Sunday, July 21, 2024
முகப்புஅரசியல்ஊடகம்பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

-

ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவிட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக் கேள்விப் பட்டிருப்போம். அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும் அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.

அப்படி மாறிய மாணவர்கள் சிலர் துப்பாக்கியுடன் செய்த வன்முறைகளை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இன்றைய கல்வி, மொழி,  வாழ்க்கை, நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களிடன் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வை குன்றச் செய்வதையும் பார்க்கிறோம். ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும் முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல், எல்லாம் சேர்ந்து விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய தனிநபர்களாக மாற்றுகின்றது.

இந்தக் கட்டுரை நோயை மட்டும் ஆராயவில்லை. இந்த நோய்க்கு என்ன மருந்து அத்தியாவசியம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. விடலைப் பருவத்தினரை எந்த அளவு சமூகமனிதர்களாக மாற்றுகிறோமோ அந்த அளவு அவர்களது வன்முறையை தணித்து நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். “தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் ” என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இல்லினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.

இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.

2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை  பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.

இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம்.  வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப்  பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் …

இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு ‘மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்’ பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக  மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

வன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் சேனல்களைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும்; சுட்டி டி.வி.யையும், தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டூன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அது நிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம்பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.

பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர். கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃபிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ. எஃப் மல்யுத்தச்  சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீர்த்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.

விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளைப் போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்பு வரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.

விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.

வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

“இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்” என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை  ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய “சரியான அணுகுமுறை. மாறாக “இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”, என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.

ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது,  அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.

செல்பேசி,  இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.

ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.

சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது.  இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.

விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

வளரும் பருவத்தை வலிமையாக்கும் கட்டுப்பாடு!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிக்கைகளும், முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று  வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது,  ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.

இந்த வாதங்களில் ஒரு வெங்காய ‘உரிமை’யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.

வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான், வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும், சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற்கண்ட நச்சுக்கலாச்சாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரணிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் அந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.

வளரும் சிறுவருக்கு உடலுழைப்பு அவசியம்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடை செய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரீகப் பணியாக இருக்கிறது. படிக்கவேண்டிய வயதில் இவர்களை இவ்வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமெனத் தொண்டு நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்தச் சமூக அமைப்பை மாற்றியஅரசும், ஆளும் வர்க்கங்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, இக்குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் இச்சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும்தான் பழகிக் கொள்கின்றனர்.  வயதுக்கு மீறிய அதீத உழைப்புதான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அப்போதும்கூட இவர்கள், சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.

ஆம். மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ,  கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச்சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்னிசுக்கும், கணினிப் பயிற்சிக்கும், பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும், சுயநலத்தையும், காரியவாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம்பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வளரும் குழந்தைகளுக்கு கலைத்திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம், இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையைத் துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன்தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்ய படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும்போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!

உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.

இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.

இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.

விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.

விதவிதமான உணவு வகை எல்லைமீறும் உணர்ச்சிகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்…. இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.

குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.

உண்மையில் இந்த ‘குண்டு’ பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.

அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.

ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர்.  திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.

இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.

இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.

முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.

அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.

நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.

அன்னியப்படுத்தும் ஆங்கில மோகம்

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.

அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.

இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.

தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.

விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்?  அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு,  ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.

இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.

இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.

-புதிய கலாச்சாரம், மார்ச்’08

 1. கலையகத்தின் கட்டுரைகள் என்னவாயிற்று. ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய ஆதிக்க அரசியல் குறித்து எளிமையாக எழுதப்பட்ட கட்டுரைகளை படிக்க ஆவலுடன் உள்ளோம்

 2. சென்ற வாரம் கூட ஏழாவது படிக்கும் சிறுவன் சக சிறுவனை கொன்றிருகிறான் 150 ரூபாய்க்காக,சென்ற ஆண்டு 5 வகுப்பு சிறுவனை கொன்று விட்டு கில்லி படப்பாணியில் மிளகாய்ப்பொடி தூவி தப்பினார்கள் மாணவர்கள் இப்படி எத்தனையோ,

  ” நேத்து நைட் ஒரே அழுகை அப்புறம் அவங்க அப்பாதான் 2 மணிக்கு சாக்லேட் கேட்டான்னு அலஞ்சு வாங்கிட்டு வந்தாரு என்னங்க பண்ணுறது பெத்த புள்ள அழுவும் போது பார்க்க முடியுங்களா?”

  இது தான் பல பெற்றோரின் பெருமைக்குரிய வாதம். மகனை திருத்துவதை விட்டு விட்டு தனக்கு சீரியல் பார்க்கவும் ,ஊர்மேயவும் பிள்ளை தடையாய் இருக்ககூடாதென்பதற்காகவே வாயில் சாக்லேட், காதில் இயர் போனை திணிக்கின்றன.

  அக்குழந்தையின் தேவை பூர்த்தியாகாதபட்சத்தில் அது வன்முறையை பிரயோகிக்கிறது,அது கூட சரிஎனத்தான் திரைப்படங்களில் காட்டப்படுகின்றது.

