privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!

சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!

-

‘உடலில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத எவரேனும் இருந்தால் என்னோடு வாருங்கள். ஐரோப்பிய ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அழித்து விட வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது எனது அடிமயிருக்குச் சமமானது’ என்று 1801-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட தனது திருச்சிப் பிரகடனத்தில் அன்றைக்கு வாணிபம் செய்ய வந்து நாட்டையே ஆக்கிரமிக்கத் துடித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வீழ்த்த மக்களை அறைகூவி அழைத்தார் சின்ன மருது. தலை சாய மறுத்த அந்த வீரம் ஆற்காடு நவாப் போன்ற கைக்கூலிகளாலும்  கௌரி வல்லப உடையத் தேவன் போன்ற துரோகிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது.

இரண்டு நூற்றாண்டுகள் கழிந்து போயின.  இன்றோ ‘ஐரோப்பியர்களே அமெரிக்கர்களே வாருங்கள். வந்து விரும்பிய வண்ணம் வாணிபம் செய்யுங்கள். உங்களுக்காக எங்கள் கதவுகள் திறந்தேயிருக்கும்’ என்று காலில் விழுந்து கூப்பிடுகிறார் உலகவங்கியின் கைக்கூலி மன்மோகன் சிங். வல்லபத் தேவன்களோ பல வண்ணங்களில் பல வடிவங்களில் அந்நிய மூலதனத்தின் பாதங்களை நக்கிக் கிடக்கிறார்கள். ஆங்கில ஊடகங்களின் அறிவுஜீவிகளாக, தமிழ் வலைப்பதிவின் மொக்கைகளாக இந்த துரோகம் எடுத்திருக்கும் வடிவங்கள் எண்ணிறந்தவை.. இவர்கள் வைக்கும் வாதங்களின் சாராம்சம் ஒன்று தான் – “அண்ணாந்து பாருங்கள்; எருமை ஏரோபிளேன் ஓட்டுகிறது”

சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகைசெய்யும் மசோதாவொன்று பாராளுமன்றத்தில் நிறைவேறவுள்ளது. பெருவாரியான மக்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வலையுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் அந்நிய மூலதனத்தை ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.

அண்ணாச்சி ஏமாற்றுவார் அம்பானி ஏமாற்றமாட்டார்!

“அண்ணாச்சிகள் வாங்கும் பொருட்களுக்கு பில் போடுவதில்லை. சிட்டையில் தான் எழுதிக் கொடுக்கிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் அரசுக்கு வரியிழப்பு ஏற்படுகிறது. அரசை ஏமாற்றிய அண்ணாச்சி, அந்தப் பணத்தைக் கொண்டு சென்னைக்கு வெளியே நிலங்களை வளைத்துப் போட்டுக் கொள்கிறார். இதே கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தால் ஒழுங்கான கம்ப்யூட்டர் பில்லிங் இருக்கும். வரி ஏய்ப்பும் இருக்காது.” இது அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் ‘உருப்படாத’ பதிவர் ஒருவரின் கண்டுபிடிப்பு.

அண்ணாச்சி ஏமாற்றுகிறாரா என்பதை பிறகு பார்ப்போம். அம்பானி யார் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். வெறும் மண்ணையும் கல்லையும் பெட்டியில் அடைத்து ‘ஒழுங்காக’ பில் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தி ஏற்றுமதி மானியம் வாங்கிய ஒழுக்க சீலர் தான் சீனியர் திருட்டுபாய் அம்பானி. அவரின் சீமந்த புத்திரனோ வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக கள்ளக்கணக்கெழுதி ‘ஒழுங்காக’ பில் போட்டு தான் 1300 கோடிகளை தேட்டை போட்டவர்.

வரியேய்ப்பு செய்து அரசுக்கு பட்டை நாமம் போடுவதில் ரிலையன்ஸ் உள்ளூர் கேடி என்றால் வால்மார்ட் சர்வதேச மொள்ளமாறி. தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை  கடைக்கான வாடகையாக செலுத்துவதாக கள்ளக் கணக்கெழுதி அதற்கு வரிவிலக்குப் பெற்றுள்ளது வால்மார்ட். இதில் சம்பந்தப்பட்ட இடங்களும் வால்மார்ட்டிற்கே சொந்தமானவை என்பது பல பத்திரிகைகளால் அம்பலப்படுத்தப்பட்டது. தானே தனக்கே செலுத்திய வாடகைக்கு வரிவிலக்குப் பெற்றதில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை வரியேய்ப்பு செய்துள்ளது. இது மட்டுமின்றி எந்தெந்த வகைகளில் வரி ஏய்ப்பு செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல ‘எர்னஸ்ட் & யங்’ என்கிற தனியார் கணக்குத் தணிக்கை நிறுவனத்தை அமர்த்திக் கொண்டிருக்கும் வால்மார்ட் அடித்திருக்கும் கொள்ளையின் அளவு இன்னதென்று தெரியாமல் மேற்குலக நாடுகளே முழிபிதுங்கி நிற்கின்றன.

