Thursday, May 30, 2024
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

முல்லைப் பெரியாறு: சி.பி.எம்மின் துரோகம் – ஆதாரங்கள்!

-

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனத்துக்கு காரணமாகவும் துணையாகவும் இருப்பவர்கள் ‘தேசிய’ கட்சிகள் என்று அழைக்கப்படும் காங்கிரசு, பாஜக, மற்றும் சிபிஎம்.

காங்கிரசு, பாஜகவின் தேசிய முகமூடி காவிரி நதி நீர் பிரச்சனையிலேயே கிழிந்து விட்டது. கர்நாடகாவில் ஓட்டுப் பிடிக்கும் போட்டியில், வெளிப்படையாகவே கன்னட இனவெறி முழக்கங்களை முன் வைத்து காவிரி பிரச்சனையில் குட்டையைக் குழப்பியவர்தான் எடியூரப்பா. 2008ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் ஒகனேக்கல்லில் படகு விட்டு தனது தைரியத்தை கர்நாடக மக்களுக்கு நிரூபித்து ஆட்சிக் கட்டிலில் ஏறினார். ரெட்டி சகோதரர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டது போல இதையும் நெகிழ்ந்து ஏற்றுக் கொண்டார்கள், இந்து தேசிய பாஜகவினர்.

இன்றைக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவரான ஐநா சபையில் வேறு நாட்டு அமைச்சரின் உரையைப் படித்துப் புகழ் பெற்ற எஸ் எம் கிருஷ்ணா, 1980களில் டெலிபோன் ஒட்டுக் கேட்பு தில்லுமுல்லு புகழ் இப்போதைய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, சமீபத்தில் இறைவன் அடி சேர்ந்த பங்காரப்பா என்று பலவகையான காங்கிரசு முதலமைச்சர்கள், காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் நியாயமான உரிமையை மறுப்பதில் தீவிரத்தைக் காட்டிதான் கர்நாடகாவில் தேர்தல் அரசியல் நடத்தினார்கள். அதற்கு அகில இந்திய காங்கிரசு தலைமையின் ஆசீர்வாதமும் முழுமையாக இருந்தது.

“காங்கிரசும் பாஜகவும் பிற்போக்கு கட்சிகள், அவர்கள் அப்படித்தான் அரசியல் செய்வார்கள், சிபிஐ(மார்க்சிஸ்டு) என்ற பெயரில் இயங்கும் கட்சி அறிவியல் பூர்வமாக நியாயத்தின் சார்பாக பேசும்” என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். “88 வயதிலும் மக்கள் பணி ஆற்றி வரும் வி எஸ்  அச்சுதானந்தனைப் போல, அவருடன் உட்கட்சி லாவணி நடத்தும் பினரயி விஜயனைப் போல ‘மார்க்சிசத்தைக்’ கரைத்துக் குடித்த காம்ரேடுகள், ‘நம்ம மாநிலம், நமக்கு ஓட்டு’ என்ற குறுகிய பார்வையை விடுத்து, அறிவியல் நோக்கில் உண்மைகளை ஆராய்ந்து விவசாயிகளின் நலனுக்குத் துணை நிற்பார்கள்” என்று நினைத்திருக்கலாம்.

மார்க்சிசம் என்பது கட்சியின் பெயரில் மட்டும்தான், கம்யூனிசம் என்பது நிதி திரட்டவும், ஓட்டுப் பிடிக்கவும் பயன்படுத்தும் வெற்றுச் சொல்தான் என்ற போலி கம்யூனிஸ்டு கொள்கையில் தேறி விட்டிருக்கும் காம்ரேடுகள் அத்தகைய ‘மாயை’களுக்குள் சிக்கியிருக்கவில்லை.

