Thursday, July 18, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!

-

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!
டொமினிக் ஸ்ட்ரௌஸ் கான்

மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.

சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.

இப்போது விவகாரம் என்னவென்றால், மேற்படி ஸ்ட்ரௌஸ் கான் கடந்த பல ஆண்டுகளாக ஒரு நவீன கால ஸ்ரீ கிருஷ்ணனாக வலம் வந்திருக்கிறார் – அதாவது ஒரு ஸ்த்ரீ லோலனாக – அதாவது ஒரு பொம்பளைப் பொறுக்கியாக. இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நட்சத்திர ஹோட்டலின் பெண் ஊழியர் ஒருவரை இந்த நபர் தனது எண்ணற்ற கோபியரில் ஒருவராக நினைத்து அணுக அதாவது பாலியல் வன்முறை செய்ய முயன்று, அது வெடித்து பிரச்சினையாகியுள்ளது. இப்போதைக்கு விசாரணை என்கிற பெயரில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள்.

இதில் ஸ்ட்ரௌஸ் கான் வெறுமனே ப்ரெஞ்சு அரசியல்வாதி என்பதைக் கடந்து ஐ.எம்.எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (International Monetary Fund) தலைவராகவும் இருப்பதால் விவகாரம் உலக அளவிலான ஊடகங்களில் வெளியாகி நாறிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பொறுத்தளவில் ஒரு உலகளவிலான அமைப்பின் தலைவராயிருக்கும் ஒருவர் தனிமனித ஒழுக்கமற்று பொறுக்கித் திரிந்ததை ஒரு மாபெரும் குற்றம் போல எழுதுகிறார்கள். ஆம் – அவர் குற்றவாளி என்று தான் நாமும் சொல்கிறோம்.

இப்போது அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படலாம் – அல்லது நிரூபிக்கப்படாமலே போகலாம். ஆனாலும், நாம் அவரைக் குற்றவாளியென்றே கருதுகிறோம். நமது கருத்து ஸ்ட்ரௌஸ் கான் தனிப்பட்ட முறையில் சில பெண்களை வல்லுறவிற்குக் கட்டாயப்படுத்தினார் என்று வந்துள்ள செய்திகளின் அடிப்படையிலிருந்து மட்டும் எழுவதல்ல – அது ஒரு காரணம் தானென்றாலும் அதையும் கடந்து உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல லட்சம் பெண்கள் தாலியறுத்ததற்கும் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டதற்கும் இதே ஸ்ட்ரௌஸ் காரணமாக இருந்தார் என்கிற எதார்த்த உண்மையின் அடிப்படையிலானது.

உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தைக் குலைத்து அந்நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இசைவான அராஜகக் கும்பல்கள் மக்களை நேரிடையாக கொன்று குவித்ததற்கும் ஸ்ட்ரௌஸின் தலைமையில் இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனமே காரணமாக இருந்துள்ளது. மத்திய கால கத்தோலிக்கச் சர்ச்சைப் போல எவ்வகையிலும் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படாத – சாமானிய மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லாத இவ்வமைப்பே உலகின் பல்வேறு நாடுகளில் அரங்கேறிய சதிப்புரட்சிகளுக்கு சூத்ரதாரியாக செயல்பட்டுள்ளது.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத வாக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மானுவேல் ஸெலாயாவைத் துப்பாக்கி முனையில் (ஜூனில்) நாடு கடத்தி விட்டு அதிகாரத்திற்கு வந்த ஹோன்டுராஸின் சதிப் புரட்சி கும்பலுக்கு 150.1 மில்லியன் டாலர்களை உதவித் தொகையாக வழங்கியுள்ளது ஐ.எம்.எஃப். அந்த சமயத்தில் பெரும்பாலான உலக நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஹோன்டுராஸின் அந்த அரசாங்கத்தை அங்கீகரித்திருக்கவில்லை. மிக மோசமான மனித உரிமை மீறல்களால் அம்பலப்பட்டு நாறிக் கொண்டிருந்த அக்கும்பலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகவே ஐ.எம்.எஃப் வழங்கிய நிதி அமைந்தது.

