privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!

எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!

-

எங்கேயும் எப்போதும் : ஆபத்தான அழுகை !

போராடுவதற்கு போக்கற்று அரற்றுவதையே விதியாகக் கொண்ட நாடு இது. அழுவதற்கென்றே கதைகளை உருவாக்கிய மண்ணிது. நல்லதங்காளோ, அரிச்சந்திரனது மயான காண்டமோ, பாசமலரோ, பாவமன்னிப்போ எல்லாம் கிராமத்து திடலிலோ இல்லை மண் தரையுள்ள டூரிங் டாக்கிசிலோ முடிந்து போன விசயங்கள் என்று நினைத்திருந்தால் உங்கள் முடிவுகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! எஸ்க்கலேட்டர் வசதி கொண்ட மல்டிபிளக்ஸ் அரங்குகளில் கூட அந்த கண்ணீர்க் கதைகள் தொடருகின்றன என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?

சிறுவயதில் கேட்ட ஆகாசவாணியின் பிரச்சாரக் கதைகளும், பிலிம்ஸ் டிவிஷனின் 20 அம்சத்திட்டக் கதைகளும் தரும் ஆயாசத்தை இந்த படமும் தருகிறது. பிலிம்ஸ் டவிஷன் படம் போட்ட பிறகு “யோவ் ஆப்பரேட்டர் படத்த போடுய்யா” என்று வரும் கூச்சல்கள் ஒரு கனவு போல இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் இரசிகர்களால் ஏகமனதாக புறக்கணிக்கப்பட்ட அதே பிலிம்ஸ் டவிஷன் உணர்ச்சியை இன்றும் ரசிக்கப்படுகிறது என்ற உண்மை கொஞ்சம் அலுப்பாகவும் இருக்கிறது. காலம் மாறினாலும் நம் மக்களது இரசனை இன்னும் மாறவில்லையே?

திரைப்பட விமரிசனம் எழுதும்போது முதலிலேயே, முன்னுரையிலேயே  அதன் சாரத்தை, ஒன்லைனை சொல்லுவது வழக்கமில்லை. சொல்லிவிட்டால் ஆர்வமாக வருபவர்களது வேகம் பட்டென தணிந்து ஸ்க்ரோல் செய்து போய் விடுவார்கள். ஆனாலும் அடக்கமாட்டாமல் இங்கே முதலிலேயே அதை சொல்ல வைத்திருப்பது நம் குற்றமல்ல, படத்தின் குற்றம்.

இந்தப் படத்தில் இரண்டு விசயங்களிருக்கின்றன. ஒன்று கொடூரமான விபத்து, மற்றொன்று இனிமையான காதல். இனிமையான காதலில் இரண்டு காதல் கதைகள் இருக்கின்றன. ஒன்று பி சென்டருக்கான சிறு நகரத்து காதல். மற்றொன்று ஏ சென்டருக்கான ஐ.டி துறை காதல். அதே நேரம் பி சென்டரின் காதல் முற்றிலும் பி சென்டருக்குரியதல்ல. அது ஏ சென்டரை நோக்கி மாறும் விசயங்களுடன் வருகிறது. அதாவது ஏ சென்டருக்கான அழகியல் மதிப்பீடுகளுடன்.

இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து ஒரு உடன்பாட்டுப் பொருளாவது போல இங்கே காதலும், விபத்தும் சேர்ந்து உங்களிடமிருந்து கட்டற்ற கண்ணீரை வரவழைக்கிறது. நேரில் பார்க்கும் விபத்தென்றால் நாம் நிச்சயம் வருந்துவோம் என்றாலும் அதில் நமக்குத் தெரிந்த காதல் ஜோடிகள், அதுவும் அவர்களது காவியமான காதல் கதைகளின் நினைவுகளோடு வருமென்றால் நாம் யாரும் கோராமலேயே கதறி அழுவோம்.

நாளிதழ்களில் மற்றுமொரு செய்தியாக மறையும் ஒரு விபத்து போன்றுதான் இது இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு விபத்தை பார்த்து நாம் அழவேண்டுமென்று நினைக்கும் இயக்குநர் அந்த உடனடி விளைவைத் தாண்டி விபத்தின் சமூகப் பரிமாணத்தை அறிந்தவராகவோ, இல்லை அது குறித்து கவலைப்பட்டவராகவோ இந்தக் கதையில் தென்படவில்லை.

