மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.
சட்டப்படிப்பு படித்துள்ள 24 வயதேயான சதீஷ்குமார், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இரவில் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காலை திருமங்கலம் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தார், சங்கரசுப்பு. அதன் பிறகு அண்ணாநகர் டி.சி.யைச் சந்தித்தும், கமிஷனர் திரிபாதியைச் சந்தித்தும் முறையிட்டுள்ளார். இதற்கிடையே 9ஆம் தேதியன்று சதீஷ்குமாரின் செல்போனை எடுத்துப் பேசிய ஒரு போலீசுக்காரர், ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிள் அருகே இந்த செல்போன் கிடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஜூன் 10ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத் தில் ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்துள்ளார். திருமுல்லைவாயில் போலீசு நிலையத்தின் போலீசு ஆய்வாளர்களான கண்ணன், ரியாசுதீன் ஆகியோர் தனது மகனைக் கொலை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் உள்ளதாகவும், ரியாசுதீனின் வீடு ஐ.சி.எப். ஏரிக்கரை பகுதியில்தான் உள்ளது என்பதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றும் சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகு நீதிமன்றம் சிறப்புக்குழு அமைத்துத் தேடுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. அந்த ஏரியில் 13ஆம் தேதிவரை தேடிப் பார்த்து ஏதும் கிடைக்கவில்லை என்று இக்குழு தெரிவித்தது. 13ஆம் தேதியன்று “மக்கள் டிவி’’யின் செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது, அந்த ஏரியில் வெங்காயப் பூண்டு செடிகளுக்கு மத்தியில் ஒரு சடலம் மிதப்பதைப் பார்த்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்க, அதன் பின்னரே அழுகிய நிலையில் சதீஷ் குமாரின் சடலம் மீட்கப்பட்டது. சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்திருந்ததைப் போலவே, ஐ.சி.எப். ஏரிக்கரையில் சதீஷ்குமாரின் சடலம் கிடைத்திருப்பதிலிருந்து கூலிப்படையை ஏவி இக்கொலையை போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் செய்திருப்பார்கள் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைத்துப் பணம் பறிப்பதில் பேர்போனவர்கள். கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான சுதர்சனத்தைக் கொலை செய்த வட நாட்டைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற கொள்ளைக்காரனைப் பிடிக்க உ.பி. மாநிலத்துக்குப் போன இவ்விரு போலீசுக்காரர்களும் அவனைப் பிடிக்க முடியாமல், அவனுடைய அண்ணன் மகன்கள் இருவரைப் பிடித்துச் சித்திரவதை செய்து, பின்னர் போலி மோதலில் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளாவர்.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைத் திருட்டுக் குற்றம் சாட்டிச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இவர்கள் சித்திரவதை செய்து பணம் பறித்து வந்தனர். இந்நிலையில் அருண்குமாரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துமாறு ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்ததோடு, இவ்விரு காக்கிச்சட்டை கயவாளிகளின் அயோக்கியத்தனத்தைத் திரைகிழித்தார். இவ்விருவருக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, இவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இவ்விரு போலீசுக்காரர்களும் “உனக்குக் குடும்பம் இருப்பதை மறந்துவிடாதே” என்று சங்கரசுப்புவை மிரட்டியதோடு, வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர். எனவே, இவர்கள்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்று சங்கரசுப்பு மட்டுமின்றி, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
சதீஷ்குமார் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பிறகுதான், சில நாட்கள் கழித்து அவரது உடல் ஏரியில் வீசப்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை நடந்த போது 500க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு போலீசுத் துறை ரவுடிகளைக் கைது செய் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, கொலைகாரப் போலீசுக்கு எதிராக முழக்கமிட்டபடியே சதீஷ்குமாரின் இறுதி ஊர்வலத்தை நடத்தினர். இப்படுகொலைக்கு எதிராக வழக்குரைஞர்கள் உடனடியாக ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்த பிறகே, இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடனேயே சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதற்பணி என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயா ஆட்சி என்றால் வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு கொட்டமடிக்கும் என்பதை முந்தைய அவரது ஆட்சிகள் மட்டுமின்றி, தற்போது சதீஷ்குமாரின் படுகொலையும் அண்மைக்காலமாக பெருகிவரும் கொட்டடிக் கொலைகளும் நிரூபித்துக் காட்டுகின்றன. பாசிச ஜெயா ஆட்சியில் வழக்குரைஞர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. கொலைகார போலீசுக்காரர்களையும், இப்பயங்கரவாதச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ள போலீசு அதிகாரிகளையும் கைது செய்து, பகிரங்க விசாரணை நடத்தித் தூக்கிலிடவும், போலீசு பயங்கரவாதத்தை வீழ்த்தவும் உழைக்கும் மக்கள் போராடுவதே இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.
_______________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2011
_______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
இந்தப்பாதகத்தை செய்த பொறுக்கிகளை தண்டிக்க அனைவரும் கைகோர்க்கவ்ண்டும்.
