முகப்புஅரசியல்ஊடகம்பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

-

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

லக வரலாற்றில் இடம் பெற்றுள்ள அதிகார வர்க்க காமெடி பீஸ்கள் அனைவரும் இரண்டு முறை ‘பல்பு’ வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள். முதல் முறை இந்த ‘கைப்புள்ளை’களின் வருகை சோகக் கதையாகவும், மறுமுறை கேலிக் கூத்தாகவும் அமைகிறது என்பது விதி.

இதற்கு சமீபத்திய உதாரணம், சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ் என்றழைக்கப்படும் ‘வண்டு முருகனி’ன் கதை.

‘இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும், ‘நானும் ரவுடிதான்’ கணக்காக எப்படியாவது ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு போராளியாக ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ். அதனால்தான் வரும் செப்டம்பர் 20-ம் தேதி இரண்டாம் கட்ட யாத்திரையைத் தொடங்கப் போவதாக செய்தியாளர் கூட்டத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

உண்மையில் செய்தியாளர்கள் இந்தக் கைப்புள்ளயை தேடிச் சென்றது, ‘எப்போது ஊழலை ஒழிக்க – கறுப்புப் பணத்தை மீட்க யாத்திரை செல்வீர்கள்?’ என்று கேட்பதற்காக அல்ல.

உத்தரகண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீட அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து ரகசியமாக பணம் வருவதாக கும்பகர்ண உறக்கத்திலிருந்து திடீரென்று கண் விழித்த அமலாக்கத் துறை ‘கண்டுபிடித்திருந்தது’. எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட, இந்த அறக்கட்டளைகளை நடத்தி வரும் பாபா ராம்தேவ்வின் மீது அன்னிய செலாவணி விதிமுறை மீறல் தடை சட்டத்தின் கீழ் ‘சட்டப்படி’ வழக்கு பதிவு செய்திருந்தது.

தவிர, ஆங்கிலேய தம்பதியரால் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவு, பாபா ராம்தேவ்வுக்கு பரிசாக அளிக்கப்பட்டிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தத் தீவு அன்பளிப்பாகத்தான் வழங்கப்பட்டதா அல்லது வாங்கப்பட்டதா என்ற விவரத்தையும், லிட்டில் கும்ரே தீவில் செயல்படும் ராம்தேவின் சுகாதார மையம் குறித்த தகவலையும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதுபோக இந்த வழக்கு தொடர்பாக மடகாஸ்கர் தீவில் உள்ள அதிகாரிகளிடமும், பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். கையோடு இந்தக் கைப்புள்ளையின் சீடரான சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சான்றிதழ் கொடுத்து இந்தச் சீடர் பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாராம்.

சுருக்கமாக சொல்வதென்றால் எந்தக் கறுப்புப் பணத்தை மீட்கப் போவதாக கடப்பாறையின் நுனியில் அமர்ந்தபடி பிரும்ம முகூர்த்தத்தில் தவம் செய்வதாக இந்தக் கைப்புள்ள பிலீம் காட்டுகிறதோ, அந்தக் கறுப்புப் பண பதுக்கலில் – கையாடலில் – பரிமாற்றத்தில் – மோசடியில் – அவரே ஈடுபடுவதாக அமலாக்கப் பிரிவு ‘கண்டுபிடித்து’ அது தொடர்பான விசாரணைக்கும் வெற்றிலை தாம்பூலத்துடன் அழைத்திருந்தது. இதைக் குறித்து கேள்வி கேட்கத்தான் செய்தியாளர்கள் சென்றனர். அப்போதுதான் ‘இரண்டாம் கட்ட ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு யாத்திரை’யை தொடங்கப் போவதாக கிச்சுகிச்சு மூட்டினார்.

