privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்வி"இலவசக் கல்வி நமது உரிமை" HRPC மாநாடு - ரிபோர்ட்!

“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – ரிபோர்ட்!

-

சமச்சீர் கல்வி இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை அணிதிரட்டி விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடுகிறது. இந்த போராட்டம் தற்போது கடலூர் மாவட்டம், கோவை என்று பரவி வருகிறது. இதை ஒட்டி விருத்தாசலத்தில் பெற்றோர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், அரசியல் சட்டப்படி கல்வி என்பது எப்படி நமது உரிமையாக உள்ளது, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகள் நூதனக் கொள்ளை, பகிரங்க கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. சாரமாக தனியார் கல்வியின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று எழுதியிருக்கும் இந்த முக்கியமான கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்! நன்றி

இலவசக் கல்வி நமது உரிமை

விருத்தாசலம் நகரில் இலவச கல்வி உரிமை மாநாடு கடந்த மே மாதம் செவ்வாய் (24-05-2011) அன்று நடைபெற்றது.  மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் திரு .செந்தாமரைக்கந்தன் வரவேற்புரை வழங்கி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு வை வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அவரது பேச்சிலிருந்து:

மக்கான கல்வி உரிமை நாம் கேட்கின்றோம். எட்டாவது வரை இலவசக்கல்வி என்று கல்வி உரிமைக்கான சட்டதிருத்தம் செய்யப்பட்டது. அப்பொழுது எட்டாவது வரை கல்வியை இலவசமாகக்கொடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கெல்லாம் மத்திய அரசு அறிக்கை அனுப்பியது.ஆனால் இங்கே என்ன நடந்தது?  அரசுப்பள்ளிகளில் மட்டும் இலவசக்கல்வி – தரமற்றக் கல்வி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் கொடுத்துதான் கல்வி என்ற நிலைமைதான் இன்னும் இருந்து வருகிறது. இலவசக்கல்வி இன்னும் வழங்கப்படவில்லை.”

“ஆனால், ஏழைகளுக்குப் பிச்சை போடுவதுபோல், ஒவ்வொரு பள்ளியிலும் 25%ஒதுக்கிவிட்டு அதில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக அவர்கள் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு வரை  ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும். அந்தக்கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்று ஒரு ஒப்பந்தம் வந்துள்ளது, நாம் இப்போது என்ன கேட்கிறோம் என்றால்இலவசக்கல்வி என்பது நமது உரிமை.அதாவது பன்னிரெண்டாவது வரை இலசவசக்கல்வியை அரசு கொடுக்க வேண்டும்.  ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் இலவசக்கல்வியை வழங்கவேண்டும். அதாவது, மற்ற இலவசங்களை வழங்குகின்ற அரசு ஏன் இலவசக்கல்வியை தரக்கூடாது? என்று கேட்பது நமது உரிமை. அதைத்தான் நாம் நமது மாநாட்டிலே இப்போது வலியுறுத்திக் கூறுகிறோம்.”

“அடுத்ததாக, இந்த கல்வி கட்டணத்துகாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவிப்பு வந்தது. அதை தனியார் பள்ளிகள் செயல்படுத்தாமல்  அளவுக்கு மீறி பணம் வாங்கினார்கள். ஒன்றுக்கு மூன்று  பங்கு பணம் வாங்கினார்கள். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பெற்றோர் சேர்ந்து போராட்டம் செய்தபிறகுதான் இந்தக்கட்ட்டணக் கொள்ளையை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த முடிந்தது, அதன்பிறகு, பெற்றோர்கள் ஒன்றுகூடி மனித உரிமை பாதுகாப்ப்பு மையத்தின் மூலம் கட்டணக்கொள்ளையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கட்டணங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதை பெற்றோர் பார்க்குமளவுக்கு ஆர்வம், ஈடுபாடு  ஏற்படுத்தினார்கள்.”

” அதன்பிறகு பெற்றோர்கள் தனித்தனியாக கூடுதல் கட்டணம் வாங்குகிறீர்களே என்று நிர்வாகத்தினரிடம் கேட்க ஆரம்பித்தார்கள். தனித்தனியாக கேட்க ஆரம்பித்தபின் நிர்வாகத்தினரிடம் ஏளனத்தையும் அலட்சியத்தையும் சந்திக்க நேரிட்டது. அதன்பின் பெற்றோர்கள் ஒன்றுகூடி சங்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று வந்தார்கள். அதன்பிறகு, பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு முற்றுகை போராட்டம் கூட மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.”

