தெலுங்கு மொழிப் படங்கள் என்று சொன்னவுடனே நமக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு என கலர் கலர் காஸ்ட்யும்கள், காமாசூத்ராவை ஞாபகப்படுத்தும் நடன அசைவுகள், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து போடும் சண்டை, குத்துப் பாட்டு இவைதான் நினைவிற்கு வரும். ஆனால் இந்திய அரசையே நடுங்கச் செய்த விவசாயிகள் புரட்சி நடந்த தெலுங்கானா மக்கள் வாழும் மாநிலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டும் உன்னத படமும் தெலுங்கில் வந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
1945-1951 காலகட்டத்தில் இன்றைய ஆந்திராவில் உள்ள தெலுங்கானாவில் (அன்றைய நிஜாம் சமஸ்தானம்) நடந்த விவசாயிகளின் புரட்சியையும், அவர்களின் ரத்தமும் சதையுமான போராட்ட வரலாற்றையும், இந்திய அரசும், போலி கம்யுனிஸ்டுகளும் தெலுங்கானா மக்களுக்கு இழைத்த துரோகத்தையும் நேர்மையாக பதிவு செய்த திரைப்படம்தான் ‘மாபூமி’(எங்கள் நிலம்). இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது.
விவசாயிகளின் அவல நிலை:
இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தெலுங்கானா நிஜாம் மன்னர்களின் கீழ் ஐதரபாதை தலைநகரமாகக் கொண்டு தனி சமஸ்தானமாக இருந்தது.
மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக விவசாயிகளைக் கொண்ட இந்தப் பகுதியில், விவசாயிகள் கூலிகளாகவும், அடிமைகளாகவுமே நிலப்பிரபுக்களின் கீழ் வாழ்ந்து வந்தனர். பெரும் நிலச்சுவன்தார்கள் சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் ஏக்கர்கள் வரை தங்களுக்குச் சொந்தமாகக் கொண்டிருந்தனர். ஆளும் அரசு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. பெரும்பான்மை சட்டங்களும், காவல் துறையும், ராணுவமும், நிலப்பிரபுக்களுக்கு சாதகமாக வாலை ஆட்டிக்கொண்டு வேலை செய்தன. ஜமீன்தார்களின் அடியாட்களான ரஜாக்கர்கள் எனும் ரவுடிகளும் மக்களை கொடுமைப்படுத்தி வந்த்னார்.
நாளெல்லாம் உழைப்பு, படிப்பு கிடையாது, போதுமான மருத்துவம் கிடையாது, அரை வயிறு கால் வயிறு கஞ்சி, ஆனால் மாடு மாதிரி உழைக்க வேண்டும். போதாக்குறைக்கு நிலப்பிரபுக்களுக்கும் நிஜாம் மன்னனுக்கும் வரி கட்ட வேண்டும். எதற்கு வரி? அனைத்திற்கும் வரி; உழும் கருவிகளுக்கு வரி, திருமண வரி, பெண் வயதுக்கு வந்தால் வரி, பிறப்புக்கும் வரி, இறப்புக்கும் வரி. ஊரில் ஒரு பெண் வயதுக்கு வந்தாலோ, புதிதாக திருமணமாகி பெண் வந்தாலோ ஜமீன்தார் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும். தெலுங்கானா விவசாயியைப் பொருத்தவரை பிறக்க வேண்டும், மாடாக ஜமீன்தாரருக்கு உழைக்க வேண்டும், அனைத்தையும் ஜமீன்தாரரின் சந்தோஷத்திற்குக் கொடுக்க வேண்டும், இறுதியாக இறக்க வேண்டும்.
அப்படியிருந்த தெலுங்கானா பகுதியில் உள்ள நல்கொண்ட மாவட்டத்தில் சிரிபுரம் எனும் ஊரில் இருக்கும் ஒரு ஏழை விவசாயியான வீரைய்யா, அவன் மகன் ராமையா இவர்களிடமிருந்து கதை தொடங்குகிறது.
ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வும் அதன் குறியீடும்தான் இந்த ராமைய்யா. வளர் இளம்பருவத்தில் அவனை அந்த ஊர் ஜமீன்தாரின் வீட்டில் வேலையாளாக இழுத்து சென்றுவிடுகிறார்கள் ரஜாக்கர்கள். ராமையா சிறுவனாக, ஆடிப்பாடி விளையாடி கல்வி கற்க வேண்டிய வயதில் எருமைத் தொழுவத்தில் கடுமையாக வேலைகள் செய்வதிலிருந்து படம் தொடங்குகிறது.