ஒரு மாபெரும் வரலாற்று சம்பவத்தையோ இல்லை ஒரு மனதை வலிக்கச் செய்யும் பெரிய விபத்தோ இரண்டையும் ஒரு சில தனிநபர்களது செயலாக மட்டும் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. தலைக்கேற்ற தொப்பியைத்தான் தேட வேண்டுமே ஒழிய தொப்பிக்காக தலையை வெட்டினால் முண்டத்திற்கான சவப்பெட்டிதான் தேவைப்படும், தொப்பி அல்ல. விபத்து குறித்த இந்தப்படத்தில் இத்தகைய விபத்து தெரிந்தே நடந்திருக்கிறது. அது இயக்குநரின் கருத்தால் விளைந்த விபத்து.

____________________________________________________________________________

இந்தத் திரைப்படம் குறித்து விமரிசனம் எழுதியிருக்கும் பதிவர்கள் பலருக்கும் கூட அந்த விபத்து நடந்திருக்கிறது. சாலை விதிகளை மதிப்போம், ஓட்டும் போது செல்பேசியில் பேசாதிருப்போம், மது அருந்தாமல் ஓட்டுவோம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவோம், ஓட்டுநர்களுக்கு இந்தப் படத்தை விசேடமாக திரையிட்டு காட்ட வேண்டும் என்பதாய் அவை குவிகின்றன. இவையெதுவும் தவறல்ல. ஆனால் உடன் தெரியும் இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறுகளல்ல.

வாகனத்தை ஓட்டும் அனைவரும் பொதுவில் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது எச்சரிக்கையின் அளவை தீர்மானிப்பது பணிச்சூழல், குடும்பச் சூழல் குறித்த பிரச்சினைகள். பேருந்து ஓட்டுநர்களும், லாரி ஓட்டுநர்களும் எச்சரிக்கையாக இருப்பதால்தான் தமிழகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் இருந்தும் இலட்சக்கணக்கான விபத்துக்கள் நடப்பதில்லை. நடக்கும் ஒரு சிலவற்றுக்கு கண நேர, திட்டமிடாத, எதிர்பாராத செயல்கள் காரணமென்றாலும் ஒரு ஓட்டுநரின் எச்சரிக்கை அளவு ஏன் மீறப்பட்டது என்பது குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இந்தப்படத்தின் விளைவாய் வரும் மொக்கை மனிதாபிமானத்தில் சரணடைந்து உண்மையை தொலைத்துவிடுவோம்.

படத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ஆம்னி பேருந்தும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தும் மோதிக் கொள்கின்றன. இவை ஏன் மோதிக்கொண்டன, யார் காரணம் என்பது குறித்து படத்தில் தெளவில்லை என்றாலும் அது தேவையுமில்லை. ஆனால் என்னவெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது குறித்து இந்தத் திரைக்கதை சுட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து கோரக் காட்சிகளை வைத்து விபத்து குறித்து ஒரு பய உணர்வை மட்டும் இந்தப்படம் ஏற்படுத்துகிறது.

அரசுப் பேருந்துகள் போதுமான பராமரிப்பில் இல்லை. தனியார் பேருந்துகளை ஊக்குவிக்கும் தனியார்மயக் கொள்கை காரணமாக வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் அவை நலிந்துப் போக விடப்படுகின்றன. இரவு பத்து மணிக்கு கோயம்பேடு சென்றால் வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகளை நிறுத்துவதற்கே வழியில்லாமல் நேரக் கண்காணிப்பாளரும், ஓட்டுநர்-நடத்துநர்களும் திண்டாடுவதை பார்க்கலாம். அல்ட்ரா டீலக்ஸ், டீலக்ஸ் என்று பெயர்களை தாங்கியிருக்கும் பேருந்துகள் அந்த பெயர்களுக்குரிய வசதிகள் இல்லாமல் இருப்பதும், அது குறித்து கேட்கும் மக்களிடம் நடத்துநர்கள் பேசி அலுத்துப் போவதும் அன்றாடம் நடக்கும் காட்சிகள்.