அரபிய சட்டம் தான் சரி…
திருடுனா கை வெட்டு
கொலை பன்னுனா தல வெட்டு
கற்பளுசா குஞ்ஜு வெட்டு
[…] https://www.vinavu.com/2011/07/04/policebrutality/ […]
இது காக்கிச் சட்டைகளின் பயங்கரவாதம். போராளிகளின் பயங்கரவாதம் பற்றி வாய்கிழியப் பேசும் நடுநிலையாளர்கள் எங்கே போனார்கள்? காக்கிச் சட்டைக் கொலைகார்களைத் தண்டிக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும்.
என்னால் இதை மரக்க முடியவில்லை , எந்த பிரஷனையும் தொடர்பு இல்லாத மகனை கொல்வது மிக மிக காட்டு மிரன்டிதனம் அவர்கலை தன்டிக்க வென்டும் அதர்க்கு நாம் பொராட வென்டும்.செல்வராஜ்.ப
//வழக்குரைஞர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை//
இந்த கொடூரம் சம்பந்தமாக வினவின் கட்டுரை யை முன்னரே எதிர்பார்த்தேன் ஏன் இவ்வளவு தாமதம்? மனித உரிமை போராளி, மூத்த வழக்கறிஞர் திரு சங்கரசுப்பு வை நீதி மன்றத்தில் வெல்ல முடியாத கோழைகள் அவரது மகனை பழி தீர்த்து இருக்கிறார்கள். ஏழைகளுக்கான நீதி போராட்டத்தில் தன் மகனையே இழந்த வழக்கறிஞர் சங்கர சுப்புவின் பெயர் மக்களுக்கான போராட்ட வரலாற்றில் கனமாய் பதிந்திருக்கிறது. சட்ட பட்டதாரி சதீஸ் குமாருக்கு வீர வணக்கங்களும் கண்ணீரும்…
இதோ நேற்று ஒரு சிறுவனை ராணுவத்தினர் அநியாயமாக சுட்டுக்கொன்று உள்ளனர். இதற்குள் அவனது உயிருக்கு இழப்பீட்டு விலை பேசப்பட்டிருக்கும். அல்லது அந்த குடும்பம் மிரட்டப்பட்டிருக்கும். சுட்டவனோ சுடுவதற்கு தெகிரியமும் அனுமதியும் அளித்த ராணுவமோ எந்தக்கேள்வியும் கேட்கப்படாதிருப்பர். மீண்டும் இதே கொலை பாதகத்தை திரும்பவும் எந்த குற்றவுணர்வுமின்றி திரும்பவும் செய்வர்.
Kumudam Reporter (10-07-2011)
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வக்கீல் சதீஷ்குமார் படுகொலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது என்ற செய்தி காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 7-ம் தேதி அண்ணாநகர், திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற சங்கரசுப்புவின் மகன் சதீஷ், ஐந்து நாட்கள் கழித்து ஐ.சி.எஃப். ஏரிக்கரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தப் படுகொலைக்கு காவல் ஆய்வாளர்கள் ரியாசுதீன், கண்ணன் ஆகியோரே காரணம் என சங்கரசுப்பு குற்றம் சாட் டினார். சதீஷ் மரணத்தை காதல், தற்கொலை என்றெல்லாம் போலீஸார் திருப்பிவிட, கொந்தளித்த வக்கீல்கள் நீதிமன்றத்தை அணுகினர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை சதீஷ் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தது. வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ‘‘குற்றம் சுமத்தப்படும் காவல் ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரிக்கவே இல்லை. என் மகன் படுகொலையில் மேலும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்கிறது’’ என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் சங்கரசுப்பு. காவல் ஆய்வாளர்கள் மீது நீண்ட விரல், இப்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை செல்வதால், அதிர்ந்து போயிருக்கிறது காவல்துறை வட்டாரம்.
வழக்கின் போக்கு பற்றி பேசிய சி.பி.ஐ. வழக்கறிஞர் சந்திரசேகர், ‘‘இதுவரை 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் டி.ஐ.ஜி. ஒருவர் தலைமையில் புலன் விசாரணை தீவிரமாக நடக்கிறது’’ எனச் சொன்னார். மூன்று வார காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்.
சங்கரசுப்பு அடையாளம் காட்டும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் யார் என வழக்கறிஞர்களிடம் விசாரித்தோம். “சங்கரசுப்பு தொடர்ச்சியாக என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு களில் ஆஜராகி வருகிறார். கடந்த ஆட்சியில் மாவட்டங்களில் நடந்த என்கவுண்டர் வழக்குகளில் தீவிர ஆர்வம் காட்டினார். இது அந்த முன்னாள் உளவுத்துறை ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. 19.2.2009 அன்று உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீஸ், வக்கீல் மோதலில் சங்கரசுப்புவும் குறி வைக்கப்பட்டிருந்தார். போலீஸாருக்கு எதிராகச் செயல்படும் வக்கீல்களை ஒடுக்க அப்போதே திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக தற்கொலைப் படைகளை உருவாக்குவோம் என்றெல்லாம் போலீஸ் வட்டாரத்தில் இருந்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
இதன் பின்னணியில் இருந்தவரும் அந்த உளவுத்துறை அதிகாரிதான். இவருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற த்தில் தெரிவித்திருக்கிறோம்.