“அப்பொழுது அந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் வந்து சில உறுதிமொழிகளை தந்தார்கள். அதாவது கூடுதல் கட்டணம் நீங்கள் கொடுக்க வேண்டாம்.  அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மட்டும்தான் செலுத்த வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். மாணவர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்கள்.  பள்ளி தகவல் பலகையில் இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த உத்தரவிடுகிறேன் என்று உத்தரவு வழங்கினார்கள்.”

“ஒரு சில பள்ளிகள் மட்டும் ஓரிரு நாட்கள் வைத்துவிட்டு எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு பெற்றோர் சங்கம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக என்னையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தார்கள். பெற்றோர் சங்கம்  மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து அந்த கூடுதல் கட்டணம், கட்டணக் கொள்ளையை எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம்.  சில பல போராட்டங்களை நடத்தினோம். இருந்தும் கூடுதல் கட்டணம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.”

“கட்டணக்கொள்ளையை வைத்து வியாபாரம் செய்ய  ஆரம்பித்தார்கள். மாணவர்கள் கூப்பிட்டு மிரட்டுவது, பெற்றோரிடம் பணம் வாங்கிவரச் சொல்வது, அவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற தொல்லைகளை எல்லாம் கொடுத்தார்கள். இருந்தும் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினோம். இதற்கும் பிறகும் கூட அவர்கள் திருந்தவில்லை.  தற்போது பள்ளி திறக்காத நிலையிலும் நீதியரசர் ரவிராஜ பாண்டியன் அறிக்கை வெளிவராத நிலையிலே அதிகமாக கட்ட வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். பெற்றோருக்கும் நோட்டிசு அனுப்புகிறார்கள்.”

“இதற்கெல்லாம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், பல பெற்றோர் மனத் திடம் இல்லாமல், நமது குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ இந்த பள்ளிகள் என்று பயப்பட்டு செலுத்திவிடுகிறார்கள். அந்த உணர்வை போக்கும் வகையிலே நாங்கள் போராடுகிறோம். இருந்தாலும் சரி செய்ய முடியவில்லை.  நீங்களெல்லாம் செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். கோயமுத்தூரில் சங்கீதா என்ற பெண் யூகேஜி படிக்கும் தனது மகனுக்கு தனியார் பள்ளி கேட்டகட்டணம் கட்டி படிக்க வைக்கமுடியவில்லை என்று மனமொடிந்து தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மரண வாக்குமூலத்தில் கூடுதல் பணம் கேட்டார்கள், என்னால் கட்டமுடியவில்லை அதனால் உயிரை மாய்த்துக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பெற்றோர்களை பொறுத்தவரை நீங்கள் உறுதியாக இருந்தால் நாம் நமக்குரிய உரிமைகளை பெற முடியும். ”

“அந்த அளவிலே, இலவசக்கல்வி என்பது நமது நீண்டகால கோரிக்கை அதற்கு இப்போதிருந்தே அடித்தளம் அமைத்து போராட வேண்டிய சூழ்நிலை. அதற்குள்ளே, தனியார் பள்ளிகளெல்லாம் கொள்ளைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். அதை முறியடிக்க பெற்றோர்கள் ஒன்று கூடவேண்டும். கூடுதல் கட்டணம் கட்டமாட்டோமென்று உறுதியாகக்கூற வெண்டும். சென்ற ஆண்டு கூடுதல் கட்டண்ம் வசூலித்த பள்ளிகளுக்கெல்லாம் அதைக் கழித்துக் கொண்டு  இந்த ஆண்டு அறிவிப்பு வந்த பிறகு வசூலிக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கியிருக்கிறது மெட்ரிகுலேசன் ஆய்வாளர்கள் சங்கம்.”