  தோழர் கூறியது போல” ஏம்மா அங்கிள் வந்திருக்காங்க அந்த அம்மாடி ஆத்தாடி ஆடிக்காட்டு ”
  என புளங்காதம் அடைந்து கொண்டிருந்தால் அப்பையன் மெய்யாலுமே சோடியை தெர்ந்தெடுக்க போயி விடுகிறான் பிஞ்சிலேயே

 3. வினவு தளத்தில் இந்த உச்சரிப்புப் பிழையை (அதனால் எழுத்துப்பிழை) இரண்டு முறை நானே கண்டுள்ளதால் இந்த திருத்தம்:
  Illinois என்பதை ‘இல்லினாய்’ என்றுதான் உச்சரிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டுரையை எழுதியவரிடம் அதைத் தெரிவித்துவிட்டு இங்கு வெளிவந்துள்ள இக்கட்டுரையை திருத்தம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

 4. http://thatstamil.oneindia.in/news/2009/03/12/world-twenty-six-killed-by-gunmen-in-two-different.html

  யுஎஸ், ஜெர்மனி: துப்பாக்கி கலாச்சாரம்-26 பேர் பலி

  பெர்லின்: ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் நடந்த இரு பயங்கர சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு மொத்தம் 26 பேர் பலியாயினர்.

  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கிகள் மக்களிடையே சகஜமாகிவிட்ட நிலையில் அங்கு வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருகிறது. முன்கோபிகள் சிறு தகராறுகளுக்கு கூட துப்பாக்கியை எடுப்பதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

  ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகே உள்ள பள்ளியில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் முகமுடி அணிந்து வந்து திடீர் தாக்குதல் நடத்தினான். இதனால் வகுப்பறைக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து சிதறி ஓடினர்.

  சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து காயமடைந்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவன் வகுப்பில் இருந்தவர்களை நோக்கி வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலே 9 மாணவர்கள், 3 ஆசிர்யர்கள் உள்பட 12 பேர் பலியாயினர்.

  பின்னர் பள்ளியில் இருந்து வெளியேறிய அவன் ரோட்டில் போய் கொண்டிருந்த மருந்ததுவமனை ஊழியரையும், மற்ற இருவரையும் சுட்டு கொன்றுள்ளான். பின்னர் ஒரு காரை கடத்தி தப்பிக்க முயற்சி செய்தான். அவனை விரட்டிபிடிக்க முடியாமல் போகவே போலீசாரை அவனை சுட்டுக்கொன்றனர்.

  திட்டமிட்டு கொலை…

  இதேபோல் அமெரிக்காவின் அலபாமா நகரில் 28 வயதான மைக்கேல் மெக்லெண்டன் என்பவர் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் இக்கொலைகளை திட்டமிட்டு செய்துள்ளதாக தெரிகிறது. தனக்கு பிடிக்காத நபர்களை அல்லது தனக்கு பிடிக்காததை செய்தவர்களை பட்டியலிட்டு அவன் கொன்றுள்ளான்.

  அவனால் முதலில் கொல்லப்பட்டவர் அவனது தாய் தான். பின்னர் தனது பாட்டி, மாமா, இரண்டு சகோதரர்கள் ஆகியோரை திட்டமிட்டு கொன்றுள்ளான். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதில் அவனது மனைவி மற்றும் 18 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து அவன் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

 5. அருமையான பதிவு. ஆம் நாம் மோசமான HYPER REAL காலக்கட்டத்தில் வாழ்கிறோம். பிம்பங்களால் கட்டனமக்கபட்டிருக்கிறோம். ஒன்றாம் கிளாஸ் படிக்கும் என் நண்பரின் மகன் கேட்கிறான், EMAIL ID வேண்டுமாம். நிலாவை பார்த்து சோறூ உண்ட காலம் போய், TV நிலாவை பார்த்து சோறூ ஊட்டுகிற காலம் இது. காலையில் உடற்பயிற்ச்சி,மாலையில் விளாயாட்டு என்பது இப்போது இல்லை.அதனால்தான் இப்போது MODERN GYM பார்க்கிறோம். DEATH AND VIOLENCE BECOMES SPECTACLE TO WATCH. இதற்கு 2 உதாரணம்…
  (1) சில வருடங்களூக்கு முன்பு SUN TV இல், கேரளாவில் மனம் பிறழ்ந்த நபரால், ஒருவர் கொல்லப்படுவதை மீண்டும் மீண்டும் காண்பித்தது.
  (2) இதே போல், யானை பாகனை, யானை கொல்வதை மீண்டும் மீண்டும் காண்பித்தது.
  இப்போது மீடியாவில், புதிதாக, இந்த DEATH AND VIOLENCE நேர்த்தியாக, ரசிக்கத்தக்க வகையில் EMBEEDED JOURNALISM என்ற பெயரில் காண்ப்பிக்கிறார்கள். அதாவது, நிஜப்போரில், செய்தி சேகரிக்கும் நிருபர் ராணூவ வீரர்களோடு போர்களத்தில் சென்றூ, அப்படியே LIVE BROADCAST செய்வது. இந்த யுத்தி CNN/ABச் தொலைக்காட்சியால் ஈராக் போரில் அறீமுகப்படுத்தபட்டு, சமீபத்தில் இந்தியாவில் மும்பாய் ஓட்டல் தீவிரவாதிகளோடு ராணூவ வீரர்கள் சண்டையிட்டதை அனைத்து தொலைக்காட்சியால் ஒளீபரப்பப‌ட்டது. ஆக,
  பல விதங்களீல் நாம் தப்பிக்க மார்க்கமின்றீ சுழப்பட்டிருக்கிறோம். எல்லா பழக்கவழக்கங்களூம் மாறீவிட்டன. இட்லி,தோசை போய், BREAD/NOODLES/TROPICANA 100% JUICE வந்துவிட்ட‌து. க‌டித‌ம் எழுதும் ப‌ழ‌க்க‌ம் போய், EMAIL/MOBILE PHONE வந்துவிட்ட‌து. உடற்பயிற்ச்சி,விளாயாட்டு போய், MODERN GYM/COMPUTER GAMES வந்துவிட்ட‌து. படிக்கிற ப‌ழ‌க்க‌ம் போய், TV/CD/DVD வந்துவிட்ட‌து. பய‌மாக‌ இருக்கிறது…இன்னும் 20 வருடங்க‌ள் க‌ழித்து எப்ப‌டி நம் குழந்தைக‌ள் வளர்க்க‌படுவார்க‌ளோ???