ஹோண்டுராஸில் மட்டுமல்லாமல், 2002-ல் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலாவின் சாவேஸ் திடீர் இராணுவப் புரட்சியினால் அதிகாரத்தை இழந்திருந்த சமயத்திலும் இராணுவ சதிகாரர்களுக்கு ஐ.எம்.எஃப் தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்து உதவியும் செய்துள்ளது.

வட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ள தடையாக இருந்த பல்வேறு அரசாங்கங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே போன்ற சதிப் புரட்சிகளின் மூலம் தூக்கியெறிந்த போதும் கூட புதிதாக அமையும் அராஜகவாதிகளின் அரசாங்கங்களுக்கு ஐ.எம்.எஃப் நிதியுதவியளித்துள்ளது. ஐவரி கோஸ்ட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கொபாக்போவை எதிர்த்த அமெரிக்க கைபொம்மையான ஒட்டாராவை ஆதரித்ததும் இதே ஐ.எம்.எஃப் தான்.

நேரடியான சதிப்புரட்சிகளைக் கடந்து,  தமக்கு இணக்கமான அரசுகளைக் கூட மேலும் மேலும் அடிமையாக்குவதற்காக கடன் வலையில் சிக்க வைக்க அமெரிக்காவின் கைத்தடியாகவே ஐ.எம்.எஃப் செயலாற்றியுள்ளது. அந்த வகையில், நைஜீரியா, சியாரா லியோன், கென்யா, ஜிம்பாவே, சோமாலியா, ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு ஆப்ரிக்க நாடுகளை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து மொத்த நாட்டையே ஓட்டாண்டியாக்கிச் சுரண்ட ஒரு பொருளாதாரப் பேரழிவு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியது ஐ.எம்.எஃபைத் தான்.

எண்ணை உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கைப்பற்ற பல்வேறு ஆப்ரிக்க இனக்குழுக்களைச் சேர்ந்த உள்ளூர் யுத்த பிரபுக்களுக்கு ஆயுத உதவி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து, அதனால் விளையும் உள்நாட்டுக் குழப்பத்தில் யாருடைய கை மேலோங்கியுள்ளதோ அந்த குழுவை ஒரு ‘அரசாக’ அங்கீகரித்து அவர்களுக்கு வெளிப்படையாகவே நிதியுதவி செய்ய அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி தான் ஐ.எம்.எஃப். அந்த வகையில், கணக்கற்ற பெண்கள் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டும் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டும் உள்ளனர்.

இது போன்ற ஐ.எம்.எஃபின் நடவடிக்கைகளை அவ்வமைப்பிலேயே ஒரு பொருளாதார அடியாளாகப் பணியாற்றி பல நாடுகளை சீரழித்த ஜான் பெர்கின்ஸ் என்பவர் பின்னர் தனது அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்து “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” (விடியல் பதிப்பகத்தில் கிடைக்கிறது) என்கிற பெயரில் ஒரு நூலே எழுதியுள்ளார்.

இதுவும் போக, தற்போது உலகையே ஒரு மாபெரும் கருமேகம் போலப் பீடித்து ஆட்டிப்படைத்து வரும் சர்வதேசப் பெருமந்தத்திற்கும் ஐ.எம்.எஃப் ஒரு காரணமாக இருந்துள்ளது. இதை அவர்களே நடத்திய சுயேச்சையான ஆய்வின் முடிவில் ஒப்புக் கொண்டும் உள்ளனர்.