“அதேபோல், இந்த பெற்றோர் சங்கத்தை வளர்க்க வேண்டுமென்று கடந்த ஒரு மாதகாலமாக ஒவ்வொரு பெற்றோர் வீட்டிற்கும் தெருத்தெருவாக சென்றும் நிலைமையை எடுத்துக்கூறி பயப்படவேண்டாம் அச்சப்படவேண்டாம் என்று கூறி உறுப்பினராக சேர்த்து வருகிறோம். ஏறக்குறைய ஆயிரம் பெற்றோர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் அந்தப்பணி தொடரும். போராட ஆரம்பித்தால்தான், உரிமைகளை கேட்க ஆரம்பித்தால்தான் பள்ளிகள் நிர்வாகம் கட்டுப்படும். எவ்வளவு கேட்டாலும் கட்டிவிடலாம், குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் உரிமைகளைப் பெற முடியாது. நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும். அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. நாம் பள்ளிகளிடம் போராடவில்லை. அரசு தரமான கல்வியைக் கொடு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கல்வியைக் கொடுக்க வேண்டுமென்று நாம் கேட்கின்றோம். தனியார் கட்டணக் கொள்ளைக்கெதிராக அரசிடம் தான் நாம் போராடுகிறோம்.”

“அரசு கூடுதல் கட்டணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். சரியான நடவடிக்கை எடுத்தால்தான் தனியார் பள்ளிகள் அடங்கி ஒழுங்காக அரசுக் கட்டணத்தை வாங்குவார்கள். நாங்கள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களோடு ஒன்றுபடுங்கள். போராடுங்கள். உங்கள் குழந்தைகளை பள்ளியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதற்கெல்லாம் கட்டாயக்கல்வி சட்டத்திலே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள், ஒன்று சேர்ந்து போராடுவோம். தனியார் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என்றுக்கேட்டுக்கொள்கிறேன். “

________________________________________________________

அடுத்து கருத்துரை வழங்க வந்தார் சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினரான கல்வியாளர் திரு..சீ.ராஜகோபாலன் அவர்கள்.

கோவையைச் சேர்ந்த சங்கீதா, தன் குழந்தைக்கு கல்வி கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கத்திலே தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,  இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிசம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் பேசலாம் என்றார். அஞ்சலி செலுத்தப்பட்டபின் தன் கருத்துரையை தொடங்கினார். அவர் பேச்சிலிருந்து,

”1964-ஆம் ஆண்டு இலவசக் கல்வி, அனைவருக்கும் கல்வி தொடங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. ஆனால்  1978-ல் கட்டணக் கல்வியைக் கொண்டுவந்தார்கள். அப்போழுது ஒரு கட்டுரை நான் எழுதியிருந்தேன். அதை அரைப்பக்கமாக  வெளியிட்டிருந்தார்கள். நான் அதிலே எடுத்துச் சொன்னேன்.  நீங்கள் கட்டணக் கல்வியை அனுமதித்துவிட்ட காரணத்தாலே  இலவசக் கல்வி மறைந்து விடும். அதுமட்டுமல்ல, தமிழ் தமிழ்நாட்டைவிட்டு ஓடிவிடும்.  தமிழை முதன்மையாக எடுத்துப்படிப்பது கூட நின்றுவிடும் என்று எழுதியிருந்தேன்.”

“இன்றைக்கு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட கழக பள்ளிகளிலோ அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ இலவசக்கல்வி கற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இன்று அவர்களின் பிள்ளைகளின் அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணக் கல்விக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் நீங்கள் அனைவரும். இப்பொழுது அரசு அதிகாரிகளெல்லாம் மிகக் கெட்டிக்காரர்கள். எப்போதுமே திசை திருப்புவதிலேயே மகாக் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.”

“அந்த வகையிலேதான் இப்பொழுது என்ன செய்தார்களென்றால் சமச்சீர் கல்வி, அடுத்தது கட்டண நிர்ணயம் என்று சொன்னார்கள். இந்த இரண்டுமே திசை திருப்பும் முயற்சியே என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இலவசக் கல்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால், இலவசக் கல்வி வேண்டாம்,அதற்கு பதிலாக சமச்சீர் கல்வி என்று நமது கோரிக்கையையே மாற்றி விட்டார்கள். இன்றைக்கு இலவசக் கல்வி பற்றி பேசவேயில்லை. இலவசக் கல்வி நமது உரிமை. இலவசக் கல்விக்கு பதில்  குறைந்த கட்டணம் கொடுத்தால் போதும் என்று நாம் அவல நிலைக்கு வந்திருக்கிறோமென்றால் இதை மாற்றிய அரசை என்னவென்று சொல்வது? நமது கோரிக்கையே அர்த்தமில்லாமல் எங்கேயோ திருக்கப்பட்டுவிட்டது.அரசு பள்ளிகளால் ஏன் தரமான கல்வியைத் தரமுடியவில்லை? ”