  • சன் டிவி கொலம்பியா விண்வெளி ஓடம் வெடித்துச் சிதறும் வீடியோவை (1986) சாலஞ்ஜர் விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானபோது (2003)காட்டினார்கள். அசிங்கமாக இருந்தது. (முன்னது பூமியிலிருந்து கிளம்பியபோது வெடித்தது. பின்னது விண்வெளியில் இருந்து பூமிக்குத்திரும்பும் போது விபத்துக்குள்ளானது.)TV பார்ப்பவர்களை எந்த அளவு மதிக்கிறார்கள் பாருங்கள்!

 6. புதிய கலாச்சரத்தில் நான் மிகவும் விரும்பி படித்த கட்டுரைகளில் ஒன்று, பெற்றோர்கள் அவசியம் படிக்கவேண்டும், கட்டுரையின் சுட்டியை ஈமெயிலில் நண்பர்களுக்கு அனுப்பவேண்டும் பிரிண்ட் எடுத்து நகல் போட்டு நண்பர்கள், பரிச்சயமானவர்களுக்கு கொடுப்பதன் மூலம் சிறுவர்கள் வளர்ப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும்.

  சிறுவர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது ஒரு நிகழ்வை சொல்லுகிறேன், எங்க ஊர் ஒரு சிறு நகரம்(மாதிரி) மூணு சினிமா தியேட்டர் இருக்கிற ஊர். டவுன் பஸ்சில் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன் பக்கத்தில் மூன்று சிறுவர்கள் இருந்தன்ர் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து கம்ப்யூட்டர் கிளாசுகு வந்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்,
  வண்டி போய்கொண்டிருந்தது ஒரு பையன் அவனுடைய செல்போனை எடுத்து டவுன் பஸ்சுக்கு பின்னால் வந்த காரை வீடியோ எடுத்தான் நன் திரும்பி பார்த்தேன் காரில் 45வயது அம்மா ஒருவர் பயணகளைப்பில் தூங்கி கொண்டிருந்தார் கார் பக்கத்தில் வந்ததும் ச்சீ! கெழவி வேஸ்ட் (பையனுக்கு 11 வயசுதான் இருக்கும்) என்றபடி வீடியொவை நிறுத்திவிட்டான் . கிராமபுறங்களில் எந்த அளவு கெட்டுபோய்விட்டது பார்த்தீர்களா?

  கூட படிக்கும் பையன்களை சிறுநீர் கழிக்கும்போது ஆண் குறியை செல்போனில் வீடியோ எடுத்தது.

  பள்ளியின் ஆசிரியை பசியில் அவசர அவசரமாக சாப்பிடுவதை செல்போனில் வீடியோ எடுத்தது பற்றியெல்லாம் அந்த பசங்க பேசியது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  (நான் மிகை படுத்தவில்லை இது உண்மை)

  //சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ, கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள்//

  இவ்ற்றை செய்யமுடியவில்லை என்றால் பசங்களை குறைந்த பட்சம் கராத்தே போன்ற பயிற்சிக்கு உண்மையான் கராத்தே மாஸ்டரிடம்
  (இதிலும் போலிகள் மலிந்து விட்டார்கள்)
  அனுப்பினால் அரோக்கியத்தையும் நல்லொழுக்கத்தையும் அடைய ஒரு வாய்ப்பாக இருக்கும்.

 7. வினவுக்கு, கட்டுரைகளை பிரிண்ட் செய்யும் வகையில் மாற்றி தந்தால் நல்லது.

