Thursday, December 5, 2024
முகப்புஉலகம்அமெரிக்காடர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!

டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!

-

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.

அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு,  ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில்  நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

வெள்ளம், வறட்சி, அதிவேகப் புயல், கடுங்குளிர், நோய்கள் அதிகரித்தல்  எனப் பல கேடுகளும் மனிதகுலப் பேரழிவுகளும் பெருகுவதற்குப் புவி வெப்பமடைதலே முதன்மைக் காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.

மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.
மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.

2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தொழில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்க வேண்டும்; 2012க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்குக் குறைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்  என கியோட்டோ ஒப்பந்தத்தின் மூலம்   பெயரளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கியோட்டோ ஒப்பந்தம் முடிவடைய இருக்கும் பின்னணியில்,  இதற்கான அடுத்தகட்ட நகர்வை முன்வைக்கும் நோக்கில் டர்பன் மாநாடு கடந்த ஆண்டில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை 13 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் இறுதியாக்கப்பட்ட “மேம்பட்ட செயல்பாடுகளுக்கான டர்பன் மேடை” என்று அழைக்கப்படும்  ஒப்பந்தம், கியோட்டோ மாநாட்டின் பெயரளவிலான கட்டுப்பாடுகளுக்கும்  சமாதி கட்டியுள்ளது.

கியோட்டோ ஒப்பந்தத்தில்  ஏகாதிபத்தியங்கள் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.  அவற்றை நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முன்வரவில்லை என்றாலும், இந்த விதிகள் ஏட்டளவிலாவது இருந்து வந்தன. தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவும் கைவிடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்காவும், பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழை நாடும் ஒன்றுதான் என்றும், 194 உறுப்பு நாடுகளும் பசுமைவாயு வெளியேற்றம் பற்றிய கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்றும் தற்போதைய ஒப்பந்தம் அனைத்து நாடுகளையும் பொதுமைப்படுத்த முயற்சிக்கிறது. இதனால்தான், கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அமெரிக்கா, டர்பன் மாநாட்டு முடிவுகளை வரவேற்றுள்ளது.

ஏழை நாடுகளும் வளரும் நாடுகளும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று காரணம் காட்டி, ஏகாதிபத்திய நாடுகள் நாங்களும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று நியாயவாதம் பேசவும்,  மொத்தத்தில் எவ்வித வரைமுறையின்றி பசுமைக்குடில் வாயுவை வெளியேற்றிவிட்டு, புவி வெப்பமடைதலுக்கு  நாங்கள் மட்டும் பொறுப்பல்ல என்று ஏழை நாடுகளையும் குற்றவாளியாக்கிப் பழியைப்போடும்  ஏகாதிபத்தியங்களின் திட்டத்திற்கு ஏற்பவே இந்த மாநாடு  நடந்துள்ளது. இதற்காக எல்லா ஏழை நாடுகளையும் ஒருங்கிணைத்து விவாதிக்கச் சொல்லி  இம்முடிவை ஏற்க வைக்கும் தரகனாக ஐ.நா.மன்றம் செயல்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றின் கூட்டாளியாகவும் வட்டார மேலாதிக்க வல்லரசாகவும் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள்  எனப் பொதுவில் உலக நாடுகள் மூன்று வகையாக உள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா முதலான நாடுகள் ஒப்பீட்டு ரீதியில் ஏழை நாடுகளை விடத் தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள். ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே இந்நாடுகளிலும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது.

ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவும் நுகர்வுக்காகவும் இத்தகைய நாடுகளில் ‘தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில்  ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளோ சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ இலாபவெறி கொண்ட உற்பத்தியைக் கொண்டவை. அதே பாதையைப் பின்பற்றும் இந்நாடுகள், இதனை ‘வளர்ச்சிக்கான பாதை’ என்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கையை நாசமாக்கிப் பேரழிவுகளை விளைவித்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்ப்பதுமில்லை. ஏகாதிபத்தியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க உருப்படியாக எந்த முயற்சியும் எடுப்பதுமில்லை.