அதைத்தொடர்ந்து அவர் அரசு எவ்வாறு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை ஒழித்து விட்டு தனியார் பள்ளிகளை ஊக்குவித்தது  என்றும்,தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் பற்றியும் சமச்சீர்கல்வி பற்றியும்  விரிவாகப் பேசினார். இலவசக் கல்வியே நமது முடிவான கோரிக்கை, அதுவரை கட்டணக் கல்வி என்பது தற்காலிகமானது என்றும் அவர் பேச்சு தெளிவுப்படுத்தியது.  (அவரது கருத்துரையை தனி இடுகையாக வெளியிடுகிறோம்.)

_________________________________________________________________

டுத்து பேசிய  ராமனாதன், முன்னாள் எம்பி அவர்கள் பேச்சிலிருந்து,

“அந்த காலத்தில் எம்எல்ஏ  மகனும் சரி அவரின் வாகன ஓட்டியின் மகனும் சரி ஒரே பள்ளியில் ஒரே பாடத்தை தான் படித்தனர். அரசு, அரசு பள்ளிகளை மேம்படுத்த நிறைய முயற்ச்சிகள் எடுக்கும், நிறைய நிதி ஒதுக்கும்.அப்பொழுதெல்லாம் இவ்வளவு தனியார் பள்ளிகள் இல்லை. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.”

அவரைத்தொடர்ந்து பேசிய ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ “தனியார்மயக் கொள்ளைதான் – அரசாங்கத்தின் கொள்கை” என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சிலிருந்து,

ருணாநிதி ஆட்சியானாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியானாலும் சரி, எனக்கு இவ்ளோதான் கட்டணம். பில்லு போட்டு இவ்வளவு கட்டணம்,பில்லு போடாமல் இவ்ளோ கட்டணம,  கட்டவில்லையா, டிசியை வாங்கிட்டு போய்டு, மாணவர்களை நிற்க வைப்பது என்று பல அராஜகங்கள். விருத்தாசலம் மாவட்டத்தில் மட்டும் 30 தனியார் பள்ளிகள் உள்ளது. தினந்தோறும் இந்தப் பிரச்சினை இருந்துகிட்டே இருக்கு. தமிழக அரசு சட்டம் போட்டு நீதியரசரை நியமிச்சு கட்டணம் போட்டும் தனியார் பள்ளி முதலாளிகள் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். சுப்ரீம் கோர்ட்  அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தோத்துப்போய் விட்ட்டார்கள்.”

“அப்படியும் அவர்கள், அரசு சொல்வதைக் கேட்ட மாட்டோம் என்கிறார்களென்றால் அப்படியும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றால் என்னவென்று சொல்லுவது. தனியார் முதலாளிகளின் கொள்கைதான் அரசின் கொள்கைகள். கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமையாக, வாழும் உரிமையாக அரசியல் சாசன ஷரத்து இருபத்தியொன்று ஏழு  கூறுகிறது. 16 வயது வரை கல்வி பெறும் உரிமை உள்ளது.  கருத்துரிமை, பேச்சுரிமை, தொழிற்சங்க உரிமை என்று எப்படி சொல்லுவோமோ அது போல கல்வி உரிமையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடலாம்.  இந்த சட்டம் என்னுடைய உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் இந்த நீதிமன்றம் என்னுடைய உரிமையை நிலைநாட்டவில்லையென்றால் நாமேதான் களத்தில் இறங்கி போராடவேண்டும்.”

அதோடு, கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசு என்ன சொல்கிறது,  தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டுபாடியாகவில்லை என்று கட்டணம் நிர்ணயிக்கிறது. உலகில் 135 நாடுகளில் தாய்மொழிக்கல்விதான். அய்யா ராசகோபாலன் சொன்னது போல இன்றைய பல அறிஞர்கள் தாய்மொழியில் கல்வி கற்றவ்ர்கள்தான்.நமது தண்ணீரை ஒரு லிட்டருக்கு 12 காசு கொடுத்து வாங்கி விட்டு அதை  கொகோகோலா 18 ரூபாய்க்கு நம்மிடம் விற்கிறான். நம்முடைய இயற்கை வளம், இரும்புத்தாது தனியார் முதலாளிகளுக்கு 27 ரூபாய்க்கு விற்கிறான்.  நம்முடைய காடுகள், மலைகள், பாக்சைட் தாது அனைத்தையும் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டான். இந்த வளங்கள் ஒருநாள் வற்றிவிடும். எண்ணெய் வளத்தை எடுத்தால் தீர்ந்துவிடும், கோலார் தங்கவயலில் தங்கம் தீர்ந்துபோகிறது.”

