“இரட்டை வேடம் போடும்
‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்!
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!”
– தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டங்கள்!
முல்லைப் பெரியாறு நீரின் நியாயவுரிமைக்காக தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிவரும் நிலையில், இப்போராட்டங்களுக்கு வலுசேர்த்து புரட்சிகர அரசியல் திசைவழியைக் காட்டி, தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ம.உ.பா.மையம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, “முல்லைப் பெரியாறு அணையை இடித்து, சட்டவிரோதமாக புதிய அணையைக் கட்டத் துடிக்கும்கேரள அரசின் சதியை முறியடிப்போம்! உழைக்கும் மக்களே, கேரள அரசின் அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!” என்ற முழக்கத்துடன் விரிவான பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; ஆகிய தேசிய கட்சிகளின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாகவும், தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகமிழைக்கும் மத்திய அரசை எதிர்த்தும், கேரள உழைக்கும் மக்கள் தமிழனுக்கு எதிரி அல்ல என்பதை உணர்த்தியும் 12.12.2011 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் கட்டிடம் அருகே இவ்வமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கேரளத்தின் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி, பா.ஜ.க. இந்துவெறிக் கும்பல், காங்கிரசு துரோகிகள் ஆகியோரின் உருவப்படம் கொண்ட முகமூடியணிந்தவர்கள் வெறியூட்டி குதூகலிப்பது போலவும், தமிழக விவசாயி தண்ணீரின்றித் தத்தளிப்பதைப் போலவும் காட்சி விளக்கத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
இதேநாளில், செங்கொடிகளுடன் இப்புரட்சிகர அமைப்புகள் திருச்சி, மதுரை, கடலூர், தருமபுரி, நாமக்கல், உடுமலை, சீர்காழி ஆகிய இடங்களில் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள “முல்லைப் பெரியாறு: பிரச்சினையும் தீர்வும்” என்ற உண்மை நிலையை விளக்கும் குறுந்தகடு பரபரப்பாக விற்பனையாகியது. டிசம்பர்14 அன்று ஓசூரிலும், 16 அன்று வேதாரண்யத்திலும், 28 அன்று கரூரிலும் இப்புரட்சிகர அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உசிலம்பட்டியில், 9.12.2011 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை வி.வி.மு; பு.ஜ.தொ.மு; அமைப்புகள் இணைந்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் பங்கேற்று தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க அறைகூவினர்.
விருத்தாசலத்தில் “தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் மத்திய அரசைப் புறக்கணிப்போம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க; சி.பி.எம்; ஆகியவற்றைத் தோலுரிப்போம்! தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே, பதவி விலகுங்கள்!”, என்ற முழக்கத்துடன் ம.உ.பா.மையத்தினர் “முல்லைப் பெரியாறு: பிரச்சினையும் தீர்வும்” என்ற குறுந்தகட்டை பொதுமக்கள் மத்தியில் ஃப்ரொஜக்டர் வைத்து ஒளிபரப்பி தெருமுனைப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, 21.12.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்தில் ம.உ.பா.மையத்தின் தலைமையில் கேரளா செல்லும் குருவாயூர் விரைவுவண்டியை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குச் செல்ல மாலை போட்டிருந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் உணர்வோடு கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாலையைக் கழற்றி எறிந்த ஐயப்ப பக்தர் ஒருவர் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் ம.உ.பா.மையத்தினர் துண்டுப் பிரசுரங்களுடன் வீதியெங்கும் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக 22.12.2011 அன்று தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். முன்னணியாளர்கள் 30 பேரைக் கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.