ஹவாலா ஏஜெண்டுகளாகவும், கறுப்புப் பண மோசடிக்கு துணை நிற்பவர்களாகவும் இந்தியாவிலுள்ள மடாதிபதிகளே – சாமியார்களே – யோக, லோக குருக்களே – செயல்படுகிறார்கள் என்பது சந்திராசாமியில் ஆரம்பித்து பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தன் வரை நிரூபணம் ஆகியிருக்கிறது. அதாவது மடங்களையும், ஆஸ்ரமங்களையும் தொடங்குவதே ‘கறுப்பை’ வெள்ளையாக்கத்தான் என்பது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் பொறுக்கி லிஸ்டில் இடம்பெறும் தகுதி பாபா ராம்தேவுக்கு உண்டு என்பது அரசியலின் பால பாடத்தை பயிலும் குழந்தைக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போதுதான் இந்த ‘உண்மை’யை அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்திருக்கிறார்களாம். இதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளதாம்.

இந்த வழக்கும், விசாரணையும் எந்த லட்சணத்தில் இழுத்தடிக்கப்படும் என்பது பாபா ராம்தேவ்வின் தாடி உரோமத்துக்குக் கூட தெரியும். இந்தக் கைப்புள்ள வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை ‘சட்டரீதியாக’ செய்யப்பட்டுள்ளன. தவிர அறக்கட்டளைகளை பதிவு செய்யும்போது ‘விவரங்களை’ கொடுத்துதான் பதிவு செய்வார்கள். சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொடை தட்டி இப்போது ‘விசாரணை’ நடத்துவது சும்மா பயங்காட்டத்தான் என்பதை இந்த பொறுக்கி குரு மட்டுமல்ல, இவரை பிளாஷ் லைட்டில் காட்டும் கார்ப்பரேட் ஊடகங்களும் நன்றாகவே அறிவார்கள்.

அதற்கேற்ப டிரஸ்ட்டுகளின் சார்பில், டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், ‘சட்டப்படி எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்வோம். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது. அரசுக்கு முன்பே இந்த விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கர்ஜித்திருக்கிறார். அதனால்தான் ஒருநாள் கூத்தாக இந்த விசாரணை வைபவத்தை ‘காட்டி’ முடித்துவிட்டார்கள்.

இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது.

நியாயமாக பார்த்தால், இந்தக் கைப்புள்ள வரும் 20-ம் தேதி மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் இரண்டாம் கட்ட யாத்திரையை இந்திய காட்சி ஊடகங்கள் அனைத்தும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஏனெனில் பணம் காய்ச்சி மரமாக இப்போதைக்கு காட்சி ஊடகங்களுக்கு இருப்பது ‘ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு’ என்ற வார்த்தை விளையாட்டுதான்.

இத்தனைக்கும் இந்த பணம் காய்ச்சி மரத்தை கண்டுபிடித்தது எப்படியெல்லாம் சட்டப்படியும் – சட்டத்துக்கு புறம்பாகவும் சுரண்டலாம் என்று ரூம் போட்டு திட்டமிடும் தொழில்முறை வல்லுனர்கள் அல்ல. ‘ஒரு சாதாரண’ குணச்சித்திர நடிகர். அதுவும் கைக்குட்டை நனையும் அளவுக்கு பார்வையாளர்களை அழ வைப்பதில் கில்லாடிகளான பீம்சிங் பட கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள் எஸ்.வி.ரங்காராவ், நாகைய்யாவை விட பலே கில்லாடியான ஒரு ப்ரெஷ் பீஸ் புனிதர். அவர்தான் அண்ணா ஹசாரே. 12 நாட்களுக்கு நான் – ஸ்டாப் ஆக அவர் உருண்டு புரண்டு நடித்ததை பார்த்து காட்சி ஊடகங்களே மிரண்டுவிட்டன. தேசியக் கொடியால் கண்ணீரை துடைத்தபடி கை வலிக்க வலிக்க ரசிகர்கள் கைதட்ட, காட்சி ஊடகங்களின் கல்லா பெட்டி திருப்பதி உண்டியல் கணக்காக நிரம்பி வழிந்தது. ஒரே இரவில் ‘ஜன் லோக்பால்’ என்ற வார்த்தை ஒவ்வொரு ரசிகராலும் பல லட்சம் முறை ஜெபிக்கப்பட்டது.