அந்த ஊரில் மொத்த நிலங்களையும் வைத்திருக்கும் ஜமீன்தார் வைத்தது தான் சட்டம். ஊர் மக்கள் அவருக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். சிறு வயது முதலே அவர் கொடுக்கும் சிறு கூலிக்கு வேலை செய்ய வேண்டும். மீறினால் அவரின் அடியாள் படை அடிக்கும், திமிறினால் கொன்றுவிடும். ராமையா அந்தச் சூழலில் வளருகிறான். சமூகம் புரிய ஆரம்பிக்கிறது, தன் சூழலில் இயல்பான கோபக்கார இளைஞனாக மாறுகிறான். கோபம்தான் வருகிறது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் தாழ்த்தப்பட்ட தலித் வேறு.
சந்திரி எனும் பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த ஊரில் பெண்கள் நிலைமையோ மிகக் கொடுமையாக இருக்கிறது. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கச் செல்ல வேண்டுமென்றால் கூட அந்தப் பெண் ஜமீன்தாரின் அடியாளிடம் தன் மார்பைக் கசக்கி பால் பிழிந்து காண்பித்தால்தான் அனுமதி. வயதுக்கு வந்த பெண்கள் ஜமீன்தாரின் படுக்கைக்கும், நிஜாமின் அதிகாரிகளுக்கும் விருந்தாக வேண்டும். சமூகக் கைதியாக போராட முடியாமல் எல்லாப் பெண்களையும் போல் சந்திரியும் ஜமீன்தாரின் படுக்கைக்குச் செல்ல, ராமைய்யா கோபம் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஊரை விட்டே செல்கிறான். பல இன்னல்கள் தாண்டி ஐதரபாதில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேருகிறான்.
அங்கே கம்யுனிஸ்ட் ஒருவருடன் ராமையாவிற்கு தொடர்பு ஏற்படுகிறது. வரலாறு முழுவதும் ஒடுக்கும், ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கிடையேயான போராட்டமாகவே உள்ளதையும், அரசு என்பது ஒடுக்குபவர்களின் கைப்பாவையாக இருப்பதையும் அறிந்துகொள்கிறான். பாட்டாளிகளின் தலைமையில் அரசைக் கைப்பற்றும் கம்யுனிஸ புரட்சி ரஷ்யாவில் நடந்திருப்பதையும் அப்படி இந்தியாவிலும் கைப்பற்றி மக்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்கிறான். போராடத் துவங்குகிறான்.
தொழிற்சாலை போராட்டம் ஒன்றிற்காக சிறை செல்லும் ராமைய்யா அங்கே தன் சொந்த ஊர்க்காரரை சந்திக்கிறான். ஊரில் நிலைமை மோசமாகி எங்கும் கலவரமாக இருக்கிறது எனத் தெரிந்துகொள்கிறான். காரணம் ஊரில் புதிதாகத் தோன்றியிருக்கும் ’சங்கம்’.
’நான் ஒரு தலித்’ எனக்கு விடுதலை கிடைத்தால்தான் புரட்சி என்பதே சாத்தியம் என்றெல்லாம் ராமையா பின்நவீனத்துவமாக முதலாளிகளுக்கு சாதகமாக யோசிக்கவில்லை, அது 1945 என்பதால் மட்டுமில்லை, புரட்சியில்தான் தன் விடுதலையும் அடங்கியுள்ளது என்று தெரிந்ததாலும் இல்லை, அப்படி ஒரு கேள்விக்கான பதிலும் அவன் கண் முன்னே கிராமத்தில் காத்திருந்தது தான் காரணம். தன் கிராமம் நோக்கிப் பயணமாகிறான்.
சங்கம்:
ஜமீன்தார்களின் ஆட்டமும், நிஜாமின் அடக்குமுறையும் எல்லை மீறி விட்டது. அதனால் அது இனி தொடரமுடியவில்லை. அங்கே கம்யூனிசம் பேரிடியாக இறங்கியது. நிஜாம் மன்னனையும் நிலப்பிரபுக்களையும் குலை நடுங்க செய்தது.