எர்னஸ்ட் & யங் நிறுவனத்தை அமர்த்திக் கொள்ளும் வசதிகளெல்லாம் நம்ம அண்ணாச்சிகளுக்குக் கிடையாது தான். அவர்கள் சாமர்த்தியமெல்லாம் ரெண்டு கீத்து தேங்காய் பத்தைக்கு மூன்று ரூபாய் என்று சிட்டையில் எழுதிக் கொடுப்பதோடு சரி. காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் அண்ணாச்சிகளின் உழைப்பு இரவு பன்னிரண்டு வரை நீளும். அவர் மட்டுமின்றி அவர் குடும்பமே சேர்ந்து உழைத்தாலும் நாளொன்றுக்குக் கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் நானூறில் இருந்து ஐநூறு ரூபாய்களாக இருந்தாலே ஆச்சரியம் தான். இதில் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் தக்காளி வெங்காயம் விற்கும் அண்ணாச்சிகளால் கம்ப்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் பார்க்க முடியுமா?

கூடையில் காய்கறி சுமந்து வரும் கிழவி பில் போட்டு வியாபாரம் செய்ய வேண்டும், ஒன்றையணா வியாபாரம் பார்க்கும் அண்ணாச்சி பில் போட்டுக் கொடுக்க வேண்டுமென்றெல்லாம் நியாயவாதம் பேசும் இந்த அல்பைகள் ஒன்றரை லட்சம் கோடிகளுக்கும் மேல் வங்கிகளுக்கு நிலுவை வைத்திருக்கும் ரிலையன்ஸ் பற்றி எத்தனை முறை பேசியிருப்பார்கள்? ரிலையன்சும் வால்மார்ட்டும் லட்சக்கணக்கான கோடிகளில் அரசை ஏமாற்றுவதைக் கண்டுகொள்ளாமல் அவனையும் தெருமுனையில் தள்ளுவண்டியைத் தள்ளி வரும் வியாபாரியையும் ஒரே தராசில் நிறுத்துவதை என்னவென்று அழைக்கலாம்?

உழைப்புச் சுரண்டல், ஒரு சாதி ஆதிக்கம், வேலைவாய்ப்பு!

“மளிகைக் கடைகள் நடத்தும் அண்ணாச்சிகள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து என்ஜினியராகவோ டாக்டராகவோ ஆக்க விரும்புகிறார்கள் நீங்கள் அதைத் தடுத்து விட்டு கடையையே கட்டிக் கொண்டு அழட்டும் என்கிறீர்களா?” என்கிறார் உருப்படாத பதிவர். தலைகீழாய்த் தொங்கும் பதிவரோ, இப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே வியாபாரிகளாக இருக்கிறார்கள் என்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் வந்தால் எல்லோருக்கும் வேலை கிடைக்குமே என்றும் சொல்கிறார். அண்ணாச்சிகள் தங்கள் கடைகளில் வேலை செய்பவர்களிடம் உழைப்புச் சுரண்டல் செய்கிறார்களே என்கிறது இன்னொரு அரைவேக்காடு.

மளிகைக் கடை நடத்துவது அத்தனை இழிந்தது என்றால் அதில் ஏன் சாம் வால்ட்டன் வாரிசுகளுக்கும் அம்பானியின் வாரிசுகளுக்கும் இத்தனை ஆர்வம்? அவர்களிடம் போய் படித்து இன்ஜினியர்களாகச் சொல்ல வேண்டியது தானே? ஊரில் விவசாயம் பட்டுப் போய் பிழைக்க வேறு வழியின்றி வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வந்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் தம் தொழிலை இழிந்ததாகக் கருதுவதில்லை. தமது வாரிசுகளும் தம்மைப் போலவே சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதே அவர்களது விருப்பமாக இருக்கும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைத்து சிறுவியாபாரிகளின் வயிற்றில் அடிக்க விட்டுவிட்டு இப்போது படித்து வேலைக்குப் போகட்டுமே  என்று நொண்ணாட்டியம் பேச அசாத்தியமான திமிர் வேண்டும்.