எனவே கோடி முறை விஷ்ணு சகஸ்ரநாமம் – லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபித்தாலும் அடைய முடியாத லட்சுமி கடாச்சத்தை ‘ஜன் லோக்பால்’ நாமாவளி ‘சிங்கிள் வாய்ஸில்’ தருவதை பார்ப்பன ஊடகங்கள் அனுபவப் பூர்வமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் உணர்ந்து கொண்டன. எனவே வணிகச் சின்னமாக மாறிவிட்ட ‘ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு’க்காக இந்தக் கைப்புள்ள மேற்கொள்ளப் போகும் இரண்டாம் கட்ட போராட்டத்தை காட்சி ஊடகங்கள் பிரைம் டைமில் ஹைலைட் செய்ய வேண்டும்.

ஆனால், செய்யவில்லை. தயக்கத்துடன் இருக்கிறார்கள் அல்லது பின் வாங்குகிறார்கள். அது ஏன்?

காரணம், நாடக மேடையில் கோமாளி அவ்வப்போதுதான் வர வேண்டும். அவனே முக்கிய கதாபாத்திரமாக மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால், உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் நமத்துப் போய்விடும். இதற்கு உதாரணம், இந்தக் கைப்புள்ள கடந்த ஜூன் 4-ம் தேதி அன்று மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையால் சிலாகிக்கப்பட்ட இந்த யோக குருவால், 10 நாட்களுக்கு மேல் கோலாகலமாக விளம்பரம் செய்யப்பட்ட மாபெரும் உண்ணாவிரத கலை நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. சுருண்டு விழுந்துவிட்டார். ஓபனிங்கும் சரியில்லை. ஃபினீஷிங்கும் சரியில்லை. அடித்த கைப்புள்ளைக்கே இந்தக் காயம் என்றால், அடி வாங்கிய – இந்த காமெடி பீஸை நம்பி ஏகத்துக்கு முதலீடு செய்திருந்த – கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கும்?! தங்கள் தலையில் அடித்தபடி அப்போதுதான் தீர்மானித்தனர்: ‘ம்ஹும்… இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’

இதன் பிறகுதான் அண்ணா ஹசாரே என்ற குணசித்திர நடிகர் இரண்டாவது முறையாக மேடையில் ஏற்றப்பட்டார். ‘கொடுத்த காசுக்கு மேலயே நடிக்கும் நடிகரைப் போல்’ நெகிழ்ச்சியுடன் நடித்து, பாபா ராம் தேவ்வால் காட்சி ஊடகங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 288 மணி நேரங்களுக்கு விடாமல் ஒளி(லி)பரப்பப்பட்ட மெகா ஹிட் எபிசோடையும் வழங்கினார்.

எனவே தெரிந்தே ஒரு மொக்கையை மீண்டும் ஃபோகஸ் செய்ய வேண்டுமா… அண்ணா ஹசாரே மூலம் கிடைத்திருக்கும் வசூலில் இருந்து ஒரு பகுதியை கடலில் கரைத்த பெருங்காயமாக இழக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்கள்.

இந்த டம்மி பீஸாவது தனக்கு படியளிக்கும் கார்ப்பரேட் பரமன்களின் எண்ணத்தை அறிந்து சும்மா இருக்கலாம். அதை விட்டுவிட்டு செப்டம்பர் 3 அன்று செய்தியாளர்களின் முன்னால் ‘அண்ணா ஹசாரேவுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது சந்தேகமே. ஹசாரே உண்ணாவிரததத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஹசாரேவின் எந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது? முன்பு ஒரு முறை அவர் ஏமாற்றப்பட்டார். பிரதமர், நீதித்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் லோக் பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஹசாரே போராட்டம் நடத்தினார். அரசு அவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய போது, போராட்டத்துக்கு 50 சதவீத வெற்றி கிடைத்ததாக ஹசாரே கூறினார். ஆனால், இது வெற்றியின் முதல் படிதான் என்பது எனது கருத்து. அதிகாரத்தில் உள்ளவர்களால் ஹசாரே வஞ்சிக்கப்பட்டுள்ளார். உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமா என்பது ஐயமே…’  என்று தாடியை தடவியபடி சகலருக்கும் தெரிந்ததை பேசியிருக்கிறார்.