 8. உண்மை!
  இதை எத்தனை பேர் படித்து உணரப் போகிறார்கள்…
  எதிர்காலம் மிகச் சிக்கலாகி விட்டது. பிள்ளைகளைக் கண்டிக்கவே
  பயமாக உள்ளது;

 9. இங்கிலாந்து உட்பட பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டு பாடசாலை மாணவர்கள், (தமிழ் இளைஞர்களும் அதில் அடக்கம்) தமக்குள்ளே கிரிமினல் குழுக்களை (gangs) உருவாக்குவதும், துப்பாக்கி வைத்திருப்பதும், அனைத்து கிரிமினல் வழிகளையும் பாவித்து விரைவில் தாம் ஆசைப்படும் விலை உயர்ந்த பொருட்களை பெற நினைப்பதும், சில நேரம் குழு மோதல்களில் ஈடுபட்டு கொலை செய்வதும் சர்வசாதாரணம். வெளிநாட்டவர்களுக்குள்ளே மட்டுமே இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறும் போது அது செய்தியாக வெளியில் வருவதில்லை. போலிசும் கண்டுகொள்வதில்லை.

  லோலாவி, கட்டுரைகளை ஆவலோடு எதிர்பார்ப்பதற்கு நன்றி. கடந்த 2 வாரங்களாக விடுமுறையில் இருந்ததாலும் நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் அடுத்த கட்டுரை தயாராகும். காத்திருங்கள்.

 10. நன்றி தோழர் கலையரசன், நானை கேட்கலாமென நினைத்தேன்!

  அருமையான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் வினவு

 11. முன்பு பு.கவில் இந்தக் கட்டுரை வெளியான போது அதை நன்பர்களிடம் வாசிக்கக் கொடுத்திருக்கிறேன்… பரவலாக எல்லோரும் வரவேற்றார்கள்.. அதில் கம்யூனிச ஃபோபியா கொண்டவர்கள் கூட “எப்படி சார் இவங்க மட்டும் இப்படியெல்லாம் ஆழமா ஆராய்ச்சி பன்றாய்ங்க…!?” என்று வியப்புடன் பாராட்டியது நினைவுக்கு வருகிறது…

  ஒரு பத்தாண்டுகளுக்கு முன் நமக்குக் கிடைத்த பள்ளி வாழ்க்கை – விடலை வாழ்க்கை இப்போதைய சிறுவர்களுக்கு கிடைக்கவில்லை.. நாமெல்லாம் எத்தனை விளையாட்டுக்கள் விளையாடியிருப்போம்? ஊர் மாரியம்மன் கோயில் திடலில் எத்தனை முறை விழுந்து எழுந்திருப்போம்? காயம் படாமல் வீட்டுக்குப் போன நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. எத்தனையோ சண்டைகள் – ஆனால் அத்தனையும் அடுத்த கணத்திலேயே சமாதானத்தில் முடிந்திருக்கும்… ஒரு சமூகமயமான சூழல் கிடைத்தது

  இன்றைக்கு பொடியன்கள், வீடு – வீடு விட்டால் பள்ளி – அது விட்டால் மீண்டும் வீடு – என்று இப்போதே ஒரு இயந்திரம் போன்ற வாழ்க்கைக்குள் விழுந்து விட்டார்கள்.. தெரிந்ததெல்லாம் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ்.. “எங்க பய்யனெல்லாம் வீட்ட விட்டு வெளியே அநாவசியமா சுத்த மாட்டான்ங்க” என்று சொல்வது ஒரு ஃபேஷன்! கிட்டத்தட்ட சமுதாயத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு ஜோம்பிகளைப் போல் திரிகிறான்கள் – பார்க்கவே பாவமாய் இருக்கிறது.

  உட்கார்ந்து உட்கார்ந்து குண்டி வீங்கிப் போய் திரிவதைப் பார்க்கவே அசிங்கமாய் இருக்கிறது. ஒரு நன்பரின் மகன் பென்சில் சீவும் போது லேசாக ப்ளேடு கீறி ஒரு சொட்டு ரத்தம் வருவதைப் பார்த்தே கத்திக் களேபரப்படுத்தி விட்டான்.. இவர்களைக் கேட்கவே வேண்டாம் பத்து வயசு பய்யன் – நல்லா சீமைப் பன்னி கணக்கா வீங்கிப் போய் கெடக்கான் – அவனைத் தூக்கிக் கொண்டு ஆசுபத்திரிக்கு ஓடுகிறார்கள். இவனெல்லாம் நாளைக்கு ஏதாவது பிரச்சினையென்றால் என்னத்த சமாளிக்கப் போறான்? சுத்தமா தைரியமே இல்லாத கோழைத்தனம் –

  இந்த மாதிரி கையாளாகாத கோழைத்தனம் தான் விடலைப் பருவ வன்முறையின் ஊற்றுக் கண்.

  கிராமத்துல பெரியபரீட்சை லீவில் சைக்கிள் கடைக்கோ ரேடியோ ரிப்பேர் கடைக்கோ எடுபிடியா அனுப்புவாங்க.. அது ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.. உழைப்புன்னா என்னான்னு புரிய வச்சது.. உழைப்பின் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.. இப்ப பசங்க என்னாடான்னா… லீவு உட்ட ஒடனே ஐமேக்ஸுக்கு கூட்டிப்போ, தீம் பார்க் கூட்டிப் போன்னு – ஒடம்பு நோகாம இருக்க என்ன வழியோ அதத்தான் பார்க்கிறானுக.