அடுத்து சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவது குறிப்பிட்ட ஒரே சாதி தானென்பதும் அதனால் உருவாகும் வேலை வாய்ப்புகள் போவதும் அதே சாதியினருக்குத் தானென்பதும் அடிப்படையில்லாத வாதம். இந்தியாவில் சுமார் நான்கு கோடிகளுக்கும் மேல் இருக்கும் சிறு கடைகளை பல்வேறு சாதிகளையும் வெவ்வேறு மதப் பின்னணி கொண்டோரும் தான் நடத்துகிறார்கள். அதே போல், இந்தக் கடைகளை நம்பி வாழும் கோடிக்கணக்கான ‘லைன் வியாபாரிகளும்’ பல சமூகங்களைச் சார்ந்தவர்கள் தான்.

பட்டை கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை மொத்தமாக வாங்கி பாக்கெட்டுகளில் அடைப்பது , கடலை மிட்டாய் போன்ற சிறிய தின்பண்டங்கள் தயாரிப்பது, பல்வேறு சிறிய பொருட்களை சாஷேக்களில் அடைப்பது போன்ற சிறு தொழில்களைச் செய்யும் லைன் வியாபாரிகள், அவற்றை ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கி சப்ளை செய்கிறார்கள்.

இந்த மொத்த வலைப்பின்னலையும் ஒரிரு பன்னாட்டுக் கம்பெனிகளுக்குக் காவு கொடுப்பதற்காகவே இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. வால்மார்ட்டோ-ரிலையன்ஸோ இந்த வியாபாரிகளிடம் சின்னச் சின்ன சாஷேக்களில் பொருட்கள் ஆர்டர் கொடுக்க முன்வரமாட்டார்கள். அவர்கள் டீலிங்கே பெரு முதலாளிகளிடம்தான். விலை அவர்கள் நிர்ணயிப்பதாகத் தானிருக்கும். தினக்கூலிக்குப் போகும் சாதாரண ஏழை உழைக்கும் மக்கள் தங்களது அன்றாட சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஐந்து அல்லது பத்து ரூபாய்களுக்குக் கிடைக்கும் இந்த சாஷேக்களில் வாங்கும் வாய்ப்பை மறுத்து, தேவை இருக்கிறதோ இல்லையோ அரைக்கிலோ அல்லது ஒரு கிலோவாக வாங்க வேண்டிய நிர்பந்தத்தைத் தான் சில்லறை வணிகத்தில் நுழையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்டாக்கப் போகின்றன.

இந்த நிறுவனங்களால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று நீட்டி முழக்கும் இந்த நடுத்தரவர்க்க அல்பைகள், இதே நிறுவனங்களில் மேலை நாடுகளில் நடக்கும் உழைப்புச் சுரண்டல் குறித்து மூச்சு கூட விடுவதில்லை. வால்மார்ட் தனது சீன உற்பத்தி அலகுகளான அடிமைக் கூடாரங்கள் (sweat shops) மூலம் அடிப்படை மனித உரிமைக்கே எதிரான தொழிற்கொள்கைகளைக் கொண்டிருப்பதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். நாளொன்றுக்கு 16 மணி நேரங்கள் உழைக்க நிர்பந்திப்பது, மிகக் குறைந்த கூலி, தொழிற்சங்கம் கட்டும் உரிமை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உழைப்புச் சுரண்டலின் மூலம் தான் இவர்கள் லாபத்தைக் குவிக்கிறார்கள்.

சொந்தக்காலில் நின்று கவுரவமாக பிழைக்கும் சொந்த நாட்டு மக்களைத் தொழிலிருந்து விரட்டியடித்து விட்டு வால்மார்ட்டின் ஸ்வெட் ஷாப்ஸூக்கு துரத்துவதைத் தான் வேலைவாய்ப்பு என்று மன்மோகன் சிங்கிலிருந்து இங்கே தமிழில் வலைபதியும் தலைகீழாய்த் தொங்கும் வவ்வால் வரை பெருமையாகக் கூவுகின்றனர்.

அங்காடித் தெருவின் அண்ணாச்சிகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் தான் – ஆனால், அந்தத் தொழிலாளிகளுக்கு அதிலிருந்து மீண்டு சொந்தமாய்த் தொழில் தொடங்கும் ஒரு வாய்ப்பு ஓரளவுக்காவது இருக்கிறது. ஆனால், வால்மார்ட் நடத்தும் அடிமைக் கூடாரத்திலிருந்து மரணத்தைத் தவிர்த்த வேறொரு வாய்ப்பு சர்வநிச்சயமாய் இல்லை. இவர்களையும் அவர்களையும் இணைவைத்துப் பேசுவதே அயோக்கியத்தனம்.

