privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

-

அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள்!

திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர்  கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

11 மணிக்கு  அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.

காலை  8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.

விபத்து நடந்த அன்றும்  அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான்  மரியம்பிச்சையின் இறப்புக்கு  அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.

ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?

சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.

கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.

மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)

மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம்  போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.

இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!

யார் இந்த மரியம்பிச்சை? ஒரு ரவுடி மந்திரியான கதை!

க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.  இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.

இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில்  புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப்  பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.

சொந்த  வாழ்க்கையில்  நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.

மேலும் தான்  வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின்  கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.

இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.

அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின்  மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும்  கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.

மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.

மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில்    தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும்  கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள்  போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.

உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

குறிப்பு :

1.         மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2.         பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை  கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும்  குறைத்துக்கொள்ள தயாரில்லை..

_________________________________________________________________

-தகவல், படங்கள்:  ம.க.இ.க, திருச்சி
_________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்