பெருவாரியான நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்த ஜமீன்தார்கள் ஆட்டம் ஆடினார்கள். அந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் விவசாயிகளுக்கென சொந்த நிலம் ஏதுமில்லை, பார்ப்பனீய முறையில் சாதிகளாக பிரிந்திருந்தனர். சுரணடல் பல்வேறு படிநிலையாக, பல்வேறு வர்க்கமாக இருப்பது தான் சாதி. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வர்க்கம் குழப்பமாக பல்வேறு படிநிலையாக இருக்கும். அதிலும் இங்கே பார்ப்பனீயம் அதற்கு தத்துவத்தையும், நடைமுறையில் ஹிந்து மதத்தையும் கொண்டு மக்களை அறியாமையில் ஆழ்த்தி சுரணையற்றவர்களாக்கி இருந்தது.
தெலுங்கானா பகுதி இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் கம்யுனிஸ்டுகள் திட்டமிட்ட பரப்புரையை மேற்கொண்டனர். நிலப்பிரபுக்களுடனான பல்வேறு பிரச்சனைகளால் கூலி விவசாயிகளும், தாழ்த்தப்பட்டவர்களும் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். பலர் ஊரைவிட்டே ஓடிப் போய் நகரத்தில் தஞ்சமடைகிறார்கள். நகரத்தில் பாட்டாளியாக சாதி மதம் இனம் தாண்டி கம்யுனிஸ்டாகி கிரமத்திற்குப் பலர் திரும்புகிறார்கள். கிராமத்தில் ஏதுமற்ற கூலி விவசாயிகள் சாதியைக் கடந்து உழைப்பாளர்களாக ஒன்றுபடுகிறார்கள்.
எந்த சாதியாக இருந்தாலும் கூலி விவசாயிக்கு வரும் பிரச்சனை ஒன்று தான். ஜமீன்தாரின் கொடுமை, அடியாட்களான ரஜாக்கர்களின் கொடுமை, கையில் பணமில்லை, பசி அவர்களை ஒன்றாகத் திரட்டுகிறது. பல கோபக்கார இளைஞர்கள் போராடுகிறார்கள். சிறு சண்டைகள் உடனடி தீர்வுகளை தருகின்றன. அது பின்னர் போராட்டமாகவும், சங்கமாகவும் விரிகிறது.
ஒரு நிலத்தில் அறுவடை சமயத்தில் கூலி விவசாயிகளை ஜமீன்தாரின் ஆட்கள் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். விவசாயிகள் சாதியை மீறி ஒன்று திரண்டு அடியாட்களை அடித்துத் துரத்துகிறார்கள். அந்த நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள். தங்கள் கண் முன் தங்களின் ஒற்றுமையின் பலம் தெரிய சாதியை விடுத்து ஊர் முழுவதும் சங்கமாக சேருகிறார்கள். இப்படிப் பல சங்கங்கள் ஒன்றிணைகின்றன.
மக்கள் திரளாக போராடுகிறார்கள். அவர்கள் இவர்களுக்கு உதவுவது என பாட்டாளி சங்கங்கள் கிராமம் கிராமமாக ஒன்றிணைகின்றன. அனைவரின் எதிரி ஒருவன்தான் எனும் போது எதிரியை எதிர்த்துப் பிரிந்து போராடினால் தோல்விதான் வரும். சேர்ந்து எதிர்த்தால் வெற்றி வரும். மனித சமூகம் ஆதியில் கற்ற பாடம்தான், சில நாட்கள் மறந்து போயிருந்தது, மீண்டும் இந்த விவசாயிகளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
விவசாயிகளின் எழுச்சி நிஜாமை கோபப்படுத்துகிறது. நிஜாமின் போலிஸும் ராணுவமும் சங்க ஆட்களை நோக்கி இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைகிறார்கள். மக்கள் அதன் தொடர்ச்சியாக ஆயுதத்தை கையிலெடுக்கிறார்கள். மக்களே தடிகளையும், கட்டைகளையும் கொண்டு எதிர்க்கிறார்கள். கைப்பற்றும் துப்பாக்கிகளை உபயோகிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். இயல்பான மக்கள் திரள், தம்மை காப்பாற்றிக்கொள்ள உயர்ந்த கலக வடிவமான ஆயுதப் போராடத்தைத் தொடுக்கிறார்கள்.