அண்ணாச்சிகள் மதிப்பதில்லை; வால்மார்ட் மதிக்கிறான்

“சார் அண்ணாச்சி கடைக்குப் போனா அவரு மதிக்கவே மாட்டாருங்க. தெரிஞ்சவங்க வேண்டியவங்களுக்கு முதல்ல பொருள் குடுத்துட்டு நம்மை கடைசில தான் கவனிப்பாங்க. அதே மாதிரி தெருவில தள்ளு வண்டில வரும் வியாபாரி கிட்ட பேரம் பேசியே தாவு தீரும்ங்க. ஆனா, அங்க பாருங்க ஒவ்வொரு காய்கறிக்கும் தெளிவ்வ்வ்வா எம். ஆர்.பி போட்ருக்கான் பாஸ். அப்புறம் சென்ட்ரலைஸ்டு ஏசி.. நல்ல கஸ்டமர் சர்வீஸ்.. பாத்தா சிரிக்கிறான் சார்.. அவன் ரேஞ்சே தனி பாஸ்” என்கிறார்கள் இந்த அடிமைகள்.

உண்மை தான். வால்மார்ட் போனால் பளபளப்பான சிரிப்பும் ஏசி குளிரும் உங்களை வரவேற்கத்தான் செய்யும். கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வசதி கூட உண்டு – ஆனால், சிகரெட் கார்டு பயன்படுத்தும் வசதி இருக்குமா? வாரக் கூலிக்கும் சொற்ப மாதச் சம்பளத்துக்கும் வேலை பார்க்கும் சாதாரண உழைக்கும் மக்கள் சிகரெட் அட்டையின் பின்புறத்தில் எழுதி அக்கவுண்ட் வைத்துக் கொண்டு வாரா வாரம் சனிக்கிழமையோ ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதியோ சம்பளம் கிடைத்ததும் திருப்பிச் செலுத்தும் முறை வால்மார்ட்டில் இருக்காது – அந்த வசதி அண்ணாச்சிக் கடையில் தான் உண்டு.

உலகின் முதல் பத்து பணக்காரர்களில் சாம் வால்டனின் குடும்பத்தவரே மூன்று நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர். இது போன்ற பகாசுர பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளோடு சாதாரண மளிகைக் கடை அண்ணாச்சியை மோதவிட்டு அவர்களின் தொழிலைத் துப்புரவாக ஒழித்துக் கட்டிவிட்டால் சாதாரண மக்கள் எங்கே போவார்கள்?

வால்மார்ட்டின் வருகை சிறுவணிகர்களை பாதிக்காதா?

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் வால்மார்ட்டின் வருகையையும் முதலாளித்துவ ஊடகங்களில் வெறிகொண்டு ஆதரித்து எழுதி வரும் அமெரிக்க பூட்சுநக்கிகளோ, வால்மார்ட்டால் சாதாரண சிறு வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள். வால்மார்ட்டின் சேவையும், சிறுவணிகர்களின் சேவையும் வேறு வேறு வகையானது என்றும், அங்கே செல்பவர்கள் அங்கே செல்வார்கள் இங்கே வருபவர்கள் இங்கே வருவார்கள். யாரும் யாரையும் அழித்து விட முடியாது; அவரவர் தொழில் அவரவர்க்கு இருக்கும் என்கிறார்கள்.

மேலும் ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஆர்.பி.ஜி குழுமம், பார்த்தி போன்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் வருகை பாதிப்பு எதுவும் ஏற்படுத்தாது என்றும் சொல்கிறார்கள்.

நுகர்வுச் சந்தையை வால்மார்ட் கைப்பற்றினால் சிறுவணிகர்களின் கதி என்னவாகும் என்பதற்கு பல்வேறு நாடுகளின் உதாரணங்கள் நம் கண்முன்னேயே உள்ளது என்பது ஒரு பக்கமிருக்க நமது சொந்த அனுபவமே இவர்களின் கூற்றுக்கு முரணானதாக இருக்கிறது.  தொன்னூறுகளில் கொக்கோ கோலாவும் பெப்சியும் இந்தியச் சந்தைக்குள் நுழைவதற்கு முன் ஆயிரக்கணக்கான சுதேசி பானங்கள் தயாரிப்பில் இருந்தன. இன்றோ அவையனைத்தும் மொத்தமாக அழிந்து போய் விட்டது. தனது போட்டி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் தயங்காமல் ஈடுபட்டன இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும். பல லட்சம் மக்களை வாழ வைத்துக் கொண்டிருந்த சிறு தொழில்கள் அழிந்து இன்றோ இரண்டே இரண்டு நிறுவனங்களின் கையில் மொத்த சந்தையும் சிக்கிக் கொண்டிருக்கிறது.