  அடிமைச் சமுதாயம் – அடிமை குடிகளைத்தான் உற்பத்தி செய்யும். அமெரிக்க அல்லக்கையாக முழுமையாக அவதாரம் எடுத்து விட்ட நம்ம நாடும் இப்போ அங்கிருப்பதைப் போன்ற கலாச்சாரத்தை பிரதியெடுத்து வருகிறது –
  “கோன் எவ்வழியோ குடியும் அவ்வழியே” என்று சொல்வதைப் போல இந்த கலாச்சாரத்தை லபக்கென்று கவ்விக் கொள்கிறார்கள் நம்ம நடுத்தர வர்க்க நாராயாணன்கள்!

 12. அடுத்த முறை அப்படியே கொஞ்சம் இந்த மாதிரியான கொலை வெறிகள் எப்படி கல்லுரி மாணாவர்களுக்கும், வக்கில் , போலிஸ் என் அனைவருக்கும் வந்த்து என்பதை பற்றியும் ஆவு கட்டுரைகள் வெளியிடலாம்..

  அப்படியே, நம்ம கருத்துக்கு இவன் உடன்படலையா அடி குத்து, முட்டையடி, தக்காள் அடி , என உண்ர்ச்சிகளை தோண்டிவிட்டு வேடிக்கை பார்பவரை பற்றியும் கூட ஆய்வு செய்லாம்.

  அதே மாத்ரி பதிவுயிடுபவர்களும் நைசாக இந்த மாதிரி உண்ர்ச்சிகளை தூண்டிவிட்டு உயிர் இழப்புகள் , பொது அமைதியை கெடுப்பவர்களை பற்றியும் ஒரு ஆய்வு எழுதலாம்.

 13. அக்கினி, என்ன சொல்ல வர்ரீங்க. புறியலியே!
  எழுத்துப்பிழைகள் காரணமா அப்படியா இல்ல சொல்ல வர விசயத்துல உங்களுக்கே குழுப்பமா?

 14. அருமையான அலசல். நீளமாக ஒரே அத்தியாத்திலில்லாமல்,,, 4 பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம் என நண்பர்கள் சொன்னார்கள்!

 15. கட்டுரைகள் மட்டுமல் பல பின்னூட்டங்களும் அருமையாக இருக்கின்றன. உள்ளதை சொன்னால் குழந்தை வளர்ப்பை நினைத்தாலே அச்சமாக இருக்கின்றது. நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் இந்த சமூகத்திலிருந்து எப்படி காப்பாற்றுவது. லைஃப் இஸ் பியூட்டிபுல் போல வாழ்க்கை சினிமா இல்லையே?

 16. ஹா ஹா.. இதொ குமார் திருத்திவிட்டேன்…

  அன்பான வினவு அவர்கள்,
  அடுத்த முறை அப்படியே கொஞ்சம் இந்த மாதிரியான கொலை வெறிகள் எப்படி கல்லுரி மாணாவர்களுக்கும், வக்கில், , போலிஸ் என அனைவருக்கும் வந்தது என்பதை பற்றியும் ஆய்வு கட்டுரைகள் வெளியிடலாம்..

  அப்படியே, நம்ம கருத்துக்கு இவன் உடன்படலையா! இவனை அடி ,குத்து, முட்டையால் அடி, தக்காளியால் அடி , என உண்ர்ச்சிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்பவரை பற்றியும் கூட ஆய்வு செய்லாம்.
  அதையும் வெளியிடளாம்.

  அதே மாதிரி பதிவிடுபவர்களும் நைசாக இந்த மாதிரி உண்ர்ச்சிகளை தூண்டிவிட்டு உயிர் இழப்புகள் ஏற்படுத்துபவர்கள், பொது அமைதியை கெடுப்பவர்கள் என அவர்களை பற்றியும் ஒரு ஆய்வு எழுதலாம்.

  வன்முறை என்பது குழந்தைகள் செய்வது மட்டும் தானா?, அவர்கள் இதை பெரியவர்களிடம் இருந்து தானே கற்றுக்கொ(ல்)ள்கிறார்கள்.

  தன்னுடைய கருத்தை ஏற்காதவனை, சகிப்பில்லாமல் அடிக்கும் (தாக்கும்) தந்தையை பார்க்கும் பிள்ளை மனதில் வன்முறை வளராமல், மனிதநேயமா வளரும்?

  என்ன குமார் இப்பொது நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறாதா?

 17. ஹா ஹா.. ஒரு அறிவுஜீவியை(?) நான் இங்கு கண்டேன்! ஹா ஹா.. ஒரு அறிவுஜீவியை(?) நான் இங்கு கண்டேன்!