1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு நீரில், தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த ஆண்டுகளில் சிபிஎம் முதலமைச்சர்களாக பி கே வாசுதேவன் நாயர், ஈ கே நாயனார், வி எஸ் அச்சுதானந்தன் என்று மாற்றி மாற்றி ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். ‘சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு நடைமுறை தரவுகளை ஆராய்ந்து அறிவியல் பூர்வமாக உழைக்கும் மக்களது நலனுக்காக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்’ என்பதை எல்லாம் மறந்து விட்ட அந்தப் போலி கம்யூனிஸ்டுகள், முல்லைப் பெரியாறு பிரச்சனையை உருவாக்கி உயிரோடு வைத்திருப்பதன் மூலம் தமது தேர்தல் அரசியல் ஆதாயங்களை உறுதி செய்து கொள்கிறார்கள்.  காங்கிரசுடன் ஓட்டுப் பொறுக்குவதில் போட்டி போடும் அரசியலில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கடந்த ஒரு மாதமாக கேரள சிபிஎம் தலைவர்களின் தேர்தல் அரசியலையும், மத்திய பொலிட்பீரோவின் இரட்டை முகத்தையும் அம்பலப்படுத்திய சில செய்திகளைப் பார்க்கலாம்.

நவம்பர் மாத இறுதியில் கேரளாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 26, 2011)

‘அப்படிக் குறைத்தால் அணை நீரைச் சார்ந்து விவசாயம் செய்யும் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாலைவனமாகி விடும்’ என்ற எளிய உண்மையைக் கூட எடுத்துச் சொல்லத் முடியாமல் மந்தையோடு பள்ளத்தில் குதித்தார்கள் போலி கம்யூனிஸ்டுகளின் கேரள தலைவர்கள்.

அதைத் தொடர்ந்து, ‘மத்திய அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தலையிட்டு ஒத்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று சிபிஎம் தலைவர் பினராய் விஜயன் வலியுறுத்தினார். (டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 26, 2011)

அணை பாதுகாப்பாக இருக்கிறது அல்லது பாதுகாப்பாக இல்லை என்ற கேள்வியில் பேச்சு வார்த்தை நடத்தவோ, சமரசம் செய்யவோ என்ன இருக்கிறது. அணை பாதுகாப்பானது என்று பல்வேறு வல்லுனர் குழுக்கள் அறிக்கை அளித்திருக்கிறார்கள். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை இடிவதற்கு வாய்ப்பில்லை, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

‘சனி பகவானுக்கு திருநள்ளாறில் பூசை செய்தால் உக்கிர பார்வை குறைந்து பிழைத்துப் போகும்படி விட்டு விடுவார்’ என்று பக்தர்கள் நம்புவது போல போல, இரண்டு மாநிலங்களிலும் ஓட்டுக்கு பங்கம் வந்து விடாமல் அறிவியலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த பிரதம மந்திரியை அழைப்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் விஞ்ஞானப் பார்வை. ‘கொஞ்சம் பேச்சு வார்த்தை நடத்தி அறிவியலை ‘சமரசம்’ செய்து கொள்ள வைத்தால் கேரளத்தில் இன்னும் சில ஆயிரம் ஓட்டுக்களை தேத்தலாம் என்ற நப்பாசைதான்’ இந்த ஒத்தக் கருத்தை ஏற்படுத்த விளையும் ஆர்வத்தின் பின்னணி.

மக்களிடையே பயத்தைப் பரப்பி பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்திய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி சிபிஐ சட்டசபை உறுப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்தார். (தி ஹிந்து, நவம்பர் 27, 2011)..

இங்கே முல்லைப் பெரியாறு அணையின் தமிழக உரிமைக்காக தமிழக காம்ரேடுகள் உண்ணா நோன்பிருக்கிறார்கள். இப்படி உண்ணவிரதமிருந்து சண்டை போடுவதற்கு பதில் ஆளுக்கொரு குண்டாந்தடியோடு சண்டை போட்டால் அது பொருத்தமாக இருக்கும்.

நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்குள் சென்று கலவரம் நடத்தும் கும்பலில் கலந்து கொண்டு தமது மார்க்சிய தகுதிகளை நிரூபித்துக் காட்டினார்கள் கேரள சிபிஎம் உறுப்பினர்கள்.  முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடந்த தர்ணாவிலும் கலந்து கொள்ள மறக்கவில்லை. (ஐபிஎன் லைவ், நவம்பர் 29, 2011)

இல்லை என்றால் கம்யூனிச அகிலத்திலிருந்து இவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் அபாயம் இருந்தது.

இதற்கிடையில் சிபிஎம் பொலிட்பீரோ கூடி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெண்டைக்காய் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் தேமுதிக போன்ற புரட்சிகர கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு சில பல உள்ளாட்சி பதவிகளைக் கைப்பற்றி பூரித்திருந்த தமிழ்நாடு கிளையினர் அந்த ஆதாயத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல் வாதிட, கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பே பிடிக்கும் வாய்ப்பிருப்பதை கெடுத்துக் கொள்ளாமல் அந்த கிளை வாதாட, இயற்கையுடன் பேரம் பேசி கடைசியாக தீர்மானம் ஒரு முடிவு எடுத்தார்கள். (டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 3, 2011)

அணையின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக வைத்து தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பொலிட்பீரோ சொன்னது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் சிபிஎம்மின் நிலை இரண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குகுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தொடர்ந்து தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் 116 ஆண்டு அணையின் பாதுகாப்பு. ஆனால் டிசம்பர் 13ம் தேதிக்குள் இந்த நிலைப்பாடு ‘இரண்டு மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கியிருக்கும் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்கு அணையின் பாதுகாப்பையும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதையும் கருத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்’ என்று மாறியது. (ஐபின் லைவ், டிசம்பர் 19, 2011)

‘முல்லைப்பெரியாறு அணையின் வலுவைப் பற்றிக் கவலைப்படுவதாகவும் பிரதம மந்திரி தலையிட்டு சுமுகமாக பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்’ என்று பொலிட்பீரோ சொன்னது. பினராயி விஜயன் அணை விவகாரத்தில் சிபிஎம் கேரள அரசுக்கு முழு ஆதரவை அளித்திருப்பதாகச் சொன்னார். சில சக்திகள் மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ‘சிபிஎம் பொலிட்பீரோ கேரளாவின் கோரிக்கைகளுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது’ என்ற கேள்விக்கே இடமில்லை என்று உறுதியளித்தார். (என்டிடிவி, டிசம்பர் 7, 2011)

‘கேரள அரசு சூரியன் மேற்கே உதிக்கிறது’ என்று சொன்னால் கூட அதற்கு எதிரான நிலைப்பாட்டை பொலிட் பீரோ எடுத்து விட முடியுமோ! ஒரு மாநிலத்தில் வோட்டுப் பொறுக்கி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன!

இதற்கிடையில் கேரள அட்வகேட் ஜெனரல் ‘முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது’ என்ற உண்மையை கேரள உயர்நீதிமன்றத்தில் சொல்லி விட்டார்.

‘கேரள உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் அணை உறுதியாக இருப்பதாக சமர்ப்பித்த அறிக்கையை ஆதரித்தது ஏன்’ என்று அமைச்சர்  திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனை கேள்வி கேட்டார் விஜயன். (என்டிடிவி, டிசம்பர் 7, 2011)

அது எப்படி 2+2=4 என்று சொல்லியிருக்கலாம் ‘அவரை சட்டசபைக்கு அழைத்து விளக்கம் கேட்க வேண்டும்’ என்று சிபிஎம் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சாமியாடினார். சட்டசபைக்கு அழைத்து விட்டால் 2+2=4.5 என்று மாற்றிச் சொல்ல வைத்து விடலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம்.

‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதுதான் என்று உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் கே பி தண்டபாணி கருத்து சொன்னதற்கு பொறுப்பேற்று வருவாய்த் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் வி எஸ் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்தார்.