பிரேசிலில் வால்மார்ட் நுழைந்த பத்தே ஆண்டுகளில் தெருவோர காய்கறி அங்காடிகள் 27% சதவீத அளவுக்கு மூடப்பட்டிருக்கிறது. அர்ஜென்டினாவிலோ பத்தே ஆண்டுகளில் 30% சிறுகடைகள் இழுத்து மூடப்பட்டு, இந்தத் துறையின் வேலை வாய்ப்பு 26 சதவீத அளவிற்கு குறைந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சில்லறை வர்த்தகத்தில் 60 சதவீத அளவுக்கு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன.

சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை உண்டாக்கியுள்ள பாதிப்பைப் புரிந்து கொள்ள சிக்கலான புள்ளிவிவரங்கள் தேவையில்லை. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சியிடம் கேட்டாலே விளக்கமாகச் சொல்வார். சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட வியாபாரம் குறைந்து போயுள்ள நிலையில் அதை ஈடுகட்ட மளிகை வியாபாரத்தோடு சேர்த்து செல்போன் ரீசார்ஜ், பால் பாக்கெட் போடுவது, தண்ணீர் விற்பது என்று நிறைய சிறு சிறு வேலைகளைச் செய்கிறார்கள். பேரங்காடிகளுக்கு அருகில் இருக்கும் சாதாரண அண்ணாச்சிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வியாபாரத்தில் பாதிதான் இன்று நடக்கிறது. வருமானமும், விற்பனையில் இலாபமும் கணிசமாக குறைந்திருக்கிறது.

உள்ளூர் அளவிலான காய்கனிச் சந்தையில் நுழையும் ரிலையன்ஸ், மொத்தமாக காய்கனிகளை வாங்கிச் செல்கிறது. மொத்த வியாபாரிகளுக்கு பத்து கிலோ இருபது கிலோ என்று விற்பதில் கிடைக்கும் லாபத்தை விட இதில் குறைந்த லாபமே கிடைக்கிறது என்றாலும், நீண்ட நேரம் அழுகிப் போகும் தன்மை கொண்ட பொருட்களோடு சந்தையில் அமர்ந்திருக்க வேண்டியதைத் தவிர்க்க வேறு வழியின்று குறைந்த லாபத்துக்கு ரிலையன்ஸிடம் விற்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். ஒன்றை கவனிக்க வேண்டும் – பலரும் சொல்வது போல் ரிலையன்ஸ் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நேரடிக் கொள்முதல் செய்வதில்லை. தேவைப்படும் போது கமிஷன் மண்டி ஏஜென்டுகளிடமிருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இந்தளவுக்கு மொத்தமாக வாங்கும் அளவுக்கான சந்தையில்லாத சாதாரண அண்ணாச்சிகள் ரிலையன்ஸோடு போட்டியிட முடியாமல் ஏற்கனவே தவித்து வரும் நிலையில் அவர்களை வால்மார்ட்டுக்கு காவு கொடுக்கத் துடிக்கிறார் மன்மோகன் சிங்.

அடுத்த பகுதியில் கீழ்க்கண்ட தலைப்புகளில் பார்க்கலாம்.

  • விவசாயிகளை அழிவுக்குள்ளாக்கும் வால்மார்ட்..!
  • விலை குறையும் என்கிற ஏமாற்று.. பிற நாடுகளின் அனுபவம்
  • விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?
  • நமது நுகர்வு இன்னதென்று தீர்மானிக்கும் உரிமை!
  • வால்மார்ட்டால் அழிந்த நிறுவனங்கள் – பல்வேறு நாடுகளின் அனுபவம்
  • உற்பத்தி – வினியோகம் – நுகர்வுச் சங்கிலியின் தற்சார்பை அடகு வைத்தல் – இறையாண்மை.
  • ஏன் பிற நாடுகளில் வால்மார்ட்டை எதிர்க்கிறார்கள்?

–  தொடரும்….

______________________________________________

– தமிழரசன்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

———————