ராமையா ஊருக்கு திரும்பும் நேரம் அதுதான். ஆண்கள் முதல் பெண்கள் வரை கையில் துப்பாக்கியேந்தி போராடிக் கொண்டிருக்கும் நேரம். பல ஊர்களில் இருந்து ஜமீன்தார்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். நிலங்கள் மக்களால் கைப்பற்றப்பட்டு சங்கத்தால் மக்களுக்கே பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
அவ்வாறே ராமய்யாவும் சொந்த ஊர் சங்கத்தில் ஈடுபட்டு புரட்சிக்கு வேலை செய்கிறான். நகரத்தில் கற்றிருந்த போராட்ட முறைகள் அவனுக்கு உதவுகின்றன. தங்கள் ஊரில் உள்ள ஜமீன்தாரைத் தாக்கி அவரின் வீட்டையும் நிலத்தையும் கைப்பற்றுகிறார்கள். சங்கம் நிலத்தை பங்கிடுகிறது. ஊருக்கே பங்கிடும் ராமையாவிடம் அவன் அப்பா ஏக்கமாக கொஞ்சம் நிலத்தை கேட்கிறார். நமக்கு கடைசியில் தான் என்கிறான் ராமைய்யா, ஆனால் சங்கத்தின் தலைவர் ராமையாவின் அப்பாவிற்குநிலத்தை சரியாக பகிர்ந்து தருகிறார். இத்தனை நாள் அடிமையாக இருந்த அவர் முதல் முறை சொத்தாகக் கிடைத்த தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய மகிழ்சியுடன் செல்கிறார்.
போலி கம்யுனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்:
இந்தியாவைப் பொருத்தவரை போலி கம்யுனிஸ்டுகள் பில்டிங் ஸ்ட்ராங் தான் ஆனால் பேஸ்மெண்ட் வீக். இந்தியா முழுவதிலும் காலனியாதிக்கத்திற்க்கு எதிரான தேசிய எழுச்சி, மும்பை கப்பல் கலகம் முதல் தெலுங்கானா, கீழைத்தஞ்சை, மேற்கு வங்கம் வரை விவசாயிகளின் எழுச்சி என சகலமும் கம்யுனிஸ புரட்சிக்குத் துணையாக இருக்க மக்களும் தயாராக இருக்க, அதை எப்படி வழிநடத்த வேண்டும் என்று போலி கம்யுனிஸ்டுகளின் தலைமைக்குத் தெரியவில்லை.
அவர்கள் எந்திரகதியாக முதலாளித்துவம் முற்றிய ரஷிய மக்களின் பேரெழுச்சி பாதையைக் கொண்டே இந்தியாவில் புரட்சியை திட்டமிடுகிறார்கள். ஆனால் நாடு முழுவதும் சீரான வளர்ச்சியில்லாத போதும், அரை நிலப்பிரபுத்துவமாக இருக்கும் போதும் மார்க்ஸிய லெனினிய பார்வையில் இந்தியாவில் புதிய ஜனநாயக புரட்சிதான் செய்ய வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றவே இல்லை. இந்தியாவின் சமூக நிலைமைகளை சரியாக ஆராய்ந்து கண்டுணராத தலைமை மேலும் காங்கிரசின், காந்தியின் வாலாகவும் செயல்பட்டு தேய்ந்து போனது.
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சமகாலத்து கட்சியான சீன கம்யுனிஸ்ட் கட்சி இந்தப் பாதையை சரியாக கணிக்கிறது மாவோ, அதற்குத் தலைமையேற்று நடத்துகிறார், ஆனால் உலகத்தில் பாஸிஸத்தை வீழ்த்தி, சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய கம்யுனிஸமோ இந்தியாவில் தொளதொள தன்மையால் நீர்த்துப் போகிறது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைமை சந்தர்ப்பவாதமாக மாறி மொத்த மக்கள் போராட்டத்தையும் காவு கொடுக்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து, ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடன் சேர்ந்து கொண்டிருக்க, காஷ்மீர் மற்றும் நிஜாம் சமஸ்தானம் இந்திய ராணுவம் கொண்டு மக்களை அடக்கி இந்தியாவுடன் இணைக்கப்படுகின்றன. தெலுங்கானாவில் மக்கள் எழுந்தனர், ஆயுதம் தாங்கினர், நிலத்தைக் கைப்பற்றினர், சரிதான். அடுத்து அதை எப்படி வழிநட்த்த வேண்டும் என்று தெரியாமல், தாங்கள் அம்பலம்படுத்த வேண்டிய காங்கிரஸின் பிரதிநிதிகளாகவே மாறி போலி கம்யுனிஸ்ட்டுகள் துரோகம் இழைக்கிறார்கள்.