குற்றம் சாட்டப்படும் ஐ.பி.எஸ். அதிகாரியான உளவுத்துறை முன்னாள் அதிகாரி இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி சங்கரசுப்புவுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பிரபாகரனிடம் கேட்டபோது, ‘யார் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது’ என்றார்.
சதீஷ்குமார் மரணம் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் டி.பி.செந்தில்குமார், ‘இந்தப் படுகொலையில் போலீஸாருக்குத் தொடர்பிரு ப்பதற்கான ஏராளமான தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக, சதீஷ்குமார் உடல் கிடைத்தவுடன் திருமங்கலம் காவல்நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் சுரேஷ்பாபு, அண்ணாநகரில் உள்ள மருத்துவர் விஜயகுமாரிடம், ‘தற்கொலைக்கான அறிகுறிகள் இருப்பதாக’ சான்றிதழ் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
13-ம் தேதி சதீஷ் உடல் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டபோது, தனியார் தொலைக்காட்சிகளும், போலீஸ் தரப்பு வீடியோகிராபரும், எங்கள் தரப்பு வீடியோகிராபரும் முழு வதுமாகப் பதிவு செய்தனர். அப்போது சதீஷின் உடலில் இருந்து மூன்று பத்து ரூபாய் நோட்டுகளும், பைக் சாவியும் எடுக்கப்பட்டது. 16-ம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன் றத்தில் சதீஷின் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிளேடுகள் எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தன் கழுத்தை அறுத்துக் கொண்டு சதீஷ் இறந்து போனதாகக் காட்டவே இவ்வாறு செய்துள்ளனர். சதீஷ் உடலில் எந்தக் காயமும் இல்லை என பிரேதப்பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே மாநகர கமிஷனர் திரிபாதி பேட்டியில் கூறியிருக்கிறார். இது இந்த வழக்கை மேலும் சந்தேகப்படுத்துகிறது. ஆக, சதீஷ் மரணம் பற்றி தி ருமங்கலம் காவல் ஆய்வாளர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது. நாங்கள் குற்றம் சாட்டும் காவல் ஆய்வாளர் ஒருவரின் தங்கை ஐ.சி.எஃப். காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கிறார். இவரது வீடும் ஏரிக்கரை அருகில்தான் உள்ளது. இவர்களைக் காப்பாற்றும் வேலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். இதில், உளவுத்துறை முன்னாள் அதிகாரியும் ஒருவர் எனச் சொல்கின்றனர். சி.பி.ஐ. விசாரணை சரியான கோணத்தில் செல்லும் என்று நம்புகிறோம்’’ என்றனர்.
இதுதொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரங்கள் எதுவும் சதீஷுக்கு இல்லை எனத் தெளிவாகியிருக்கிறது. ஏரிக்கரை பூங்காவில் சதீஷ் லவ் நிரஞ்சனா உள்பட 15 பேரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. 15 பேரின் கையெழுத்தும் ஒன்றுபோலவே இருந்தன. வீட்டில் இருந்து அவர் கிளம்புவதற்கு முன் கவுதம் என்ற அவரது நண்பரோடு பேசியிருக்கிறார். அதுவும் சாதாரணமாகப் பேசியதுதான். அதன்பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ள வில்லை.
இந்த வழக்கில், நாசா விண்வெளி மையத்தின் உதவியோடு சதீஷின் செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து சேட்டிலைட் ஏரியல் வியூ பார்த்தால் குற்றவாளியை நெருங்கிவிடலாம். 2005-ம் ஆண்டு மதுரை ஆண்டித்தேவர் படுகொலை வழக்கில் இப்படித்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தோம்’’ என்றார் அந்த அதிகாரி.
போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘வழக்கு விசாரணையை வேகப்படுத்த வக்கீல்கள் திட்டமிட்டு இப்படியொரு செய்தியைப் பரப்புகிறார்கள்’’ என்கிறார்கள்.
இப்போது சதீஷின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். கடந்த முதல் தேதி கே.கே.நகர் எம்.ஜி.ஆர். திடலில் நடந்த கூட்டத்திற்கு சி.பி.எம். சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ஆந்திர மனித உரிமைப் போராளி கிருஷ்ணா, வழக்கறிஞர் பாவேந்தன் உள்பட பலர் திரண்டிருந்தனர்.
வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகனுக்காக நடக்கும் நீதிப் போராட்டத்தின் இறுதி முடிவுக்காக வழக்கறிஞர் சமூகமே காத்துக் கிடக்கிறது.
திருத்த முடியுமா…போலீச திருத்த முடியுமா…???
குடும்பம் உள்ளவன் எவனும் சமூகத்தை பற்றி கவலைப் படக்கூடாது என்பதை தெளிவாக,கடுமையாக எச்சரித்துள்ளனர் சமூக விரோதிகள். அவர்களுக்கு இன்னும் கடுமையாக தெளிவாக சமூகம் சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவர்களின் சமூக விரோதப் போக்கு தொடரும்