அறிவியலைக் கூட கிளாசை கட் அடித்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று விட்டு விடலாம், ‘பொலிட் பீரோ எடுத்த முடிவுக்கு எதிராக மற்ற உறுப்பினர்கள் பொதுவில் பேசக் கூடாது’ என்று கீழ்மட்டத் தொண்டனுக்கும் எளிதாகப் புரியக் கூடிய ஒழுக்கத்தைக் கூட காற்றில் பறக்க விட்டார் வி எஸ் அச்சுதானந்தன்.

‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பொலிட்பீரோ தனது நிலையை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்’ என்று அன்று கோரிக்கை விடுத்தார். (தி எகனாமிக் டைம்ஸ், டிசம்பர் 6, 2011).

மாநிலக் குழு உறுப்பினர் டி சிவதாச மேனன், அவருக்கு வேப்பிலை அடித்து, ‘தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் கொடுக்கணும்’ கொடுத்தாதானே அங்கு நாலு ஓட்டு வாங்கி கட்சி வளர முடியும் என்று ஆறுதல் சொல்லி சர்வதேசியத்தை நிறுவினார்.

பினரயி விஜயன் இரண்டு நாட்கள் கழித்து ‘முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்க வைக்கும் நேரம் தாண்டி விட்டது’ என்று அறிவித்தார். வல்லுனர்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் அணை பலவீனமாக இருப்பது தெரியவந்துள்ளதாக சொன்னார்.

திருமணப் பொருத்தம் பார்க்க ஜோசியரிடம் போய் ஒருவர் பொருத்தம் இல்லை என்று சொன்னால், இன்னொருவரிடம் போய், ‘எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, எப்படியாவது பொருத்திக் கொடுத்து விடுங்க’ என்று சொல்வது போல தமது ஓட்டரசியலுக்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கும் வல்லுனர் குழுவைப் பிடித்திருக்கிறார்கள். இவரும் நினைவாக ‘அணை மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று சொன்னார்.

அவ்வளவு முயற்சி செய்தும் உள்ளூர் கட்சிகளின் நம்பிக்கையை பெற்று விடவில்லை சிபிஎம்.

சிபிஎம் போன்ற தேசிய கட்சிகள் ‘உண்மைக்கு’ ஆதரவு தந்தால் பிரச்சனையை உடனே தீர்த்து விடலாம் என்று தனது நம்பிக்கையை வெளியிட்டார் கே எம் மணி (ஐபிஎன் லைவ், டிசம்பர் 11, 2011).

உண்மையை விழுங்கி எவ்வளவோ சிரமத்துக்குப் பிறகு தீர்மானம் என்ற வஸ்துவை வெளியேற்றிய பொலிட்பீரோவின் சிரமம் புரியாமல் அது இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்று மனசாட்சியே இல்லாமல் கேள்வி தொடுத்தார் அவர்.

‘சிபிஎம் முல்லை பெரியாறு விவகாரத்தில் இரட்டை முகம் காட்டுவதாகவும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல’ என்றும் சொன்னார் கேரளா காங்கிரஸ் (பி) தலைவர் ஆர் பாலகிருஷ்ண பிள்ளை.  ‘மாநிலத் தலைவர்கள் தேசியத் தலைவர்களை புதிய அணை தேவை என்பதை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். இடது சாரி தலைவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சூழ்ச்சி செய்கிறார்கள். கடந்த ஆறரை ஆண்டுகளாக புதிய அணை கட்டும்படி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது வரை போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத இடது சாரி தலைவர்கள் இப்போது போராட்டங்கள் நடத்துவது சந்தேகத்துக்குரியது’ என்றார் பிள்ளை. (டைம்ஸ் ஆப் இந்தியா, டிசம்பர் 11, 2011)

அன்று வி எஸ் அச்சுதானந்தன் ஒரு குட்டிக்கரணம் அடித்தார். உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ளாமல் பேசி விட்டதாகவும் பொலிட்பீரோவுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியதாகவும் சொல்லி விட்டார். அச்சுதானந்தனின் அறிக்கை பற்றி தனது வருத்தத்தை பொலிட்பீரோ பினரய் விஜயன் மூலம் அச்சுதானந்தனுக்கு தெரிவித்தது. வருத்தத்தை தெரிவித்திருந்தாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று பொலிட் பீரோ  தெளிவுபடுத்தி விட்டது.  (ஐபிஎன் லைவ், டிசம்பர் 19, 2011) 

‘பொலிட்பீரோவுக்கே உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை, அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லை’ என்று தெரியாமல் இத்தனை வருஷம் கட்சியில் என்ன குப்பை கொட்டினாரோ!

உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருந்த கட்சி, டிசம்பர் 21 அன்று புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முழு மனதாக கலந்து கொண்டது.

புதிய அணை கோரி கேரள சட்டசபை நிறைவேற்றும் மூன்றாவது தீர்மானம் இது. முதல் தீர்மானம் 1993ல் கே கருணாகரன் முதலமைச்சராக இருந்த காங்கிரசு அரசின் தலைமையிலும், இரண்டாவது தீர்மானம் சிபிஎம் முதலமைச்சரான வி எஸ் அச்சுதானந்தன் தலைமையிலும் நிறைவேற்றப்பட்டன. ‘புதிய அணை கட்டப்படும் வரை அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் உம்மன் சாண்டி தீர்மானத்தைப் படித்த போது எல்லா உறுப்பினர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் மேசைகளைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். (ஓமன் டிரிபியூன், டிசம்பர் 21, 2011)

இது ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்க எப்படி உதவி செய்யும்’ என்று யாரும் விளக்க முயற்சிக்கவில்லை.

கடைசியாக இந்து நாளிதழில் ஜனவரி 3ம் தேதி எழுதிய கட்டுரையில் இடது சாரி அரசாங்கத்தில் நீர்வளத் துறை அமைச்சராக இருந்த என் கே பிரேமச்சந்திரன் ‘கேரளா எப்போதுமே நீதித் துறையை மதித்து வந்திருக்கிறது, அதன் தீர்ப்புகளை தவறாமல் பின்பற்றி வந்திருக்கிறது’ என்று சொல்லி விட்டு அடுத்த வரியில் ‘பிப்ரவரி 27, 2006 உத்தரவில் உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை உறுதிப்படுத்திய பிறகு அதை 152 அடிக்கு உயர்த்தவும் உத்தரவிட்டது’ என்ற தகவலைக் குறிப்பிடுகிறார். உச்ச நீதிமன்றத்தை மதித்த கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே, ‘கேரள-நீர்ப்பாசனம்-மற்றும்-சேமிப்பு-சட்டம்-2003 ஐ திருத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது’ என்று அவரே தொடர்ந்து எழுதுகிறார்.

‘இப்போது இருக்கும் அணையை அப்படியே வைத்து விட்டு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் போவதை நிறுத்தாமல், புதிய அணை கட்டுவோம்’ என்றும் அதே கட்டுரையில் எழுதுகிறார். அப்படி என்றால் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திய பிறகு 152 அடியாகவும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளாமல். நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்கச் சொல்வது என்ன அடிப்படையில்?

இப்படி ஒரே பத்திக்குள் முரண்பாடுகளைக் கூச்சமில்லாமல் எழுதிக் கொடுப்பது போலி கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து ஆட்சி புரிந்த போதுதான் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

ஆக, கேரளத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக சாமியாடி, வேப்பிலை அடித்து, இனவெறியை, துவேசத்தை கிளப்பி மக்களை பீதியாக்கி ஓட்டுப் பொறுக்கும் அரசியலை செய்வது சாட்சாத் காம்ரேடுகள்தான். இவர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள், பேசுவார்கள் என்று தெரிந்தும் பொலிட்பீரோவும் அதற்கு பங்கம் வராமல் எல்லாம் மன்னு மோகன்சிங் பார்த்துக் கொள்வாரென்று கை கழுவி விட்டதையும் பார்த்தால் இவர்களை விட தே.மு.தி.க கட்சியும், பவர் ஸ்டார் சீனிவாசனும் மேலென்று தோணவில்லையா?

செழியன்.