Sunday, October 13, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்!!

தண்ணீர்க் கொள்ளையை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்!!

-

மக்கள் திரள் போராட்டம் என்பது பகுதியளவிலும் நடைபெறக் கூடியது. பகுதி மக்களை ஒன்று திரட்டி அவர்களது இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களை தடுத்து நிறுத்த முடியும் என்பதை விருத்தாசலம் பகுதி மனித உரிமை பாதுகாப்பு மையம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.

விருத்தாசலம் எம்.ஆர்.கே.நகர் ஆலடி ரோடு குடியிருப்பு பகுதியில் ‘விருதை மினரல்ஸ்‘ என்ற பெயரில் ஒரு கம்பெனியை நிறுவி, போர் போட்டு தண்ணீர் உறிஞ்சி விற்க சிலர் முயன்றனர்.

இதனை தடுத்து நிறுத்த குடியிறுப்பு பகுதி முழுவதும் தண்ணீர் கொள்ளையைப்பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வீடு வீடாகச் சென்று புகார் மனு வாங்கி மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. தண்ணீர் கம்பெனி முதலாளிக்கு ஆதரவாக சமரசம் பேச முயன்றவர்களை திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

ஆனாலும் மக்கள் போராட்டத்தை அலட்சியம் செய்துவிட்டு தண்ணீர் கம்பெனிக்கான தொடக்க விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது. துவக்க விழா அன்று மக்களை திரட்டி முற்றுகை போராட்டத்தையும், சாலை மறியலையும் ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’ நடத்தியது. பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள், ‘உரிய அனுமதி பெறாமல் திறக்கக் கூடாது’ என தண்ணீர் கம்பெனி முதலாளிக்கு வலியுறித்தினர்.

இதனையடுத்து ‘விடுதலை சிறுத்தைகள்’ கட்சியின் மாவட்ட செயலாளர் படை பரிவாரங்களுடன் வந்து, ‘நம்ம பையன்தான் அந்த தண்ணீ கம்பெனியை லீசுக்கு எடுத்து நடத்த போறான். உங்களுக்கு என்ன பிரச்சினை ஏன் தடுக்கீறிர்கள்?’ என கேட்டபோது, ‘தண்ணீர் எடுத்து விற்பதற்காக குடியிருப்பு பகுதியில் போர் போடுவதை அனுமதிக்க முடியாது…’ என்று தீர்மானமாக கூறிவிட்டு அதன் அரசியலும் விளக்கப்பட்டது. இதற்கு அவர், ‘இங்க மட்டும் போராட்டம் பண்ணி என்ன பயன்? மூவ்மெண்ட் பெரிசா வரணும்’ என்றார். ‘நீங்களும் பெரிய மூவ்மெண்ட் தானே… போராடலாமே?’ என்று கேட்டதற்கு ‘மக்கள் கொடுத்தா வாங்கிக்குவாங்க… எங்க போராடப் போறாங்க?’ என்றார். உடனே அவருக்கு சிங்கூர், நந்திகிராமில் நடத்த மக்கள் போராட்டத்தின் அனுபவம் விளக்கப்பட்டது.

‘வெளிநாட்டுல நடக்கிறத பத்தி பேசாதீங்க. நம்ம நாட்ல நடந்தா சொல்லுங்க…’ என்றவரிடம், நந்திகிராம், சிங்கூர் இந்தியாவில் இருப்பதை விளக்கிவிட்டு, ‘யார் தண்ணீர் கம்பெனி ஆரம்பித்தாலும் தடுப்போம். நீங்கள் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக எங்களுடன் வரவேண்டும்’ என்று புரிய வைத்தப் பிறகு ‘சரி’ என கிளம்பி விட்டார்.

இடையில் மீண்டும் அதிகாரிகளையும், கட்சிக்காரர்களையும் சரிகட்டி, ஒருசில துறையில் மோசடியாக அனுமதி பெற்று கம்பெனியை திறக்க முயன்றனர். அனுமதி வழங்கிய நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உடனே நகராட்சி ஆணையர், ‘நாங்கள் அனுமதி கொடுக்க வில்லை’ என எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். ‘தண்ணீர் கம்பெனிக்கு விருத்தாசலம் நகரத்தில் எங்கும் அனுமதி கொடுக்க கூடாது’ என்பதை வலியுறித்தி போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் 12.10.2011 அன்று மதியம் 3.30 மணியளவில் மினி டெம்போவில் 100க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களில் வெவ்வேறு லேபிளில் தண்ணீரை எடுத்துச் செல்ல முயன்றனர். மக்களின் துணையுடன், வண்டி மறிக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் சென்று ‘தண்ணீயை கொள்ளையடிக்கிறார்கள்… வாங்க வாங்க’ என எழுப்பிய அறைகூவலுக்கு நல்ல பலன் கிடைத்தது.

மக்கள் வண்டியில் ஏறி வாட்டர் கேன்களை கீழே தள்ளி, ஒவ்வொன்றையும் போட்டு உடைத்தனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ‘தண்ணீ கம்பெனிக்கு  சீல் வைக்காமல் இங்கிருந்து போக மாட்டோம்…’ என மக்கள் ஒன்றிணைந்தார்கள்.

‘நாங்கள் பூட்டுகிறோம். அதிகாரிகள் தேர்தல் வேலையாக உள்ளார்கள்…’ என காவல்துறையினர் சொன்னதை மக்கள் ஏற்கவில்லை. ‘கம்பெனியை பூட்டாமல் இங்கிருந்து அகல மாட்டோம்…’ என கம்பெனியின் உள்ளே மக்கள் செல்ல முயன்றனர்.

உடனே காவல் துறை துணை ஆய்வாளர், தானே முன்வந்து இரண்டு கேட்டையும் பூட்டினார். தாசில்தார் வந்து, ‘எனக்கு சீல் வைக்கும் அதிகாரம் கிடையாது. உங்கள் கோரிக்கையை கண்டிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் உரிய அதிகாரிக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்கிறேன்…’ என உறுதியளித்தார்.

‘போராடும் மக்கள் சார்பில் இங்கே மீண்டும் தண்ணீர் எடுத்தால் அனுமதிக்க மாட்டோம். இன்றைக்கு தண்ணீர் கேனை உடைத்தோம். நாளை தண்ணீர் கம்பெனியை உடைப்போம்’ என்ற முடிவை அதிகாரிகள் முன்னிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் அறிவித்தது. தாசில்தார் அந்த சூழலுக்கு செல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டு சென்றார்.

__________________________________________________________

 – மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்.

___________________________________________________________

  1. விருதாச்சலத்தில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் உள்ள பல முதலைகளுக்கு இது ஒரு முன்னறிவிப்பாக இருக்கும். விருதை மக்களுக்கு நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க