நிஜாமோ விவசாய எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல். நேருவிடம் நாட்டை விற்றுவிட்டுச் செல்ல, நேரு இந்திய ராணுவத்தை அனுப்பி மக்களை அடக்கி தெலுங்கானாவை இந்தியாவுடன் இணைத்துக் கொள்கிறார். போலி கம்யுனிஸ்டுகளின் துரோகம் அவர்களின் அறியாமையால் மாத்திரம் வரவில்லை, அவர்களில் பலர் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால் வந்தது. பின் நாட்களில் அவர்கள் ஓடுகாலிகளாக போய்விட்டார்கள். நேருவின் மீட்சிக்குப் பின் காங்கிரஸ் ரவுடிகளும் போலி கம்யுனிஸ்டுகளூம் இணைந்து மக்களிடமிருந்து நிலங்களை மீட்டு ஜமீன்தாரர்களுக்குக் கொடுக்கிறார்கள். நில உச்ச வரம்பு சட்டம் என தொளதொள மசோதா நிறைவேற்றப்பட்டு விவசாயிகளின் போராட்டம் காயடிக்கப்படுகிறது. ஒரு போராட்டத்தின் வீழ்ச்சி என்பது பிற்போக்கு சக்திகளை பலம் பெற செய்துவிடும். அது தான் நடக்கிறது.
போலி கம்யுனிஸ்டுகளின் சதியால் இந்த மாபெரும் விவசாய எழுச்சி துரோகமிழைக்கப்பட்டு, பிற்போக்கு சக்திகளிடம் செல்கிறது. (இந்தக் காட்சிகள் இணையத்தில் இருக்கும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது). ஆனால் ஒரு மாற்றமும் இல்லை, நாளும் போராடுகிறவனை துரோகம் என்ன செய்துவிடும்? பின் நாட்களில் ’வசந்தத்தின் இடிமுழக்கமென’ நக்சல்பாரிகளாக எழுந்தனர். இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். புரட்சியில் இடைக்காலத் தோல்வியென்பது வரலாறு தான். ரஷியாவிற்க்கு 1905 போல் சீனவிற்கும் உண்டு, அது இந்தியாவிற்கும் உண்டு, ஆனால் வரலாற்றில் பாடங்கள் படித்து தன் தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறுவது தான் மனித சமுகத்தின் இயல்பு, அது தான் விஞ்ஞானமும், அது தான் மார்க்ஸிய லெனினியமும்.
தெலுங்கானா படிப்பினைகளிலிருந்து இந்தியப் புரட்சிக்கு ரஷிய பாதை சரியாகாது என்ற படிப்பினையும் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி செய்து கொள்ள வேண்டிய சுய விமர்சனமும் செய்துகொண்டு முன்னேற வேண்டும். அது தான் ரஷியாவின் 1917. தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடி, நமக்கு அறிவைக் கொடுத்து வரலாறாக நிற்கும் எண்ணற்ற தெலுங்கானா போராளிகளுக்கு வீரவணக்கம்.
ஹீரோயிசமும் மக்கள் திரளும்:
கடந்த 40 வருடங்களாக வரும் இந்திய சினிமாக்களின் இயல்பான கதைக்களம் தான் இது, ஒரு ஊர், வில்லன், அவதிப்படும் மக்கள், அவர்களைக் காப்பாற்றும் ஹீரோ என அரதப்பழசாகிவிட்ட இந்தக் கதையை இப்பொழுது இந்தப் படத்தில் பார்க்க முதலில் நமக்குக் கசக்கும். ஆனால் இந்தப் படத்தில் தனி நபர் ஹீரோயிசம் இல்லை, மாறாக எப்பொழுதும் உண்மையான ஹீரோவான மக்கள் திரளே இதில் ஹீரோ. ராமையா என்ற கதாபாத்திரம் கூட ஏற்கனவே சொன்னது போல் ஒரு குறியீடுதான் ஒழிய ஹீரோ இல்லை. எண்ணற்ற போராளிகளின் அந்த கிராமத்துப் பிரதிநிதிதான் ராமையா. வில்லனும் இதில் ஜமீன்தார் மாத்திரமில்லை, சந்தர்ப்பவாத கம்யுனிஸ்டுகளும் இந்திய அரசும் வில்லன்கள்தான்
இந்தியப் புரட்சியின் ஒத்திகையாக நடந்த ஒரு உண்மை மக்கள் எழுச்சியின் கலை ஆவணம்தான் இந்தப் படம். கவனமாகப் பார்த்து படிப்பினைகளைக் கற்றுகொள்ளுங்கள்.