பேருந்துகளின் வெளிப்புற கன்டிஷன்களே இப்படி இருக்கும் போது அதன் உள்கட்டுமான கன்டிஷன்கள் எப்படி இருக்குமென்று யூகித்துக் கொள்ளலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராஜபாட்டை போட்டுக் கொடுக்கும் அரசு ஒரு விரைவுப் பேருந்து நிறுவனத்தை நல்லமுறையில் நடத்துவது முடியாத ஒன்றா என்ன?

அரசால் திட்டமிட்டே உருவாக்கப்படும் இந்தச் சூழலை தனியார் பேருந்து முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு வழியின்றி நடுத்தர வர்க்கமும் இங்கே அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கிறது. தனியார் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது உண்மையென்றாலும் அதன் ஓட்டுநர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள். அரசு ஓட்டுநர்களை விட மிகக் குறைந்த சம்பளம். மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் விதமாக குறிப்பிட்ட நேரத்தில், அதி வேகத்தில் பேருந்துகளை ஓட்டி சென்று இலக்கை அடைய வேண்டிய நிர்ப்பந்தம். அதன் கோரமுகத்தை கே.பி.என் விபத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி அனைவரும் அறிந்த விசயங்கள் என்றாலும் இந்தப் படம் எதனையும் கோடிட்டுக்கூட காட்டவில்லை. மாறாக படத்தில் இரு பேருந்துகள் ஓடுவதை பயமுறுத்தும் கோணங்களில், காட்சிகளில், இசையில் காட்டுகிறார்கள். கருத்து இல்லாத அந்தக் காட்சிகள் மூலம் விபத்து குறித்த ஒரு காரணமற்ற பயம் மட்டுமே தோன்ற முடியும்.

படத்தில் அரசுப் பேருந்து பஞ்சர் ஆவதும், அதன் ஓட்டுநர் அதிவேகமாக சாலையை விட்டிறங்கி ஓட்டுவதும் வருகிறது. அரசுப் பேருந்து என்றாலே மெதுவாக சென்று ஊரை தாமதமாக அடையும் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு. இங்கே ஊரறிந்த எதார்த்தத்தைக்கூட கதைக்காக சாகடித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் பராமரிப்பில்லாத அரசுப் பேருந்து, பணிச்சுமையில் இருக்கும் தனியார் ஓட்டுநர்கள் என்பதைத் தாண்டி இந்த விபத்தில் வேறு எதைக்காட்டினாலும் அது பொருத்தமற்றது. ஆனால் இயக்குநர் அப்படி எதுவும் காட்டவில்லை.

ஃபைனல் டெஸ்டினேஷன் வரிசைப் படங்களில் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் விபத்தும், மரணமும் நடக்கும் என்று மிரட்டுவார்கள். அது பாதுகாப்பாக வாழும் மேற்குல மக்களை வேறு எப்படியும் மிரட்ட முடியாது என்ற எதார்த்தத்தோடு அபத்தமாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.

ஒருவேளை விபத்திற்காக காதல் கதை என்று அமைத்திருந்தால் அப்படி கொஞ்சம் ஏதாவது வந்திருக்கும். இங்கே காதலுக்காக விபத்து என்று போவதால் எதுவும் சொல்லிக்கொள்ளுமளவு வரவில்லை. அதனால்தான் ஆரம்பத்திலேயே விபத்து என்று காட்டியிருந்தாலும், படத்தின் முடிவை ரசிகர்கள் ஓரளவு ஊகிக்க முடியும் என்றிருந்தாலும் அது அவர்களது ரசனையை பாதிக்காது என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். அதில் அவர் சோடை போகவில்லை என்பதற்கு காரணம் இந்தப்படத்தை தூக்கி நிற்பது விபத்து போலத் தோன்றினாலும் அது நிற்பது உண்மையில் காதல் குறித்த சித்திரத்தில்தான். காதல் மயக்கத்தில் விபத்தின் வேர் மறைந்து போவது பார்வையாளர்கள் குறித்து இயக்குநருக்குள்ள மலிவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

அதிலும் ஒரு பேருந்தில் ஒரு இளம் ஜோடி, சமீபத்தில் திருமணமான ஜோடி வருகிறது. அதில் மணமகன் கொடூரமாக கொல்லப்படும் காட்சியை இடையில் காட்டி விட்டு பின்னர் பேருந்தில் அவர் மணமகளைக் கொஞ்சும் காட்சி ஒன்றே இயக்குநரது தரத்தை காட்டுகிறது. இது சென்டரல் ஸ்டேஷனில் கையை கீறி ரத்தத்தை வரவழைத்து உதவி கேட்கும் அதிரடி பிச்சைக்காரர்களின் ரசனைக்கொப்பானதாக இருக்கிறது. ஆனால் இந்த மலிவான உத்தியைக்கூட ஆழமான படிமமாக உணரும் நமது பதிவர்கள் இருக்கும் போது இயக்குநர் சரவணனை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியுமா என்ன?

காதலையும், விபத்தையும் ‘பொருத்தமாக’ இணைத்து வெற்றியடைந்த படம் டைட்டானிக். டைட்டானிக்கில் கூட இறுதிக்காட்சிகளில் சாதாரண மக்களெல்லாம் உயிர் காக்கும் படகுகளில் ஏற முடியாமல் அலறும் காட்சிகள் ஒரு பின்னணியாக மட்டும் வரும். படத்தை பார்க்கும் இரசிக மனமோ காதலர்கள் எப்படியாவது பிழைக்க மாட்டார்களா என்று ஏங்கும். இங்கும் அதே கதைதான். அஞ்சலி – ஜெய், அனன்யா – சரவ் ஜோடிகளின் காதல் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் என்ன ஆனார்கள், அவர்களது குடும்பத்தினர் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்கு வேண்டுமானால் இயக்குநர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நாமெல்லாம் என்றாவது ஒரு நாள் பயணம் போகிறோம். ஆனால் ஓட்டுநர்களுக்கு அது அன்றாட பிழைப்பாக இருக்கிறது என்ற முறையில் கூட அவர்கள் நினைக்கப்படவில்லை. ஒரு வேளை அவர்கள்தான் இந்தப் படத்தின் வில்லன்கள் என்று இயக்குநர் கருதியிருப்பார் போலும். ஒருக்கால் இந்த இயக்குநர் நாளையே கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விபத்தையும் காதலையும் பிசைந்து ஒரு கதை செய்தால் வில்லனாக யாரை காட்டுவார்? ஒரு சுவிட்ச்சை போட மறந்த தொழிலாளிதான் அந்த வில்லன் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா என்ன?

_____________________________________________________________________________________

படத்தில் வரும் காதல் காட்சிகள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

காதலன் ஜெய்யை அதிரடியாக மிரட்டி காதலிக்கும் அஞ்சலியை எடுத்துக் கொள்வோம். இதையெல்லாம்  “ஓடிப்போயிடலாமா” என பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரேயே மணிரத்தினம் எடுத்துவிட்டாலும், இன்றும் அதை இரசிப்பதற்கு காரணம் என்ன?

ஆணுக்கு அடங்கியவள் பெண், அவனுக்குரிய பணிவிடைகள் செய்வது பெண் என்றாலும் அந்தக்கால ஆனந்த விகடனில் கணவன் துணி துவைப்பதும், சமையல் செய்வதும், மனைவி பூரிக்கட்டையால் கணவனை தாக்குவதான ஜோக்குகள் வரும். மனைவியின் பணிவிடைகளில் சோம்பிக் கிடக்கும் கணவன்கள் அதைப் படித்து சிரிப்பார்கள். அதுதான் இது. அரதப்பழைய விகடன் முதல் அதி நவீன தமிழ் டவிட்டர்- பஸ்ஸர்களின் டைம்லன் வரை இதுதான் ஓடுகிறது. ஒரு பொதுவான சமூக யதார்த்தத்தில் ஆண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்றாலும் கதையில் அதற்கு நேரெதிராக வரும் போது தீர்மானிக்கும் அந்த ஆண் ரசிகர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இது சிரிப்பதற்குரிய ஒன்றாக இருப்பதினாலேயே நிஜத்தில் வாய்ப்பில்லாததாக ஒன்றாக இருக்கிறது. நிஜத்தை காட்டியிருக்கும் பட்சத்தில் அங்கே சிரிப்பதற்கு ஏதுமில்லை. இந்த முரண் உங்களுக்குப் புரிகிறதா?