“ஆனால், இந்த கல்வி எனும் சுரங்கம் வற்றாது. 120 கோடி இந்திய மக்கள் தொகையில் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். எல்கேஜி போய் ப்ரிகேஜு அதற்கு 20000 ரூபாய். பிரிகேஜியில் என்ன செய்யும்? குழந்தை சாப்பிடும், தூங்கும், வீட்டுக்கு வந்துவிடும்?அதற்கு எதுக்கு இருபதாயிரம் ரூபாய்? மருத்துவக்கல்லூரிக்கு ஒரு மாணவனுக்கு எட்டாயிரம் பீஸ். எல்கேஜிக்கு 20000 ரூபாய்? இலவச டீவி தருகிறேன், வாசிங் மெஷின் தருகிறேன், லேப்டாப் தருகிறேன் என்று சொல்கிறவர்கள் ஏன் இலவசக் கல்வியை தருவதில்லை? எதிர்க்கட்சிகளும் ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்? ஒரு எல்கேஜி சீட்ட்டுக்கு அநியாயக் கொள்ளையாக இருபதாயிரம் ரூபாய் வாங்குகிறார்களே? பெற்றோர்களும் எப்படியாவது படித்து தம்பிள்ளைகள் மேலே வந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.”

ஒரு கடையில் கிரைண்டர் வாங்குகிறோம் மிக்சி வாங்குகிறோம். ஒரு கடையில் மூவாயிரம் சொல்கிறான். ஒரு கடையில் இரண்டாயிரத்து எண்ணூறு என்கிறான். உடனே அவனிடம் இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் கிரைண்டரை மூவாயிரம் என்கிறாயே என்று சண்டை போடுகிறோம். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவோம் என்கிறோம். நான் பெரிய அதிகாரி என்கிறோம். ஆனால், இங்கிருக்கும் நந்தினி ஸ்கூலில் கோவிந்தராஜன் கமிட்டியில் போட்ட கட்டணத்தை தாண்டி அதிகமாக கேட்கிறார்கள்,  யூனிபார்முக்குத் தனியாக வாங்குகிறார்களே, எத்தனைப் பெற்றோர்கள் கட்டணத்துக்கு கூடுதலாக வாங்குகிறார்கள் என்று கேட்கிறார்கள்? ஏன் கேட்காமலிருக்கிறார்கள்?”

“நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்றும் ஒளிவு மறைவு கிடையாது. பயம், தயக்கம், அறியாமை. அதைப் போக்குவதற்கு பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்., பல சுவரொட்டிகள், பல முழக்கங்கள். நமக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி உரிமை இருக்கிறது. அனைத்து மக்களும் வீதியில் இறங்கி கேட்க வேண்டும். கட்டணத்தை குறைக்குமாறு 15  ஊரில் போராட்டம் செய்தால் அடுத்த ஊரில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து கேட்பார்கள்.  இவையெல்லாம் பின்னிப் பிணைந்தது. ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பள்ளியை முற்றுகையிட்டு கூடுதல் கட்டணம் வாங்குவதை தடுத்தி நிறுத்தினால் இதைப்பார்த்து மற்ற பள்ளிகளிலும் மக்கள் போராடுவார்கள். நாங்கள் போராடி வெற்று பெற்று ஆய்வாளர்  பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணத்தை நோட்டீஸ் போர்ட்டில் போட உத்தரவிட்டார்.”