ஆக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் தாலியறுத்தற்கும் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டதற்கும் காரணமான ஒரு அமைப்பின் தலைவரை அவரது சொந்த வாழ்க்கையின் தவறுகளுடைய ஒளியில் வைத்து மட்டும் குற்றவாளியென்றோ குற்றவாளியில்லையென்றோ பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

இப்போதே ப்ரெஞ்சு எதிர்கட்சிகள் ஸ்ட்ரௌஸின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக ‘இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா’ என்று சொல்லத் துவங்கி விட்டனர். தனிமனித பாலியல் ஒழுக்கம் மட்டும் தான் ஒரு மனிதனை அளவிடுவதற்கான அளவுகோல் என்றால் நீங்கள் நரேந்திர மோடியை யோக்கியவான் என்று ஒப்புக் கொள்ள நேரிடும். மோடியோ இல்லை பிற ஆர்.எஸ்.எஸ் டவுசர்களோ தனிப்பட்ட வகையில் ஒருவேளை யோக்கியர்களாகக் கூட இருக்கலாம். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத தவசீலர்களாகக் (ஆனாலும் அது உண்மையல்ல) கூட இருக்கலாம். ஆனால், இந்த ஒழுக்க சீலர்கள் சமூகத்தோடு கொண்டுள்ள உறவு – அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்னவென்பதிலிருந்து தான் முழுமையான ஒரு மதிப்பீட்டிற்கு வரமுடியும்.

தினமும் குளித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு ஒழுங்காக ஷாகா போய் முறையாக உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்யும் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் தான் கலவரம் என்று வந்து விட்டால் அப்பாவி முசுலீம் பெண்கள் மேல் பாய்ந்து குதறுகிறார்கள். தனிப்பட்ட முறையில் பீடி சிகரெட் தண்ணி என்று எந்த பழக்கமும் இல்லாத இவர்களை நீங்கள் நல்லவன் என்று சொல்வீர்களா இல்லை சமூக ரீதியில் மத பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதால் அயோக்கியன் என்று சொல்வீர்களா?

ஸ்ட்ரௌஸ் கானின் தனிப்பட்ட யோக்கிய / அயோக்கிய நடவடிக்கைகள் அல்ல நமது கவனத்திற்குரியது – அவராலும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பினாலும் உலகளவில் மக்கள் மேல் ஏவிவிடப்பட்டுள்ள பொருளாதார பயங்கரவாதமுமே நமது கவனத்திற்குரியது. அதுவே நாம் எதிர்த்து வீழ்த்த வேண்டிய மோசமான அபாயம்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள ஏழைநாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் கொடுக்கும் ஒரு கந்து வட்டிக்காரன், ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் எப்படி இருப்பான்?

 1. **** மோடியோ இல்லை பிற ஆர்.எஸ்.எஸ் டவுசர்களோ தனிப்பட்ட வகையில் ஒருவேளை யோக்கியர்களாகக் கூட இருக்கலாம். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத தவசீலர்களாகக் (ஆனாலும் அது உண்மையல்ல) ****

  நல்லது.அதற்க்கான வாய்ப்புகளே இல்லை.கோவிந்தாச்சார்யா – உமாபாரதி மேட்டரை எப்படி அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும்?யோக்கியர்கள்,அல்லது யோக்கியர்களால் வழிநடத்தப்படும் வெறியர்கள் எப்படி கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எரித்து கொல்ல முடியும்?

 2. ஆர்.எஸ்.எஸ் இந்த பிரான்ஸ் க்கும் என்ன சம்பந்தம் எதை பத்தி எழுதினாலும் முடிவில் ஆர்.எஸ்.எஸ் இல் தான் முடிக்க வேண்டுதல் எதாவது உண்டா…

 3. Vinavu
  You are so hilarious….. On the one hand you talk about how other popular newspapers are diverting people’s attention from real issues and here you are writing about an individual and his private affairs….

  You should wite a separate article on IMF and John Perkins

  • இங்கு எதை ‘individual and his private affairs ‘ என்று சொல்கிறீர்கள்?

   • துணைவியாரயும் அவரது மகளையும் சொல்ல வில்லை….. உலக வங்கிக்கும் ஐ எம் எப் க்கும் உள்ள வித்தியாசம்……

 4. ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.இங்கிருக்கும் லெபட்,ரைட் போல.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க