித் தலைவர் யாரென்பதை முடிவு செய்து விட்டு ஊழல் எதிர்ப்புப் போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விடும். அதற்கு மேலும் இதை நீட்டித்தால் ‘போராட்டக்காரர்கள்’ உற்சாகத்தை இழக்கவும் கூடும். இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை எந்த வரம்பிற்குள் இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது அண்ணா ஹசாரேவுக்கு தெரியாமல் போனாலும் ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்களின் இந்தப் போராட்ட வழிமுறையே உண்ணாவிரதம் என்ற அரதப்பழசான ஆபத்தில்லாத முறையாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு இப்போது வேறு சில கேள்விகள் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியே பழக்கப்பட்ட அரசு இதை மட்டும் பரிவோடு பார்ப்பது ஏன்? எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போராடும் மக்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரித்துப் பழக்கப்பட்ட கார்ப்பரேட் ஊடகங்கள் இதற்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? உண்மையில் இவர்கள் எதிர்த்துப் போராடப் போவதாகச் சொல்வது ஊழலைத் தானா?

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது?

தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.

நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.

தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.

அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.

இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.

தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.

அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

அண்ணா ஹசாரே ஊழலை தோற்றுவிக்கும் தனியார்மயத்தை ஏற்றுக் கொள்கிறார்

இதனால் அண்ணா ஹசாரே இந்த விசயங்களை புரிந்து கொண்டு தவறு செய்கிறார் என்று கருதிவிடக்கூடாது. அவரைப் பொறுத்தவரை இந்த அமைப்பு முறையை அதாவது இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார். அந்த பலத்தில்தான் அவர் ஜன்லோக்பால் சீர்திருத்தத்தைக் கோருகிறார். ஆனால் இந்த அமைப்பு முறையே மக்களைச் சுரண்டும் ஊழலை தன் அடிப்படையாக வைத்திருக்கும் போது நாம் எதை எதிர்த்து போராட வேண்டும்? பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? முன்னது இந்த நாட்டின் இயற்கை வளத்தை அப்பட்டமாக விற்கிறது. பின்னது அதிகார வர்க்கத்திடம் அன்றாடம் நடக்கும் நிர்வாக ஊழல். இரண்டு ஊழல்களின் பரிமாணங்களும் வேறு வேறானவை. சட்டம் போட்டு கலக்டரையோ, இல்லை மந்திரியையோ தண்டித்து விடலாம். ஆனால் நாட்டை விற்பனை செய்யும் இந்த அரசை எப்படி தண்டிப்பது?

தற்போது நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ, அண்ணாவின் உண்ணாவிரதமோ தமது நோக்கத்திற்கும் நலனுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாலேயே ஆளும் கும்பல் இவர்களிடம் பரிவோடு பேசுகிறது. எதார்த்தத்தில் நீதி மன்றங்களும், சட்டமுமே தனியார்மய கார்பொரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவானதாக இருக்கிறது. உண்மை இப்படியிருக்கும் போது, சட்டவாத நடைமுறைகளைக் கொண்டே ஊழலை எதிர்த்து விடப் போவதாகச் சொல்வதும், அதையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டம் என்பது போலும் சித்தரிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும். இது சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்களிடையே இயல்பாக எழும்பக் கூடிய ஆத்திரத்தை மடைமாற்றி விடவே செய்யும். எனவே தான் இந்த போராட்டக்காரர்களிடம் பணிந்து போவது போலும் பரிந்து பேசுவது போலும் ஒரு நாடகத்தை ஆளும் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

ஒருவேளை இந்தக் கமிட்டியின்  மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு  உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.

அண்ணாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது இந்த அமைப்பு முறையின் அடிப்படையான ஊழலை மாற்றி விடாது. மேலும் முதலாளிகளின் கொள்ளையை நியாயப்படுத்திக் கொண்டே புறங்கையை நக்கியவர்களை மாபெரும் வில்லன்களாக காட்டுவதே இதன் நோக்கம். ஆக அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு அம்பானியே ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மும்பையில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்திச் சேனல் ஒன்றின் கேமரா முன் தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என்று விளக்குகிறார் – “என் தாத்தா காந்தியைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்.  நான் என் வாழ்நாளில் காந்தியைக் கண்டதில்லை. இப்போது அண்ணாவைப் பார்க்கும் போது காந்தி என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.

வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விக்கி லீக்ஸ்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்