– ஆதவன்.
ஏற்கனவே “எர்ர மல்லிலு”, மற்றும் “ஈ நாடு” போன்ற புரட்சிபடங்களை எடுத்து புரட்சி செய்து ஓயந்து கிடக்கிறோம். இதில் நீர் வேறு இம்சை தருகிறிர்கள்.
நில உச்ச வரம்பு சட்டம்முன்னு ஒரு போங்காட்ட சட்டத்த போட்டு, எப்படி எல்லாம் நிலத்தை பினாமி பேரில் மாத்திக்கிட்டானுங்க. எந்த சட்டமும் சுரண்டுபவர்களுக்கு சாதகமாக இருக்கு. சட்டத்தை எப்படி நம் வசதிக்கு பயன்படுத்தலாம் என்று மாற்றிக்கொண்டார்கள். சட்டத்தால் ஒரு செயல் நடக்காது என தெரிந்த பிறகும் சாட்டையை கையில் எடுக்காமல் இருப்பது நம் தவறு.
கம்யூனிஸ்ட்டு பார்ட்டீகி ஜெய்! என்ற கோஷத்துடன் ஆர். நாராயணமூர்த்தி நிறைய படங்களை எடுத்துத் தள்ளுகிறார். அதுவும் தெலங்கானா முத்திரையுடன். ஆந்திர மஹா சங்கம், ஆந்திர மஹா சபை, கம்யூனிஸ்ட்டு பார்ட்டி ஆகியவற்றைத் துதி பாடி பல படங்களை ஆண்டுக்கு ஒன்றாக எடுத்துத் தள்ளுகிறார். ஆனாலும், ஆந்திர மக்கள் இவரை மதித்ததாகத் தெரியவில்லை.
1985களில் ஆரம்பத்தில் தெலுங்கில் புரியாமல் பார்த்தது.ஆதவனுக்கு நன்றி!
சும்மா எப்பப் பார்த்தாலும் புரட்சி, புரட்சின்னு கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி அதே பல்லவியைப் பாடுவது போர் அடிக்கவில்லை?
உலக சினிமா, உலக இலக்கியம், புத்தகத் திருவிழா, லோக்பால், கோபால், இசை விழா, திரை விழா, மார்கழி மகத்துவம், மருந்தில்லா மருத்துவம், சனிப் பெயர்ச்சி, சசிப் பெயர்ச்சி, சாரு, சுஜாதா, இரும்புக்கை மாயாவி, ஸ்டாலின் (ஐயையோ, இது மு.க.ஸ்டாலின்!), கடலூர் தானே, அலங்காநல்லூர் காளே என்று தமிழ்நாட்டில் விஷயத்துக்கா பஞ்சம்? அதைவிட்டுட்டு எப்பப்பார் இந்தப (நடக்காத) புரட்சிப் புடலங்காய்தான்!
அனானி என்ற பெயரில் அனுப்பிய மறுமொழியை ‘சரவணன்’ என்ற பெயரில் வெளியிட்டதைக் கண்டிக்கிறேன். அனானி என்ற பெயரில் நான் எழுதுபவை என் சொந்தக் கருத்துகள் அல்ல. ‘இப்படியும் சிலர் சொல்லக்கூடும்’ என்று, மிமிக்ரி கலைஞர் ரஜினிகாந்த் குரலில் பேசுவதுபோல ஒரு ‘மிடில்கிளாஸ் பொதுப்புத்தி’ குரலில் அவற்றை எழுதுகிறேன். ஒரு ‘டெவில்’ஸ் அட்வகேட்’ ஆகக்கூட சில சமயங்களில் இவற்றை எழுதுகிறேன்.
இந்த்ப்படம் குறித்து என் சொந்தக்கருத்து எதுவும் இல்லை.
[…] : வினவு பகிர்ந்துகொள்ள […]
[…] மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்தி… […]