privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

-

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
அது போன மாசம்.........

நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து சிறுநாக்கையும் அதைச் சுற்றி மேலண்ணத்தில் இருக்கும் நெகிழ்வான பகுதிகளையும் அழுத்துமாறு வைத்துக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விடுவதற்கு ஹட யோகத்தில் கேச்சரி முத்திரை என்று பெயர். இப்படிச் செய்வதால், ப்ராணன் இடது மற்றும் பிங்கள நாடியிலிருந்து அகன்று சுஷூம்னா நாடியில் நிலை கொள்ளுமாம். இதனால் ஒரு மனிதனுக்கு பசியே உண்டாகாமல் தடுத்து விட முடியுமாம். பதறாதீர்கள் நண்பர்களே. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை – யோக சாஸ்திரம் தான் சொல்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் ஒரு நாட்டில் இது போன்ற  ஆன்மீக சரடுகளையெல்லாம் பெரும்பாலானோர் நம்பப் போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால்,

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
உண்ணாவிரதத்தை முடித்து வைத்த ஸ்ரீஸ்ரீ

இதையெல்லாம் நம்மை நம்பச் சொன்னதோடு அதையே மூலதனமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ள ஒருவருவருக்கு மேற்படி யோக டெக்னிக் ஒர்க்அவுட் ஆகாமல் காலைவாரி விட்ட சோகக் கதையை இனி பார்ப்போம்.

ஜூன் நான்காம் தேதி பாபா ராம்தேவ் கருப்புப் பணத்தையும் ஊழலையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது எப்படியும் இந்தாளுக்கு இருக்கும் யோக பலத்தின் அடிப்படையில் ஒரு பத்து மாதத்திற்காவது இந்த டிராமாவை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார். இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?

பல ஆண்டுகளாக ராம்தேவ் செய்து வந்த யோகாப்பியாசங்கள் வழங்கிய உடல் உறுதியைக் காட்டிலும் அந்தச் சாதாரணப் பெண்ணின் மனவுறுதி வலிமையானது என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆக, போராட்ட உறுதியையும் கொள்கைப் பிடிப்பையும் உறுதி செய்வது வெறும் உடல் வன்மையல்ல – அது ஒருவன் ஏற்றுக் கொண்ட நேர்மையான அரசியலும் அதற்கு விசுவாசமாக  நிற்கும் மனத்தின்மையும் தான் என்பது இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த யோகப் போராளி தினமும் பாலும், தேனும் அடித்து விட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருந்தும் ஒரு வாரத்திற்கு மேல் அண்ணாத்தேவின் உதார் விரதம் தாக்குப்பிடிக்கவில்லை.

போகட்டும். அண்ணா ஹசாரேவுக்கு மதிப்புக் கொடுத்த காங்கிரசும் அவரை ஒரு நாயகன் போல ஏற்றிப் போற்றிய முதலாளித்துவ ஊடகங்களும் பாபா ராம்தேவைக் கைவிட்டதன் தவிர்க்கவியலாத விளைவு தான் இப்போது அவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு நாடெங்கும் குறைந்த பட்சமாகத் திரண்ட நடுத்தரவர்க்க மக்கள் திரளின் பின்னே இருந்தது, வலுவானதொரு என்.ஜி.ஓ வலைப்பின்னல் மற்றும் ஊடகங்கள். என்.ஜி.ஓவின் ஆன்மாவே அதன் அரசியலற்ற தன்மையும் மக்களை அரசியல் ஓட்டாண்டிகளாக்கிக் காயடிக்கும் துரோகத்தனமான செயல்திட்டமும் தான். இதனால் கீழ்மட்ட அளவில் ஊடுறுவ முடிந்த காவி கும்பலால் மேல்மட்ட அளவில் ஊடுறுவி ஓரளவுக்கு மேல் ஆதாயம் அடைய முடியவில்லை. மோடியை ஆதரித்த அண்ணா ஹசாரே கூட ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய விமர்சனம் வந்த போது சுதாரித்துக் கொண்டார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க் கொண்டிருக்கும் ஆங்கில ஊடகங்களுக்கும் அண்ணாவை மெனக்கெட்டு ஆதரிப்பதில் ஆதாயம் இருந்தது. வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் விளைவாய் அவர்களிடையே எழுந்திருந்த இயல்பான ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் ஒரு வடிகாலாய் அண்ணாவை முன்னிறுத்தி டி.ஆர்.பியை உயர்த்தி நன்றாகக் கல்லா கட்டிக் கொண்டார்கள்.