  அக்னிபார்வை என்ற பெயரில் எழுதும் இந்த நபர் வினவு தளத்தை ஒழுங்காக படிப்ப்பவரில்லை போலிருக்கின்றது. சட்டக்கல்லூரி பிரச்சனையின் போது நிகழ்ந்த வன்முறை பற்றியும்.
  உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை பற்றியும்
  சாதிய வன்முறை பற்றியும்
  ஆணாதிக்க வன்முறை பற்றியும்
  முதளாளிகளின் வன்முறை பற்றியும்
  நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தின் வன்முறை பற்றியும்
  இனவெறியாளர்களின் வன்முறை பற்றியும்
  அரசியல்வாதிகளின் வன்முறை பற்றியும்
  பதிவர்களின் ‘மொக்கை வன்முறை பற்றியும்’
  மக்களின் ‘எதிர் வன்முறை’ பற்றியும்
  வினவில் பல கட்டுரைகள் வந்துள்ளது.
  (சுட்டிகள் தேவைப்பட்டால் கேட்டுப்பெறவும்)
  மாற்றுக்கருத்திருந்தால் அங்கேயே விவாதித்திருக்கலாம். அதை விடுத்து சம்பந்தமேயில்லாத ஒரு பதிவில் வந்து அங்கத நடையில் எழுதிவிட்டு தனது அறிவு ஜீவித்தனத்தை தானே மெச்சிக்கொள்கிறார். இன்றைய குழந்தைகள் நாளைய பெரியவர்கள், அவர்கள் வன்முறையாளர்களாக மாறாமலிருக்க செய்ய வேண்டியவைதானே இந்த கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
  மேலும் வன்முறையில் சமூகத்தின் மீதான வன்முறை, அந்த வன்முறைக்கு எதிரான வன்முறை என இரண்டு இருப்பது
  உலகை மாற்ற பிறந்திருக்கும், புரட்சிகர கத்தாரை கொண்டாடும் அக்னிக்கு புறியாதது ஏனோ?
  *******************************
  பின் குறிப்பு. இந்த பின்னூட்டம் எந்த புரிதலில் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆய்வு தேவையில்லை. அந்த புரிதல் தவறென்றால் மன்னிக்கவும், சரியென்றால் வாதிடவும்

  .குமார்

 18. அருமையான, விரிவான, அவசியமான அலசல். எதிர்கால தூண்களை நினைத்தால் இப்போதே கவலை கவ்வுகிறது 🙁

  சில சிறு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தால் இன்னும் பொறுமையாகப் படித்து அயற்சியைத் தவிர்த்திருக்கலாம்.

 19. குமார் புரிந்துக்கொள்ளுங்கள், என் அறிவுஜிவி தனத்தை வெளிப்படுத்த என்று கூறியுள்ளீர்கள், நன்றி எனக்கு அறிவிவுள்ளது என்று சொன்னதற்க்கு..ஆனல் அதற்கெனக்கு அவசியமில்லை/

  முதலில் நான் இப்பொழுது தான் வினவு தளத்தை ஆழ்ந்து படிக்கிறேன் (நீண்ட நாட்களாக படித்தும் வருகிறேன்)..

  இரண்டாவது ஒவ்வொரு பதிவின் கீழ் விவாதம் என்றுக்கொள்ள முடியாது காரணம் 5 அ 6 பதிவின் மீது விவாதம் என்றால் உங்களுக்கு எளிதாக இருக்கும் (Comment Moderator) எனக்கு அதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினம், அதனால் ஒரே இடத்தில் விவாதம் நடத்த்லாம் என்று நினைத்தேன்.. ஆனால் நான் கொஞ்சம் அங்கத நடையில் சொன்னதால் நீங்கள் ‘சின்ன குழந்தைகள் வன்முறையை பெரியவர்கள் தான் கற்றுக்கொடுக்கிறார்கள்’ மற்றும் ’வன்முறை செய்பவர்களை விட வன்முறையை தூண்டுபவர்கள் பற்றி தான் சிந்திக்க வேண்டும்’ என்ற என் கருத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள் என்று தெரியவில்லை…

  நிச்சயமாக என் மானசீக குரு கத்தார், அதனால் மக்கள், மனிதேநேயம் பற்றி நான் சிந்திப்பதால் என் கருத்தில் நான் தெளிவாகவே உள்ளேன். இன்னும் உங்கள் இன்னும் சிறிது நாட்கள் உங்கள் பதிவுகளை எல்லாம் படித்துவிட்டு உங்களுடன் ஒரு பெரிய விவாதம் நடத்துவேன் ..நிச்சயம் சம்பந்தமெயில்லத பதிவில தான்… எனக்கு அதுதான் வசதி.

  ஒரு சிறு இடைவெளிப்பின் உங்களுடன் கருத்து பறிமாறிக்கொள்ள வருகிறேன்…

  அக்னி பார்வை

 20. குழந்தை வளர்ப்பு என்பது நல்லவற்றை கற்றுக்கொடுப்பது என்றல்லாமல் அவர்கள் கேட்பதை கொடுத்து மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்று மாறிப்போய்விட்டது.
  ஒரு வேண்டுகோள்: கோடை மாதங்களில் நடைபெறும் சிறுவர்களுக்கான பயிற்சி முகாம் பற்றிய விபரக்களை வெளியிடுங்கள். பலருக்கும் அது உதவியாய் இருக்கும்.

  தோழமையுடன்
  செங்கொடி

  • நன் நெறிகளை மக்கள் மனதில் உருவாக்குவது என்பது தனது கொள்கை கோட்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் மதத்தை ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவது என்றாகி விட்டது.