மற்றுமொரு சான்றைப் பார்ப்போம். படத்தில் இரண்டு ஜோடிகளின் ‘கற்பை’யும், ஒழுக்கத்தையும் அழுத்திக் காட்டுவதற்கு சில காட்சிகள் வருகின்றன. நாயகன் ஜெய், நாயகி அணியும் ஆடையின் வண்ணத்தைப் பார்த்து அதே கலரில் தினமும் சட்டை அணிகிறார். அவரோடு பணி புரியும் தொழிலாளி இரண்டு கலர் சட்டைகளை மாற்றி மாற்றி அணிகிறார். காரணம் கேட்டால் அவர் இரண்டு தெருவில் இரண்டு பிகர்களை சைட் அடிக்கிறார்.

ஐ.டி துறை நாயகனான சரவ், பொறியியல் முடித்திருக்கும் அனன்யாவை விரும்புகிறார். இவர்கள் இருவரும் கம்பெனி பேருந்தில் பயணிக்கும் போது ஒரு பெண் சரவை இரண்டு ஆண்டுகள் துரத்திக் காதலித்ததாகவும், அவர் ஏற்கவில்லை எனவும், பிறகு ஒரு அப்பாவியை திருமணம் செய்திருப்பதாக தாலியை காட்டுகிறார். பேருந்தின் பின் சீட்டில் இருக்கும் ஒரு இளைஞன்தான் அந்த அப்பாவி என்று சொல்கிறார்.

நகரப் பேருந்தில் அனன்யாவின் அருகில் பயணிக்கும் ஒரு நகரத்துப் பெண் இரண்டு காதலர்களோடு பேசுகிறாள். மற்றவர் லைனில் வந்தால் அது அப்பா என்று இருவரிடமும் மாறி மாறி பேசுகிறாள். இந்த மூன்று காட்சிகளுக்கும் திரையரங்கில் கைதட்டல் தூள் கிளப்புகிறது. காதல் ஜோடிகளின் ஒழுக்கத்தையும், ‘கற்பையும்’ ஜாக்கி வைத்து தூக்குவதற்காக இந்தக்காட்சிகள் திட்டமிட்ட முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

தங்களையும் அந்த நாயகர்கள் போல கருதிக் கொள்ளும் இரசிகர்கள் இந்த காட்சிகளுக்கு சிரிப்பதன் காரணம், தன்னைத் தவிர மற்றவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதால். ஆனால் எல்லோரும் தானென்று ஆனால் யார்தான் அந்த மற்றவர்கள்? ஆனால் நடப்பில் மற்றவர்கள்தான் பெரும்பான்மை எனும் போது அது இங்கே விமரிசனமாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விமரிசனத்திற்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டுமென்றால் அது படத்தின் மையமான பாத்திரங்களோடு இருக்க வேண்டும். ஆனால் அது துணைப் பாத்திரங்களோடு கேலிக்குரியதாக ஆக்கப்படும் போது சுயவிமரிசனம் மறுக்கப்பட்டு ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் கீழ்மைகள் வெறும் கேலிப்பொருளாய் பார்க்ப்படுகின்றன. இந்த முரணை அறிந்து கொள்ள முடிகிறதா?

படத்தில் அஞ்சலி அநியாயத்திற்கு பிரச்சாரம் செய்கிறார். சொல்லப் போனால் அஞ்சலியின் பாத்திரச் சித்தரிப்பு அண்ணா ஹாசாரே டைப் போலித்தனத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. இறந்த பிறகு உடல் பாகங்களை தானம் செய்ய வேண்டும் என்று கையெழுத்து வாங்கும் அஞ்சலி இறுதிக் காட்சியில் அழுது கொண்டே காதலனது பாகங்களை தானமாக எடுக்க வேண்டுமென்று அரசு மருத்தவரிடம் கூறுவார். இப்படி தானமாகப் பெறப்படும் பாகங்கள் எவையும் ஏழைகளுக்காக பொருத்தப்படுவதில்லை. அவை அப்பல்லோவுக்கு சென்று பணக்காரர்களுக்கோ, வெளிநாட்டவருக்கோதான் பொருத்தப்படுகின்றன. இதற்காகவே உடல் தானம் குறித்த விழிப்புணர்வு வளரவேண்டும் என்று அப்பல்லோ முதலாளி ரெட்டி பேசியது குறித்து வினவில் முன்னர் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது.