ஆனால், பாபா ராம்தேவின் கதையே வேறு. இவரைப் பின்னின்று இயக்கியது புகழ் போதையும் காவி கும்பலும் தான். இவரை ஆதரித்தால் தமது சந்தையான அரசியலற்ற மொக்கைக் கூட்டத்தில் பிளவு உண்டாகிவிடும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் அறிந்து இருந்ததாலேயே தெளிவாகக் கைகழுவி விட்டனர். ராம்தேவ் தில்லியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டைம்ஸ் நௌவின் ‘நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சியைத் துவக்கிய அம்பி அர்னாப் கோஸ்வாமி, அந்நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார் – “அண்ணா ஹசாரேவை நாம் ஆதரித்தோம். ஏனெனில் அவர் அரசியல் சார்பற்றவராயிருந்தார். அவருக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கிறது”

அண்ணா ஹசாரே அரசியலற்ற மொக்கை என்பதால் தான் அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. அவரது அரசியல் ஓட்டாண்டித்தனம் தான் ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே ஊழல் கறை படிந்து ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் ஊரே காறித் துப்பிய டைம்ஸ் குழுமத்தோடும் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ பர்காதத்தின் என்.டி.டிவியோடும்  ஒட்டி உறவாட வைத்தது. இதோடு சேர்த்து, ஹரித்வாரில் இருந்து ராம்தேவை நேரடி ஒளிபரப்பு செய்வதெல்லாம் செலவு பிடிக்கும் காரியம். போட்ட துட்டுக்கும் வரும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கும் எப்படி கட்டுபடியாகும்? எனவே அண்ணாவை ஏற்றிப் போற்றிய ஊடகங்கள் ராம்தேவை லூசில் விட்டுவிட்டார்கள்.

இந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொண்ட காங்கிரசு, முடிந்தவரை அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ராம்தேவை தில்லியிலிருந்து விரட்டியடித்த உடனேயே தனது ரத கஜ துரகாதிபதிகளை களமிறக்கிய காங்கிரசு, தொடர்ச்சியாக ராம்தேவை ஊடகங்களில் தாக்கி வந்தது. இதற்கிடையே ராம்தேவின் கும்பலை வேடிக்கை பார்க்கச் சென்ற பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் போட்ட தேசபக்தி குத்தாட்டத்தையும் காங்கிரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் மெழுகுவர்த்திப் போராளிகள் ராம் லீலா மைதானத்தில் காங்கிரசு காட்டிய பூச்சாண்டிகளுக்குப் பயந்து மொத்தமாக பதுங்கிக் கொண்டனர். பாபா ராம்தேவ் வேறு சூழ்நிலை புரியாமல் போலீசை எதிர்த்து சண்டை போட 11,000 பேர் கொண்ட ஒரு ஆயுதப் படையை அமைக்கப் போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 பேர் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சும்மா ‘பே’ என்றாலே காலோடு மூத்திரம் போகும் தைரியசாலிகளான மெழுவர்த்தி வீரர்கள் முதல் வேலையாக வாங்கிய மெழுகுவர்த்தியை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். பின்னே, போராட்டம் என்றால் பேஷன் பெரேடு  என்று நினைத்தவர்களிடம் போய் சண்டை, ஆயுதம் என்று பேசினால் வேறென்ன நடக்கும்?

ஒருவழியாக ராம்தேவைச் சுற்றி எல்லா கதவுகளும் அடைபட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருக்குக் கைகொடுக்க டபுள் ஸ்ரீ முன்வந்தார். நேற்று ராம்தேவைச் சந்தித்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ராம்தேவ், தனது சத்தியாகிரகம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த பத்துநாட்களாக அவர் நடத்திய டிராமாவை காங்கிரசு மதித்து எந்த உத்திரவாதத்தையும் அளிக்காத நிலையிலும் இனிமேலும் மேற்படி நாடகத்தைத் தொடர்ந்தால் தான் இத்தனை ஆண்டுகளாக மக்களின் தலையில் மிளகாய் அரைத்து சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு அனுபவிக்காமல் போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அஞ்சியே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

ராம்தேவ் தில்லி வந்தபோது அவரை வரவேற்க நான்கு அமைச்சர்களையும் பின்னர் விரட்டியடிக்க நானூறு போலீசையும் ஏவிவிட்ட காங்கிரசு கும்பல் அவரை இப்போது  எதிர்ப்பதற்கும் ஜனநாயக சக்திகள் ராம்தேவை எதிர்ப்பதற்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இவர்கள் ஊழலின் ஊற்று மூலத்தை ஆதரித்துக் கொண்டே ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் துரோகத்தனத்தையும், இந்த கும்பலின் பின்னேயுள்ள ஜனநாயகமற்ற தன்மையையும், அதன் நீட்சியாய் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின் புகலிடமாக இந்தப் போராட்டங்கள் மாறுவதையும் அடிப்படையாய்க் கொண்டே இந்தப் ‘போராட்டங்களை’ விமரிசிக்கிறோம்.

இனி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ள  மக்களுக்கு, ஊழலின் அடிப்படையாய் இருக்கும் அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதற்கு இப்போது நடந்து வரும் கூத்துகளே துலக்கமான நிரூபணமாய் இருக்கிறது. இனிமேலும் இத்தகைய கைப்புள்ளகைகளின் பின்னே திரளும் காரியவாத அப்பாவிகள் திருந்தினால் அதுவே ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குச் செய்யப்படும் பேருதவியாக இருக்கும்!

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: