வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 6 அன்று இலண்டனின் புறநகர்ப் பகுதியான டாட்டன்ஹாம் என்ற இடத்தில் தொடங்கிய இக்கலகம், காட்டுத் தீ போல அந்நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், மேட்டுக்குடி கனதனவான்கள் வசிக்கும் மேற்குப் பகுதிகளுக்கும்; பிர்மிங்ஹாம், மான்செஸ்டர், லிவர்பூல், பிரிஸ்டால் எனப் பிற நகரங்களுக்கும் பரவியது.
இக்கலகம் நடந்த பகுதிகளில் எல்லாம் கலகக்கார இளைஞர்கள் போலீசாருடன் நேரடியான மோதலில் ஈடுபட்டனர். இக்கலகத்தின்பொழுது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆடம்பர நுகர்பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. ஆசியர்களுக்குச் சொந்தமான சில சில்லறை விற்பனைக் கடைகளும் இளைஞர்களின் தாக்குதலுக்கு ஆளாயின. சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்களுக்குள் புகுந்த இளைஞர்கள் பகட்டு வாழ்க்கையின் சின்னங்களாக அறியப்படும் நைக் ஷூ, கூச்சி ஜீன்ஸ் (Gucci jeans) போன்ற “பிராண்டட்” (Branded) நுகர்பொருட்களைத் ‘திருடி’ச் சென்றனர்; தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் இவர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
ஏறத்தாழ ஒரு வார காலம் நடந்த இக்கலகத்தை கிரிமினல் கும்பலின் நடவடிக்கை எனச் சாடியது, இங்கிலாந்து அரசு. கலகத்தின் சமூகப் பின்னணியை ஆராயாமல், அதனை ஒடுக்க ரப்பர் குண்டுகளையும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பீரங்கிகளையும் இறக்கி விடுங்கள் என ஓலமிட்டது, இங்கிலாந்து பணக்கார வர்க்கத்தின் பிரதிநிதிகளான வலதுசாரி கும்பல். மற்ற நகரங்களைவிட, சர்வதேச வர்த்தக கேந்திரமான இலண்டனில் கலகம் தீவிரமாக நடந்ததால், அதனை ஒடுக்குவதற்கு 16,000 போலீசார் இறக்கிவிடப்பட்டனர். அந்நகரில் மட்டும் கலகத்தில் இறங்கிய குற்றத்திற்காக 1,200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குப்பைத் தொட்டியைத் திருடிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட 11 வயது சிறுவனும் இவர்களுள் ஒருவன். இங்கிலாந்து நீதித்துறையும் போலீசுக்கு இணையாகப் பணக்கார வர்க்கத்தின் கையாளாகச் செயல்பட்டது. நூறு ரூபாய்கூடப் பெறாத “மினரல் வாட்டர்” பெட்டியொன்றைத் திருடிய குற்றத்திற்காக, 23 வயதான நிக்கோலஸ் ராபின்சனுக்கு ஆறு மாத சிறை தண்டனையை விதிக்குமளவு நீதித்துறை பயங்கரவாதம் தாண்டவமாடியது.
கடந்த ஆகஸ்ட் 4 அன்று இரவில் இலண்டன் நகரின் டாட்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்த மார்க் டக்கன் என்ற 29 வயதான கருப்பின இளைஞர், இலண்டன் மாநகரப் போலீசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்க் டக்கன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி, டக்கனின் உறவினர்கள் போலீசு நிலையம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டம் ஏறத்தாழ நான்கு மணி நேரம் நடந்ததெனினும், ஒரு கீழ்நிலை போலீசுக்காரன்கூட டக்கனின் உறவினர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. போலீசு நடத்திய இப்படுகொலையும், டக்கனின் உறவினர்களை அலட்சியப்படுத்திய போலீசாரின் திமிரும்தான் இக்கலகத்தைத் தொடங்கி வைத்த சிறுபொறியாக அமைந்தன.
டக்கனின் உறவினர்களை போலீசார் அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இக்கலகம் நடந்திருக்காது என சில அதிபுத்திசாலிகள் கூறிவருகின்றனர். இந்த விளக்கத்தை “ஒருவேளை” என்ற நிபந்தனையோடு மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். எனினும், அமைதியான முறையில் கோரிக்கை வைத்தவர்களிடம் போலீசார் விளக்கம் அளிக்க ஏன் முன்வரவில்லை என்ற கேள்வியை எழுப்பினால், இக்கலகத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும்.
நகர்ப்புறக் குற்றங்களைத் தடுப்பதற்காக இங்கிலாந்து போலீசாருக்கு, யாரையும் தடுத்து நிறுத்திச் சோதனையிடும் (Stop and search) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலண்டன் மாநகர போலீசார் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் புறநகர்ப் பகுதிகளில் வசித்து வரும் கருப்பின இளைஞர்களுக்கு எதிராக நடத்திவரும் அத்துமீறல்கள் ஏராளம். நகர்ப்புறச் சேரிகளில் வசித்து வரும் இளைஞர்கள், கும்பல் கும்பலாகச் சேர்ந்துகொண்டு அடிதடிகளில் இறங்குவதையும், சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் காட்டித் தனது அத்துமீறல்களை நியாயப்படுத்தி வருகிறது, இங்கிலாந்து போலீசு.
1970-களில் இறுதியில் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவிக்கு வந்த மார்க்கரெட் தாட்சர், தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கினார். இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்ததோடு, வேறு வேலை தேடவும் வழியற்றவர்களாக, முதலாளித்துவ சமூகத்திற்குத் தேவையற்றவர்களாக ஒதுக்கித் தள்ளப்பட்டனர். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியோ, அரசனை விஞ்சிய விசுவாசியாக, இத்தாராளமயக் கொள்கைகளை முன்னைக் காட்டிலும் தீவிரமாக அமல்படுத்தியது. ஒருபுறம் வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம்; மறுபுறம், சமூக நலத் திட்டங்களுக்கு வெட்டு என்ற இரட்டை நுகத்தடி அடித்தட்டு மக்களின் மீது சுமத்தப்பட்டது.
குறிப்பாக, பள்ளிப் படிப்பு முடிந்த பின், இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய மேநிலைப் பள்ளிப் படிப்புக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டு வந்த மானியமும் வெட்டப்பட்டது. இதனின் தொடர்ச்சியாக, ஓரிரு மாதங்களுக்கு முன்பு கல்லூரி படிப்புக்கான கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டது. அரசு செலவுகளைக் குறைப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இம்மானிய வெட்டுகள், அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தற்குறிகளாக, வேலை வாய்ப்பற்ற விட்டேத்திகளாக மாற்றியது.
இங்கிலாந்தில் 1984-க்கும் 2007-க்கும் இடைப்பட்ட 13 ஆண்டுகளில், 16 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளில் 40 சதவீத வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. அந்நாட்டில் தற்பொழுது 18 சதவீத இளைஞர்கள் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்ல வழியற்றவர்களாக ஆக்கப்பட்டு, சமூகத்தின் கடைகோடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நகர்ப்புறத்தில் வசிக்கும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 வயது சிறுவன்கூட ஏதாவதொரு கும்பலில் சேர்ந்து ஊரைச் சுற்றுவது சர்வசாதாரணமாகிவிட்டது. அந்நாட்டில் கும்பல் நடவடிக்கைகள் (gand activity) வேரூன்றியதன் பின்னணி இதுதான்.
போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், தம்மை வஞ்சித்துவிட்ட சமூகத்திற்கு எதிராகவும் நகர்ப்புற ஏழை இளைஞர்கள் மத்தியில் கனன்று கொண்டிருந்த கோபம்தான், டக்கனின் கொலையையடுத்துக் கலகமாக மாறியது. இக்கலகத்தில் கருப்பின இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தர வெள்ளையின இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்துவரும் ஊழியர்கள் எனப் பலத் தரப்பட்டவரும் கலந்து கொண்டதால், இதனை இன மோதலாகச் சித்திரிக்க முடியாமல் போனது. எனினும், சங்கிலித் தொடர் கடைகள் சூறையாடப்பட்டதை மட்டும் பெரிதுபடுத்தி, இக்கலகத்தைச் சமூக விரோத கிரிமினல் நடவடிக்கையாக முத்திரை குத்தியது, இங்கிலாந்தின் ஆளும் கும்பல்.
பொதுமக்களின் சாலை மறியல் போராட்டங்களைக்கூடத் தனக்கு ஏற்படும் இடையூறாகக் கருதும் குறுகிய புத்திகொண்ட நடுத்தர வர்க்கத்திற்கு, கடைகளைச் சூறையாடுவது அரசியல் நடவடிக்கையாக, ஏழைகளின் வர்க்க கோபமாகத் தெரியப் போவதில்லை. இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரிட்டிஷ் வானொலிக்கு பேட்டியளித்த இரண்டு கலகக்கார்கள், “நாங்கள் எதை விரும்புகிறோமோ, அதை எங்களால் செய்ய முடியும் எனப் பணக்காரக் கும்பலுக்குக் காட்டுவதுதான் இந்தக் கலகம்” எனத் தெளிவுபடுத்தினார்கள். “இக்கலகம் சமூக எதிர்வினை என்றால், குக்கி ஜீன்ஸ் பேண்ட் எங்களுக்கும் தேவை என்பதற்கான சமூக எதிர்வினைதான் இது’’எனப் புரிய வைத்தார், கருப்பின இளைஞர் ஒருவர்.
‘‘கலகம் நடந்த இடங்களிலெல்லாம் போலீசாரோடு மோதுவதுதான் இளைஞர்களின் முதல் நோக்கமாக இருந்தது. கடைகளில் புகுந்து சூறையாடுவதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சமானதுதான். இக்கலகத்தின்பொழுது நடந்த மோதல் எதிர்மோதல் என்ற அடிப்படையில்தான் தனிநபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், பிர்மிங்ஹாமில் மூன்று முசுலீம் இளைஞர்கள் கொல்லப்பட்டதையும் பார்க்க முடியுமே தவிர, இச்சம்பவங்களைத் தனியாகப் பிரித்தெடுத்து கிரிமினல் நடவடிக்கையாகச் சித்தரிப்பது ஆளும் கும்பலின் வர்க்க வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது” என மைக் மார்குஸீ என்ற பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.
1970-களில் தாராளமயக் கொள்கைகளைப் புகுத்தி, பேராசையே சிறந்தது எனப் பிரச்சாரம் செய்து, நுகர்வுவெறிக் கலாச்சாரத்தில் சமூகத்தையே மூழ்கடித்த பிரிட்டிஷ் ஆளும் கும்பல், இக்கலகத்தைக் காட்டி இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கக் கேடு மலிந்துவிட்டதாகக் குற்றஞ் சுமத்துகிறது. வீட்டு மனைக் கடன் சூதாட்டத்தின் மூலம் பொதுமக்களின் சேமிப்புகளையெல்லாம் சுருட்டிக் கொண்ட பிரிட்டிஷ் வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான அரசு மானியங்களையும் வாரிக் கொடுத்த பிரிட்டிஷ் அரசு, ஜீன்ஸ் பேண்டையும், சாக்லெட்டையும் எடுத்துச் சென்ற இளைஞர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டுகிறது. சாத்தான் வேதம் ஓதுகிறதோ?
__________________________________________________
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
_______________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
http://www.nichamam.com/2011/11/blog-post.html#comment-form
அமெரிக்காவில் ஒரு சோசலிச அரசு அமைந்த பிறகும் கூட அமார்க்ஸ் போன்றவர்கள் இது போன்ற அபத்தக் கட்டுரைகளை தீட்டுவார்கள் என்று நம்புவோம். பின்னே அவருடைய கம்யூனிச விரோத தத்துவத்தை பிரயோகிக்க வேண்டாமா என்ன !
///2009ல் இது போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்து, அன்றைய வரி விதிப்புக் கொள்கைகளை எதிர்த்துக் களம் இறங்கிய ‘டீ பார்ட்டி’ என்கிற அணிதிரட்சி இவ்வாறு கையகப்படுத்தப்பட்டது ஒரு சமீபத்திய அமெரிக்க எடுதுக்காட்டு.///
டீ பார்ட்டி என்கிற கும்பல் ஆளும் வர்க்கத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மக்கள் போராட்டங்களை நிறுவனமயமாக்க அமெரிக்க ஆளும் வர்க்கத்தாலேயே உருவாக்கப்பட்ட வலதுசாரி பிற்போக்கு அமைப்பு தான் டீ பார்ட்டி.
http://www.nichamam.com/2011/11/blog-post.html#comment-form