“கூடுதலாக கட்டாவிட்டால் உங்கள் பிள்ளைகளை பெயிலாக்க முடியாது. தேர்வை நிறுத்தி வைக்க முடியாது. கோயமுத்தூரில் 15ஆயிரம் கட்டணத்தை கட்ட முடியாமல் தீக்குளித்து  தற்கொலை செய்துக்கொண்டதாக ஒரு தாய் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோயமுத்தூரிலுள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யவும், தற்கொலைக்கு  தூண்டியதாக அந்த பள்ளி முதலாளி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

மேலும் வழக்குரைஞர் ராஜூ பேசும் போது வீடுவீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்து பெற்றோர் சங்கத்தில் சேர்த்ததை பற்றியும் பேசினார். சிலரிடம்  இரண்டரை மணிநேரம் கூட பேசி ஆரம்பத்தில் 15 உறுப்பினர்களோடு ஆரம்பித்த சங்கம் இன்று ஆயிரம் பெற்றோர்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

_________________________________________________

அவரைத்தொடர்ந்து வழக்குரைஞர் மீனாட்சி பேசினார். விருத்தாசலம் பகுதியில் இன்று எழுந்த தீப்பொறி நாடு முழுக்க பரவட்டும் என்ற வாழ்த்தோடு தனது உரையைத் தொடங்கினார்.

நமது அரசியலமைப்புப் பிரிவுகளின் படி கல்வி எப்படி நமது வாழ்வுரிமைகளின் கீழ் வருகிறது என்பதை தெளிவாக விளக்கினார். அவரது உரையிலிருந்து,

“ தமிழ்நாட்டின் அனைத்துப் பெற்றோரின் மனசிலும்  ஆழமாக பதிந்திருந்திருக்கும் பெயர் எதுவென்றால் ரவிராஜபாண்டியன். ஏனெனில், அவர்தான் நமது குழந்தைகளில் படிப்புக்கு பள்ளிக்கட்டணத்தை நியமிக்கப் போகிறவர். நமது ஆதங்கத்துக்கும், வெற்றிக்கும் ஒரே காரணமாக இருக்கப்போகிறவர் இப்போது அவர்தான். அனைவருக்கும் இலவசக் கல்வி சாத்தியமா? நமது ஊரில் எங்கும் சாத்தியமாக இல்லை. இந்தியாவைத் தவிர மக்கள் தொகை அதிகமாக கொண்டநாடுகளில் கூட கல்வி இலவசம். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட கல்வி இலவச உரிமை.”

1947- இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுப்பினர். 1947-ல் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வருகிறது. அந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் ஷரத்து 26 என்ன சொல்கிறதென்றால், இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது உரிமையாகும். அதுவும் குறிப்பாக குறைந்த பட்சம் 6 முதல் 14 வயது அடிப்படை கல்வி உரிமையாக்கபட வேண்டும். அது கட்டாயமாகக் கொடுக்கப்படவேண்டும், அன்று  இந்தியா இட்ட கையெழுத்தில் நம் அனைவருக்கும் கல்வி என்பது இலவச உரிமையாக்கப்பட்டுள்ளது.”

“நமது அரசியலமைப்புச் சட்டம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பிரிவுகள், பகுதி 3 மற்றும் பகுதி 4.  பகுதி 3 நமது அடிப்படை உரிமைகளை தருகிறது. அடிப்படை உரிமைகள். பகுதி நான்கில் வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளது. இன்று நமக்கெல்லாம் கல்வி இலவச உரிமையாக இருக்கிறதென்றால் அதற்கு ஒரு பெண் காரணம். அவருடைய பெயர் மோனிக் ஜெயின்.  அவர் கர்நாடகத்தின் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேருகிறார். அவரை 60000 ருபாய் கட்டச்சொல்கிறார்கள். அரசாங்கத்திலோ ஏழாயிரம் ரூபாய். ஆனால், மேனேஜ்மெண்ட்டில் 60000 ரூபாய்.  ”கல்வி எனது அடிப்படை உரிமை, ஷரத்து 21 எனக்கு அந்த வாக்குறுதியைத் தருகிறது.” அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். அதில் நான் சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய உரிமை அடங்கியிருக்கிறது.  அந்த ஷரத்துக்குள் எனது கல்வியுரிமை அடங்கியிருக்கிறது என்று வழக்குத் தொடுத்தார்.”

“வழக்கு அவருக்குச் சாதகமாக முடிகிறது. ஆனால், அதற்குள் அவர் படிக்கவேண்டிய காலம் முடிகிறது. படிக்கமுடியவில்லை. ஆனாலும் கூட ஒரு பெண் எழுப்பிய ஒரு குரல் நமக்கு அடிப்படை உரிமையை வழங்கியிருக்கிறது என்று சொன்னால் நாம் எல்லோரும் எழுப்பும் இந்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.”