திருச்சி ம.உ.பா. மையத்தினர் 22.12.2011 அன்று திருவரங்கம் தொடர்வண்டி நிலையத்தில் முன்னறிவிப்பின்றி குருவாயூர் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்த முயன்றனர். இதையறிந்த போலீசு, திருவரங்கத்துக்கு முந்திய ரயில் நிலையத்திலேயே விரைவு வண்டியை நிறுத்திவிட்டது. ரயில்வண்டி வராத நிலையில் முழக்கமிட்டபடியே ம.உ.பா.மையத்தினர் மறியலில் ஈடுபட்டபோது, போலீசு அனைவரையும் சுற்றிவளைத்துக் கைது செய்தது. பின்னர், குருவாயூர் விரைவுவண்டி ஒருமணிநேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
மதுரையில் ம.உ.பா.மையத்தினர் டிசம்பர் 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முழக்கங்கள் எங்கும் எதிரொலிக்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவப் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் குவிமையமான தேனி மாவட்டத்தில் டிசம்பர் தொடக்கத்திலிருந்து தன்னெழுச்சியாகப் பெருகிய மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல அறைகூவியும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் திரைகிழித்தும் சுவரொட்டிப் பிரச்சார இயக்கத்தை வி.வி.மு. மேற்கொண்டது. போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு”வைக் கட்டியமைத்த வி.வி.மு, இக்கூட்டமைப்பின் சார்பில் கூடலூரில் டிசம்பர் 15ஆம் தேதியன்று மறியல் போராட்டத்தை நடத்தியது. பத்தாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சாரம் செய்து, டிசம்பர் 16 முதலாக தொடர்ந்து 5 நாட்களுக்கு தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை இக்கூட்டமைப்பின் சார்பில் வி.வி.மு. முன்னெடுத்துச் சென்றது. முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது தடியடி நடத்திய தமிழக போலீசின் அடக்குமுறையை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை நடத்திய வி.வி.மு, தமிழகம் வந்த பிரதமரை எதிர்த்து “மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!” என்ற முழக்கத்துடன் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. மன்மோகன் வருகையை எதிர்த்து தேவாரத்தில் பல பகுதிகளில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. போடியிலிருந்து கேரளாவுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது எனப் பிரச்சாரம் செய்து சாலை மறியல் போராட்டத்தை வி.வி.மு. தொடங்கிவைத்தது. இதையொட்டி வி.வி.மு. தோழர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த மக்கள், மறுநாளிலிருந்து தன்னெழுச்சியாக மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புரட்சிகர அமைப்புகளின் அரசியல் முழக்கங்களே மக்களின் முழக்கங்களாக எங்கும் எதிரொலித்தன.
காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர் உரிமை, பாலாற்று நீர் உரிமை, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உரிமை என தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை அம்பலப்படுத்தியும் போர்க்குணத்துடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் எதிரி யார், துரோகிகள் யார் என்பதை உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதியவைப்பதாக அமைந்தன.
——————————————————-
போராட்டக் காட்சிகள் சில
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
// போராடிவரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து “முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு”வைக் கட்டியமைத்த வி.வி.மு, இக்கூட்டமைப்பின் சார்பில் கூடலூரில் டிசம்பர் 15ஆம் தேதியன்று மறியல் போராட்டத்தை நடத்தியது. பத்தாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சாரம் செய்து, டிசம்பர் 16 முதலாக தொடர்ந்து 5 நாட்களுக்கு தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை இக்கூட்டமைப்பின் சார்பில் வி.வி.மு. முன்னெடுத்துச் சென்றது. முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது தடியடி நடத்திய தமிழக போலீசின் அடக்குமுறையை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை நடத்திய வி.வி.மு, தமிழகம் வந்த பிரதமரை எதிர்த்து “மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!” என்ற முழக்கத்துடன் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. //
வி.வி.முன்னணிக்கு பாராட்டுக்கள்.
[…] முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்பு… […]
தேசியக் கட்சிகள், தமிழக ஓட்டுக்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலால் சரிவின் ஓரத்திற்கே தள்ளப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு இவர்களின் உண்மை முகத்தை புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படுத்தி நடத்திவரும் அரசியல் போராட்டம் பாராட்டுக்குரியது.