 21. very good post by vinavu but there are some points you miss,

  1. In such a scenario and with minimum physical effort doesn’t it make more sense for people to turn vegetarian?

  2.These days even people in the villages dont go and swim in the lakes/rivers.Even in my native place the river has gone dry and the government has done nothing to preserve the waterways.The government also has done very poor urban planning and there is nowhere to play.Nobody cycles these days and even 12 year olds want a pulsar to ride.The fault is largely the parents as they indulge the kids in luxuries without worrying about their good but isn’t the govt at fault too for not doing anything to regulate schools to have playgrounds,urban planning or to promote physical activity in anyway.

  i grew up in the 90s and after a brief indulgence in tv,cinema,fast food and internet,i now feel the old life is the best.you need a lot of discipline in life and the worst amongst all this is that every weekend is for drinking booze and no weekend is missed for beer.

 22. ஆக்கபூர்வமான பதிவு… தமிழக தறுதலை அரசியல் தலைவர் / தலைவிகளுக்கு வால்போஸ்ட், பேனர் வைத்து பாராட்டி கொள்வதை விடுத்து இது போன்ற பதிவுகளை பிரிண்ட் செய்து பொது இடங்களில் வைக்கலாம்.

 23. 1) ஆசிரியை கொல்லப்பட்டது புதிதாக முளைத்த தனியார் பள்ளியில் அல்ல. பாரம்பரியமான கான்வெண்ட் பள்ளி, ஒழுக்கம், நடத்தை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரும் பாரம்பரியமான பள்ளியே.

  2) அந்த மாணவன் இந்தியில் மதிப்பெண் குறைவு என்று கண்டிக்கப் பட்டுள்ளான். முதலில் தமிழக அரசின் கல்வி போர்டின் (ஆங்கிலோ இந்தியன்) கீழ் வரும் பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தி கட்டாயமாக இருப்பது ஏன்? இந்தி ஒரு தேவையற்ற சுமையாக சுமத்தப்படுவது ஏன்? இந்திப் போராட்டம் நடந்து 40 வருடம் கழித்தும் இந்தி கட்டாய மொழியாக இருப்பது ஏன்?

  3) பவர் ரேஞ்சர்ஸ் மட்டுமல்ல, கிருஷ்ணா அவுர் பலராம், சோட்டா பீம் போன்ற இந்திய கார்ட்டூன்களிலும் ஏராளமான வன்முறை உள்ளது.

 24. எனது கிராமத்தில், நான் சிறுவனாக இருந்த போது மது அருந்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லோரும் கிரிகெட் வாலிபால் என்று ஞாயிறு கிழமை களை கட்டும். இன்றைக்கு விடலைகள் ஞாயிறு தோறும் மது அருந்துகிறார்கள். கிரிகெட் கிரவுண்டுகள் வீட்டு மனைகளாகி விட்டன.
  மதுவால் ஒரு இளைஞன் உயிர் இழந்த கதையும் நடந்தது.

  சுய ஒழுக்கம் அற்றவர்களாக் மாறி வருகிறார்கள். பெற்றோர்களோ தொலைகாட்சியில் மூழ்கி இருகிறார்கள்

  எங்கே போகிறோம் நாம் ?

 25. தங்களின் இமேஜை காட்டிகொள்வதற்கென்றே பிள்ளைகளை ஆங்கில வழிகல்வியில் சேற்கும் பெற்றோர்கள் இனியாவது திருந்துவார்களா?

 26. மாணவன் ஆசிரியரைக் குத்திக் கொன்ற சம்பவமு் எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஏதோ திடீர் என எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தால் அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால் சமூகத்தில் எங்கு நோக்கினும் இத்தகைய செயல்கள் அன்றாடம் நடந்த வண்ணம் உள்ளன. பெரியவர்கள் தவறு செய்தால் வராத அதிர்ச்சி சிறுவர்கள் செய்தால் மட்டும் ஏன் வருகிறது?

  தவறுகளுக்கான அடிப்படை என்னவென்று அறியாமல் தனி நபர்களை முன்வைத்து பரிசீலிப்பதாலோ அல்லது நன்னெறி-நல்லொழுக்க போதனைகள் செய்வதாலோ இது போன்ற குற்றங்களைக் குறைக்கவோ அல்லது ஒழிக்கவோ முடியாது. உத்திரவாதமற்ற எதிர்கால வாழ்க்கைதான் இத்தகைய தவறுகளுக்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் இட்டுச் செல்கிறது. உத்தரவாதமான எதிர்காலத்தை இப்போதைய சமூக அமைப்பால் நிச்சயமாக கொடுக்க முடியாது.

  இச்சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என பரிசீலியுங்கள். வினாவுக்கு விடை கிடைக்கும். விடை தெரிந்தால் நீங்களே வினையாற்றுவீர்கள். வினை முடித்தால் நிச்சயம் உத்தரவாதமான எதிர்காலம் அமையும்.

 27. சென்னை பள்ளியொன்றில் 15 வயது மாணவன் தனது ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தான் என்ற செய்தியை படித்த அதிர்ச்சியிலிருந்து பலர் இன்னும் மீண்டிருக்க முடியாது. எங்கே நேர்ந்தது பிழை?