அநேகமாக இதைக் கேட்டு காட்சி ஊடகங்களும், பன்னாட்டு தரகு முதலாளிகளும் அலறியிருக்க வேண்டும். ஏனெனில் ‘மாபெரும் உண்ணாவிரத போராட்ட கலைநிகழ்ச்சியின் பார்ட் 3’ஐ எடுக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக தொழில்முறை சுரண்டும் வல்லுனர்கள் குழு, பக்காவாக ஷாட் பை ஷாட் ஆக திரைக்கதை எழுதி வருகிறது. முந்தைய வசூல் ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் 24 மணிநேரங்களும் உழைத்து வருகிறார்கள். இப்படி ப்ரீ புரொடக்ஷன் நடந்து வருகையில் – ஆராவாரமாக நாள், நட்சத்திரம் பார்த்து படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னர் – இப்படியா ‘ஜஸ்ட் லைக் தட்’ அறிவிப்பது?

எனவேதான் ‘ம்ஹும்… இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என அவர்கள் கழட்டி விட்டுவிட்டார்கள்…. ஆனாலும்

இப்படி காமெடி பீஸாக இருப்பதாலேயே பாபா ராம்தேவ்வை கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு தரகு முதலாளிகளும், காட்சி ஊடகங்களும் கையாள்வது போல் உழைக்கும் மக்களும் அணுக முடியாது. ஏனெனில் கைப்புள்ளையாக இருந்தாலும், பாபா ராம் தேவ் அதிகார வர்க்க கைப்புள்ளை. கறுப்புப் பணமாக திரளும் பணத்தின் புரோக்கர். ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவி ஊழலை ஒழிப்பதாகவும், கறுப்புப் பணத்தை மீட்பதாகவும் பிலீம் காட்டும் பரதேசி. ‘சுதேசி சிக்சா, சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக போராடி வரும் விஷப் பாம்பு.

விஷப் பாம்புகளில் காமெடி பீஸ், கைப்புள்ளை என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

_______________________________________________________

–  அறிவுச்செல்வன்
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. இந்த வழக்கும், விசாரணையும் எந்த லட்சணத்தில் இழுத்தடிக்கப்படும் என்பது பாபா ராம்தேவ்வின் தாடி உரோமத்துக்குக் கூட தெரியும்.–அட,அவ்வளோ கெட்டப்புல இருக்கா
  அம்முலாக்கு துர.

 2. சற்று முன் தான் ஒரு விசயத்தை படித்தேன். அதை இங்கு போலி கம்யூனிஸ்டுகளுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

  Why Indian Corruption Is a Global Security Concern

  http://www.huffingtonpost.com/cleo-paskal/indian-corruption_b_931981.html

  இதை எழுதிய சீலோ பாஸ்கல் பார்ப்பதற்கு வேற வெள்ளையாக இருக்கிறார். வெள்ளையாக இருந்தால் ஆரியன் என்று கிறித்துவ மத பரப்பி கால்வு வேல் வேற ஆரிய திராவிட கதையில் சொல்லியுள்ளார். அதனால் சீலோ பாஸ்களுக்கும் RSS அமைப்பிற்கும் எதேனும் சம்மந்தம் உள்ளதா என்று வினவு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