இந்தியா போன்ற ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் ஆளும் வர்க்கமான தரகுப் பெருமுதலாளிகள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவதோடு, விரிவடையவும் முயற்சிக்கின்றனர். மறுபுறம், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்பதால், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் வர்க்க நலன்தான் இந்திய அரசின் நலனாக உள்ளது. இதற்கேற்ப மற்ற ஏழை நாடுகளைத் தம் பின்னே திரட்டிக் கொண்டும் தம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை இந்தியா எதிர்க்கிறது. இதற்காகவே வெற்று ஏகாதிபத்திய எதிர்ப்புச் சவடாலடிக்கிறது.

“எங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பணயம் வைக்கச் சொல்கிறீர்களா? எங்களைப் பிணைக்கைதியாக்காதீர்கள்” என்று டர்பன் மாநாட்டில்  இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆவேசமாகப் பேசியதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இப்படியெல்லாம் சவடால் அடித்த அவர், ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமிடையிலான வேறுபாட்டை மறைத்துச் சுற்றுச்சூழல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் சமமானதே என்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் திட்டத்தை ஏற்க மறுப்பது போல முறுக்கிக் கொண்ட அவர்,  பின்னர் எப்படியாவது மாநாட்டை வெற்றிபெறச் செய்ய சமரசம் காண்பது என்ற பெயரில், ஏகாதிபத்தியங்கள் முன்வைத்த துரோகத் திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஏழை நாடுகள் அல்லது ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் முதலானவற்றில் முதலீடு செய்து ஆலைகளைத் தொடங்கி அவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் ஏகாதிபத்தியங்கள், அந்த ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இதற்கு ஆலை அமைந்துள்ள நாடும் மக்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றன. இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியங்களின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா, சீனா, பிரேசில் முதலான  நாடுகள் ஒருபுறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடித்துக்கொண்டும், மறுபுறம் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு ஏற்பச்  சமரசமாகச் சென்று துரோகமிழைத்தும் வருகின்றன. இந்த உண்மையை டர்பன் மாநாடு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

சுற்றுச்சூழலும் உயிரியல் சூழலும் நஞ்சாவதற்கு  இலாபவெறியும் போர்வெறியும் கொண்ட  ஏகாதிபத்திய உற்பத்திமுறை எனும் பேரழிவுப்பாதையே முதன்மைக் காரணம். சுற்றுச்சூழலை நஞ்சாக்கிவரும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்தியங்களை மட்டுமின்றி, அவற்றின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளின் துரோகத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க, அனைத்துலக மக்களும் அணிதிரண்டு போராடுவதே இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது. ஏகாதிபத்திய உற்பத்திமுறைக்கு எதிரான, மக்கள் நலனையும் சுயசார்பையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய உற்பத்திமுறையை நிறுவி வளர்க்காத வரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்தியங்கள் போடும் பழியையும், சுற்றுச்சூழல் பாதிப்பின் கோரமான விளைவுகளையும் தடுத்து நிறுத்தவே முடியாது.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

  1. உலக மக்கள் தொகையில் ஐக்கிய அமெரிக்கா நான்கு பங்குதான் ஆனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதில் அதற்கு 25%க்கும் மேலான பங்கு உள்ளது. அமெரிக்கா வளர்ந்த நாடு வலிமையான நாடென்பதால் மூன்றாம் உலக நாடுகள் மீது தன் சுமையை போடுகிறது, மற்ற மேற்குலக நாடுகள் உடன் தலையாட்டுகின்றன. இன்றைக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுதலை அதிகமாகவும் நவீன தொழில்நுட்பத்துடனும் குறைக்கமுடியுமென்றால் அது அமெரிக்காவால்தான் முடியும், அந்த தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கமுடியும். ஆனால் அதில் வணிக நோக்கம் கிட்டும்வரை அமெரிக்கா தலையிடாது, அது தான் இப்போது நடக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க