“1973- இல் தனியார் கல்வி முதலாளிகள் ஐந்து பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். ஷரத்து 19 1 டி என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அது எனக்கு வியாபாரம் செய்யும் உரிமையை தருகிறது, அதனால் கல்விக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அதைத் தடுக்கலாமா என்று கேட்கிறார்கள். அதில் தனியார் கல்வி முதலாளிகளின் கோரிக்கை என்னவென்றால் “ நீங்கள் அனைவருக்கும் இலவசக் கல்வியை தரச் சொல்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதைப் பொறுத்துத் தீர்ப்பு வழங்கவேண்டும்” என்பதுதான். அப்போது ஷரத்து 45ஐ உச்சநீதிமன்றம் கவனிக்கிறது. இந்த ஷரத்துப்படி 6 வயதிலிருந்து 16 வயது வரை கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.  ஆக, முழுக்க முழுக்க கல்வி என்பது  நம்முடைய உரிமையில் கைவைக்க நீதிமன்றத்துக்கும் கிடையாது.”

” உலக வங்கியால்  நாடாளுமன்றங்களும்  கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனுடைய தாக்கம் அரசுத்துறைகளிலும் நீதிமன்றங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, தனியார் கல்வி நிறுவனங்களும் காசு பார்க்கட்டும் என்று சொல்கிறது. அதுதான் தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் இலவசமாக கல்வியைக் கொடுத்தால் போதும், மீதி 75 சதவீதத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நான்கு வகையான பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், நான்கு வகையான மார்க் என்று இருக்கிறது. இவையனைத்தையும் ஒன்றாக்கி பரிசீலித்து ஒரு பாடத்திட்டமாக்கி இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அதை தடுத்தி நிறுத்தியிருப்பதை நாம் எதிர்த்து போராட வேண்டும்.தடுத்து நிறுத்த வேண்டும். ”.

_____________________________________________________

டுத்துப் பேசியவர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் கணேசன் அவர்கள். பெற்றோர்கள் ஒன்று திரண்டு போரடவேண்டிய அவசியத்தை மிகவும் அருமையாக உணர்த்தினார். அவர் பேசியதிலிருந்து,

“இன்று அனைத்து பெற்றோர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பது என்னவென்றால் பள்ளியின் கட்டணம்தான்.ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் பள்ளிகளைத் தேடிசெல்ல வேண்டியிருக்கும். இப்போது, புற்றீசல் போல பல்கிப் பெருகிக் கிடக்கின்றன்.  இந்த விருத்தாசலத்தின் சந்து பொந்துகளில் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வாடகைக்குக் கூட இடங்களை எடுத்து பள்ளிகளை நடத்துக்கிறார்கள். பள்ளிகளுக்கென்று வரையறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை வசதிகளைக்க்கூட கணக்கிலெடுக்காமல் இன்று பள்ளிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன.”

“நான் கஞ்சி குடித்தாவது பத்து பாத்திரம் நடத்தியாவது என் பிள்ளையை படிக்க வைப்பேன். என்னைப்போல் என் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துதான் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றன்ர். இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் என்ன நடந்ததென்றால், இந்த நியாயமான கோரிக்கை நம் உரிமையாகிய இலவசக் கல்வியை தனியார் பள்ளிகளின் சட்டையைப் பிடித்து ”என்பிள்ளைக்கு கல்வி கொடுறா  நாயே ” என்றுஉரிமையோடு கேட்பதற்கு பதிலாக அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.”

” ஒரு விஷயத்தைச் சொன்னால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு குழந்தையை எல்கேஜியில் சேர்க்க பொதுவாக எவ்வளவு செலவாகும்? கிராமப்புறங்களாக இருந்தால் மூன்றாயிரம். ஓரளவு வசதியாக இருந்தால் ஆறாயிரம். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு லட்சம்  செலவு ஆகிறது. வேலம்மாள் இண்டர்நேசனல் ஸ்கூல், சென்னை பப்ளிக் ஸ்கூல், எஸ்பிஓஏ இன்னும் நிறைய இருக்கிறது அங்கெல்லாம் இந்த நிலைமைதான். இந்த நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் எல்லாம் வறண்ட மாவட்டங்கள். ஆனால், அங்கே போனால் ஒரே கார்களாகத்தான் நின்றுகொண்டிருக்கும், ஏனெனில் அங்கிருக்கும் பள்ளிகளில்தான் எல்லா ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளெல்லாம் படிக்கிறார்கள்.”