  இந்தியாவில் எத்தனையோ மத வழிபாட்டு தளங்களும் அதனை சார்ந்த அமைப்புகளும் உள்ளன. உங்கள் பார்வைக்கு அவை அத்தனையும் கருப்பு பணமா? சரி அப்படியே இருந்துவிட்டு போகட்டும். கிறித்துவ மிஷினரிகளுக்கு வந்த பல ஆயிரம் கோடி கருப்பு பணம் அல்ல. ஆனால் ஹிந்து அமைப்புகளுக்கு வந்தால் அது கண்டிபாக கருப்பு பணம் தான். முஸ்லீம்களுக்கு அரேபியாவில் இருந்து வரும் பணம் எல்லாம் சுத்தமான வெள்ளை பணம் (ஹாவால மோசடியில் பெயர் பெற்றவர்கள் முஸ்லீம்கள் என்பது ஊரறிந்த விசயம்).கம்யூனிஸ்டுகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. இவர்கள் ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட வாங்க வசதியில்லாதவர்களால் உருவான அமைப்பு. ஆனால் பல கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வானில் இருந்து தேவ குமாரன் தூக்கு போடுவதை வைத்து தான் சண்டை போடுகிறார்கள். காசு கொடுத்து வாங்கியது கிடையாது 🙂

  அது சரி 50000 கோடிக்கும் அதிகமான ஹவாலா பணத்தில் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கும் ஹசன் அலியை பற்றி என்ன நினைக்கிறீகள். ஒரு வேலை RSS அமைப்பு தான் அப்பாவி ஹசன் அலியின் வங்கி கணக்கில் இந்த பணத்தை மாற்றி விட்டு ஏழை ஹசன் அலியை சிக்க வைத்து இருக்குமோ? இருந்தாலும் இருக்கும் யார் கண்டது.

  ஹ்ம்ம்… கிறித்துவ மிஷினரிகளுக்கு மட்டும் ஆறு தொலைக்காட்சிகள் உள்ளன. கேவலம் ஒரு தொலைக்காட்சி கூட வைத்து கொள்ளாமல் செயல்படும் RSS அமைப்பு என்னவென்று சொல்வது. சரியான கஞ்சபிஷினாரிகளா.. இல்லை காசு இல்லாத பிச்சைகாரர்களா?

  கருப்பு பணத்தை அரசு சொத்தாக அறிவித்து விட்டு ராம் தேவ் உண்மையில் கருப்பு பணம் வைத்து இருந்தால் அதனையும் அரசுடைமை ஆக்க வேண்டியது தான். அது சரி போலி கம்யூனிஸ்டுகளிடம் இது போன்ற வரிகளை எதிர்பார்க்க முடியாது. கிறித்துவத்தையும், கம்யூனிஸத்தையும் பெற்று எடுத்த யூதர்கள் உண்மையில் புத்திசாலிகள் தான். என்ன அழகாக குட்டையை குளப்பு உலகை ஆள்கிறார்கள். ஒரு பக்கம் ஆத்திகம் என்று கிறித்துவத்தை வைத்து மதமாற்றம் போன்றவற்றை செய்து ஆட்டிப்டைக்கிறார்கள். மறு புறனம் கடவுள் நம்பிக்கை இல்லை (நாஸ்திக் என்பது கடவுள் மறுப்பு கொள்கை இல்லை என்பது வேறு விசயம்) வைத்து உலகை ஆட்டி படைக்கிறார்கள். டாலர்களும் திணார்களும் உள்ள வரை இது போன்ற புழுகு மூட்டைகளுக்கு பஞ்சம் இல்லை… தொடரட்டும்…. கீழே உள்ள விசயம் எனக்கு மின் அஞ்சல் மூலம் வந்தது.

  பாபா ராம் தேவும், அன்னை தெரசாவும்

  நடுத்தர குடும்பத்தில் பிறந்து யோகா மற்றும் ஆயுர் வேதம் பயின்று பயிற்சி பள்ளி நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை இந்திய மருத்துவ முறை மூலம் குணப்படுத்தினார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் மேலும் பல யோகா மற்றும் ஆயுர் வேத கல்லூரிகளையும், ஆயிரக்கணக்கான ஆயுர்வேத இலவச மருத்துவ மனைகளையும் உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல் வெளி நாட்டிலும் பல அயூர் வேத மற்றும் யோகா பயிற்சி பள்ளிகளை நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆயுர் வேத மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் நிறுவினார்.