இருக்கட்டும், இத்தகைய மனிதாபிமானியான அஞ்சலி தனது காதலனை வம்படியாக கூட்டிச் சென்று பணக்காரர்களது கடையில் 6000 ரூபாய்க்கு துணி எடுப்பதும், மேட்டுக்குடியினர் செல்லும் காபிஷாப்புகளுக்கு சென்று 160 ரூபாய்க்கு காபி குடிப்பதும், நாற்பது ரூபாயை டிப்ஸாக கொடுப்பதும், அதில் நாயகனது அறியாமையை கேலி செய்வதும் என்ன விதத்தில் பொருத்தம்? நியாயமாக தமிழ்நாட்டு காதலர்களுக்கு இந்த முதலாளித்துவ இடங்கள் தேவையில்லை என்ற விதத்தில் கேலி செய்யப்பட்டிருந்தால் நாம் பெருமைப்படலாம். ஆனால் இந்த நுகர்வுக் கலாச்சார வக்கிரங்களுக்கு நாம் அறிமுகமாகவில்லை என்று இயக்குநர் செல்லமாக கிள்ளிச் சொல்லுகிறார். அதோடு அஞ்சலியின் உடல்தானம் குறித்த பிரச்சாரம் சேரும் போது அண்ணா ஹசாரே நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதல் குறித்த பிளாஷ் ஃபேக் நினைவுகளில் காதலின் சமூக யதார்த்தமும், அதன் பிரச்சினைகளும் மருந்துக்குக் கூட வரவில்லை. அந்த வகையில் உண்மையான காதல் படங்கள் எதுவும் தமிழில் இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றுகிறது. காதல் தோன்றும் தருணங்களை விதம் விதமாக ஆனால் அரைத்த் மாவாக காட்டும் நமது இயக்குநர்கள் காதல் தோன்றியதும் அது நிறைவேற எத்தனிக்கும் போராட்டங்களை, சமரசங்களை, குழப்பங்களை கிஞ்சித்தும் அறிந்தவர்கள் அல்லர்.

______________________________________________________

இயக்குநர் சரவணன் இந்தக் கதையை கூறியதும் தயாரிப்பாளர் முருகதாஸ் ஆடிப்போய் விட்டாராம். சரிதான். அதனால்தான் ஹாலிவுட் நிறுவனமான முர்டோச்சின் பாக்ஸ் நிறுவனமும் இதில் கூட்டுத் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது. டைட்டானிக் அளவு செலவில்லாமலேயே இரண்டு பேருந்துகளை மோத வைத்து தமிழகத்தை அள்ளிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இனி இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்றால் நாம் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

திருமணம் செய்த இரசிகர்கள் இனி தினுசு தினுசாகக் காதலிக்க முடியாது என்பதால் விபத்தையும், திருமணம் செய்யாத இரசிகர்கள் விபத்தை ஒதுக்கி வைத்து காதலை மட்டும் நினைத்து திரையரங்கை விட்டு அகலுவார்கள். இதைத் தவிர இந்தப்படம் எதையும் ஏற்படுத்தாது. அப்படி ஏற்படுத்தியாகக் கூறப்படும் மொக்கை மனிதாபிமானங்கள் அனைத்தையும் இந்தத் திரைப்படம்தான் முதலில் கண்டறித்து கூறியதாக பெருமைப்படவும் முடியாது.

நல்லதங்காள் கதையை உற்பத்தி செய்த மண்ணிலிருந்து “எங்கேயும் எப்போதும்” போன்ற கதைகள் வந்து கொண்டேதான் இருக்கும். சமூக வாழ்க்கையில் கோபம் என்ற உணர்ச்சி பிறந்து செயலாக முடியாத நாட்டில் கண்ணீர், நிறையக் கண்ணீர் உதித்துக் கொண்டுதான் இருக்கும். சரிதானே?

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்