  பெற்றோரின் கவனிப்பற்று வளர்க்கும் வளர்ப்பு முறையா, இயல்போடு இணைந்த கல்வி என்பது மாறி வணிகமயமான கல்வி முறையா, இயல்பு நிலையிலிருந்து மாறி ஒரு மாணவ, மாணவியிடம் காணப்படும் சிறு சிறு மாற்றங்களைக் கூட கண்காணிக்க தவறும் ஆசிரியரா – பெற்றோரா? ஒழுக்கமற்று ஒளிபரப்பும் ஊடகங்களா? வன்முறை அதிகரித்துப் போன திரைப்படங்களா? என ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

  மும்பை டாஜ் ஓட்டல் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானபோது, ஒரு அறையில் தங்கியிருந்த பெரியவர் ஒருவரை தீவிரவாதி மிரட்டி விபரங்கள் கேட்ட போது தான் ஒரு ஆசிரியர் என்று சொன்னவுடன், தீவிரவாதி அவரை மரியாதையாக நடத்தியதாக செய்தி படித்தோம்.

  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடும் இந்த நாட்டில்தான், ஒருவர் உயர்கல்வி தேர்ச்சி பெற்று பலரால் மதிக்கப்படும், வணங்கப்படும் நிலையிலிருந்தாலும், அவர் பயின்ற ஆசிரியரை பார்க்க நேரிட்டால், நிலை மறந்து, தனது உயர்நிலைக்கு அடித்தளமிட்ட ஆசிரியரை வணங்குவதென்பது ஆசிரியப் பணிக்கு கிடைக்கும் சிறப்பு மரியாதை.

  நான் பயின்ற திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு பேட்ரிக் ஜெயராஜ அவர்களின் கனிவு, உதவி தலைமை ஆசிரியர் திரு சுவாமி நாதன் அவர்கள் கண்டிப்பு போன்றவை இன்றும் நினைவுகூறத்தக்கவை. வகுப்பில் பேசியதற்கு, வீட்டுப்பாடம் முடிக்காததற்கு, பள்ளிக்கட்டணம் (ஆண்டுக்கு ரூ 35 ?!) தாமதமாக கொண்டு வந்ததற்கு புறங்கையில் மர ஸ்கேலால் அடிவாங்கியிருக்கிறோம்.

  அப்போது எழுத்தறிவித்தவர் இறைவன் ஆவார் என்று சொல்லித்தரப்பட்ட பண்பின் இலக்கணம் மாறிவிட்டதா என்ன? செல்லம், செல்வச்செழிப்பு என்றாலும் 9 வது படிக்கும் மாணவருக்கு செலவிற்கு ரூ 100 என்ற வளர்ப்பு முறை தவறை பெற்றோராகிய பலர் எப்போது உணரப்போகிறோம்?

  20 வருடம் முன்பாக இயக்குனர்கள் பாரதி வாசு இணைந்து எடுத்த பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் 10ம் வகுப்பு மாணவ-மாணவி காதல் விரிவாக படமாக்கப்பட்டு இறுதியில் ஒரேயொரு வரி நன்னெறியாக ‘காதலிக்க இது பொருத்தமில்லாத வயது’ என முடிக்கப்பட்டது. இருந்த போதிலும் பல பத்திரிகையாளர்கள், பெரியவர்களால் அந்த திரைப்படம் தவறு என விமர்சிக்கப்பட்டது.

  ஆனால் இன்றோ வன்முறையே திரைப்படங்களாக, அடியும், உதையும், கொலையும் பாடல்களாக, ஆபாசங்களே வாரப்பத்திரிகைகளாக, தகாத உறவுகளே சீரியல்களாக மாறிப்போனதும் ஒழுக்கம் கற்றுவித்தலில் குறையை ஏற்படுத்தியுள்ளது. வணிகமயமான கல்வி முறையும், நன்கு படிக்கிறவர்களுக்கு மட்டுமே இடமுண்டு, படிக்கின்றவர்களையே ஓட ஓட விரட்டி சிறப்பான தேர்வு முடிவுகள் என விளம்பரம் தேடும் தனியார்மய கல்வி முறையில் மாற்றம் வேண்டும். தலைமையாசிரியர் வாரம் ஒரு வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகளிடம் கலந்தாய்வும், ஆசிரியர்களிடம் தனியாக குழுக்கலந்தாய்வும் மேற்கொள்ள வேண்டும்,

  பெற்றோர்களும் பொருள் ஈட்டுவது மட்டுமே குறிக்கோள் என்பதை விடுத்து, தினமும் சிறிது நேரமாவது குழந்தைகளின் உணர்வுகளோடு கலந்து மாற்றங்களை கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்களும் உளவியல் ரீதியாக மாணவ, மாணவிகளிடம் அன்பும், கண்டிப்பும் இணைந்து கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். பாடங்களை விட பண்பை கற்றுக் கொடுக்க அனைவரும் முயற்சிப்போம்…

 28. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை குறைகூறுவதோடு ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். வீடு,பள்ளிக்கு அப்பாற்பட்டு உலகம் ஒன்று உள்ளது.அது நம் அனைவரையும் ஆக்கிரமிக்கிறது.இவ்வுண்மை பெரியவர்களுக்கே புரியாதபோது இளம் தளிர்களுக்கு எப்போது புரியும். சொல்லநினைத்ததை விட அதிகமாக வினவு ஆழமாக சொல்லிவிட்டது. பாராட்டுக்கள்.

 29. அருமையான பதிவு. இதைப் படித்த பிறகு குழந்தை வளர்ப்பு பற்றிய சில அச்சங்கள் தெளிவுற்றன.நன்றி வினவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க