“அங்கெல்லாம் பிள்ளைகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள். படிக்க வைத்து அனுப்புவதில்லை. அங்கு எதைக்கேட்டாலும் விலையேறிப் போய்த்தான் கிடக்கிறது.  இன்னொரு செய்தி, ஒரு பள்ளிக்கூடத்தில் 5000 பிள்ளைகள். அவர்கள் அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள். ”என் பிள்ளை இந்த பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறது” என்று பெற்றோர் எழுதுவது போல. ”கோவிந்தராசன் கமிட்டி ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது, இந்த பள்ளிக்கூடத்தை ஐந்தாயிரம் கொடுத்து நடத்தமுடியாது. என் பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்காது. அதனால் தயவு செய்து கோவிந்தராஜன் கமிட்டி என் பிள்ளைக்கு பீசை கொஞ்சம் உயர்த்திக்கொடுக்கவும் “ என்று பிள்ளைகள் மூலம் ஃபார்ம் கொடுத்து அனுப்புகிறார்கள்.”

“எவ்வளவு நூதனமாகச் சிந்திக்கிறார்கள், பாருங்கள்,  நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா இப்படி? இந்த அயோக்கியப் பயலை நடுத்தெருவில் தூக்கிபோட்டு மிதிக்க நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?  எதுவும் முடியாமல் பெற்றோர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனைக் கமிட்டிப் போட்டாலும் எதுவும் தீரவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? தனியார் கல்வியை அனுமதித்தவர்கள்தானே! இதனால் எத்தனைப்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? அனைவரும் ஒன்றாகத் திரண்டு போராட வேண்டும். ”.

___________________________________________________

தற்குப் பின்னர். மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1: இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை குறைத்துக் கொள்ளவும், மேலும் கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2: அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு எல்கெஜி, யூகேஜி முதல் இலவசமாக வழங்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி  அடிப்படை உரிமையான 6 முதல் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை மட்டுமே உத்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட நீதியரசர் ரவிராஜப்பாண்டியன் கமிட்டியை ரத்து செய்ய இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழ்நாடு அரசு இவ்வாண்டு சேர்க்கைக்காக  கோவை பிரேஸ் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து உயிரழந்த சங்கீதா மரணத்துக்கு காரணமான பள்ளி முதலாளியை கைது செய்து அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டுமென ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. மேலும் சங்கீதாவின் குடும்பத்துக்கு  உரிய இழப்பீடு வழங்கவும்,  யூகேஜி படிக்கும் அவரது மகனின் கல்வி கட்டணம் முழுவதையும்  தமிழக அரசே ஏற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தின் சமச்சீர் கல்வி கட்டணத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக பாடத்திட்டத்தையே நிறுத்தி வைத்து முந்தைய பாடத்திட்டமே செல்லுமென சொல்லியிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்தவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: சமூக சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மனிதாபிமானமும் உடைய தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கவும், ஆங்கில வழிக் கல்வியையும் தனியார்மய பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டுமென பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாகக்  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8: அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை  அரசு பொறுப்பில் இலவசமாக வழங்கத் தடையாக உள்ள தனியார் மயத்தை எதிர்த்து போராட பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பெற்றோர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை

நாடுகிறார்களென்றும், தனியார் பள்ளிகளின் அராஜகத்தைப்பற்றியும்,  பெற்றோர் சங்கத்தில் சேர்ந்தபின்னர் மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகையின் பலன்களை பற்றியும் தகவல்கள் தெரிவித்தனர். இறுதியில் பெற்றோர்கள் அனைவரும் தாம் ஒன்றாக இணைந்து போராடுவதில்தான் தமது பிள்ளைகளின்  கல்விக்கான தீர்வு இருக்கிறது என்பதையும் உணர்ந்துக்கொண்டதாக அந்த கலந்துரையாடல் இருந்தது.  இறுதியில் பெற்றோர் சங்கத்தின் பொருளாளர் க.வீரகாந்தி நன்றியுரை வழங்க கூட்டம் முடிவடைந்தது. தனியார் மய பள்ளிகளுக்கெதிராக விருத்தாசலத்தில் எழுந்த இந்த தீப்பொறி நாடெங்கும் பரவட்டும்.

_________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், விருத்தாசலத்திலிருந்து..

____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்