  அல்பேனிய கம்யூனிஸ அரசால் மதமாற்ற குற்றச்சாட்டில் இருந்து தன்னை காத்து கொள்ள இந்தியாவில் வந்து சேர்ந்தவர் தான் அன்னை தரசா என்று அழைக்கப்படும் Agnes Gonxha Bojaxhiu. மதப்பிரச்சாரமும் சமூக சேவை செய்த தெரசாவுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் வந்து குவிந்தன. கருப்பு பணம் நன்கொடையாக வந்தால் தவறில்லை என்றும் கூறியவர். இவ்வாறு கிடைத்த பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை கீழே உள்ளதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.

  http://en.wikipedia.org/wiki/Missionaries_of_Charity#Controversy

  இதை பற்றிய செய்தி மிகப் பெரிய தாக்கத்தை வெளி நாட்டில் ஏறப்டுத்தியது. இதன் காரணமாக அவர் ஆறு மாதம் மிஷினரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இதை பற்றி எந்த மீடியாவும் எதுவும் பேசவில்லை. வழக்கும் போல நமது காங்கிரஸ் கட்சியும் இதை பற்றி எந்த விசாரணையும் செய்யவில்லை.

  சாய் பாபா இறந்த பொழுது அவரை வைத்து விதவிதமான விவாதங்கள் மற்றும் அவமானங்களை ஏற்படுத்திய 24 x 7 ஆங்கில் மீடியாக்கள் ஒவ்வொரு தெரசா நினைவு நாளிலும் அவரை புகழ்வதை மறப்பதில்லை… அவர் மீதான் குற்றச்சாட்டை பற்றியோ அல்லது அவர் உருவாக்கிய TRUST ல் ஏற்பட்ட திள்ளுமுள்ளுகளை பற்றியோ விவாதம் நடத்துவதில்லை.

  தெரசாவை புகழ்ந்து தள்ளிய அதே செக்யூலர் வாதிகளான NDTV & CNN – IBN ராம் தேவ் மீது மத்திய காங்கிரஸ் கட்சியால் தொடுக்கப்பட்ட வரி ஏய்பு வழக்கை FLASH NEWS போட்டு மக்களிடம் சொல்லி கொண்டு இருக்கின்றனர். ஒரு ஹிந்து சன்யாசிக்கு எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்ட கம்யூனிஸ்டுகள், ஒரு கிறிதுதுவ சன்யாசியிடன் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஏனோ? ஒரு வேலை இது தான் இந்திய கம்யூனிஸ்மோ? “

  • இந்து சாமியார்கள் மட்டும்தான் திருடர்களா, மற்ற மத சாமியார்களும் திருடர்கள்தானே என்று கூறியதன் மூலம் நீங்களும் திருடர்கள்தான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி! மற்றபடி தெரசா குறித்த விமரிசனக் கட்டுரைகள் வினவிலேயே இருக்கின்றன. கவலை வேண்டாம்!

   • நான் ராம தேவ் ஒரு நடத்துவது மத அமைப்பி கிடையாது, அவர் செய்வது, தொழில். அதாவது ஆயுர் மற்றும் இயற்கை விவசாயம் வைத்து செய்யப்படும் ஒரு தொழில். யோகா அவர் செய்யும் தொழில் அல்ல. அதனால் நீங்கள் சொல்லும் குற்றசாட்டு அவருக்கு பொருந்தாது. அவருடைய எல்லா அமைப்புகளும் முறைப்படி தொழில் என்று அங்கிகரிப்பட்டு அவை விற்பனை செய்யப்படுகின்றன். அடுத்து, கம்யூனிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் கொலை மற்றும் கொள்ளைகளை பற்றி எந்த ஒரு விளக்கம் தறாமல், மௌனம் சம்மதத்திற்கு அரிகுறி என்ற அடிப்படையில், நீங்களும் திருடர்கள் தான் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி!!

 3. அன்னை தெரேசா இறந்த பின் அவரது படுக்கை அறை இலிருந்து ஒத்தை ரூபா கூட எடுக்கப்படவில்லை. ஆனால் சாய்பாபா விடயத்தில் அப்படியா?

  • ethicalist, என்னப்பண்ரது, ஹிந்து சாமியார்கள் படிக்காதவர்கள், அதனேலே தான் இப்படி கொடுத்த தங்கத்தையும், பணத்தையும் அப்படியே எடுத்து வைச்சாங்க…ஆனா. தெரசா மாதிரி படிச்ச ஆளுங்க புத்திசாலிங்க…எப்படி பணத்தை பொருளாவோ / மனுசனாவோ மாத்தி வைக்கிறதுன்னு நல்லாவே தெரியும் 🙂

 4. சாய்பாபாவின் ஆசிரமத்தில் சோதனை செய்யும் அதிகாரிகள் அவரது தனி அறையான யஜுர் மந்திரில் கிலோ கணக்காய் தங்கம், வெள்ளி எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரின் அன்றாட பயன்பாட்டுக்காக பயன்படுத்திய அழகு சாதன பொருட்களை பார்த்து திகைத்து போய் உள்ளனர்.

  இறக்குமதி செய்யப்பட்ட ஷேவிங் செட்கள், விலை உயர்ந்த சர்வதேச செண்டுகள், ஷாம்புகள், சோப்கள் மற்றும் நாப்கின்கள் அவரின் அறை முழுக்க இருந்ததாக தெரிகிறது. எப்போது உபதேசம் செய்ய வரும் போதும் நறுமணங்களை பூசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக சாய்பாபா இருந்ததாக தெரிகிறது. மேலும் உலகின் முண்ணணி பிராண்டுகளின் கைக்கடிகாரங்களும் உயர்ந்த ரக உலர் பழங்களின் பாக்கெட்டுகளும் ஏராளமாய் இருந்துள்ளது.

  அது போல் பக்தர்கள் நன்கொடையாய் கொடுத்த ஏராளமான பொருட்கள் திறக்கப்படாமலேயே உள்ளது. 7 கிலோ எடை கொண்ட தங்க மாலைகள், 75 வெள்ளி டம்ளர்கள் உள்ளிட்ட பல அன்பளிப்புகள் அப்படியே திறக்கப்படாமல் உள்ளன. உலகில் வாழும் சாமியார்களில் வேறு யாருக்கும் பக்தர்கள் இது போல் கொடுத்ததை தாங்கள் கண்டதில்லை என்று சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.

  அது போல் 10,000 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகள், பிராண்டட் சட்டைகள், வேட்டிகளும் சாய்பாபாவின் அந்தரங்க அறைக்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. 2005-லிருந்தி இவ்வறையில் வசிக்கும் சாய்பாபா இவ்வறையில் டிரஸ்டின் மூத்த உறுப்பினர்களை கூட இவ்வறைக்குள் அனுமதித்ததில்லை என்பதும் அவரின் அந்தரங்க உதவியாளர் சத்யஜித்க்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 5. மூன்றே வரியில் (சோழன் என்ற பெயரில் வந்த) இந்த
  ——— பருப்பிற்கு ——–தந்த வினவுக்கு என் வணக்கங்கள்.
  அது சரி.புதுசாள்ள இருக்கு? இவனுங்க யூதனுங்கள திட்டுறது?
  ஏண் இப்படி?

 6. //உத்தரகண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீட அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து ரகசியமாக பணம் வருவதாக கும்பகர்ண உறக்கத்திலிருந்து திடீரென்று கண் விழித்த அமலாக்கத் துறை ‘கண்டுபிடித்திருந்தது’.//

  உண்மையுளும் உறக்கமா அல்லது கமிசன் பெற்றுக்கொண்டு கண்டும் காணாததும் போல் இருந்து விட்டதா?

 7. வினவு ஒரு யோகா கோர்ஸ் பண்ணுங்க எல்லா வியாதியும் போயிடுச்சி!!நல்லா இருக்கு உடம்பு நிஜமாலும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க